Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 48

பாட்டு 97 பைபிள்—நம் உயிர்நாடி

அற்புத உணவு​—சொல்லித்தரும் பாடங்கள்

அற்புத உணவு​—சொல்லித்தரும் பாடங்கள்

“வாழ்வு தரும் உணவு நான்தான். என்னிடம் வருகிறவனுக்குப் பசியே எடுக்காது.”யோவான் 6:35.

என்ன கற்றுக்கொள்வோம்?

ஒருசில ரொட்டியையும் மீனையும் வைத்து இயேசு ஒரு பெரிய கூட்டத்துக்குச் சாப்பாடு கொடுத்தார். இந்த அற்புதத்தைப் பற்றி யோவான் 6-வது அதிகாரம் சொல்கிறது. இதிலிருந்து நாம் என்ன பாடம் கற்றுக்கொள்வோம் என்று பார்ப்போம்.

1. பைபிள் காலங்களில் ரொட்டி எப்படிப்பட்ட உணவாக இருந்தது?

 பைபிள் காலங்களில் மக்களுடைய முக்கிய உணவே ரொட்டிதான். (ஆதி. 18:6; லூக். 9:3) சொல்லப்போனால், பைபிளில் சில இடங்களில் உணவைக் குறிப்பிடுவதற்கு “ரொட்டி” என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. (1 ரா. 17:11, 12) இயேசு செய்த பிரபலமான அற்புதங்களில் இரண்டு அற்புதங்கள், உணவு கொடுப்பதோடு சம்பந்தப்பட்டிருந்தது. (மத். 16:9, 10) அதில் ஒன்று, யோவான் 6-வது அதிகாரத்தில் இருக்கிறது. இந்த அற்புதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

2. ஆயிரக்கணக்கான மக்களுக்கு உணவு கொடுக்க வேண்டிய சூழ்நிலை ஏன் வந்தது?

2 இயேசுவும் அவருடைய அப்போஸ்தலர்களும் ஊழிய பயணத்தை முடித்துவிட்டு வருகிறார்கள். ஒரு படகில் ஏறி கலிலேயா கடலில் பயணம் செய்து, பெத்சாயிதா என்ற இடத்துக்குப் பக்கத்தில் இருக்கிற தனிமையான ஒரு இடத்துக்கு இயேசு அவர்களைக் கூட்டிக்கொண்டு வருகிறார். அவர்கள் ஓய்வெடுப்பதற்காக அப்படிச் செய்தார். (மாற். 6:7, 30-32; லூக். 9:10) ஆனால், சீக்கிரத்திலேயே ஆயிரக்கணக்கான மக்கள் இயேசுவைத் தேடி அங்கே வந்து குவிந்துவிடுகிறார்கள். இயேசு அவர்களைத் தட்டிக்கழிக்கவில்லை. ரொம்ப அன்பாக நிறைய நேரம் எடுத்து கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கிறார். உடம்பு சரியில்லாதவர்களைச் சுகப்படுத்துகிறார். இப்போது ரொம்ப நேரம் ஆகிவிட்டது. அதனால், அங்கே இருக்கிற மக்கள் என்ன சாப்பிடுவார்கள் என்று சீஷர்கள் யோசிக்க ஆரம்பித்தார்கள். அங்கே வந்திருந்த சிலரிடம் கொஞ்சம் உணவு மட்டுமே இருந்திருக்கலாம்; மற்றவர்கள் ஒருவேளை உணவை வாங்க கிராமங்களுக்குப் போக வேண்டியிருந்திருக்கலாம். (மத். 14:15; யோவா. 6:4, 5) இந்தச் சூழ்நிலையில் இயேசு என்ன செய்வார்?

அற்புதமாகக் கொடுக்கப்பட்ட உணவு

3. இயேசு தன் அப்போஸ்தலர்களிடம் மக்களுக்காக என்ன செய்ய சொன்னார்? ( படத்தைப் பாருங்கள்.)

3 இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களிடம், “இவர்கள் போக வேண்டியதில்லை; நீங்களே இவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள்” என்று சொன்னார். (மத். 14:16) ஆனால் இது எப்படி சாத்தியம் என்று அப்போஸ்தலர்கள் யோசித்திருக்கலாம். ஏனென்றால், அங்கே ஆண்கள் மட்டுமே கிட்டத்தட்ட 5,000 பேர் இருந்தார்கள். பெண்கள், குழந்தைகள் என்று எல்லாரையும் சேர்த்தால் கிட்டத்தட்ட 15,000 பேர் இருந்திருப்பார்கள். (மத். 14:21) அந்தச் சமயத்தில் அந்திரேயா, “இதோ, இங்கிருக்கிற ஒரு சிறுவனிடம் ஐந்து பார்லி ரொட்டிகளும் இரண்டு சிறிய மீன்களும் இருக்கின்றன. ஆனால், இத்தனை பேருக்கு அது எப்படிப் போதும்?” என்று கேட்டார். (யோவா. 6:9) அன்றிருந்த மக்கள் பொதுவாக பார்லி ரொட்டிகளைச் சாப்பிட்டார்கள். அந்தச் சிறுவன் வைத்திருந்த இரண்டு சிறிய மீன்கள் கருவாடாக இருந்திருக்கலாம். இதை மட்டும் வைத்து இத்தனை பேருக்குச் சாப்பாடு கொடுக்க முடியுமா என்ன?

மக்களுக்கு யெகோவாவைப் பற்றிச்  சொல்லிக்கொடுத்த பிறகு அவர்கள் சாப்பிடுவதற்கு இயேசு சாப்பாடு கொடுத்தார் (பாரா 3)


4. யோவான் 6:11-13-லிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (படங்களையும் பாருங்கள்.)

4 மக்களை இயேசு உபசரிக்க நினைத்தார். அங்கே இருந்தவர்களை புல்வெளியில் சின்னச் சின்ன கூட்டமாக உட்காரச் சொன்னார். (மாற். 6:39, 40; யோவான் 6:11-13-ஐ வாசியுங்கள்.) அதற்குப் பிறகு ரொட்டிக்காகவும் மீனுக்காகவும் இயேசு தன்னுடைய அப்பாவுக்கு நன்றி சொன்னார் என்று பைபிள் சொல்கிறது. அந்தச் சமயத்தில் இயேசு யெகோவாவிடம் நன்றி சொன்னது ரொம்ப பொருத்தமாக இருந்தது. ஏனென்றால், உணவு யெகோவாவிடமிருந்துதான் வருகிறது. சாப்பிடுவதற்கு முன்பு நாம் கண்டிப்பாக ஜெபம் பண்ண வேண்டும் என்பதை இயேசுவின் உதாரணத்திலிருந்து கற்றுக்கொள்கிறோம்—நாம் தனியாக இருந்தாலும் சரி, நம்மை சுற்றி நிறையப் பேர் இருந்தாலும் சரி! அதற்குப் பிறகு இயேசு ரொட்டியை எல்லாருக்கும் பகிர்ந்து கொடுத்தார். மக்கள் எல்லாரும் வயிறார திருப்தியாகச் சாப்பிட்டார்கள். மிச்சமீதிகூட இருந்தது! வீணாகிவிடாதபடி அதையெல்லாம் இயேசு எடுத்து வைக்க சொன்னார். ஒருவேளை, பிறகு அது பிரயோஜனமாக இருக்கும் என்பதால் இயேசு அப்படிச் சொல்லியிருக்கலாம். இதிலிருந்துகூட ஒரு பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியும். எந்தப் பொருளையும் நாம் வீணடிக்கக் கூடாது. நீங்கள் ஒரு பெற்றோராக இருந்தால் இந்தப் பதிவை உங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து படியுங்கள். ஜெபம் பண்ணுவதைப் பற்றியும், மற்றவர்களை உபசரிப்பதைப் பற்றியும், தாராள குணத்தைக் காட்டுவதைப் பற்றியும் அவர்களுக்கு இந்தப் பதிவிலிருந்து சொல்லிக்கொடுங்கள்.

‘சாப்பிடுவதற்கு முன்பு இயேசு மாதிரியே நான் ஜெபம் செய்கிறேனா?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். (பாரா 4)


5. இயேசு செய்த அற்புதங்களைப் பார்த்து மக்கள் என்ன செய்தார்கள், அப்போது இயேசு என்ன செய்தார்?

5 இயேசு சொல்லிக்கொடுத்த விதத்தையும், அவர் செய்த அற்புதங்களையும் பார்த்து மக்கள் ஆச்சரியப்பட்டார்கள். எதிர்காலத்தில் ஒரு பெரிய தீர்க்கதரிசியை கடவுள் எழுப்புவார் என்று மோசே வாக்கு கொடுத்தது அவர்களுக்குத் தெரியும். ‘இவர்தான் அவரோ?’ என்று அவர்கள் யோசித்திருக்கலாம். (உபா. 18:15-18) ‘ஒருவேளை அது உண்மையாக இருந்தால், இவர் ஒரு நல்ல ஆட்சியாளராக இருப்பாரே! முழு தேசத்துக்கும் இவரால் உணவு கொடுக்க முடியுமே’ என்று அவர்கள் யோசித்திருக்கலாம். அதனால், அங்கிருந்த மக்கள், அவரை “பிடித்து ராஜாவாக்க” முயற்சி பண்ணினார்கள். (யோவா. 6:14, 15) ஒருவேளை இதற்கு இயேசு இடம் கொடுத்திருந்தால், ரோம ஆட்சிக்குக் கீழிருந்த யூதர்களுடைய அரசியல் விஷயங்களில் அவரும் தலையிடுவதுபோல் ஆகிவிடும். அவர் அப்படிச் செய்தாரா? இல்லவே இல்லை. மக்களுடைய எண்ணத்தைத் தெரிந்துகொண்ட இயேசு அந்த இடத்திலிருந்து கிளம்பி ‘மலைக்குப் போனார்’ என்று பைபிள் சொல்கிறது. மக்கள் அவரை வற்புறுத்தினாலும் இயேசு அரசியலில் தலையிடவே இல்லை. இது நமக்கு ஒரு நல்ல பாடம், இல்லையா?

6. நாம் எப்படி இயேசு மாதிரியே நடந்துகொள்ளலாம்? (படத்தையும் பாருங்கள்.)

6 அற்புதமாக மற்றவர்களுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்றோ, வியாதிப்பட்டவர்களைக் குணப்படுத்த வேண்டும் என்றோ, ஒரு ஆட்சியாளராக ஆக வேண்டும் என்றோ யாரும் நம்மிடம் சொல்ல மாட்டார்கள். ஆனால், ஓட்டுப் போட சொல்லி நம்மை அரசியலில் ஈடுபட வைக்கலாம். அல்லது, அவர்களுக்குப் பிடித்த தலைவர்களுக்கு ஆதரவு கொடுக்க சொல்லி நம்மை வற்புறுத்தலாம். இந்த மாதிரி சூழ்நிலைகளில் இயேசு நமக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். அவர் அரசியல் விஷயங்களில் தலையிடவில்லை. “என்னுடைய அரசாங்கம் இந்த உலகத்தின் பாகமல்ல” என்றுகூட அவர் ஒருசமயம் சொன்னார். (யோவா. 17:14; 18:36) கிறிஸ்தவர்கள் இந்த விஷயத்தில் இயேசு மாதிரியே யோசிக்கிறார்கள்; அவர் மாதிரியே நடந்துகொள்கிறார்கள். கடவுளுடைய அரசாங்கம் வர வேண்டும் என்று ஜெபம் பண்ணுகிறார்கள். (மத். 6:10) அதை ஆதரிக்கிறார்கள். அதைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்கிறார்கள். சரி, மக்களுக்கு இயேசு அற்புதமாக ரொட்டியைக் கொடுத்த பதிவுக்குத் திரும்பவும் போகலாம். அதிலிருந்து வேறு என்னவெல்லாம் கற்றுக்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.

யூதர்களுடைய அல்லது ரோமர்களுடைய அரசியலில் இயேசு தலையிடவே இல்லை. அவருடைய சீஷர்களாக நாமும் அவர் மாதிரியே நடந்துகொள்ள வேண்டும் (பாரா 6)


ரொட்டிகளின் அர்த்தம்

7. இயேசு என்ன செய்தார், அதைப் பார்த்தது அப்போஸ்தலர்களுக்கு எப்படி இருந்தது, ஆனால் அவர்கள் எதைப் புரிந்துகொள்ளவில்லை? (யோவான் 6:16-20)

7 அற்புதமாக ரொட்டியை மக்களுக்குக் கொடுத்த பிறகு, இயேசு அவருடைய அப்போஸ்தலர்களை படகில் ஏறி கப்பர்நகூமுக்குப் போகச் சொன்னார். மக்கள் இயேசுவை ராஜாவாக்க முயற்சி செய்ததால், அவர் அவர்களிடமிருந்து விலகி மலைக்குப் போனார் என்று பார்த்தோம். (யோவான் 6:16-20-ஐ வாசியுங்கள்.) அப்போஸ்தலர்கள் படகில் போய்க்கொண்டிருந்த சமயத்தில் பயங்கரமான புயல் காற்று அடித்தது. அலைகள் படகை அலைக்கழித்தது. அப்போது இயேசு அவர்களிடம் வந்தார். அதுவும் தண்ணீர்மேல் நடந்துவந்தார். அதேபோல் அப்போஸ்தலன் பேதுருவையும் தண்ணீர்மேல் நடந்துவர சொன்னார். (மத். 14:22-31) இயேசு படகில் ஏறிய பிறகு, காற்று அப்படியே அடங்கிவிட்டது. இதைப் பார்த்து அப்போஸ்தலர்கள் பிரமித்துப் போய்விட்டார்கள். “நீங்கள் உண்மையிலேயே கடவுளுடைய மகன்தான்” என்று சொன்னார்கள். a (மத். 14:33) ஆனால், இந்த அற்புதத்துக்கும், இயேசு சற்று முன்பு செய்த அற்புதத்துக்கும் பின்னாலிருந்த முக்கியமான விஷயத்தை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. அதைப் பற்றி மாற்கு ஒரு விவரத்தைச் சொல்கிறார்: “அதைப் பார்த்து [அப்போஸ்தலர்கள்] மிகவும் பிரமித்துப்போனார்கள். அற்புதமாய் ரொட்டிகளைக் கொடுத்தவரால் இந்த அற்புதத்தையும் செய்ய முடியும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை; இதையெல்லாம் புரிந்துகொள்ள முடியாதபடி அவர்களுடைய இதயம் மந்தமாகவே இருந்தது.” (மாற். 6:50-52) அற்புதங்களைச் செய்வதற்கு இயேசுவுக்கு யெகோவா எந்தளவுக்கு சக்தி கொடுத்திருந்தார் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளாமல் போய்விட்டார்கள். அதனால், சீக்கிரத்திலேயே ரொட்டியை அற்புதமாகக் கொடுத்ததைப் பற்றி இயேசுவே பேச ஆரம்பித்தார். அதிலிருந்து இன்னொரு பாடத்தை இயேசு நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார்.

8-9. மக்கள் ஏன் இயேசுவைத் தேடிப் போனார்கள்? (யோவான் 6:26, 27)

8 இயேசு எந்த இடத்தில் சாப்பாடு கொடுத்தாரோ அதே இடத்துக்கு அவரைத் தேடி மக்கள் அடுத்த நாளும் வந்தார்கள். ஆனால் இயேசுவும் அப்போஸ்தலர்களும் அங்கே இல்லை. அதனால், திபேரியாவிலிருந்து வந்த படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்கு இயேசுவைத் தேடி வந்தார்கள். (யோவா. 6:22-24) கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணத்தோடு வந்தார்களா? இல்லை. தங்கள் வயிற்றை நிரப்புவதற்காகத்தான் வந்தார்கள். அது எப்படி நமக்குத் தெரியும்?

9 அவர்கள் சாப்பாட்டைத் தேடித்தான் அவரிடம் வந்திருக்கிறார்கள் என்பதை இயேசு வெளிப்படையாகச் சொன்னார். அதாவது, முந்தின நாள் அவர்கள் “ரொட்டிகளைச் சாப்பிட்டுத் திருப்தியானதால்தான்” தன்னைத் தேடி வந்திருக்கிறார்கள் என்று சொன்னார். “அழிந்துபோகும் உணவுக்காக அல்ல, முடிவில்லாத வாழ்வைத் தரும் அழியாத உணவுக்காகவே பாடுபடுங்கள்” என்று அவர்களிடம் சொன்னார். (யோவான் 6:26, 27-ஐ வாசியுங்கள்.) முடிவில்லாத வாழ்வைத் தரும் ஒரு உணவா?! இதைக் கேட்டு அந்த மக்கள் கண்டிப்பாக ஆச்சரியப்பட்டிருப்பார்கள். அப்படியொரு உணவு உண்மையிலேயே இருக்கிறதா? அந்த உணவு கிடைப்பதற்கு அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

10. முடிவில்லாத வாழ்வு வேண்டுமென்றால் மக்கள் என்ன செய்ய வேண்டும்?

10 அப்படிப்பட்ட ஒரு உணவு கிடைக்க வேண்டுமென்றால், ஏதோவொரு விஷயத்தைச் செய்ய வேண்டியிருக்குமோ என்று அந்த யூதர்கள் யோசித்திருக்கலாம். ஒருவேளை, திருச்சட்டத்தில் சொல்லப்பட்ட சில செயல்களைச் செய்ய வேண்டுமென்று இயேசு சொல்கிறாரோ என்று அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் இயேசு இப்படிச் சொன்னார்: “கடவுள் உங்களை ஏற்றுக்கொள்வதற்கு, அவரால் அனுப்பப்பட்டவர்மேல் நீங்கள் விசுவாசம் வைக்க வேண்டும்.” (யோவா. 6:28, 29) ‘முடிவில்லாத வாழ்வு’ வேண்டுமென்றால் கடவுளால் அனுப்பப்பட்டவர்மேல் விசுவாசம் வைப்பது முக்கியம். இதைப் பற்றி முன்புகூட இயேசு சொல்லியிருக்கிறார். (யோவா. 3:16-18, 36) பிறகும்கூட, இதைப் பற்றி இயேசு பேசவிருந்தார்.—யோவா. 17:3.

11. தங்கள் கவனமெல்லாம் சாப்பாட்டின் மேல்தான் இருந்தது என்பதை அந்த மக்கள் எப்படிக் காட்டினார்கள்? (சங்கீதம் 78:24, 25)

11 இயேசுமேல் “விசுவாசம் வைக்க வேண்டும்” என்பதை அந்த யூதர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் அவரிடம், “உங்களை நம்புவதற்கு நாங்கள் பார்க்கும்படி என்ன அடையாளத்தைக் காட்டப்போகிறீர்கள்?” என்று கேட்டார்கள். (யோவா. 6:30) மோசேயின் நாட்களில், இஸ்ரவேலர்களுக்கு வானத்திலிருந்து மன்னா கிடைத்ததே என்று அவர்கள் இயேசுவிடம் சொன்னார்கள்; அதுதான் இஸ்ரவேலர்களின் தினசரி உணவாக இருந்தது. (நெ. 9:15; யோவா. 6:31 சங்கீதம் 78:24, 25-ஐ வாசியுங்கள்.) இதிலிருந்து என்ன தெரிகிறது? வயிற்றை நிரப்புவதைப் பற்றி மட்டும்தான் அவர்கள் யோசித்தார்கள். அடுத்து, இயேசு அவர்களிடம் “பரலோகத்திலிருந்து [வருகிற] உண்மையான உணவை” பற்றிச் சொன்னார். (யோவா. 6:32) இந்த உணவு, மன்னா மாதிரி கிடையாது. இது அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வைக் கொடுக்கும். இயேசு என்ன சொல்லவருகிறார் என்ற உண்மையான அர்த்தத்தை அவர்கள் புரிந்துகொள்ள முயற்சிகூட எடுக்கவில்லை. முடிவில்லாத வாழ்வு கிடைப்பதற்கு மக்கள் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி இயேசு அங்கே சொல்லிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்களுடைய கவனமெல்லாம் சாப்பாடு கிடைக்குமா என்பதிலேயே இருந்தது. இந்தப் பதிவிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

நம்முடைய கவனமெல்லாம் எதில் இருக்க வேண்டும்?

12. நம்முடைய கவனமெல்லாம் எதில் இருக்க வேண்டும்?

12 யோவான் 6-வது அதிகாரத்தில் நமக்கு ஒரு முக்கியமான பாடம் இருக்கிறது. யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து அவரோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதிலேயே நம்முடைய முழு கவனமும் இருக்க வேண்டும். இயேசுவை சாத்தான் சோதித்த சமயத்தில்கூட சாப்பாட்டைவிட யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதுதான் முக்கியம் என்பதை இயேசு காட்டினார். (மத். 4:3, 4) மலைப் பிரசங்கத்தில்கூட ஆன்மீக விஷயங்களில் ஆர்வப்பசியாக இருக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள் என்று இயேசு சொன்னார். (மத். 5:3) அதனால், நம்மை நாமே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘நான் வாழ்க்கையில் எதை முக்கியமாக நினைக்கிறேன்? என்னுடைய ஆசைகளை நிறைவேற்றுவதிலேயே என் கவனமெல்லாம் இருக்கிறதா? அல்லது, யெகோவாவோடு இருக்கிற பந்தத்தை முக்கியமாக நினைக்கிறேனா?’

13. (அ) சாப்பாட்டைச் சந்தோஷமாகச் சாப்பிடுவதில் ஏதாவது தவறு இருக்கிறதா? விளக்குங்கள். (ஆ) பவுல் நமக்கு என்ன எச்சரிப்பைக் கொடுத்திருக்கிறார்? (1 கொரிந்தியர் 10:6, 7, 11)

13 நம்முடைய தேவைகளுக்காக ஜெபம் செய்வதில் தவறில்லை; அவற்றை அனுபவிப்பதிலும் தவறில்லை. (லூக். 11:3) சொல்லப்போனால், கடினமாக உழைக்கும்போது நம்மால் நன்றாக “சாப்பிட்டு, குடித்து” சந்தோஷமாக இருக்க முடியும்; இது “உண்மைக் கடவுளுடைய கையிலிருந்துதான் வருகிறது” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 2:24; 8:15; யாக். 1:17) அதேசமயத்தில், பொருள் சம்பந்தப்பட்ட விஷயங்களை, வைக்க வேண்டிய இடத்தில் வைக்க வேண்டும். இதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் அன்று வாழ்ந்த கிறிஸ்தவர்களை எச்சரித்தார். இஸ்ரவேலர்களுடைய சரித்திரத்தில் நடந்த சில சம்பவங்களை அவர்களுக்கு எடுத்துச் சொன்னார். சீனாய் மலைக்குப் பக்கத்தில் இருந்தபோது என்ன நடந்தது என்பதைக்கூட அவர்களுக்கு ஞாபகப்படுத்தினார். ‘கெட்ட காரியங்களை விரும்பிய’ இஸ்ரவேலர்கள் மாதிரி இருக்கக் கூடாது என்று எச்சரித்தார். (1 கொரிந்தியர் 10:6, 7, 11-ஐ வாசியுங்கள்.) இஸ்ரவேலர்களுக்கு யெகோவா அற்புதமாக சாப்பாடு கொடுத்தார். ஆனால் அவர்களுடைய பேராசையால் அதுவே ‘கெட்ட காரியமாக’ மாறிவிட்டது. (எண். 11:4-6, 31-34) கன்றுக்குட்டி சிலையை அவர்கள் வணங்கிய சமயத்தில், யெகோவாவுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக நன்றாகச் சாப்பிட்டு குடித்து சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வதை முக்கியமாக நினைத்தார்கள். (யாத். 32:4-6) பவுல் இந்த விஷயங்களை, கி.பி. 70-ல் எருசலேமின் அழிவுக்கு முன்பு வாழ்ந்துகொண்டிருந்த கிறிஸ்தவர்களுக்குச் சொன்னார். நாமும் இந்த உலகத்தின் அழிவுக்கு முன்பு வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இஸ்ரவேலர்கள் செய்த அதே தவறை நாமும் செய்துவிடாமல் இருக்க பவுல் கொடுத்த ஆலோசனை நமக்கு உதவும்.

14. புதிய உலகத்தில் கிடைக்கப்போகும் உணவைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

14 “இன்றைக்குத் தேவையான உணவை எங்களுக்குக் கொடுங்கள்” என்று ஜெபம் செய்ய இயேசு சொல்லிக்கொடுத்தபோது, கடவுளுடைய விருப்பம் ‘பரலோகத்தில் நிறைவேறுவதுபோல் பூமியிலும் நிறைவேறப்போகும்’ ஒரு காலத்தை மனதில் வைத்திருந்தார். (மத். 6:9-11) அந்தச் சமயம் எப்படி இருக்கும் என்று கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்! எல்லாருக்குமே நல்ல ஆரோக்கியமான உணவு கிடைக்க வேண்டும் என்பதுதான் கடவுளுடைய விருப்பம். ஏசாயா 25:6-8 சொல்கிற மாதிரி, மக்கள் சந்தோஷமாகச் சாப்பிடுவதற்கு ஏராளமான உணவு இருக்கும். சங்கீதம் 72:16 இப்படிச் சொல்கிறது: “பூமியில் ஏராளமாகத் தானியம் விளையும். மலைகளின் உச்சியில்கூட அது நிரம்பி வழியும்.” அந்தச் சமயத்தில் பூமியில் விளைகிற தானியங்களைப் பயன்படுத்தி உங்களுக்குப் பிடித்த சாப்பாட்டைச் சமைக்க ஆசையாகக் காத்திருக்கிறீர்களா? புதிது புதிதாக... வகை வகையாக... சமைக்க ஆசையாக இருக்கிறீர்களா? உங்கள் தோட்டத்தில் விளைந்த சுவையான திராட்சைப் பழங்களை ருசிக்க ஏக்கமாக இருக்கிறீர்களா? (ஏசா. 65:21, 22) எல்லாருக்கும் எல்லாமே கிடைக்கிற ஒரு காலமாக அது இருக்கும்.

15. உயிர்த்தெழுந்து வருகிறவர்கள் எதைப் பற்றியெல்லாம் கற்றுக்கொள்வார்கள்? (யோவான் 6:35)

15 யோவான் 6:35-ஐ வாசியுங்கள். இயேசு கொடுத்த உணவை அன்று சாப்பிட்ட ஆட்களுக்கு என்ன எதிர்காலம் காத்திருக்கிறது? அவர்களில் சிலர் புதிய உலகத்தில் உயிர்த்தெழுந்து வரலாம். நாம் அவர்களைச் சந்திக்கக்கூட வாய்ப்பு இருக்கிறது. அன்றைக்கு அவர்கள் இயேசுமேல் விசுவாசம் வைக்கவில்லை என்றாலும், அவர்களில் சிலர் உயிர்த்தெழுந்து வரலாம். (யோவா. 5:28, 29) “வாழ்வு தரும் உணவு நான்தான். என்னிடம் வருகிறவனுக்குப் பசியே எடுக்காது” என்று இயேசு அன்று சொன்னதன் அர்த்தத்தை உயிர்த்தெழுந்து வந்த பிறகு அவர்கள் புரிந்துகொள்வார்கள். அவர்கள், இயேசு கொடுத்த மீட்புப் பலியின் மேலும் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும். உயிர்த்தெழுந்து வருகிறவர்களும் புதிய உலகத்தில் பிறக்கிற பிள்ளைகளும் யெகோவாவைப் பற்றியும், அவருடைய விருப்பங்களைப் பற்றியும் கற்றுக்கொள்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படும். அவர்களுக்கு இவற்றைச் சொல்லிக்கொடுப்பது நமக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கும்! புதிய உலகத்தில் வகை வகையாக சாப்பிடும்போது வரும் சந்தோஷத்தைவிட, மக்கள் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்ள உதவுவதால் கிடைக்கும் சந்தோஷம்தான் அதிகமாக இருக்கும்.

16. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

16 யோவான் 6-வது அதிகாரத்தில் இருக்கிற சில விஷயங்களை இந்தக் கட்டுரையில் பார்த்தோம். ஆனால், “முடிவில்லாத வாழ்வை” பற்றி இயேசு இன்னும் நிறைய சொல்லிக்கொடுத்தார். அன்றிருந்த யூதர்களும், இன்று வாழ்கிற நாமும் அந்த விஷயங்களை நன்றாகப் புரிந்துகொண்டு கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. யோவான் 6-வது அதிகாரத்தில் இருக்கிற இன்னும் நிறைய விஷயங்களை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாட்டு 20 அருமை மகனையே தந்தீர்கள்!

a இந்த சிலிர்க்கவைக்கும் பதிவைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள இயேசு—வழி, சத்தியம், வாழ்வு புத்தகத்தில் பக். 131-ஐயும், இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள் புத்தகத்தில் பக். 185-ஐயும் பாருங்கள்.