Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 51

பாட்டு 3 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!

உங்கள் கண்ணீர்த் துளிகளை யெகோவா மறக்க மாட்டார்

உங்கள் கண்ணீர்த் துளிகளை யெகோவா மறக்க மாட்டார்

“என் கண்ணீர்த் துளிகளைத் தயவுசெய்து உங்களுடைய தோல் பையில் சேர்த்து வையுங்கள். நீங்கள் அவற்றையெல்லாம் எண்ணி உங்களுடைய புத்தகத்தில் எழுதி வைத்திருக்கிறீர்களே!”சங். 56:8.

என்ன கற்றுக்கொள்வோம்?

நம் மனதின் வலியை யெகோவா நன்றாகப் புரிந்துகொள்கிறார். நமக்கு ஆறுதல் தேவைப்படும்போது அதை அவர் தாராளமாகக் கொடுக்கிறார். இதை எப்படிச் செய்கிறார் என்று கற்றுக்கொள்வோம்.

1-2. என்ன மாதிரியான சூழ்நிலைகளில் நாம் கண்ணீர்விடுகிறோம்?

 கண்ணீர்விடாத மனிதர்களே இல்லை! சந்தோஷத்தின் உச்சத்துக்குப் போகும்போது, நம் கண்கள் ஆனந்தக் கண்ணீரால் குளமாகும். வாழ்க்கையில் முக்கியமான அல்லது விசேஷமான தருணங்களில், அதாவது முதல்முதலில் உங்கள் குழந்தையைப் பார்த்தபோது... நல்ல நினைவுகள் ஞாபகத்துக்கு வந்தபோது... ரொம்ப நாள் கழித்து உயிர் நண்பரைப் பார்த்தபோது... சந்தோஷத்தில் கண்ணீர்விட்டிருப்பீர்கள்.

2 ஆனால் நிறைய சமயங்களில் நம் மனசு வலிப்பதால் கண்ணீர்விடுகிறோம். உதாரணத்துக்கு, யாராவது நம்முடைய மனதை சுக்குநூறாக உடைத்துவிடலாம்; வலி தாங்க முடியாமல் நாம் அழலாம். நமக்கு ஏதாவது தீராத வியாதி வந்தாலோ அன்பானவர்கள் இறந்துவிட்டாலோ துக்கம் தாங்க முடியாமல் நாம் கண்ணீர்விடலாம். எரேமியா தீர்க்கதரிசிகூட ஒருசமயம் அழுதார். எருசலேம் நகரத்தை பாபிலோனியர்கள் கைப்பற்றியபோது அவர் இப்படிச் சொன்னார்: “என் கண்களிலிருந்து தாரைதாரையாகக் கண்ணீர் வழிந்தோடுகிறது. ஓய்வே இல்லாமல் எந்நேரமும் கண்ணீர் விடுகிறேன்.”—புல. 3:48, 49.

3. நாம் கஷ்டப்படுவதைப் பார்க்கும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கிறது? (ஏசாயா 63:9)

3 துக்கம் தாங்க முடியாமல் நாம் சிந்துகிற ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். நாம் கஷ்டப்படும்போதெல்லாம் யெகோவா நம்மைப் பார்க்கிறார் என்றும், நாம் உதவிக்காகக் கதறும்போதெல்லாம் அவர் அதைக் கவனித்துக் கேட்கிறார் என்றும் பைபிள் சொல்கிறது. (சங். 34:15) ஆனால், வெறுமனே யெகோவா நாம் கஷ்டப்படுவதைப் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் இல்லை. ஒரு அன்பான அப்பாவாக அவரும் துடித்துப்போகிறார். நமக்கு உதவ அவர் ஓடோடி வருகிறார்.—ஏசாயா 63:9-ஐ வாசியுங்கள்.

4. எந்த பைபிள் உதாரணங்களைப் பற்றி நாம் பார்க்கப் போகிறோம்?

4 தன்னுடைய ஊழியர்கள் கண்ணீர் சிந்தும்போது யெகோவாவுக்கு எப்படி இருக்கிறது என்று பைபிளில் நம்மால் பார்க்க முடிகிறது. உதாரணத்துக்கு அன்னாள், தாவீது, எசேக்கியா ராஜாவைப் பற்றிப் பார்க்கலாம். எதற்காக அவர்கள் அழுதார்கள்? உதவிக்காகக் கதறியபோது அவர்களுக்காக யெகோவா என்ன செய்தார்? சோகத்தாலோ துரோகத்தாலோ நம்பிக்கை இழந்துபோனதாலோ நாம் கண்ணீர் சிந்தும்போது, அவர்களுடைய உதாரணம் நம்மை எப்படி ஆறுதல்படுத்தும்?

சோகத்தால் சிந்தும் கண்ணீர்

5. அன்னாள் எந்த மாதிரி சூழ்நிலையில் இருந்தாள்?

5 அன்னாள், தீராத துக்கத்தால் தேம்பித் தேம்பி அழுதுகொண்டே இருந்தாள். அவளுடைய கணவருக்கு பெனின்னாள் என்ற இன்னொரு மனைவியும் இருந்தாள். அவளுக்கு அன்னாளைச் சுத்தமாகப் பிடிக்கவில்லை. அதனால், அன்னாளைப் பாடாய் படுத்தினாள். இதுபோதாதென்று, அன்னாளுக்குக் குழந்தை பாக்கியமும் இல்லை. ஆனால் பெனின்னாளுக்கு நிறைய குழந்தைகள் இருந்தார்கள். (1 சா. 1:1, 2) அதனால், பெனின்னாள் அன்னாளைக் குத்திக்காட்டிக்கொண்டே இருந்தாள். “வேதனை தாங்காமல் அன்னாள் அழுதுகொண்டே இருந்தாள், சாப்பிடவே இல்லை.” அவள் “ரொம்பவே மனமுடைந்துபோயிருந்தாள்.”—1 சா. 1:6, 7, 10.

6. ஆறுதல் கிடைப்பதற்கு அன்னாள் என்ன செய்தாள்?

6 ஆறுதலுக்காக அன்னாள் என்ன செய்தாள்? அந்தச் சமயத்தில் உண்மை வணக்கத்தின் மையமாக இருந்த வழிபாட்டுக் கூடாரத்துக்குப் போனாள். அங்கே ஒருவேளை வாசலுக்குப் பக்கத்தில் அவள் நின்றுகொண்டு, “தேம்பித் தேம்பி அழுதுகொண்டே” ஜெபம் செய்தாள். ‘உங்களுடைய அடிமைப்பெண் படுகிற வேதனையைப் பாருங்கள். இந்த அடிமைப்பெண்ணை மறக்காமல் நினைத்துப் பாருங்கள்’ என்று யெகோவாவிடம் சொன்னாள். (1 சா. 1:10ஆ, 11) அவள் மனதிலிருந்த எல்லாவற்றையும் யெகோவாவிடம் கொட்டிவிட்டாள். தன் செல்ல மகள் இப்படி அழுவதைப் பார்த்தபோது யெகோவாவுக்கு எப்படி இருந்திருக்கும்? அன்னாளுக்கு உதவ அவருடைய மனசு துடித்திருக்கும், இல்லையா?

7. மனதில் இருந்ததையெல்லாம் யெகோவாவிடம் சொன்ன பிறகு அன்னாளுக்கு எப்படி ஆறுதல் கிடைத்தது?

7 அன்னாள் தன் மனதிலிருந்த எல்லாவற்றையும் யெகோவாவிடம் கொட்டிய பிறகு, தலைமை குரு ஏலி அவளுக்கு நம்பிக்கை கொடுத்தார். அவளுடைய ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுப்பார் என்று சொன்னார். அதற்குப் பிறகு அன்னாள் என்ன செய்தாள்? “அங்கிருந்து போய், சாப்பிட ஆரம்பித்தாள். அதன் பிறகு அவள் முகம் வாடியிருக்கவில்லை” என்று பைபிள் சொல்கிறது. (1 சா. 1:17, 18) அன்னாளுடைய பிரச்சினை உடனே தீர்ந்துவிடவில்லைதான். இருந்தாலும், அவளுக்கு மன அமைதி கிடைத்தது. ஏனென்றால், மனதில் இருந்த பாரத்தை அவள் யெகோவாவிடம் தூக்கிப் போட்டுவிட்டாள். யெகோவா அவளுடைய வேதனையைப் பார்த்தார், அவளுடைய அழுகையைக் கேட்டார். பிறகு, அவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தார்.—1 சா. 1:19, 20; 2:21.

8-9. எபிரெயர் 10:24, 25-ல் சொல்லியிருக்கிற மாதிரி, கூட்டங்களுக்குப் போக நாம் ஏன் கடினமாக முயற்சி எடுக்க வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

8 பாடம். பிரச்சினைகளால் சோகத்தில் மூழ்கிப்போய், விடாமல் அழுதுகொண்டே இருக்கிறீர்களா? ஒருவேளை, உங்களுடைய நெருங்கிய நண்பர் அல்லது குடும்பத்தில் இருக்கிற ஒருவர் இறந்துபோயிருக்கலாம். அந்த மாதிரி சமயங்களில், தனியாக இருக்க வேண்டும் என்று யோசிப்பது இயல்புதான். ஆனால் எது அன்னாளுக்கு ஆறுதலையும் உற்சாகத்தையும் கொடுத்தது என்று யோசித்துப் பாருங்கள். அவள் வழிபாட்டுக் கூடாரத்துக்குக் கிளம்பிப்போனாள். உங்களுக்கும் ஆறுதல் கிடைக்க வேண்டுமென்றால் கூட்டங்களுக்குக் கிளம்பிப்போங்கள். போவதற்கு தோன்றவில்லை என்றாலும் போக முயற்சி செய்யுங்கள். (எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.) ஆறுதல்படுத்துகிற வசனங்கள் மூலம் யெகோவா அங்கே உங்களிடம் பேசுவார். உங்கள் சோகத்தை சந்தோஷமாக மாற்றுவார். பிரச்சினை உடனே தீரவில்லை என்றாலும் உங்களுக்கு மன அமைதி கிடைக்கும்.

9 கூட்டங்களில், நம்மேல் உயிரையே வைத்திருக்கிற சகோதர சகோதரிகளைப் பார்க்க முடிகிறது. அவர்களோடு இருக்கும்போது கவலைகளை மறந்து நிம்மதியாக இருக்க முடிகிறது. (1 தெ. 5:11, 14) விசேஷ பயனியராக சேவை செய்கிற ஒரு சகோதரருடைய அனுபவத்தை இப்போது பார்க்கலாம். அவர் தன்னுடைய மனைவியைப் பறிகொடுத்துவிட்டார். அவர் சொல்கிறார்: “நான் இன்னும் அழுதுகொண்டுதான் இருக்கிறேன். சிலசமயம் ஓரமாகப் போய் நான் தனியாக அழுதுகொண்டே இருப்பேன். ஆனால் கூட்டங்களுக்குப் போகும்போது எனக்கு நிம்மதியாக இருக்கும். சகோதர சகோதரிகள் என்னிடம் அன்பாக பேசும்போதும் சரி, அவர்களுடைய பதில்களைக் கேட்கும்போதும் சரி, எனக்கு ஆறுதலாக இருக்கும். கூட்டங்களுக்குப் போவதற்கு முன்பு எவ்வளவு வேதனையில் இருந்தாலும், அங்கே போன பிறகு என் மனசு லேசாக இருக்கும்.” நாம் கூட்டங்களுக்குப் போகும்போது, யெகோவா தன்னுடைய பிள்ளைகளைப் பயன்படுத்தி ஆறுதல் தருகிறார்.

சகோதர சகோதரிகளிடமிருந்து நமக்கு ஆறுதல் கிடைக்கும் (பாராக்கள் 8-9)


10. நாம் பயங்கரமான வேதனையில் இருக்கும்போது எப்படி அன்னாளைப் போல் நடந்துகொள்ளலாம்?

10 அன்னாள் தன் மனதில் இருக்கிற கவலைகளையெல்லாம் யெகோவாவிடம் சொன்னதால், அவளுக்கு ஆறுதல் கிடைத்தது. நீங்களும் “உங்கள் கவலைகளையெல்லாம் [யெகோவாமேல்] போட்டுவிடுங்கள்.” (1 பே. 5:7) ஒரு சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவருடைய கணவரை திருடர்கள் கொன்றுவிட்டார்கள். “என் மனசு சில்லு சில்லாக உடைந்துவிட்டது. இந்த சோகத்திலிருந்து மீண்டு வரவே முடியாது என்று எனக்குத் தோன்றியது. ஆனால், யெகோவா அப்பாவிடம் நான் ஜெபம் செய்தபோது, அவர் என்னைக் கட்டி அணைத்து ஆறுதல் சொன்ன மாதிரி இருந்தது. சிலசமயம், நான் சொல்லாத வார்த்தைகளைக்கூட அவர் புரிந்துகொண்டார். வேதனையில் நொறுங்கிப் போயிருந்தபோது, ‘எனக்குச் சமாதானம் கொடுங்கள்’ என்று ஜெபம் செய்தேன். அந்தச் சமயத்தில் என் இதயத்திலும் மனதிலும் ஒரு விதமான அமைதி வந்தது. அதற்குப் பிறகு, மற்ற வேலைகளை என்னால் செய்ய முடிந்தது” என்று அந்தச் சகோதரி சொல்கிறார். சோகத்தில் நீங்கள் யெகோவாவிடம் அழும்போது, அவர் உங்கள் கண்ணீரைப் பார்க்கிறார்; உங்களைப் புரிந்துகொள்கிறார். அந்தச் சமயத்தில் அவருடைய மனசும் வலிக்கும். உங்கள் கண்ணீரைத் துடைக்க அவர் துடிக்கிறார். பிரச்சினை உடனே சரியாகவில்லை என்றால்கூட, யெகோவா உங்களுக்கு மனசமாதானத்தைக் கொடுப்பார். (சங். 94:19; பிலி. 4:6, 7) நீங்கள் உண்மையோடு சகித்திருப்பதைப் பார்த்து அவர் கண்டிப்பாக பலன் கொடுப்பார்.—எபி. 11:6.

துரோகத்தால் சிந்தும் கண்ணீர்

11. எல்லாரும் தாவீதை மோசமாக நடத்தியபோது அவருக்கு எப்படி இருந்தது?

11 தாவீது, வாழ்க்கையில் பட்ட கஷ்டங்களால் கண்ணீர் சிந்தினார். பலருடைய வெறுப்பை சம்பாதித்தார். அவர் யாரை நம்பினாரோ அவர்களில் சிலரே அவரை முதுகில் குத்தினார்கள். (1 சா. 19:10, 11; 2 சா. 15:10-14, 30) அவர் ஒருசமயம் இப்படி எழுதினார்: “நான் பெருமூச்சுவிட்டு பெருமூச்சுவிட்டுக் களைத்துப்போகிறேன். ராத்திரியெல்லாம் அழுது அழுது என் படுக்கையைக் கண்ணீரால் நனைக்கிறேன், என் கட்டிலைக் குளமாக்குகிறேன்.” தன்னை ‘கொடுமைப்படுத்திய ஆட்களால்’ தாவீதுக்கு இந்த நிலைமை வந்தது. (சங். 6:6, 7) மற்றவர்கள் அவரை மோசமாக நடத்தியதால் அவருடைய கண்ணீர் வற்றவே இல்லை.

12. சங்கீதம் 56:8-ல் சொல்லியிருக்கிற மாதிரி தாவீது எதை உறுதியாக நம்பினார்?

12 எக்கச்சக்கமான பிரச்சினைகள் வந்தாலும், யெகோவாவுக்குத் தன்மேல் பாசம் இருக்கிறதா என்ற சந்தேகம் தாவீதுக்கு வரவே இல்லை. அதனால்தான், “என்னுடைய கதறலை யெகோவா கண்டிப்பாகக் கேட்பார்” என்று அவர் எழுதினார். (சங். 6:8) இன்னொரு சந்தர்ப்பத்தில் யெகோவாவுக்கு நம்மேல் எவ்வளவு பாசம் இருக்கிறது என்பதை தாவீது கவிதையாக எழுதியிருக்கிறார். அது சங்கீதம் 56:8-ல் இருக்கிறது. (வாசியுங்கள்.) தன்னுடைய கண்ணீரையெல்லாம் யெகோவா ஒரு தோல் பையில் சேர்த்து வைத்திருப்பதாகவும், அவற்றைப் பற்றி ஒரு புத்தகத்தில் எழுதி வைத்திருப்பதாகவும் அவர் அதில் சொன்னார். அப்படியென்றால், தன்னுடைய வலி யெகோவாவுக்குத் தெரியும் என்பதிலும், அதை அவர் ஞாபகம் வைத்திருக்கிறார் என்பதிலும் தாவீதுக்கு எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. தன்னுடைய கஷ்டங்களை மட்டுமல்ல, அந்தக் கஷ்டங்களால் அவர் எவ்வளவு நொந்துபோயிருந்தார் என்பதும் தன்னுடைய பரலோக அப்பாவுக்கு நன்றாகத் தெரியும் என்று தாவீது உறுதியாக நம்பினார்.

13. மற்றவர்கள் நம்மைக் காயப்படுத்தினாலோ நம்மை விட்டுவிட்டு போனாலோ, நாம் எதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்? (படத்தையும் பாருங்கள்.)

13 பாடம். நீங்கள் நம்பிய ஒருவர் உங்களைக் காயப்படுத்திவிட்டாரா? உங்களுக்குத் துரோகம் பண்ணிவிட்டாரா? ஒருவேளை உங்களுக்கு காதல் தோல்வி ஏற்பட்டிருக்கலாம், உங்கள் கல்யாண வாழ்க்கை திடீரென்று முறிந்திருக்கலாம். அல்லது, உங்களுக்கு நெருக்கமான ஒருவர் யெகோவாவுக்குச் சேவை செய்வதை விட்டிருக்கலாம். அந்த மாதிரி சமயங்களில், நீங்கள் அப்படியே உடைந்துபோயிருப்பீர்கள். ஒரு சகோதரருக்கு அவருடைய மனைவி துரோகம் செய்துவிட்டார். அவரை அம்போவென்று விட்டுவிட்டு போய்விட்டார். அந்தச் சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “என்னால் அந்த அதிர்ச்சியிலிருந்து மீண்டு வரவே முடியவில்லை. வாழ்வதால் என்ன பிரயோஜனம் என்று யோசித்தேன். அப்படியே சோகத்தில் மூழ்கியிருந்தேன். சின்ன சின்ன விஷயத்துக்கெல்லாம் கோபப்பட்டேன்.” இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில்தான் நீங்களும் இருக்கிறீர்களா? கவலைப்படாதீர்கள்! யெகோவா என்றைக்குமே உங்களை விட்டுப் போகமாட்டார். அந்தச் சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “மனிதர்கள் எப்போது வேண்டுமானாலும் நம்மைக் காயப்படுத்திவிடலாம், நம்மை விட்டுப் போய்விடலாம். ஆனால், யெகோவா நம்முடைய கற்பாறை. என்ன ஆனாலும் சரி, அவர் நம் கூடவே இருப்பார். தனக்கு உண்மையாக இருப்பவர்களைக் கைவிடவே மாட்டார்.” (சங். 37:28) மனிதர்கள் காட்டுகிற அன்பு, யெகோவா காட்டுகிற அன்புக்கு ஈடே ஆகாது. மற்றவர்கள் உங்கள்மேல் வைத்திருக்கிற பாசம் குறையலாம். ஆனால், யெகோவா உங்கள்மேல் வைத்திருக்கிற பாசம் ஒருநாளும் குறையாது. அந்தளவுக்கு யெகோவாவுக்கு நீங்கள் தங்கமானவர்கள்! (ரோ. 8:38, 39) மனிதர்கள் உங்களை வெறுத்தாலும், யெகோவா வெறுக்க மாட்டார்; உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார்!

மனமுடைந்துபோனவர்கள் பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார் என்ற நம்பிக்கையை சங்கீத புத்தகம் கொடுக்கிறது (பாரா 13)


14. சங்கீதம் 34:18-லிருந்து நமக்கு என்ன நம்பிக்கை கிடைக்கிறது?

14 யாராவது நமக்குத் துரோகம் பண்ணிவிட்டால் சங்கீதம் 34:18-ல் இருக்கும் தாவீதின் வார்த்தைகளும் நமக்கு ஆறுதல் கொடுக்கும். (வாசியுங்கள்.) ‘உள்ளம் உடைந்துபோனவர்கள்’ என்று சொல்லும்போது, “வாழ்க்கையில் எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல், நம்பிக்கை இழந்து போனவர்களை” குறிப்பதாக ஒரு ஆராய்ச்சி புத்தகம் சொல்கிறது. இந்த மாதிரி நிலையில் இருக்கிறவர்களுக்கு யெகோவா எப்படி உதவி செய்கிறார்? ஒரு அன்பான அப்பா எப்படித் தன்னுடைய பிள்ளையைக் கட்டிப்பிடித்து ஆறுதல் சொல்வாரோ அதேமாதிரி நம் “பக்கத்திலேயே யெகோவா இருக்கிறார்.” அவர் நம்மேல் கரிசனையாக இருக்கிறார். யாராவது நம்மை ஏமாற்றிவிட்டாலோ நமக்குத் துரோகம் பண்ணிவிட்டாலோ யெகோவா நமக்கு உதவி செய்வதற்கு தயாராக இருக்கிறார். நம்மை ஆறுதல்படுத்தவும், உடைந்த நம்முடைய உள்ளத்துக்கு மருந்து போடவும் யெகோவா ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் நல்ல நல்ல பரிசுகளைத் தருவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். இதெல்லாமே இப்போது இருக்கிற பிரச்சினைகளைச் சகித்துக்கொள்ள நமக்கு உதவும்.—ஏசா. 65:17.

நம்பிக்கை இழந்ததால் சிந்தும் கண்ணீர்

15. என்ன சூழ்நிலை எசேக்கியாவைக் கண்ணீர்விட்டு அழ வைத்தது?

15 யூதாவை ஆட்சி செய்த எசேக்கியா ராஜாவுக்கு 39 வயதில் ஒரு மோசமான வியாதி வந்தது. அந்த வியாதியால் அவர் இறந்துவிடுவார் என்று ஏசாயா தீர்க்கதரிசி மூலமாக யெகோவா சொல்லிவிட்டார். (2 ரா. 20:1) அந்தச் சமயத்தில் எசேக்கியா ராஜாவுக்கு எந்த நம்பிக்கையும் இல்லாத மாதிரி இருந்தது. யெகோவா சொன்ன செய்தியைக் கேட்டு எசேக்கியா உடைந்துபோனார், கதறி அழுதார். உயிரைக் காப்பாற்றச் சொல்லி யெகோவாவிடம் கெஞ்சினார்.—2 ரா. 20:2, 3.

16. எசேக்கியா ராஜா கதறி அழுததைப் பார்த்து யெகோவா என்ன செய்தார்?

16 எசேக்கியா ராஜா கதறி அழுததை யெகோவா பார்த்தபோது, அவருடைய மனசு உருகியது. அதனால் யெகோவா அவரிடம்: “நீ செய்த ஜெபத்தை நான் கேட்டேன். நீ கண்ணீர்விட்டு அழுததைப் பார்த்தேன். நான் உன்னைக் குணமாக்குகிறேன்” என்று சொன்னார். அவருடைய வாழ்நாளைக் கூட்டுவதாகவும், அவரையும் எருசலேமையும் அசீரியர்களிடமிருந்து காப்பாற்றப் போவதாகவும் யெகோவா ஏசாயா மூலமாக வாக்குக் கொடுத்தார்.—2 ரா. 20:4-6.

17. மோசமான வியாதியால் நாம் கஷ்டப்படும்போது யெகோவா நமக்கு எப்படி உதவுகிறார்? (சங்கீதம் 41:3) (படத்தையும் பாருங்கள்.)

17 பாடம். தீராத வியாதியால் நீங்கள் கஷ்டப்படுகிறீர்களா? குணமாகும் என்ற நம்பிக்கையே உங்களுக்கு இல்லையா? அப்படியென்றால் யெகோவாவிடம் ஜெபம் பண்ணுங்கள்; உங்களுக்கு அழுகை வந்தாலும் ஜெபம் பண்ணுங்கள். யெகோவா “கனிவும் இரக்கமும் உள்ள தகப்பன். எல்லா விதமான ஆறுதலின் கடவுள்” என்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், என்ன பிரச்சினை வந்தாலும் யெகோவா கண்டிப்பாக நமக்கு ஆறுதல் கொடுப்பார். (2 கொ. 1:3, 4) இன்று எல்லாப் பிரச்சினைகளையும் யெகோவா நீக்கிப்போட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்க முடியாதுதான். ஆனால், சகித்திருப்பதற்கு உதவுவார் என்று நிச்சயம் நம்பலாம். (சங்கீதம் 41:3-ஐ வாசியுங்கள்.) யெகோவா அவருடைய சக்தியைப் பயன்படுத்தி நமக்குப் பலத்தையும், ஞானத்தையும், மனசமாதானத்தையும் கொடுப்பார். இவையெல்லாம் அந்தப் பிரச்சினையைச் சமாளிக்க உதவி செய்யும். (நீதி. 18:14; பிலி. 4:13) அதுமட்டுமல்ல, எதிர்காலத்தில் எந்த நோயுமே இல்லாமல் சந்தோஷமாக வாழ்வோம் என்ற நம்பிக்கையையும் கொடுத்து யெகோவா இன்று நம்மை ஆறுதல்படுத்துகிறார்.—ஏசா. 33:24.

பலம்... ஞானம்... மனசமாதானம்... இவற்றைக் கொடுப்பது மூலம் யெகோவா நம்முடைய ஜெபத்துக்குப் பதில் கொடுக்கிறார் (பாரா 17)


18. தீராத பிரச்சினைகள் வரும்போது எந்த வசனம் உங்களை ஆறுதல்படுத்தியிருக்கிறது? (“ கண்ணீரைத் துடைக்கும் ஆறுதலான வார்த்தைகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

18 யெகோவா பேசிய வார்த்தைகளைக் கேட்டபோது எசேக்கியா ராஜாவுக்கு ஆறுதல் கிடைத்தது. இன்றும், கடவுளுடைய வார்த்தை நமக்கு ஆறுதல் கொடுக்கிறது. தீராத பிரச்சினைகளோடு போராடிக்கொண்டு இருக்கும்போது அது நம்மை ஆறுதல்படுத்தி, தூக்கி நிறுத்துகிறது. (ரோ. 15:4) மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கிற ஒரு சகோதரிக்கு புற்றுநோய் வந்துவிட்டது; தன் நிலைமையை நினைத்து அவர் அடிக்கடி அழுதார். அவர் சொல்கிறார்: “ஏசாயா 26:3-ல் இருக்கிற வார்த்தைகள் எனக்கு ஆறுதலாக இருக்கிறது. நமக்கு வருகிற பிரச்சினைகளை நிறைய சமயங்களில் நம்மால் சரிசெய்ய முடியாதுதான். ஆனால், அந்த வசனத்தில் சொல்லியிருக்கிற மாதிரி யெகோவா நமக்கு மனசமாதானத்தைக் கொடுப்பார்; அதனால், நம்முடைய பிரச்சினையைச் சமாளிக்க முடியும்.” எந்த வசனம் உங்களுக்கு ஆறுதலைக் கொடுக்கிறது?

19. நம்முடைய எதிர்காலம் எப்படி இருக்கும்?

19 நாம் கடைசி நாட்களுடைய கடைசிப் பகுதியில் வாழ்ந்துகொண்டு இருக்கிறோம். அதனால், கண்ணீர்விடுகிற சூழ்நிலைகள் அதிகமாகிக்கொண்டுதான் போகும்! ஆனால் அன்னாள், தாவீது, எசேக்கியா ராஜாவின் உதாரணங்களில் பார்த்த மாதிரி யெகோவா நாம் சிந்தும் கண்ணீரைப் பார்க்கிறார். அதைப் பார்த்து வேதனைப்படுகிறார். நம்முடைய ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் அவர் ஞாபகம் வைத்துக்கொள்கிறார். அதனால், தீராத பிரச்சினைகள் வரும்போது மனதில் இருக்கிற கவலைகளை யெகோவாவிடம் ஜெபத்தில் கொட்டிவிடலாம். நம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளாமல் சகோதர சகோதரிகளிடம் நெருக்கமாக இருக்க முயற்சி செய்யலாம். பைபிளில் இருக்கிற ஆறுதலான வார்த்தைகளைப் படிக்கலாம். கடைசி வரைக்கும் உண்மையாக இருந்தால் யெகோவா நமக்குக் கண்டிப்பாகப் பலன் கொடுப்பார். அதில் சந்தேகமே வேண்டாம்! சோகத்தால், துரோகத்தால், நம்பிக்கை இழந்துபோனதால் நாம் சிந்தும் கண்ணீரை சீக்கிரத்தில் துடைக்கப்போவதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். (வெளி. 21:4) அப்போது ஆனந்தக் கண்ணீர் மட்டுமே நம் கண்களை நனைக்கும்!

பாட்டு 4 ‘யெகோவா என் மேய்ப்பர்’