Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 50

பாட்டு 135 யெகோவாவின் அன்பு வேண்டுகோள்: ‘என் மகனே, ஞானமாக நடந்திடு’

பெற்றோர்களே, பிள்ளைகளின் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

பெற்றோர்களே, பிள்ளைகளின் விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்

‘நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்.’ரோ. 12:2, அடிக்குறிப்பு.

என்ன கற்றுக்கொள்வோம்?

கடவுளையும் பைபிளையும் பற்றிப் பிள்ளைகளிடம் எப்படிப் பேசலாம் என்றும் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள அவர்களுக்கு எப்படி உதவலாம் என்றும் பெற்றோர்கள் இந்தக் கட்டுரையிலிருந்து கற்றுக்கொள்ள முடியும்.

1-2. நம் நம்பிக்கைகளைப் பற்றிப் பிள்ளைகள் கேள்வி கேட்கும்போது பெற்றோர் ஏன் பயப்பட வேண்டியதில்லை?

 ஒரு பெற்றோராக இருப்பது சாதாரண காரியம் கிடையாது. பிள்ளைகள் யெகோவாமேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்வதற்கு நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள். (உபா. 6:6, 7) அதற்காக உங்களை மனசார பாராட்டுகிறோம். பிள்ளைகள் வளர வளர, நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றிச் சில முக்கியமான கேள்விகளைக் கேட்கலாம். பைபிள் சொல்கிற ஒழுக்கநெறிகளைப் பற்றிக்கூட அவர்கள் கேள்விகள் கேட்கலாம்.

2 ‘என்ன இப்படிக் கேள்வி கேட்கிறார்களே? அவர்களுடைய விசுவாசம் குறைந்துவிட்டதோ?’ என்று நீங்கள் பயப்படலாம். ஆனால் பயப்படாதீர்கள்! பிள்ளைகள் வளர வளர, கேள்விகள் கேட்பது நல்லது. அப்போதுதான் விசுவாசத்தை அவர்கள் பலப்படுத்திக்கொள்ள முடியும். (1 கொ. 13:11) அதோடு, இந்த மாதிரி கேள்விகளை அவர்கள் கேட்கும்போது, அவர்களை நன்றாக யோசிக்க வைக்க உங்களால் முடியும்.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 இந்தக் கட்டுரையில், பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு உதவ வேண்டிய மூன்று விஷயங்களைப் பற்றிப் பார்க்கலாம்: (1) விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள, (2) பைபிள் சொல்லும் ஒழுக்கநெறிகள் தங்களுடைய நன்மைக்குத்தான் என்பதைப் புரிந்துகொள்ள, (3) நம்பிக்கைகளைப் பற்றி மற்றவர்களிடம் பேச. அதோடு, பிள்ளைகள் கேள்வி கேட்பது ஏன் நல்லது என்பதையும் இந்தக் கட்டுரையிலிருந்து புரிந்துகொள்வோம். நீங்கள் குடும்பமாகச் செய்வதற்குச் சில டிப்ஸையும் பார்ப்போம்.

விசுவாசத்தைப் பலப்படுத்த உதவுங்கள்

4. பிள்ளைகளுடைய மனதில் என்ன மாதிரி கேள்விகள் வரலாம், ஏன்?

4 கடவுள்மேல் இருக்கும் விசுவாசம், பெற்றோரிடமிருந்து பிள்ளைகளுக்குத் தானாகவே வந்துவிடாது. உங்களுக்குக்கூட பிறக்கும்போதே கடவுள்மேல் விசுவாசம் வந்துவிடவில்லை, இல்லையா? பிள்ளைகளுடைய விஷயத்திலும் அப்படித்தான். வளர வளர, சில கேள்விகள் அவர்களுடைய மனதைப் போட்டுக் குடையலாம். ‘கடவுள் என்று ஒருவர் உண்மையிலேயே இருக்கிறாரா? பைபிள் சொல்வதையெல்லாம் நம்பலாமா?’ என்றெல்லாம் அவர்கள் யோசிக்கலாம். சொல்லப்போனால், “சிந்திக்கும் திறனைப் பயன்படுத்தி” எல்லா விஷயங்களையும் “நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்” என்று பைபிள்கூட சொல்கிறது. (ரோ. 12:1; 1 தெ. 5:21) பிள்ளைகள் தங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள, ஒரு பெற்றோராக நீங்கள் எப்படி உதவலாம்?

5. பைபிள்மேல் விசுவாசத்தை வளர்த்துக்கொள்ள பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்கு உதவலாம்? (ரோமர் 12:2)

5 பைபிள் சொல்வது உண்மை என்பதற்கான ஆதாரங்களைக் கண்டுபிடிக்க கற்றுக்கொடுங்கள். (ரோமர் 12:2-ஐ வாசியுங்கள்.) பிள்ளைகள் மனதில் கேள்விகள் வரும்போது, ஆராய்ச்சிக் கருவிகளைப் பயன்படுத்தி பதில்களைக் கண்டுபிடிக்க கற்றுக்கொடுங்கள். அதற்கு, உவாட்ச்டவர் பப்ளிகேஷன்ஸ் இன்டெக்ஸ் (ஆங்கிலம்) அல்லது யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டை நீங்கள் பயன்படுத்தலாம். ஆராய்ச்சிக் கையேட்டில்,பைபிள்” என்ற தலைப்புக்குகீழ் “கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் எழுதப்பட்டது” என்ற இன்னொரு தலைப்பு இருக்கும். அதன்கீழ், பைபிள் உண்மையிலேயே ‘கடவுளுடைய வார்த்தைதான்’ என்பதற்கு நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. (1 தெ. 2:13) உதாரணத்துக்கு, அசீரிய நகரமான நினிவேயைப் பற்றி உங்கள் பிள்ளை ஆராய்ச்சி செய்யலாம். நினிவே என்ற ஒரு நகரம் இருந்ததே இல்லை என்று பைபிள் விமர்சகர்கள் முன்பு சொல்லிக்கொண்டிருந்தார்கள். ஆனால், 1850-களில் அந்த நகரத்தின் இடிபாடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இப்படி, பைபிள் சொல்வது உண்மை என்று நிரூபிக்கப்பட்டது. (செப். 2:13-15) நினிவே நகரத்தின் அழிவு, பைபிள் தீர்க்கதரிசனத்தின் நிறைவேற்றம் என்பதைப் புரிந்துகொள்ள, நவம்பர் 2021 காவற்கோபுரத்தில்உங்களுக்குத் தெரியுமா?” என்ற கட்டுரையை உங்கள் பிள்ளை படிக்கலாம். நம் பிரசுரங்களில் படிக்கிற விஷயங்களை என்ஸைக்ளோப்பீடியாக்கள் அல்லது அதுபோன்ற நம்பகமான புத்தகங்களோடு அவர்கள் ஒப்பிட்டுப் பார்க்கலாம். இப்படியெல்லாம் செய்யும்போது பைபிள்மேல் அவர்களுக்கு இருக்கிற விசுவாசம் அதிகமாகும்.

6. பிள்ளைகளுடைய சிந்திக்கும் திறனை பெற்றோர் எப்படித் தட்டி எழுப்பலாம்? ஒரு உதாரணம் கொடுங்கள். (படத்தையும் பாருங்கள்.)

6 உங்கள் பிள்ளையின் சிந்திக்கும் திறனை தட்டி எழுப்புங்கள். பைபிளைப் பற்றியும் கடவுளைப் பற்றியும் பிள்ளைகளிடம் பேச உங்களுக்கு நிறைய வாய்ப்புகள் கிடைக்கும். நீங்களேகூட வாய்ப்புகளை உருவாக்கலாம். ஒருவேளை, நீங்கள் அவர்களை ஒரு மியூஸியத்துக்கோ பூங்காவுக்கோ அல்லது நம் கிளை அலுவலகத்தில் இருக்கிற கண்காட்சிக்கோ கூட்டிக்கொண்டு போகலாம். உதாரணத்துக்கு, நீங்கள் மியூஸியத்துக்கு நேரில் போவதாகவோ ஆன்லைனில் காட்டுவதாகவோ (virtual tour) வைத்துக்கொள்ளுங்கள். அங்கே இருக்கிற ஒரு பொருளோ வர்ணிக்கப்பட்டிருக்கிற சரித்திர சம்பவமோ பைபிளோடு எப்படி ஒத்துப்போகிறது என்பதைக் காட்டலாம். 3,000 வருஷம் பழமையான மோவாப் கல்வெட்டைப் பற்றி உங்கள் பிள்ளைக்குத் தெரியுமா? அதில் கடவுளுடைய பெயர் இருக்கிறது என்று தெரியுமா? அந்தக் கல்வெட்டு, பிரான்ஸ் நாட்டிலுள்ள பாரிஸில் இருக்கிற லூவ்ரே மியூஸியத்தில் (Louvre Museum) இருக்கிறது. வார்விக், நியூ யார்க்கில் இருக்கிற நம்முடைய உலக தலைமை அலுவலகத்தில் “பைபிளும் கடவுளுடைய பெயரும்” என்ற ஒரு கண்காட்சி இருக்கிறது; அதில், இந்த மோவாப் கல்வெட்டு மாதிரியே ஒன்றை செய்து வைத்திருக்கிறார்கள். இந்தக் கல்வெட்டில், மோவாப் தேசத்து ராஜா மேசா, இஸ்ரவேலுக்கு எதிராக கலகம் செய்ததைப் பற்றிச் சொல்லியிருக்கிறது. இந்தப் பதிவும் பைபிளில் இருக்கிறது. (2 ரா. 3:4, 5) இந்த மாதிரி விஷயங்களைப் பிள்ளைகள் கண்ணாரப் பார்த்தால் அவர்களுடைய விசுவாசம் பலமாகும்.—2 நாளாகமம் 9:6-ஐ ஒப்பிடுங்கள்.

மியூஸியத்தில் இருக்கிற விஷயங்களைக் காண்பித்து, உங்கள் பிள்ளையை யோசிக்க வைக்க முடியுமா? (பாரா 6)


7-8. (அ) இயற்கையில் இருக்கிற அழகையும் வடிவங்களையும் பார்க்கும்போது நம்மால் என்ன கற்றுக்கொள்ள முடியும்? உதாரணம் சொல்லுங்கள். (படத்தையும் பாருங்கள்.) (ஆ) படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்ற நம்பிக்கையைப் பலமாக்க பிள்ளைகளிடம் நீங்கள் எந்த மாதிரி கேள்விகளைக் கேட்கலாம்?

7 இயற்கையில் இருக்கிற அற்புதமான விஷயங்களைப் பற்றி உங்கள் பிள்ளைகளை யோசிக்க வையுங்கள். உங்கள் பிள்ளைகளைப் பூங்காவுக்குக் கூட்டிக்கொண்டு போகும்போது அல்லது அவர்களோடு சேர்ந்து தோட்ட வேலை செய்யும்போது, இயற்கையில் இருக்கிற வடிவங்களைக் காட்டுங்கள். ஏன்? உண்மையிலேயே ஞானமுள்ள ஒருவர் அவற்றைப் படைத்திருக்கிறார் என்பதற்கு அவை அத்தாட்சிகளாக இருக்கின்றன. உதாரணத்துக்கு, இயற்கையில் இருக்கிற சுருள் வடிவங்களை எடுத்துக்கொள்ளுங்கள். இவற்றைப் பற்றி விஞ்ஞானிகள் பல வருஷங்களாக ஆராய்ச்சி செய்கிறார்கள். சுருள் வடிவத்தில் இருக்கிற ஒரு விஷயத்தை எடுத்து அதில் எத்தனைச் சுருள்கள் இருக்கின்றன என்று எண்ணி பார்த்தால், அவை ஒரு குறிப்பிட்ட எண் வரிசையில் இருப்பதைப் பார்க்க முடியும் என்று நிகோலா ஃபெமிலி என்ற விஞ்ஞானி சொல்கிறார். அந்த எண் வரிசையின் பெயர் ஃபிபோனாச்சி வரிசைமுறை எண்கள் (Fibonacci sequence). இதுபோன்ற சுருள் வடிவங்களை இயற்கையில் அதிகமாகப் பார்க்க முடியும். உதாரணத்துக்கு, நட்சத்திர மண்டலங்களில், நாட்டிலஸ் என்ற ஒருவகை நத்தையின் ஓடுகளில், செடிகளில் இலைகள் அடுக்கப்பட்ட விதத்தில், சூரியகாந்தி பூக்களின் நடுவில் இந்தச் சுருள் வடிவத்தைப் பார்க்க முடியும். a

8 இயற்கை சட்டங்களின் அடிப்படையில்தான், இயற்கையில் இருக்கிற வடிவங்கள் உருவாகிறது என்பதை அறிவியல் வகுப்பில் உங்கள் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். உதாரணத்துக்கு, பெரும்பாலான மரங்களின் தோற்றத்தை யோசித்துப் பாருங்கள். முதலில் அடிமரம், பிறகு கிளைகள், சிறிய கிளைகள், இலைகள் என அவை பிரிவதை நம்மால் கவனிக்க முடியும். இப்படிப்பட்ட வடிவத்துக்கு ஃப்ராக்டல் வடிவம் (Fractal patterns) என்று பெயர். இந்த வடிவங்களை இயற்கையில் இன்னும் பல விஷயங்களில் கவனிக்கலாம். ஆனால், இந்த மாதிரி அழகான வடிவங்கள் உருவாவதற்கான சட்டங்களை யார் போட்டது? இயற்கையில் நாம் பார்க்கிற வடிவங்களின் ஒழுங்குக்கும் அழகுக்கும் பின்னால் இருப்பது யார்? இந்த மாதிரி கேள்விகளை பிள்ளைகள் யோசிக்கும்போது கடவுள்தான் இவற்றைப் படைத்தார் என்ற நம்பிக்கை அதிகமாகும். (எபி. 3:4) பிறகு ஒருகட்டத்தில், நீங்கள் அவர்களிடம் இந்தக் கேள்வியைக் கேட்கலாம்: ‘கடவுள்தான் நம்மைப் படைத்தார் என்றால், நாம் சந்தோஷமாக வாழ்வதற்கு உதவும் ஒழுக்கநெறிகளையும் அவர் கொடுத்திருப்பார், இல்லையா?’ அந்த ஒழுக்கநெறிகள் பைபிளில் இருக்கிறது என்பதை நீங்கள் அவர்களுக்கு எடுத்து சொல்லலாம்.

NASA, ESA, and the Hubble Heritage (STScl/AURA)-ESA/Hubble Collaboration

இயற்கையில் பார்க்கிற வடிவங்களின் ஒழுங்குக்கும் அழகுக்கும் பின்னால் இருப்பது யார்? (பாராக்கள் 7-8)


பைபிளில் இருக்கும் ஒழுக்கநெறிகள் தங்களுடைய நன்மைக்குத்தான் என்பதைப் புரிந்துகொள்ள உதவுங்கள்

9. பைபிளில் இருக்கிற ஒழுக்கநெறிகளைப் பற்றி உங்களுடைய பிள்ளைகள் கேள்வி கேட்பதற்கு எது காரணமாக இருக்கலாம்?

9 பைபிளில் சொல்லியிருக்கிற ஒழுக்கநெறிகளைப் பற்றிப் பிள்ளைகள் கேள்வி கேட்டால், அவர்கள் ஏன் அப்படிக் கேட்கிறார்கள் என்ற காரணத்தைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உண்மையிலேயே அந்த ஒழுக்கநெறிகள் அவர்களுக்குப் பிடிக்காததால் கேள்வி கேட்கிறார்களா? அல்லது, அதைப் பற்றி மற்றவர்களிடம் எப்படி விளக்குவது என்று தெரியாததால் கேள்வி கேட்கிறார்களா? அவர்கள் என்ன காரணத்துக்காகக் கேட்டாலும் சரி, பைபிளில் இருக்கிற ஒழுக்கநெறிகள் அவர்களுடைய நல்லதுக்குத்தான் என்பதைப் புரியவைக்க இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகம் கண்டிப்பாக உதவும். அதை நீங்கள் அவர்களோடு சேர்ந்து படிக்கலாம். b

10. யெகோவாவின் நண்பராவதற்குப் பிள்ளைகளுக்கு நீங்கள் எப்படி உதவலாம்?

10 யெகோவாவின் நண்பராவதற்கு பிள்ளைகளுக்கு உதவுங்கள். பிள்ளைகளோடு சேர்ந்து பைபிள் படிக்கும்போது, அவர்கள் மனதில் இருப்பதைத் தெரிந்துகொள்ள நல்ல கேள்விகளையும், உதாரணங்களையும் பயன்படுத்துங்கள். (நீதி. 20:5) அந்த மாதிரி கேள்விகளும், உதாரணங்களும் இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்தில்கூட இருக்கின்றன. உதாரணத்துக்கு, 8-வது பாடம் யெகோவாவை ஒரு நல்ல நண்பருக்கு ஒப்பிடுகிறது. நம்மைப் பாதுகாக்கவும், நம்முடைய நன்மைக்காகவும் நிறைய நல்ல விஷயங்களைச் சொல்கிற ஒரு நண்பராக யெகோவா இருக்கிறார் என்று அந்தப் பாடம் சொல்கிறது. 1 யோவான் 5:3-ஐ படித்தப் பிறகு, பிள்ளைகளிடம் இப்படிக் கேட்கலாம்: “யெகோவா ஒரு நல்ல நண்பர் என்று பார்த்தோம். அப்படிப்பட்ட ஒரு நண்பர் நம்மைக் கஷ்டப்படுத்துவதற்காக சில விஷயங்களைச் சொல்வாரா? நீ என்ன நினைக்கிறாய்?” இது ரொம்ப சாதாரண ஒரு கேள்வி மாதிரி தோன்றினாலும், யெகோவாவுக்கு நம்மேல் அன்பு இருப்பதால்தான் அவர் சட்டங்களைக் கொடுத்திருக்கிறார் என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள்.—ஏசா. 48:17, 18.

11. பைபிள் நியமங்கள் நம்முடைய நல்லதுக்குத்தான் என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்ள நீங்கள் எப்படி உதவலாம்? (நீதிமொழிகள் 2:10, 11)

11 பைபிள் நியமங்களின்படி வாழ்வது நமக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கிறது என்பதைச் சொல்லுங்கள். குடும்பமாகச் சேர்ந்து பைபிளையோ தினவசனத்தையோ படிக்கும்போது பைபிள் நியமங்கள் உங்கள் குடும்பத்துக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது என்பதைப் பற்றிப் பேசுங்கள். உதாரணத்துக்கு, கடினமாக உழைப்பதாலும் நேர்மையாக இருப்பதாலும் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பதைப் பிள்ளைக்குச் சொல்லிக்கொடுக்கலாம். (எபி. 13:18) அதுமட்டுமல்ல, பைபிள் நியமங்களின்படி வாழ்வதால் நாம் எப்படி ஆரோக்கியமாகவும் சந்தோஷமாகவும் இருக்கிறோம் என்பதைக்கூட சொல்லலாம். (நீதி. 14:29, 30) இந்த மாதிரி விஷயங்களையெல்லாம் பேசும்போது பைபிள் நியமங்கள் உண்மையிலேயே நம்முடைய நல்லதுக்குத்தான் என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள்.நீதிமொழிகள் 2:10, 11-ஐ வாசியுங்கள்.

12. பைபிள் நியமங்கள் நம்முடைய நல்லதுக்குத்தான் என்பதை ஒரு அப்பா தன்னுடைய மகனுக்கு எப்படிப் புரியவைத்தார்?

12 ஸ்டீவும் அவருடைய மனைவியும் தங்கள் டீனேஜ் மகன் ஈத்தனுக்கு எப்படி உதவுகிறார்கள் என்று பார்க்கலாம். யெகோவா கொடுத்திருக்கிற சட்டங்கள், அவர் நம்மேல் வைத்திருக்கிற அன்பைக் காட்டுகிறது என்பதை அவன் புரிந்துகொள்ள உதவுகிறார்கள். அவர்கள் இப்படிச் சொல்கிறார்கள்: “ஒரு குறிப்பிட்ட பைபிள் நியமத்தைப் பற்றிப் பேசும்போது இந்த மாதிரி கேள்விகளைக் கேட்போம்: ‘இந்த நியமத்துக்கு நாம் கீழ்ப்படிய வேண்டும் என்று யெகோவா ஏன் எதிர்பார்க்கிறார்? அவருக்கு நம்மேல் அன்பு இருக்கிறது என்பதை இது எப்படிக் காட்டுகிறது? இந்த நியமத்துக்கு நாம் கீழ்ப்படியவில்லை என்றால் என்ன ஆகும்?’” இப்படிப் பேசியதால், யெகோவா சொல்வது அவனுடைய நல்லதுக்குத்தான் என்பதை ஏற்றுக்கொள்ள அவனுக்கு உதவியது. “மனிதர்களுடைய கருத்துக்களைவிட பைபிள் சொல்வதுதான் ரொம்ப ரொம்ப ஞானமானது என்பதை ஈத்தன் புரிந்துகொள்ள வேண்டும் என்பதுதான் எங்கள் குறிக்கோள்” என்று ஸ்டீவ் சொல்கிறார்.

13. பைபிள் நியமங்களின்படி வாழ்வதற்கு பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுக்கலாம்? ஒரு உதாரணம் கொடுங்கள்.

13 பைபிள் நியமங்களின்படி வாழ்வதற்கு பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுங்கள். ஒரு புத்தகத்தைப் படிக்க சொல்லி உங்கள் பிள்ளையின் ஸ்கூலில் சொல்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்தப் புத்தகத்தில் வருகிற நபர்கள் ஒழுக்க விஷயத்தில் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ என்று இருக்கலாம். அல்லது, பயங்கர கோபக்காரர்களாக இருக்கலாம். அவர்களை ‘ரோல்மாடலாக’ வைக்க சொல்லி அந்தப் புத்தகம் தூண்டலாம். ஆனால், அந்த நபர்கள் நடந்துகொள்கிற விதத்தையும் பைபிளில் இருக்கும் நியமங்களையும் ஒப்பிட்டுப் பார்க்க பிள்ளைகளுக்கு உதவுங்கள். (நீதி. 22:24, 25; 1 கொ. 15:33; பிலி. 4:8) இப்படியெல்லாம் செய்யும்போது யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு நல்லது என்பதைப் பிள்ளைகள் புரிந்துகொள்வார்கள். வாய்ப்பு கிடைக்கும்போது இதைப் பற்றியெல்லாம் டீச்சரிடமும் கூடப்படிக்கிறவர்களிடமும் பிள்ளைகளால் பேச முடியும்.

நம்பிக்கைகளைப் பற்றிப் பேச உதவுங்கள்

14. என்ன மாதிரி விஷயங்களைப் பற்றிப் பேசுவது பிள்ளைகளுக்குக் கஷ்டமாக இருக்கலாம், ஏன்?

14 தங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுவது சில சமயத்தில் பிள்ளைகளுக்குப் பயமாக இருக்கலாம். உதாரணத்துக்கு, ஸ்கூலில் பரிணாமத்தைப் பற்றிப் பேச அவர்கள் பயப்படலாம். ஏனென்றால், பரிணாமத்தால்தான் எல்லாமே உருவானது, அதுதான் உண்மை என்று டீச்சர்கள் அடித்துச் சொல்லலாம். இந்த மாதிரி சூழ்நிலையில் பிள்ளைகள் தைரியமாகப் பேசுவதற்கு நீங்கள் எப்படி உதவலாம்?

15. நம்பிக்கைகளில் உறுதியாக இருப்பதற்கு உங்கள் பிள்ளைக்கு எது உதவி செய்யும்?

15 நம்பிக்கைகளில் உறுதியாக இருப்பதற்கு பிள்ளைக்கு உதவி செய்யுங்கள். படைத்தவர் ஒருவர் இருக்கிறார் என்ற உண்மையைத் தெரிந்துகொண்டதை நினைத்து உங்கள் பிள்ளைகள் வெட்கப்பட வேண்டிய அவசியம் இல்லை. (2 தீ. 1:8) ஏன்? உயிர் தானாகவே வந்திருக்க வாய்ப்பில்லை என்பதை நிறைய விஞ்ஞானிகள்கூட ஒத்துக்கொள்கிறார்கள். உயிரினங்கள் நுணுக்கமாக வடிவமைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும்போது ஞானமுள்ள ஒருவர்தான் அதை உருவாக்கியிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர்கள் வருகிறார்கள். அதனால், பரிணாம கோட்பாட்டை அவர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. உங்கள் பிள்ளைகள்கூட தங்களுடைய நம்பிக்கைகளைப் பற்றிப் பேச தயங்க வேண்டிய அவசியம் இல்லை. சில சகோதர, சகோதரிகள் உயிர் படைக்கப்பட்டது என்று ஏன் நம்புகிறார்கள் என்பதை அவர்கள் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இது அவர்களுடைய நம்பிக்கையைப் பலப்படுத்தும். c

16. படைத்தவர் இருக்கிறார் என்பதைப் பற்றித் தைரியமாகப் பேச பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்கு உதவலாம்? (1 பேதுரு 3:15) (படத்தையும் பாருங்கள்.)

16 படைத்தவரைப் பற்றிப் பேச தயாராவதற்கு உதவுங்கள். (1 பேதுரு 3:15-ஐ வாசியுங்கள்.) jw.org வெப்சைட்டில் இருக்கிற “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—படைப்பா பரிணாமமா?” என்ற தொடர் கட்டுரை உங்களுக்கு உதவும். படைத்தவர் இருக்கிறார் என்பதை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல அந்தக் கட்டுரையில் இருக்கிற எந்தக் குறிப்பு பிள்ளைகளுக்கு உதவும் என்று கலந்துபேசுங்கள். கூடப்படிக்கிறவர்களிடம் வாக்குவாதம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்பதையும் சொல்லுங்கள். நம்முடைய நம்பிக்கைகளைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புகிறவர்களிடம், யோசிக்க வைக்கிற மாதிரி சில விஷயங்களை எடுத்துச் சொல்ல பிள்ளைகளை உற்சாகப்படுத்துங்கள். உதாரணத்துக்கு, கூடப்படிக்கிற ஒரு பையன் உங்கள் பிள்ளையிடம் இப்படிக் கேட்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள்: “நான் ஒரு விஷயத்தை பார்த்தால்தான் நம்புவேன். நான் கடவுளைப் பார்த்ததே இல்லையே?!” இந்தச் சூழ்நிலையில் உங்கள் பிள்ளை இப்படிச் சொல்லலாம்: “நீ ஒரு அடர்ந்த காட்டுக்குள் நடந்துபோகிறாய். அங்கே ஒரு குடிசையைப் பார்க்கிறாய். ஆனால், அந்த இடத்தில் மனித நடமாட்டமே இல்லை. இப்போது என்ன யோசிப்பாய்? அங்கே யாருமே இல்லை என்பதற்காக அந்தக் குடிசை தானாகவே வந்திருக்கும் என்று சொல்ல முடியுமா? அதேமாதிரிதான், படைத்தவரைப் பார்க்க முடியவில்லை என்பதற்காக இந்தப் பிரபஞ்சம் தானாகவே வந்திருக்கும் என்று சொல்வது சரியாக இருக்குமா?” என்று கேட்கலாம்.

கூடப்படிக்கிறவர்களிடம் பேசும்போது அவர்களை யோசிக்க வைக்கிற மாதிரி பேசுங்கள் (பாராக்கள் 16-17) d


17. பைபிள் உண்மைகளை மற்றவர்களிடம் சொல்வதற்கு வாய்ப்புகளைத் தேட பிள்ளைகளை பெற்றோர் எப்படி உற்சாகப்படுத்தலாம்? உதாரணம் சொல்லுங்கள்.

17 பைபிளில் இருக்கிற சத்தியங்களை மற்றவர்களுக்குச் சொல்ல வாய்ப்புகளைத் தேட சொல்லி உங்கள் பிள்ளையை உற்சாகப்படுத்துங்கள். (ரோ. 10:10) நம்முடைய விசுவாசத்தைப் பற்றி மற்றவர்களிடம் பேசுவதை ஒரு இசைக்கருவியை வாசிக்க கற்றுக்கொள்வதோடு ஒப்பிடலாம். அதைக் கற்றுக்கொள்கிறவர்கள் ஆரம்பத்தில் எளிமையான ஒரு இசையை வாசித்து பழகுவார்கள். நாட்கள் போகப் போக, அதை வாசிப்பது அவர்களுக்குச் சுலபமாக ஆகிவிடும். அதேமாதிரி, எளிமையான பைபிள் சத்தியங்களைப் பற்றி உங்கள் பிள்ளைகள் மற்றவர்களிடம் பேச ஆரம்பிக்கலாம். உதாரணத்துக்கு, கூடப்படிக்கிறவர்களிடம் அவர்கள் இப்படிச் சொல்லலாம்: “இயற்கையில் இருக்கிற விஷயங்களை காப்பி அடித்து, என்ஜினியர்கள் நிறைய பொருள்களைத் தயாரிக்கிறார்கள் என்று உனக்குத் தெரியுமா? நான் உனக்கு ஒரு வீடியோவைக் காட்டுகிறேன்” என்று சொல்லிவிட்டு, யாருடைய கைவண்ணம் என்ற வீடியோ தொடரில் இருக்கிற ஒரு வீடியோவைக் காட்டலாம். பிறகு, இப்படிக் கேட்கலாம்: “இயற்கையில் இருக்கிற விஷயங்களைப் பார்த்து புது புது விஷயங்களை உருவாக்குகிற விஞ்ஞானிகளையே நாம் புகழ்கிறோம் என்றால், இயற்கையை உருவாக்கியவரை புகழ வேண்டாமா?” இந்த மாதிரி எளிமையாகப் பேசும்போது அதைக் கேட்கிறவர்களுடைய ஆர்வம் அதிகமாகும், இன்னும் நிறைய பேசுவதற்கு வாய்ப்பும் கிடைக்கும்.

விசுவாசத்தைப் பலப்படுத்த உங்கள் பிள்ளைக்குத் தொடர்ந்து உதவுங்கள்

18. கடவுள்மேல் இருக்கிற விசுவாசத்தைத் தொடர்ந்து பலப்படுத்த பெற்றோர் எப்படிப் பிள்ளைகளுக்கு உதவலாம்?

18 நம்மைச் சுற்றி பெரும்பாலும் யெகோவாவை வணங்காதவர்கள்தான் இருக்கிறார்கள். (2 பே. 3:3) அதனால், பெற்றோராக நீங்கள் பிள்ளைகளோடு சேர்ந்து பைபிளைப் படிக்கும்போது, பைபிள்மீதும் யெகோவா கொடுத்திருக்கிற ஒழுக்கநெறிகள்மீதும் அவர்களுக்கு இருக்கும் மரியாதையை அதிகமாக்க முயற்சி செய்யுங்கள். அதற்கு உதவும் தலைப்புகளைத் தேர்ந்தெடுத்து படிக்க அவர்களை உற்சாகப்படுத்துங்கள். யெகோவா படைத்திருக்கிற விஷயங்களை ஆழமாக யோசிக்க அவர்களுடைய சிந்திக்கும் திறனைத் தட்டி எழுப்புங்கள். நிறைவேறியிருக்கிற பைபிள் தீர்க்கதரிசனங்களைப் புரிந்துகொள்ள உதவுங்கள். எல்லாவற்றுக்கும்மேல், உங்கள் பிள்ளைகளுக்காக ஜெபம் பண்ணுங்கள்; அதுவும் அவர்களோடு சேர்ந்து ஜெபம் பண்ணுங்கள். பிள்ளைகளின் விசுவாசத்தைப் பலப்படுத்த நீங்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா கண்டிப்பாக ஆசிர்வதிப்பார்.—2 நா. 15:7.

பாட்டு 133 வாலிபத்தில் யெகோவாவை சேவியுங்கள்!

a இதைப் பற்றி இன்னும் நிறைய தெரிந்துகொள்ள, jw.org வெப்சைட்டில் தி வொண்டர்ஸ் ஆஃப் கிரியேஷன் ரிவீல் காட்ஸ் குளோரி என்ற வீடியோவைப் பாருங்கள்.

b உங்கள் பிள்ளைகள் ஏற்கனவே இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்திலிருந்து பைபிள் படிப்பை முடித்திருந்தால், பகுதிகள் 3, 4-ல் இருக்கிற சில பாடங்களை நீங்கள் அவர்களோடு கலந்துபேசலாம். பைபிளில் இருக்கிற ஒழுக்கநெறிகளைப் பற்றி அதில் இருக்கிறது.

c செப்டம்பர் 2006 விழித்தெழு! பத்திரிகையில் “படைப்பாளர் இருப்பதை நாங்கள் ஏன் நம்புகிறோம்” என்ற கட்டுரையைப் பாருங்கள். உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள் என்ற சிறுபுத்தகத்தையும் நீங்கள் பார்க்கலாம். jw.org வெப்சைட்டில் உயிரின் தோற்றம்—சிலர் சொல்வதென்ன? என்ற வீடியோ தொடரையும் பாருங்கள்.

d படவிளக்கம்: ஸ்கூலில் தன்னோடு படிக்கிற ஒரு பையனுக்கு ட்ரோன் (drone) ரொம்பப் பிடித்திருக்கிறது. அதனால், யாருடைய கைவண்ணம்? வீடியோ தொடரில் இருக்கிற ஒரு வீடியோவை, யெகோவாவின் சாட்சியாக இருக்கிற பிள்ளை காட்டுகிறான்.