Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 49

பாட்டு 147 பூஞ்சோலை வாழ்வு நிச்சயம்!

முடிவில்லாத வாழ்வு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

முடிவில்லாத வாழ்வு கிடைக்க என்ன செய்ய வேண்டும்?

‘மகனை ஏற்றுக்கொண்டு அவர்மேல் விசுவாசம் வைக்கிற ஒவ்வொருவனுக்கும் முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்.’யோவா. 6:40.

என்ன கற்றுக்கொள்வோம்?

பரலோக நம்பிக்கையுள்ளவர்களும் வேறே ஆடுகளும் இயேசுவின் பலியிலிருந்து எப்படி நன்மையடைகிறார்கள் என்று கற்றுக்கொள்வோம்.

1. சாகாமல் வாழ்வது சாத்தியம் இல்லை என்று ஏன் சிலர் நினைக்கிறார்கள்?

 ஆரோக்கியமாக இருப்பதற்காக மக்கள் பார்த்துப் பார்த்து சாப்பிடுகிறார்கள்; தவறாமல் உடற்பயிற்சி செய்கிறார்கள். இருந்தாலும், மரணத்தைச் சந்திக்காமல் என்றென்றும் வாழ்வது சாத்தியம் இல்லை என்று அவர்கள் நினைக்கிறார்கள். வயது ஆக ஆக நிறைய பிரச்சினைகள் வருவதால், மரணம் இல்லாத வாழ்க்கை எதார்த்தம் இல்லை என்று நினைக்கிறார்கள். ஆனால், யோவான் 3:16 மற்றும் 5:24-ல் பார்க்கிற மாதிரி “முடிவில்லாமல் வாழ்வு” சாத்தியம் என்று இயேசு சொல்கிறார்.

2. முடிவில்லாத வாழ்க்கையைப் பற்றி யோவான் 6-வது அதிகாரம் என்ன சொல்கிறது? (யோவான் 6:39, 40)

2 போன கட்டுரையில் பார்த்ததுபோல், இயேசு ஆயிரக்கணக்கான மக்களுக்கு அற்புதமாக ரொட்டியையும் மீனையும் சாப்பிடக் கொடுத்தார். (யோவா. 6:5-35) அவர் செய்த அந்த அற்புதமே ரொம்ப ஆச்சரியமாக இருந்தது; ஆனால் அடுத்த நாள் அவர் சொன்னது அதைவிட ஆச்சரியமாக இருந்தது! கலிலேயா கடற்கரை பக்கத்திலிருந்த கப்பர்நகூமுக்கு மக்கள் அவரைப் பின்தொடர்ந்து போயிருந்தார்கள். இறந்தவர்கள் உயிரோடு வருவார்கள் என்றும், அவர்களால் என்றென்றும் வாழ முடியும் என்றும் இயேசு அவர்களிடம் சொன்னார். (யோவான் 6:39, 40-ஐ வாசியுங்கள்.) இறந்துபோன உங்கள் நண்பர்களையும் அன்பானவர்களையும் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர்கள் உயிரோடு எழுப்பப்படுவார்கள்; நீங்களும் அவர்களும் முடிவில்லாமல் வாழ முடியும்! ஆனால், யோவான் 6-வது அதிகாரத்தில் இயேசு அடுத்ததாகச் சொன்ன வார்த்தைகளைப் புரிந்துகொள்வது நிறைய பேருக்குக் கஷ்டமாக இருந்திருக்கிறது. சரி, இப்போது அதைக் கொஞ்சம் ஆராயலாம்!

3. யோவான் 6:51 காட்டுவதுபோல் இயேசு தன்னைப் பற்றி என்ன சொன்னார்?

3 இயேசு அற்புதமாகக் கொடுத்த உணவைச் சாப்பிட்ட மக்களுக்கு, யெகோவா கொடுத்த மன்னா ஞாபகம் வந்திருக்கும். அந்த மன்னாவை “வானத்திலிருந்து” அல்லது “பரலோகத்திலிருந்து” வந்த உணவு என்று பைபிள் சொல்கிறது. (சங். 105:40; யோவா. 6:31) மன்னாவை உதாரணமாக வைத்து மக்களுக்கு இயேசு ஒரு முக்கியமான விஷயத்தைச் சொல்லித்தர நினைத்தார். இயேசு தன்னை, ‘பரலோகத்திலிருந்து [வந்த] உண்மையான உணவு,’ “கடவுள் தருகிற உணவு,” “வாழ்வு தரும் உணவு” என்றெல்லாம் சொன்னார். (யோவா. 6:32, 33, 35) ஆனால் மன்னாவுக்கும், வாழ்வு தரும் உணவாக இருக்கிற தனக்கும் என்ன முக்கியமான வித்தியாசம் இருந்தது என்பதை இயேசு காட்டினார். மன்னாவைச் சாப்பிட்டவர்கள் காலப்போக்கில் இறந்துவிட்டார்கள். (யோவா. 6:49) ஆனால் இயேசு தன்னைப் பற்றிச் சொன்னபோது, “பரலோகத்திலிருந்து வந்திருக்கும் உயிருள்ள உணவு நான்தான்; இந்த உணவைச் சாப்பிடுகிற எவரும் என்றென்றும் உயிர் வாழ்வார்” என்றார். (யோவான் 6:51-ஐ வாசியுங்கள்.) இதைக் கேட்ட யூதர்களுக்கு ரொம்ப குழப்பமாக இருந்தது. ‘இயேசு தன்னையே எப்படிப் பரலோகத்திலிருந்து வந்த உணவு என்று சொல்ல முடியும்? கடவுள் கொடுத்த மன்னாவைவிட இந்த “உணவு” உயர்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்?!’ என்று குழம்பினார்கள். அவர்கள் புரிந்துகொள்வதற்கு உதவியாக, “நான் கொடுக்கப்போகிற உணவு, உலகத்துக்கு வாழ்வு கிடைப்பதற்காக நான் தரப்போகிற என் சதை” என்று இயேசு சொன்னார். இதன் அர்த்தம் என்ன? அந்த அர்த்தத்தை நாமும் புரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால், நமக்கும் நம்முடைய அன்பானவர்களுக்கும் முடிவில்லாத வாழ்க்கை எப்படிக் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்ள அது உதவும். இப்போது அதைப் பற்றிப் பார்க்கலாம்.

வாழ்வு தரும் உணவும் அவருடைய சதையும்

4. இயேசு சொன்னதைக் கேட்ட சிலருக்கு ஏன் அதிர்ச்சியாக இருந்தது?

4 “உலகத்துக்கு வாழ்வு கிடைப்பதற்காக நான் தரப்போகிற என் சதைதான்” “நான் கொடுக்கப்போகிற உணவு” என்று இயேசு சொன்னபோது, அதைக் கேட்டு சிலர் அதிர்ச்சி ஆகிவிட்டார்கள். உண்மையாகவே அவருடைய சதையைச் சாப்பிட சொல்கிறாரோ என்று அவர்கள் யோசித்திருக்கலாம். (யோவா. 6:52) அவர்களுடைய அதிர்ச்சிக்கு அதிர்ச்சி சேர்ப்பதுபோல் அடுத்து ஒரு விஷயத்தை இயேசு சொன்னார். “மனிதகுமாரனின் சதையைச் சாப்பிட்டு அவருடைய இரத்தத்தைக் குடித்தால் தவிர நீங்கள் வாழ்வு பெற மாட்டீர்கள்” என்றார்.—யோவா. 6:53.

5. உண்மையிலேயே தன்னுடைய இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று இயேசு மக்களிடம் சொல்லியிருக்க மாட்டார் என்று நமக்கு எப்படித் தெரியும்?

5 இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது என்று நோவாவுடைய காலத்தில் யெகோவா சொன்னார். (ஆதி. 9:3, 4) இஸ்ரவேலர்களுக்குச் சட்டங்களைக் கொடுத்தபோது இதைத் திரும்பவும் சொன்னார். ஒருவேளை யாராவது இரத்தத்தைச் சாப்பிட்டால் அவர்கள் “கொல்லப்பட வேண்டும்” என்று அதில் சொல்லியிருந்தார். (லேவி. 7:27) கடவுள் கொடுத்த சட்டங்களுக்கு யூதர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்று இயேசு சொல்லிக்கொடுத்தார்; அவரும் அதற்குக் கீழ்ப்படிந்தார். (மத். 5:17-19) அப்படியிருக்கும்போது, உண்மையிலேயே அவருடைய சதையைச் சாப்பிட்டு இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று அவர் மக்களுக்குச் சொல்லிக்கொடுத்திருப்பாரா? கண்டிப்பாக இல்லை! அதற்குப் பதிலாக, ‘முடிவில்லாத வாழ்க்கை’ அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்றால் அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்ற முக்கியமான விஷயத்தைத்தான் அவர் சொல்லிக்கொண்டிருந்தார்.—யோவா. 6:54.

6. இயேசுவின் வார்த்தைகளை நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?

6 இயேசுவின் வார்த்தைகளை எப்படிப் புரிந்துகொள்வது? முன்பு ஒருசமயம் சமாரிய பெண்ணிடம் பேசியபோது இயேசு என்ன சொன்னார் என்று முதலில் பார்க்கலாம். “நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிற ஒருவனுக்கும் என்றுமே தாகம் எடுக்காது; நான் கொடுக்கும் தண்ணீர் அவனுக்குள்ளிருந்து பொங்கிவருகிற நீரூற்றாக மாறி, முடிவில்லாத வாழ்வைத் தரும்” என்று சொன்னார். (யோவா. 4:7, 14) a உண்மையிலேயே ஏதோவொரு தண்ணீர் இருப்பதாகவோ, அதைக் குடித்தால் முடிவில்லாத வாழ்க்கை கிடைக்கும் என்பதாகவோ இயேசு இங்கே சொல்லவில்லை. அதேமாதிரிதான், கப்பர்நகூமில் இருந்த மக்களிடமும் உண்மையிலேயே அவருடைய சதையைச் சாப்பிட வேண்டும் என்றோ, அவருடைய இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்றோ இயேசு சொல்லவில்லை.

இரண்டு சந்தர்ப்பத்துக்கும் இருந்த வித்தியாசங்கள்

7. யோவான் 6:53-ல் இயேசு சொன்ன வார்த்தைகளைப் பற்றிச் சிலர் என்ன நினைக்கிறார்கள்?

7 யோவான் 6:53-ல் இயேசு தன்னுடைய சதையைச் சாப்பிட வேண்டும், இரத்தத்தைக் குடிக்க வேண்டும் என்று சொன்னதைப் பற்றிப் பார்த்தோம். எஜமானின் இரவு விருந்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்து இயேசு இதைச் சொன்னதாக சர்ச்சுக்குப் போகிற நிறைய பேர் நினைக்கிறார்கள். ஏனென்றால், அந்தச் சந்தர்ப்பத்திலும் இயேசு கிட்டத்தட்ட இதேமாதிரி வார்த்தைகளைத்தான் பயன்படுத்தினார். (மத். 26:26-28) இதை மனதில் வைத்து எஜமானின் இரவு விருந்தில் கலந்துகொள்கிற எல்லாருமே ரொட்டியையும், திராட்சமதுவையும் சாப்பிட வேண்டும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது சரியா? இதன் சரியான அர்த்தத்தை நாம் தெரிந்துகொள்வது முக்கியம். ஏனென்றால் ஒவ்வொரு வருஷமும் லட்சக்கணக்கான மக்கள் நம்மோடு சேர்ந்து அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். யோவான் 6:53-ல் இயேசு சொன்ன விஷயத்துக்கும் எஜமானின் இரவு விருந்தில் அவர் சொன்ன விஷயத்துக்கும் இருக்கிற வித்தியாசங்களை நாம் இப்போது பார்க்கலாம்.

8. இரண்டு சந்தர்ப்பத்துக்கும் என்ன வித்தியாசம் இருந்தது? (படங்களையும் பாருங்கள்.)

8 யோவான் 6:53-56-ல் இருக்கிற வார்த்தைகளை இயேசு எங்கே, எப்போது சொன்னார் என்று யோசித்துப் பார்க்கலாம். கி.பி. 32-ல் கலிலேயாவில் கூடியிருந்த யூதர்களிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னார். இது, எருசலேமில் எஜமானின் இரவு விருந்தை இயேசு ஆரம்பித்து வைப்பதற்கு ஒரு வருஷத்துக்கு முன்பு நடந்தது. எப்படிப்பட்ட ஆட்களிடம் இயேசு இந்த வார்த்தைகளைச் சொன்னார்? இயேசு சொல்லிக்கொண்டிருந்ததைக் கேட்ட பெரும்பாலான யூதர்கள் கடவுளைப் பற்றியோ, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றியோ கற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைக்கவில்லை; இயேசு சாப்பாடு கொடுப்பாரா என்பதிலேயே குறியாக இருந்தார்கள். (யோவா. 6:26) இயேசு சொன்ன வார்த்தைகளைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அதனால், அவர்மேல் விசுவாசம் வைப்பதை அவர்கள் விட்டுவிட்டார்கள். சிலர் அவருடைய சீஷராக இருப்பதையே நிறுத்திவிட்டார்கள். (யோவா. 6:14, 36, 42, 60, 64, 66) இப்போது இரண்டாவது சந்தர்ப்பத்துக்கு வரலாம். கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகு, அதாவது கி.பி. 33-ல், எஜமானின் இரவு விருந்தின்போது இயேசு அவருடைய உண்மையுள்ள 11 அப்போஸ்தலர்களிடம் அந்த வார்த்தைகளைச் சொன்னார். இயேசு சொல்லிக்கொண்டிருந்த வார்த்தைகளை அவர்களாலும் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியவில்லைதான். ஆனாலும், அவர்கள் கலிலேயாவில் இருந்த மக்களைப் போல் இல்லை. இயேசுதான் பரலோகத்திலிருந்து வந்த கடவுளுடைய மகன் என்பதில் அவர்களுக்குத் துளிகூட சந்தேகம் இல்லை. (மத். 16:16) இயேசு அவர்களிடம், “எனக்குச் சோதனைகள் வந்தபோது என்னோடுகூட நிலைத்திருந்தவர்கள் நீங்கள்தான்” என்று சொல்லி அவர்களைப் பாராட்டினார். (லூக். 22:28) இந்த வித்தியாசங்களை வைத்துப்பார்க்கும்போது கலிலேயாவில் இருந்த மக்களிடம் எஜமானின் இரவு விருந்தில் நடக்கப்போகிற விஷயங்களை மனதில் வைத்து இயேசு பேசவில்லை என்று தெரிகிறது. இதற்கு இன்னும் சில ஆதாரங்களைப் பார்க்கலாம்.

யோவான் 6-வது அதிகாரத்தில் இருப்பதை இயேசு கலிலேயாவில் இருக்கிற யூதர்களிடம் சொன்னார் (இடது). ஒரு வருஷத்துக்குப் பிறகு, எருசலேமில் தன்னுடைய உண்மையுள்ள அப்போஸ்தலர்கள் இருந்த ஒரு சின்ன தொகுதியிடம் இயேசு பேசினார் (வலது) (பாரா 8)


அர்த்தத்தை நாம் புரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

9. எஜமானின் இரவு விருந்தில் இயேசு சொன்ன விஷயம் யாருக்குப் பொருந்தும்?

9 எஜமானின் இரவு விருந்தில் இயேசு புளிப்பில்லாத ரொட்டியை அப்போஸ்தலர்களுக்குக் கொடுத்து, அது தன்னுடைய உடலை குறிக்கிறது என்று சொன்னார். பிறகு, திராட்சமதுவைக் கொடுத்து “இது ‘ஒப்பந்தத்தை உறுதிப்படுத்தும் என் இரத்தத்தை’ குறிக்கிறது” என்று சொன்னார். (மாற். 14:22-25; லூக். 22:20; 1 கொ. 11:24) ஒப்பந்தத்தைப் பற்றி இயேசு சொன்ன இந்த விஷயம் ரொம்ப ரொம்ப முக்கியமானது. இந்தப் புதிய ஒப்பந்தத்தை, “கடவுளுடைய அரசாங்கத்தில்” அவரோடு இருக்கப்போகிற ‘[ஆன்மீக] இஸ்ரவேலர்களோடு’ இயேசு செய்தார், எல்லா மக்களோடும் அல்ல. (எபி. 8:6, 10; 9:15) இயேசு சொன்ன வார்த்தையை அப்போஸ்தலர்கள் அந்தச் சமயத்தில் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை. ஆனாலும் சீக்கிரத்திலேயே அவர்கள் கடவுளுடைய சக்தியால் அபிஷேகம் செய்யப்பட்டு அந்தப் புதிய ஒப்பந்தத்தின் பாகமாக ஆகவிருந்தார்கள்; அவரோடு சேர்ந்து பரலோகத்தில் இருப்பார்கள்.—யோவா. 14:2, 3.

10. கலிலேயாவில் இயேசு பேசிய சந்தர்ப்பத்துக்கும் எஜமானின் இரவு விருந்தில் இயேசு பேசிய சந்தர்ப்பத்துக்கும் இருக்கிற இன்னொரு வித்தியாசம் என்ன? (படத்தையும் பாருங்கள்.)

10 எஜமானின் இரவு விருந்தில், ‘சிறுமந்தையின்’ பாகமாக இருந்தவர்களிடம் இயேசு பேசினார். அந்தச் சின்ன தொகுதியின் பாகமாக முதல்முதலில் ஆனது, அந்த அறையில் அவரோடு இருந்த உண்மையுள்ள அப்போஸ்தலர்கள்தான். (லூக். 12:32) அப்போது இருந்த 11 அப்போஸ்தலர்கள் மட்டுமல்ல, எதிர்காலத்தில் ‘சிறுமந்தையின்’ பாகமாக ஆகப்போகிறவர்களும் எஜமானின் இரவு விருந்தை அனுசரிக்கும்போது ரொட்டியையும் திராட்சமதுவையும் சாப்பிடுவார்கள். ஏனென்றால், அவர்கள்தான் இயேசுவோடு சேர்ந்து பரலோகத்தில் ஆட்சி செய்ய போகிறார்கள். இதிலிருந்து ஒரு விஷயத்தைத் தெரிந்துகொள்கிறோம்: எஜமானின் இரவு விருந்தின்போது இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களிடம் சொன்ன விஷயம் வேறு, கலிலேயாவிலிருந்த மக்கள் கூட்டத்திடம் சொன்ன விஷயம் வேறு. கலிலேயாவில் அவர் சொன்னது பெரும்பாலான மனிதர்களுக்குப் பொருந்தும்.

ரொட்டியையும், திராட்சமதுவையும் ஒரு சின்ன தொகுதியைச் சேர்ந்தவர்கள்தான் சாப்பிடுவார்கள். ஆனால், யார் வேண்டுமானாலும் இயேசுமேல் விசுவாசம் வைக்கலாம், முடிவில்லாத வாழ்வைப் பெற்றுக்கொள்ளலாம் (பாரா 10)


11. கலிலேயாவில் பேசியபோது, ஒரு சின்ன தொகுதியை மனதில் வைத்து இயேசு பேசவில்லை என்பது நமக்கு எப்படித் தெரியும்?

11 இயேசுவிடமிருந்து உணவு கிடைக்கும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருந்த மக்களிடம்தான் கி.பி. 32-ல் கலிலேயாவில் இயேசு பேசிக்கொண்டு இருந்தார். அவர்கள் எதிர்பார்த்த உணவைவிட முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது என்று இயேசு அவர்களுக்குப் புரியவைக்க நினைத்தார். ஏனென்றால், அதுதான் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வை கொடுக்கும். அவர்களுடைய கவனத்தை அதன்மேல் இயேசு திருப்பினார். கடைசி நாளில் இறந்தவர்கள் உயிரோடு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வு கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் இயேசு அவர்களுக்குச் சொன்னார். அவர்முன் நின்றுகொண்டிருந்த ஒரு பெரிய மக்கள் கூட்டத்திடம் இதைச் சொன்னார்; ஒரு சின்ன தொகுதியிடம் அல்ல. பொதுவாக எல்லா மக்களுக்குமே கிடைக்கப்போகிற ஆசீர்வாதத்தைப் பற்றித்தான் இயேசு இங்கே பேசிக்கொண்டு இருந்தார். அதனால்தான் அவர் இப்படி சொன்னார்: “இந்த உணவைச் சாப்பிடுகிற எவரும் என்றென்றும் உயிர் வாழ்வார். சொல்லப்போனால், நான் கொடுக்கப்போகிற உணவு, உலகத்துக்கு வாழ்வு கிடைப்பதற்காக நான் தரப்போகிற என் சதைதான்” என்று சொன்னார்.—யோவா. 6:51.

12. முடிவில்லாத வாழ்க்கையைப் பெற்றுக்கொள்ள என்ன செய்ய வேண்டும்?

12 இதுவரை வாழ்ந்த எல்லாருக்கும்... இனிமேல் பிறக்க போகிறவர்களுக்கும்... முடிவில்லாத வாழ்க்கை தானாகவே கிடைத்துவிடும் என்று அந்த யூதர்களிடம் இயேசு சொல்லவில்லை. அதற்குப் பதிலாக ‘இந்த உணவை சாப்பிடுபவர்களுக்கு’ அதாவது, தன்மேல் விசுவாசம் வைக்கிறவர்களுக்குத்தான் அது கிடைக்கும் என்று சொன்னார். ஆனால் சர்ச்சுக்குப் போகிற நிறைய பேர், “‘[இயேசுவை] நம்பினாலே’ போதும், அவரை மீட்பராகப் பார்த்தாலே போதும் காப்பாற்றப்படுவோம்” என்று நினைக்கிறார்கள். (யோவா. 6:29, ஈஸி டு ரீட் வர்ஷன்) ஆனால் அது சரியா? கலிலேயாவிலிருந்த யூதர்கள் ஆரம்பத்தில் கிறிஸ்துவை நம்பினார்கள்தான்; ஆனால் அவரைத் தொடர்ந்து பின்பற்றவில்லை. ஏன்?

13. இயேசுவின் உண்மையான சீஷராக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?

13 இயேசு செய்த சில விஷயங்கள் தங்களுக்குப் பிடித்திருந்தவரை கலிலேயாவில் இருந்த மக்கள் அவரைப் பின்தொடர்ந்து போனார்கள். அவர் தங்களை அற்புதமாகக் குணப்படுத்த வேண்டும்... இலவசமாகச் சாப்பாடு கொடுக்க வேண்டும்... தங்களுடைய காதுக்கு இனிமையான விஷயங்களைச் சொல்லிக்கொடுக்க வேண்டும்... என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், அவர்கள் ஆசைப்பட்டதைச் செய்வதற்காக மட்டுமே இயேசு பூமிக்கு வரவில்லை. இயேசுவின் உண்மையான சீஷர்களாக இருப்பதற்கு அவர்கள் வேறுசில விஷயங்களைச் செய்ய வேண்டியிருந்தது. ‘என்னிடம் வாருங்கள்’ என்று இயேசு கொடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டு, அவர்கள் தன்னுடைய சீஷராக வேண்டும் என்று இயேசு எதிர்பார்த்தார். அதோடு, அவர் சொல்லிக்கொடுத்த விஷயங்களுக்கெல்லாம் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்றும் எதிர்பார்த்தார்.—யோவா. 5:40; 6:44.

14. இயேசுவுடைய சதையில் இருந்தும் இரத்தத்தில் இருந்தும் நன்மை அடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

14 விசுவாசம் வைப்பதன் முக்கியத்துவத்தை அந்த மக்களிடம் இயேசு எடுத்து சொன்னார். ஆனால் எதன்மேல்? அவர் பலியாகக் கொடுக்கப்போகிற சதையும் இரத்தமும்தான் அவர்களுக்கு முடிவில்லாத வாழ்வைக் கொடுக்கப்போகிறது என்பதில் அவர்கள் விசுவாசம் வைக்க வேண்டும்! அப்படிப்பட்ட விசுவாசத்தை யூதர்கள் மட்டுமல்ல இன்று நாமும் காட்ட வேண்டும். (யோவா. 6:40) அப்படியென்றால், யோவான் 6:53-ல் இயேசு சொன்னதன் அர்த்தம் என்ன? அவருடைய மீட்புப் பலியில் விசுவாசம் வைத்தால்தான் நமக்கு முடிவில்லாத வாழ்க்கை கிடைக்கும். அந்த வாழ்க்கை கொஞ்சப் பேருக்கு அல்ல, எக்கச்சக்கமான மக்களுக்குக் கிடைக்கப்போகிறது.—எபே. 1:7.

15-16. யோவான் 6-வது அதிகாரத்திலிருந்து என்ன முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொண்டோம்?

15 யோவான் 6-வது அதிகாரத்தில் நிறைய முக்கியமான விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்; அவை நம்மை உற்சாகப்படுத்துகின்றன. மக்கள்மேல் இயேசு எவ்வளவு அக்கறை வைத்திருந்தார் என்பதை அதில் பார்த்தோம். கலிலேயாவில் இருந்தபோது இயேசு அவர்களை எப்படிக் குணப்படுத்தினார், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றி எப்படிக் கற்றுக்கொடுத்தார், அற்புதமாக அவர்களுக்கு எப்படி உணவு கொடுத்தார் என்றெல்லாம் பார்த்தோம். (லூக். 9:11; யோவா. 6:2, 11, 12) எல்லாவற்றுக்கும்மேல் அவர்தான் “வாழ்வு தரும் உணவு” என்பதை அவர் சொல்லிக்கொடுத்தார்.—யோவா. 6:35, 48.

16 “வேறே ஆடுகள்” என்று இயேசு யாரைப் பற்றிச் சொன்னாரோ அவர்கள் எஜமானின் இரவு விருந்தில் ரொட்டியையும், திராட்சமதுவையும் சாப்பிடுவதில்லை, சாப்பிடவும் கூடாது! (யோவா. 10:16) இருந்தாலும், இயேசுவுடைய சதையில் இருந்தும், இரத்தத்தில் இருந்தும் அவர்களும் நன்மை அடைகிறார்கள். எப்படி? இயேசுவுடைய மீட்புப் பலியில் விசுவாசம் வைப்பதன் மூலம்! (யோவா. 6:53) எஜமானின் இரவு விருந்தில் ரொட்டியையும், திராட்சமதுவையும் சாப்பிடுகிறவர்கள் புதிய ஒப்பந்தத்தின் பாகமாக இருப்பதைக் காட்டுகிறார்கள். இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்கிற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. நாம் பரலோக நம்பிக்கையுள்ளவர்களாக இருந்தாலும் சரி, வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நாம் எல்லாருமே யோவான் 6-வது அதிகாரத்திலிருந்து முக்கியமான விஷயத்தைக் கற்றுக்கொண்டோம். முடிவில்லாத வாழ்க்கையைப் பெற வேண்டுமென்றால் விசுவாசம் வைப்பது எவ்வளவு முக்கியம்!

பாட்டு 150 மீட்புப் பெற கடவுளைத் தேடுங்கள்

a இயேசு சொன்ன தண்ணீர், மனிதர்கள் என்றென்றும் வாழ்வதற்காக யெகோவா செய்திருக்கும் ஏற்பாடுகளைக் குறிக்கிறது.