Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

தினமும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள்!

தினமும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டே இருங்கள்!

“இங்குள்ளவர்களை ஊக்கப்படுத்துவதற்கு ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லுங்கள்.”—அப். 13:15.

பாடல்கள்: 83, 57

1, 2. மற்றவர்களை உற்சாகப்படுத்துவது ஏன் முக்கியம்?

“என் அப்பா அம்மா என்னை உற்சாகப்படுத்தவே மாட்டாங்க. எப்ப பார்த்தாலும் குறை சொல்லிக்கிட்டே இருப்பாங்க. அவங்க பேசுறது எனக்கு ரொம்ப வேதனையா இருக்கும். எனக்கு பக்குவமே இல்ல... நான் எதையுமே கத்துக்க மாட்டேன்... நான் குண்டா இருக்கேன்... அப்படியெல்லாம் சொல்வாங்க. அதனால, நான் அடிக்கடி அழுவேன்; அவங்ககிட்ட பேசுறதுக்கே எனக்குப் பிடிக்காது. நான் எதுக்குமே லாயக்கில்லனு தோணும்” என்று சொல்கிறாள் 18 வயது கிறிஸ்டினா.  [1] (பின்குறிப்பு) உண்மைதான், யாருமே நம்மை உற்சாகப்படுத்தவில்லை என்றால் வாழ்க்கையே கசந்துவிடும்!

2 நாம் மற்றவர்களை உற்சாகப்படுத்தும்போது, அவர்களுக்கு எவ்வளவு பிரயோஜனமாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ரூபன் இப்படிச் சொல்கிறார்: “நான் எதுக்குமே லாயக்கில்லங்கிற எண்ணம் எனக்கு ரொம்ப வருஷமாவே இருந்துச்சு. ஒரு தடவை நான் ஒரு மூப்பரோட ஊழியம் செஞ்சுக்கிட்டு இருந்தப்போ, நான் சோகமா இருக்குறத அவர் கவனிச்சார். நான் அவர்கிட்ட பேசுனப்போ, அவர் கரிசனையோட கேட்டார். அப்புறம், நான் செஞ்சுக்கிட்டிருக்கிற நல்ல விஷயங்களை சொல்லி என்னை பாராட்டுனார். நாம ஒவ்வொருத்தரும் சிட்டுக்குருவிகளைவிட மதிப்புள்ளவங்கனு இயேசு சொன்னத அவர் எனக்கு ஞாபகப்படுத்தினார். நான் அடிக்கடி அந்த வசனத்தை நினைச்சு பார்ப்பேன், அந்த வசனம் இன்னைக்கும் என் மனசுக்கு இதமா இருக்கு. அந்த மூப்பர் சொன்ன வார்த்தை என் வாழ்க்கையில பெரிய மாற்றத்த ஏற்படுத்திடுச்சு.”—மத். 10:31.

3. (அ) உற்சாகப்படுத்துவதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் என்ன சொன்னார்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

3 நாம் மற்றவர்களைத் தவறாமல் உற்சாகப்படுத்த வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. எபிரெய கிறிஸ்தவர்களுக்கு அப்போஸ்தலன் பவுல் இப்படி எழுதினார்: “சகோதரர்களே, உயிருள்ள கடவுளைவிட்டு விலகிச் செல்வதன் காரணமாக உங்களில் எவருடைய இருதயமும் விசுவாசமற்ற பொல்லாத இருதயமாக மாறிவிடாதபடி எப்போதும் எச்சரிக்கையாய் இருங்கள்; அதோடு, உங்களில் எவருடைய இருதயமும் பாவத்தின் வஞ்சக சக்தியினால் இறுகிப்போகாதபடி . . . நாள்தோறும் ஒருவருக்கொருவர் அறிவுரை சொல்லிக்கொண்டே இருங்கள்.” (எபி. 3:12, 13) மற்றவர்கள் உங்களை உற்சாகப்படுத்தியபோது நீங்கள் எவ்வளவு நன்றாக உணர்ந்தீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். சகோதர சகோதரிகளை நாம் ஏன் உற்சாகப்படுத்த வேண்டும்? யெகோவாவும், இயேசுவும், பவுலும் மற்றவர்களை உற்சாகப்படுத்தியதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? மற்றவர்களை எப்படியெல்லாம் உற்சாகப்படுத்தலாம்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இப்போது பார்க்கலாம்.

எல்லாருக்கும் உற்சாகம் தேவை

4. யாருக்கெல்லாம் உற்சாகம் தேவை? இன்று நிறைய பேர் ஏன் மற்றவர்களைப் பாராட்டுவது கிடையாது?

4 நம் எல்லாருக்கும் உற்சாகம் தேவை. முக்கியமாக, பெற்றோர் பிள்ளைகளை உற்சாகப்படுத்த வேண்டும். “செடிக்கு எப்படித் தண்ணீர் தேவையோ, அதேபோல பிள்ளைகளுக்கும் உற்சாகம் தேவை . . . உற்சாகப்படுத்தப்படும்போது, தாங்கள் பிரயோஜனமானவர்கள் என்றும், பாராட்டுக்குரியவர்கள் என்றும் பிள்ளைகள் உணர்வார்கள்” என்று டிமோத்தி ஈவன்ஸ் என்ற ஆசிரியர் சொல்கிறார். நாம் கடைசி நாட்களில் வாழ்வதால், நிறைய பேர் சுயநலவாதிகளாக, ஒருவருக்கொருவர் அந்தளவு “பந்தபாசம் இல்லாதவர்களாக” இருக்கிறார்கள். (2 தீ. 3:1-5) சில பெற்றோர், தங்கள் பிள்ளைகளைப் பாராட்டுவது கிடையாது; ஏனென்றால், அவர்களுடைய பெற்றோர் அவர்களை உற்சாகப்படுத்தியதே கிடையாது. பிள்ளைகளுக்கு உற்சாகம் தேவைப்படுவது போல, பெரியவர்களுக்கும் உற்சாகம் தேவைப்படுகிறது. ஏனென்றால், வேலை செய்யும் இடத்தில் யாரும் மற்றவர்களை அவ்வளவாகப் பாராட்டுவது கிடையாது. தாங்கள் செய்யும் வேலையை யாரும் பாராட்டியதே கிடையாது என்று நிறைய பேர் சொல்கிறார்கள்.

5. நாம் எப்படி மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம்?

5 மற்றவர்கள் ஒரு விஷயத்தை நன்றாகச் செய்திருக்கலாம். அதற்காக அவர்களைப் பாராட்டுவதன் மூலம் நாம் அவர்களை உற்சாகப்படுத்தலாம். அதோடு, மற்றவர்களுடைய நல்ல குணங்களை நாம் பாராட்டலாம். ஒருவர் கவலையாகவோ சோர்வாகவோ இருந்தால் அவர்களுக்கு ஆறுதல் சொல்லலாம். (1 தெ. 5:14) நம் சகோதர சகோதரிகளோடு நாம் நிறைய நேரம் செலவு செய்வதால் அவர்களை உற்சாகப்படுத்துவதற்கு ஏராளமான வாய்ப்புகள் இருக்கின்றன. (பிரசங்கி 4:9, 10-ஐ வாசியுங்கள்.) அதனால், உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மற்றவர்களை உயர்வாக நினைக்கிறேன் என்பதையும் அவர்களை நேசிக்கிறேன் என்பதையும் நான் அவர்களிடம் சொல்கிறேனா? முடிந்த போதெல்லாம் இதைச் செய்கிறேனா?’ “ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!” என்று பைபிள் சொல்வதை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.—நீதி. 15:23.

6. நம்மை சோர்வடையச் செய்ய வேண்டும் என்று சாத்தான் ஏன் நினைக்கிறான்? ஒரு உதாரணம் சொல்லுங்கள்.

6 “ஆபத்துக்காலத்தில் நீ சோர்ந்து போவாயானால், உன் பெலன் குறுகினது” என்று நீதிமொழிகள் 24:10 சொல்கிறது. நம்மைச் சோர்வடையச் செய்வதன் மூலம் யெகோவாவுக்கும் நமக்கும் இருக்கிற பந்தத்தைப் பலவீனமாக்க முடியும் என்பது சாத்தானுக்குத் தெரியும். யோபுவுக்குப் பயங்கர கஷ்டத்தைத் தருவதன் மூலம் அவரைச் சோர்வடையச் செய்யலாம் என்று சாத்தான் நினைத்தான். ஆனால், அவனுடைய திட்டம் வெற்றி பெறவில்லை. யோபு யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். (யோபு 2:3; 22:3; 27:5) நம்மாலும் சாத்தானை எதிர்த்துப் போராட முடியும், அவனை ஜெயிக்க விடாமல் செய்ய முடியும். நம் குடும்பத்தில் இருக்கிறவர்களையும் சபையில் இருக்கிறவர்களையும் நாம் தொடர்ந்து உற்சாகப்படுத்தினால், அவர்கள் சந்தோஷமாக இருக்கவும் யெகோவாவோடு நெருக்கமாக இருக்கவும் அவர்களுக்கு உதவ முடியும்.

பின்பற்ற வேண்டிய முன்மாதிரிகள்

7, 8. (அ) யெகோவா தன் ஊழியர்களை எப்படி உற்சாகப்படுத்தினார்? (ஆ) பெற்றோர் எப்படி யெகோவாவைப் போல நடந்துகொள்ளலாம்? (ஆரம்பப் படம்)

7 யெகோவா மக்களை உற்சாகப்படுத்துகிறார். “நொறுங்குண்ட இருதயமுள்ளவர்களுக்கு [அதாவது, சோர்ந்துபோனவர்களுக்கு] கர்த்தர் சமீபமாயிருந்து, நருங்குண்ட ஆவியுள்ளவர்களை இரட்சிக்கிறார்” என்று சங்கீதக்காரன் எழுதினார். (சங். 34:18) ஒருசமயம், தீர்க்கதரிசியான எரேமியா பயத்தில் இருந்தார், ரொம்பவே சோர்ந்துபோய் இருந்தார். அப்போது, அவருக்கு உதவி செய்வதாக யெகோவா வாக்குக் கொடுத்தார். (எரே. 1:6-10) வயதான தீர்க்கதரிசியாகிய தானியேலைப் பலப்படுத்த யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பினார். அந்தத் தேவதூதர் தானியேலை, ‘பிரியமான தானியேலே’ என்று அழைத்தார். (தானி. 10:8, 11, 18, 19) இதே போல, சபையில் இருக்கும் சகோதர சகோதரிகளையும், பயனியர்களையும், முன்பு செய்ததைப் போல இப்போது செய்ய முடியாமல் இருக்கும் வயதானவர்களையும் உங்களால் உற்சாகப்படுத்த முடியுமா?

8 யெகோவாவும் இயேசுவும் பல வருடங்கள் ஒன்றாக இருந்தார்கள். ஆனாலும், இயேசு பூமியில் இருந்த சமயத்தில், அவரை உற்சாகப்படுத்த வேண்டும் என்பது யெகோவாவுக்குத் தெரியும். இயேசு ஊழியத்தை ஆரம்பித்த சமயத்திலும், அவர் பூமியில் இருந்த கடைசி வருடத்திலும், தன்னுடைய அப்பா பரலோகத்திலிருந்து பேசியதை அவர் கேட்டார். அந்த இரண்டு சமயங்களிலும், “இவர் என் அன்பு மகன், நான் இவரை அங்கீகரிக்கிறேன்” என்று யெகோவா சொன்னார். (மத். 3:17; 17:5) தன்னை நேசிப்பதாகவும், தன்னைப் பற்றி பெருமைப்படுவதாகவும் யெகோவா சொன்னபோது, இயேசுவுக்கு ரொம்ப உற்சாகமாக இருந்திருக்கும். தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, இயேசு ரொம்ப கவலையாக இருந்தார். அப்போது, அவரைப் பலப்படுத்தவும் ஆறுதல்படுத்தவும் யெகோவா ஒரு தேவதூதரை அனுப்பினார். (லூக். 22:43) பெற்றோரே, எப்போதும் பிள்ளைகளை உற்சாகப்படுத்துவதன் மூலம் நீங்களும் யெகோவாவைப் போல நடந்துகொள்ளுங்கள். ஏதாவது ஒரு விஷயத்தை அவர்கள் நன்றாகச் செய்யும்போது, அவர்களைப் பாராட்டுங்கள். பள்ளியில் வரும் பிரச்சினைகளைச் சமாளிக்க, அவர்களுக்கு உதவி செய்யுங்கள்; அவர்களைப் பலப்படுத்த உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்யுங்கள்.

9. இயேசு தன் அப்போஸ்தலர்களை நடத்திய விதத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

9 இயேசுவும் நமக்கு ஒரு நல்ல முன்மாதிரியாக இருக்கிறார். அவர் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, அப்போஸ்தலர்களுடைய கால்களைக் கழுவுவதன் மூலம், மனத்தாழ்மையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவர் காட்டினார். ஆனால், அவர்கள் தங்களில் யார் மிக உயர்ந்தவர் என்று வாக்குவாதம் செய்துகொண்டிருந்தார்கள். அதோடு, இயேசுவைவிட்டு ஒருபோதும் விலகமாட்டேன் என்று பேதுரு பெருமையடித்தார். (லூக். 22:24, 33, 34) ஆனால், அவர்கள் செய்த தவறுகளை இயேசு பெரிதுபடுத்தவில்லை. அதற்குப் பதிலாக, தனக்கு உண்மையோடு நிலைத்திருந்ததற்காக அவர்களைப் பாராட்டினார். தன்னைவிட பெரிய காரியங்களைச் செய்வார்கள் என்று அவர்களிடம் சொன்னார்; யெகோவா அவர்கள்மீது பாசம் வைத்திருக்கிறார் என்றும் சொன்னார். (லூக். 22:28; யோவா. 14:12; 16:27) அதனால், நம்மை இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘இயேசுவைப் போல, மற்றவர்களுடைய தவறுகளைப் பெரிதுபடுத்தாமல் அவர்களுடைய நல்ல குணங்களைப் பாராட்டுகிறேனா?’

10, 11. பவுல் எப்படித் தன் சகோதரர்களை உற்சாகப்படுத்தினார்? அவர் என்ன செய்ய தயாராக இருந்தார்?

10 அப்போஸ்தலன் பவுல் தன்னுடைய சகோதரர்களைப் பற்றி எப்போதும் நல்ல விஷயங்களைத்தான் பேசினார். சில சகோதரர்களோடு அவர் பல வருடங்கள் ஒன்றாகப் பயணம் செய்ததால், அவர்களுடைய குறைகளைப் பற்றி அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கும். இருந்தாலும், அதைப் பற்றியெல்லாம் அவர் எழுதவில்லை; அவர்களைப் பற்றி புகழ்ந்துதான் எழுதினார். உதாரணத்துக்கு, “எஜமானருடைய சேவையில் உண்மையுள்ளவனாக இருக்கும் என் அன்புப் பிள்ளை” என்று தீமோத்தேயுவைப் பற்றி பவுல் சொன்னார். மற்றவர்களுடைய தேவைகளைத் தீமோத்தேயு கவனித்துக்கொள்வார் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் சொன்னார். (1 கொ. 4:17; பிலி. 2:19, 20) அதோடு, தீத்துவைத் தன்னுடைய “தோழர்” என்றும், சகோதரர்களுடைய ‘நலனுக்காக உழைக்கிற சக வேலையாள்’ என்றும் பவுல் சொன்னார். (2 கொ. 8:23) பவுல் தங்களைப் பற்றி என்ன நினைத்தார் என்று தீமோத்தேயுவுக்கும் தீத்துவுக்கும் தெரிய வந்தபோது, அவர்களுக்கு நிச்சயம் உற்சாகமாக இருந்திருக்கும்!

11 பவுலும் அவரோடு பயணம் செய்த பர்னபாவும், சகோதரர்களை உற்சாகப்படுத்துவதற்காக தங்கள் உயிரையே பணயம் வைத்தார்கள். உதாரணத்துக்கு, லீஸ்திராவில் இருந்த நிறைய பேர் தங்களைக் கொல்வதற்குத் தயாராக இருந்தார்கள் என்று அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும், புதிதாகச் சீடர்களாக ஆனவர்களை உற்சாகப்படுத்தவும், யெகோவாவுக்கு உண்மையாக இருக்க அவர்களுக்கு உதவவும் பவுலும் பர்னபாவும் அங்கே போனார்கள். (அப். 14:19-22) எபேசுவிலும் ஒரு கூட்டம் பவுல்மீது பயங்கர கோபமாக இருந்தது; ஆனாலும், தன்னுடைய சகோதரர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் அங்கே பல நாட்கள் தங்கியிருந்தார். ‘கலவரம் ஓய்ந்தபின் சீடர்களை பவுல் வரவழைத்து, அவர்களை ஊக்குவித்தார்; பின்பு, அவர்களை வழியனுப்பிவிட்டு மக்கெதோனியாவுக்குப் புறப்பட்டுப் போனார். அந்தப் பகுதிகள் வழியாகச் சென்று அங்கிருந்தவர்களுக்கு ஊக்கமூட்டும் பல விஷயங்களைச் சொன்னார்; அதன்பின் கிரேக்கு தேசத்திற்குப் போனார்கள்’ என்று அப்போஸ்தலர் 20:1, 2 சொல்கிறது.

ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துங்கள்

12. கூட்டங்களுக்குப் போவது ஏன் நல்லது?

12 நமக்கு மிகச் சிறந்ததைக் கொடுக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். அதனால்தான், சபைக் கூட்டங்களுக்குத் தவறாமல் வர வேண்டும் என்று சொல்கிறார். கூட்டங்களில் நாம் யெகோவாவைப் பற்றி கற்றுக்கொள்கிறோம், ஒருவரையொருவர் உற்சாகப்படுத்துகிறோம். (1 கொ. 14:31; எபிரெயர் 10:24, 25-ஐ வாசியுங்கள்.) இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் பார்த்த கிறிஸ்டினா இப்படிச் சொல்கிறார்: “கூட்டங்கள்ல எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயமே, அங்க கிடைக்கிற அன்பும் உற்சாகமும்தான். ராஜ்ய மன்றத்துக்கு வர்றப்போ சில சமயம் ரொம்ப கவலையா இருக்கும். ஆனா, சகோதரிகள் என்கிட்ட வந்து, என்னை கட்டிப்பிடிச்சு, ‘நீ பார்க்கிறதுக்கு ரொம்ப அழகாயிருக்க’னு சொல்வாங்க. என்னை நேசிக்கிறதாவும் என்னோட ஆன்மீக முன்னேற்றத்த பார்க்கிறது அவங்களுக்கு சந்தோஷமா இருக்கிறதாவும் சொல்வாங்க. அவங்க அப்படி உற்சாகப்படுத்துறப்போ எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கும்.” நாம் ஒவ்வொருவரும் மற்றவர்களை உற்சாகப்படுத்துவது எவ்வளவு முக்கியம்!—ரோ. 1:11, 12.

13. அனுபவமுள்ள ஊழியர்களுக்கும் ஏன் உற்சாகம் தேவை?

13 அனுபவமுள்ள ஊழியர்களுக்கும் உற்சாகம் தேவைப்படுகிறது. யோசுவாவைப் பற்றி யோசித்துப் பாருங்கள். வாக்குப் பண்ணப்பட்டிருந்த தேசத்துக்குள் இஸ்ரவேலர்கள் போகவிருந்தபோது, அவர்களை வழிநடத்துவதற்காக யெகோவா யோசுவாவைத் தேர்ந்தெடுத்தார். அவர் பல வருடங்களாக யெகோவாவுக்குச் சேவை செய்திருந்தாலும், அவரை உற்சாகப்படுத்தும்படி மோசேயிடம் யெகோவா சொன்னார். “நீ யோசுவாவுக்குக் கட்டளை கொடுத்து, அவனைத் திடப்படுத்திப் பலப்படுத்து; அவன் இந்த ஜனங்களுக்கு முன்பாகக் கடந்துபோய், அவனே நீ காணும் தேசத்தை அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுப்பான்” என்று யெகோவா மோசேயிடம் சொன்னார். (உபா. 3:27, 28) இஸ்ரவேலர்கள் நிறைய போர்களைச் செய்ய வேண்டியிருந்தது, குறைந்த பட்சம் ஒரு போரிலாவது தோற்க வேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு இருந்தது. அதனால், யோசுவாவுக்கு உற்சாகம் தேவைப்பட்டது. (யோசு. 7:1-9) அதே போல, யெகோவாவின் மக்களுக்காக இன்று கடினமாக உழைக்கும் மூப்பர்களையும் வட்டாரக் கண்காணிகளையும் நாம் உற்சாகப்படுத்த வேண்டும். (1 தெசலோனிக்கேயர் 5:12, 13-ஐ வாசியுங்கள்.) “நாங்க அவங்க சபைக்கு போனது எவ்ளோ சந்தோஷமா இருந்ததுனு சொல்லி சகோதரர்கள் சில சமயங்கள்ல எங்களுக்கு நன்றி கடிதங்கள் கொடுப்பாங்க. அதை நாங்க பத்திரமா வச்சிருப்போம், கவலையா இருக்குறப்போ அந்த கடிதங்களை வாசிப்போம். அது எங்களுக்கு ரொம்ப உற்சாகமா இருக்கும்” என்று ஒரு வட்டாரக் கண்காணி சொல்கிறார்.

பிள்ளைகளை உற்சாகப்படுத்தினால் அவர்கள் யெகோவாவிடம் நெருங்கிப் போவார்கள் (பாரா 14)

14. அறிவுரை கொடுக்கும்போது மற்றவர்களைப் பாராட்டுவது நல்ல பலன்களைக் கொடுக்கும் என்பதற்கு என்ன உதாரணங்கள் இருக்கின்றன?

14 ஒரு சமயத்தில், கொரிந்தியர்களுக்குப் பவுல் அறிவுரை கொடுக்க வேண்டியிருந்தது. அந்த அறிவுரையின்படி அவர்கள் செய்தபோது, பவுல் அவர்களைப் பாராட்டினார். (2 கொ. 7:8-11) அவர் அப்படிப் பாராட்டியது, தொடர்ந்து சரியானதைச் செய்ய அவர்களை நிச்சயம் உற்சாகப்படுத்தியிருக்கும். இன்று, மூப்பர்களும் பெற்றோர்களும் பவுலின் முன்மாதிரியைப் பின்பற்றலாம். ஏன்ட்ராஸூக்கு இரண்டு பிள்ளைகள். “பிள்ளைகளை உற்சாகப்படுத்துனா, அவங்க ஆன்மீக ரீதியிலயும் உணர்ச்சி ரீதியிலயும் முன்னேற்றம் செய்வாங்க. அப்படி உற்சாகப்படுத்துறது மூலமா அவங்களுக்கு அறிவுரை கொடுக்கவும் முடியும். எது சரினு பிள்ளைகளுக்கு தெரிஞ்சாலும், அவங்கள உற்சாகப்படுத்திக்கிட்டே இருந்தா அவங்க எப்பவுமே சரியானத செய்வாங்க” என்று அவர் சொல்கிறார்.

எப்படி உற்சாகப்படுத்தலாம்?

15. மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்கு ஒரு வழி என்ன?

15 சகோதர சகோதரிகளின் முயற்சியையும் அவர்களுடைய நல்ல குணங்களையும் நீங்கள் எந்தளவு உயர்வாக மதிக்கிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். (2 நா. 16:9; யோபு 1:8) இப்படிச் செய்யும்போது, யெகோவாவையும் இயேசுவையும் நம்மால் பின்பற்ற முடியும். நாம் செய்ய நினைக்கும் அளவுக்கு கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை செய்ய முடியாமல் இருந்தாலும், நம்மால் முடிந்ததைச் செய்யும்போது யெகோவாவும் இயேசுவும் அதை உயர்வாக மதிக்கிறார்கள். (லூக்கா 21:1-4-ஐயும், 2 கொரிந்தியர் 8:12-ஐயும் வாசியுங்கள்.) நம் அன்புக்குரிய வயதான சகோதர சகோதரிகளைப் பற்றி நினைத்துப் பாருங்கள். அவர்கள் கூட்டங்களுக்கு வரவும் ஊழியத்துக்குப் போகவும் கடினமாக முயற்சி செய்கிறார்கள். அவர்களை நாம் உற்சாகப்படுத்துகிறோமா, அவர்கள் செய்யும் எல்லாவற்றையும் பாராட்டுகிறோமா?

16. நாம் எப்போது மற்றவர்களை உற்சாகப்படுத்தலாம்?

16 வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மற்றவர்களை உற்சாகப்படுத்துங்கள். யாராவது ஒரு விஷயத்தை நன்றாகச் செய்தால், அவரைப் பாராட்டுங்கள். பவுலும் பர்னபாவும் பிசீதியா நாட்டிலுள்ள அந்தியோகியாவுக்கு வந்தபோது, அங்கிருந்த ஜெப ஆலயத்தின் தலைவர்கள் அவர்களிடம், “சகோதரர்களே, இங்குள்ளவர்களை ஊக்கப்படுத்துவதற்கு ஏதாவது சொல்ல விரும்பினால் சொல்லுங்கள்” என்று சொன்னார்கள். (அப். 13:13-16, 42-44) நாம் மற்றவர்களை உற்சாகப்படுத்தும்போது, மற்றவர்களும் நம்மை உற்சாகப்படுத்துவார்கள்.—லூக். 6:38.

17. மற்றவர்களை உற்சாகப்படுத்துவதற்குச் சிறந்த வழி என்ன?

17 மற்றவர்களை உற்சாகப்படுத்தும்போது குறிப்பிட்டுச் சொல்லி பாராட்டுங்கள். தியத்தீரா சபையில் இருந்த கிறிஸ்தவர்களை இயேசு பாராட்டியபோது, அவர்கள் செய்தவற்றைக் குறிப்பிட்டுச் சொன்னார். (வெளிப்படுத்துதல் 2:18, 19-ஐ வாசியுங்கள்.) நாம் எப்படி அவரைப் பின்பற்றலாம்? உதாரணத்துக்கு, கணவன் இல்லாத ஒரு சகோதரி, கடினமான சூழ்நிலையிலும் தன் பிள்ளைகளை வளர்ப்பதற்காக எடுக்கும் முயற்சிகளை நாம் பாராட்டலாம். நீங்கள் பெற்றோராக இருந்தால், யெகோவாவுக்குச் சேவை செய்ய உங்கள் பிள்ளைகள் எடுக்கும் முயற்சியைப் பாராட்டுங்கள். அவர்களிடம் நீங்கள் கவனித்த நல்ல விஷயங்களைப் பற்றி சொல்லுங்கள். ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டுச் சொல்லி மற்றவர்களை உற்சாகப்படுத்தும்போது, ஏதோ பேருக்குப் பாராட்டாமல், உண்மையிலேயே பாராட்டுகிறோம் என்று அவர்கள் தெரிந்துகொள்வார்கள்.

18, 19. யெகோவாவிடம் நெருங்கி இருப்பதற்கு ஒருவருக்கொருவர் எப்படி உதவி செய்யலாம்?

18 யோசுவாவை உற்சாகப்படுத்த வேண்டும், பலப்படுத்த வேண்டும் என்று யெகோவா மோசேயிடம் சொன்னார். ஒருவரை உற்சாகப்படுத்தும்படி யெகோவா இன்று நம்மிடம் நேரடியாகச் சொல்வதில்லை. இருந்தாலும், மற்றவர்களை உற்சாகப்படுத்த நாம் எடுக்கும் முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கிறார். (நீதி. 19:17; எபி. 12:12) உதாரணத்துக்கு, சபையில் ஒரு சகோதரர் பேச்சு கொடுத்தால், அவருடைய பேச்சில் உங்களுக்கு எது பிடித்திருந்தது என்று சொல்லலாம். உங்களுடைய பிரச்சினையைச் சமாளிக்க அல்லது ஒரு வசனத்தைப் புரிந்துகொள்ள அவருடைய பேச்சு உங்களுக்கு உதவியிருக்கலாம். பேச்சு கொடுத்த ஒரு சகோதரருக்கு ஒரு சகோதரி இப்படி எழுதினார்: “நீங்கள் கொஞ்ச நேரம் மட்டுமே என்னிடம் பேசினீர்கள். இருந்தாலும், நான் வேதனையோடு இருந்ததைக் கவனித்து எனக்கு ஆறுதல் சொன்னீர்கள், என்னை உற்சாகப்படுத்தினீர்கள். மேடையிலிருந்து பேசியபோதும் சரி, என்னிடம் பேசியபோதும் சரி, நீங்கள் அன்பாகப் பேசினீர்கள். அது யெகோவாவிடமிருந்து கிடைத்த பரிசு என்றுதான் சொல்ல வேண்டும்!”

19 “நீங்கள் இப்போது செய்து வருகிறபடியே எப்போதும் ஒருவரையொருவர் ஆறுதல்படுத்திக்கொண்டும் ஒருவரையொருவர் பலப்படுத்திக்கொண்டும் இருங்கள்” என்ற பவுலின் அறிவுரையை நாம் பின்பற்றினால், யெகோவாவிடம் நெருங்கி இருப்பதற்கு ஒருவரையொருவர் உற்சாகப்படுத்த முடியும். (1 தெ. 5:11) நாம் தினமும் ஒருவரையொருவர் உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தால், யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவோம்.

^ [1] (பாரா 1) சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.