Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்களா?

பைபிளை நீங்கள் உயர்வாக மதிக்கிறீர்களா?

“நீங்கள் கடவுளுடைய வார்த்தையை . . . ஏற்றுக்கொண்டபோது, அதை மனிதருடைய வார்த்தையாக அல்ல கடவுளுடைய வார்த்தையாக ஏற்றுக்கொண்டீர்கள் . . . அது உண்மையிலேயே கடவுளுடைய வார்த்தைதான்.”—1 தெ. 2:13.

பாடல்கள்: 114, 113

1-3. எயோதியாளுக்கும் சிந்திகேயாளுக்கும் என்ன பிரச்சினை வந்திருக்கலாம்? அது போன்ற பிரச்சினைகளை நாம் எப்படித் தவிர்க்கலாம்? (ஆரம்பப் படம்)

பைபிள் கடவுளுடைய வார்த்தையாக இருப்பதால், நாம் அதை உயர்வாக மதிக்கிறோம். பிரச்சினைகளை எப்படித் தவிர்க்கலாம் என்பதைப் பற்றி பைபிள் நமக்கு ஆலோசனை தருகிறது. நாம் தவறுகள் செய்யும்போது, அது நம்மைச் சரி செய்கிறது. அப்படியென்றால், பைபிளின் ஆலோசனைக்கு நாம் எப்படிப் பிரதிபலிக்க வேண்டும்? எயோதியாள் மற்றும் சிந்திகேயாள் என்ற பரலோக நம்பிக்கையுள்ள இரண்டு பெண்கள் முதல் நூற்றாண்டில் இருந்தார்கள். அவர்கள் இரண்டு பேரும் வாக்குவாதம் செய்துகொண்டதாக பைபிள் சொல்கிறது; ஆனால், அதற்கான காரணத்தைச் சொல்லவில்லை. ஒருவேளை என்ன நடந்திருக்கலாம் என்று இப்போது கற்பனை செய்து பார்க்கலாம்.

2 சில சகோதர சகோதரிகளை தன்னுடைய வீட்டுக்குச் சாப்பிட வரும்படி எயோதியாள் அழைக்கிறாள். ஆனால், சிந்திகேயாளை அழைக்காமல் விட்டுவிடுகிறாள். பிறகு, எயோதியாளுடைய வீட்டில் சந்தோஷமாக இருந்ததைப் பற்றி அவளுடைய வீட்டுக்குப் போனவர்கள் சிந்திகேயாளிடம் சொல்கிறார்கள். அப்போது, சிந்திகேயாளுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. ஒருவேளை சிந்திகேயாள் இப்படி நினைத்திருக்கலாம்: “எயோதியாள் எப்படி என்ன கூப்பிடாம விட்டா? அத என்னால நம்பவே முடியல. அவளும் நானும் பெஸ்ட் ஃபிரண்ட்ஸ்னு நினைச்சேனே!” எயோதியாளுக்குத் தன்னைப் பிடிக்கவில்லை என்றும், அவள் தன்னை ஒதுக்குகிறாள் என்றும் சிந்திகேயாள் நினைக்கிறாள். அதனால், எயோதியாள் அழைத்த அதே சகோதர சகோதரிகளை சிந்திகேயாளும் தன்னுடைய வீட்டுக்கு அழைக்கிறாள். ஆனால், எயோதியாளை அழைக்காமல் விட்டுவிடுகிறாள். இவர்களுடைய பிரச்சினையால் ஒருவேளை சபையின் சமாதானம் பாதிக்கப்பட்டிருக்கலாம். கடைசியில் என்ன நடந்ததென்று பைபிள் சொல்லவில்லை. ஆனால், பவுல் அன்பாகக் கொடுத்த ஆலோசனையை அவர்கள் இரண்டு பேரும் கேட்டு நடந்திருக்கலாம்.—பிலி. 4:2, 3.

3 இன்றும், நம்முடைய சபையில் இருக்கிற ஒரு சகோதரரிடமோ சகோதரியிடமோ நமக்குப் பிரச்சினை இருக்கலாம். ஆனால், பைபிளில் இருக்கிற ஆலோசனைகளின்படி நடந்தால், அதை நம்மால் சரி செய்ய முடியும். சொல்லப்போனால், அது போன்ற பிரச்சினைகளை நம்மால் தவிர்க்க முடியும். பைபிள் ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியும்போது, நாம் பைபிளை உண்மையிலேயே உயர்வாக மதிக்கிறோம் என்பதைக் காட்டலாம்.—சங். 27:11.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த பைபிள் நமக்குக் கற்றுத்தருகிறது

4, 5. நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது சம்பந்தமாக பைபிள் என்ன ஆலோசனை தருகிறது?

4 நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவது எல்லா சமயங்களிலும் சுலபமாக இருக்காது. யாராவது நம்மை அவமானப்படுத்தும் விதத்தில் பேசினால், நமக்கு ரொம்ப வருத்தமாக இருக்கலாம் அல்லது பயங்கர கோபம்கூட வரலாம். நம்முடைய கலாச்சாரம், நிறம், தோற்றம் ஆகியவற்றைக் காரணங்காட்டி யாராவது நம்மைத் தவறாக நடத்தினால், நாம் நொந்துபோய்விடலாம். அதுவும் நம் சகோதர சகோதரிகள் நம்மை அவமானப்படுத்தினாலோ நம்மைத் தவறாக நடத்தினாலோ நாம் ரொம்பவே நொந்துபோய்விடலாம். இது போன்ற பிரச்சினைகளைச் சமாளிக்க, பைபிள் நமக்கு என்ன ஆலோசனை தருகிறது?

5 மனிதர்கள் தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவில்லை என்றால், என்ன ஆகும் என்று யெகோவாவுக்குத் தெரியும். நாம் வருத்தமாகவோ கோபமாகவோ இருக்கும்போது, பிற்பாடு அதை நினைத்து வருத்தப்படுவது போல் ஏதாவது பேசிவிடலாம் அல்லது செய்துவிடலாம். கோபத்தைக் கட்டுப்படுத்தும்படி பைபிள் மூலம் யெகோவா இப்படி ஆலோசனை தருகிறார்: “உன் மனதில் சீக்கிரமாய்க் கோபங்கொள்ளாதே.” இந்த ஆலோசனையைக் கேட்டு, நாம் சீக்கிரத்தில் கோபப்படாமலோ வருத்தப்படாமலோ இருந்தால், எவ்வளவோ பிரச்சினைகளைத் தவிர்க்கலாம்! (பிரசங்கி 7:9-ஐயும், நீதிமொழிகள் 16:32-ஐயும் வாசியுங்கள்.) மற்றவர்களை மன்னிக்கும்படியும் பைபிள் நமக்குச் சொல்கிறது. மற்றவர்களை நாம் மன்னிக்கவில்லை என்றால், யெகோவாவும் நம்மை மன்னிக்க மாட்டார் என்று இயேசு சொன்னார். (மத். 6:14, 15) அப்படியென்றால், நீங்கள் இன்னும் பொறுமையை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறதா? மற்றவர்களை இன்னும் தாராளமாக மன்னிக்க வேண்டியிருக்கிறதா?

6. நம்முடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தவில்லை என்றால் என்ன ஆகலாம்?

6 நம்முடைய உணர்ச்சிகளை நாம் கட்டுப்படுத்தவில்லை என்றால் கோபம் நமக்குள் இருந்துகொண்டே இருக்கும். யார்மீது கோபமாக இருக்கிறோமோ, அவர்களை வெறுக்கவும் ஆரம்பித்துவிடுவோம். அல்லது, சபையில் இருக்கிற சிலர் நம்மைப் போலவே நடக்கும்படி செய்துவிடுவோம். நம்முடைய கோபத்தையும் வெறுப்பையும் மறைப்பதற்கு நாம் என்னதான் முயற்சி செய்தாலும், கடைசியில் அது மற்றவர்களுக்குத் தெரிந்துவிடும். பிறகு, நம்முடைய சகோதர சகோதரிகள் நம்மைவிட்டு விலக ஆரம்பித்துவிடுவார்கள். (நீதி. 26:24-26) அப்படிப்பட்ட சமயங்களில், நம்முடைய கோபத்தையும் வெறுப்பையும் விட்டுவிடுவதற்கும், மற்றவர்களை மன்னிப்பதற்கும் பைபிளைப் பயன்படுத்தி மூப்பர்கள் நமக்கு உதவி செய்வார்கள். (லேவி. 19:17, 18; ரோ. 3:11-18) அப்போது, பைபிளில் இருந்து அவர்கள் தரும் ஆலோசனையின்படி நாம் செய்வோமா?

யெகோவா நம்மை வழிநடத்துகிறார்

7, 8. (அ) தன்னுடைய மக்களை யெகோவா எப்படி வழிநடத்துகிறார்? (ஆ) பைபிளில் இருக்கிற சில வழிநடத்துதல்கள் என்ன, அவற்றிற்கு நாம் ஏன் கீழ்ப்படிய வேண்டும்?

7 இன்று, தன்னுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தில் இருப்பவர்களை யெகோவா வழிநடத்துகிறார், அவர்களுக்குக் கற்றுக்கொடுக்கிறார். எப்படி? கிறிஸ்துவை “சபைக்குத் தலையாக” நியமித்திருக்கிறார். கிறிஸ்து, கடவுளுடைய மக்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் அவர்களை வழிநடத்தவும், ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ நியமித்திருக்கிறார். (எபே. 5:23; மத். 24:45-47) முதல் நூற்றாண்டில் இருந்த ஆளும் குழுவைப் போல, இந்த உண்மையும் விவேகமும் உள்ள அடிமை பைபிளை மிகவும் உயர்வாக மதிக்கிறார்கள். ஏனென்றால், பைபிள் கடவுளுடைய வார்த்தை என்பதை அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள். (1 தெசலோனிக்கேயர் 2:13-ஐ வாசியுங்கள்.) பைபிளில் இருக்கிற சில வழிநடத்துதல்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

8 தவறாமல் கூட்டங்களுக்குப் போகும்படி பைபிள் நமக்கு ஆலோசனை தருகிறது. (எபி. 10:24, 25) நாம் எல்லாரும் ஒரே விதமான பைபிள் போதனைகளை நம்பும்படி நம்மை உற்சாகப்படுத்துகிறது. (1 கொ. 1:10) “முதலாவது கடவுளுடைய அரசாங்கத்தை” நாடும்படி சொல்கிறது. (மத். 6:33) வீடு வீடாகவும், பொது இடங்களிலும், மக்கள் இருக்கிற எல்லா இடங்களிலும் பிரசங்கிக்கும்படி அறிவுரை தருகிறது. (மத். 28:19, 20; அப். 5:42; 17:17; 20:20) ஆன்மீக ரீதியில் சபையைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும்படி மூப்பர்களை வழிநடத்துகிறது. (1 கொ. 5:1-5, 13; 1 தீ. 5:19-21) அதோடு, நம்முடைய உடலைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும்படியும், யெகோவா வெறுக்கிற எண்ணங்களையும் பழக்கவழக்கங்களையும் தவிர்க்கும்படியும் சொல்கிறது.—2 கொ. 7:1.

9. பைபிளைப் புரிந்துகொள்வதற்கு இயேசு யாரை நியமித்திருக்கிறார்?

9 பைபிளைப் பற்றி யாரும் தனக்கு விளக்க வேண்டியதில்லை என்று சிலர் நினைக்கலாம். ஆனால், கடவுளுடைய மக்கள் பைபிளைப் புரிந்துகொள்ளவும் அதிலிருக்கும் வழிநடத்துதல்களுக்குக் கீழ்ப்படியவும், 1919-லிருந்து ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையை’ இயேசு பயன்படுத்திவருகிறார். பைபிளில் இருக்கிற ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியும்போது, நம்மால் சபையைச் சுத்தமாகவும், சமாதானமாகவும், ஒற்றுமையாகவும் வைத்துக்கொள்ள முடியும். இப்போது, உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் இயேசுவுக்கு உண்மையா இருக்கேனா, உண்மையுள்ள அடிமை தர்ற வழிநடத்துதலுக்கு கீழ்ப்படியுறேனா?’

யெகோவாவின் பரம ரதம் வேகமாகப் போய்க்கொண்டு இருக்கிறது!

10. யெகோவாவுடைய அமைப்பின் பரலோக பாகத்தைப் பற்றி எசேக்கியேல் புத்தகம் என்ன சொல்கிறது?

10 பரலோகத்தில் இருக்கிற யெகோவாவின் ஊழியர்களும் ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறார்கள் என்று பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். உதாரணத்துக்கு, யெகோவாவின் பரம ரதத்தை எசேக்கியேல் ஒரு தரிசனத்தில் பார்த்தார். அந்தத் தரிசனத்தில், யெகோவா அந்தப் பரம ரதத்தை ஓட்டுகிறார், எந்தத் திசையில் அது போக வேண்டும் என்று அவர் விரும்புகிறாரோ, அந்தத் திசையில் அது வேகமாகப் போகிறது. (எசே. 1:4-28) அந்தப் பரம ரதம், கடவுளுடைய அமைப்பின் பரலோக பாகத்தைக் குறிக்கிறது. இந்தப் பரலோக பாகம், கடவுளுடைய அமைப்பின் பூமிக்குரிய பாகத்தை வழிநடத்துகிறது. கடந்த 10 வருடங்களில் மட்டும் கடவுளுடைய அமைப்பில் நடந்திருக்கிற மாற்றங்களைப் பற்றி கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவற்றையெல்லாம் யெகோவாதான் வழிநடத்துகிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்! கிறிஸ்துவும் தேவதூதர்களும் சீக்கிரத்தில் இந்த மோசமான உலகத்தை அழிக்கப் போகிறார்கள். அதற்குப் பிறகு, யெகோவாவையும் அவருடைய பெயரையும் அவமதிப்பதற்கோ, அவர் ஆட்சி செய்யும் விதத்தைப் பற்றி குறை சொல்வதற்கோ யாருமே இருக்க மாட்டார்கள்.

கட்டுமான வேலையில் கடுமையாக உழைக்கிற வாலண்டியர்களுக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! (பாரா 11)

11, 12. இந்தக் கடைசி நாட்களில், யெகோவாவின் அமைப்பால் என்னென்ன விஷயங்களைச் செய்ய முடிந்திருக்கிறது?

11 இந்தக் கடைசி நாட்களில், யெகோவாவின் அமைப்பால் என்னென்ன விஷயங்களைச் செய்ய முடிந்திருக்கிறது என்பதைக் கவனியுங்கள். கட்டுமான வேலை. அமெரிக்காவின் நியு யார்க்கில் இருக்கிற வார்விக் என்ற இடத்தில், யெகோவாவின் சாட்சிகளுடைய புதிய தலைமை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது; நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகள் அதில் கடினமாக உழைத்தார்கள். ஆயிரக்கணக்கான மற்ற வாலண்டியர்கள், உலகம் முழுவதும் பல இடங்களில் ராஜ்ய மன்றங்களையும், கிளை அலுவலகங்களையும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். உலகளாவிய வடிவமைப்பு/கட்டுமானத்துறை மூலமாக இவர்கள் எல்லாரும் வழிநடத்தப்படுகிறார்கள். இது போன்ற கட்டுமான வேலையில் கடினமாக உழைக்கும் சகோதர சகோதரிகளுக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! அதுமட்டுமல்ல, உலகம் முழுவதும் இருக்கிற யெகோவாவின் ஊழியர்கள் இந்த வேலைக்குப் பண உதவி செய்கிறார்கள். இப்படி மனத்தாழ்மையோடும் உண்மையோடும் நன்கொடை கொடுக்கிறவர்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார்.—லூக். 21:1-4.

12 பைபிள் கல்வி. தன்னுடைய மக்களுக்குக் கற்றுக்கொடுக்க யெகோவா விரும்புகிறார். (ஏசா. 2:2, 3) நமக்கு இருக்கிற பைபிள் பள்ளிகளைப் பற்றி யோசித்துப் பாருங்கள். பயனியர் ஊழியப் பள்ளி, ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி, கிலியட் பள்ளி, புதிய பெத்தேல் அங்கத்தினர்களுக்கான பள்ளி, வட்டாரக் கண்காணிகள் மற்றும் அவர்களுடைய மனைவிகளுக்கான பள்ளி, சபை மூப்பர்களுக்கான பள்ளி, ராஜ்ய ஊழியப் பள்ளி, கிளை அலுவலகக் குழுவினர் மற்றும் அவர்களுடைய மனைவிகளுக்கான பள்ளி என்று நிறைய பள்ளிகள் இருக்கின்றன. அதோடு, நம்முடைய jw.org வெப்சைட்டில் பைபிளும் மற்ற பிரசுரங்களும் நூற்றுக்கணக்கான மொழிகளில் இருக்கின்றன. இந்த வெப்சைட்டில், பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் விசேஷ பகுதிகள் இருக்கின்றன. அதுமட்டுமில்லாமல், செய்திகளைத் தெரிந்துகொள்வதற்காகத் தனி பகுதி ஒன்றும் ஆங்கில வெப்சைட்டில் இருக்கிறது. நீங்கள் நம்முடைய வெப்சைட்டை ஊழியத்திலும் குடும்ப வழிபாட்டிலும் பயன்படுத்துகிறீர்களா?

யெகோவாவுக்கு உண்மையாக இருங்கள், அவருடைய அமைப்புக்கு ஆதரவு காட்டுங்கள்

13. யெகோவாவின் மக்களுக்கு என்ன பொறுப்பு இருக்கிறது?

13 யெகோவாவின் அமைப்பில் இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்! நாம் என்ன செய்தால் கடவுள் பிரியப்படுவார் என்பது நமக்குத் தெரிந்திருப்பதால், சரியானதைச் செய்வதும் அவருக்குக் கீழ்ப்படிவதும் நம்முடைய பொறுப்பாக இருக்கிறது. கெட்ட விஷயங்களைச் செய்யத்தான் இந்த உலகம் ஆசைப்படுகிறது. ஆனால், நாம் யெகோவாவைப் போலவே ‘தீமையை வெறுக்க வேண்டும்.’ (சங். 97:10) “தீமையை நன்மையென்றும், நன்மையைத் தீமையென்றும்” சொல்கிறவர்களைப் போல நாம் இருக்கக் கூடாது. (ஏசா. 5:20) நாம் யெகோவாவைப் பிரியப்படுத்த ஆசைப்படுவதால், எல்லா விதங்களிலும் சுத்தமாக இருப்பதற்கு நாம் தீர்மானமாக இருக்கிறோம். (1 கொ. 6:9-11) பைபிளில் யெகோவா சொல்லியிருப்பதெல்லாம் நம்முடைய நன்மைக்குத்தான். நாம் அவரை நேசிக்கிறோம், அவருக்கு உண்மையாக இருக்க விரும்புகிறோம். அதனால்தான் வீட்டிலும் சரி, சபையிலும் சரி, வேலையிலும் சரி, பள்ளியிலும் சரி, எங்கே இருந்தாலும் சரி, அவருடைய வழிநடத்துதலின்படி செய்கிறோம். (நீதி. 15:3) நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டிய சில வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

14. பெற்றோர்கள் எப்படி யெகோவாவுக்கு உண்மையாக இருக்கலாம்?

14 பிள்ளை வளர்ப்பு. பிள்ளைகளுக்கு எப்படிப் பயிற்சி கொடுக்க வேண்டும் என்று யெகோவா பைபிள் மூலமாக பெற்றோர்களுக்குச் சொல்லியிருக்கிறார். இந்த உலக மக்களுடைய கருத்துகள் தங்களைப் பாதிக்காமல் இருப்பதற்கு, கிறிஸ்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும். (எபே. 2:2) சில ஊர்களில், “இங்கெல்லாம் பொதுவா அம்மாதான் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுப்பாங்க!” என்று அப்பாக்கள் நினைக்கலாம். ஆனால், அப்பாதான் தன்னுடைய பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுக்க வேண்டும் என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (எபே. 6:4) சாமுவேல் சின்னப் பையனாக இருந்தபோது யெகோவாவோடு நெருங்கிய நட்பு வைத்திருந்தது போல, தங்களுடைய பிள்ளைகளும் யெகோவாவோடு நெருங்கிய நட்பு வைத்திருக்க வேண்டும் என்று யெகோவாவை நேசிக்கிற ஒவ்வொரு அப்பா அம்மாவும் விரும்புவார்கள்.—1 சா. 3:19.

15. முக்கியமான தீர்மானங்கள் எடுக்கும் விஷயத்தில் நாம் எப்படி யெகோவாவுக்கு உண்மையாக இருக்கலாம்?

15 தீர்மானங்கள் எடுப்பது. நம்முடைய வாழ்க்கையில் பெரிய தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பு, அதைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்றும் அதன் மூலம் யெகோவாவுக்கு நாம் எப்படி உண்மையாக இருக்கலாம் என்றும் தெரிந்துகொள்ள விரும்புகிறோம். இதற்கு, பைபிளும் கடவுளுடைய அமைப்பும் நமக்கு உதவியாக இருக்கும். உதாரணத்துக்கு, சொந்த நாட்டை விட்டுவிட்டு இன்னொரு நாட்டுக்கு வந்த சிலர், தங்களுக்குக் குழந்தை பிறந்த பிறகு, அந்தக் குழந்தையைத் தங்களுடைய நாட்டில் இருக்கிற சொந்தக்காரர்களிடம் கொண்டுபோய் விட்டுவிட முடிவு செய்கிறார்கள். கணவன் மனைவி இரண்டு பேரும் தொடர்ந்து வேலைக்குப் போகவும் பணம் சம்பாதிக்கவும் விரும்புவதால் அப்படிச் செய்கிறார்கள். இது அவரவர்களுடைய சொந்தத் தீர்மானம் என்பது உண்மைதான். ஆனால், நாம் எடுக்கிற தீர்மானத்தைப் பற்றி கடவுள் என்ன நினைப்பார் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். (ரோமர் 14: 12-ஐ வாசியுங்கள்.) நம்முடைய குடும்பம் மற்றும் வாழ்க்கை சம்பந்தமான முக்கிய தீர்மானங்களை எடுப்பதற்கு முன்பு, அதைப் பற்றி முதலில் பைபிள் என்ன சொல்கிறது என்று யோசித்துப் பார்ப்பது ஞானமானது. நம்முடைய பரலோக அப்பா யெகோவாவின் உதவி நமக்குத் தேவை; ஏனென்றால், நாமாகவே நம் வாழ்க்கையை நடத்த முடியாது.—எரே. 10:23.

16. தனக்குக் குழந்தை பிறந்தபோது, ஓர் அம்மா என்ன தீர்மானம் எடுக்க வேண்டியிருந்தது? சரியான தீர்மானத்தை எடுக்க எது அவளுக்கு உதவியது?

16 தங்களுடைய நாட்டை விட்டு இன்னொரு நாட்டுக்கு வந்த ஒரு கணவன் மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையைத் தாத்தா பாட்டியிடம் கொண்டுபோய் விட்டுவிடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்தச் சமயத்தில், யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து அந்தப் பெண் பைபிள் படிக்க ஆரம்பித்தாள். அப்போது, தன்னுடைய பிள்ளைக்கு யெகோவாவைப் பற்றி கற்றுக்கொடுக்கிற பொறுப்பு தனக்கு இருப்பதை அவள் தெரிந்துகொண்டாள். (சங். 127:4; நீதி. 22:6) பைபிள் சொல்வது போல், அந்த இளம் பெண் யெகோவாவிடம் ஜெபம் செய்தாள், சரியானதைச் செய்ய உதவும்படி யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டாள். (சங். 62:7, 8) அதோடு, அந்தப் பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்திய சகோதரியிடமும் சபையிலிருந்த மற்றவர்களிடமும் அதைப் பற்றி பேசினாள். குழந்தையைத் தாத்தா பாட்டியிடம் கொண்டுபோய் விடச்சொல்லி அந்தப் பெண்ணுடைய சொந்தக்காரர்களும் நண்பர்களும் அந்தப் பெண்ணிடம் சொல்லிக்கொண்டே இருந்தாலும், அப்படிச் செய்வது சரியாக இருக்காது என்று அந்தப் பெண் முடிவு செய்தாள். தன்னுடைய மனைவிக்கும் குழந்தைக்கும் சகோதர சகோதரிகள் எந்தளவு உதவி செய்கிறார்கள் என்பதை அந்தப் பெண்ணின் கணவர் பார்த்தார். அது அவருடைய மனதைத் தொட்டதால் பைபிள் படிக்கவும், தன் மனைவியோடு கூட்டங்களில் கலந்துகொள்ளவும் ஆரம்பித்தார். தன்னுடைய ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்ததை நினைத்து அந்தப் பெண் எவ்வளவு சந்தோஷப்பட்டிருப்பாள் என்று கற்பனை செய்து பாருங்கள்!

17. பைபிள் படிப்பு நடத்துவதைப் பற்றி நமக்கு என்ன சொல்லப்பட்டிருக்கிறது?

17 வழிநடத்துதலின்படி செய்வது. நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால், அவருடைய அமைப்பிடமிருந்து வருகிற வழிநடத்துதலின்படி செய்வோம். உதாரணத்துக்கு, பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்திலிருந்து ஒருவருக்கு பைபிள் படிப்பு ஆரம்பித்த உடனே, நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி யோசித்துப் பாருங்கள். நம்மோடு பைபிள் படிப்பவர்கள் நம்முடைய அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக, ஒவ்வொரு பைபிள் படிப்புக்குப் பிறகும் சில நிமிடங்கள் அமைப்பைப் பற்றி அவர்களுக்குச் சொல்லித் தரும்படி நமக்கு ஆலோசனை கொடுக்கப்பட்டிருக்கிறது. ராஜ்ய மன்றத்தில் கூட்டங்கள் எப்படி நடக்கும்? என்ற வீடியோவையும், இன்று யெகோவா விரும்புவதை செய்பவர்கள் யார்? என்ற சிற்றேட்டையும் பயன்படுத்தலாம். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை முடித்த பிறகும், பைபிள் படிப்பவர்கள் தங்களுடைய “விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாக” இருக்க, கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்என்ற புத்தகத்திலிருந்தும் படிப்பு நடத்தலாம் என்று நமக்குச் சொல்லப்பட்டிருக்கிறது. அவர்கள் ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும் அந்தப் புத்தகத்திலிருந்து படிப்பு நடத்தலாம். (கொலோ. 2:7) யெகோவாவின் அமைப்பு கொடுக்கிற இந்த ஆலோசனையின்படி நீங்கள் செய்கிறீர்களா?

18, 19. நாம் யெகோவாவுக்கு நன்றியோடு இருப்பதற்கு என்ன சில காரணங்கள் இருக்கின்றன?

18 நாம் யெகோவாவுக்கு நன்றியோடு இருப்பதற்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன! அவரால்தான் “நாம் வாழ்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்.” (அப். 17:27, 28) தன்னுடைய வார்த்தையாகிய பைபிளை அவர் நமக்குக் கொடுத்திருக்கிறார். தெசலோனிக்கேயில் இருந்த கிறிஸ்தவர்களைப் போலவே, நாமும் பைபிளை உயர்வாக மதிக்கிறோம்; ஏனென்றால், அது கடவுளிடமிருந்து வந்த செய்தி என்று நம்புகிறோம்.—1 தெ. 2:13.

19 நாம் யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கும், அவர் நம்மிடம் நெருங்கி வருவதற்கும் பைபிள் நமக்கு உதவி செய்திருக்கிறது. (யாக். 4:8) அவருடைய அமைப்பில் இருப்பதற்கு யெகோவா நம்மை அழைத்திருக்கிறார்; இந்த அருமையான பாக்கியத்திற்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! “கர்த்தரைத் துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது” என்று சொன்ன சங்கீதக்காரனைப் போலவே நாமும் உணர்கிறோம். (சங். 136:1) “அவர் கிருபை என்றுமுள்ளது” என்ற வார்த்தைகள், 136-ஆம் சங்கீதத்தில் மொத்தம் 26 தடவை இருக்கின்றன. நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்கும்போதும், அவருடைய அமைப்பின் மூலம் அவர் கொடுக்கிற வழிநடத்துதலின்படி செய்யும்போதும், அவர் நமக்கு முடிவில்லாத வாழ்க்கையைக் கொடுப்பார். அதோடு, அவர் என்றென்றும் நமக்கு உண்மையாக இருப்பார்!