Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

பைபிளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல்

பைபிளின் அடிப்படையில் ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல்

கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.”நீதி. 3:19.

பாடல்கள்: 105, 107

1, 2. (அ) கடவுளுக்கு ஒரு அமைப்பு இருப்பதைப் பற்றி சிலர் என்ன சொல்கிறார்கள்? (ஆ) இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

“உங்களை வழிநடத்துறதுக்கு அமைப்பெல்லாம் தேவையில்ல, உங்களுக்கும் கடவுளுக்கும் ஒரு நல்ல பந்தம் இருந்தாலே போதும்” என்று சிலர் சொல்கிறார்கள். அவர்கள் சொல்வது சரியா? உண்மைகள் எதைக் காட்டுகின்றன?

2 எல்லா காரியங்களையும் யெகோவா ஒழுங்காகச் செய்கிறார் என்பதைப் பற்றியும், தன்னுடைய மக்களை அவர் ஒழுங்கமைத்திருக்கிறார் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம். யெகோவாவின் அமைப்பு நமக்கு வழிநடத்துதலைக் கொடுக்கும்போது நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் பார்க்கப்போகிறோம். (1 கொ 14:33, 40) முதல் நூற்றாண்டில், கடவுளுடைய வார்த்தையில் கொடுக்கப்பட்டிருந்த வழிநடத்துதலின்படி யெகோவாவின் மக்கள் செய்தார்கள். அதனால், நல்ல செய்தியை அவர்களால் நிறைய இடங்களில் பிரசங்கிக்க முடிந்தது. அவர்களைப் போலவே, நாமும் பைபிளில் கொடுக்கப்பட்டிருக்கும் வழிநடத்துதலின்படி செய்கிறோம். கடவுளுடைய அமைப்பு தரும் ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படிகிறோம். அதனால், உலகம் முழுவதும் நம்மாலும் நல்ல செய்தியைப் பிரசங்கிக்க முடிகிறது. அதோடு சபையின் சுத்தத்தையும், சமாதானத்தையும், ஒற்றுமையையும் காத்துக்கொள்ள முடிகிறது.

யெகோவா ஒழுங்கின் கடவுள்

3. யெகோவா ஒழுங்கின் கடவுள் என்பதை நாம் ஏன் நம்புகிறோம்?

3 யெகோவா படைத்திருப்பவற்றைப் பார்க்கும்போது, அவர் ஒழுங்கின் கடவுள் என்பது தெளிவாகத் தெரிகிறது. அவர், “ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.” (நீதி. 3:19) யெகோவாவின் எல்லா படைப்புகளைப் பற்றியும் நமக்குத் தெரியாது. சொல்லப்போனால், ‘அவரைக்குறித்து நாம் கேட்டது கொஞ்சம்தான்.’ (யோபு 26:14) இருந்தாலும், நம்முடைய பிரபஞ்சத்தை அவர் எவ்வளவு அருமையாக ஒழுங்கமைத்திருக்கிறார் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது. (சங். 8:3, 4) விண்வெளியில், கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் ஒழுங்காகப் பயணம் செய்கின்றன. அதோடு, சூரியக் குடும்பத்தில் இருக்கும் கோள்கள், சூரியனைச் சுற்றிவரும் விதத்தைப் பார்க்கும்போது நமக்கு எவ்வளவு பிரமிப்பாக இருக்கிறது! நட்சத்திரங்களும் கோள்களும் எப்படிச் சுற்றிவர வேண்டும் என்பதை யெகோவா ஒழுங்கமைத்திருக்கிறார். அதனால்தான், அவை ஒழுங்காக இயங்குகின்றன. அவர், ‘வானங்களையும் பூமியையும் ஞானமாக உண்டாக்கியிருப்பதை’ பார்க்கும்போது அவரைப் புகழவும், வணங்கவும், அவருக்கு உண்மையாக இருக்கவும் நாம் தூண்டப்படுகிறோம்.—சங். 136:1, 5-9.

4. மிக முக்கியமான கேள்விகளுக்கு ஏன் விஞ்ஞானிகளால் பதில் சொல்ல முடியவில்லை?

4 இந்தப் பிரபஞ்சத்திலும் பூமியிலும் இருக்கிறவற்றைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் நிறைய விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அதனால்தான், நம்மால் வசதியாகவும் சௌகரியமாகவும் வாழ முடிகிறது. ஆனால், முக்கியமான கேள்விகளுக்கு விஞ்ஞானிகளால் பதில் சொல்ல முடியவில்லை. உதாரணத்துக்கு, இந்தப் பிரபஞ்சம் எப்படி உண்டானது என்றும், மனிதர்களும் மிருகங்களும் தாவரங்களும் இந்தப் பூமியில் இருப்பதற்கு என்ன காரணம் என்றும், வானவியல் ஆராய்ச்சியாளர்களால் விளக்க முடியவில்லை. என்றென்றும் வாழ வேண்டுமென்ற ஆசை மனிதர்களுக்கு இருப்பதற்கு என்ன காரணம் என்றும் நிறைய பேரால் சொல்ல முடியவில்லை. (பிர. 3:11, NW) இந்தக் கேள்விகளுக்கான பதில்களை ஏன் அவர்களால் சொல்ல முடியவில்லை? கடவுள் இல்லை என்றும் பரிணாமம்தான் உண்மை என்றும் விஞ்ஞானிகளும் மற்றவர்களும் சொல்வதுதான் அதற்கு ஒரு காரணம். ஆனால், இந்தக் கேள்விகளுக்கான பதில்களைக் கடவுள் பைபிளில் சொல்லியிருக்கிறார்.

5. மனிதர்கள் எப்படி இயற்கைச் சட்டங்களைச் சார்ந்திருக்கிறார்கள்?

5 யெகோவா நிறைய இயற்கைச் சட்டங்களை உண்டாக்கியிருக்கிறார். இந்தச் சட்டங்கள் என்றுமே மாறாதவை. எலக்ட்ரீஷியன்கள், ப்ளம்பர்கள், பொறியாளர்கள், விமானிகள், அறுவை சிகிச்சை நிபுணர்கள் என எல்லாரும் தங்களுடைய வேலைகளைச் செய்வதற்கு இந்த இயற்கைச் சட்டங்களைச் சார்ந்திருக்கிறார்கள். உதாரணத்துக்கு, இதயம் எல்லாருக்கும் ஒரே இடத்தில் இருப்பதால், அறுவை சிகிச்சை நிபுணர்களால் ஒவ்வொரு நோயாளியின் இதயத்தையும் சுலபமாகக் கண்டுபிடிக்க முடிகிறது. அதோடு, நாம் எல்லாரும் இயற்கைச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிகிறோம். ஒருவேளை, புவி ஈர்ப்பு சக்தி போன்ற இயற்கைச் சட்டங்களுக்கு நாம் கீழ்ப்படியாமல் போனால் நம் உயிரே போய்விடும்.

கடவுள் எவற்றையெல்லாம் ஒழுங்கமைத்திருக்கிறார்?

6. யெகோவாவை வணங்குகிறவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருப்பார்கள் என்று ஏன் எதிர்பார்க்கலாம்?

6 இந்தப் பிரபஞ்சத்தை யெகோவா உண்மையிலேயே அற்புதமாக ஒழுங்கமைத்திருக்கிறார். அப்படியென்றால், அவரை வணங்குகிறவர்களும் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அவர் நிச்சயம் விரும்புவார், இல்லையா? சொல்லப்போனால், நாம் அவரை எப்படி வணங்க வேண்டும் என்று தெரிந்துகொள்வதற்காக நமக்கு பைபிளைக் கொடுத்திருக்கிறார். பைபிள் மூலமாகவும், அவருடைய அமைப்பின் மூலமாகவும் யெகோவா கொடுக்கிற வழிநடத்துதலின்படி செய்யும்போதுதான், நம்மால் திருப்தியாகவும் சந்தோஷமாகவும் வாழ முடியும்.

7. பைபிள் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட புத்தகம் என்பதை எது காட்டுகிறது?

7 யூத புத்தகங்களையும் கிறிஸ்தவ புத்தகங்களையும் சேர்த்து மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் பைபிள் என்று சில அறிஞர்கள் சொல்கிறார்கள். ஆனால், உண்மையிலேயே பைபிளைக் கொடுத்தது கடவுள்தான். பைபிளை அவர் நன்றாக ஒழுங்கமைத்திருக்கிறார். பைபிளில் இருக்கிற ஒவ்வொரு புத்தகமும் ஒன்றோடு ஒன்று சம்பந்தப்பட்டிருக்கிறது. அதனால்தான், ஆதியாகமத்திலிருந்து வெளிப்படுத்துதல்வரை இருக்கிற புத்தகங்கள், பைபிளின் மையக் கருத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஆட்சி செய்யும் உரிமை யெகோவாவுக்குத்தான் இருக்கிறது என்றும், வாக்குறுதி கொடுக்கப்பட்டிருந்த “வித்து” இயேசு கிறிஸ்துதான் என்றும், இந்தப் பூமியை அவர் மறுபடியும் பூஞ்சோலையாக மாற்றுவார் என்றும் அந்தப் புத்தகங்கள் தெளிவாகக் காட்டுகின்றன.ஆதியாகமம் 3:15-ஐயும், மத்தேயு 6:10-ஐயும், வெளிப்படுத்துதல் 11:15-ஐயும் வாசியுங்கள்.

8. என்னென்ன விதங்களில் இஸ்ரவேலர்கள் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தார்கள்?

8 நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததற்கு இஸ்ரவேலர்கள் ஒரு நல்ல முன்மாதிரி! உதாரணத்துக்கு, மோசேயின் திருச்சட்டத்தின்படி, சந்திப்புக் கூடார வாசலில் சேவை செய்வதற்குச் சில பெண்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தார்கள். (யாத். 38:8) இஸ்ரவேலர்கள் தங்களுடைய கூடாரத்தையும் வழிபாட்டுக் கூடாரத்தையும் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் கொண்டுபோனார்கள். பிறகு, ஆலயத்தில் குறிப்பிட்ட வேலைகளைச் செய்வதற்கு குருமார்களையும் லேவியர்களையும் தாவீது ராஜா ஒழுங்கமைத்தார். (1 நா. 23:1-6; 24:1-3) இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்திருந்தபோது, அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டார்கள். அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்ததோடு, சமாதானத்தையும் ஒற்றுமையையும் அனுபவித்தார்கள்.—உபா. 11:26, 27; 28:1-14.

9. முதல் நூற்றாண்டில் இருந்த சபைகள் எப்படி ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன?

9 முதல் நூற்றாண்டில் இருந்த சபைகளும் நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தன. சபைகளை வழிநடத்துவதற்கு அப்போஸ்தலர்கள் அடங்கிய ஓர் ஆளும் குழு ஆரம்பத்தில் இருந்தது. பிறகு, மூப்பர்களும் அந்த ஆளும் குழுவில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்கள். (அப். 6:1-6; 15:6) சபைகளுக்குக் கடிதங்களை எழுதுவதற்கு ஆளும் குழு அங்கத்தினர்களையும் அவர்களோடு சேவை செய்த மற்றவர்களையும் யெகோவா பயன்படுத்தினார். அந்தக் கடிதங்கள் மூலம் சபைகளுக்கு ஆலோசனைகளும் அறிவுரைகளும் கொடுக்கப்பட்டன. (1 தீ. 3:1-13; தீத். 1:5-9) ஆளும் குழு மூலமாகக் கிடைத்த வழிநடத்துதலின்படி நடந்ததால் சபைகள் எப்படி பிரயோஜனமடைந்தன?

10. ஆளும் குழு கொடுத்த ஆலோசனைகளின்படி நடந்ததால், முதல் நூற்றாண்டில் இருந்த சபைகளுக்கு என்ன பலன்கள் கிடைத்தன? (ஆரம்பப் படம்)

10 அப்போஸ்தலர் 16:4, 5-ஐ வாசியுங்கள். “எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் தீர்மானித்திருந்த கட்டளைகளை” தெரிவிப்பதற்காக, அதாவது ஆளும் குழு தீர்மானித்திருந்த கட்டளைகளைத் தெரிவிப்பதற்காக, முதல் நூற்றாண்டில் இருந்த சில சகோதரர்கள் சபைகளைச் சந்தித்தார்கள். அவர்கள் கொடுத்த ஆலோசனைகளின்படி நடந்ததால், “சபைகள் விசுவாசத்தில் பலப்பட்டு வந்தன, விசுவாசிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் பெருகி வந்தது.” இன்று நம் சபைகளுக்கு உதவியாக இருக்கும் என்ன பாடங்களை அவர்களுடைய முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளலாம்?

வழிநடத்துதலின்படி நடக்கிறீர்களா?

11. கடவுளுடைய அமைப்பிடமிருந்து ஏதாவது வழிநடத்துதல் கிடைத்தால், மூப்பர்களும் உதவி ஊழியர்களும் என்ன செய்ய வேண்டும்?

11 கிளை அலுவலகக் குழுவினர் அல்லது நாட்டு ஆலோசனைக் குழுவினர், வட்டாரக் கண்காணிகள், மூப்பர்கள் என எல்லாரும் கடவுளுடைய அமைப்பு தரும் வழிநடத்துதலுக்குக் கீழ்ப்படிய வேண்டும். சபைகளை வழிநடத்துகிறவர்களுக்கு நாம் எல்லாருமே கீழ்ப்படிய வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (உபா. 30:16; எபி. 13:7, 17) யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறவர்கள், கலகம் செய்ய மாட்டார்கள். தங்களுக்குக் கிடைக்கிற வழிநடத்துதலைப் பற்றி குறை சொல்லவும் மாட்டார்கள். முதல் நூற்றாண்டில், சபைகளை வழிநடத்திய சகோதரர்களுக்கு மதிப்புக் காட்டாமலிருந்த தியோத்திரேப்புவைப் போல இருக்க நாம் விரும்ப மாட்டோம். (3 யோவான் 9, 10-ஐ வாசியுங்கள்.) நமக்குக் கிடைக்கிற வழிநடத்துதலின்படி நடக்கும்போது, சபை சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க நம்மால் உதவ முடியும். அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘யெகோவாவுக்கு உண்மையா இருக்க சகோதர சகோதரிகளை நான் உற்சாகப்படுத்துறேனா? கடவுளோட அமைப்பு தர்ற வழிநடத்துதலை ஏத்துக்கிட்டு உடனடியா செயல்படுறேனா?’

12. மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிக்கிற விஷயத்தில், சமீபத்தில் என்ன மாற்றம் செய்யப்பட்டது?

12 மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிக்கிற விஷயத்தில், ஆளும் குழு சமீபத்தில் ஒரு மாற்றத்தைச் செய்தது. மூப்பர்களையும் உதவி ஊழியர்களையும் நியமிக்கும் பொறுப்பை, முதல் நூற்றாண்டில் இருந்த ஆளும் குழு, பயணக் கண்காணிகளுக்குக் கொடுத்திருந்ததைப் பற்றி நவம்பர் 15, 2014 காவற்கோபுரத்தின் வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்” என்ற கட்டுரை விளக்கியது. செப்டம்பர் 2014-லிலிருந்து வட்டாரக் கண்காணிகள் இந்த நியமிப்பைச் செய்ய ஆரம்பித்தார்கள். ஒரு சகோதரரை மூப்பராகவோ உதவி ஊழியராகவோ சபை மூப்பர்கள் சிபாரிசு செய்யும்போது, அந்தச் சகோதரரைப் பற்றியும் அவருடைய குடும்பத்தைப் பற்றியும் நன்றாகத் தெரிந்துகொள்ள வட்டாரக் கண்காணி முயற்சி செய்வார். உதாரணத்துக்கு, அந்தச் சகோதரரோடு சேர்ந்து வட்டாரக் கண்காணி ஊழியம் செய்வார். (1 தீ. 3:4, 5) பிறகு, வட்டாரக் கண்காணியும் மூப்பர்களும் ஒன்றுகூடி வருவார்கள்; மூப்பர்களுக்கும் உதவி ஊழியர்களுக்கும் இருக்க வேண்டிய தகுதிகளைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று கலந்துபேசுவார்கள்.—1 தீ. 3:1-10, 12, 13; 1 பே. 5:1-3.

13. மூப்பர்கள் கொடுக்கும் வழிநடத்துதல்களுக்கு நாம் ஒத்துழைப்பு கொடுக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

13 சபையைப் பாதுகாக்கவும், அதை நன்றாகக் கவனித்துக்கொள்ளவும் மூப்பர்கள் வழிநடத்துதல்களைக் கொடுக்கிறார்கள். அந்த வழிநடத்துதல்கள் நம்முடைய நன்மைக்காகக் கொடுக்கப்படுவதால், நாம் அதற்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். (1 தீ. 6:3) முதல் நூற்றாண்டில், சிலர் “ஒழுங்கீனமாக” இருந்தார்கள். அவர்கள் எந்த வேலையும் செய்யாமல், அவர்களுக்குச் சம்பந்தம் இல்லாத விஷயங்களில் அநாவசியமாகத் தலையிட்டார்கள். அவர்களைச் சரி செய்ய மூப்பர்கள் முயற்சி செய்தும், அவர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவில்லை. அப்படிப்பட்டவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றி பவுல் இப்படிச் சொன்னார்: ‘அவர்களைக் குறித்து வைத்துக்கொண்டு, அவர்களோடுள்ள சகவாசத்தைத் துண்டித்துக்கொள்ளுங்கள்.’ அப்படிப்பட்டவர்களிடம் சபையில் இருந்தவர்கள் எந்தச் சகவாசமும் வைத்துக்கொள்ளாமல் இருக்க வேண்டியிருந்தது. அதேசமயத்தில், அவர்களை எதிரிகள் போல் நடத்தாமலும் இருக்க வேண்டியிருந்தது. (2 தெ. 3:11-15) இன்றும், கடவுளுடைய தராதரங்களின்படி நடக்காதவர்கள் தங்களை மாற்றிக்கொள்ள மூப்பர்கள் உதவி செய்கிறார்கள். உதாரணத்துக்கு, ஒரு சகோதரரோ சகோதரியோ யெகோவாவை வணங்காத ஒருவரைக் காதலித்தால், மூப்பர்கள் அவருக்கு ஆலோசனை கொடுக்கிறார்கள். (1 கொ. 7:39) ஆனால், அவர் தன்னை மாற்றிக்கொள்ளாமல் போனால், அவருடைய நடத்தையால் சபை எப்படிப் பாதிக்கப்படும் என்பதைப் பற்றி சபையில் ஒரு பேச்சு கொடுப்பதற்கு மூப்பர்கள் முடிவு செய்யலாம். அது போன்ற ஒரு பேச்சு கொடுக்கப்பட்டால், நீங்கள் என்ன செய்வீர்கள்? அந்த நபர் யார் என்று தெரிந்தால், நீங்கள் அவரோடு தொடர்ந்து சகவாசம் வைத்துக்கொள்வீர்களா, அல்லது சகவாசம் வைத்துக்கொள்வதை நிறுத்திக்கொள்வீர்களா? அப்படிப்பட்டவரோடு சகவாசம் வைப்பதை நிறுத்திக்கொள்வதன் மூலம், அந்த நபர் தன்னுடைய ஒழுங்கீனமான நடத்தையை மாற்றிக்கொள்ள உங்களால் உதவ முடியும். [1]—பின்குறிப்பு.

சபையின் சுத்தத்தையும், சமாதானத்தையும், ஒற்றுமையையும் காத்துக்கொள்ளுங்கள்

14. சபை சுத்தமாக இருக்க நாம் எப்படி உதவலாம்?

14 கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற வழிநடத்துதலின்படி நடக்கும்போது, சபையின் ஆன்மீக சுத்தத்தை நம்மால் காத்துக்கொள்ள முடியும். கொரிந்து சபையில் என்ன நடந்தது என்று கவனியுங்கள். அங்கிருந்த சகோதர சகோதரிகளைப் பவுல் மிகவும் நேசித்தார். அங்கிருந்த நிறைய பேர் சத்தியத்தைத் தெரிந்துகொள்ள பவுல் உதவியிருந்தார். (1 கொ. 1:1, 2) ஆனால், அந்தச் சபையில் இருந்த ஒருவர் ஒழுக்கங்கெட்ட விதத்தில் வாழ்ந்து கொண்டிருந்ததையும், அவர் சபையில் இருப்பதற்கு சகோதரர்கள் அனுமதித்திருந்ததையும் பற்றி பவுல் கேள்விப்பட்டபோது, அவருக்கு எப்படி இருந்திருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! ‘அந்த மனிதனைச் சாத்தானிடம் ஒப்படைத்துவிடுங்கள்’ என்று சபை மூப்பர்களிடம் பவுல் சொன்னார். சபையின் சுத்தத்தைக் காத்துக்கொள்வதற்காக மூப்பர்கள் அந்த நபரைச் சபையை விட்டு விலக்கி வைக்க வேண்டியிருந்தது, அதாவது, சபை நீக்கம் செய்ய வேண்டியிருந்தது. (1 கொ. 5:1, 5-7, 12) இன்று, யாராவது ஒருவர் மோசமான பாவம் செய்துவிட்டு, மனம் திரும்பவில்லை என்றால் அவரைச் சபை நீக்கம் செய்வதற்கு மூப்பர்கள் முடிவு செய்யலாம். சபை நீக்கம் செய்யப்பட்டவர்களிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறதோ, அப்படி நாம் நடந்துகொள்கிறோமா? அப்படி நடந்துகொள்ளும்போது, சபை சுத்தமாக இருக்க நம்மால் உதவ முடியும். அதோடு, மனம் திரும்ப வேண்டும் என்பதையும் யெகோவாவிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதையும் சபை நீக்கம் செய்யப்பட்டவர் உணர நம்மால் உதவ முடியும்.

15. சபை சமாதானமாக இருக்க நாம் எப்படி உதவலாம்?

15 கொரிந்து சபையில் இன்னொரு பிரச்சினையும் இருந்தது. சில சகோதரர்கள், தங்களுடைய சகோதரர்களை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோனார்கள். “உங்களுக்குச் செய்யப்பட்ட அநியாயத்தை ஏன் பொறுத்துக்கொள்ளக் கூடாது?” என்று பவுல் அவர்களிடம் கேட்டார். (1 கொ. 6:1-8) இன்று, சபையில் இருக்கும் சிலர், சகோதரர்களோடு வியாபாரம் சம்பந்தப்பட்ட ஒப்பந்தத்தைச் செய்திருக்கிறார்கள். பிறகு, தங்களுடைய பணத்தை இழந்திருக்கிறார்கள்; அல்லது, சகோதரர்கள் தங்களை ஏமாற்றிவிட்டதாக உணர்ந்திருக்கிறார்கள். அதனால், அவர்களுடைய பிரச்சினையை நீதிமன்றத்துக்குக் கொண்டுபோயிருக்கிறார்கள். இப்படியெல்லாம் நடக்கும்போது, யெகோவாவைப் பற்றியும் அவருடைய மக்களைப் பற்றியும் மற்றவர்கள் மோசமாகப் பேசலாம். அதோடு, சபையின் சமாதானமும் பாதிக்கப்படலாம். நம்முடைய பணம் பறிபோனாலும் நம்முடைய சகோதரர்களோடு நாம் சமாதானமாக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. [2] (பின்குறிப்பு) இது போன்ற மோசமான பிரச்சினைகளை எப்படிச் சரிசெய்யலாம் என்று இயேசு கற்றுக்கொடுத்திருக்கிறார். (மத்தேயு 5:23, 24; 18:15-17-ஐ வாசியுங்கள்.) அதற்குக் கீழ்ப்படியும்போது, சபையின் சமாதானத்தையும் ஒற்றுமையையும் நம்மால் காத்துக்கொள்ள முடியும்.

16. கடவுளுடைய மக்கள் ஒற்றுமையாக இருப்பார்கள் என்று ஏன் எதிர்பார்க்கலாம்?

16 “இதோ, சகோதரர் ஒருமித்து வாசம்பண்ணுகிறது எத்தனை நன்மையும் எத்தனை இன்பமுமானது?” என்று பைபிள் சொல்கிறது. (சங். 133:1) இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தபோது, அவர்கள் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தார்கள்; அதோடு, ஒற்றுமையாகவும் இருந்தார்கள். “தொழுவத்தில் உள்ள மந்தையைப் போல அவர்களை ஒரே கூட்டமாக்குவேன்” என்று தன்னுடைய மக்களைப் பற்றி கடவுள் முன்கூட்டியே சொன்னார். (மீ. 2:12, NW) அதோடு, தன்னுடைய மக்கள் பைபிளிலிருந்து உண்மைகளைக் கற்றுக்கொள்வார்கள் என்றும், தனக்கு ஒற்றுமையாகச் சேவை செய்வார்கள் என்றும் யெகோவா முன்கூட்டியே சொன்னார். “ஜனங்களெல்லாரும் கர்த்தருடைய நாமத்தைத் தொழுதுகொண்டு, ஒருமனப்பட்டு அவருக்கு ஆராதனை செய்யும்படிக்கு, நான் அவர்கள் பாஷையைச் சுத்தமான பாஷையாக மாறப்பண்ணுவேன்” என்று யெகோவா சொன்னார். (செப். 3:9) யெகோவாவை ஒற்றுமையாக வணங்குவதற்கு நமக்குக் கிடைத்த பாக்கியத்துக்காக நாம் எவ்வளவு நன்றியோடு இருக்க வேண்டும்!

ஒருவர் ஏதாவது தவறு செய்துவிட்டால், அவருக்கு ஆன்மீக உதவி செய்வதன் மூலம் மூப்பர்கள் அவர்மீது அன்பு காட்டுகிறார்கள் (பாரா 17)

17. சபையில் இருக்கிற ஒருவர் மோசமான பாவத்தைச் செய்துவிட்டால் மூப்பர்கள் என்ன செய்ய வேண்டும்?

17 ஒருவர் மோசமான பாவத்தைச் செய்துவிட்டால், மூப்பர்கள் உடனடியாக அவரை அன்பான விதத்தில் சரிசெய்ய வேண்டும். மோசமான விஷயங்களிலிருந்து மூப்பர்கள் சபையைப் பாதுகாக்க வேண்டும், சபையைச் சுத்தமாகவும் ஒற்றுமையாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார் என்பது மூப்பர்களுக்குத் தெரியும். (நீதி. 15:3) பவுல் கொரிந்தியர்களுக்கு எழுதிய முதல் கடிதத்திலிருந்து, கொரிந்தியர்களை அவர் மிகவும் நேசித்தார் என்றும் தேவைப்பட்டபோது அவர்களைச் சரிசெய்தார் என்றும் தெரிந்துகொள்கிறோம். பவுலின் வழிநடத்துதலை அந்த மூப்பர்கள் உடனடியாகப் பின்பற்றினார்கள் என்பதைச் சில மாதங்களுக்குப் பிறகு அவர் எழுதிய இரண்டாவது கடிதத்திலிருந்து தெரிந்துகொள்கிறோம். ஏனென்றால், அந்தக் கடிதத்தில் பவுல் அவர்களைப் பாராட்டி எழுதியிருந்தார். ஒரு சகோதரர், ‘தெரியாமல் ஏதோவொரு தவறைச் செய்துவிட்டால்,’ மூப்பர்கள் அவரை அன்பான விதத்தில் சரிசெய்ய வேண்டும்.—கலா. 6:1.

18. (அ) பைபிளில் இருக்கிற வழிநடத்துதலின்படி நடந்ததால், முதல் நூற்றாண்டில் இருந்த சபைகள் எப்படி நன்மையடைந்தன? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றி பார்க்கப்போகிறோம்?

18 முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்கள் பைபிளில் இருக்கிற வழிநடத்துதலின்படி நடந்ததால், சபைகள் சுத்தமாகவும் சமாதானமாகவும் ஒற்றுமையாகவும் இருந்தன. (1 கொ. 1:10; எபே. 4:11-13; 1 பே. 3:8) அதனால், “வானத்தின் கீழிருக்கிற எல்லா மக்களுக்கும்” அந்தச் சகோதர சகோதரிகளால் பிரசங்கிக்க முடிந்தது. (கொலோ. 1:23) இன்றும், யெகோவாவின் மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள்; அதோடு, ஒழுங்கமைக்கப்பட்டும் இருக்கிறார்கள். உலகம் முழுவதும் நல்ல செய்தியைப் பிரசங்கிக்கிறார்கள். உன்னதப் பேரரசராகிய யெகோவாவை மகிமைப்படுத்தவும், அவருடைய வார்த்தையாகிய பைபிள் தரும் வழிநடத்துதல்களுக்குக் கீழ்ப்படியவும் அவர்கள் மிகவும் விரும்புகிறார்கள். இதற்கான ஆதாரத்தை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.—சங். 71:15, 16.

^ [1] (பாரா 13 )யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தில், பக்கங்கள் 146-151-ஐப் பாருங்கள்.

^ [2] (பாரா 15) ஒரு கிறிஸ்தவர், எந்தச் சூழ்நிலையில் இன்னொரு கிறிஸ்தவருக்கு எதிராகச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாம் என்பதைத் தெரிந்துகொள்ள, ‘கடவுளது அன்புக்கு பாத்திரராய் இருங்கள்’ என்ற புத்தகத்தில் பக்கம் 255-ல் இருக்கிற அடிக்குறிப்பைப் பாருங்கள்.