Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

உங்கள் யோசனைகளை வடிவமைப்பது யார்

உங்கள் யோசனைகளை வடிவமைப்பது யார்

“இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள்.”—ரோ. 12:2.

பாடல்கள்: 69, 57

1, 2. (அ) “இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்!” என்று பேதுரு சொன்னபோது, இயேசு என்ன பதில் கொடுத்தார்? (ஆரம்பப் படம்) (ஆ) இயேசு ஏன் அப்படிச் சொன்னார்?

இயேசு சொன்னதை அவருடைய சீஷர்களால் நம்பவே முடியவில்லை! இயேசு, இஸ்ரவேலுக்கு அரசாங்கத்தை மீட்டுத் தருவார் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், தான் சீக்கிரத்தில் வேதனைகளை அனுபவித்து, மரணமடையப் போவதாக அவர் சொன்னார். அப்போது, “எஜமானே, இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்! இதெல்லாம் உங்களுக்கு நடக்கவே நடக்காது” என்று அப்போஸ்தலன் பேதுரு சொன்னார். அதற்கு இயேசு, “என் பின்னால் போ, சாத்தானே! நீ எனக்கு முட்டுக்கட்டையாக இருக்கிறாய்; நீ கடவுளைப் போல் யோசிக்காமல் மனுஷர்களைப் போல் யோசிக்கிறாய்” என்று சொன்னார்.—மத். 16:21-23; அப். 1:6.

2 இப்படிச் சொன்னதன் மூலம், யெகோவாவின் யோசனைகளுக்கும் சாத்தானுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் இந்த உலகத்தின் யோசனைகளுக்கும் வித்தியாசம் இருப்பதை இயேசு தெளிவுபடுத்தினார். (1 யோ. 5:19) உலகத்திலிருக்கிற நிறைய பேரைப் போல் சுயநலமாக யோசிக்கும்படி இயேசுவிடம் பேதுரு சொன்னார். ஆனால், சீக்கிரத்தில் அனுபவிக்கவிருந்த வேதனைகளையும் மரணத்தையும் சந்திக்கத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதுதான் யெகோவாவின் விருப்பம் என்று இயேசுவுக்குத் தெரிந்திருந்தது. யெகோவாவின் யோசனைகளை இயேசு ஏற்றுக்கொண்டதையும், உலகத்தின் யோசனைகளை முழுமையாக ஒதுக்கித்தள்ளியதையும் பேதுருவுக்கு அவர் சொன்ன பதிலிலிருந்து தெரிந்துகொள்கிறோம்.

3. இந்த உலகத்தின் யோசனைகளை ஒதுக்கித்தள்ளிவிட்டு யெகோவாவின் யோசனைகளை ஏற்றுக்கொள்வது ஏன் அவ்வளவு சுலபம் இல்லை?

3 நாம் யாரைப் போல் யோசிக்கிறோம்? யெகோவாவைப் போலவா, இந்த உலக மக்களைப் போலவா? நம்முடைய செயல்கள் ஒவ்வொன்றும் யெகோவாவைச் சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதில் நாம் கவனமாக இருக்கிறோம்! ஆனால், நம் யோசனைகள் எப்படி இருக்கின்றன? யெகோவாவைப் போல் யோசிக்க, அதாவது ஒவ்வொரு விஷயத்தையும் யெகோவா பார்ப்பதுபோல் பார்க்க, நாம் கடினமாக உழைக்கிறோமா? அப்படிச் செய்ய அதிக முயற்சி தேவை. ஆனால், வெகு எளிதில் இந்த உலக மக்களைப் போல் நாம் யோசிக்க ஆரம்பித்துவிடுவோம்! ஏனென்றால், இந்த உலகத்தின் சிந்தை காற்றுபோல் நம்மைச் சூழ்ந்திருக்கிறது. (எபே. 2:2) அதோடு, இந்த உலகத்திலிருக்கும் மக்கள் பெரும்பாலும் தங்களைப் பற்றித்தான் யோசிக்கிறார்கள். அவர்களைப் போலவே நடந்துகொள்ளும் எண்ணம் நமக்கும் வரலாம். இந்த உலகத்திலிருக்கும் மக்களைப் போல் யோசிப்பது ரொம்பவே சுலபம்! ஆனால், யெகோவாவைப் போல் யோசிப்பது அவ்வளவு சுலபம் இல்லை!

4. (அ) இந்த உலகம் நம்முடைய யோசனைகளைக் கட்டுப்படுத்தும்படி விட்டுவிட்டால் என்ன நடக்கும்? (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

4 இந்த உலகம் நம் யோசனைகளைக் கட்டுப்படுத்தும்படி விட்டுவிட்டால், நாம் சுயநலவாதிகளாக ஆகிவிடுவோம். எது சரி எது தவறு என்பதை நாமே முடிவெடுக்க வேண்டும் என்று நினைக்க ஆரம்பித்துவிடுவோம். (மாற். 7:21, 22) அதனால், ‘மனிதர்களைப் போல் யோசிக்காமல்’ ‘கடவுளைப் போல் யோசிக்க’ நாம் கற்றுக்கொள்ள வேண்டும். இதைச் செய்ய இந்தக் கட்டுரை நமக்கு உதவும். யெகோவாவைப் போல் யோசிப்பது நம்மை அளவுக்கு அதிகமாகக் கட்டுப்படுத்துவதில்லை என்றும், அது நமக்குப் பிரயோஜனமாகத்தான் இருக்கிறது என்றும் நாம் சொல்வதற்கான காரணங்களையும் இதில் பார்ப்போம். இந்த உலகத்தின் யோசனைகள் நம்மை வடிவமைக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றியும் தெரிந்துகொள்வோம். அடுத்த கட்டுரையில், குறிப்பிட்ட சில விஷயங்களில் யெகோவாவுடைய யோசனை என்னவென்றும், அந்த விஷயங்களில் அவரைப் போலவே யோசிக்க நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்ப்போம்.

யெகோவாவின் யோசனைகள் பிரயோஜனமானவை

5. யாரும் தங்களைக் கட்டுப்படுத்தக் கூடாதென்று ஏன் சிலர் நினைக்கிறார்கள்?

5 யாரும் தங்களுடைய யோசனைகளைக் கட்டுப்படுத்தக் கூடாதென்று சிலர் நினைக்கிறார்கள். “எப்படி யோசிக்கணும்னு எனக்கு தெரியும்” என்று அவர்கள் சொல்லலாம். தங்களுடைய தீர்மானங்களை தாங்களே எடுக்க வேண்டும் என்றும், அப்படிச் செய்ய தங்களுக்கு உரிமை இருக்கிறது என்றும் அவர்கள் நினைப்பதாகத் தெரிகிறது. மற்றவர்கள் தங்களைக் கட்டுப்படுத்த அவர்கள் விரும்புவதில்லை. அல்லது, மற்றவர்களைப் போல் இருக்க வேண்டும் என்று யாரும் தங்களைக் கட்டாயப்படுத்தக் கூடாதென்று அவர்கள் சொல்லலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

6. (அ) யெகோவா நமக்கு என்ன சுதந்திரத்தைக் கொடுத்திருக்கிறார்? (ஆ) நமக்கிருக்கும் சுதந்திரத்துக்கு வரம்பே இல்லையா?

6 யெகோவாவின் யோசனைகளை நாம் ஏற்றுக்கொண்டாலும், நமக்கென்று சில அபிப்பிராயங்கள் இருக்கும் என்பதைத் தெரிந்துவைத்திருப்பது நல்லது. 2 கொரிந்தியர் 3:17 இப்படிச் சொல்கிறது: “யெகோவாவின் சக்தி எங்கேயோ அங்கே சுதந்திரம் உண்டு.” நாம் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும் என்று முடிவெடுக்கும் சுதந்திரத்தை யெகோவா கொடுக்கிறார். நமக்கென்று சொந்த விருப்பங்கள் இருக்கலாம், எதைச் செய்வதென்றும் நாம் தேர்ந்தெடுக்கலாம். இப்படித்தான் யெகோவா நம்மைப் படைத்திருக்கிறார். அதற்காக, நம் சுதந்திரத்துக்கு வரம்பே இல்லை என்று அர்த்தம் கிடையாது. (1 பேதுரு 2:16-ஐ வாசியுங்கள்.) எது சரி எது தவறு என்பதைத் தெரிந்துகொள்ள நாம் பைபிளைப் பயன்படுத்த வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். ஆனால், இப்படிச் செய்வது நம்மைக் கட்டுப்படுத்துகிறதா அல்லது நமக்குப் பிரயோஜனமாக இருக்கிறதா?

7, 8. யெகோவா யோசிப்பதுபோல் யோசிக்கக் கற்றுக்கொள்வது நம்மைக் கட்டுப்படுத்துகிறதா? ஓர் உதாரணம் கொடுங்கள்.

7 இந்த உதாரணத்தை யோசித்துப் பாருங்கள். பொதுவாக, அப்பா அம்மா தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல பழக்கவழக்கங்களைச் சொல்லிக்கொடுப்பார்கள். நேர்மையாக இருக்க வேண்டும்... கடினமாக உழைக்க வேண்டும்... மற்றவர்களை அக்கறையாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்... என்றெல்லாம் சொல்லிக்கொடுப்பார்கள். இது பிள்ளைகளைக் கட்டுப்படுத்துகிறதா? இல்லை! பிள்ளைகள் தங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகத்தான் பெற்றோர்கள் அவர்களைத் தயார்படுத்துகிறார்கள். ஆனால், வளர்ந்து பெரியவர்களான பிறகு, எதைச் செய்வதென்று பிள்ளைகளே தீர்மானிக்கலாம். அப்பா அம்மா சொல்லித்தந்த விஷயங்களின்படி செய்தால், அவர்கள் நல்ல தீர்மானங்களை எடுக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது, பிரச்சினைகளையும் வேதனைகளையும் குற்றவுணர்ச்சியையும் அவர்கள் தவிர்க்கலாம்.

8 தங்களுடைய பிள்ளைகள் திருப்தியான வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என்று ஓர் அன்பான அப்பா அம்மா எப்படி ஆசைப்படுவார்களோ, அதேபோல்தான் யெகோவாவும் ஆசைப்படுகிறார். (ஏசா. 48:17, 18) அதனால், ஒழுக்க விஷயங்களைப் பற்றியும், மற்றவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதைப் பற்றியும் நமக்குச் சொல்லித்தருகிறார். ஒவ்வொரு விஷயத்தையும் அவர் எப்படிப் பார்க்கிறாரோ, அதேபோல் பார்ப்பதற்கும் அவருடைய தராதரங்களின்படி வாழ்வதற்கும் நமக்கு வாய்ப்புக் கொடுக்கிறார். இது நம்மைக் கட்டுப்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, நம்மை இன்னும் ஞானமுள்ளவர்களாக ஆக்குகிறது; நல்ல தீர்மானங்களை எடுக்க உதவுகிறது. (சங். 92:5; நீதி. 2:1-5; ஏசா. 55:9) நமக்கென்று சொந்த விருப்பங்கள் இருந்தாலும், சந்தோஷத்தைத் தரும் தீர்மானங்களை நாம் எடுப்போம். (சங். 1:2, 3) யெகோவா யோசிப்பதுபோல் யோசிக்கக் கற்றுக்கொண்டால் நிறைய விதங்களில் நாம் பிரயோஜனமடையலாம்.

யெகோவாவின் யோசனைகள் உயர்ந்தவை

9, 10. இந்த உலகத்தின் யோசனைகளைவிட யெகோவாவின் யோசனைகள் மிக மிக உயர்ந்தவை என்பதை எது காட்டுகிறது?

9 நாம் யெகோவாவைப் போல் யோசிக்க வேண்டும் என்று விரும்புவதற்கு இன்னொரு காரணம், அவருடைய யோசனைகள் உலகத்தின் யோசனைகளைவிட மிக மிக உயர்ந்தவை! ஒழுக்கத்தைப் பற்றியும்... குடும்ப வாழ்க்கையில் சந்தோஷத்தை அனுபவிப்பதைப் பற்றியும்... வேலையில் வெற்றியடைவதைப் பற்றியும்... மற்ற விஷயங்களைப் பற்றியும்... இந்த உலகம் நிறைய ஆலோசனைகளைத் தருகிறது. ஆனால், அவற்றில் பெரும்பாலானவை யெகோவாவின் யோசனைகளோடு ஒத்துப்போவதில்லை! உதாரணத்துக்கு, சுயநலமாக நடந்துகொள்ளும்படி இந்த உலகம் மக்களைத் தூண்டுகிறது. பாலியல் முறைகேட்டில் ஈடுபடுவதில் எந்தத் தவறுமில்லை என்று சொல்கிறது. சின்னச் சின்ன காரணங்களுக்காகக்கூட பிரிந்து போனாலோ விவாகரத்து செய்துகொண்டாலோ தம்பதிகள் சந்தோஷமாக இருப்பார்கள் என்று சிலசமயங்களில் இந்த உலகம் சொல்கிறது. இந்த ஆலோசனை பைபிளின் ஆலோசனைக்கு எதிரானது! இருந்தாலும், பைபிளின் ஆலோசனைகளைவிட இந்த உலகம் தருகிற ஆலோசனைகள்தான் நம்முடைய காலத்துக்கு ஒத்துவரும் என்று நினைப்பது சரியா?

10 “ஒருவர் செய்கிற நீதியான செயல்கள் அவர் ஞானமுள்ளவர் என்பதை நிரூபிக்கும்” என்று இயேசு சொன்னார். (மத். 11:19) தொழில்நுட்ப ரீதியில் இந்த உலகம் ரொம்பவே முன்னேறியிருந்தாலும், சந்தோஷத்தைப் பறிக்கும் பயங்கரப் பிரச்சினைகளான போர், இனவெறி, குற்றச்செயல் போன்றவற்றைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதுமட்டுமல்ல, பாலியல் முறைகேட்டையும் இந்த உலகம் ஏற்றுக்கொள்கிறது. இருந்தாலும், அது குடும்பங்களைச் சீரழிப்பதாகவும் மோசமான உடல்நலப் பிரச்சினைகளில் கொண்டுபோய் விடுவதாகவும் வேறுசில மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாகவும் நிறைய பேர் ஒத்துக்கொள்கிறார்கள். ஆனால், யெகோவா கொடுக்கும் ஆலோசனைகள் எப்படிப்பட்டவை? யெகோவாவின் யோசனைகளை ஏற்றுக்கொள்ளும் கிறிஸ்தவர்களின் குடும்பங்கள், சந்தோஷமாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கின்றன. அதோடு, உலகம் முழுவதிலும் இருக்கும் தங்கள் சகோதர சகோதரிகளோடு அவர்கள் சமாதானமாகவும் இருக்கிறார்கள். (ஏசா. 2:4; அப். 10:34, 35; 1 கொ. 6:9-11) உலகத்தின் யோசனைகளைவிட யெகோவாவின் யோசனைகள்தான் உயர்ந்தவை என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.

11. மோசேயின் யோசனைகளை வடிவமைத்தது யார், அதனால் என்ன பலன் கிடைத்தது?

11 யெகோவாவின் யோசனைகள்தான் உயர்ந்தவை என்பதை கடந்தகாலத்தில் வாழ்ந்த அவருடைய உண்மை ஊழியர்கள் புரிந்துவைத்திருந்தார்கள். உதாரணத்துக்கு, மோசே “எகிப்தியர்களுடைய எல்லா துறைகளிலும் பயிற்சி” பெற்றிருந்தாலும், உண்மையான ஞானம் யெகோவாவிடமிருந்துதான் வருகிறது என்பதைத் தெரிந்துவைத்திருந்தார். (அப். 7:22; சங். 90:12) அதனால், “உங்கள் வழிகளை எனக்குத் தெரியப்படுத்துங்கள்” என்று யெகோவாவிடம் கேட்டார். (யாத். 33:13) தன்னுடைய யோசனைகளை வடிவமைக்க யெகோவாவை அவர் அனுமதித்தார். அதனால், யெகோவா என்ன செய்தார்? தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றுவதில் மோசேயை அற்புதமான விதத்தில் பயன்படுத்தினார். பலமான விசுவாசத்தைக் காட்டிய நபர் என்று சொன்னதன் மூலம் யெகோவா மோசேயை கௌரவப்படுத்தினார்.—எபி. 11:24-27.

12. எதன் அடிப்படையில் பவுல் முடிவுகளை எடுத்தார்?

12 இப்போது, அப்போஸ்தலன் பவுலுடைய உதாரணத்தைப் பார்க்கலாம். அவர் நன்றாகப் படித்தவர், புத்திசாலி! குறைந்தபட்சம் இரண்டு மொழிகளாவது அவருக்குத் தெரிந்திருந்தது. (அப். 5:34; 21:37, 39; 22:2, 3) அப்படியிருந்தும், உலக ஞானத்தை அவர் ஒதுக்கித்தள்ளினார். கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில்தான் தீர்மானங்களை எடுத்தார். (அப்போஸ்தலர் 17:2-ஐயும், 1 கொரிந்தியர் 2:6, 7, 13-ஐயும் வாசியுங்கள்.) அதனால், வெற்றிகரமாக அவரால் ஊழியம் செய்ய முடிந்தது. அதோடு, என்றுமே அழியாத ஒரு பரிசுக்காகவும் காத்திருக்க முடிந்தது.—2 தீ. 4:8.

13. யோசிக்கும் விதத்தைச் சரி செய்யும் பொறுப்பு யாருக்கு இருக்கிறது?

13 உலக யோசனைகளைவிட கடவுளுடைய யோசனைகள் மிக மிக உயர்ந்தவை என்பது தெளிவாகத் தெரிகிறது. கடவுளுடைய தராதரங்களை நாம் பின்பற்றினால், வாழ்க்கையில் வெற்றி பெறுவோம்; சந்தோஷமாகவும் இருப்போம். ஆனால், தன்னைப் போலவே யோசிக்க வேண்டும் என்று யெகோவா யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமையும்’ சரி, மூப்பர்களும் சரி, நம்முடைய யோசனைகளைக் கட்டுப்படுத்துவதில்லை. (மத். 24:45; 2 கொ. 1:24) யோசிக்கும் விதத்தைச் சரி செய்துகொள்ளும் பொறுப்பு நம் ஒவ்வொருவருக்கும் இருக்கிறது. அப்படிச் செய்தால்தான், ஒவ்வொரு விஷயத்தையும் யெகோவா பார்ப்பதுபோல் நம்மால் பார்க்க முடியும். ஆனால் அதை எப்படிச் செய்வது?

இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றாதீர்கள்

14, 15. (அ) யெகோவாவைப் போல் யோசிப்பதற்கு நாம் எதைப் பற்றி சிந்திக்க வேண்டும்? (ஆ) உலக யோசனைகள் நம் மனதுக்குள் நுழையாதபடி பார்த்துக்கொள்வது ஏன் முக்கியம்? ஓர் உதாரணம் கொடுங்கள்.

14 ரோமர் 12:2 இப்படிச் சொல்கிறது: “இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள். நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள். அப்போதுதான், நன்மையானதும் பிரியமானதும் பரிபூரணமானதுமான கடவுளுடைய விருப்பம் என்னவென்பதை நீங்கள் நன்றாகத் தெரிந்துகொள்ள முடியும்.” இந்த வசனத்திலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? சத்தியத்தைத் தெரிந்துகொள்வதற்கு முன்பு எது நம் யோசனைகளை வடிவமைத்திருந்தாலும் சரி, கடவுளுடைய யோசனைகளுக்கு ஏற்றபடி நம்மை மாற்றிக்கொள்ள முடியும்! வழிவழியாகக் கடத்தப்படும் குணங்கள்... வாழ்க்கை அனுபவம்... போன்றவை நம் யோசனைகளை ஓரளவு கட்டுப்படுத்தினாலும், அந்த யோசனைகளை மாற்றிக்கொள்ளும் திறன் நம் மனதுக்கு இருக்கிறது. ஆனால், அப்படி மாற்றிக்கொள்வது எதைப் பொறுத்தது? பெரும்பாலும் எதைப் பற்றி நாம் அதிகமாக யோசிக்க விரும்புகிறோமோ, அதைப் பொறுத்தது! யெகோவாவின் யோசனைகளைப் பற்றி நாம் அதிகமாகச் சிந்தித்தால், அவருடைய யோசனைகள்தான் எப்போதுமே சரியானவை என்பதை நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும். அப்போது, ஒவ்வொரு விஷயத்தையும் அவர் பார்ப்பதுபோல் பார்க்க வேண்டும் என்ற ஆசை நமக்கு வரும்.

15 யோசிக்கும் விதத்தை நாம் மாற்றிக்கொள்ள, ‘இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்த வேண்டும்.’ இதை எப்படிச் செய்வது? கடவுளுடைய யோசனைகளுக்கு எதிரான யோசனைகளைச் சிந்திக்கத் தூண்டுகிற எந்தவொரு விஷயத்தையும் பார்க்கவோ படிக்கவோ கேட்கவோ கூடாது. இப்படிச் செய்வது எந்தளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். ஆரோக்கியமாக இருக்க நினைக்கும் ஒருவர், சத்தான உணவைச் சாப்பிட வேண்டும் என்று முடிவு எடுக்கிறார்; அதன்படி செய்யவும் முயற்சி செய்கிறார். ஆனால், கெட்டுப்போன உணவையும் அவர் தொடர்ந்து சாப்பிடுகிறார். இப்படிச் செய்தால் என்ன ஆகும்? அவருடைய முயற்சி வீணாகத்தான் போகும்! அதேபோல், உலக யோசனைகள் நம் மனதுக்குள் நுழைய அனுமதித்தால், யெகோவாவுடைய யோசனைகளைப் பற்றிக் கற்றுக்கொள்ள நாம் எடுக்கும் எல்லா முயற்சிகளும் வீணாகத்தான் போகும்!

16. எதிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்?

16 உலக யோசனைகளை நம்மால் முழுமையாகத் தவிர்க்க முடியுமா? கஷ்டம்தான்! நாம் இந்த உலகத்தில் வாழ்வதால், உலகக் கருத்துகள் நம்மை தாக்கத்தான் செய்யும். (1 கொ. 5:9, 10) ஊழியம் செய்யும்போதுகூட, மக்களுடைய தவறான கருத்துகளும் நம்பிக்கைகளும் நம் காதில் விழத்தான் செய்கின்றன. அப்படிப்பட்ட யோசனைகளிலிருந்து நம்மைப் பாதுகாத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும்? அவற்றைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்கவோ, அவற்றை ஏற்றுக்கொள்ளவோ கூடாது. நாம் எந்த யோசனைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று சாத்தான் நினைக்கிறானோ, அவற்றை நாம் உடனடியாக ஒதுக்கித்தள்ள வேண்டும். இயேசு அப்படித்தான் செய்தார். உலக யோசனைகள் நம்மைத் தாக்கும்படியான சூழ்நிலைகளில் தேவையில்லாமல் சிக்கிக்கொள்ளக் கூடாது. அப்படிச் செய்வதன் மூலம் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ளலாம்.நீதிமொழிகள் 4:23-ஐ வாசியுங்கள்.

17. உலக யோசனைகள் நம்மைத் தாக்கும்படியான சூழ்நிலைகளில் தேவையில்லாமல் சிக்கிக்கொள்வதை நாம் எப்படித் தவிர்க்க வேண்டும்?

17 உதாரணத்துக்கு, நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது நாம் ரொம்பவே கவனமாக இருக்க வேண்டும். யெகோவாவை வணங்காத ஆட்களோடு நாம் நெருங்கிய நட்பு வைத்துக்கொண்டால், அவர்களைப் போலவே யோசிக்க ஆரம்பித்துவிடுவோம் என்று பைபிள் எச்சரிக்கிறது. (நீதி. 13:20; 1 கொ. 15:12, 32, 33) அதோடு, பொழுதுபோக்கையும் நாம் கவனமாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். பரிணாமம், வன்முறை, ஒழுக்கக்கேடு போன்றவற்றை ஆதரிக்கும் பொழுதுபோக்கை நாம் தவிர்க்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, “கடவுளைப் பற்றிய அறிவுக்கு எதிராக” இருக்கும் எந்தவொரு யோசனையும் நம் மனதைக் கெடுத்துவிடாதபடி நம்மால் பார்த்துக்கொள்ள முடியும்.—2 கொ. 10:5.

கெட்ட பொழுதுபோக்கைத் தவிர்க்க பிள்ளைகளுக்கு உதவுகிறோமா? (பாராக்கள் 18, 19)

18, 19. (அ) அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாத விதங்களில் பரப்பப்படும் உலகக் கருத்துகளைக் குறித்து நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்? (ஆ) என்ன கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும், ஏன்?

18 சிலசமயங்களில், அவ்வளவு வெளிப்படையாகத் தெரியாத விதங்களில் உலகக் கருத்துகள் பரப்பப்படலாம். அவற்றை நாம் அடையாளம் கண்டுகொண்டு, ஒதுக்கித்தள்ள வேண்டும். உதாரணத்துக்கு, சில செய்தி அறிக்கைகள், குறிப்பிட்ட சில அரசியல் கருத்துகளை ஆதரிக்கும் விதத்தில் இருக்கலாம். அதோடு, இந்த உலகம் பெரிதாக நினைக்கிற லட்சியங்களையும் சாதனைகளையும் முக்கியப்படுத்திக் காட்டலாம். ‘எல்லாத்தையும் விட நானும் என் குடும்பமும்தான் முக்கியம்’ என்ற எண்ணத்தை சில சினிமாக்களும் புத்தகங்களும் மக்களுடைய மனதில் விதைக்கின்றன. அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட எண்ணம் நல்லது என்றும், நியாயமானது என்றும், ஏன், அதுதான் சரியானது என்றும் மக்களை நினைக்க வைக்கின்றன. இந்த எல்லா கருத்துகளும் பைபிளை ஒதுக்கித்தள்ளுகின்றன. ஆனால், யெகோவாவை நேசிக்கும்போதுதான் நாமும் நம் குடும்பமும் உண்மையிலேயே சந்தோஷமாக இருக்க முடியும் என்று பைபிள் சொல்கிறது. (மத். 22:36-39) குழந்தைகளுக்காகத் தயாரிக்கப்படுகிற கதைகளைப் பற்றி என்ன சொல்லலாம்? ஒருவேளை, அவை பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும், அவற்றிலும் ஒழுக்கங்கெட்ட பழக்கவழக்கங்கள் நுழைந்துவிடுகின்றன. அந்தப் பழக்கங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளும் அளவுக்கு அவை பிள்ளைகளைப் பாதிக்கின்றன.

19 அதற்காக, தரமான பொழுதுபோக்கை அனுபவிக்கக் கூடாது என்று அர்த்தமா? இல்லை! ஆனால், இந்தக் கேள்விகளை நாம் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘ஒருவேளை உலக கருத்துகள் மறைமுகமா பரப்பப்பட்டாலும், அத என்னால அடையாளம் கண்டுபிடிக்க முடியுதா? என்னையும் என் பிள்ளைங்களையும் பாதுகாக்குறதுக்காக, சில டிவி நிகழ்ச்சிகளையும் புத்தகங்களையும் நான் தவிர்க்கிறேனா? உலக கருத்துகள பிள்ளைங்க கேட்குறப்பவும் பார்க்குறப்பவும், அந்த கருத்துகளால அவங்க பாதிக்கப்படாம இருக்குறதுக்கு, யெகோவாவோட யோசனைகள வளர்த்துக்க அவங்களுக்கு உதவுறேனா?’ உலகத்தின் யோசனைகளுக்கும் கடவுளுடைய யோசனைகளுக்கும் இருக்கும் வித்தியாசத்தை நாம் புரிந்துகொண்டால், ‘இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றாமல் இருப்போம்.’

உங்களை யார் இப்போது வடிவமைக்கிறார்கள்?

20. யார் நம்மை வடிவமைக்கிறார்கள் என்பது எதைப் பொறுத்தது?

20 இரண்டு இடங்களிலிருந்துதான் நமக்கு தகவல்கள் வருகின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஒன்று, யெகோவாவிடமிருந்து! இன்னொன்று, சாத்தான் மற்றும் அவனுடைய உலகத்திடமிருந்து! அப்படியென்றால், யார் நம்மை வடிவமைக்க இடம்கொடுக்கிறோம்? எங்கிருந்து வருகிற தகவல்களை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்பதைப் பொறுத்து அது இருக்கிறது! உலகக் கருத்துகளை ஏற்றுக்கொண்டால் இந்த உலகம்தான் நம் யோசனைகளை வடிவமைக்கும்; அப்போது, நாம் சுயநலமாக நடந்துகொள்வோம். அதனால், நாம் எதைப் பார்க்கிறோம், படிக்கிறோம், கவனிக்கிறோம், யோசிக்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.

21. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

21 நாம் யெகோவாவைப் போல் யோசிப்பதற்கு, இந்த உலகக் கருத்துகளை ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று இந்தக் கட்டுரையில் பார்த்தோம். கடவுளைப் போலவே யோசிப்பதற்கு, அவருடைய யோசனைகளைப் பற்றி நாம் ஆழமாக சிந்தித்துப் பார்க்கவும் வேண்டும். இதை எப்படிச் செய்யலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 5 உண்மை என்னவென்றால், யாருடைய கட்டுப்பாட்டிலும் தான் இல்லை என்று நினைப்பவர்கள்கூட, ஏதோவொரு விதத்தில் மற்றவர்களால் கட்டுப்படுத்தப்படுகிறார்கள். உதாரணத்துக்கு, உயிர் எப்படி ஆரம்பமானது என்ற விஷயமாக இருந்தாலும் சரி, என்ன உடை உடுத்துவது போன்ற சாதாரண விஷயமாக இருந்தாலும் சரி, மற்றவர்கள் நம்மை ஓரளவாவது கட்டுப்படுத்துகிறார்கள் என்பதுதான் உண்மை! ஆனால், யார் நம்மைக் கட்டுப்படுத்த வேண்டும் என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.