Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

”சத்தியத்தை வாங்கு, அதை ஒருபோதும் விற்காதே“

”சத்தியத்தை வாங்கு, அதை ஒருபோதும் விற்காதே“

“சத்தியத்தை வாங்கு, அதை ஒருபோதும் விற்காதே. அதேபோல், ஞானத்தையும் புத்திமதியையும் புத்தியையும் வாங்கு.”—நீதி. 23:23.

பாடல்கள்: 113, 114

1, 2. (அ) உங்கள் வாழ்க்கையில் எதை மிகவும் மதிப்புள்ளதாக நினைக்கிறீர்கள்? (ஆ) எந்தெந்த சத்தியங்களை நாம் மதிப்புள்ளதாக நினைக்கிறோம், ஏன்? (ஆரம்பப் படங்கள்)

உங்கள் வாழ்க்கையிலேயே எதை மிகவும் மதிப்புள்ளதாக நினைக்கிறீர்கள்? யெகோவாவின் மக்களாகிய நமக்கு, அவரோடு இருக்கும் பந்தம்தான் மிகவும் மதிப்புள்ளது! வேறு எதற்காகவும் அந்தப் பந்தத்தை நாம் விட்டுக்கொடுக்க மாட்டோம். பைபிளிலிருக்கும் சத்தியங்களையும் நாம் மதிப்புள்ளதாக நினைக்கிறோம். ஏனென்றால், யெகோவாவின் நண்பர்களாக ஆவதற்கு அவை நமக்கு உதவுகின்றன.—கொலோ. 1:9, 10.

2 யெகோவா, நம்முடைய மகத்தான போதகர்; தன்னுடைய வார்த்தையாகிய பைபிளிலிருக்கிற மதிப்புள்ள சத்தியங்களை அவர் நமக்குச் சொல்லித்தருகிறார். அவருடைய பெயரின் முக்கியத்துவத்தையும், அவருடைய அருமையான குணங்களையும் நமக்குத் தெரியப்படுத்துகிறார். தன்னுடைய செல்லப்பிள்ளையின் உயிரையே நமக்காகக் கொடுத்ததன் மூலம் நம்மை மிகவும் நேசிப்பதாகச் சொல்கிறார். மேசியானிய அரசாங்கத்தைப் பற்றியும் சொல்லித்தருகிறார். பிரகாசமான எதிர்கால நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறார்; அது அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் பரலோக நம்பிக்கையாக இருக்கலாம் அல்லது ‘வேறே ஆடுகளுக்கு’ கிடைக்கும் பூஞ்சோலை பூமியில் வாழும் நம்பிக்கையாக இருக்கலாம். (யோவா. 10:16) நாம் எப்படி வாழ வேண்டும் என்றும் யெகோவா சொல்லித் தருகிறார். இந்த எல்லா சத்தியங்களையும் நாம் பொக்கிஷம்போல் நினைக்கிறோம். ஏனென்றால், நம் படைப்பாளரான யெகோவாவிடம் நெருங்கி வரவும் அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கை வாழவும் இவை உதவுகின்றன.

3. சத்தியத்தைச் சொல்லித்தர யெகோவா நம்மிடம் பணம் கேட்கிறாரா?

3 யெகோவா தாராள குணம் படைத்த கடவுள்! தன்னுடைய சொந்த மகனையே நமக்காகத் தியாகம் செய்யுமளவுக்கு தாராள குணத்தைக் காட்டியிருக்கிறார். யாராவது சத்தியத்தைத் தேடிக்கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, அதைக் கண்டுபிடிக்க அவர் உதவுகிறார். சத்தியத்தைச் சொல்லித்தர அவர் ஒருபோதும் பணம் கேட்பதில்லை! ஒருசமயம், கடவுளுடைய சக்தியை மற்றவர்களுக்குக் கொடுக்கிற அதிகாரத்தைத் தனக்கு தரும்படி சீமோன் என்பவன் அப்போஸ்தலன் பேதுருவிடம் கேட்டான். அப்போது, அவனுடைய எண்ணம் தவறு என்பதை பேதுரு புரியவைத்தார். அதோடு, “கடவுள் தரும் இலவச அன்பளிப்பைப் பணம் கொடுத்து வாங்கலாம் என்று நீ நினைத்ததால் உன் பணம் உன்னோடு அழிந்துபோகட்டும்” என்றும் சொன்னார். (அப். 8:18-20) அப்படியென்றால், ‘சத்தியத்தை வாங்குவது’ என்றால் என்ன?

‘சத்தியத்தை வாங்குவது’ என்றால் என்ன?

4. சத்தியத்தைப் பற்றி இந்தக் கட்டுரையில் என்ன தெரிந்துகொள்வோம்?

4 நீதிமொழிகள் 23:23-ஐ வாசியுங்கள். பைபிளிலிருக்கிற சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்கு, முயற்சி தேவை! அதற்காக சில விஷயங்களை நாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம். ‘சத்தியத்தை வாங்கிய’ பிறகு, அதாவது அதை கற்றுக்கொண்ட பிறகு, ‘விற்காதபடி,’ அதாவது அதை விட்டுவிலகாதபடி, பார்த்துக்கொள்வது ரொம்பவே முக்கியம். ஆனால், பைபிள் சத்தியத்தை எப்படி ‘வாங்குவது’? அதன் விலை என்ன? இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்துகொள்ளும்போது, சத்தியத்தின் மீது நமக்கு இருக்கும் மதிப்பு இன்னும் அதிகமாகும். அதோடு, அதை விட்டுவிலகவே கூடாது என்பதில் நாம் உறுதியாக இருப்போம். வேறு எதையும்விட யெகோவாவிடமிருந்து வரும் சத்தியம் மிகவும் மதிப்புள்ளது என்பதையும் புரிந்துகொள்வோம்.

5, 6. (அ) பணம் கொடுக்காமலேயே நாம் எப்படிச் சத்தியத்தை வாங்கலாம்? விளக்கவும். (ஆ) சத்தியத்தால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?

5 ஒரு பொருள் இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக, எந்த முயற்சியும் செய்யாமலேயே அது நம் கையில் வந்துவிடுமா? இல்லை! நீதிமொழிகள் 23:23-ல் இருக்கிற “வாங்கு” என்பதற்கான எபிரெய வார்த்தைக்கு, “சம்பாதி” என்ற அர்த்தமும் இருக்கிறது. ஒருவர் எதை மதிப்புள்ளதாக நினைக்கிறாரோ, அதைப் பெற்றுக்கொள்வதற்காக முயற்சி செய்வதை அல்லது எதையாவது கொடுப்பதை இந்த இரண்டு வார்த்தைகளும் அர்த்தப்படுத்துகின்றன. சத்தியத்தை எப்படி வாங்கலாம் என்பதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைக் கவனிக்கலாம். சந்தையில் வாழைப்பழங்கள் இலவசமாகக் கிடைக்கின்றன என்று வைத்துக்கொள்ளலாம். அதற்காக அவை தானாகவே உங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்துவிடுமா? இல்லை. நீங்கள்தான் சந்தைக்குப் போய் அந்தப் பழங்களை வாங்கிவர வேண்டும். வாழைப்பழங்களை வாங்க பணம் கொடுக்க வேண்டியதில்லை என்பது உண்மைதான். இருந்தாலும், அதைப் பெற்றுக்கொள்ள நீங்கள் முயற்சி செய்ய வேண்டியிருக்கிறது. அதேபோல், சத்தியத்தைக் கற்றுக்கொள்ள நாம் பணம் தர வேண்டியதில்லை என்பது உண்மைதான். இருந்தாலும், அதைக் கற்றுக்கொள்ள நம் பங்கில் முயற்சி தேவை; சில தியாகங்கள் செய்ய வேண்டியதும் அவசியம்.

6 ஏசாயா 55:1-3-ஐ வாசியுங்கள். சத்தியத்தை வாங்குவது என்றால் என்ன என்பதை இந்த வசனங்களின் மூலம் யெகோவா புரியவைக்கிறார். இந்த வசனங்களில், தண்ணீரோடும் பாலோடும் திராட்சமதுவோடும் தன்னுடைய சத்திய வார்த்தைகளை ஒப்பிடுகிறார். தாகத்தில் தவிக்கும் ஒருவருக்கு குளிர்ந்த நீர் எப்படிப் புத்துணர்ச்சி தருகிறதோ, அதேபோல் சத்தியமும் நமக்குப் புத்துணர்ச்சி தருகிறது. ஒரு பிள்ளை பலமாக வளர்வதற்கு பால் எப்படி உதவுகிறதோ, அதேபோல் யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம் பலமாவதற்கு பைபிள் சத்தியம் உதவுகிறது. தன்னுடைய வார்த்தைகளை திராட்சமதுவோடும் யெகோவா ஒப்பிடுகிறார். ஏன்? திராட்சமது மக்களைச் சந்தோஷப்படுத்துகிறது என்று பைபிள் சொல்கிறது. (சங். 104:15) ‘திராட்சமதுவை வாங்கிக்கொள்ளுங்கள்’ என்று யெகோவா சொல்லும்போது, அவருடைய வழிநடத்துதல்களின்படி வாழ்ந்தால் சந்தோஷம் நிச்சயம் என்பதை நமக்குப் புரியவைக்கிறார். (சங். 19:8) சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்போதும், அதன்படி வாழும்போதும் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் புரிந்துகொள்ள யெகோவா இந்த ஒப்புமைகளைப் பயன்படுத்துகிறார். ‘சத்தியத்தை வாங்குவதற்காக’ எந்த ஐந்து விஷயங்களை நாம் விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கலாம் என்பதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

சத்தியத்தை வாங்குவதற்கு நீங்கள் எதை விலையாகக் கொடுத்திருக்கிறீர்கள்?

7, 8. (அ) சத்தியத்தைக் கற்றுக்கொள்ள ஏன் அதிக நேரம் செலவிட வேண்டும்? (ஆ) ஓர் இளம் மாணவி எதைத் தியாகம் செய்தார், அதனால் என்ன பலன் கிடைத்தது?

7 நேரம். நல்ல செய்தியைக் கேட்கவும், பைபிள் மற்றும் பைபிள் பிரசுரங்களை வாசிக்கவும், யெகோவாவின் சாட்சிகளோடு பைபிளைப் படிக்கவும், கூட்டங்களுக்குத் தயாரிக்கவும், அவற்றில் கலந்துகொள்ளவும் நமக்கு நேரம் தேவைப்படுகிறது. இவற்றையெல்லாம் செய்ய, முக்கியமில்லாத மற்ற காரியங்களிலிருந்து நேரத்தை வாங்க வேண்டும். (எபேசியர் 5:15, 16-ஐயும் அடிக்குறிப்பையும் வாசியுங்கள்.) அடிப்படை சத்தியங்களைக் கற்றுக்கொள்ள எவ்வளவு நேரம் தேவைப்படும்? ஒவ்வொருவருடைய சூழ்நிலையைப் பொறுத்து அது வேறுபடுகிறது. யெகோவாவுடைய ஞானத்தையும், அவருடைய வழிகளையும், அவருடைய செயல்களையும் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு எல்லையே கிடையாது! (ரோ. 11:33) காவற்கோபுரத்தின் முதல் இதழ், சத்தியத்தை ‘ஒரு சின்ன பூவோடு’ ஒப்பிட்டது. ‘ஒரே ஒரு பூவை, அதாவது ஒரே ஒரு சத்தியத்தை, கண்டுபிடித்ததோடு திருப்தியடைந்துவிடக் கூடாது. ஒரே ஒரு சத்தியம் போதுமானதாக இருந்திருந்தால், ஏராளமான சத்தியங்களைக் கடவுள் தந்திருக்க மாட்டார். அதனால், இன்னும் நிறைய சத்தியங்களைக் கண்டுபிடிக்கத் தொடர்ந்து ஆர்வமாகத் தேட வேண்டும்’ என்றும் அந்தப் பத்திரிகை சொன்னது. அதனால், ‘யெகோவாவ பத்தி நான் எவ்வளவு தெரிஞ்சுவைச்சிருக்கேன்?’ என்று நம்மையே கேட்டுக்கொள்ள வேண்டும். என்றென்றும் வாழ்ந்தால்கூட யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்துகொண்டேதான் இருக்கும். இன்று, நமக்கு இருக்கும் நேரத்தைப் பயன்படுத்தி எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்த ஒருவருடைய உதாரணத்தைப் பார்க்கலாம்.

8 மாரிக்கோ * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) என்ற இளம் பெண், நியு யார்க் நகரத்தில் படிப்பதற்காக ஜப்பானிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிமாறி வந்தார். ஒருநாள், பயனியர் சகோதரி ஒருவர் அவரிடம் சத்தியத்தைச் சொன்னார். மாரிக்கோ வேறொரு மதத்தைச் சேர்ந்தவராக இருந்தபோதிலும், அந்தச் சகோதரியோடு பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். படித்த விஷயங்கள் அவருக்கு ரொம்பப் பிடித்திருந்ததால், வாரத்தில் இரண்டு தடவை பைபிள் படிக்கலாமா என்று கேட்டார். கல்வி... பகுதிநேர வேலை... என அவர் பிஸியாக இருந்தபோதிலும், உடனடியாகக் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தார். சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்காக, பொழுதுபோக்குக்குச் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொண்டார். இப்படிச் செய்ததால், யெகோவாவோடு ஒரு நெருங்கிய பந்தத்தை அவரால் வளர்த்துக்கொள்ள முடிந்தது. ஒரு வருஷத்துக்குள் அவர் ஞானஸ்நானம் எடுத்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அதாவது 2006-ல், பயனியர் சேவையையும் ஆரம்பித்தார்; இன்றுவரை தொடர்ந்து செய்கிறார்.

9, 10. (அ) சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்போது, பொருள் வசதிகளைப் பற்றிய நம் எண்ணம் எப்படி மாறுகிறது? (ஆ) ஓர் இளம் பெண் எதைத் தியாகம் செய்தார், அதைப் பற்றி அவர் எப்படி உணருகிறார்?

9 பொருள் வசதிகள். சத்தியத்தைக் கற்றுக்கொள்வதற்காக, சம்பளத்தை அள்ளித்தருகிற வேலையையோ வாழ்க்கைத் தொழிலையோ நீங்கள் விலையாகக் கொடுக்க வேண்டியிருக்கலாம். பேதுரு மற்றும் அந்திரேயாவின் வாழ்க்கையில் அதுதான் நடந்தது. தன்னுடைய சீஷராகும்படி இயேசு அவர்களைக் கூப்பிட்டபோது, மீன்பிடி தொழிலை விட்டுவிட்டு அவர் பின்னால் போனார்கள். (மத். 4:18-20) அதற்காக, நீங்களும் வேலையை விட்டுவிட்டு வர வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. வேலை செய்வதும் குடும்பத்தைக் கவனித்துக்கொள்வதும் ரொம்ப முக்கியம் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (1 தீ. 5:8) ஆனால், நீங்கள் சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்போது, பொருள் வசதிகளைப் பற்றிய உங்கள் எண்ணம் மாறுகிறது; வாழ்க்கையில் உண்மையிலேயே எது முக்கியம் என்பதைப் புரிந்துகொள்கிறீர்கள். “பூமியில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வைப்பதை நிறுத்துங்கள்” என்று சொல்லிவிட்டு, “பரலோகத்தில் உங்களுக்காகப் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 6:19, 20) மரியா என்ற இளம் பெண் அதைத்தான் செய்தார்.

10 சின்ன வயதிலிருந்தே மரியாவுக்கு கோல்ஃப் விளையாடுவது என்றால் ரொம்ப இஷ்டம்! உயர்நிலைப் பள்ளியில் படித்தபோது, அவருடைய விளையாட்டுத் திறமை மெருகேறிக்கொண்டே போனது. அவர் அந்தளவு திறமைசாலியாக இருந்ததால், பல்கலைக்கழகத்தில் படிப்பதற்குத் தேவையான உதவித்தொகை கிடைத்தது. கோல்ஃப் விளையாட்டை தன்னுடைய வாழ்க்கைத் தொழிலாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்பதும், நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியமாக இருந்தது. பிறகு, அவர் பைபிளைப் படிக்க ஆரம்பித்தார். கற்றுக்கொண்ட விஷயங்கள் அவருக்குப் பிடித்திருந்ததால், அவற்றின்படி நடக்க ஆரம்பித்தார். “என்னோட மனப்பான்மை... வாழ்க்கை முறை... இதெல்லாத்தையும் பைபிள் தராதரங்களுக்கு ஏத்தமாதிரி எந்தளவுக்கு மாத்திக்கிட்டேனோ, அந்தளவுக்கு நான் சந்தோஷமா இருந்தேன்” என்று மரியா சொல்கிறார். ஒருபக்கம் பொருள் செல்வங்களுக்காக உழைத்துக்கொண்டு, இன்னொரு பக்கம் ஆன்மீக செல்வங்களுக்காக உழைப்பது சாத்தியமில்லை என்பதை அவர் புரிந்துகொண்டார். (மத். 6:24) அதனால், கோல்ஃப் விளையாடுவதை தன்னுடைய வாழ்க்கைத் தொழிலாக ஆக்கவேண்டும் என்ற லட்சியத்தை விட்டுக்கொடுத்தார். இன்று ஒரு பயனியராக அவர் சேவை செய்கிறார். “ரொம்ப சந்தோஷமான, அர்த்தமுள்ள வாழ்க்கை” தனக்குக் கிடைத்திருப்பதாக அவர் சொல்கிறார்.

11. சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்போது மற்றவர்களோடு இருக்கும் உறவு எப்படிப் பாதிக்கப்படலாம்?

11 மற்றவர்களோடு இருக்கும் உறவு. பைபிளிலிருந்து கற்றுக்கொண்ட விஷயங்களை வாழ்க்கையில் கடைப்பிடிக்க ஆரம்பிக்கும்போது, குடும்பத்தாரோடும் நண்பர்களோடும் இருக்கும் உறவில் விரிசல் ஏற்படலாம். இதற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள இயேசு நமக்கு உதவுகிறார். தன்னுடைய சீஷர்களுக்காக அவர் செய்த ஜெபத்தில், “சத்தியத்தின் மூலம் இவர்களைப் புனிதப்படுத்துங்கள்; உங்களுடைய வார்த்தைதான் சத்தியம்” என்று சொன்னார். (யோவா. 17:17, அடிக்குறிப்பு) ‘புனிதப்படுத்துவது’ என்பது, ‘தனியாகப் பிரித்து வைப்பதையும்’ குறிக்கலாம். சத்தியத்தின்படி நடக்க ஆரம்பிக்கும்போது, நாம் இந்த உலகத்திலிருந்து தனியாகப் பிரித்து வைக்கப்படுகிறோம். ஏனென்றால், நாம் பைபிள் தராதரங்களின்படி நடக்கிறோம்! நண்பர்களோடும் குடும்பத்தாரோடும் சுமுகமான உறவைக் காத்துக்கொள்ள நாம் முயற்சி எடுத்தாலும், அவர்களுக்கு நம்மைப் பிடிக்காமல் போகலாம். முன்பு காட்டிய அதே பாசத்தை அவர்கள் காட்டாமல் போகலாம். நம்முடைய புதிய நம்பிக்கைகளின் காரணமாக நம்மை எதிர்க்கவும் செய்யலாம். இதைப் பார்த்து நாம் ஆச்சரியப்படுவதில்லை. ஏனென்றால், “ஒருவருக்கு அவருடைய குடும்பத்தாரே எதிரிகளாக இருப்பார்கள்” என்று இயேசு சொல்லியிருக்கிறார். (மத். 10:36) இருந்தாலும், சத்தியத்துக்காக நாம் எவ்வளவு தியாகங்கள் செய்தாலும், அதைவிட பல மடங்கு ஆசீர்வாதங்கள் நமக்குக் கிடைக்கும் என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார்.மாற்கு 10:28-30-ஐ வாசியுங்கள்.

12. யூதராக இருந்த ஒருவர் எதை விட்டுக்கொடுத்தார்?

12 யூதராக இருந்த ஆரோன் என்பவருடைய அனுபவத்தைப் பார்க்கலாம். கடவுளுடைய பெயரை உச்சரிப்பது தவறென்று சின்ன வயதிலிருந்தே அவருக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால், கடவுளைப் பற்றிய உண்மைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. ஒருநாள் யெகோவாவின் சாட்சிகள் அவரைச் சந்தித்தார்கள். கடவுளுடைய பெயரின் எபிரெய நான்கு எழுத்துகளோடு உயிரெழுத்துக்களைச் சேர்த்தால், அதை “யெகோவா” என்று உச்சரிக்க முடியுமென்று சொன்னார்கள். அதைக் கேட்டதும் ஆரோனுக்கு ஒரே சந்தோஷம்! இந்த விஷயத்தை ரபீக்களிடம் சொல்வதற்காக ஜெபக்கூடத்துக்கு ஓடினார். அவர்களும் சந்தோஷப்படுவார்கள் என்று ஆரோன் நினைத்தார். ஆனால், நினைத்தது ஒன்று நடந்தது ஒன்று! ரபீக்கள் அவர்மீது துப்பினார்கள்; ஜெபக்கூடத்தைவிட்டுத் துரத்தினார்கள்! அவருடைய குடும்பத்தாரும் அவரை எதிர்த்தார்கள். இருந்தாலும், யெகோவாவைப் பற்றி அவர் தொடர்ந்து கற்றுக்கொண்டே இருந்தார். கடைசியில், யெகோவாவின் சாட்சியாக ஆனார்; தன் வாழ்க்கை முழுவதும் உண்மையோடு சேவை செய்தார். சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்போது, மற்றவர்களோடு நமக்கு இருக்கும் உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்பதை நாம் மனதில் வைக்க வேண்டும்.

13, 14.சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும்போது, நம்முடைய சிந்தனைகளிலும் செயல்களிலும் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும்? உதாரணம் கொடுங்கள்.

13 அசுத்தமான எண்ணங்களும் செயல்களும். சத்தியத்தைக் கற்றுக்கொண்டு பைபிள் தராதரங்களின்படி வாழ ஆரம்பிக்கும்போது, யோசிக்கும் விதத்தையும் நடந்துகொள்ளும் விதத்தையும் மாற்றிக்கொள்ள நாம் தயாராக இருக்க வேண்டும். “கடவுளைப் பற்றித் தெரியாத காலத்தில் உங்களுக்கு இருந்த ஆசைகளின்படி நடப்பதை விட்டுவிட்டு, கீழ்ப்படிகிற பிள்ளைகளாக நடந்துகொள்ளுங்கள்” என்றும், “உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்” என்றும் அப்போஸ்தலன் பேதுரு எழுதினார். (1 பே. 1:14, 15) கொரிந்து நகரத்திலிருந்த பெரும்பாலானவர்கள் மோசமான வாழ்க்கை வாழ்ந்தார்கள். யெகோவாவின் பார்வையில் சுத்தமானவர்களாக இருக்க, அவர்கள் பெரிய பெரிய மாற்றங்களைச் செய்ய வேண்டியிருந்தது. (1 கொ. 6:9-11) இன்றும், சத்தியத்தைக் கற்றுக்கொள்ளும் நிறைய பேர் அதுபோன்ற மாற்றங்களைச் செய்கிறார்கள். இதைப் பற்றி பேதுரு இப்படி எழுதினார்: “முன்பு நீங்கள் உலக மக்களுடைய விருப்பத்தின்படி வெட்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவதிலும், கட்டுக்கடங்காத ஆசைகளுக்கு இடம்கொடுப்பதிலும், குடித்து வெறிப்பதிலும், குடித்துக் கும்மாளம் போடுவதிலும், போட்டி போட்டுக்கொண்டு குடிப்பதிலும், கண்டனத்துக்குரிய சிலை வழிபாடுகளில் கலந்துகொள்வதிலும் ஏற்கெனவே நிறைய காலத்தைச் செலவழித்துவிட்டீர்கள்.”—1 பே. 4:3.

14 டெவின் மற்றும் ஜாஸ்மினுடைய அனுபவத்தைப் பார்க்கலாம். அவர்கள் இரண்டு பேரும் பல வருஷங்களாகப் பயங்கர குடிகாரர்களாக இருந்தார்கள். டெவின் திறமைசாலியான ஒரு கணக்கராக (bookkeeper) இருந்தபோதிலும், அவருடைய குடிப்பழக்கத்தால், ஓர் இடத்தில்கூட நிரந்தரமான வேலை கிடைக்கவில்லை. ஜாஸ்மினுடைய கோபத்தைப் பற்றியும் முரட்டுத்தனத்தைப் பற்றியும் ஊருக்கே தெரிந்திருந்தது. ஒருநாள், ஜாஸ்மின் போதையில் இருந்தபோது, ஒரு மிஷனரி தம்பதி அவரை ரோட்டில் சந்தித்தார்கள். அவரிடம் பைபிள் படிப்பைப் பற்றிச் சொன்னார்கள். ஆனால், அடுத்த வாரம் அவருடைய வீட்டுக்குப் போனபோது ஜாஸ்மினும் டெவினும் போதையில் இருந்தார்கள். அந்த மிஷனரிகள் தங்கள் வீட்டுக்கு வருவார்கள் என்று அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை. மிஷனரிகள் மறுபடியும் அவர்களுடைய வீட்டுக்குப் போனார்கள். ஆனால் இந்தத் தடவை, பைபிளைப் படிப்பதற்காக அவர்கள் இரண்டு பேரும் ஆர்வமாகக் காத்திருந்தார்கள். கற்றுக்கொண்டதைச் சீக்கிரத்தில் கடைப்பிடிக்கவும் ஆரம்பித்தார்கள். மூன்று மாதத்துக்குள் குடிப்பழக்கத்தை விட்டுவிட்டார்கள். பிறகு, சட்டப்படி திருமணமும் செய்துகொண்டார்கள். ஜாஸ்மினும் டெவினும் செய்த மாற்றம் அவர்களுடைய கிராமத்திலிருந்த நிறைய பேருக்குத் தெரியவந்தது. அதனால், அவர்களும் பைபிளைப் படிக்க ஆசைப்பட்டார்கள்.

15. சத்தியத்துக்காக நாம் செய்யும் கஷ்டமான மாற்றங்களில் ஒன்றைப் பற்றிச் சொல்லுங்கள். அது ஏன் அவ்வளவு கஷ்டமாக இருக்கிறது?

15 கடவுள் வெறுக்கும் சம்பிரதாயங்களும் பழக்கவழக்கங்களும். சில மாற்றங்களைச் செய்வது நமக்கு ரொம்பவே கஷ்டமாக இருக்கலாம். அதில் ஒன்று, யெகோவாவுக்குப் பிடிக்காத சம்பிரதாயங்களையும் பழக்கவழக்கங்களையும் விட்டுவிடுவது! இந்த பழக்கவழக்கங்களைப் பற்றி யெகோவா எப்படி உணருகிறார் என்று தெரிந்துகொண்ட பிறகும்கூட, இவற்றை விட்டுவிடுவது சிலருக்குக் கஷ்டமாக இருக்கிறது. குடும்பத்தாரும் கூடவேலை செய்பவர்களும் நண்பர்களும் என்ன நினைப்பார்களோ என்று அவர்கள் கவலைப்படுகிறார்கள். ஏனென்றால், சில சம்பிரதாயங்களோடு மக்கள் உணர்ச்சி ரீதியில் ஒன்றிவிடுகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். உதாரணத்துக்கு, இறந்துபோனவர்களுக்காகச் செய்யப்படும் சடங்குகளைச் சொல்லலாம். (உபா. 14:1) அப்படியென்றால், தேவையான மாற்றங்களைச் செய்ய எது நமக்கு உதவும்? சத்தியத்தைத் தெரிந்துகொண்ட பிறகு தங்கள் வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்த கடந்தகால ஊழியர்களுடைய உதாரணம் நமக்கு உதவும். எபேசுவிலிருந்த கிறிஸ்தவர்கள் செய்த சில மாற்றங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

16. எபேசுவிலிருந்த சிலர் என்ன செய்தார்கள்?

16 அன்றிருந்த எபேசு நகரத்தில் மாயமந்திரப் பழக்கம் பரவலாக இருந்தது. அந்தப் பழக்கத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கிறிஸ்தவர்களானபோது என்ன செய்தார்கள்? “மாயமந்திரங்கள் செய்துவந்த ஏராளமான ஆட்கள் தங்களுடைய புத்தகங்களை மொத்தமாகக் கொண்டுவந்து, எல்லாருக்கும் முன்னால் தீ வைத்துக் கொளுத்தினார்கள். அவற்றின் மதிப்பு 50,000 வெள்ளிக் காசுகள் என்று கணக்கிட்டார்கள். இப்படி, யெகோவாவின் வார்த்தை மாபெரும் விதத்தில் பரவி, தடைகளையெல்லாம் வென்றுவந்தது” என்று பைபிள் சொல்கிறது. (அப். 19:19, 20) அந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள், விலை உயர்ந்த புத்தகங்களை தீ வைத்துக் கொளுத்தக்கூட தயங்கவில்லை. இப்படிச் செய்ததற்காக யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார்.

17. (அ) சத்தியத்துக்காக நாம் எதையெல்லாம் விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கலாம்? (ஆ) அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

17 சத்தியத்துக்காக நீங்கள் எதையெல்லாம் விட்டுக்கொடுத்திருக்கிறீர்கள்? நாம் எல்லாருமே நம்முடைய நேரத்தை விட்டுக்கொடுத்திருக்கிறோம். சிலர், பணக்காரர்களாவதற்கான வாய்ப்புகளை விட்டுக்கொடுத்திருக்கிறார்கள். வேறுசிலர், தங்களுடைய உறவுகளில் ஏற்பட்ட மாற்றங்களைச் சமாளித்துவருகிறார்கள். நம்மில் நிறைய பேர், யோசிக்கும் விதத்தையும் நடந்துகொள்ளும் விதத்தையும் மாற்றியிருக்கிறோம். அதோடு, யெகோவாவுக்குப் பிடிக்காத பழக்கவழக்கங்களையும் சம்பிரதாயங்களையும் விட்டுக்கொடுத்திருக்கிறோம். நாம் விட்டுக்கொடுத்த இவை எல்லாவற்றையும்விட பைபிள் சத்தியம் அதிக மதிப்புள்ளது என்பதை நாம் உறுதியாக நம்புகிறோம். இந்தச் சத்தியம்தான் யெகோவாவோடு ஒரு நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ள உதவியிருக்கிறது. இந்தப் பந்தம்தான் வாழ்க்கையிலேயே ரொம்ப முக்கியமானது. சத்தியத்தால் நமக்குக் கிடைத்திருக்கும் ஆசீர்வாதங்களை யோசித்துப் பார்க்கும்போது, இப்பேர்ப்பட்ட சத்தியத்தை ஏன் சிலர் ‘விற்றுவிடுகிறார்கள்’ என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிவதில்லை. அவர்கள் அப்படிச் செய்வதற்கு என்ன காரணம்? அந்த மோசமான தவறைச் செய்யாதபடி நாம் எப்படிக் கவனமாக இருக்கலாம்? அடுத்த கட்டுரையில் இதைப் பற்றிப் பார்ப்போம்.

^ பாரா. 8 இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.