Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி, மக்கள் தொண்டர்களைப் பற்றி இயேசு பேசினார். யார் அவர்கள்? அந்தப் பட்டம் அவர்களுக்கு ஏன் கொடுக்கப்பட்டது?

தான் இறப்பதற்கு முந்தின நாள் ராத்திரி அப்போஸ்தலர்களுக்கு இயேசு ஓர் அறிவுரை கொடுத்தார். தங்கள் மத்தியில் முதலிடத்தைத் தேடக் கூடாது என்ற அறிவுரைதான் அது! “மற்ற தேசத்து ராஜாக்கள் மக்களை அடக்கி ஆளுகிறார்கள், மக்கள்மேல் அதிகாரம் உள்ளவர்கள் ‘மக்கள் தொண்டர்கள்’ என்று அழைக்கப்படுகிறார்கள். நீங்களோ அப்படி இருக்கக் கூடாது” என்று சொன்னார்.—லூக். 22:25, 26.

மக்கள் தொண்டர்கள் என்று சொன்னபோது, யாரைப் பற்றி இயேசு குறிப்பிட்டார்? பிரபலமான ஆட்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் யூயர்ஜடிஸ் அல்லது மக்கள் தொண்டர்கள் என்ற பட்டம் கொடுப்பது, கிரேக்க மற்றும் ரோம சமுதாயத்தில் வழக்கமாக இருந்ததை கல்வெட்டுகளும் நாணயங்களும் பழங்கால எழுத்துகளும் காட்டுகின்றன. மக்களுக்குப் பிரயோஜனம் தரும் விதத்தில் பொது சேவை செய்ததற்காக அந்தப் பட்டம் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.

நிறைய ராஜாக்கள் இந்தப் பட்டத்தைப் பெற்றிருந்தார்கள். அவர்களில் சிலர்: எகிப்திய மன்னர்களான தாலமி III யூயர்ஜடிஸ் (ஏறக்குறைய கி.மு. 247-222), தாலமி VIII யூயர்ஜடிஸ் II (ஏறக்குறைய கி.மு. 147-117). ரோம அரசர்களான ஜூலியஸ் சீசர் (கி.மு. 48-44), அகஸ்து (கி.மு. 31-கி.பி. 14). இவர்களைப் போலவே யூதேயாவின் ஆட்சியாளரான மகா ஏரோதுவும் அந்தப் பட்டத்தைப் பெற்றிருந்தார். பஞ்சத்தில் தவித்த மக்களுக்கு கோதுமையை இறக்குமதி செய்து கொடுத்ததன் மூலமும், ஏழைகளுக்கு துணிமணி கொடுத்ததன் மூலமும் மகா ஏரோது அந்தப் பட்டத்தைச் சம்பாதித்தார்.

மக்கள் தொண்டர்கள் என்ற இந்தப் பட்டம் ரொம்பப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது என்று ஜெர்மனியைச் சேர்ந்த அடால்ப் டீஸ்மன் என்ற பைபிள் அறிஞர் குறிப்பிடுகிறார். “கல்வெட்டுகளில், நூறுக்கும் அதிகமான இடங்களில் [இந்தப் பட்டப்பெயர்] குறிப்பிடப்பட்டிருப்பதை கொஞ்ச நேரத்திலேயே கண்டுபிடித்துவிடலாம்” என்று அவர் சொன்னார்.

“நீங்களோ அப்படி இருக்கக் கூடாது” என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னபோது, அவர் எதை மனதில் வைத்திருந்தார்? பொது சேவை செய்யக் கூடாதென்று, அதாவது பொது மக்கள்மீது எந்த அக்கறையையும் காட்டக் கூடாதென்று, இயேசு சொன்னாரா? இல்லவே இல்லை! எந்த உள்நோக்கத்தோடு தாராள குணத்தைக் காட்டுகிறோம் என்பதைப் பற்றித்தான் இயேசு சொன்னதாகத் தெரிகிறது.

இயேசுவின் காலத்தில் வாழ்ந்த செல்வந்தர்கள் தங்களுக்கென்று ஒரு நல்ல பெயரைச் சம்பாதித்துக்கொள்ள வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். அதற்காக, அரங்கங்களில் சில காட்சிகளையும் விளையாட்டுப் போட்டிகளையும் நடத்தினார்கள். அதோடு, பூங்காக்களை அமைத்தார்கள், கோயில்களைக் கட்டினார்கள்; இதுபோன்ற மற்ற சேவைகளையும் ஆதரித்தார்கள். பேர் புகழையும் மக்களின் வாக்குகளையும் சம்பாதிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அவர்கள் இப்படிச் செய்தார்கள். “இப்படிப்பட்டவர்களில் சிலர் நல்ல எண்ணத்தோடு தாராள குணத்தைக் காட்டியது உண்மைதான். . . . இருந்தாலும், பெரும்பாலான சமயங்களில் அரசியல் செல்வாக்கைச் சம்பாதிக்கும் எண்ணத்தோடுதான் இப்படிப்பட்ட செயல்கள் செய்யப்பட்டன” என்று ஓர் ஆராய்ச்சி குறிப்பு சொல்கிறது. இப்படிப்பட்ட லட்சிய வெறியையும் சுயநலமான எண்ணத்தையும் தவிர்க்க வேண்டும் என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார்.

சரியான உள்நோக்கத்தோடு தாராள குணத்தைக் காட்ட வேண்டும் என்ற இந்த முக்கியமான குறிப்பை அப்போஸ்தலன் பவுலும் சில வருஷங்களுக்குப் பிறகு சொன்னார். “ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும் அல்ல, கட்டாயமாகவும் அல்ல, தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்” என்று கொரிந்துவில் இருந்த சக கிறிஸ்தவர்களுக்கு அவர் எழுதினார்.—2 கொ. 9:7.