Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

யெகோவாவைப் போல் நீங்கள் யோசிக்கிறீர்களா?

யெகோவாவைப் போல் நீங்கள் யோசிக்கிறீர்களா?

“நீங்கள் யோசிக்கும் விதத்தை மாற்றுவதன் மூலம் உங்களையே மாற்றிக்கொள்ளுங்கள்.”—ரோ. 12:2.

பாடல்கள்: 64, 125

1, 2. நாம் தொடர்ந்து முன்னேற முன்னேற, என்ன செய்ய கற்றுக்கொள்கிறோம்? ஓர் உதாரணம் கொடுங்கள்.

இதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ஒரு சின்னப் பிள்ளைக்கு ஒரு நபர் பரிசு கொடுக்கிறார். “நன்றி சொல்லு!” என்று அந்தப் பிள்ளையின் அப்பா அம்மா சொல்கிறார்கள். அந்தப் பிள்ளையும் நன்றி சொல்கிறது. தன்னுடைய அப்பா அம்மா சொன்னதால்தான் அந்தப் பிள்ளை நன்றி சொல்கிறது. ஆனால் வளர வளர, மற்றவர்களுக்கு நன்றியோடு இருப்பது முக்கியம் என்று அப்பா அம்மா ஏன் நினைக்கிறார்கள் என்பதை அந்தப் பிள்ளை புரிந்துகொள்கிறது. வளர்ந்த பிறகு, தானாகவே மற்றவர்களுக்கு நன்றி சொல்கிறது. ஏனென்றால், நன்றியோடு இருக்க அந்தப் பிள்ளை கற்றுக்கொண்டது!

2 இதேபோன்ற ஒரு விஷயம்தான் நமக்கும் நடக்கிறது. சத்தியத்தைப் பற்றித் தெரிந்துகொண்ட புதிதில், யெகோவா கொடுத்திருக்கும் அடிப்படைச் சட்டங்களுக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம் என்பதைத் தெரிந்துகொண்டோம். ஆனால் தொடர்ந்து முன்னேற முன்னேற, அவருடைய யோசனைகளைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம். அதாவது, அவருக்கு எது பிடிக்கும்... எது பிடிக்காது... ஒவ்வொரு விஷயத்தையும் அவர் எப்படிப் பார்க்கிறார்... போன்றவற்றைப் பற்றித் தெரிந்துகொள்கிறோம். நம்முடைய முடிவுகளிலும் செயல்களிலும் யெகோவாவின் யோசனைகள் நம்மை வழிநடத்துவதற்கு அனுமதித்தால், அவரைப் போலவே நாம் யோசிக்கிறோம் என்று சொல்ல முடியும்.

3. யெகோவாவைப் போலவே யோசிப்பது சிலசமயங்களில் ஏன் கஷ்டமாக இருக்கிறது?

3 யெகோவாவைப் போல் யோசிக்கக் கற்றுக்கொள்வது நமக்குப் பிடித்திருந்தாலும், நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், அவரைப் போலவே யோசிப்பது சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ஒழுக்க ரீதியில் சுத்தமாக இருப்பது... பொருளாசை... பிரசங்க வேலை... இரத்தத்தைத் தவறாகப் பயன்படுத்துவது... போன்ற விஷயங்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பது நமக்குத் தெரியும். இருந்தாலும், அவர் ஏன் அப்படி நினைக்கிறார் என்பதைப் புரிந்துகொள்வது நமக்கு ஒருவேளை கஷ்டமாக இருக்கலாம். அப்படியென்றால், யெகோவாவைப் போலவே யோசிப்பதில் முன்னேறிக்கொண்டே இருக்க நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்? இப்படிக் கற்றுக்கொள்வது, இப்போதும் எதிர்காலத்திலும் சரியானதைச் செய்ய நமக்கு எப்படி உதவும்?

நாம் எப்படி யெகோவாவைப் போலவே யோசிக்கலாம்?

4. ‘யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள’ நாம் என்ன செய்ய வேண்டும்?

4 ரோமர் 12:2-ஐ வாசியுங்கள். ஒவ்வொரு விஷயத்தையும் யெகோவா பார்ப்பதுபோல் பார்ப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் இந்த வசனத்தில் விளக்கியிருக்கிறார். “இந்த உலகத்தின் பாணியைப் பின்பற்றுவதை நிறுத்துங்கள்” என்று அவர் சொன்னார். இதைச் செய்வதற்கு, உலக யோசனைகளையும் அதன் மனப்பான்மையையும் நாம் ஒதுக்கித்தள்ள வேண்டும் என்று முந்தின கட்டுரையில் பார்த்தோம். ‘யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ளுங்கள்’ என்றும் பவுல் சொன்னார். இதைச் செய்வதற்கு, நாம் பைபிளைப் படித்து யெகோவாவின் யோசனைகளைப் புரிந்துகொள்ள வேண்டும். பிறகு, அதைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும். அதோடு, அவரைப் போலவே யோசிக்கக் கடினமாக உழைக்க வேண்டும்.

5. வெறுமனே வாசிப்பதற்கும் படிப்பதற்கும் இருக்கிற வித்தியாசத்தை விளக்குங்கள்.

5 படிப்பது என்றால் வெறுமனே தகவல்களை கடகடவென வாசிப்பதோ பதில்களைக் கோடிடுவதோ அல்ல! யெகோவா எப்படிப்பட்டவர்... அவர் என்ன செய்கிறார்... அவர் எப்படி யோசிக்கிறார்... என்றெல்லாம் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு விஷயத்தைச் செய்யலாம் என்றும், இன்னொரு விஷயத்தைச் செய்யக் கூடாது என்றும் யெகோவா ஏன் சொல்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலும் யோசனைகளிலும் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒவ்வொரு முறை பைபிளைப் படிக்கும்போதும் இந்த எல்லா குறிப்புகளையும் ஆழமாகச் சிந்திக்க முடியாது என்பது உண்மைதான். இருந்தாலும், நிறைய நேரம் எடுத்து ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பது நல்லது. ஒருவேளை, படிப்பதற்காக ஒதுக்கிய நேரத்தில் பாதி நேரத்தையாவது படித்ததைப் பற்றி ஆழமாகச் சிந்தித்துப் பார்க்க ஒதுக்கலாம்.—சங். 119:97; 1 தீ. 4:15.

6. யெகோவாவின் யோசனைகளைப் பற்றி ஆழமாகச் சிந்திக்கும்போது நாம் எதைப் புரிந்துகொள்வோம்?

6 கடவுளுடைய வார்த்தையைத் தவறாமல் யோசித்துப் பார்க்கும்போது அற்புதமான ஒரு விஷயம் நடக்கிறது. அதாவது, யெகோவாவின் யோசனைகள் பரிபூரணமானவை என்பதை நமக்கு நாமே நிச்சயப்படுத்திக்கொள்ள முடிகிறது. தொடர்ந்து ஆழமாக யோசிக்கும்போது, யெகோவா ஒவ்வொரு விஷயத்தையும் எப்படிப் பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொள்வோம்; நாட்கள் போகப்போக, அவர் யோசிக்கும் விதம்தான் சரி என்பதை நாம் ஒத்துக்கொள்வோம். இப்படி, நாம் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொண்டு புது விதத்தில் யோசிக்க ஆரம்பிப்போம். கொஞ்சம் கொஞ்சமாக யெகோவாவைப் போலவே யோசிக்க ஆரம்பிப்போம்.

நம்முடைய யோசனைகளுக்கும் செயல்களுக்கும் இருக்கும் சம்பந்தம்

7, 8. (அ) பொருள் செல்வங்களை யெகோவா எப்படிப் பார்க்கிறார்? (ஆரம்பப் படங்கள்) (ஆ) பொருள் செல்வங்களை யெகோவா பார்ப்பதுபோல் பார்த்தால், நம் வாழ்க்கையில் எது மிக முக்கியமானதாக இருக்கும்?

7 நம்முடைய யோசனைகள் நம்முடைய செயல்களைப் பாதிக்கின்றன. (மாற். 7:21-23; யாக். 2:17) இந்த விஷயத்தைப் புரிந்துகொள்ள சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம். முதல் உதாரணம்: இயேசுவின் பிறப்பைப் பற்றிய பதிவு. பொருள் செல்வங்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்ள இந்தப் பதிவு உதவும். யோசேப்பும் மரியாளும் பணக்காரர்களாக இல்லாதபோதிலும், தன்னுடைய மகனை வளர்க்க அவர்களைத்தான் யெகோவா தேர்ந்தெடுத்தார். (லேவி. 12:8; லூக். 2:24) இயேசு பிறந்தபோது, மரியாள் அவரை “தீவனத் தொட்டியில் படுக்க வைத்தாள்; ஏனென்றால், சத்திரத்தில் அவர்களுக்கு இடம் கிடைக்கவில்லை.” (லூக். 2:7) யெகோவா நினைத்திருந்தால், இன்னும் நல்ல இடத்தில் இயேசு பிறக்கும்படி செய்திருக்கலாம். ஆனால், கடவுளுடைய வணக்கத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கிற ஒரு குடும்பத்தில்தான் இயேசு வளர்க்கப்பட வேண்டும் என்று அவர் நினைத்தார். அதுதான் அவருக்கு ரொம்ப முக்கியமானதாக இருந்தது.

8 இந்தப் பதிவிலிருந்து பொருள் செல்வங்களை யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. சில பெற்றோர்கள், யெகோவாவோடு தங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் பந்தத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, தங்கள் பிள்ளைகள் வசதியாக வாழ வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஆனால், யெகோவா என்ன நினைக்கிறார்? மனிதர்கள் தன்னோடு வைத்துக்கொள்ளும் பந்தத்தைத்தான் மிகவும் முக்கியமானதாக நினைக்கிறார். இந்த விஷயத்தில் யெகோவாவின் யோசனைகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? அதை உங்களுடைய செயல்களில் காட்டுகிறீர்களா?எபிரெயர் 13:5-ஐ வாசியுங்கள்.

9, 10. பாவம் செய்யும்படி மற்றவர்களைத் தூண்டுவதை யெகோவா எப்படிப் பார்க்கிறாரோ, அதேபோல் நாமும் பார்க்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?

9 இரண்டாவது உதாரணம்: மற்றவர்களை பாவம் செய்யத் தூண்டுகிறவர்களைப் பற்றிய யெகோவாவின் கண்ணோட்டம். “என்மேல் விசுவாசம் வைக்கிற இந்தச் சிறியவர்களில் ஒருவரை யாராவது பாவம் செய்ய வைத்தால், மாவு அரைக்கும் ஒரு பெரிய கல்லை அவனுடைய கழுத்தில் கட்டி, கடலில் தள்ளிவிடுவதே அவனுக்கு நல்லது” என்று இயேசு சொன்னார். (மாற். 9:42) இது எவ்வளவு வலிமையான வார்த்தைகள்! இயேசு தன்னுடைய அப்பாவைப் போலவே இருந்தார் என்பது நமக்குத் தெரியும். இதிலிருந்து ஒரு விஷயம் புரிகிறது. அதாவது, இயேசுவின் சீஷர்களைப் பாவம் செய்யத் தூண்டுகிறவர்களை யெகோவாவுக்குச் சுத்தமாகப் பிடிக்காது.—யோவா. 14:9.

10 பாவம் செய்யும்படி மற்றவர்களைத் தூண்டுவதை யெகோவாவும் இயேசுவும் எப்படிப் பார்க்கிறார்களோ, அதேபோல் நாமும் பார்க்கிறோமா? அது நம்முடைய செயல்களில் தெளிவாகத் தெரிகிறதா? உதாரணத்துக்கு, நாம் உடை உடுத்தும் விதமும் முடி அலங்காரம் செய்யும் விதமும் நமக்கு ரொம்பப் பிடித்திருக்கலாம். ஆனால், சபையிலிருக்கும் சிலருக்கு அது பிடிக்கவில்லை என்றாலோ, மற்றவர்களுடைய மனதில் ஒழுக்கங்கெட்ட ஆசைகளை விதைத்தாலோ என்ன செய்வது? நம்முடைய விருப்பங்களை விட்டுக்கொடுக்க, சகோதரர்கள்மேல் இருக்கும் அன்பு நம்மைத் தூண்டுமா?—1 தீ. 2:9, 10.

11, 12. யெகோவா வெறுக்கிற காரியங்களை வெறுக்கக் கற்றுக்கொள்வதன் மூலமும் சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வதன் மூலமும் நம்மை நாமே எப்படிப் பாதுகாத்துக்கொள்ளலாம்?

11 மூன்றாவது உதாரணம்: அக்கிரமத்தை யெகோவா வெறுக்கிறார். (ஏசா. 61:8) நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால், சரியானதைச் செய்வது சிலசமயங்களில் நமக்குக் கஷ்டம் என்பது யெகோவாவுக்குத் தெரியும். இருந்தாலும், அவரைப் போலவே நாமும் கெட்டதை வெறுக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். (சங்கீதம் 97:10-ஐ வாசியுங்கள்.) யெகோவா ஏன் கெட்டதை வெறுக்கிறார் என்பதற்கான காரணத்தை நாம் ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால், அவரைப் போலவே நம்மால் யோசிக்க முடியும். அதோடு, கெட்ட காரியங்களைச் செய்யாமல் இருப்பதற்குத் தேவையான பலமும் கிடைக்கும்.

12 கெட்டதை வெறுக்க நாம் கற்றுக்கொண்டால், பைபிளில் நேரடியாகச் சொல்லப்படாத தவறான பழக்கங்களையும் நம்மால் அடையாளம் கண்டுகொள்ள முடியும். ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம். அரை நிர்வாணத்தோடு நடனம் ஆடுவது இன்று உலகில் சகஜமாகிக்கொண்டே வருகிறது. இது மற்றவர்களோடு செக்ஸ் வைத்துக்கொள்வதைப் போல் கிடையாது என்றும், அதனால், இதில் எந்தத் தவறுமில்லை என்றும் சிலர் நினைக்கிறார்கள். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) ஆனால், யெகோவாவும் அப்படித்தான் நினைக்கிறாரா? எல்லா விதமான கெட்ட காரியங்களையும் அவர் வெறுக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள்! சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வதன் மூலமும் யெகோவா வெறுக்கிற காரியங்களை வெறுப்பதன் மூலமும், கெட்ட விஷயங்களின் பக்கத்தில்கூட போகாதபடி நாம் பார்த்துக்கொள்ளலாம்.—ரோ. 12:9.

இப்போதே யோசியுங்கள்!

13. ஒவ்வொரு விஷயத்தையும் யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்பதை இப்போதே தெரிந்துகொள்வது ஏன் முக்கியம்?

13 நாம் பைபிளைப் படிக்கும்போது, யெகோவா ஒரு விஷயத்தை எப்படிப் பார்க்கிறார் என்பதைப் பற்றி நன்றாக யோசித்துப் பார்க்க வேண்டும். நல்ல முடிவுகள் எடுக்க அது உதவும். திடீரென்று முடிவெடுக்க வேண்டிய ஒரு சூழ்நிலை வரும்போது, என்ன செய்வதென்று தெரியாமல் திணற மாட்டோம். (நீதி. 22:3) பைபிளிலிருக்கும் சில உதாரணங்களை இப்போது பார்க்கலாம்.

14. யோசேப்பு நடந்துகொண்ட விதத்திலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 யோசேப்பை தன் வலையில் விழவைக்க போத்திபாரின் மனைவி முயற்சி செய்தபோது, அவளை விட்டு அவர் ஓடிப்போனார். திருமண பந்தத்தை யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்பதை யோசேப்பு முன்கூட்டியே ஆழமாகச் சிந்தித்துப் பார்த்திருப்பார். (ஆதியாகமம் 39:8, 9-ஐ வாசியுங்கள்.) அதனால்தான், “நான் எப்படி இவ்வளவு பெரிய தவறு செய்து, கடவுளுக்கு விரோதமாகப் பாவம் பண்ணுவேன்?” என்று யோசேப்பால் சொல்ல முடிந்தது. யெகோவாவைப் போலவே அவரும் யோசித்திருக்கிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. நாம் எப்படி யோசிக்கிறோம்? கூடவேலை செய்யும் ஒருவர் உங்களுக்கு காதல் வலை வீசினால் என்ன செய்வீர்கள்? ஆபாசமான ஒரு மெசேஜையோ ஃபோட்டோவையோ யாராவது ஒருவர் உங்கள் செல்போனுக்கு அனுப்பினால் என்ன செய்வீர்கள்? * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) இதுபோன்ற விஷயங்களை யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்பதைப் பற்றி முன்கூட்டியே தெரிந்துகொண்டு, அவரைப் போலவே யோசிக்க நீங்கள் பழகியிருந்தால், உண்மையாக இருப்பது உங்களுக்குச் சுலபமாக இருக்கும்.

15. மூன்று எபிரெய வாலிபர்களைப் போல நாமும் எப்படி யெகோவாவுக்கு உண்மையோடு இருக்கலாம்?

15 மூன்று எபிரெய வாலிபர்களான சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவின் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். ஒரு தங்கச் சிலையை வணங்கும்படி நேபுகாத்நேச்சார் ராஜா அவர்களுக்குக் கட்டளையிட்டான். ஆனால், முடியாது என்று அவர்கள் உறுதியாகச் சொன்னார்கள். யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால் என்ன நடக்கும் என்பதைப் பற்றி அவர்கள் முன்கூட்டியே யோசித்திருந்ததை அவர்களுடைய தெளிவான பதில் காட்டியது. (யாத். 20:4, 5; தானி. 3:4-6, 12, 16-18) நம்மைப் பற்றி என்ன சொல்லலாம்? பொய் மதத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு பண்டிகைக்காகப் பணம் கொடுக்கும்படி உங்கள் முதலாளி சொன்னால் என்ன செய்வீர்கள்? இதுபோன்ற ஒரு சூழ்நிலை வரும்வரை காத்திருப்பதற்குப் பதிலாக, அதையெல்லாம் யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்பதைப் பற்றி இப்போதே ஆழமாக யோசிப்பது நல்லது. அப்படிச் செய்தால்தான், எதிர்காலத்தில் இதுபோன்ற சூழ்நிலைகள் வரும்போது, நாம் என்ன செய்ய வேண்டும், என்ன சொல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருப்போம்; அந்த எபிரெய வாலிபர்களைப் போலவே நடந்துகொள்வோம்.

ஆராய்ச்சி செய்வது... சட்டப்பூர்வ மருத்துவ ஆவணத்தைப் பூர்த்தி செய்வது... டாக்டரிடம் பேசுவது... இவற்றையெல்லாம் செய்துவிட்டீர்களா? (பாரா 16)

16. யெகோவாவின் யோசனைகளைச் சரியாகப் புரிந்துகொள்வது, அவசர சிகிச்சை தேவைப்படும் சூழ்நிலையைச் சந்திக்க நமக்கு எப்படி உதவும்?

16 யெகோவாவின் யோசனைகளைப் பற்றி முன்கூட்டியே ஆழமாகச் சிந்திக்கும்போது, அவசர சிகிச்சை தேவைப்படும் சூழ்நிலையிலும் நம்மால் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க முடியும். இரத்தத்தையும் அதன் நான்கு முக்கியப் பாகங்களையும் ஏற்றிக்கொள்ளக் கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்பது உண்மைதான். (அப். 15:28, 29) ஆனால், இரத்தத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் வேறுசில சிகிச்சைகளைப் பற்றி என்ன சொல்லலாம்? அவற்றை ஏற்றுக்கொள்ளலாமா வேண்டாமா என்பதை ஒவ்வொரு கிறிஸ்தவரும் பைபிள் நியமங்களின்படி முடிவெடுக்க வேண்டும். அப்படிப்பட்ட முடிவுகளை எப்போது எடுக்க வேண்டும்? மருத்துவமனையில் வலியில் துடித்துக்கொண்டிருக்கும்போதா? அல்லது, அவசரமாக ஒரு முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும்போதா? இல்லை, இப்போதே முடிவெடுக்க வேண்டும்! ஆராய்ச்சி செய்வதற்கும், எந்தச் சிகிச்சையை ஏற்றுக்கொள்கிறோம் என்பதை விளக்குகிற சட்டப்பூர்வ மருத்துவ ஆவணத்தைப் பூர்த்தி செய்வதற்கும், டாக்டரிடம் பேசுவதற்கும் இதுதான் சரியான நேரம்! * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.)

17-19. ஒவ்வொரு விஷயத்தையும் யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்று இப்போதே யோசிப்பது ஏன் முக்கியம்? ஓர் உதாரணம் கொடுங்கள்.

17 “எஜமானே, இந்தக் கஷ்டங்கள் உங்களுக்கு வேண்டாம்!” என்று பேதுரு சொன்னபோது, இயேசு என்ன செய்தார்? ஞானமற்ற அந்த ஆலோசனையை உடனடியாக ஒதுக்கித்தள்ளினார். தான் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார் என்பதைப் பற்றியும், தன்னுடைய வாழ்க்கை மற்றும் மரணத்தைப் பற்றிச் சொல்லப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்களைப் பற்றியும் இயேசு ஆழமாக யோசித்துப் பார்த்திருப்பார் என்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படி யோசித்துப் பார்த்தது, யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதற்கும், தன்னுடைய உயிரைத் தியாகம் செய்வதற்கும் தேவையான பலத்தை இயேசுவுக்குக் கொடுத்தது.மத்தேயு 16:21-23-ஐ வாசியுங்கள்.

18 இன்று, தன்னுடைய நண்பர்களாக நாம் ஆகவேண்டும் என்றும், நல்ல செய்தியைப் பிரசங்கிக்க நம்மால் முடிந்த சிறந்ததைச் செய்ய வேண்டும் என்றும் யெகோவா ஆசைப்படுகிறார். (மத். 6:33; 28:19, 20; யாக். 4:8) ஆனால், அப்படிச் செய்யாதபடி சிலர் நம்மைத் தடுக்கலாம். ஒருவேளை, இயேசுவிடம் பேதுரு நடந்துகொண்டதைப் போல, நல்ல எண்ணத்தோடு அவர்கள் அப்படிச் செய்யலாம். உதாரணத்துக்கு, உங்களுடைய சம்பளத்தை உயர்த்துவதாக உங்கள் முதலாளி சொல்லலாம். ஆனால், நீங்கள் அதிக நேரம் வேலை செய்ய வேண்டியிருக்கும் என்பதும், ஊழியத்துக்காகவும் கூட்டங்களுக்காகவும் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்பதும் உங்களுக்குத் தெரியவருகிறது. இப்போது என்ன செய்வீர்கள்? அல்லது, உங்கள் அப்பா அம்மாவை விட்டு, தூரமாகப் போய் படிக்கிற வாய்ப்பை உங்களுக்குக் கொடுப்பதாக உங்கள் ஆசிரியர் சொல்கிறார். இப்போது என்ன செய்வீர்கள்? முடிவெடுப்பதற்கு முன், யெகோவாவிடம் ஜெபம் செய்வது... ஆராய்ச்சி செய்வது... குடும்பத்தாரிடமோ மூப்பர்களிடமோ பேசுவது... இவற்றையெல்லாம் செய்வது முக்கியம், இல்லையா? இதுபோன்ற விஷயங்களைப் பற்றி யெகோவா என்ன நினைக்கிறார் என்று இப்போதே யோசிப்பதும், அவரைப் போலவே யோசிக்கக் கற்றுக்கொள்வதும் நல்லது. அப்படிச் செய்தால், இதுபோன்ற அழைப்புகள் உங்களைத் தேடி வரும்போது, அவை உங்களுக்கு ஒரு பெரிய சோதனையாக இருக்காது. ஏனென்றால், யெகோவாவுக்குச் சேவை செய்வதில் கவனமாக இருக்க வேண்டும் என்று ஏற்கெனவே நீங்கள் முடிவெடுத்துவிட்டதால், என்ன செய்ய வேண்டும் என்பதில் உங்களுக்குக் குழப்பமே இருக்காது.

19 யெகோவாவுக்கு உண்மையாக இருக்கிறீர்களா என்பதைச் சோதிக்கிற சந்தர்ப்பங்கள் திடீரென்று வரலாம். அதைப் பற்றியும் நீங்கள் யோசித்துப் பாருங்கள். ஒவ்வொரு சூழ்நிலைக்கும் நம்மால் தயாராக இருக்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், தனிப்பட்ட படிப்பின்போது, யெகோவாவுடைய யோசனைகளை ஆழமாகச் சிந்தித்துப் பார்ப்பதற்கு நேரம் ஒதுக்கினால், கற்றுக்கொண்டவை நம் ஞாபகத்துக்கு வர வாய்ப்பிருக்கிறது. அதோடு, எப்படிப்பட்ட சூழ்நிலை வந்தாலும் கற்றுக்கொண்டவற்றை எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்று தெரிந்துகொள்வோம். அதனால், பைபிளையோ பிரசுரங்களையோ படிக்கும்போது, ஒவ்வொரு விஷயத்தையும் யெகோவா எப்படிப் பார்க்கிறார் என்று யோசித்துப் பார்க்கலாம். அவரைப் போலவே யோசிக்கக் கற்றுக்கொள்ளலாம். இப்போதும் எதிர்காலத்திலும் ஞானமான முடிவுகள் எடுப்பதற்கு இவை எப்படி உதவும் என்றும் யோசிக்கலாம்.

யெகோவாவின் யோசனைகளும் உங்கள் எதிர்காலமும்

20, 21. (அ) நமக்கிருக்கும் சுதந்திரத்தைப் புதிய உலகத்தில் சந்தோஷமாக அனுபவிக்க முடியும் என்று ஏன் சொல்லலாம்? (ஆ) இப்போதே நாம் எப்படிச் சந்தோஷத்தை அனுபவிக்கலாம்?

20 புதிய உலகத்துக்காக நாம் காத்துக்கொண்டிருக்கிறோம். நம்மில் பெரும்பாலானவர்களுக்கு, இந்தப் பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கை இருக்கிறது. இப்போது அனுபவிக்கிற எல்லா விதமான வேதனைகளிலிருந்தும் கடவுளுடைய அரசாங்கத்தில் நமக்கு விடுதலை கிடைக்கும். நம்முடைய ஆசைகளின்படி முடிவெடுக்கிற சுதந்திரத்தை அப்போதும் நாம் அனுபவிப்போம்.

21 அதற்காக நம்முடைய சுதந்திரத்துக்கு வரம்பே இல்லையென்று அர்த்தம் கிடையாது. அப்போதும், யெகோவாவுடைய சட்டங்களையும் யோசனைகளையும் மனதில் வைத்துதான் தாழ்மையானவர்கள் தீர்மானங்களை எடுப்பார்கள். அதன் மூலம், அளவில்லாத சமாதானத்தையும் முடிவில்லாத சந்தோஷத்தையும் அனுபவிப்பார்கள். (சங். 37:11) அந்தக் காலம் வரும்வரை, யெகோவாவைப் போலவே நாம் யோசித்தால், சந்தோஷத்தை அனுபவிக்கலாம்.

^ பாரா. 12 சில விதமான நடன நிகழ்ச்சிகளில், நடனம் ஆடுபவர்கள், அரை நிர்வாணத்தோடு பார்வையாளரின் மடியில் உட்கார்ந்துகொண்டு, ஆபாசமான அசைவுகளைச் செய்கிறார்கள். அதுபோன்ற நிகழ்ச்சியில் கிறிஸ்தவர் ஒருவர் கலந்துகொண்டால், அங்கே என்ன நடந்தது என்பதைப் பொறுத்து, அது பாலியல் முறைகேடாகக் கருதப்படலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் மூப்பர்கள் நீதி விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும். ஒரு கிறிஸ்தவர் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட்டிருந்தால் மூப்பர்களிடம் உதவி கேட்க வேண்டும்.—யாக். 5:14, 15.

^ பாரா. 14 பாலியல் ஆசைகளைத் தூண்டுகிற மெசேஜ்களை, ஃபோட்டோக்களை அல்லது வீடியோக்களை செல்போன்களில் அனுப்புவது செக்ஸ்டிங் என்று அழைக்கப்படுகிறது. உண்மையில் என்ன நடந்தது என்பதைப் பொறுத்து, அதில் ஈடுபட்டவர்கள்மீது மூப்பர்கள் நீதி விசாரணைக் குழுவை அமைக்கலாம். சிலசமயங்களில், செக்ஸ்டிங்கில் ஈடுபட்ட டீனேஜ் பிள்ளைகள்மீது அரசாங்க அதிகாரிகள் பாலியல் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். செக்ஸ்டிங் பற்றி கூடுதலான தகவலைத் தெரிந்துகொள்ள, jw.org வெப்சைட்டில், “இளைஞர்கள் கேட்கும் கேள்விகள்—செக்ஸ்டிங் பற்றி நான் என்ன தெரிந்து வைத்திருக்க வேண்டும்?” என்ற கட்டுரையை வாசியுங்கள். (பைபிள் போதனைகள் > டீனேஜர்கள் பகுதியைப் பாருங்கள்.) அல்லது, ஜனவரி 2014, விழித்தெழு! பத்திரிகையில் பக்கங்கள் 4-5-ல் இருக்கிற “செல்போன் ஆபாசம்! பிள்ளையை எச்சரிப்பது எப்படி?” என்ற கட்டுரையைப் பாருங்கள்.

^ பாரா. 16 நமக்கு உதவுகிற பைபிள் நியமங்களைத் தெரிந்துகொள்ள, கடவுளுடைய அன்பில் நிலைத்திருங்கள் என்ற புத்தகத்தில், பக்கங்கள் 245-248-ஐப் பாருங்கள்.