Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

ஒனேசிமேவும் ஸெரால்டினேவும்

சொந்த நாட்டுக்குத் திரும்பியவர்களுக்கு சொல்ல முடியாத ஆசீர்வாதங்கள்!

சொந்த நாட்டுக்குத் திரும்பியவர்களுக்கு சொல்ல முடியாத ஆசீர்வாதங்கள்!

வளரும் நாடுகளிலிருந்து மேற்கத்திய நாடுகளுக்குக் குடிமாறிப் போன சகோதர சகோதரிகள் நிறைய பேர், தங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிவந்திருக்கிறார்கள். யெகோவாமீதும் மற்றவர்கள்மீதும் இருக்கிற அன்புதான், தேவை அதிகமுள்ள தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிவர அவர்களைத் தூண்டியிருக்கிறது. (மத். 22:37-39) அவர்கள் என்ன தியாகங்களைச் செய்ய வேண்டியிருந்தது? என்ன பலன்கள் அவர்களுக்குக் கிடைத்தன? இதைத் தெரிந்துகொள்ள, மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கிற கேமரூனுக்குத் திரும்பிவந்தவர்களின் அனுபவங்களைக் கேட்கலாம் வாருங்கள்!

“மீன்கள் அதிகமா கிடைக்கிற இடத்துலதான்” நான் இருக்குறேன்

1998-ல், சகோதரர் ஒனேசிமே, கேமரூனிலிருந்து வெளிநாட்டுக்குக் குடிமாறிப் போனார். அங்கே 14 வருஷங்கள் வாழ்ந்தார். ஒருநாள், சபைக் கூட்டத்தில் ஒரு சகோதரர் பேச்சு கொடுத்துக்கொண்டிருந்தபோது, பிரசங்க வேலையைப் பற்றி ஓர் உதாரணத்தைச் சொன்னார். “ரெண்டு நண்பர்கள் வேற வேற இடத்துல மீன் பிடிச்சிட்டு இருக்காங்க. ஒருத்தருக்கு நிறைய மீன் கிடைக்குது. இன்னொருத்தருக்கு குறைவா கிடைக்குது. இப்போ, குறைவா மீன் பிடிச்சிட்டு இருக்கிறவரு அதிகமா மீன் கிடைக்கிற இடத்துக்கு போகணும்னு நினைப்பாரு, இல்லையா?” என்று அந்தச் சகோதரர் கேட்டிருக்கிறார்.

இந்த உதாரணம், ஒனேசிமேவை யோசிக்கவைத்தது. தன்னுடைய சொந்த நாட்டில் தேவை அதிகம் இருப்பதால், அங்கே போய் ஊழியம் செய்ய வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு வந்தது. ஆனால், ‘இவ்வளவு நாள் வெளிநாட்டுல இருந்துட்டு, இப்போ என்னால அங்க போய் வாழ முடியுமா?’ என்று அவர் யோசித்தார். அதனால், 6 மாதங்களுக்கு அங்கே போய் ஊழியம் செய்துபார்த்தார். பிறகு, 2012-ல் அங்கேயே குடிமாறிப் போனார்.

“அங்க வெயில் அதிகமா இருந்துச்சு. அவ்வளவா வசதிகளும் இல்ல. இவ்வளவு நாளா, ராஜ்ய மன்றத்துல சொகுசான இருக்கைகள்ல உட்கார்ந்து கூட்டங்கள கவனிச்சிட்டு, இப்போ பெஞ்சுல உட்கார்ந்து கவனிக்கிறது கஷ்டமா இருந்துச்சு. ஆனா, கூட்டங்கள்ல சொல்லப்படுற விஷயங்கள்மேல கவனமா இருந்தப்போ, அதெல்லாம் பெரிசாவே தெரியல” என்று ஒனேசிமே புன்னகையோடு சொல்கிறார்.

2013-ல், ஸெரால்டினே என்ற சகோதரியை ஒனேசிமே கல்யாணம் செய்தார். ஸெரால்டினே, 9 வருஷங்கள் பிரான்சில் இருந்துவிட்டு கேமரூனுக்குக் குடிமாறி வந்திருந்தார். யெகோவாவின் சேவையைச் செய்வதற்கு இவர்கள் முதலிடம் தந்ததால் என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தன? “நாங்க ரெண்டு பேரும் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில கலந்துக்கிட்டோம். இப்போ, பெத்தேல்ல சேவை செய்றோம். எங்க சபையில, ஒரே வருஷத்துல 20 பேர் ஞானஸ்நானம் எடுத்தாங்க. மீன்கள் அதிகமா கிடைக்கிற இடத்துலதான் நான் இருக்குறேங்குறது இப்போ எனக்கு நல்லா புரியுது” என்று ஒனேசிமே சொல்கிறார். (மாற். 1:17, 18) “நான் நினைச்சதவிட ஏராளமான ஆசீர்வாதங்கள அனுபவிச்சிட்டு இருக்குறேன்” என்கிறார் ஸெரால்டினே.

சீஷராக்குவதில் கிடைக்கிற சந்தோஷம்

ஜூடித்தும் சாம்-கேஸ்டலும்

ஜூடித் என்கிற சகோதரி, கேமரூனிலிருந்து அமெரிக்காவுக்குக் குடிமாறிப் போயிருந்தார். நிறைய ஊழியம் செய்ய வேண்டுமென்று அவர் ஆசைப்பட்டார். “கேமரூனுக்கு போறப்பெல்லாம் நான் நிறைய பைபிள் படிப்புகள ஆரம்பிப்பேன். அந்த படிப்புகளயெல்லாம் விட்டுட்டு அமெரிக்காவுக்கு திரும்புறப்போ எனக்கு அழுகையே வந்திடும்” என்று அவர் சொல்கிறார். இருந்தாலும், கேமரூனுக்குக் குடிமாறி வருவதற்கு அவர் தயங்கினார். ஏனென்றால், கேமரூனில் இருக்கிற அவருடைய அப்பா, உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். ஜூடித் அமெரிக்காவில் நல்ல வேலையில் இருந்ததால், தன்னுடைய அப்பாவின் சிகிச்சைக்குத் தேவையான செலவைக் கவனித்துக்கொள்ள முடிந்தது. அந்த வேலையை விட்டுவிட்டு கேமரூனுக்கு வந்துவிட்டால், அப்பாவை கவனிக்க முடியாமல் போய்விடுமோ என்று நினைத்து அவர் கவலைப்பட்டார். ஆனாலும், யெகோவாமீது பாரத்தைப் போட்டுவிட்டு கேமரூனுக்குக் குடிமாறி வந்தார். வெளிநாட்டில் அனுபவித்துக்கொண்டிருந்த சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருந்ததாக அவர் சொல்கிறார். புது சூழ்நிலைக்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்ள உதவும்படி கேட்டு யெகோவாவிடம் அவர் ஜெபம் செய்தார். அதோடு, வட்டாரக் கண்காணியும் அவருடைய மனைவியும் அவரை உற்சாகப்படுத்தினார்கள்.

“3 வருஷத்துக்குள்ள 4 பேர் ஞானஸ்நானம் எடுக்குறதுக்கு என்னால உதவ முடிஞ்சுது” என்கிறார் ஜூடித். பிறகு, விசேஷ பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தார். இன்று, தன்னுடைய கணவர் சாம்-கேஸ்டலோடு சேர்ந்து வட்டார சேவையில் இருக்கிறார். ஆனால், ஜூடித்தின் அப்பாவுடைய விஷயம் என்ன ஆனது? வெளிநாட்டில் இருக்கிற ஒரு மருத்துவமனை அவருக்கு இலவசமாக அறுவை சிகிச்சை செய்ய முன்வந்தது. அவருடைய அறுவை சிகிச்சை நல்லபடியாக நடந்து முடிந்தது.

யெகோவா பக்கபலமாக இருக்கிறார்

கேரலினும் விக்டரும்

சகோதரர் விக்டர், கனடாவுக்குக் குடிமாறிப் போயிருந்தார். ஒருதடவை, உயர் கல்வியைப் பற்றி காவற்கோபுரத்தில் வந்த கட்டுரையைப் படித்தார். பிறகு, பல்கலைக் கழக படிப்பை நிறுத்திவிட்டு தொழிற்கல்வியில் சேர்ந்தார். “இப்படி செஞ்சதால சீக்கிரத்துல எனக்கு வேலை கிடைச்சுது. ரொம்ப நாளா ஆசப்பட்ட பயனியர் ஊழியத்தயும் ஆரம்பிக்க முடிஞ்சுது” என்று அவர் சொல்கிறார். பிற்பாடு, கேரலின் என்ற சகோதரியைக் கரம் பிடித்தார். இரண்டு பேரும் சேர்ந்து ஒருதடவை கேமரூனுக்குப் போயிருந்தார்கள். அப்போது, அங்கே இருக்கிற கிளை அலுவலகத்துக்குப் போனார்கள். கேமரூனிலேயே தங்கி ஊழியம் செய்வதைப் பற்றி யோசித்துப்பார்க்கும்படி அங்கிருந்த சகோதரர்கள் சொன்னார்கள். “அதுக்கு நாங்க ஒத்துக்கிட்டோம். வாழ்க்கைய எளிமையா வெச்சிருந்ததால, அந்த அழைப்ப ஏத்துக்க முடிஞ்சுது” என்கிறார் விக்டர். கேரலினுக்கு சில உடல்நல பிரச்சினைகள் இருந்தாலும், கேமரூனுக்குக் குடிமாறுவதென்று முடிவு செய்தார்கள்.

விக்டரும் கேரலினும் சேர்ந்து கேமரூனில் ஒழுங்கான பயனியர்களாக சேவை செய்ய ஆரம்பித்தார்கள். கொஞ்சக் காலம்வரை, அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணத்தை வைத்து செலவுகளைக் கவனித்துக்கொண்டார்கள். பிறகு, திரும்பவும் கனடாவுக்குப் போய் சில மாதங்கள் வேலை செய்தார்கள். அதனால், மறுபடியும் கேமரூனுக்கு வந்து பயனியர் சேவையைத் தொடர முடிந்தது. இப்படியெல்லாம் செய்ததால் அவர்களுக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தன? ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொண்டார்கள். பிறகு, விசேஷ பயனியர்களாக சேவை செய்தார்கள். இப்போது, கட்டுமான ஊழியர்களாக இருக்கிறார்கள். “எங்களோட சௌகரியங்கள விட்டுக்கொடுக்க வேண்டியிருந்தது என்னவோ உண்மைதான். ஆனா, யெகோவா எங்கள நல்லா கவனிச்சிக்கிட்டாரு” என்று விக்டர் சொல்கிறார்.

மற்றவர்களுக்கு உதவுவதில் கிடைக்கிற சந்தோஷம்

ஸ்டெஃபானியும் ஆலெயும்

ஆலெ என்ற சகோதரர், ஜெர்மனியில் ஒரு பல்கலைக் கழகத்தில் படித்துக்கொண்டிருந்தார். 2002-ல், “இளைஞர்களே—வாழ்க்கையில் உங்கள் இலட்சியம் என்ன?” என்ற துண்டுப்பிரதியைப் படித்தார். அதிலிருக்கிற தகவல், சில குறிக்கோள்களை வைக்க அவரைத் தூண்டியது. 2006-ல், ஊழியப் பயிற்சிப் பள்ளியில் கலந்துகொண்டார். பிறகு, அவருடைய சொந்த நாடான கேமரூனுக்கு நியமிக்கப்பட்டார்.

கேமரூனில் அவருக்கு பகுதி நேர வேலை கிடைத்தது. பிறகு, கை நிறைய சம்பாதிக்கிற ஒரு வேலையில் சேர்ந்தார். ஆனால், ஊழியத்தை அதிகமாக செய்வதற்கு அந்த வேலை தடையாக இருந்ததை நினைத்து அவர் கவலைப்பட்டார். அந்தச் சமயம் பார்த்து, விசேஷ பயனியராக சேவை செய்கிற வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. எந்தத் தயக்கமும் இல்லாமல் அதை ஏற்றுக்கொண்டார். அதேசமயத்தில், நிறைய சம்பளம் தருவதாக அவருடைய முதலாளி சொன்னார். ஆனால், ஆலெ மனம் மாறிவிடவில்லை. பிற்பாடு, ஸ்டெஃபானி என்ற சகோதரிக்கும் அவருக்கும் கல்யாணம் நடந்தது. ஸ்டெஃபானி நிறைய வருஷங்களாக பிரான்சிலேயே இருந்ததால், கேமரூனுக்குக் குடிமாறி வந்தவுடனே சில கஷ்டங்களைச் சந்தித்தார்.

“எனக்கு சில உடல்நல பிரச்சினைகளும் அலர்ஜியும் இருந்துச்சு. தவறாம சிகிச்சை எடுத்துக்கிட்டதால, அதையெல்லாம் சமாளிக்க முடிஞ்சுது” என்று ஸ்டெஃபானி சொல்கிறார். ஆலெயும் ஸ்டெஃபானியும் சகிப்புத்தன்மையோடு இருந்ததால், நிறைய பலன்கள் கிடைத்தன. “நாங்க ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்துக்கு ஊழியம் செய்ய போனோம். அந்த கிராமத்தோட பேரு கேட்டே. அங்கிருந்த நிறைய பேர், பைபிள பத்தி தெரிஞ்சுக்க ஆசப்பட்டாங்க. ஃபோன் வழியா அவங்களுக்கு பைபிள் படிப்பு நடத்துனோம். அதுல ரெண்டு பேரு ஞானஸ்நானம் எடுத்தாங்க. அங்க ஒரு சின்ன தொகுதியையும் ஆரம்பிக்க முடிஞ்சுது” என்று ஆலெ சொல்கிறார். “யெகோவாவுக்கு தங்கள அர்ப்பணிக்குறதுக்கு மத்தவங்களுக்கு உதவுறதுல கிடைக்கிற சந்தோஷம் வேற எதுலயும் கிடைக்காது. இங்க ஊழியம் செய்றதால நிறைய பேருக்கு உதவ முடியுது” என்று ஸ்டெஃபானி சொல்கிறார். இன்று, ஆலெயும் ஸ்டெஃபானியும் வட்டார சேவையில் இருக்கிறார்கள்.

“நாங்க என்ன செய்யணுமோ அதத்தான் செஞ்சோம்”

லியோன்ஸும் ஸெஸலும்

ஸெஸல் என்ற பெண், இத்தாலியில் மருத்துவ படிப்பு படித்துக்கொண்டிருந்தபோது ஞானஸ்நானம் எடுத்தார். அவருக்கு பைபிள் படிப்பு எடுத்த பயனியர் தம்பதி, தங்களுடைய வாழ்க்கையை எளிமையாக வைத்திருந்தார்கள். அது ஸெஸலின் மனதைத் தொட்டது. அதனால், நிறைய ஊழியம் செய்ய வேண்டுமென்று ஆசைப்பட்டார். படிப்பை முடித்த கையோடு ஒழுங்கான பயனியர் சேவையை ஆரம்பித்தார்.

கேமரூனுக்குப் போய் ஊழியம் செய்ய ஸெஸல் ஆசைப்பட்டார். ஆனால், சில விஷயங்களை நினைத்து கவலைப்பட்டார். “இத்தாலியில வாழ்றதுக்கு எனக்கு இருந்த சட்டப்பூர்வ உரிமைய விட்டுட்டு வர வேண்டியிருந்துச்சு. குடும்பத்துல இருக்குறவங்களயும் நண்பர்களயும் பிரிய வேண்டியிருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். ஆனாலும், மே 2016-ல் கேமரூனுக்குக் குடிமாறி வந்தார். கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அவருக்கும் லியோன்ஸ் என்ற சகோதரருக்கும் கல்யாணம் நடந்தது. அவர்களால் தேவை அதிகமுள்ள இடமான ஆயோஸ் என்ற ஊருக்குக் குடிமாறிப்போக முடியுமா என்று கிளை அலுவலகம் கேட்டுக்கொண்டதால், அங்கே போனார்கள்.

ஆயோஸில் வாழ்க்கை எப்படி இருந்தது? “அங்க வாரக்கணக்குல கரண்ட் இருக்காது. எங்களோட மொபைல் ஃபோன சார்ஜ் செய்ய முடியாது. அதனால, யாருகூடயும் ஃபோன்ல பேச முடியல. விறகு அடுப்புல சமைக்கிறதுக்கு நான் கத்துக்கிட்டேன். ராத்திரி நேரத்துலதான் தண்ணி எடுக்க போவோம். ஏன்னா, அப்பதான் கூட்டம் இருக்காது. டார்ச்லைட்ட பிடிச்சிக்கிட்டு, தள்ளுவண்டிய தள்ளிட்டு போய் தண்ணி பிடிச்சுட்டு வருவோம்” என்று ஸெஸல் சொல்கிறார். லியோன்ஸும் ஸெஸலும் இதையெல்லாம் எப்படிச் சமாளித்தார்கள்? “யெகோவாவோட சக்திதான் எங்களுக்கு உதவுச்சு. என்னோட கணவர் எனக்கு பக்கபலமா இருந்தாரு. நண்பர்களும் குடும்பத்துல இருக்குறவங்களும் எங்கள உற்சாகப்படுத்துனாங்க. அப்பப்போ எங்களுக்கு பணம் கொடுத்தும் உதவுனாங்க” என்று ஸெஸல் சொல்கிறார்.

சொந்த நாட்டுக்குத் திரும்பிவந்ததை நினைத்து ஸெஸல் வருத்தப்படுகிறாரா? “இல்லவே இல்ல. ஆரம்பத்துல சில கஷ்டங்கள் இருந்தது உண்மைதான். சில விஷயங்கள நினைச்சு நாங்க சோர்ந்துபோனோம். ஆனா, அதையெல்லாம் ஒருவழியா சமாளிச்சோம். நாங்க என்ன செய்யணுமோ அதத்தான் செஞ்சோம்னு என்னோட கணவரும் நானும் புரிஞ்சிக்கிட்டோம். யெகோவாமேல முழு நம்பிக்கை வெச்சதால, அவருகிட்ட இன்னும் நெருக்கமா இருக்குற மாதிரியான உணர்வு எங்களுக்கு இருக்கு” என்று ஸெஸல் சொல்கிறார். லியோன்ஸும் ஸெஸலும் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொண்டார்கள். இப்போது, தற்காலிக விசேஷ பயனியர்களாக சேவை செய்கிறார்கள்.

நிறைய பேரை சீஷர்களாக்குவதற்காக பல தியாகங்கள் செய்து தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பிவருகிற சகோதர சகோதரிகள், சூழ்நிலைகள் எப்படியிருந்தாலும் நிறைய மீன்களைப் பிடிப்பதற்காக தைரியமாகப் போகிற மீனவர்களைப் போல் இருக்கிறார்கள். தன்னுடைய பெயருக்காக இவர்கள் காட்டுகிற அன்பை யெகோவா நிச்சயம் மறக்க மாட்டார். (நெ. 5:19; எபி. 6:10) இப்போது நீங்கள் வெளிநாட்டில் வாழ்கிறீர்களா? உங்கள் சொந்த நாட்டுக்கே திரும்பிப்போய் ஊழியம் செய்ய முடியுமா? அப்படிச் செய்தால், ஆசீர்வாதங்களை நீங்கள் அள்ளலாம்!—நீதி. 10:22.