Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 47

உங்கள் விசுவாசத்தை இப்போதே பலப்படுத்துங்கள்

உங்கள் விசுவாசத்தை இப்போதே பலப்படுத்துங்கள்

“நீங்கள் மனம் கலங்க வேண்டாம். . . . கடவுள்மேல் விசுவாசம் வையுங்கள்.”—யோவா. 14:1.

பாட்டு 119 நமக்குத் தேவை விசுவாசம்

இந்தக் கட்டுரையில்... *

1. நம் மனதில் என்ன கேள்வி வரலாம்?

பொய் மதங்களின் அழிவு... மாகோகு தேசத்தானான கோகுவின் தாக்குதல்... அர்மகெதோன் போர்... இவையெல்லாம் சீக்கிரத்தில் வரப்போகின்றன என்பது நமக்கு நன்றாகத் தெரியும். ஆனால், இவற்றை நினைத்து நீங்கள் பயப்படுகிறீர்களா? ‘அந்த சமயத்துல நான் கடவுளுக்கு உண்மையா இருப்பேனா?’ என்ற கேள்வி உங்களுக்கு வருகிறதா? ஒருவேளை, இப்படியெல்லாம் நீங்கள் யோசித்தால், இந்தக் கட்டுரையின் முக்கிய வசனத்தில் இயேசு சொன்னதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். “நீங்கள் மனம் கலங்க வேண்டாம். . . . கடவுள்மேல் விசுவாசம் வையுங்கள்” என்று அவர் சீஷர்களிடம் சொன்னார். (யோவா. 14:1) இயேசு சொன்னதுபோல் நாம் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொண்டால் எதிர்காலத்தில் என்ன நடந்தாலும் தைரியமாக இருக்க முடியும்.

2. நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்ய வேண்டும், இந்தக் கட்டுரையில் என்ன பார்க்கப்போகிறோம்?

2 இப்போது நமக்கு வருகிற சோதனைகளை எப்படிச் சமாளிக்கிறோம் என்பதை நாம் யோசித்துப்பார்க்க வேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் வரப்போகிற சோதனைகளையும் தைரியமாக சந்திக்க முடியும். அதுமட்டுமல்ல, எந்தெந்த விஷயங்களில் நம்முடைய விசுவாசத்தைப் பலப்படுத்தலாம் என்பதையும் தெரிந்துகொள்ள முடியும். ஒவ்வொரு சோதனையையும் ஜெயிக்க ஜெயிக்க நம்முடைய விசுவாசம் பலமாகும். எதிர்காலத்தில் வரப்போகிற சோதனைகளைச் சமாளிப்பதற்கு அந்த விசுவாசம் உதவும். இந்தக் கட்டுரையில், இயேசுவின் சீஷர்கள் சந்தித்த நான்கு சூழ்நிலைகளைப் பற்றியும், அந்தச் சூழ்நிலைகளில் அவர்களுக்கு எப்படி அதிகமான விசுவாசம் தேவைப்பட்டது என்பதையும் பார்க்கப்போகிறோம். அதோடு, அதே மாதிரியான சூழ்நிலைகள் இன்றைக்கு நமக்கு வரும்போது அதை எப்படிச் சமாளிக்கலாம் என்பதையும், எதிர்காலத்தில் வரப்போகிற சூழ்நிலைகளைச் சமாளிக்க அது எப்படி நமக்கு உதவும் என்பதையும் பார்க்கப்போகிறோம்.

நம் தேவைகளைக் கடவுள் கவனித்துக்கொள்வார் என்பதில் விசுவாசம் வையுங்கள்

நமக்கு பண நெருக்கடி வந்தாலும் கடவுளுடைய அரசாங்கத்தை முதலிடத்தில் வைப்பதற்கு நம்முடைய விசுவாசம் உதவும் (பாராக்கள் 3-6)

3. மத்தேயு 6:30, 33-ல் எந்த விஷயத்தை இயேசு தெளிவாகச் சொன்னார்?

3 குடும்பத் தலைவர்களே, உங்கள் மனைவிமக்களுக்குத் தேவையான சாப்பாடு... துணிமணி... இருப்பதற்கு ஓர் இடம்... இவை எல்லாவற்றையும் கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நிச்சயம் ஆசைப்படுவீர்கள். ஆனால், இந்தக் கஷ்டமான காலத்தில் இவற்றையெல்லாம் செய்வது அவ்வளவு சுலபம் இல்லை. நம்முடைய சகோதரர்கள் சிலருக்கு வேலை பறிபோயிருக்கிறது, அவர்கள் என்னதான் முயற்சி செய்தும் வேறு வேலை கிடைக்காமல் போயிருக்கிறது. சிலருக்கு வேலை கிடைக்கிறது, ஆனால், பைபிள் நியமங்களுக்கு விரோதமாக இருப்பதால் அந்த வேலையை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்த எல்லா சூழ்நிலைகளிலும், நம்முடைய குடும்பத்துக்குத் தேவையானவற்றை யெகோவா எப்படியாவது செய்வார் என்ற பலமான விசுவாசம் நமக்கு வேண்டும். யெகோவா நம்மை நிச்சயம் பார்த்துக்கொள்வார் என்று மலைப்பிரசங்கத்தில் இயேசு தெளிவாகச் சொன்னார். (மத்தேயு 6:30-யும், 33-யும் வாசியுங்கள்.) யெகோவா நம்மை எப்போதுமே கைவிடமாட்டார் என்ற உறுதியான நம்பிக்கை நமக்கு இருந்தால், நம் வாழ்க்கையில் கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுப்போம். நம்முடைய தேவைகளை யெகோவா எப்படியெல்லாம் கவனித்துக்கொள்கிறார் என்று பார்க்க பார்க்க அவரிடம் இன்னும் நெருங்கிப்போவோம், அவர்மேல் இருக்கிற விசுவாசம் பலமாகும்.

4-5. கஷ்டமான ஒரு சூழ்நிலையைச் சமாளிப்பதற்கு ஒரு குடும்பத்துக்கு எது உதவியது?

4 வெனிசுவேலாவில் இருக்கிற ஒரு குடும்பத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவர்கள் தங்களுடைய நிலத்தில் விவசாயம் செய்து குடும்பத்தை ஓட்டிக்கொண்டிருந்தார்கள். ஒருநாள் ஆயுதங்களுடன் வந்த ஒரு கும்பல், அந்தக் குடும்பத்தின் விவசாய நிலத்தைப் பறித்துக்கொண்டு, அவர்களைத் துரத்திவிட்டார்கள். அதனால், வாழ்க்கையை எப்படி ஓட்டுவது என்று நினைத்து அவர்கள் கவலைப்பட்டார்கள். குடும்பத் தலைவரான மிகெல் இப்படிச் சொல்கிறார்: “நாங்க விவசாயம் செய்றதுக்கு இன்னொருத்தர் எங்களுக்கு ஒரு சின்ன நிலத்த கொடுத்தாரு. அதுல விளையறத வைச்சுதான் இப்ப எங்க குடும்பத்த ஓட்ட வேண்டி இருக்குது. ஒவ்வொரு நாளும் எழுந்திருச்ச உடனே ‘யெகோவாவே, இன்னைக்கு எனக்கு தேவையானத குடுங்க!’ அப்படினு நான் ஜெபம் பண்ணுவேன்.” இந்தக் குடும்பத்தின் நிலைமை கஷ்டம்தான். ஆனாலும், தங்களுடைய தேவைகளை யெகோவா கவனித்துக்கொள்வார் என்ற பலமான விசுவாசம் இருப்பதால் கூட்டங்களையும் ஊழியத்தையும் அவர்கள் தவறவிடுவதே இல்லை. கடவுளுடைய அரசாங்கத்துக்கு முதலிடம் கொடுப்பதால், அவர்களுக்குத் தேவையானவற்றை யெகோவா கவனித்துக்கொள்கிறார்.

5 இந்தக் கஷ்டமான சூழ்நிலைகளில் யெகோவா எப்படியெல்லாம் தங்களைக் கையில் வைத்துத் தாங்குகிறார் என்பதைத்தான் மிகெலும் அவருடைய மனைவி யூரேயும் யோசித்துப் பார்த்தார்கள். சில சமயங்களில், சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி யெகோவா உதவினார். அவர்களுக்குத் தேவையான பொருள்களை சகோதரர்கள் கொடுத்து உதவினார்கள். மிகெலுக்கு ஒரு வேலை கிடைக்க உதவினார்கள். கிளை அலுவலகத்தைப் பயன்படுத்தியும் அவர்களுடைய அடிப்படை தேவைகளை யெகோவா பார்த்துக்கொண்டார். யெகோவா அவர்களைக் கைவிடவே இல்லை. இவற்றையெல்லாம் பார்த்தபோது, அந்தக் குடும்பத்தாருடைய விசுவாசம் அதிகமானது. ஒருதடவை யெகோவா உதவி செய்தபோது தனக்கு எப்படி இருந்தது என்பதைப் பற்றி அந்தத் தம்பதியின் மூத்த மகள் யோசலின் இப்படிச் சொல்கிறாள்: “யெகோவா எப்படியெல்லாம் எங்களுக்கு உதவினாருங்கறத பார்த்தப்ப மனசுக்கு ரொம்ப ஆறுதலா இருந்துச்சு. அவர ஒரு நண்பரா பார்க்கவும் அவர்மேல முழு நம்பிக்கை வெக்கவும் நான் கத்துகிட்டேன். எதிர்காலத்தில வரப்போற சோதனைகள நல்லபடியா சமாளிக்கறதுக்கு இப்ப இருக்கற இந்த கஷ்டமான சூழ்நிலை எங்கள தயார்படுத்தியிருக்கு.”

6. பணப் பிரச்சினை இருந்தாலும் நீங்கள் எப்படி உங்களுடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ளலாம்?

6 நீங்களும் பணப் பிரச்சினைகளோடு திண்டாடிக்கொண்டிருக்கிறீர்களா? அப்படியென்றால், அதைச் சமாளிப்பது கஷ்டம்தான். ஆனால், இந்தச் சூழ்நிலையிலும் உங்களுடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள முடியும். நீங்கள் நன்றாக ஜெபம் செய்துவிட்டு மத்தேயு 6:25-34-ல் இயேசு சொன்ன விஷயங்களை கவனமாகப் படியுங்கள். அதைப் பற்றி ஆழமாக யோசித்துப்பாருங்கள். இன்றைக்கு கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கு முதலிடம் கொடுப்பவர்களை யெகோவா எப்படியெல்லாம் கவனித்துக்கொள்கிறார் என்று யோசித்துப்பாருங்கள். (1 கொ. 15:58) அப்படிச் செய்தால், இதே சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவுகிறாரோ அதே மாதிரி உங்களுக்கும் உதவுவார் என்ற நம்பிக்கை அதிகமாகும். உங்களுக்கு என்ன வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். அதை எப்படிக் கொடுக்க வேண்டும் என்பதும் தெரியும். யெகோவா உங்களுக்கு உதவுவதைப் பார்க்க பார்க்க உங்களுடைய விசுவாசம் பலமாகும். எதிர்காலத்தில் வரப்போகிற பயங்கரமான சோதனைகளைச் சமாளிக்க அது உதவும்.—ஆப. 3:17, 18.

‘பயங்கரமான புயல்காற்றை’ சமாளிக்க கடவுள் உதவுவார் என்பதில் விசுவாசம் வையுங்கள்

புயலானாலும் சரி, புயல் மாதிரியான பிரச்சினைகளானாலும் சரி, அவற்றையெல்லாம் சமாளிப்பதற்கு விசுவாசம் நமக்கு உதவும் (பாராக்கள் 7-11)

7. மத்தேயு 8:23-26-ல் சொன்னபடி, ‘பயங்கரமான புயல்காற்று’ சீஷர்களுடைய விசுவாசத்துக்கு எப்படிச் சோதனையாக இருந்தது?

7 ஒரு தடவை இயேசுவும் அவருடைய சீஷர்களும் படகில் போய்க்கொண்டிருந்தார்கள். அப்போது, பயங்கர புயல்காற்று வீசியது. அது அவ்வளவு பலமாக வீசியதால் படகுக்குள் தண்ணீர் வந்துவிட்டது. ஆனால், இயேசு நிம்மதியாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தார். சீஷர்கள் பதறிப்போனார்கள். உடனே, அவரை எழுப்பி தங்களைக் காப்பாற்றச் சொல்லிக் கதறினார்கள். அந்தச் சமயத்தில், அவர்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்த வேண்டும் என்று இயேசு நினைத்தார். அதனால், “விசுவாசத்தில் குறைவுபடுகிறவர்களே, ஏன் இப்படிப் பயப்படுகிறீர்கள்?” என்று கேட்டார். (மத்தேயு 8:23-26-ஐ வாசியுங்கள்.) தங்களையும் இயேசுவையும் காப்பாற்றுவதற்கு யெகோவாவுக்கு சக்தி இருக்கிறது என்ற விசுவாசம் அவர்களுக்கு இருந்திருக்க வேண்டும்! ஆனால், அந்த விசுவாசம் இல்லாததால்தான் இயேசு அவர்களிடம் அப்படிக் கேட்டார். நமக்கு என்ன பாடம்? நமக்கு பலமான விசுவாசம் இருந்தால், ‘பயங்கரமான புயல்காற்று’ வரும்போதும் சரி, புயல் மாதிரியான பிரச்சினைகள் வரும்போதும் சரி, நம்மால் சமாளிக்க முடியும்.

8-9. ஏனலின் விசுவாசத்துக்கு என்ன சோதனை வந்தது, அதைச் சமாளிக்க எது அவளுக்கு உதவியது?

8 பியூர்டோ ரிகோவில் இருக்கிற ஏனல் என்ற கல்யாணம் ஆகாத சகோதரியின் அனுபவத்தைப் பார்க்கலாம். அவள் வாழ்க்கையில் ஒரு பெரிய சோதனை வந்தது. அதைச் சமாளிப்பதற்கு பலமான விசுவாசம்தான் அவளுக்கு உதவியது. 2017-ல் ஒரு ‘பயங்கரமான புயல்காற்று’ அவளுடைய வீட்டைத் தரைமட்டமாக்கியது. அவளுடைய வேலையும் பறிபோய்விட்டது. “அந்த கஷ்டமான சமயங்கள்ல எனக்கு கவலையா இருந்துச்சு. ஆனா, யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சுட்டு அவரையே நம்பியிருந்தேன். அந்த கவலை என்னோட சந்தோஷத்த பறிக்காத மாதிரி நான் பாத்துக்கிட்டேன்” என்று ஏனல் சொல்கிறாள்.

9 சோதனையைச் சமாளிப்பதற்கு இன்னொரு விஷயமும் ஏனலுக்கு உதவியது. அதாவது, அவள் கீழ்ப்படிந்து நடந்தாள். “அமைப்பு சொன்னதுக்கு கீழ்ப்படிஞ்சு நடந்ததால என்னால மன அமைதியோட இருக்க முடிஞ்சது. சகோதர சகோதரிகள பயன்படுத்தி யெகோவா அப்பா எனக்கு உதவி செஞ்சாரு. அவங்க என்னை உற்சாகப்படுத்துனாங்க. எனக்கு தேவையான பொருள்கள கொடுத்தாங்க. நான் கேட்டதவிட யெகோவா எனக்கு தாராளமா கொடுத்தாரு. இதையெல்லாம் பார்த்தப்ப என்னோட விசுவாசம் அதிகமாச்சு” என்று ஏனல் சொல்கிறாள்.

10. ‘பயங்கரமான புயல்காற்று’ தாக்கும்போது நீங்கள் என்ன செய்யலாம்?

10 ‘பயங்கரமான புயல்காற்று’ உங்கள் வாழ்க்கையையும் புரட்டிப்போட்டிருக்கிறதா? ஒருவேளை, அது நிஜமான புயலாக இருக்கலாம் அல்லது புயல் மாதிரியான பிரச்சினைகளாக இருக்கலாம். உதாரணத்துக்கு, மோசமான ஒரு உடல்நலப் பிரச்சினை உங்களுக்கு இருக்கலாம். என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் விழிபிதுங்கி நிற்கலாம். சில சமயங்களில் கவலை உங்களை வாட்டலாம். ஆனால், யெகோவாமேல் நீங்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை விட்டுவிடுகிற அளவுக்கு கவலையிலேயே மூழ்கிவிடாதீர்கள். உருக்கமாக ஜெபம் செய்யுங்கள். அவரிடம் நெருங்கி வாருங்கள். முன்பு யெகோவா உங்களுக்கு எப்படியெல்லாம் உதவியிருக்கிறார் என்று யோசித்துப்பார்த்து உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள். (சங். 77:11, 12) இன்றைக்கு மட்டுமல்ல, என்றைக்குமே அவர் உங்களை கைவிட மாட்டார். இதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.

11. நம்மை வழிநடத்துகிறவர்களுக்கு நாம் ஏன் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும்?

11 சோதனைகளைச் சமாளிக்க வேண்டுமென்றால் நாம் இன்னொரு விஷயத்தையும் செய்ய வேண்டும். சகோதரி ஏனல் சொன்னது போல் கீழ்ப்படிந்து நடக்க வேண்டும். யெகோவாவும் இயேசுவும் யார்மேல் நம்பிக்கை வைத்திருக்கிறார்களோ அவர்கள்மேல் நீங்களும் நம்பிக்கை வையுங்கள். சில சமயங்களில், நம்மை வழிநடத்துபவர்கள் கொடுக்கிற அறிவுரைகள் அர்த்தமில்லாததாக நமக்குத் தோன்றலாம். ஆனால், கீழ்ப்படிந்து நடக்கும்போது யெகோவாவின் ஆசீர்வாதம் இருக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள். கீழ்ப்படிதல் உயிரைக் காப்பாற்றும் என்பதை பைபிளிலிருந்தும் கடவுளுடைய உண்மை ஊழியர்களின் அனுபவங்களிலிருந்தும் நீங்கள் தெரிந்துவைத்திருப்பீர்கள். (யாத். 14:1-4; 2 நா. 20:17) அப்படிப்பட்ட உதாரணங்களை ஆழமாக யோசித்துப் பாருங்கள். அப்படிச் செய்யும்போது இன்றைக்கும் சரி, எதிர்காலத்திலும் சரி, அமைப்பு கொடுக்கிற வழிநடத்துதல்களுக்கு உங்களால் முழு ஒத்துழைப்பு கொடுக்க முடியும். (எபி. 13:17) அப்படி ஒத்துழைப்பு கொடுத்தால், சீக்கிரத்தில் மிகுந்த உபத்திரவம் என்ற பயங்கரமான புயல்காற்று அடிக்கும்போது நீங்கள் பயப்பட மாட்டீர்கள்.—நீதி. 3:25.

அநீதியைப் பொறுத்துக்கொள்ள விசுவாசம் தேவை

தொடர்ந்து ஜெபம் செய்தால் நம்முடைய விசுவாசம் பலமாகும் (பாரா 12)

12. அநீதியைப் பொறுத்துக்கொள்வதற்கும், விசுவாசமாக இருப்பதற்கும் சம்பந்தம் இருக்கிறது என்பதை லூக்கா 18:1-8-லிருந்து எப்படித் தெரிந்துகொள்கிறோம்?

12 அநியாயம் நடக்கும்போது விசுவாசத்தோடு இருப்பது தன்னுடைய சீஷர்களுக்குச் சவாலாக இருக்கும் என்பது இயேசுவுக்கு நன்றாகத் தெரியும். அதனால், அதைச் சமாளிப்பதற்கு இயேசு ஒரு நீதிபதியின் கதையைச் சொன்னார். அது, லூக்கா புத்தகத்தில் இருக்கிறது. அந்தக் கதையில் வருகிற அநீதியான நீதிபதியிடம் ஒரு விதவை நியாயம் கேட்டுப் போவார். அவர் நிச்சயம் நியாயம் வழங்குவார் என்ற நம்பிக்கையில் ஓயாமல் அவரிடம் கேட்டுக்கொண்டே இருப்பார். கடைசியில் அந்த நீதிபதி நியாயம் வழங்குவார். நமக்கு என்ன பாடம்? யெகோவா அந்த நீதிபதியைப் போல் அநீதியுள்ளவர் கிடையாது. அதனால்தான், “கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அவரை நோக்கி இரவும் பகலும் கூப்பிடும்போது, அவர் அவர்களிடம் பொறுமையோடு இருந்து, அவர்களுக்கு நியாயம் வழங்காமல் இருப்பாரா?” என்று இயேசு கேட்டார். (லூக்கா 18:1-8-ஐ வாசியுங்கள்.) அதுமட்டுமல்ல, “மனிதகுமாரன் வரும்போது பூமியில் உண்மையிலேயே இப்படிப்பட்ட விசுவாசத்தைப் பார்ப்பாரா?” என்றும் கேட்டார். நமக்கு அநீதி நடக்கும்போது, அந்த விதவையைப் போலவே நாம் பொறுமையாக இருக்க வேண்டும். முயற்சியை கைவிடக் கூடாது. இப்படிச் செய்தால், நமக்கு பலமான விசுவாசம் இருக்கிறது என்பதைக் காட்ட முடியும். அப்படி பலமான விசுவாசத்தோடு இருக்கும்போது, கண்டிப்பாக ஒருநாள் யெகோவா நியாயம் வழங்குவார். அதே சமயத்தில், ஜெபத்துக்கு இருக்கிற சக்தியையும் நாம் மறந்துவிடக் கூடாது. சில சமயங்களில் நாம் எதிர்பார்க்காத விதத்தில் நம்முடைய ஜெபத்துக்குப் பதில் கிடைக்கும்.

13. அநியாயம் நடந்தபோது ஜெபம் செய்தது எப்படி ஒரு குடும்பத்தைக் காப்பாற்றியது?

13 காங்கோ குடியரசில் வாழ்கிற சகோதரி வேரோவின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். அவருடைய கணவர் சத்தியத்தில் இல்லை. அவருக்கு 15 வயதில் ஒரு மகள் இருந்தாள். ஆயுதங்களை வைத்திருந்த கும்பல் அவர்களுடைய கிராமத்தைத் தாக்கியதால், அவர்கள் மூன்று பேரும் அங்கிருந்து தப்பித்து ஓட வேண்டியிருந்தது. போகும் வழியில் அந்தக் கும்பலைச் சேர்ந்த சிலர் அவர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். அவர்களைக் கொல்லப்போவதாக மிரட்டினார்கள். உடனே சகோதரி வேரோ பயங்கரமாக அழ ஆரம்பித்து விட்டார். அவரை ஆறுதல்படுத்துவதற்காக அவருடைய மகள் யெகோவாவின் பெயரை நிறைய தடவை சொல்லி சத்தமாக ஜெபம் செய்தாள். அவள் ஜெபம் செய்து முடித்தவுடன், அந்தக் கும்பலின் தலைவன், “உனக்கு யாருமா ஜெபம் செய்றதுக்குச் சொல்லி கொடுத்தாங்க?” என்று கேட்டான். அதற்கு அந்தப் பெண், “எங்க அம்மாதான் மத்தேயு 6:9-13-ல இருக்கிற மாதிரி ஜெபம் செய்றதுக்கு கத்துக்கொடுத்தாங்க” என்று சொன்னாள். அதற்கு அவன், “உங்க அப்பா அம்மாவ கூட்டிட்டு பத்திரமா போம்மா, உன்னோட கடவுள் யெகோவா உன்ன காப்பாத்துவாரு!” என்று சொன்னான்.

14. நம்முடைய விசுவாசத்துக்கு எது சோதனையாக இருக்கலாம், அதைச் சகிக்க எது நமக்கு உதவும்?

14 ஜெபத்துக்கு இருக்கும் சக்தியை ஒருபோதும் குறைவாக எடைபோடக் கூடாது என்பதை இதுபோன்ற உதாரணங்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம். உங்கள் ஜெபத்துக்கு உடனடியாகவோ அற்புதமான விதத்திலோ பதில் கிடைக்காவிட்டால் என்ன செய்வது? இயேசுவின் கதையில் வருகிற அந்த விதவையைப் போல் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். யெகோவா உங்களைக் கைவிட மாட்டாரென்றும் உங்கள் ஜெபத்துக்கு ஏதாவது ஒருவிதத்தில் பதில் கொடுப்பார் என்றும் நம்பிக்கையோடு ஜெபம் செய்யுங்கள். அதுவும், சரியான சமயத்தில் உங்களுக்குப் பதில் கொடுப்பார் என்று நம்புங்கள். அவருடைய சக்திக்காக கெஞ்சிக் கேளுங்கள். (பிலி. 4:13) சீக்கிரத்தில், யெகோவா உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிக்கப்போகிறார். நீங்கள் பட்ட கஷ்டங்கள் எதுவுமே அப்போது உங்கள் ஞாபகத்துக்கு வராது. யெகோவா தருகிற உதவியோடு இப்போது சோதனைகளைச் சகித்திருந்தால், எதிர்காலத்தில் வரப்போகிற சோதனைகளையும் உங்களால் சகிக்க முடியும்.—1 பே. 1:6, 7.

தடைகளைத் தாண்ட விசுவாசம் தேவை

15. மத்தேயு 17:19, 20 சொல்கிறபடி, இயேசுவின் சீஷர்களுக்கு என்ன பிரச்சினை வந்தது?

15 தடைகளைத் தாண்ட விசுவாசம் தேவை என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். (மத்தேயு 17:19, 20-ஐ வாசியுங்கள்.) சீஷர்களால் சிலசமயம் பேயை விரட்ட முடிந்திருந்தாலும், ஒருதடவை அவர்களால் முடியவில்லை. ஏனென்றால், அவர்களுக்குப் போதுமான விசுவாசம் இல்லை. அவர்களுக்குப் போதுமான அளவு விசுவாசம் இருந்தால், மலைபோன்ற தடைகளைக்கூட தாண்ட முடியும் என்று இயேசு சொன்னார். இன்றைக்கு நமக்கும் மலைபோன்ற பிரச்சினைகள் வரலாம்.

வேதனை நம்மை வாட்டியெடுத்தாலும், யெகோவாவின் சேவையை சுறுசுறுப்பாகச் செய்வதற்கு விசுவாசம் நமக்கு உதவும் (பாரா 16)

16. பேரிடியைத் தாங்குவதற்கு கெய்டிக்கு எது உதவியது?

16 குவாதமாலாவில் இருக்கிற சகோதரி கெய்டியின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். அவரும் அவருடைய கணவர் ஈடியும் கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்துகொண்டிருந்த சமயத்தில் ஒரு ரௌடி கும்பல் அவருடைய கணவரைக் கொன்றுவிட்டார்கள். இந்தப் பேரிடியை கெய்டி எப்படிச் சமாளித்தார்? “என்னோட பாரத்த யெகோவாமேல போடறதுக்கு ஜெபம் எனக்கு உதவியா இருந்துச்சு, எனக்கு மன நிம்மதி கிடைச்சது. குடும்பத்தில இருக்கிறவங்களயும், சபையில இருக்கிற நண்பர்களயும் பயன்படுத்தி யெகோவா என்னை நல்லா பாத்துக்கிட்டாரு. யெகோவாவோட சேவையில சுறுசுறுப்பா இருந்ததால, நாளைக்கு என்ன நடக்கும்னு அளவுக்குமீறி கவலைப்படாம அந்தந்த நாள ஓட்ட முடிஞ்சது. இந்த அனுபவத்தில இருந்து எதிர்காலத்தில எப்பேர்ப்பட்ட சோதனை வந்தாலும் யெகோவாவும் இயேசுவும் அமைப்பும் கொடுக்கற உதவியால என்னால சமாளிக்க முடியுங்கறத கத்துகிட்டேன்” என்று கெய்டி சொல்கிறார்.

17. மலைபோன்ற பிரச்சினைகள் வரும்போது நீங்கள் என்ன செய்யலாம்?

17 ஒருவேளை, உங்களுடைய பாசத்துக்குரிய யாராவது ஒருவர் இறந்துபோயிருக்கலாம். அதை நினைத்து நீங்கள் துக்கத்தில் தவித்துக்கொண்டிருக்கலாம். அப்படிப்பட்ட சமயத்தில், நேரமெடுத்து பைபிளில் இருக்கிற உயிர்த்தெழுதல் பதிவுகளைப் படியுங்கள். ஒருவேளை, உங்கள் குடும்பத்தில் இருக்கிற ஒருவர் சபைநீக்கம் செய்யப்பட்டதை நினைத்து நீங்கள் துவண்டுபோயிருக்கலாம். அப்போது, யெகோவாவின் கண்டிப்பு என்றைக்குமே சரியாகத்தான் இருக்கும் என்பதை உறுதியாக நம்புவதற்காக, நன்றாக ஆராய்ச்சி செய்து படியுங்கள். இப்படி உங்களுக்கு என்ன பிரச்சினை வந்தாலும் சரி, அவற்றை உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்துவதற்கான வாய்ப்புகளாகப் பாருங்கள். மனதில் இருப்பதையெல்லாம் யெகோவாவிடம் கொட்டுங்கள். தயவுசெய்து உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளாதீர்கள். சகோதர சகோதரிகளிடம் எப்போதும் நெருக்கமாக இருங்கள். (நீதி. 18:1) நடந்ததை நினைத்து உங்களுக்கு அழுகை அழுகையாக வந்தாலும் சகித்திருப்பதற்குத் தேவையான எல்லாவற்றையும் செய்யுங்கள். (சங். 126:5, 6) கூட்டங்களுக்குப் போவது, ஊழியத்தில் கலந்துகொள்வது, பைபிள் படிப்பது என எதையும் விட்டுவிடாதீர்கள். யெகோவா உங்களுக்காக வைத்திருக்கிற அருமையான ஆசீர்வாதங்களை எப்போதுமே நினைத்துப் பாருங்கள். யெகோவா உங்களுக்கு எப்படியெல்லாம் உதவுகிறார் என்பதைப் பார்க்க பார்க்க அவர்மேல் இருக்கிற விசுவாசம் உங்களுக்கு அதிகமாகும்.

“எங்களுடைய விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”

18. உங்களுக்குப் போதுமான அளவு விசுவாசம் இல்லை என்பது தெரியவந்தால் என்ன செய்யலாம்?

18 உங்களுக்குச் சோதனை வந்தபோது, உங்களுக்குப் போதுமான அளவு விசுவாசம் இல்லை என்பது தெரிய வந்திருக்கலாம். ஆனால் சோர்ந்துவிடாதீர்கள்! உங்களுடைய விசுவாசத்தைப் பலப்படுத்திக்கொள்ள இதை ஒரு வாய்ப்பாகப் பாருங்கள். இயேசுவின் சீஷர்களைப் போல, “எங்களுடைய விசுவாசத்தை அதிகமாக்குங்கள்” என்று கேளுங்கள். (லூக். 17:5) அதோடு, இந்தக் கட்டுரையில் இருக்கிற அனுபவங்களையும் யோசித்துப்பாருங்கள். மிகெல்-யூரே தம்பதிக்கு யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்தார் என்று யோசித்துப்பாருங்கள். பெரிய சோதனை வந்தபோது, சகோதரி வேரோவின் மகளும் சகோதரி ஏனலும் யெகோவாவிடம் எப்படி உருக்கமாக ஜெபம் செய்தார்களோ, அதே மாதிரி நீங்களும் செய்யுங்கள். கெய்டிக்கு யெகோவா உதவி செய்த மாதிரி உங்களுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் மூலமாகவோ, உங்கள் நண்பர்கள் மூலமாகவோ யெகோவா உதவி செய்வார் என்று நம்புங்கள். உங்களுக்கு வருகிற சோதனைகளைச் சமாளிப்பதற்கு யெகோவாவின் உதவியை நீங்கள் ஏற்றுக்கொண்டால், எதிர்காலத்தில் உங்களுக்கு எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும் சரி, யெகோவா உங்களுக்குக் கட்டாயம் உதவி செய்வார் என்று நீங்கள் உறுதியாக நம்புவீர்கள்.

19. இயேசுவுக்கு என்ன நம்பிக்கை இருந்தது, நீங்கள் எதில் உறுதியாக இருக்கலாம்?

19 தன்னுடைய சீஷர்கள் எந்தெந்த விஷயங்களில் இன்னும் விசுவாசத்தை அதிகமாக வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று இயேசு சொன்னார். ஆனால், வரப்போகிற சோதனைகளை யெகோவாவின் உதவியோடு அவர்களால் சந்திக்க முடியுமா முடியாதா என்ற சந்தேகம் அவருக்கு இல்லை. (யோவா. 14:1; 16:33) திரள் கூட்டமான மக்கள் பலமான விசுவாசத்தை வளர்த்துக்கொண்டு வரப்போகிற மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. (வெளி. 7:9, 14) அப்படித் தப்பிப்பவர்களில் நீங்களும் ஒருவராக இருப்பீர்களா? இப்போது இருக்கிற எல்லா சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தி உங்கள் விசுவாசத்தைப் பலப்படுத்தினால், யெகோவாவின் அளவற்ற கருணையால் நிச்சயம் அவர்களில் ஒருவராக நீங்களும் இருப்பீர்கள்.—எபி. 10:39.

பாட்டு 118 “எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்”

^ பாரா. 5 இந்த மோசமான உலகத்துக்கு முடிவு வர வேண்டும் என்று நாம் எல்லாரும் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருக்கிறோம். ஆனாலும், “முடிவு வரைக்கும் சகிச்சிருக்கற அளவுக்கு பலமான விசுவாசம் என்கிட்ட இருக்கா?” என்ற கேள்வி சில சமயங்களில் நமக்கு வரலாம். இந்தக் கட்டுரையில், நம்முடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்ள உதவுகிற சிலருடைய அனுபவங்களையும் பாடங்களையும் கற்றுக்கொள்வோம்.