Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 45

ஒருவருக்கொருவர் தொடர்ந்து மாறாத அன்பைக் காட்டுங்கள்

ஒருவருக்கொருவர் தொடர்ந்து மாறாத அன்பைக் காட்டுங்கள்

“ஒருவருக்கொருவர் மாறாத அன்பையும் இரக்கத்தையும் காட்டுங்கள்.”—சக. 7:9.

பாட்டு 107 கடவுள் காட்டும் அன்பின் வழி

இந்தக் கட்டுரையில்... *

1-2. மாறாத அன்பு காட்டுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

நாம் ஒருவருக்கொருவர் மாறாத அன்பு காட்டுவதால் நிறைய நன்மைகள் இருக்கின்றன. அவற்றில், சில நன்மைகளைப் பற்றி நீதிமொழிகள் புத்தகம் என்ன சொல்கிறது என்று பார்க்கலாம். “மாறாத அன்பையும் உண்மைத்தன்மையையும் விட்டுவிடாதே. . . . அப்போது, கடவுள் பார்வையிலும் மனிதர்கள் பார்வையிலும், நீ பிரியமானவனாகவும், மிகுந்த விவேகம் உள்ளவனாகவும் இருப்பாய்” என்று நீதிமொழிகள் 3:3, 4 சொல்கிறது. “மாறாத அன்பு காட்டுகிறவன் தனக்கு நன்மை செய்துகொள்கிறான்” என்று நீதிமொழிகள் 11:17 (அடிக்குறிப்பு) சொல்கிறது. ‘நீதியையும் மாறாத அன்பையும் நாடுகிறவன் வாழ்வு . . . பெறுவான்’ என்று நீதிமொழிகள் 21:21 சொல்கிறது.

2 மாறாத அன்பு காட்டுவதால் மூன்று நன்மைகள் இருப்பதை இந்த வசனங்களிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். ஒன்று, நாம் மாறாத அன்பு காட்டும்போது யெகோவா நம்மை வைரங்களாகப் பார்ப்பார். இரண்டு, நாம் மாறாத அன்பு காட்டும்போது இப்போதே நமக்கு நன்மைகள் கிடைக்கும். உதாரணத்துக்கு, மற்றவர்களோடு நமக்கு இருக்கிற நட்பு நிலைத்திருக்கும். மூன்று, எதிர்காலத்தில் நமக்கு முடிவில்லாத வாழ்க்கையும் மற்ற ஆசீர்வாதங்களும் கிடைக்கும். இதிலிருந்து, “ஒருவருக்கொருவர் மாறாத அன்பையும் இரக்கத்தையும் காட்டுங்கள்” என்று யெகோவா சொல்வதுபோல் நடந்துகொள்வதால் எவ்வளவு நன்மை கிடைக்கும் என்பது புரிகிறது, இல்லையா?—சக. 7:9.

3. இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்குப் பதில்களைப் பார்ப்போம்?

3 இந்தக் கட்டுரையில் நான்கு கேள்விகளுக்குப் பதில்களைப் பார்ப்போம். ஒன்று, மாறாத அன்பை நாம் யாருக்குக் காட்ட வேண்டும்? இரண்டு, மாறாத அன்பைக் காட்டுவது பற்றி ரூத் புத்தகத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? மூன்று, இன்றைக்கு நாம் எப்படி மாறாத அன்பைக் காட்டலாம்? நான்கு, மாறாத அன்பு காட்டுவதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?

மாறாத அன்பை நாம் யாருக்குக் காட்ட வேண்டும்?

4. மாறாத அன்பைக் காட்டும் விஷயத்தில் நாம் எப்படி யெகோவாவைப் போலவே நடந்துகொள்ளலாம்? (மாற்கு 10:29, 30)

4 தன்னை நேசித்து தனக்கு சேவை செய்கிறவர்கள்மேல் யெகோவா மாறாத அன்பைக் காட்டுகிறார் என்பதைப் பற்றிப் போன கட்டுரையில் பார்த்தோம். (தானி. 9:4) ‘அன்பான பிள்ளைகளைப் போல் கடவுளுடைய முன்மாதிரியைப் பின்பற்ற’ நாம் விரும்புகிறோம். (எபே. 5:1) அதனால், சகோதர சகோதரிகள்மேல் மாறாத அன்பைக் காட்ட வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம்.—மாற்கு 10:29, 30-ஐ வாசியுங்கள்.

5-6. பொதுவாக மனிதர்கள்மேல் காட்டுகிற அன்புக்கும் மாறாத அன்புக்கும் இருக்கிற வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைச் சொல்லுங்கள்.

5 மாறாத அன்பைப் பற்றி நாம் ஆழமாகப் புரிந்துகொண்டால், சகோதர சகோதரிகளிடம் அதை இன்னும் நன்றாகக் காட்ட முடியும். அதைப் புரிந்துகொள்ள, பொதுவாக மனிதர்கள்மேல் காட்டுகிற அன்புக்கும் மாறாத அன்புக்கும் இருக்கிற வித்தியாசத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்கு இப்போது ஓர் உதாரணத்தைப் பார்க்கலாம்.

6 ஒரு தடவை அப்போஸ்தலன் பவுலும் மற்றவர்களும் கப்பலில் பயணம் செய்துகொண்டிருந்தபோது ஒரு பெரிய விபத்து ஏற்பட்டு கப்பல் மூழ்கிவிட்டது. ஆனால், அவர்கள் எல்லாரும் மெலித்தா என்ற தீவில் கரையேறினார்கள். அந்தத் தீவிலிருந்த மக்களுக்கு அவர்கள் யாரென்று தெரியவில்லை என்றாலும் மனிதாபிமானத்தால் அவர்களிடம் அன்பாக நடந்துகொண்டார்கள், அவர்களை நன்றாக கவனித்துக்கொண்டார்கள். (அப். 28:2, 7) அந்த மக்கள் காட்டிய அன்பு, பொதுவாக மனிதாபிமானத்தோடு மற்றவர்கள்மேல் காட்டுகிற அன்புதானே தவிர, மாறாத அன்பு அல்ல!

7-8. (அ) மாறாத அன்பு காட்டுவதற்கு ஒருவரை எது தூண்டுகிறது? (ஆ) ரூத் புத்தகத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளப் போகிறோம்?

7 பொதுவாக மனிதர்கள்மேல் காட்டுகிற அன்பைப் பற்றிப் போன பாராவில் பார்த்தோம். அப்படியென்றால், அந்த அன்பிலிருந்து மாறாத அன்பு எந்த விதத்தில் வித்தியாசப்படுகிறது? பைபிள் காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள் நிறைய பேர் மாறாத அன்பு காட்டினார்கள். ஆனால், கடமைக்காகவோ மனிதாபிமானத்தாலோ அல்ல, அவர்களுடைய மனம் தூண்டியதால் அவர்களாகவே விருப்பப்பட்டு மாறாத அன்பைக் காட்டினார்கள். இதைப் புரிந்துகொள்ள தாவீதின் அனுபவத்தைப் பார்க்கலாம். யோனத்தானின் அப்பா தாவீதைக் கொல்வதற்குத் துடியாய்த் துடித்தாலும் யோனத்தான்மேல் தாவீது மாறாத அன்பைக் காட்டினார். யோனத்தான் இறந்த பின்பும்கூட அவருடைய மகன் மேவிபோசேத்துக்கு தாவீது மாறாத அன்பைக் காட்டினார்.—1 சா. 20:9, 14, 15; 2 சா. 4:4; 8:15; 9:1, 6, 7.

8 இப்போது ரூத் புத்தகத்திலிருந்து சில பதிவுகளைப் பார்க்கலாம். அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிற சிலரிடமிருந்து மாறாத அன்பைப் பற்றி நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அதைப் போலவே, சகோதர சகோதரிகளிடமும் நாம் எப்படி மாறாத அன்பு காட்டலாம்? *

மாறாத அன்பைப் பற்றி ரூத் புத்தகம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்

9. தனக்கு எதிராக யெகோவா திரும்பிவிட்டதாக நகோமி ஏன் நினைத்தார்?

9 ரூத் புத்தகத்தில் நகோமியைப் பற்றியும் அவருடைய மருமகள் ரூத்தைப் பற்றியும் படிக்கிறோம். அதோடு, நகோமியின் கணவருக்குச் சொந்தக்காரராகவும் கடவுள் பக்தியுள்ளவராகவும் இருந்த போவாசைப் பற்றியும் படிக்கிறோம். இஸ்ரவேலில் பஞ்சம் அதிகமானதால், நகோமியும் அவருடைய கணவரும் அவர்களுடைய இரண்டு மகன்களும் மோவாபுக்கு குடிமாறிப் போயிருந்தார்கள். அங்கிருந்த சமயத்தில் நகோமியின் கணவர் இறந்துவிட்டார். அவர்களுடைய இரண்டு மகன்களுக்கும் கல்யாணம் ஆனது. ஆனால், சோகமான விஷயம் என்னவென்றால் அந்த இரண்டு மகன்களும் இறந்துவிட்டார்கள். (ரூத் 1:3-5; 2:1) இப்படி, அடிமேல் அடி விழுந்ததால் நகோமி வேதனையில் மூழ்கிப்போனார். அவருடைய மனம் அந்தளவுக்கு ரணமாக இருந்ததால், ‘யெகோவாவின் கை எனக்கு எதிராகத் திரும்பிவிட்டது’ என்று சொன்னார். அதோடு, “சர்வவல்லமையுள்ளவர் என் வாழ்க்கையை ரொம்பவே கசப்பாக்கிவிட்டார்” என்றும், ‘யெகோவா எனக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார், சர்வவல்லமையுள்ளவர் எனக்குப் பயங்கரமான வேதனையைக் கொடுத்திருக்கிறார்’ என்றும் சொன்னார்.—ரூத் 1:13, 20, 21.

10. நகோமி பேசியதைக் கேட்டு யெகோவா கோபப்பட்டாரா? விளக்குங்கள்.

10 நகோமி இப்படியெல்லாம் பேசியதைக் கேட்டு யெகோவா கோபப்பட்டாரா? இல்லை. நகோமிமேல் அனுதாபம் காட்டினார். “ஒடுக்குதல் ஞானமுள்ளவரைக்கூட பைத்தியக்காரத்தனமாக நடக்க வைக்கும்” என்று அவருக்கு நன்றாகத் தெரியும். (பிர. 7:7) இப்போது, யெகோவா தன்னைக் கைவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்ள நகோமிக்கு உதவி தேவைப்பட்டது. நகோமிக்கு யெகோவா எப்படி உதவினார்? (1 சா. 2:8) நகோமிமேல் மாறாத அன்பு காட்டும்படி ரூத்தின் மனதைத் தூண்டினார். தன்னுடைய மாமியாருக்கு ரூத் அன்பாக உதவினாள். ஒரேயடியாக சோர்வில் மூழ்கிவிடாமல் இருப்பதற்கும், யெகோவா அவரைக் கைவிடவில்லை என்பதைப் புரிந்துகொள்வதற்கும் ரூத் நகோமிக்கு உதவி செய்தாள். ரூத்திடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

11. அன்பான சகோதர சகோதரிகள் வேதனையில் இருப்பவர்களுக்கு ஏன் உதவுகிறார்கள்?

11வேதனையில் இருப்பவர்களுக்கு உதவ மாறாத அன்பு நம்மைத் தூண்டும். ரூத் எப்படி நகோமியை விட்டுப் பிரியவே இல்லையோ, அதேபோல் இன்றைக்கு அன்பான சகோதர சகோதரிகள் நிறைய பேர் வேதனையில் இருக்கிற சகோதர சகோதரிகளை விட்டுப் பிரியாமல் அவர்களுடனேயே இருக்கிறார்கள். தங்களுடைய சகோதர சகோதரிகளை அவர்கள் ரொம்ப நேசிக்கிறார்கள். அதனால், ஆசை ஆசையாக அவர்களுக்கு உதவுகிறார்கள். (நீதி. 12:25, அடிக்குறிப்பு; 24:10) சொல்லப்போனால், “மனச்சோர்வால் வாடுகிறவர்களிடம் ஆறுதலாகப் பேசுங்கள், பலவீனமாக இருப்பவர்களுக்கு ஆதரவு கொடுங்கள், எல்லாரிடமும் பொறுமையாக இருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னபடியே நடந்துகொள்கிறார்கள்.—1 தெ. 5:14.

நாம் காதுகொடுத்துக் கேட்டால் வேதனையில் தவிக்கிற சகோதர சகோதரிகளுக்கு உதவ முடியும் (பாரா 12)

12. வேதனையில் இருப்பவர்களுக்கு நாம் செய்கிற மிகப் பெரிய உதவி எது?

12 வேதனையில் இருப்பவர்கள் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்பதும், அவர்கள்மேல் நாம் அன்பு வைத்திருக்கிறோம் என்பதைக் காட்டுவதும்தான் அவர்களுக்கு நாம் செய்கிற மிகப்பெரிய உதவி. “ஏழைக்குக் கருணை காட்டுகிறவன் யெகோவாவுக்குக் கடன் கொடுக்கிறான். அவன் கொடுத்ததை அவர் திருப்பிக் கொடுப்பார்” என்று நீதிமொழிகள் 19:17 சொல்கிறது. இதிலிருந்து, யெகோவா பொக்கிஷமாக நினைக்கிற அவருடைய ஆடுகள்மேல், அதாவது சகோதர சகோதரிகள்மேல், நாம் காட்டும் அன்பை அவர் ஒருபோதும் மறக்கமாட்டார் என்பது தெரிகிறது.—சங். 41:1.

ஒர்பாள் மோவாபுக்கே திரும்பிப் போய்விடுகிறாள். ஆனால், ரூத் தன்னுடைய மாமியார் நகோமியை விட்டுப் பிரியவே இல்லை. “நீங்கள் எங்கே போகிறீர்களோ அங்கே நானும் வருவேன்” என்று அவள் நகோமியிடம் சொல்கிறாள். (பாரா 13)

13. ஒர்பாளுக்கும் ரூத்துக்கும் என்ன வித்தியாசம் இருந்தது, நகோமிமேல் ரூத் எப்படி மாறாத அன்பைக் காட்டினாள்? (அட்டைப் படம்)

13 நகோமியின் கணவரும் அவருடைய இரண்டு மகன்களும் இறந்தபின்பு நடந்த விஷயத்தைப் படிக்கும்போது, மாறாத அன்பைப் பற்றி இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளலாம். “யெகோவா இஸ்ரவேலில் பஞ்சத்தைப் போக்கி தன்னுடைய ஜனங்களுக்குக் கருணை காட்டியிருந்த விஷயத்தை” நகோமி கேள்விப்படுகிறார். அதனால், தன் சொந்த ஊருக்கே திரும்பிப் போக முடிவெடுக்கிறார். (ரூத் 1:6) அப்போது, நகோமியின் இரண்டு மருமகள்களும் அவரோடு கிளம்புகிறார்கள். ஆனால், போகும் வழியில் அவர்கள் இரண்டு பேரையும் மோவாப் தேசத்துக்கே திரும்பிப் போகச் சொல்லி மூன்று தடவை நகோமி சொல்கிறார். அப்போது, அவர்கள் என்ன செய்தார்கள்? “ஒர்பாள் தன் மாமியாருக்கு முத்தம் கொடுத்துவிட்டுத் திரும்பிப் போனாள். ஆனால், ரூத் மட்டும் நகோமியைவிட்டுப் போகவே இல்லை.” (ரூத் 1:7-14) நகோமி என்ன சொன்னாரோ அதன்படி ஒர்பாள் செய்தாள். ஆனால், ரூத் அதையும் தாண்டி ஒரு முக்கியமான விஷயத்தைச் செய்தாள். அதாவது நகோமியை விட்டுவிட்டுப் போகவில்லை. ரூத் நினைத்திருந்தால் நகோமியை விட்டுப் போயிருக்கலாம். ஆனால், விதவையான தன்னுடைய மாமியார்மேல் இருந்த மாறாத அன்பால் அவரை விட்டுப் பிரியவே கூடாது என்று முடிவெடுத்தாள். (ரூத் 1:16, 17) ரூத் அப்படிச் செய்ய வேண்டும் என்று ஏதாவது கட்டாயம் இருந்ததா? இல்லை. அவளாகவே ஆசைப்பட்டு அப்படிச் செய்தாள். இதிலிருந்து, நகோமிமேல் ரூத் மாறாத அன்பு காட்டினாள் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது இல்லையா? ரூத்திடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

14. (அ) சகோதர சகோதரிகள் நிறைய பேர் இன்று எப்படி நடந்துகொள்கிறார்கள்? (ஆ) எபிரெயர் 13:16 சொல்கிறபடி, யெகோவா எதைப் பார்த்து சந்தோஷப்படுகிறார்?

14நம்முடைய சக்திக்கு மீறி மற்றவர்களுக்கு உதவ மாறாத அன்பு நம்மைத் தூண்டுகிறது. பைபிள் காலங்களில் இருந்ததைப் போலவே இன்றும் நம்மில் நிறையப் பேர் சகோதர சகோதரிகளுக்கு மாறாத அன்பு காட்டுகிறோம். ஒருவேளை, அவர்களை முன்பின் பார்த்ததில்லை என்றாலும் அவர்கள்மேல் மாறாத அன்பு காட்டுகிறோம். இயற்கைப் பேரழிவுகளால் நம்முடைய சகோதர சகோதரிகள் பாதிக்கப்படுவதைக் கேள்விப்படும்போது அவர்களுக்கு எப்படி உதவலாம் என்று தீவிரமாய் யோசிக்கிறோம். சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள் பணப் பிரச்சினையில் தவிக்கும்போது நம்மால் முடிந்த உதவிகளைச் செய்ய விரும்புகிறோம். முதல் நூற்றாண்டில் இருந்த மக்கெதோனியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்களைப் போலவே நாமும் நம்முடைய சக்திக்கு மீறி சகோதர சகோதரிகளுக்கு உதவுகிறோம். அந்த கிறிஸ்தவர்கள், பண நெருக்கடியில் தவித்த சகோதர சகோதரிகளுக்கு தங்களால் முடிந்ததை மட்டுமல்ல, “அதைவிட அதிகமாகவே கொடுத்தார்கள்.” (2 கொ. 8:3) இப்படி, சகோதர சகோதரிகள்மேல் நாம் மாறாத அன்பு காட்டுவதைப் பார்க்கும்போது யெகோவா எவ்வளவு சந்தோஷப்படுவார்!—எபிரெயர் 13:16-ஐ வாசியுங்கள்.

மாறாத அன்பை இன்று நாம் எப்படிக் காட்டலாம்?

15-16. ரூத் எப்படி முயற்சியைக் கைவிடாமல் இருந்தாள்?

15 ரூத்-நகோமி வாழ்க்கையிலிருந்து நாம் நிறைய பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். ஒருசில பாடங்களை இப்போது பார்க்கலாம்.

16முயற்சியை கைவிட்டுவிடாதீர்கள். நகோமியோடு சேர்ந்து ரூத் போனபோது, முதலில் அவர் அவளைத் தடுத்தார். ஆனால், ‘நகோமியோடு போவதில் ரூத் உறுதியாக இருந்தாள்.’ அதனால், என்ன ஆனது? “அதற்கு மேலும் அவளுடைய மனதை மாற்ற நகோமி முயற்சி செய்யவில்லை.”—ரூத் 1:15-18.

17. முயற்சியைக் கைவிடாமல் இருக்க எது உதவும்?

17பாடம்: வேதனையில் இருக்கிறவர்களுக்கு உதவ பொறுமை தேவை. அதனால், நம்முடைய முயற்சியை கைவிடக் கூடாது. உதவி தேவைப்படுகிற ஒரு சகோதரி ஆரம்பத்தில் நாம் செய்கிற உதவியை மறுத்துவிடலாம். * ஆனால், அவர்மேல் நமக்கு மாறாத அன்பு இருந்ததென்றால் நம்முடைய முயற்சியை கைவிட மாட்டோம். (கலா. 6:2) இன்றைக்கு இல்லையென்றாலும் என்றைக்காவது ஒருநாள் நாம் கொடுக்கிற உதவியையும் ஆறுதலையும் அவர் ஏற்றுக்கொள்வார் என்று நம்பிக்கையோடு இருப்போம்.

18. ரூத்துக்கு எது ரொம்ப கஷ்டமாக இருந்திருக்கும்?

18சட்டென்று புண்பட்டுவிடாதீர்கள். இப்போது, நகோமியும் ரூத்தும் பெத்லகேமுக்குப் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். அக்கம்பக்கத்தில் இருந்தவர்களையெல்லாம் நகோமி சந்திக்கிறார். அவர்களிடம், “நான் இங்கிருந்து போனபோது எனக்கு எந்தக் குறையும் இல்லை. ஆனால், இப்போது யெகோவா என்னை வெறுங்கையோடு திரும்பிவர வைத்துவிட்டார்” என்று சொல்கிறார். (ரூத் 1:21) இதைக் கேட்டபோது ரூத்துக்கு எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்! நகோமிக்கு உதவ தன்னால் முடிந்ததையெல்லாம் அவள் செய்திருக்கிறாள். நகோமியோடு சேர்ந்து அழுதிருக்கிறாள், அவரை ஆறுதல்படுத்தியிருக்கிறாள், மோவாபிலிருந்து அவரோடு நடந்தே வந்திருக்கிறாள். இவ்வளவு செய்தும், “யெகோவா என்னை வெறுங்கையோடு திரும்பிவர வைத்துவிட்டார்” என்று நகோமி சொல்கிறார். இதிலிருந்து, ரூத் தனக்காக செய்த எதையுமே அவள் நினைத்துப் பார்க்காத மாதிரி தெரிகிறது. அது ரூத்துக்கு எவ்வளவு கஷ்டமாக இருந்திருக்கும்! ஆனாலும், நகோமியை விட்டு அவள் பிரியவே இல்லை.

19. வேதனையில் இருப்பவர்களோடு இருந்து அவர்களை ஆறுதல்படுத்த எது உதவும்?

19பாடம்: ஒருவேளை, வேதனையில் இருக்கிற ஒரு சகோதரிக்கு நாம் எவ்வளவுதான் உதவி செய்தாலும் நம்முடைய மனம் கஷ்டப்படுவதுபோல் அவர் பேசிவிடலாம். அப்படிப்பட்ட சமயத்தில் சட்டென்று புண்பட்டுவிடாதீர்கள். அதற்குப் பதிலாக, அவரோடு இருந்து அவரை எப்படியெல்லாம் ஆறுதல்படுத்தலாம் என்று தெரிந்துகொள்வதற்காக யெகோவா அப்பாவிடம் உதவி கேளுங்கள்.—நீதி. 17:17.

மூப்பர்கள் எப்படி போவாசைப் போல் நடந்துகொள்ளலாம்? (பாராக்கள் 20-21)

20. நகோமியை விட்டுப் பிரியாமல் இருக்க ரூத்துக்கு எது உதவியது?

20சரியான சமயத்தில் மற்றவர்களைப் பலப்படுத்துங்கள். நகோமிக்கு ரூத் மாறாத அன்பு காட்டினாள். ஆனால், ரூத்துக்கே இப்போது பலம் தேவைப்படுகிறது. அதனால், போவாசைப் பயன்படுத்தி யெகோவா அவளைப் பலப்படுத்தினார். “நீ செய்த எல்லாவற்றுக்கும் யெகோவா உனக்குப் பலன் தரட்டும்! இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் சிறகுகளின் கீழ் அடைக்கலம் தேடி வந்திருக்கிற உனக்கு அவர் நிறைவான பலன் தரட்டும்” என்று அவர் சொன்னார். இந்த வார்த்தைகளைக் கேட்டபோது ரூத்துக்கு எவ்வளவு நிம்மதியாக இருந்திருக்கும்! அதனால், “என்னிடம் ஆறுதலாகப் பேசினீர்கள், எனக்கு நம்பிக்கை தந்தீர்கள்” என்று அவள் போவாசிடம் சொன்னாள். (ரூத் 2:12, 13) போவாஸ் சரியான சமயத்தில் அந்த வார்த்தைகளைச் சொன்னது, நகோமியை விட்டுப் பிரியாமல் இருக்க ரூத்துக்கு ரொம்பவே உதவியாக இருந்திருக்கும்.

21. ஏசாயா 32:1, 2 சொல்கிறபடி, அன்பான மூப்பர்கள் என்ன செய்கிறார்கள்?

21பாடம்: மற்றவர்களுக்கு மாறாத அன்பு காட்டுபவர்களுக்கும் அவ்வப்போது உற்சாகம் தேவைப்படுகிறது. நகோமிக்கு ரூத் அன்பாக உதவி செய்ததை போவாஸ் கவனித்தார். அவளைப் பலப்படுத்தினார், மனதாரப் பாராட்டினார். அதேபோல், மற்றவர்களுக்கு உதவுவதற்காக சகோதர சகோதரிகள் எடுக்கிற முயற்சிகளை மூப்பர்கள் கவனிக்கிறார்கள். அவர்களைப் பலப்படுத்துகிறார்கள், மனதாரப் பாராட்டுகிறார்கள். இப்படிச் சரியான சமயத்தில் மூப்பர்கள் பாராட்டும்போது, சோர்ந்துவிடாமல் மற்றவர்களுக்கு உதவி செய்ய சகோதர சகோதரிகளால் முடியும்.—ஏசாயா 32:1, 2-ஐ வாசியுங்கள்.

மாறாத அன்பு காட்டுபவர்களுக்கு கிடைக்கும் நன்மைகள்

22-23. நகோமியின் மனதில் எப்படிப்பட்ட மாற்றம் ஏற்பட்டது, அதற்கு என்ன காரணம்? (சங்கீதம் 136:23, 26)

22 கொஞ்ச நாட்களுக்குப் பின்பு, ரூத்துக்கும் நகோமிக்கும் சாப்பிடுவதற்குத் தேவையானதை கொடுத்து போவாஸ் தாராள குணத்தைக் காட்டினார். (ரூத் 2:14-18) அப்போது, “உயிரோடு இருக்கிறவர்களுக்கும் இறந்தவர்களுக்கும் மாறாத அன்பு காட்டிய யெகோவா அவரை ஆசீர்வதிக்கட்டும்!” என்று நகோமி சந்தோஷமாகச் சொன்னார். (ரூத் 2:20, அடிக்குறிப்பு) கொஞ்ச நாட்களுக்கு முன்புதான், ‘யெகோவா எனக்கு எதிராகத் திரும்பியிருக்கிறார்’ என்று மனவேதனையோடு சொன்னார். இப்போதோ, யெகோவா எனக்கு ‘மாறாத அன்பு காட்டியிருக்கிறார்’ என்று சந்தோஷமாகச் சொன்னார். நகோமியின் மனதில் ஏற்பட்ட இந்த மாற்றத்துக்கு எது காரணமாக இருந்திருக்கும்?

23 யெகோவா தன்னை ஒருபோதும் கைவிடவில்லை என்பதை நகோமி புரிந்துகொண்டார். யூதாவுக்குப் போகிற வழியில் நகோமிக்குப் பக்கபலமாக இருப்பதற்காக ரூத்தை யெகோவா தூண்டினார். (ரூத் 1:16) அதுமட்டுமல்ல, நகோமிக்கும் ரூத்துக்கும் உதவி செய்வதற்கு போவாசின் மனதையும் தூண்டினார். (ரூத் 2:19, 20) இவற்றையெல்லாம் பார்த்த பின்பு, நகோமி தன்னுடைய மனதுக்குள்ளே, ‘இப்ப எனக்கு புரியுது, யெகோவா என்னை கைவிடவே இல்லை. அவர் என் கூடவே இருந்திருக்கிறார்’ என்று நினைத்திருக்கலாம். (சங்கீதம் 136:23-யும் 26-யும் வாசியுங்கள்.) போவாசும் ரூத்தும் தன்னைக் கைவிடாமல் இருந்ததற்காக, அவர்களுக்கு நகோமி எவ்வளவு நன்றியோடு இருந்திருப்பார்! இழந்துபோன சந்தோஷம் நகோமிக்குத் திரும்பவும் கிடைத்தது. அதைப் பார்த்து ரூத்தும் போவாசும் ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பார்கள்!

24. சகோதர சகோதரிகளுக்கு தொடர்ந்து மாறாத அன்பு காட்ட நாம் ஏன் ஆசைப்படுகிறோம்?

24 மாறாத அன்பைப் பற்றி ரூத் புத்தகத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்? வேதனையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்கு உதவ மாறாத அன்பு நம்மைத் தூண்டுகிறது. சொல்லப்போனால், அவர்களுக்கு உதவுவதற்காக சில தியாகங்களைச் செய்யவும் நம்மைத் தூண்டுகிறது. இப்படி, மற்றவர்களுக்கு மாறாத அன்பு காட்டுபவர்களை சரியான சமயத்தில் மூப்பர்கள் உற்சாகப்படுத்த வேண்டும். நாம் யாருக்கு மாறாத அன்பு காட்டுகிறோமோ அவர்கள் மறுபடியும் யெகோவாவுக்குச் சந்தோஷமாக சேவை செய்வதைப் பார்க்கும்போது, நம்முடைய சந்தோஷத்துக்கும் அளவே இருக்காது. (அப். 20:35) மற்றவர்களுக்கு மாறாத அன்பை நாம் தொடர்ந்து காட்டுவதற்கு முக்கியமான காரணம், ‘மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுகிற’ யெகோவாவைப் போலவே நடந்துகொள்ள நாம் ஆசைப்படுவதுதான்! அவரைச் சந்தோஷப்படுத்த விரும்புவதுதான்! (யாத். 34:6) அதனால், நாம் எல்லாரும் தொடர்ந்து மாறாத அன்பைக் காட்டலாம்.—சங். 33:22.

பாட்டு 130 மன்னியுங்கள்

^ பாரா. 5 சகோதர சகோதரிகள்மேல் நாம் மாறாத அன்பைக் காட்ட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அப்படியென்றால், மாறாத அன்பு என்றால் என்ன என்பதைப் பற்றி நாம் நன்றாகப் புரிந்துவைத்திருக்க வேண்டும். அதற்கு, பைபிள் காலங்களில் வாழ்ந்த கடவுளுடைய ஊழியர்கள் இந்தக் குணத்தை எப்படிக் காட்டினார்கள் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கட்டுரையில், ரூத்திடமிருந்தும் நகோமியிடமிருந்தும் போவாசிடமிருந்தும் மாறாத அன்பைப் பற்றி நாம் கற்றுக்கொள்வோம்.

^ பாரா. 8 இந்தக் கட்டுரையை நன்றாகப் புரிந்துகொள்வதற்கு ரூத் புத்தகத்தில் இருக்கிற 1-ஆம் அதிகாரத்தையும், 2-ஆம் அதிகாரத்தையும் நீங்கள் படித்துப் பார்க்கலாம்.

^ பாரா. 17 நகோமியைப் பற்றி நாம் பேசிக்கொண்டிருப்பதால், இந்த இடத்தில் சகோதரி என்று சொல்லியிருக்கிறோம். ஆனால், இந்தக் கட்டுரையில் இருக்கிற விஷயங்கள் சகோதரர்களுக்கும் பொருந்தும்.