படிப்புக் கட்டுரை 46
புதுமணத் தம்பதிகளே—யெகோவாவுக்குச் சேவை செய்வதையே உங்கள் லட்சியமாக வையுங்கள்
“யெகோவா என் பலம், . . . என் இதயம் அவரையே நம்பியிருக்கிறது.”—சங். 28:7.
பாட்டு 131 ‘தேவன் இணைத்த பந்தம்’
இந்தக் கட்டுரையில்... *
1-2. (அ) புதுமணத் தம்பதிகள் ஏன் யெகோவாவை நம்ப வேண்டும்? (சங்கீதம் 37:3, 4) (ஆ) இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
கல்யாண வாழ்க்கையில் நீங்கள் காலடியெடுத்து வைக்கப்போகிறீர்களா? அல்லது நீங்கள் புது மண ஜோடியா? அப்படியென்றால், உங்கள் மனதுக்குப் பிடித்தவரோடு சந்தோஷமாக வாழ்வதற்கு நீங்கள் ஆசை ஆசையாக இருப்பீர்கள். கல்யாண வாழ்க்கையில் நிச்சயம் பிரச்சினைகள் வரும். அதோடு, நீங்கள் முக்கியமான முடிவுகளும் எடுக்க வேண்டியிருக்கும். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்குமா இருக்காதா என்பது, உங்களுக்கு வருகிற பிரச்சினைகளை நீங்கள் எப்படிச் சமாளிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும் எப்படிப்பட்ட முடிவுகளை நீங்கள் எடுக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தும்தான் இருக்கிறது. யெகோவாவை நம்பி நீங்கள் சரியான முடிவுகள் எடுத்தால், உங்கள் இரண்டு பேருக்கும் இடையில் இருக்கிற பந்தம் பலமாகும். உங்களுடைய கல்யாண வாழ்க்கை தித்திக்கும். யெகோவா சொல்வதைக் கேட்டு நடக்கவில்லை என்றால், உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் வந்துவிடலாம், கல்யாண வாழ்க்கையும் கசக்க ஆரம்பித்துவிடலாம்.—சங்கீதம் 37:3, 4-ஐ வாசியுங்கள்.
2 புதுமணத் தம்பதிகளுக்காக இந்தக் கட்டுரை முக்கியமாக எழுதப்பட்டிருந்தாலும், ஏற்கெனவே கல்யாணம் ஆனவர்களுக்கும் ரொம்ப உதவியாக இருக்கும். இந்தக் கட்டுரையில், பைபிள் காலங்களில் கடவுளுக்கு உண்மையாக வாழ்ந்த சில ஆண்களிடமிருந்தும் பெண்களிடமிருந்தும் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கப்போகிறோம். இந்தப் பாடங்கள், கல்யாண வாழ்க்கைக்கு மட்டுமல்ல நம்முடைய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட
மற்ற விஷயங்களுக்கும் எப்படி உதவும் என்பதைப் பார்க்கப்போகிறோம். அதோடு, இன்றைக்கு இருக்கிற தம்பதிகளிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையும் பார்ப்போம்.புதுமணத் தம்பதிகளும் சவால்களும்
3-4. புதிதாக கல்யாணம் ஆனவர்களுக்கு என்னென்ன சவால்கள் வரலாம்?
3 புதிதாக கல்யாணம் ஆனவர்களிடம், அவர்களுடைய அப்பா அம்மாவும் சொந்தக்காரர்களும், ‘சீக்கிரம் ஒரு பிள்ளய பெத்துக்குடுங்க’ என்று சொல்லி கட்டாயப்படுத்தலாம். நண்பர்களும் குடும்பத்தில் இருக்கிற மற்றவர்களும், ‘சீக்கிரத்திலேயே சொந்த வீடு வாங்கிடுங்க, தேவையான பொருள்களை எல்லாம் இப்பவே சேத்துவெச்சுக்குங்க’ என்றும் சொல்லலாம்.
4 புதுமணத் தம்பதிகள் ஜாக்கிரதையாக இல்லையென்றால், தேவையில்லாத கடனில் போய் சிக்கிக்கொள்ள வேண்டியிருக்கும். பின்பு, அந்தக் கடனை அடைப்பதற்காக கணவனும் மனைவியும் நேரம்காலம் பார்க்காமல் வேலை செய்ய வேண்டியிருக்கும். அப்படிச் செய்யும்போது, பைபிளைப் படிப்பதற்கும் குடும்ப வழிபாடு செய்வதற்கும் ஊழியம் செய்வதற்கும் நேரம் கிடைக்காமல் போகலாம். நிறைய பணம் சம்பாதிப்பதற்காகவும் வேலையைத் தக்க வைத்துக்கொள்வதற்காகவும், ஓவர்டைம் செய்ய வேண்டியிருப்பதால் கூட்டங்களில்கூட கலந்துகொள்ள முடியாமல் போகலாம். அதனால், யெகோவாவுக்கு இன்னும் அதிகமாக சேவை செய்வதற்குக் கிடைக்கிற பொன்னான வாய்ப்புகளை இழக்க வேண்டியிருக்கும்.
5. கெவின்-மரியா தம்பதியிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
5 பொருள்களை வாங்கிக் குவிப்பதிலேயே குறியாக இருந்தால் நிச்சயம் சந்தோஷம் கிடைக்காது என்பதை நிறைய பேருடைய வாழ்க்கை அனுபவங்கள் காட்டுகின்றன. கெவின்-மரியா தம்பதியின் அனுபவத்தை இப்போது பார்க்கலாம். * கல்யாணமான புதிதில் நல்ல வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக அவர்கள் இரண்டு பேருமே முழுநேர வேலை செய்தார்கள். ஆனால், உண்மையில் அவர்களுக்குச் சந்தோஷமும் கிடைக்கவில்லை, நிம்மதியாகவும் இருக்க முடியவில்லை. “பணம், பொருள் எல்லாம் எங்ககிட்ட தேவைக்கு அதிகமாவே இருந்துச்சு. ஆனா யெகோவாவோட சேவைய அதிகமா செய்றதுக்காக நாங்க எந்த குறிக்கோளும் வெக்கல. உண்மைய சொல்லணும்னா நாங்க சந்தோஷமாவும் இல்ல, நிம்மதியாவும் இல்ல” என்று கெவின் சொல்கிறார். பொருள்களை வாங்கிக் குவிப்பதிலேயே குறியாக இருந்ததால், உங்களுடைய சந்தோஷமும் பறிபோய்விட்டதா? கவலைப்படாதீர்கள்! மற்றவர்களுடைய நல்ல அனுபவங்கள், மாற்றங்களைச் செய்ய உங்களுக்கு உதவும். முதலில், யோசபாத் ராஜாவிடமிருந்து கணவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதைப் பார்க்கலாம்.
யெகோவாவை நம்பியிருங்கள் —யோசபாத் ராஜாவைப் போல்
6. யோசபாத்துக்கு ஒரு பெரிய சோதனை வந்தபோது, நீதிமொழிகள் 3:5, 6-ல் சொன்னபடி எப்படிச் செய்தார்?
6 கணவர்களே, உங்களுடைய பொறுப்புகளை நினைத்து நீங்கள் என்றைக்காவது திணறிப்போயிருக்கிறீர்களா? அப்படியென்றால், யோசபாத் ராஜாவிடமிருந்து நீங்கள் கற்றுக்கொள்ளலாம். முழு தேசத்தையே பார்த்துக்கொள்ளும் பெரிய பொறுப்பு அவருக்கு இருந்தது! அவருடைய குடிமக்களை பாதுகாக்க வேண்டியிருந்தது. இவ்வளவு பெரிய பொறுப்பை அவர் எப்படிச் செய்தார்? யூதா நகரங்களை அவர் பலப்படுத்தினார். 11,60,000 படைவீரர்கள் அடங்கிய ஒரு பெரிய படையைத் தயாராக வைத்திருந்தார். (2 நா. 17:12-19) கொஞ்சக் காலத்துக்குப் பின்பு, அவருக்கு ஒரு பெரிய சோதனை வந்தது. அம்மோனியர்களும் மோவாபியர்களும் சேயீர் மலைப்பிரதேசத்தை சேர்ந்த ஜனங்களும் அவருக்கு எதிராகப் போருக்கு வந்தார்கள். அவரையும் அவருடைய குடும்பத்தையும் அவருடைய மக்களையும் பயப்படுத்தினார்கள். (2 நா. 20:1, 2) அப்போது யோசபாத் என்ன செய்தார்? பலத்துக்காக யெகோவாவிடம் கெஞ்சினார். சொல்லப்போனால், நீதிமொழிகள் 3:5, 6-ல் சொல்லப்பட்டிருக்கிறபடி யோசபாத் செய்தார். (வாசியுங்கள்.) அவர் தாழ்மையோடு செய்த ஜெபத்தை 2 நாளாகமம் 20:5-12-ல் நாம் வாசிக்கிறோம். யெகோவா அப்பாவை அவர் எவ்வளவு நம்பியிருந்தார் என்பது அதிலிருந்து தெரிகிறது. அவருடைய ஜெபத்துக்கு யெகோவா எப்படிப் பதில் கொடுத்தார்?
7. யோசபாத்தின் ஜெபத்துக்கு யெகோவா எப்படிப் பதில் கொடுத்தார்?
7 யகாசியேல் என்ற லேவியர் மூலம் யோசபாத்திடம் யெகோவா பேசினார். “அணிவகுத்துப் போய் நில்லுங்கள், அசையாமல் அப்படியே நில்லுங்கள், யெகோவா உங்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்று பாருங்கள்” என்று சொன்னார். (2 நா. 20:13-17) பொதுவாக, போர்க்களத்தில் யாரும் இப்படிச் சும்மா நிற்கமாட்டார்கள்! ஆனால், அந்தக் கட்டளை மனுஷரிடமிருந்து வரவில்லை, யெகோவாவிடமிருந்து வந்தது. யெகோவாமேல் முழு நம்பிக்கை வைத்து அவர் சொன்னதை அப்படியே யோசபாத் செய்தார். எதிரிகளை எதிர்த்து போர் செய்யப்போனபோது, படைவீரர்களை அல்ல, பாடகர்களையே அவர் முன்வரிசையில் நிறுத்தினார். தான் சொன்னபடியே யோசபாத்துக்கு யெகோவா உதவினார், எதிரிகளைத் தோற்கடித்தார்.—2 நா. 20:18-23.
8. யோசபாத்திடமிருந்து கணவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?
8 கணவர்களே, உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. அவர்களைப் பாதுகாப்பதற்காகவும் நன்றாக கவனித்துக்கொள்வதற்காகவும் நீங்கள் கடினமாக உழைக்கிறீர்கள். ஆனால், உங்கள் வாழ்க்கையில் பிரச்சினைகள் வரும்போது, நீங்களாகவே அவற்றைச் சரி செய்துவிடலாம் என்று ஒருவேளை நீங்கள் நினைக்கலாம். ஆனால், எப்போதுமே உங்களுடைய சொந்த பலத்தை நம்பி இருக்காதீர்கள். உதவி கேட்டு யெகோவாவிடம் தனியாக ஜெபம் செய்யுங்கள். உங்களுடைய மனைவியோடு சேர்ந்தும் உருக்கமாக ஜெபம் செய்யுங்கள். பைபிளையும் அமைப்பு கொடுத்திருக்கிற பிரசுரங்களையும் படியுங்கள். அவற்றில் இருக்கிறபடி செய்யுங்கள். ஒருவேளை, நீங்கள் எடுக்கிற முடிவுகளை மற்றவர்கள் ஏற்றுக்கொள்ளாமல் போகலாம். முட்டாள்தனமாக நடந்துகொள்கிறீர்கள் என்றும் சொல்லலாம். பணம் பொருள்தான் பாதுகாப்பு தரும் என்றும் சொல்லலாம். அப்படிப்பட்ட சமயத்தில், யோசபாத்தை நினைத்துக்கொள்ளுங்கள். அவர் யெகோவாவை முழுமையாக நம்பினார். யெகோவா அவரைக் கைவிடவே இல்லை, உங்களையும் கைவிடவே மாட்டார். (சங். 37:28; எபி. 13:5) இப்போது, இன்னும் நீங்கள் சந்தோஷமாக இருப்பதற்கு கணவனும் மனைவியுமாக சேர்ந்து என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
யெகோவாவின் சேவையே உங்கள் லட்சியமாக இருக்கட்டும்—ஏசாயாவையும் அவருடைய மனைவியையும் போல்
9. ஏசாயாவும் அவருடைய மனைவியும் எப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள்?
9 ஏசாயா ஒரு தீர்க்கதரிசியாக இருந்தார். அவருடைய மனைவியையும் ‘தீர்க்கதரிசனம் சொல்கிறவள்’ என்று பைபிள் சொல்கிறது. (ஏசா. 8:1-4) அதனால், அவளுக்கும் தீர்க்கதரிசனம் சொல்கிற வேலைகள் இருந்திருக்கும். கணவன் மனைவியாக, யெகோவாவின் சேவையைச் செய்வதில்தான் அவர்கள் இரண்டு பேருமே குறியாக இருந்தார்கள். இன்றைக்கு இருக்கிற தம்பதிகளுக்கு அவர்கள் அருமையான முன்மாதிரி வைத்திருக்கிறார்கள், இல்லையா?
10. பைபிள் தீர்க்கதரிசனங்களை நன்றாகப் படிப்பது யெகோவாவுக்கு அதிகமாக சேவை செய்ய தம்பதிகளுக்கு எப்படி உதவும்?
10 தம்பதிகளே, யெகோவாவுக்குச் சேவை செய்வதிலேயே குறியாக இருப்பதன் மூலம் நீங்கள் ஏசாயாவைப் போலவும் அவருடைய மனைவியைப் போலவும் இருக்கலாம். யெகோவாமேல் இருக்கிற நம்பிக்கையைப் பலப்படுத்துவதற்கு பைபிள் தீர்க்கதரிசனங்களை ஒன்றாகச் சேர்ந்து படியுங்கள். * (தீத். 1:3) அவை எப்படியெல்லாம் நிறைவேறி வருகின்றன என்பதைப் பாருங்கள். சில பைபிள் தீர்க்கதரிசனங்களின் நிறைவேற்றத்தில் உங்களுக்கு என்ன பங்கு இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள். உதாரணத்துக்கு, முடிவு வருவதற்கு முன்பு இந்த உலகம் முழுவதும் நல்ல செய்தி பிரசங்கிக்கப்படும் என்று இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தில் உங்களுக்கு என்ன பங்கு இருக்கிறதென்று நினைத்துப்பாருங்கள். (மத். 24:14) அந்தத் தீர்க்கதரிசனம் எந்தளவுக்கு நிறைவேறிவருகிறது என்பதைப் பார்க்க பார்க்க யெகோவாவுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்ற ஆசை உங்களுக்கு அதிகமாகும்.
யெகோவாவின் சேவையை முதலிடத்தில் வையுங்கள்—பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் போல்
11. ஆக்கில்லாவும் பிரிஸ்கில்லாளும் என்ன செய்தார்கள், ஏன் செய்தார்கள்?
11 புதுமணத் தம்பதிகள் பிரிஸ்கில்லாள்-ஆக்கில்லா தம்பதியிடமிருந்து நிறைய கற்றுக்கொள்ளலாம். அவர்கள் இரண்டு பேரும் யூதர்கள், ரோம் நகரத்தில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியைக் கேள்விப்பட்டு கிறிஸ்தவர்களாக ஆனார்கள். அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால், யூதர்கள் எல்லாரும் ரோமை விட்டு வெளியேற வேண்டும் என்று பேரரசர் கிலவுதியு கட்டளை போட்டபோது அவர்கள் வாழ்க்கை தலைகீழாக மாறிவிட்டது. அவர்களுக்குப் பழக்கமான இடத்தைவிட்டு அவர்கள் போக வேண்டியிருந்தது. ஒரு புது இடத்துக்குப் போய், அங்கே வீட்டைக் கண்டுபிடித்து, கூடாரத் தொழிலை மறுபடியும் ஆரம்பிக்க வேண்டியிருந்தது. இந்த மாற்றங்களால் யெகோவாவின் சேவையை அவர்கள் பின்னுக்குத் தள்ளிவிட்டார்களா? பதில் உங்களுக்கே நன்றாகத் தெரியும்! அவர்கள் போயிருந்த கொரிந்து நகரத்தில், அங்கிருந்த சபையோடு சேர்ந்து இரண்டு பேரும் சுறுசுறுப்பாகச் சேவை செய்தார்கள். அப்போஸ்தலன் பவுலோடு சேர்ந்து சகோதர சகோதரிகளுக்கு நிறைய உதவிகளைச் செய்தார்கள். அதற்குப் பின்பு, தேவை அதிகமாக இருக்கிற ஊர்களுக்கு மாறிப்போனார்கள். (அப். 18:18-21; ரோ. 16:3-5) அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து யெகோவாவின் சேவையை எவ்வளவு சந்தோஷமாக அனுபவித்திருப்பார்கள் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்!
12. யெகோவாவின் சேவையில் தம்பதிகள் ஏன் சில குறிக்கோள்களை வைக்க வேண்டும்?
12 யெகோவாவின் சேவையை முதலிடத்தில் வைப்பதன் மூலம் இன்றைக்கு இருக்கிற தம்பதிகள் ஆக்கில்லா-பிரிஸ்கில்லாள் தம்பதியைப் போல் நடந்துகொள்ளலாம். கல்யாணம் செய்துகொள்ளப்போகிறவர்கள் யெகோவாவின் சேவையில் என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம் என்பதைப் பற்றி கல்யாணத்துக்கு முன்பே பேசி வைத்துக்கொள்ள வேண்டும். இப்படிக் குறிக்கோள்களை வைத்து, அதை அடைவதற்கு முயற்சி செய்கிறபோது யெகோவா எப்படியெல்லாம் உதவுகிறார் என்பதை அவர்களால் கண்ணாரப் பார்க்க முடியும். (பிர. 4:9, 12) இப்போது, ரஸல்-எலிசபெத் தம்பதியைப் பற்றிப் பார்க்கலாம். “நாங்க காதலிச்சிட்டிருந்த சமயத்திலயே யெகோவாவுக்கு நிறைய செய்றத பத்தி பேசினோம்” என்று ரஸல் சொல்கிறார். “நாங்க அப்படி பேசினதால பின்னாடி நிறைய முடிவுகள எடுத்தப்ப, எங்களோட குறிக்கோள்கள அடையறதுக்கு எந்த தடையும் இல்லாத மாதிரி பாத்துக்க முடிஞ்சது” என்று எலிசபெத் சொல்கிறார். இப்படியெல்லாம் செய்ததால், தேவை அதிகமாக இருக்கிற மைக்ரோனேசியாவுக்கு இவர்களால் மாறிப் போக முடிந்தது.
13. யெகோவாவை நம்பும்போது சங்கீதம் 28:7-ல் இருக்கிறபடி என்ன நடக்கும்?
13 ரஸல்-எலிசபெத் தம்பதியைப் போலவே இன்றைக்கு நிறைய தம்பதிகள் ஊழியத்தை அதிகமாக சங்கீதம் 28:7-ஐ வாசியுங்கள்.
செய்வதற்காக தங்களுடைய வாழ்க்கையை எளிமையாக்கி இருக்கிறார்கள். தேவையில்லாத விஷயங்களை அவர்கள் இழுத்துப் போட்டுக்கொள்வதில்லை. இப்படி, தம்பதிகள் யெகோவாவின் சேவையில் நல்ல குறிக்கோள்களை வைத்து ஒன்றுசேர்ந்து உழைக்கும்போது அருமையான பலன்கள் கிடைக்கும். அவர்களை யெகோவா எப்படியெல்லாம் கவனித்துக்கொள்கிறார் என்பதை அவர்களால் பார்க்க முடியும். அவர்மேல் இருக்கிற நம்பிக்கை அதிகமாகும், உண்மையான சந்தோஷம் கிடைக்கும்.—யெகோவாவின் வாக்குறுதிகளை நம்புங்கள்—அப்போஸ்தலன் பேதுருவையும் அவருடைய மனைவியையும் போல்
14. மத்தேயு 6:25, 31-34-ல் இருக்கிற வாக்குறுதியில் நம்பிக்கை வைத்திருந்ததை அப்போஸ்தலன் பேதுருவும் அவருடைய மனைவியும் எப்படிக் காட்டினார்கள்?
14 அப்போஸ்தலன் பேதுருவிடமிருந்தும் அவருடைய மனைவியிடமிருந்தும் தம்பதிகள் பாடம் கற்றுக்கொள்ளலாம். பேதுரு முதன்முதலில் இயேசுவைச் சந்தித்து கிட்டத்தட்ட ஆறு மாதத்திலிருந்து ஒரு வருஷம் ஆகியிருந்தது. அந்தச் சமயத்தில், முக்கியமான ஒரு முடிவை அவர் எடுக்க வேண்டியிருந்தது. பேதுரு இதுவரை மீன் பிடிக்கிற தொழில் செய்துகொண்டிருந்தார். முழுநேரமாக ஊழியம் செய்ய இயேசு அவரைக் கூப்பிட்டபோது, முதலில் தன்னுடைய குடும்ப சூழ்நிலையை அவர் யோசித்துப்பார்க்க வேண்டியிருந்தது. (லூக். 5:1-11) கடைசியில், இயேசுவோடு சேர்ந்து ஊழியம் செய்வது என்று பேதுரு முடிவெடுத்தார். அவர் எவ்வளவு சரியான முடிவை எடுத்திருக்கிறார், பார்த்தீர்களா? அவர் எடுத்த அந்த முடிவுக்கு அவருடைய மனைவி நிச்சயம் ஆதரவு கொடுத்திருப்பாள். ஏனென்றால், இயேசு உயிர்த்தெழுந்த பின்பு, ஊழியம் செய்வதற்காக பேதுருவோடு சேர்ந்து அவள் கொஞ்ச நாட்கள் பயணம் செய்தாள் என்பதை பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். (1 கொ. 9:5) அவள் முன்மாதிரியான ஒரு மனைவியாக இருந்ததால், கிறிஸ்தவ கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் எந்தத் தயக்கமும் இல்லாமல் பேதுருவால் அறிவுரை கொடுக்க முடிந்தது. (1 பே. 3:1-7) கடவுளுடைய அரசாங்கத்தை முதலிடத்தில் வைத்தால், மற்ற காரியங்களையெல்லாம் யெகோவா பார்த்துக்கொள்வார் என்பதை பேதுருவும் அவருடைய மனைவியும் முழுமையாக நம்பினார்கள்.—மத்தேயு 6:25-யும், 31-34-யும் வாசியுங்கள்.
15. டியாகோ-எஸ்தர் தம்பதியிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
15 உங்களுக்குக் கல்யாணமாகி சில வருஷங்கள் உருண்டோடிவிட்டனவா? அப்படியென்றால், யெகோவாவுக்கு அதிகமாக ஊழியம் செய்ய வேண்டும் என்ற ஆசையை நீங்கள் எப்படித் தொடர்ந்து வளர்த்துக்கொள்ளலாம்? அதற்கு ஒரு வழி, மற்ற தம்பதிகளுடைய அனுபவங்களைப் படித்துப் பார்ப்பதாகும். இதற்கு, “தங்களையே மனப்பூர்வமாக அர்ப்பணித்தார்கள்” என்ற தலைப்பில் வரும் கட்டுரைகளை நீங்கள் படித்துப் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட கட்டுரைகளைப் படித்ததால் தேவை அதிகமுள்ள இடத்தில் ஊழியம் செய்ய வேண்டும் என்ற ஆசை பிரேசிலில் இருக்கிற டியாகோ-எஸ்தர் தம்பதிக்கு வந்தது. “இன்னைக்கு யெகோவா தன்னோட ஊழியர்களுக்கு எப்படியெல்லாம் உதவுறாருங்கறத நாங்க படிச்சோம். அதனால, யெகோவாவோட அறிவுரைய கேட்டு நடந்து அவர் கொடுக்கற உதவிய ருசிக்கணும்னு ஆசப்பட்டோம்” என்று டியாகோ சொல்கிறார். கடைசியில், அவர்கள் பராகுவே நாட்டுக்கு குடிமாறிப் போனார்கள். 2014-லிருந்து போர்ச்சுகீஸ் மொழி பேசும் பகுதியில் ஊழியம் செய்கிறார்கள். “எங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப பிடிச்ச வசனம் எபேசியர் 3:20. அந்த வசனத்தில சொல்லியிருக்கறது எங்களோட வாழ்க்கையில எவ்வளவு உண்மைங்கறத அடிக்கடி ருசிச்சிருக்கறோம்” என்று எஸ்தர் சொல்கிறார். அப்போஸ்தலன் பவுல் எபேசியர்களுக்கு எழுதிய அந்தக் கடிதத்தில், நாம் கேட்பதைவிட யெகோவா பல மடங்கு அதிகமாக நமக்குக் கொடுப்பார் என்று வாக்குறுதி கொடுத்திருக்கிறார். இந்த வாக்குறுதி நூற்றுக்கு நூறு உண்மை!
16. இளம் தம்பதிகள் தங்களுடைய குறிக்கோளை அடைவதற்கு யாரிடம் உதவி கேட்கலாம்?
16 இளம் தம்பதிகளே, யெகோவாவை நம்பியிருப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்வதற்கு அனுபவசாலிகளிடம் நீங்கள் கேட்கலாம். தம்பதிகள் சிலர் ரொம்ப வருஷங்களாக முழுநேர சேவையில் இருப்பார்கள். உங்களுடைய குறிக்கோள்களை எப்படி அடையலாம் என்பதைப் பற்றி அவர்களிடம் தாராளமாக ஆலோசனை கேட்கலாம். யெகோவாவை நீங்கள் நம்புகிறீர்கள் என்பதைக் காட்டுவதற்கு இதுவும் ஒரு வழி. (நீதி. 22:17, 19) குறிக்கோள்களை வைக்கவும் அதை அடையவும் இளம் தம்பதிகளுக்கு மூப்பர்களும் உதவலாம்.
17. கெவின்-மரியா தம்பதிக்கு என்ன நடந்தது, அவர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
17 சில சமயங்களில் நாம் விரும்புகிற சேவையைச்
செய்ய முடியாமல் போகலாம். நாம் ஆரம்பத்தில் பார்த்த கெவின்-மரியா தம்பதியின் விஷயத்தில் இதுதான் நடந்தது. அவர்களுக்குக் கல்யாணமாகி மூன்று வருஷங்களுக்குப் பின்பு, பின்லாந்து கிளை அலுவலகத்தில் நடந்துகொண்டிருந்த கட்டுமான வேலையைச் செய்வதற்காக சொந்த ஊரை விட்டுப்போனார்கள். ஆனால், அங்கே ஆறு மாதங்களுக்குமேல் தங்க முடியாது என்று தெரிந்தபோது அவர்களுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால், சீக்கிரத்திலேயே அரபிக் மொழியைக் கற்றுக்கொள்வதற்கான வகுப்புக்கு அவர்கள் அழைக்கப்பட்டார்கள். இன்றைக்கு வேறொரு நாட்டில் அரபிக் மொழி பேசும் ஊழியப் பகுதியில் சேவை செய்துகொண்டிருக்கிறார்கள். “முன்ன பின்ன செஞ்சு பழக்கம் இல்லாத ஒரு வேலையில இறங்கறது எனக்கு பயமாக இருந்துச்சு. அதனால முழுசா யெகோவாவ நம்பியிருக்க வேண்டியிருந்துச்சு. நாங்க அப்படி நம்புனதால எதிர்பார்க்காத விதங்கள்ல அவரு எங்கள ஆசீர்வதிச்சாரு. இதயெல்லாம் பார்த்தப்ப, அவர்மேல வெச்சிருக்கிற நம்பிக்க இன்னும் அதிகமாச்சு” என்று மரியா சொல்கிறார். இவர்களுடைய அனுபவம் காட்டுவதுபோல், யெகோவாவை நீங்கள் முழுமையாக நம்பினால் நிச்சயம் அவர் உங்களை ஆசீர்வதிப்பார்.18. யெகோவாமேல் தொடர்ந்து நம்பிக்கை வைக்க தம்பதிகள் என்ன செய்ய வேண்டும்?
18 கல்யாணம் என்பது யெகோவா கொடுத்த அற்புதமான ஒரு பரிசு. (மத். 19:5, 6) அந்தப் பரிசு உங்களுக்குச் சந்தோஷத்தைத் தர வேண்டுமென்று அவர் ஆசைப்படுகிறார். (நீதி. 5:18) இளம் தம்பதிகளே, உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் எப்படிப் பயன்படுத்துகிறீர்கள் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். யெகோவா உங்களுக்குக் கொடுத்த பரிசுகளுக்கெல்லாம் நீங்கள் ரொம்ப நன்றியோடிருக்கிறீர்கள் என்பதைக் காட்டுவதற்கு உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்கிறீர்களா? யெகோவாவிடம் மனம்விட்டுப் பேசுங்கள். உங்களுடைய சூழ்நிலைக்குப் பொருந்துகிற பைபிள் வசனங்களைக் கண்டுபிடியுங்கள். யெகோவா சொல்கிற அறிவுரையின்படி செய்யுங்கள். யெகோவாவுக்குச் சேவை செய்வதை லட்சியமாக வைத்து கணவனும் மனைவியுமாகச் சேர்ந்து உழைத்தால், உங்கள் வாழ்க்கையில் சந்தோஷமும் நிம்மதியும் பூத்துக் குலுங்கும்!
பாட்டு 132 நாம் ஒரே உடலானோம்!
^ பாரா. 5 புதுமணத் தம்பதிகளே, நீங்கள் சரியான முடிவுகள் எடுத்தால் உங்களுடைய நேரத்தையும் சக்தியையும் யெகோவாவுக்குக் கொடுக்க முடியும். உங்கள் வாழ்க்கையும் சந்தோஷமாக... நிம்மதியாக... இருக்கும். ஒருவேளை அப்படி எடுக்கவில்லை என்றால், மற்ற விஷயங்கள் உங்களுடைய நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சிவிடும். அப்படியென்றால், நீங்கள் எப்படிச் சரியான முடிவுகள் எடுக்கலாம்? அதைப் பற்றி இந்தக் கட்டுரை சொல்லும்.
^ பாரா. 5 சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
^ பாரா. 10 உதாரணத்துக்கு, தூய வணக்கம்—பூமியெங்கும்! புத்தகத்தில் அதிகாரங்கள் 6, 7-யும் 19-யும் பாருங்கள்.