Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 44

யெகோவாவின் மாறாத அன்பால் உங்களுக்கு என்ன நன்மை?

யெகோவாவின் மாறாத அன்பால் உங்களுக்கு என்ன நன்மை?

“[யெகோவா] என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்.”—சங். 136:1.

பாட்டு 108 தேவனின் மாறாத அன்பு

இந்தக் கட்டுரையில்... *

1. நாம் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா சொல்கிறார்?

மாறாத அன்பைக் காட்ட யெகோவா ரொம்ப ஆசைப்படுகிறார். (ஓசி. 6:6, அடிக்குறிப்பு) அந்தக் குணத்தைக் காட்டும்படி நம்மையும் அன்பாகக் கேட்டுக்கொள்கிறார். ‘மாறாத அன்பை நெஞ்சார நேசியுங்கள்’ என்று மீகா தீர்க்கதரிசி வழியாக நம்மிடம் சொல்கிறார். (மீ. 6:8, அடிக்குறிப்பு) ஆனால், அந்தக் குணத்தைக் காட்ட வேண்டுமென்றால், முதலில் மாறாத அன்பு என்றால் என்னவென்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

2. மாறாத அன்பு என்றால் என்ன?

2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பில், “மாறாத அன்பு” என்ற வார்த்தையும் அதே அர்த்தத்தை தருகிற வார்த்தைகளும் கிட்டத்தட்ட 230 தடவை இருக்கின்றன. “கடமையுணர்ச்சி, உத்தம குணம், உண்மைத்தன்மை, பற்று ஆகியவற்றால் தூண்டப்பட்ட அன்பை இது குறிக்கிறது. மனிதர்கள்மீது கடவுள் வைத்திருக்கும் அன்பைப் பற்றிச் சொல்வதற்கு இந்த வார்த்தை அடிக்கடி பயன்படுத்தப்படுகிறது. மனிதர்களுக்கு இடையே காட்டப்படுகிற அன்பையும் இது குறிக்கிறது” என்று இந்த பைபிளின் சொல் பட்டியல் விளக்குகிறது. மாறாத அன்பைக் காட்டுவதில் யாருமே யெகோவாவை மிஞ்ச முடியாது. அவர் எப்படி மனிதர்கள்மேல் மாறாத அன்பைக் காட்டுகிறார் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அவரைப் போலவே நாமும் எப்படி ஒருவருக்கொருவர் மாறாத அன்பைக் காட்டலாம் என்பதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

யெகோவா “மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர்”

3. யெகோவா தன்னைப் பற்றி மோசேயிடம் என்ன சொன்னார்?

3 இஸ்ரவேலர்கள் எகிப்தைவிட்டு வந்த கொஞ்ச நாட்களிலேயே யெகோவா தன்னுடைய பெயரைப் பற்றியும் குணங்களைப் பற்றியும் மோசேயிடம் இப்படிச் சொன்னார்: “யெகோவா, யெகோவா, இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர், ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கு மாறாத அன்பைக் காட்டுபவர், குற்றத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிப்பவர்.” (யாத். 34:6, 7) யெகோவா தன்னுடைய அருமையான குணங்களைப் பற்றி மோசேயிடம் சொன்னபோது மாறாத அன்பை அவர் எப்படிக் காட்டுகிறார் என்பதைப் பற்றியும் சொன்னார். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

4-5. (அ) தன்னை எப்படிப்பட்டவர் என்று யெகோவா சொன்னார்? (ஆ) என்ன கேள்விகளுக்கான பதில்களை பார்க்கப்போகிறோம்?

4 தன்னைப் பற்றி யெகோவா சொன்னபோது, மாறாத அன்பைக் காட்டுபவர் என்று மட்டுமே சொல்லவில்லை. அதை “அளவில்லாமல் காட்டுபவர்” என்றும் சொன்னார். பைபிளில் இன்னும் ஆறு இடங்களில் இந்த வார்த்தைகளை நாம் பார்க்கிறோம். (எண். 14:18; நெ. 9:17; சங். 86:15; 103:8; யோவே. 2:13; யோனா 4:2) இந்த எல்லா வசனங்களிலும் யெகோவாதான் இந்தக் குணத்தை காட்டுகிறார் என்று சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, மனிதர்கள் காட்டுவதாக சொல்லப்படவில்லை. மாறாத அன்பை யெகோவா அளவில்லாமல் காட்டுகிறார் என்று பைபிளில் அடிக்கடி சொல்லப்பட்டிருப்பது, கவனிக்க வேண்டிய ஒரு விஷயம். மாறாத அன்பைக் காட்ட யெகோவா எவ்வளவு ஆசைப்படுகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது. * “யெகோவாவே, உங்களுடைய மாறாத அன்பு வானத்தைப் போல உயர்ந்தது. . . . கடவுளே, உங்களுடைய மாறாத அன்பு எவ்வளவு அருமையானது! உங்களுடைய சிறகுகளின் நிழலில் மக்கள் தஞ்சம் அடைகிறார்கள்” என்று தாவீது எழுதினார். (சங். 36:5, 7) தாவீதைப் போலவே, நீங்களும் யெகோவாவின் மாறாத அன்பை உயர்வாக நினைக்கிறீர்களா?

5 மாறாத அன்பைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்வதற்கு இரண்டு கேள்விகளுக்கு நாம் பதில் தெரிந்துகொள்ள வேண்டும். ஒன்று, யெகோவா யாருக்கு மாறாத அன்பு காட்டுகிறார்? இரண்டு, நமக்கு அவர் மாறாத அன்பு காட்டும்போது நாம் எப்படி நன்மை அடைகிறோம்?

யார்மீது யெகோவா மாறாத அன்பு காட்டுகிறார்?

6. யார்மேல் யெகோவா மாறாத அன்பைக் காட்டுகிறார்?

6 நிறைய விஷயங்களை நம்மால் நேசிக்க முடிகிறது. உதாரணத்துக்கு, “பெயரை,” “நியாயத்தை,” “சட்டத்தை,” “நல்லதை” நாம் நேசிக்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. (சங். 69:36; 99:4; 119:97; ஆமோ. 5:15) ஆனால், இப்படிப்பட்ட விஷயங்கள்மேல் மாறாத அன்பைக் காட்ட முடியாது, மனிதர்கள்மேல் மட்டும்தான் காட்ட முடியும். இருந்தாலும், எல்லாரிடமும் யெகோவா மாறாத அன்பு காட்டுவதில்லை. யாரெல்லாம் அவரிடம் நெருக்கமான நட்பு வைத்திருக்கிறார்களோ அவர்களிடம்தான் காட்டுகிறார். தன்னுடைய நண்பர்களிடம் யெகோவா உண்மையாக நடந்துகொள்கிறார். அவர்களுக்கு அருமையான ஓர் எதிர்காலத்தை வைத்திருக்கிறார். அவர்கள்மேல் வைத்திருக்கிற அன்பை அவர் விட்டுவிடவே மாட்டார்.

எல்லா மனிதர்களுக்கும் யெகோவா நிறைய நன்மைகளைச் செய்கிறார். அவரை வணங்காதவர்களுக்கும்கூட செய்கிறார் (பாரா 7) *

7. எல்லா மனிதர்கள்மேலும் யெகோவா எப்படி அன்பு காட்டியிருக்கிறார்?

7 பொதுவாக, எல்லா மனிதர்கள்மேலும் யெகோவா அன்பு காட்டியிருக்கிறார். அதைப் பற்றி நிக்கொதேமுவிடம் இயேசு இப்படிச் சொன்னார்: “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் [மனிதர்கள்மேல்] அன்பு காட்டினார்.”—யோவா. 3:1, 16; மத். 5:44, 45.

யாரெல்லாம் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு, அவருக்குப் பயந்து நடந்து, அவர்மேல் அன்புவைத்து, அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களோ, அவர்கள்மேல் அவர் மாறாத அன்பு காட்டுகிறார் என்பதை தாவீது ராஜாவும் தானியேல் தீர்க்கதரிசியும் எழுதியதிலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம் (பாராக்கள் 8-9)

8-9. (அ) தன்னுடைய ஊழியர்களுக்கு யெகோவா ஏன் மாறாத அன்பைக் காட்டுகிறார்? (ஆ) இனிவரும் பாராக்களில் என்ன பார்க்கப்போகிறோம்?

8 நாம் ஏற்கெனவே பார்த்ததுபோல, யாரெல்லாம் யெகோவாவிடம் நெருக்கமான நட்பு வைத்திருக்கிறார்களோ அவர்களிடம் மட்டும்தான் அவர் மாறாத அன்பைக் காட்டுகிறார். தாவீது ராஜாவும் தானியேல் தீர்க்கதரிசியும் சொன்னதிலிருந்தே நாம் இதைத் தெளிவாகத் தெரிந்துகொள்கிறோம். உதாரணத்துக்கு, “உங்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு உங்களுடைய மாறாத அன்பை எப்போதும் காட்டுங்கள்” என்றும், “யெகோவா காட்டுகிற மாறாத அன்பு அவருக்குப் பயந்து நடக்கிறவர்கள்மேல் என்றென்றுமே இருக்கும்” என்றும் தாவீது எழுதினார். ‘உண்மைக் கடவுளாகிய யெகோவாவே, . . . உங்கள்மேல் அன்புவைத்து உங்கள் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்களிடம் மாறாத அன்பைக் காட்டுபவரே’ என்று தானியேல் தீர்க்கதரிசி எழுதினார். (சங். 36:10; 103:17; தானி. 9:4) அதனால், யாரெல்லாம் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டு... அவருக்குப் பயந்து நடந்து... அவர்மேல் அன்பு வைத்து... அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறார்களோ... அவர்கள்மேல் அவர் மாறாத அன்பைக் காட்டுகிறார். தன்னை சரியான விதத்தில் வணங்குபவர்கள்மேல் மட்டும்தான் அவர் மாறாத அன்பைக் காட்டுகிறார் என்பது இதிலிருந்து தெரிகிறது.

9 யெகோவாவை வணங்குபவர்களாக ஆவதற்கு முன்பு, எல்லா மனிதர்கள்மேலும் அவர் காட்டுகிற அன்பை நாமும் ருசித்தோம். (சங். 104:14) ஆனால், யெகோவாவை வணங்க ஆரம்பித்த பின்பு அவருடைய மாறாத அன்பையும் ருசிக்கிறோம். சொல்லப்போனால், நம்மேல் அவர் “காட்டுகிற மாறாத அன்பு ஒழியாது” என்று அவர் வாக்குக் கொடுத்திருக்கிறார். (ஏசா. 54:10) “யெகோவா தனக்கு உண்மையாக இருப்பவர்களை விசேஷமாகக் கவனித்துக்கொள்வார்” என்பதை தாவீது தன்னுடைய வாழ்க்கையில் அனுபவித்திருக்கிறார். (சங். 4:3) இப்படி, அவர் நம்மை விசேஷமாக கவனித்துக்கொள்வதால் நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? அதைப் பற்றி சங்கீதக்காரர் இப்படிச் சொல்கிறார்: “ஞானமாக நடக்கிற எல்லாரும் இவற்றைக் கவனிப்பார்கள். மாறாத அன்பை யெகோவா எப்படியெல்லாம் காட்டினார் என்று நன்றாக யோசித்துப் பார்ப்பார்கள்.” (சங். 107:43) எந்த மூன்று வழிகளில் யெகோவா நமக்கு மாறாத அன்பைக் காட்டுகிறார் என்றும், அதிலிருந்து நாம் எப்படிப் பிரயோஜனம் அடையலாம் என்றும் இப்போது பார்க்கலாம்.

யெகோவா காட்டுகிற மாறாத அன்பிலிருந்து நாம் எப்படிப் பிரயோஜனம் அடையலாம்?

தன்னை வணங்குபவர்களை அவர் விசேஷமாக கவனித்துக்கொள்கிறார் (பாராக்கள் 10-16) *

10. யெகோவா காட்டும் மாறாத அன்பைப் புரிந்துகொள்வது நமக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கிறது? (சங்கீதம் 31:7)

10யெகோவா காட்டும் மாறாத அன்பு என்றென்றைக்கும் இருக்கும். 136-வது சங்கீதத்தில் மட்டும் மாறாத அன்பு என்ற வார்த்தை 26 தடவை வருகிறது. இந்தச் சங்கீதத்தின் முதல் வசனமே, “யெகோவாவுக்கு நன்றி சொல்லுங்கள், அவர் நல்லவர். அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்று சொல்கிறது. (சங். 136:1) இந்தச் சங்கீதத்தின் 2-வது வசனத்திலிருந்து 26-வது வசனம்வரை, “அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்ற வாக்கியம் திரும்பத் திரும்ப வருகின்றன. இந்தச் சங்கீதத்தைப் படிக்கும்போது, யெகோவா எப்படியெல்லாம் மாறாத அன்பைக் காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அதை நினைக்கும்போது, நாம் அப்படியே வாயடைத்துப் போய்விடுகிறோம். “அவரே என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்” என்ற வாக்கியம், யெகோவாவின் அன்பு என்றைக்கும் நம்மை விட்டுப் பிரியாது என்ற வாக்குறுதியைக் கொடுக்கிறது. இது நம்முடைய மனதுக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது! தன்னுடைய ஊழியர்கள்மேல் அவர் எப்போதுமே பாசமாக இருப்பார். முக்கியமாக, அவர்கள் வேதனையில் தவிக்கும்போது அவர்களை விட்டுப் பிரியவே மாட்டார். நாம் எப்படிப் பிரயோஜனம் அடைகிறோம்? யெகோவா நம்மை விட்டுப் பிரியவே மாட்டார் என்பதைப் புரிந்துகொள்ளும்போது நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. வேதனைகளைச் சகிப்பதற்கான பலம் கிடைக்கிறது. முடிவில்லாத வாழ்வுக்கான பாதையில் தொடர்ந்து நடக்க உதவியாக இருக்கிறது.—சங்கீதம் 31:7-ஐ வாசியுங்கள்.

11. சங்கீதம் 86:5 சொல்கிறபடி, யெகோவா ஏன் மன்னிக்கிறார்?

11யெகோவாவிடம் மாறாத அன்பு என்ற குணம் இருப்பதால் மற்றவர்களை அவர் மன்னிக்கிறார். மோசமான பாவங்களைச் செய்தவர்கள் தங்களுடைய தவறான வழியை விட்டு மனம் திருந்தும்போது, அவர்களை யெகோவா மன்னிக்கிறார். அதற்குக் காரணம், அவரிடம் இருக்கிற மாறாத அன்பு என்ற குணம்தான். “நாம் செய்த பாவங்களுக்கு ஏற்றபடி அவர் நம்மை நடத்தவில்லை. நாம் செய்த குற்றங்களுக்குத் தகுந்தபடி நம்மைத் தண்டிக்கவில்லை” என்று சங்கீதக்காரரான தாவீது எழுதினார். (சங். 103:8-11) குற்ற உணர்வு இருந்தால் மனம் எவ்வளவு பாரமாக இருக்கும் என்பது தாவீதுக்கு நன்றாகத் தெரியும். அதே சமயத்தில், யெகோவா “மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என்பதும் அவருக்கு நன்றாகத் தெரியும். நாம் இதுவரை பார்த்தபடி, யெகோவா ஏன் மன்னிக்கிறார்? சங்கீதம் 86:5-ல் இதற்கான பதில் இருக்கிறது. (வாசியுங்கள்.) அந்தச் சங்கீதத்தில் தாவீது சொன்னதுபோல், மாறாத அன்பு யெகோவாவிடம் அளவில்லாமல் இருப்பதால், தன்னிடம் மன்னிப்பு கேட்கிறவர்களை அவர் தாராளமாக மன்னிக்கிறார்.

12-13. நாம் செய்த தவறை நினைத்து சோர்ந்துபோயிருந்தால் எதை மறந்துவிடக் கூடாது?

12 நாம் மோசமான பாவம் செய்துவிட்டால், அதை நினைத்து வருத்தப்படுவது நல்லதுதான். அப்படி வருத்தப்பட்டால்தான் நாம் மனம் திருந்துவோம், நம்முடைய தவறுகளை சரிசெய்துகொள்வோம். ஆனால், கடவுளுடைய ஊழியர்களில் சிலர், தாங்கள் செய்த தவறை நினைத்து அளவுக்கதிகமான குற்ற உணர்வில் மூழ்கிப்போயிருக்கிறார்கள். அவர்கள் எவ்வளவுதான் மனம் திருந்தியிருந்தாலும் யெகோவா மன்னிக்கவே மாட்டார் என்று அவர்களுடைய மனம் அவர்களைக் குத்திக்கொண்டே இருந்திருக்கிறது. உங்களுக்கும் அதே மாதிரி எண்ணங்கள் இருக்கின்றனவா? யெகோவா உங்கள்மேல் மாறாத அன்பு காட்டுகிறார் என்பதைப் புரிந்துகொண்டால் அந்த எண்ணங்களிலிருந்து உங்களால் வெளியேவர முடியும்.

13நாம் எப்படிப் பிரயோஜனம் அடைகிறோம்? நாம் பாவ இயல்புள்ளவர்களாக இருந்தாலும், சுத்தமான மனசாட்சியோடு சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்ய முடியும். ஏனென்றால், “அவருடைய மகனான இயேசுவின் இரத்தம் எல்லா பாவங்களிலிருந்தும் நம்மைச் சுத்தமாக்கும்.” (1 யோ. 1:7) நீங்கள் செய்த தவறை நினைத்து சோர்ந்து போயிருக்கிறீர்களா? அப்படியென்றால், மனம் திருந்துகிறவர்களை மன்னிக்க யெகோவா தயாராக இருக்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். மாறாத அன்பு காட்டுவதற்கும், மன்னிக்கும் குணத்துக்கும் இருக்கிற சம்பந்தத்தைப் பற்றி தாவீது இப்படிச் சொன்னார்: “பூமியைவிட வானம் எந்தளவு உயர்ந்திருக்கிறதோ, அவருக்குப் பயந்து நடக்கிறவர்களிடம் அவர் காட்டுகிற மாறாத அன்பும் அந்தளவு உயர்ந்திருக்கிறது. கிழக்குக்கும் மேற்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரத்துக்கு நம்முடைய குற்றங்களை அவர் தூக்கியெறிந்திருக்கிறார்.” (சங். 103:11, 12) இதிலிருந்து யெகோவா ‘தாராளமாக மன்னிக்க’ தயாராக இருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம்.—ஏசா. 55:7.

14. யெகோவாவின் மாறாத அன்பு நம்மை எப்படிப் பாதுகாப்பதாக தாவீது சொல்கிறார்?

14யெகோவாவின் மாறாத அன்பு அவரோடு நமக்கு இருக்கிற பந்தத்துக்கு எந்த ஆபத்தும் வராதபடி நம்மைப் பாதுகாக்கிறது. “நீங்கள் எனக்குப் புகலிடமாக இருக்கிறீர்கள். நீங்கள் என்னை வேதனையிலிருந்து பாதுகாப்பீர்கள். எனக்கு விடுதலை தந்து, என்னைச் சுற்றிலும் சந்தோஷ ஆரவாரம் கேட்கும்படி செய்வீர்கள். . . . யெகோவாமேல் நம்பிக்கையாக இருக்கிறவனை அவருடைய மாறாத அன்பு சூழ்ந்துகொள்ளும்” என்று தாவீது யெகோவாவிடம் ஜெபம் செய்தார். (சங். 32:7, 10) பைபிள் காலங்களிலிருந்த நகரங்களைச் சுற்றிலும் மதில்கள் இருந்தன. அதனால், எதிரிகளிடமிருந்து எந்த ஆபத்தும் இல்லாமல் மக்களால் பாதுகாப்பாக இருக்க முடிந்தது. அதேபோல், யெகோவாவின் மாறாத அன்பு ஒரு மதில் மாதிரி நம்மைச் சூழ்ந்திருக்கும்போது அவரிடம் இருக்கிற பந்தத்துக்கு எந்த ஆபத்தும் இல்லாமல் நம்மால் பாதுகாப்பாக இருக்க முடியும். அதுமட்டுமல்ல, யெகோவாவிடம் மாறாத அன்பு என்ற குணம் இருப்பதால் அவர் பக்கமாக நம்மை இழுத்திருக்கிறார்.—எரே. 31:3.

15. யெகோவாவின் மாறாத அன்பு எப்படி ஒரு கோட்டையைப் போலவும் பாதுகாப்பான அடைக்கலத்தைப் போலவும் இருக்கிறது?

15 தன்னுடைய மக்களை யெகோவா எப்படிப் பாதுகாக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள தாவீது இன்னொரு சொல்லோவியத்தைப் பயன்படுத்தினார். “எனக்கு மாறாத அன்பைக் காட்டுகிற கடவுளான நீங்கள்தான் எனக்குப் பாதுகாப்பான அடைக்கலம்” என்று சொன்னார். இன்னொரு சங்கீதத்தில், “அவர்தான் எனக்கு மாறாத அன்பு காட்டுகிறவர், என் கோட்டை, பாதுகாப்பான அடைக்கலம், என்னைக் காப்பாற்றுகிறவர், என் கேடயம், என் தஞ்சம்” என்று சொன்னார். (சங். 59:17; 144:2) யெகோவாவின் மாறாத அன்பை, பாதுகாப்பான அடைக்கலத்தோடும் கோட்டையோடும் தாவீது ஏன் சம்பந்தப்படுத்திப் பேசினார்? இந்த உலகத்தில் நாம் எங்கிருந்தாலும் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்யும்வரை அவரோடு நமக்கு இருக்கிற பந்தத்துக்கு எந்த ஆபத்தும் வராமல் அவர் நம்மைப் பாதுகாப்பார். இதே வாக்குறுதியை 91-ஆம் சங்கீதத்திலும் நாம் படிக்கிறோம். “நான் யெகோவாவிடம், ‘நீங்கள் என் அடைக்கலம், என் கோட்டை’ . . . என்று சொல்வேன்” என அந்தச் சங்கீதக்காரர் எழுதினார். (சங். 91:1-3, 9, 14) இதே மாதிரி சொல்லோவியத்தை மோசேயும் பயன்படுத்தியிருக்கிறார். (சங். 90:1, அடிக்குறிப்பு) அவருடைய கடைசி காலத்தில், “பழங்காலத்திலிருந்தே கடவுள் உன் கோட்டை. அவருடைய கைகள் என்றென்றும் உன்னைத் தாங்குகின்றன” என்று எழுதினார். (உபா. 33:27) “அவருடைய கைகள் என்றென்றும் உன்னைத் தாங்குகின்றன” என்ற வாக்கியத்திலிருந்து யெகோவாவைப் பற்றி நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்?

16. யெகோவாவின் உதவி எப்போதுமே நமக்கு இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் என்ன இரண்டு விஷயங்களை நாம் மறக்க மாட்டோம்? (சங்கீதம் 136:23)

16 யெகோவா நமக்கு அடைக்கலமாக இருக்கும்வரை எதை நினைத்தும் நாம் பயப்பட வேண்டியதில்லை. ஆனாலும், சில சமயங்களில் நாம் சோர்ந்துபோய் அப்படியே உட்கார்ந்துவிடலாம். அப்போது யெகோவா என்ன செய்வார்? (சங்கீதம் 136:23-ஐ வாசியுங்கள்.) அவருடைய கைகளால் நம்மைத் தாங்குவார். நம்முடைய கையைப் பிடித்து நம்மைத் தூக்கிவிடுவார். முன்பு செய்ததைப் போலவே மறுபடியும் அவருக்கு சுறுசுறுப்பாகச் சேவை செய்வதற்கு உதவுவார். (சங். 28:9; 94:18) நாம் எப்படிப் பிரயோஜனம் அடைகிறோம்? யெகோவாவின் உதவி நமக்கு எப்போதுமே இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால் இரண்டு விஷயங்களை நாம் மறக்க மாட்டோம். ஒன்று, இந்த உலகத்தில் நாம் எங்கிருந்தாலும் அவர் நமக்கு அடைக்கலமாக இருப்பார். இரண்டு, நம்முடைய அன்பான அப்பா யெகோவா நம்மேல் அக்கறையாக இருப்பார்.

யெகோவாவின் மாறாத அன்புக்கு முடிவே இல்லை!

17. நாம் எந்த விஷயத்தில் முழு நம்பிக்கையோடு இருக்கலாம்? (சங்கீதம் 33:18-22)

17 இதுவரை நாம் பார்த்தபடி, நம் வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் வந்தாலும், யெகோவாவிடம் நமக்கு இருக்கிற பந்தத்துக்கு எந்த ஆபத்தும் வராமல் அவர் நம்மைப் பார்த்துக்கொள்வார். (2 கொ. 4:7-9) “யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை. அவருடைய இரக்கத்துக்கு முடிவே இல்லை” என்று எரேமியா தீர்க்கதரிசி சொன்னது எவ்வளவு பொருத்தமாக இருக்கிறது! (புல. 3:22) யெகோவா நம்மேல் காட்டுகிற மாறாத அன்புக்கு முடிவே இல்லை என்பதை நாம் முழுமையாக நம்பலாம். ஏனென்றால், “யெகோவாவின் கண்கள் அவருக்குப் பயந்து நடக்கிறவர்களையும், அவருடைய மாறாத அன்புக்காகக் காத்திருக்கிறவர்களையும் உன்னிப்பாகக் கவனிக்கின்றன” என்று சங்கீதக்காரர் எழுதினார்.—சங்கீதம் 33:18-22-ஐ வாசியுங்கள்.

18-19. (அ) இந்தக் கட்டுரையில் பார்த்த விஷயங்களை நீங்கள் எப்படிச் சுருக்கமாகச் சொல்வீர்கள்? (ஆ) அடுத்த கட்டுரையில் என்ன பார்க்கப்போகிறோம்?

18 இதுவரை நாம் பார்த்த விஷயங்களின் சுருக்கம் இதுதான்: யெகோவாவை வணங்குகிற ஒருவராக ஆவதற்கு முன்பு, எல்லா மனிதர்கள்மேலும் அவர் காட்டிய அன்பை நாமும் ருசித்தோம். ஆனால், அவரை வணங்க ஆரம்பித்த பின்பு அவருடைய மாறாத அன்பையும் ருசிக்கிறோம். அந்த அன்பு இருப்பதால்தான் யெகோவா நம்மை அரவணைக்கிறார். அவரிடம் நெருக்கமான நட்பு வைத்திருப்பதற்கு எப்போதுமே அவர் உதவுவார். அவர் கொடுத்த வாக்குறுதிகளையும் நிச்சயம் நிறைவேற்றுவார். நாம் என்றென்றைக்கும் அவருடைய நண்பர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். (சங். 46:1, 2, 7) அதனால், நம் வாழ்க்கையில் என்ன கஷ்டங்கள் வந்தாலும், அவருக்கு உண்மையாக இருப்பதற்குத் தேவையான பலத்தை அவர் நிச்சயம் கொடுப்பார்.

19 தன்னுடைய ஊழியர்களிடம் யெகோவா எப்படி மாறாத அன்பைக் காட்டுகிறார் என்று இந்தக் கட்டுரையில் பார்த்தோம். நாமும் ஒருவருக்கொருவர் மாறாத அன்பு காட்ட வேண்டுமென்று அவர் எதிர்பார்க்கிறார். அதை எப்படிக் காட்டலாம்? அதற்கான பதிலை அடுத்த கட்டுரையில் பார்க்கலாம்.

பாட்டு 136 யெகோவா ‘அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்’

^ பாரா. 5 மாறாத அன்பு என்றால் என்ன? யெகோவா அதை யாருக்கெல்லாம் காட்டுகிறார்? அதிலிருந்து அவர்கள் எப்படி நன்மை அடைகிறார்கள்? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 4 மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர் என்ற அதே அர்த்தத்தைத் தருகிற வார்த்தைகள் வேறு சில வசனங்களிலும் இருக்கின்றன.—நெகேமியா 13:22; சங்கீதம் 69:13; 106:7; புலம்பல் 3:32 ஆகிய வசனங்களைப் பாருங்கள்.

^ பாரா. 54 படவிளக்கம்: தன்னுடைய ஊழியர்கள்மேல் மட்டுமல்ல, எல்லா மனிதர்கள்மேலும் யெகோவா அன்பு காட்டுகிறார். அப்படி அவர் அன்பு காட்டுகிற சில வழிகளைப் பற்றி வட்டமான படங்கள் விளக்குகின்றன. அதில் முக்கியமான ஒரு வழி, தன்னுடைய மகனையே நமக்காக அவர் கொடுத்ததுதான்.

^ பாரா. 62 படவிளக்கம்: யாரெல்லாம் தன்னுடைய ஊழியர்களாக ஆகிறார்களோ, மீட்புவிலைமேல் விசுவாசம் வைக்கிறார்களோ, அவர்களை யெகோவா விசேஷமாக கவனித்துக்கொள்கிறார். தன்னுடைய ஊழியர்களுக்கு மற்ற எல்லா மனிதர்கள்மேலும் காட்டுகிற அன்போடு சேர்த்து மாறாத அன்பையும் காட்டுகிறார். அப்படி அவர் அன்பு காட்டும் சில வழிகளைப் பற்றி வட்டமான படங்கள் விளக்குகின்றன.