படிப்புக் கட்டுரை 48
உண்மையாக இருப்பது கஷ்டமாகும்போது தெளிந்த புத்தியோடு இருங்கள்
“தெளிந்த புத்தியோடு இருங்கள்.”—1 பே. 5:8.
பாட்டு 123 தேவ அமைப்புக்கு பணிந்து செல்வோம்
இந்தக் கட்டுரையில்... a
1. தெளிந்த புத்தியோடு இருப்பது என்றால் என்ன? (1 பேதுரு 5:8)
நமக்குப் பிரச்சினைகள் வரும்போது யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் உண்மையாக இருப்பது கஷ்டமாக இருக்கலாம். அப்படிப்பட்ட பிரச்சினைகளை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? அதற்கு நாம் தெளிந்த புத்தியோடு இருக்க வேண்டும், விழிப்போடு இருக்க வேண்டும், விசுவாசத்தில் உறுதியாக நிலைத்திருக்க வேண்டும். (1 பேதுரு 5:8-ஐ வாசியுங்கள்.) தெளிந்த புத்தியோடு இருப்பது என்றால் என்ன? நாம் உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருக்கும்போதும், தெளிவாக யோசிக்கும்போதும், விஷயங்களை யெகோவா பார்க்கும் விதமாகப் பார்க்க முயற்சி பண்ணும்போதும் தெளிந்த புத்தியோடு இருக்கிறோம் என்று அர்த்தம். இப்படியெல்லாம் செய்தால், உணர்ச்சிகளுக்கு அடிபணிந்துவிடாமல் எல்லாவற்றையும் நன்றாக யோசித்து செய்வோம்.
2. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்க்கப்போகிறோம்?
2 போன கட்டுரையில் சபைக்கு வெளியே இருந்து நமக்கு வருகிற மூன்று பிரச்சினைகளைப் பற்றிப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில், சபைக்கு உள்ளே இருந்து வருகிற மூன்று பிரச்சினைகளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். அந்த மூன்று பிரச்சினைகள் என்னென்ன? (1) ஒரு சகோதரரோ சகோதரியோ நம்மைக் காயப்படுத்திவிடலாம், (2) நமக்கு ஏதாவது கண்டிப்பு கிடைக்கலாம், (3) அமைப்பில் ஏதாவது மாற்றம் நடக்கும்போது அதை ஏற்றுக்கொள்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். இந்த மாதிரி பிரச்சினைகள் வரும்போது யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நாம் எப்படித் தெளிந்த புத்தியோடு இருக்கலாம்? யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் எப்படி உண்மையாக இருக்கலாம்?
ஒரு சகோதரரோ சகோதரியோ நம் மனதைக் காயப்படுத்தும்போது
3. ஒரு சகோதரரோ சகோதரியோ நம் மனதைக் காயப்படுத்தும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது?
3 ஒரு சகோதரரோ சகோதரியோ உங்கள் மனதைக் காயப்படுத்தியிருக்கிறாரா? ஒருவேளை, பொறுப்பில் இருக்கிற ஒரு சகோதரர் உங்கள் மனதைப் புண்படுத்தியிருக்கிறாரா? அநேகமாக, அவர் அதை வேண்டுமென்று செய்திருக்க மாட்டார். (ரோ. 3:23; யாக். 3:2) ஆனால், அவர் செய்த விஷயம் உங்கள் மனதைக் கஷ்டப்படுத்தியிருக்கலாம். அதைப் பற்றி யோசித்து யோசித்து உங்களுக்குத் தூக்கம்கூட வராமல் போயிருக்கலாம். ‘இவரே இப்படி நடந்துக்குறாரே, இது உண்மையிலேயே கடவுளோட அமைப்புதானா?’ என்றுகூட நீங்கள் யோசித்திருக்கலாம். இப்படி நாம் யோசிக்க வேண்டும் என்றுதான் சாத்தான் ஆசைப்படுகிறான். (2 கொ. 2:11) இந்த மாதிரி நாம் யோசிக்க ஆரம்பித்தால், யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் விட்டுப் பிரிந்து போய்விடுவோம். அப்படியென்றால், ஒரு சகோதரரோ சகோதரியோ நம் மனதைக் காயப்படுத்தும்போது சாத்தானுக்கு இடம் கொடுக்காமல் நாம் எப்படித் தெளிந்த புத்தியோடு இருக்கலாம்?
4. மோசமாக நடத்தப்பட்டபோதுகூட யோசேப்பு எப்படித் தெளிந்த புத்தியோடு நடந்துகொண்டார், அவரிடமிருந்து நாம் என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (ஆதியாகமம் 50:19-21)
4 மனதில் கோபத்தை வளர்த்துக்கொள்ளாதீர்கள். யோசேப்பு டீனேஜ் வயதில் இருந்தபோது அவருடைய அண்ணன்கள் அவரை மோசமாக நடத்தினார்கள். அவர் மனதைக் காயப்படுத்தினார்கள், அவரை வெறுத்தார்கள். சிலர் அவரைக் கொல்ல வேண்டும் என்றுகூட யோசித்தார்கள். (ஆதி. 37:4, 18-22) கடைசியில், அவரை அடிமையாக விற்றுப்போட்டார்கள். அவர்கள் அப்படிச் செய்ததால், யோசேப்பு கிட்டத்தட்ட 13 வருஷங்கள் படாத பாடுபட்டார். ‘யெகோவாவுக்கு உண்மையிலேயே என்மேல அன்பு இருக்கா?’ என்று யோசேப்பு ஒருவேளை யோசித்திருக்கலாம். ‘எனக்கு உதவி தேவைப்பட்டப்போ அவர் என்னை கைவிட்டுட்டாரு’ என்றும்கூட அவர் யோசித்திருக்கலாம். ஆனால், யோசேப்பு மனதில் கோபத்தை வளர்த்துக்கொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருந்தார். இப்படி, தெளிந்த புத்தியோடு நடந்துகொண்டார். யோசேப்புக்கு அவருடைய அண்ணன்களைப் பழிவாங்க வாய்ப்பு கிடைத்தபோதுகூட அவர் அதைச் செய்யவில்லை. அதற்குப் பதிலாக, அவர்கள்மேல் அன்பு காட்டி அவர்களை மன்னித்தார். (ஆதி. 45:4, 5) யோசேப்பால் எப்படி இந்த மாதிரி நடந்துகொள்ள முடிந்தது? யோசேப்பு தெளிவாக யோசித்தார். தன்னுடைய பிரச்சினைகளைப் பற்றி அவர் யோசிக்காமல் யெகோவாவின் நோக்கத்தைப் பற்றி யோசித்தார். (ஆதியாகமம் 50:19-21-ஐ வாசியுங்கள்.) இதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஒரு சகோதரரோ சகோதரியோ உங்களைக் காயப்படுத்தும்போது யெகோவாவிடம் கோபித்துக்கொள்ளாதீர்கள், அவர் உங்களைக் கைவிட்டுவிட்டார் என்றும் யோசிக்காதீர்கள். அதற்குப் பதிலாக, அந்தப் பிரச்சினையைச் சமாளிக்க அவர் உங்களுக்கு எப்படி உதவி செய்கிறார் என்று யோசித்துப் பாருங்கள். அதோடு, உங்களை மற்றவர்கள் காயப்படுத்தும்போது அன்பினால் அவர்களுடைய குறைகளை மன்னியுங்கள்.—1 பே. 4:8.
5. சில சகோதரர்கள் தன்னுடைய மனதை நோகடித்துவிட்டதாக மிகெயாஸ் நினைத்தபோதும்கூட எப்படித் தெளிந்த புத்தியோடு நடந்துகொண்டார்?
5 தென் அமெரிக்காவில் மூப்பராக சேவை செய்யும் மிகெயாஸ் என்ற சகோதரரின் அனுபவத்தைக் கவனியுங்கள். b ஒருசமயம், பொறுப்பில் இருந்த சகோதரர்கள் சிலர் அவர் மனதை நோகடிக்கிற மாதிரி நடந்துகொண்டதாக அவர் நினைத்தார். “இந்த மாதிரி ஒரு மனவேதனைய நான் அனுபவிச்சதே இல்ல. நான் ரொம்ப பயந்துட்டேன். நைட்டெல்லாம் எனக்கு தூக்கமே வரல. என்னால எதுவும் செய்ய முடியலயேனு நெனச்சு அழுதேன்” என்று அவர் சொல்கிறார். ஆனாலும், அவர் தெளிந்த புத்தியோடு நடந்துகொண்டார். அவருடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தார். அடிக்கடி ஜெபம் பண்ணினார். சகித்திருப்பதற்குப் பலத்தையும் சக்தியையும் தரும்படி யெகோவாவிடம் கேட்டார். இந்தப் பிரச்சினையை எப்படிச் சமாளிக்கலாம் என்று நம்முடைய பிரசுரங்களிலும் தேடிப் பார்த்தார். இதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? ஒரு சகோதரரோ சகோதரியோ உங்கள் மனதைப் புண்படுத்தியதாக நீங்கள் நினைத்தால், உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருங்கள். கோபம், வெறுப்பு போன்ற தேவையில்லாத உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துங்கள். அவர்கள் ஏன் அப்படிப் பேசினார்கள் அல்லது நடந்துகொண்டார்கள் என்று உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். அதனால், யெகோவாவிடம் பேசுங்கள். விஷயங்களை அவர் பார்க்கிற மாதிரி பார்க்க உதவி செய்யச் சொல்லிக் கேளுங்கள். இப்படிச் செய்தால், உங்கள் சகோதரரோ சகோதரியோ வேண்டுமென்றே உங்கள் மனதைக் காயப்படுத்தவில்லை என்பதைப் புரிந்துகொள்வீர்கள், அவர்களை மன்னித்தும் விடுவீர்கள். (நீதி. 19:11) நீங்கள் என்ன சூழ்நிலையில் இருக்கிறீர்கள் என்று யெகோவாவுக்கு நன்றாகத் தெரியும். நீங்கள் சகித்துக்கொள்வதற்குத் தேவையான பலத்தை அவர் உங்களுக்குக் கண்டிப்பாக கொடுப்பார். இதை எப்போதுமே மறந்துவிடாதீர்கள்!—2 நா. 16:9; பிர. 5:8.
நமக்குக் கண்டிப்பு கிடைக்கும்போது
6. நம்மேல் அன்பு இருப்பதால்தான் யெகோவா கண்டிப்பு கொடுக்கிறார் என்று புரிந்துகொள்வது ஏன் ரொம்ப முக்கியம்? (எபிரெயர் 12:5, 6, 11)
6 நமக்குக் கண்டிப்பு கிடைக்கும்போது நம் மனம் வலிக்கும்தான். ஆனால், அந்த வலியைப் பற்றியே நாம் யோசித்துக்கொண்டிருந்தால், ‘கண்டிப்பு கிடைக்குற அளவுக்கு நான் என்ன தப்பு பண்னேன்? இது கொஞ்சங்கூட நியாயமே இல்ல’ என்று நாம் யோசிக்க ஆரம்பித்துவிடலாம். அப்படி யோசித்தோம் என்றால், ஒரு முக்கியமான விஷயத்தையே நாம் புரிந்துகொள்ளாமல் போய்விடுவோம். அதாவது, நம்மேல் அன்பு இருப்பதால்தான் யெகோவா கண்டிப்பு கொடுக்கிறார் என்பதையே நாம் புரிந்துகொள்ளாமல் போய்விடுவோம். (எபிரெயர் 12:5, 6, 11-ஐ வாசியுங்கள்.) நம்முடைய உணர்ச்சிகள் நம்மைக் கட்டுப்படுத்துவதற்கு விட்டுவிட்டால், நம்மை ஆட்டிப்படைக்க சாத்தானுக்கு இடம் கொடுத்துவிடுவோம். கண்டிப்பை நாம் ஏற்றுக்கொள்ளக் கூடாது என்பதுதான் அவனுடைய நோக்கம். சொல்லப்போனால், யெகோவாவிடமிருந்தும் சபையிடமிருந்தும் நம்மைப் பிரிக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய முக்கியமான குறிக்கோள். உங்களுக்கும் கண்டிப்பு கிடைத்திருக்கிறதா? அப்படியென்றால், நீங்கள் எப்படித் தெளிந்த புத்தியோடு நடந்துகொள்ளலாம்?
7. (அ) படத்தில் பார்க்கிறபடி, கண்டிப்பை ஏற்றுக்கொண்ட பிறகு பேதுருவை யெகோவா எப்படியெல்லாம் பயன்படுத்தினார்? (ஆ) பேதுருவின் உதாரணத்திலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்கிறீர்கள்?
7 கண்டிப்பை ஏற்றுக்கொள்ளுங்கள், தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். சிலசமயம் இயேசு, மற்ற அப்போஸ்தலர்கள் முன்பாகவே பேதுருவைக் கண்டித்தார். (மாற். 8:33; லூக். 22:31-34) பேதுருவுக்கு எவ்வளவு அவமானமாக இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். ஆனாலும், பேதுரு இயேசுவுக்கு உண்மையாக இருந்தார். கண்டிப்பை ஏற்றுக்கொண்டு, தான் செய்த தவறிலிருந்து பாடம் கற்றுக்கொண்டார். பேதுரு உண்மையாக இருந்ததற்காக யெகோவா அவரை ஆசீர்வதித்தார், சபையில் பெரிய பெரிய பொறுப்புகளையும் அவருக்குக் கொடுத்தார். (யோவா. 21:15-17; அப். 10:24-33; 1 பே. 1:1) பேதுருவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? நமக்கு ஒருவேளை கண்டிப்பு கிடைத்தால், அதை அவமானமாகப் பார்க்காமல், அதை ஏற்றுக்கொண்டு, தேவையான மாற்றங்களை நாம் செய்ய வேண்டும். அது நமக்கும் நன்மை, மற்றவர்களுக்கும் நன்மை. அதுமட்டுமல்ல, யெகோவாவுக்கும் நம்முடைய சகோதர சகோதரிகளுக்கும் நாம் ரொம்ப பிரயோஜனமாக இருப்போம்.
8-9. கண்டிப்பு கிடைத்தபோது பெர்னாடோவுக்கு எப்படி இருந்தது, ஆனால் யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொள்ள அவருக்கு எது உதவி செய்தது?
8 மொசாம்பிக்கில் இருக்கும் பெர்னாடோ என்ற சகோதரருடைய உதாரணத்தை இப்போது பார்க்கலாம். அவர் மூப்பர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். அப்போது அவருக்கு எப்படி இருந்தது? “அந்த கண்டிப்பு எனக்கு சுத்தமா பிடிக்கல. அதனால எனக்கு பயங்கர வெறுப்பா இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். சபையில் இருக்கிற மற்றவர்கள் என்ன யோசிப்பார்களோ என்றுதான் அவருக்குக் கவலையாக இருந்தது. “இந்த கண்டிப்ப சரியான விதத்துல பாக்கறதுக்கும், யெகோவா மேலயும் அவரோட அமைப்பு மேலயும் மறுபடியும் நம்பிக்கைய வளர்த்துக்கறதுக்கும் எனக்கு சில மாசம் எடுத்துச்சு” என்று அவர் சொல்கிறார். கண்டிப்பை ஏற்றுக்கொள்வதற்கு பெர்னாடோவுக்கு எது உதவி செய்தது?
9 தான் யோசிக்கிற விதத்தை பெர்னாடோ மாற்றிக்கொண்டார். “நான் மூப்பரா இருந்தப்ப, எபிரெயர் 12:7-ஐ வாசிச்சு காட்டி யெகோவாவோட கண்டிப்ப ஏத்துக்கறது நம்மளோட நல்லதுக்குத்தான்னு மத்தவங்களுக்கு சொல்லியிருக்கேன். ஆனா, எனக்கு கண்டிப்பு கிடைச்சதுக்கு அப்புறம், ‘இந்த வசனம் யாருக்காக?’னு யோசிச்சு பாத்தேன். ‘யெகோவாவோட ஊழியர்கள் எல்லாருக்காகவும்தான், அப்படினா எனக்கும்தான் இது பொருந்தும்’னு புரிஞ்சுகிட்டேன்” என்று அவர் சொன்னார். யெகோவாவின் மேலும் அவருடைய அமைப்பின் மேலும் மறுபடியும் நம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்காக பெர்னாடோ இன்னும் சில விஷயங்களைச் செய்தார். அவர் இன்னும் அதிகமாக பைபிளைப் படித்தார், படித்த விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்ப்பதற்காக இன்னும் நிறைய நேரம் செலவு பண்ணினார். சகோதர சகோதரிகள் தன்னைப் பற்றி என்ன யோசிப்பார்களோ என்ற கவலை அவரை விட்டுப் போகவில்லை. ஆனாலும், அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்தார், கூட்டங்களில் தயங்காமல் பதிலும் சொன்னார். பிறகு, அவர் மறுபடியும் மூப்பராக நியமிக்கப்பட்டார். பெர்னாடோவைப் போல் உங்களுக்கும் கண்டிப்பு கிடைத்திருந்தால், அதை அவமானமாக நினைக்காமல், அந்தக் கண்டிப்பை ஏற்றுக்கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். c (நீதி. 8:33; 22:4) அப்போது யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் நீங்கள் விட்டுப் போகாததற்காக யெகோவா கண்டிப்பாக உங்களுக்குப் பலன் கொடுப்பார்.
அமைப்பில் நடக்கும் மாற்றங்களை ஏற்றுக்கொள்வது நமக்குக் கஷ்டமாக இருக்கும்போது
10. எந்த மாற்றத்தால் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது சில இஸ்ரவேலர்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்கலாம்?
10 அமைப்பில் ஏதாவது மாற்றம் வரும்போது யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். நாம் கவனமாக இல்லையென்றால் யெகோவாவிடமிருந்தே அது நம்மைப் பிரித்துவிடலாம். உதாரணத்துக்கு, மோசேயின் காலத்தில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். ஒரு மாற்றம் வந்தபோது யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது சில இஸ்ரவேலர்களுக்குக் கஷ்டமாக இருந்திருக்கலாம். யெகோவா திருச்சட்டத்தைக் கொடுப்பதற்கு முன்புவரை, குடும்பத் தலைவர்கள்தான் பலிபீடங்களைக் கட்டி தங்கள் குடும்பத்துக்காக யெகோவாவுக்குப் பலி செலுத்தினார்கள். (ஆதி. 8:20, 21; 12:7; 26:25; 35:1, 6, 7; யோபு 1:5) ஆனால், திருச்சட்டம் வந்த பிறகு, ஆரோனின் வம்சத்தில் வந்த குருமார்கள் மட்டும்தான் பலி செலுத்த வேண்டும் என்று யெகோவா சொன்னார். ஆரோனின் வம்சத்தில் வராத ஒரு குடும்பத் தலைவர் பலி செலுத்தினால் அவரைக் கொன்றுவிட வேண்டும் என்று யெகோவா சொன்னார். d (லேவி. 17:3-6, 8, 9) அது ஒரு பெரிய மாற்றமாக இருந்தது. கோராகு, தாத்தான், அபிராம், 250 தலைவர்கள் என எல்லாரும் மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராகக் கலகம் செய்ததற்கு இந்த மாற்றமும் ஒரு காரணமாக இருந்திருக்குமோ? (எண். 16:1-3) அது நமக்கு உறுதியாகத் தெரியாது. எப்படி இருந்தாலும் சரி, கோராகுவும் அவருடைய கூட்டாளிகளும் யெகோவாவுக்கு உண்மையாக இல்லாமல் போய்விட்டார்கள். அமைப்பில் ஏதாவது மாற்றம் வரும்போது யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருந்தால் என்ன பண்ணலாம்?
11. சில கோகாத்தியர்களிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?
11 அமைப்பில் நடக்கிற மாற்றங்களுக்கு முழு ஆதரவு கொடுங்கள். இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் ஒவ்வொரு இடமாகப் போய் முகாம் போட்டபோது கோகாத்தியர்கள் ஒரு முக்கியமான பொறுப்பைச் செய்துகொண்டிருந்தார்கள். அவர்களில் சிலர் எல்லா ஜனங்களுக்கும் முன்னால் ஒப்பந்தப் பெட்டியைத் தூக்கிக்கொண்டு போனார்கள். (எண். 3:29, 31; 10:33; யோசு. 3:2-4) எவ்வளவு பெரிய பாக்கியம்! ஆனால், இஸ்ரவேலர்கள் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் குடியேறிய பிறகு நிலைமை மாறியது. ஏனென்றால், ஒப்பந்தப் பெட்டியை வெவ்வேறு இடங்களுக்குத் தூக்கிக்கொண்டு போக வேண்டிய அவசியம் இல்லாமல் போனது. அதனால், சாலொமோன் ராஜாவாக இருந்த சமயத்தில், சில கோகாத்தியர்கள் பாடகர்களாக இருந்தார்கள். இன்னும் சிலர், வாயிற்காவலர்களாக இருந்தார்கள். மற்றவர்கள் சாமான் அறைகளைப் பார்த்துக்கொண்டார்கள். (1 நா. 6:31-33; 26:1, 24) ஆனாலும், இந்தச் சின்னச் சின்ன வேலைகளைச் செய்ததற்காக கோகாத்தியர்கள் முறுமுறுத்ததாக எந்தப் பதிவும் இல்லை. முன்பு ஒரு பெரிய பொறுப்பில் இருந்ததால் இப்போதும் முக்கியமான வேலைகளை மட்டும்தான் தங்களுக்குக் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கவும் இல்லை. இதிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? யெகோவாவின் அமைப்பில் என்ன மாற்றம் வந்தாலும் அதற்கு முழு ஆதரவு கொடுங்கள். உங்களுடைய பொறுப்பே மாறினாலும்கூட அதை மனதார ஏற்றுக்கொள்ளுங்கள். உங்களுக்கு என்ன நியமிப்பு கிடைத்தாலும் அதைச் சந்தோஷமாகச் செய்யுங்கள். யெகோவாவுக்கு நீங்கள் எந்தளவு மதிப்புள்ளவர்கள் என்பது உங்களுடைய நியமிப்பைப் பொறுத்து இல்லை என்பதை எப்போதுமே மறந்துவிடாதீர்கள். யெகோவாவுக்கு நீங்கள் எந்த நியமிப்பில் இருக்கிறீர்கள் என்பது முக்கியமில்லை, நீங்கள் கீழ்ப்படிகிறீர்களா என்பதுதான் முக்கியம்.—1 சா. 15:22.
12. பெத்தேலில் இருந்து அனுப்பப்பட்டபோது சயீனாவுக்கு எப்படி இருந்தது?
12 சகோதரி சயீனாவின் உதாரணத்தைக் கவனிக்கலாம். அவர் 23 வருஷங்களுக்கும் மேல் பெத்தேலில் சேவை செய்தார். அதற்குப் பிறகு, அமைப்பு அவரை பயனியராகப் போகச் சொன்னது. அவர் ஆசைப்பட்டு செய்த பெத்தேல் சேவை திடீரென்று அவர் கையைவிட்டுப் போனது. “எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருந்துச்சு. நான் எதுக்குமே லாயக்கு இல்லங்கற மாதிரி எனக்கு தோணுச்சு. நான் என்ன தப்பு பண்ணேன்னு யோசிச்சிட்டே இருந்தேன்” என்று அவர் சொல்கிறார். வருத்தமான விஷயம் என்னவென்றால், சபையில் இருந்த சில சகோதர சகோதரிகள் அவரிடம், “நீங்க நல்லா வேல செஞ்சிருந்தா உங்கள பெத்தேல்ல இருந்து அனுப்பியிருக்க மாட்டாங்க” என்று சொல்லி எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றினார்கள். கொஞ்ச நாட்களுக்கு சயீனா ரொம்ப மனம் உடைந்துபோயிருந்தார். ஒவ்வொரு நாள் ராத்திரியும் அவர் அழுதுகொண்டே இருந்தார். ஆனாலும், “யெகோவா என்மேல அன்பு வெச்சிருக்காரானு ஒருநாளும் நான் சந்தேகப்படவே இல்ல. அவரோட அமைப்பயும் நான் சந்தேகப்படல” என்று சயீனா சொல்கிறார். அவரால் எப்படித் தெளிந்த புத்தியோடு இருக்க முடிந்தது?
13. கவலை, சோர்வு போன்ற உணர்ச்சிகளை சயீனா எப்படிச் சமாளித்தார்?
13 கவலை, சோர்வு போன்ற உணர்ச்சிகளை சயீனா சமாளித்தார். எப்படி? தன்னுடைய பிரச்சினை சம்பந்தமாக நம்முடைய பிரசுரங்களில் வந்த கட்டுரைகளை அவர் படித்துப் பார்த்தார். பிப்ரவரி 1, 2001 காவற்கோபுரத்தில் வந்த “சோர்வை உங்களால் சமாளிக்க முடியும்” என்ற கட்டுரை அவருக்கு ரொம்ப உதவியாக இருந்தது. பைபிள் எழுத்தாளரான மாற்குவின் நியமிப்பு மாறியபோது அவரும் இடிந்துபோயிருக்கலாம் என்று அந்தக் கட்டுரை சொன்னது. “என்னோட சோர்வ சமாளிக்கறதுக்கு மாற்குவோட உதாரணம்தான் டானிக் மாதிரி இருந்துச்சு” என்று அவர் சொல்கிறார். சகோதர சகோதரிகளிடம் சயீனா எப்போதும் போலப் பேசிப் பழகினார், அவர்களோடு ஊழியம் செய்தார். அவர் தன்னைத் தனிமைப்படுத்தவில்லை. தன்னையே நினைத்துப் பரிதாபப்படவும் இல்லை. யெகோவாவின் அமைப்பு என்ன முடிவு எடுத்தாலும் அது கடவுளுடைய சக்தியின் வழிநடத்துதலோடுதான் எடுக்கிறது என்பதை அவர் புரிந்துகொண்டார். பொறுப்பில் இருக்கிற சகோதரர்கள் தன்மேல் ரொம்ப அக்கறையாக இருப்பதையும் அவர் புரிந்துகொண்டார். யெகோவாவின் வேலை நல்லபடியாக நடக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டுமோ அதைத்தான் அமைப்பு செய்கிறது என்பதையும் அவர் புரிந்துகொண்டார்.
14. அமைப்பில் நடந்த எந்த மாற்றத்தை சமாளிப்பது விலாடோவுக்குக் கஷ்டமாக இருந்தது, அவருக்கு எது உதவி செய்தது?
14 விலாடோ என்ற 73 வயது சகோதரர், ஸ்லோவேனியாவில் மூப்பராக சேவை செய்கிறார். அவருடைய சபையை இன்னொரு சபையோடு சேர்த்தபோது அவருக்கு அது ரொம்ப கஷ்டமாக இருந்தது. அவர் போய்க்கொண்டிருந்த ராஜ்ய மன்றத்தையும் இனிமேல் பயன்படுத்த மாட்டோம் என்று அமைப்பு சொன்னது. “இவ்ளோ அழகான ராஜ்ய மன்றத்த ஏன் மூடிட்டாங்கன்னே என்னால புரிஞ்சுக்க முடியல. என் மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருந்துச்சு. இப்போதான் நாங்க ராஜ்ய மன்றத்துல எல்லாத்தயும் புதுசா மாத்துனோம். நான் தச்சு வேலை செஞ்சுட்டு இருக்கறதுனால புதுப்புது மரச்சாமான்களகூட செஞ்சு போட்டேன். அதுமட்டுமில்ல, இந்த மாற்றத்தால என்னை மாதிரி வயசானவங்க எல்லாம் நிறைய அட்ஜஸ்ட் பண்ண வேண்டியிருந்துச்சு. அது எங்களுக்கு ரொம்ப சிரமமா இருந்துச்சு” என்று அவர் சொன்னார். ஆனாலும், அமைப்பு செய்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள விலாடோவுக்கு எது உதவி செய்தது? “அமைப்பு செய்ற மாற்றங்கள ஏத்துக்கிட்டு அதுக்கு கீழ்ப்படிஞ்சா எப்பவுமே ஆசீர்வாதம்தான் கிடைக்கும். எதிர்காலத்துல இன்னும் பெரிய மாற்றங்கள் வர்றப்போ அதையும் நம்மால சுலபமா ஏத்துக்க முடியும்” என்று அவர் சொல்கிறார். உங்களுடைய சபை இன்னொரு சபையோடு இணைக்கப்பட்டிருக்கிறதா? அல்லது, உங்களுடைய நியமிப்பு மாறிவிட்டதா? இந்த மாற்றத்தைச் சமாளிப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? அப்படியென்றால், யெகோவா உங்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்கிறார் என்பதை மறந்துவிடாதீர்கள். இப்படிப்பட்ட மாற்றத்துக்கு நீங்கள் ஆதரவு கொடுக்கும்போது... யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் விட்டுப் போகாமல் இருக்கும்போது... உங்களுக்குக் கண்டிப்பாக ஆசீர்வாதம் கிடைக்கும்.—சங். 18:25.
எல்லா விஷயங்களிலும் தெளிந்த புத்தியோடு இருங்கள்
15. சபைக்குள்ளே இருந்து பிரச்சினைகள் வரும்போது நாம் எப்படித் தெளிந்த புத்தியோடு நடந்துகொள்ளலாம்?
15 இந்த உலகத்துக்கு முடிவு நெருங்க நெருங்க, சபைக்குள்ளே இருந்து நமக்கு நிறைய பிரச்சினைகள் வரும் என்று எதிர்பார்க்கலாம். அப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும்போது யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதனால், நாம் தெளிந்த புத்தியோடு இருக்க வேண்டும். ஒரு சகோதரரோ சகோதரியோ உங்கள் மனதைக் காயப்படுத்திவிட்டதாக நீங்கள் நினைத்தால், உங்களுடைய மனதில் கோபத்தை வளர்த்துக்கொள்ளாதீர்கள். உங்களுக்குக் கண்டிப்பு கிடைத்தால் அதை அவமானமாக நினைக்காமல், அதை ஏற்றுக்கொண்டு தேவையான மாற்றங்களைச் செய்யுங்கள். யெகோவாவின் அமைப்பு செய்யும் மாற்றங்கள் உங்களை நேரடியாகப் பாதித்தாலும் அதை மனதார ஏற்றுக்கொண்டு அதற்குக் கீழ்ப்படியுங்கள்.
16. யெகோவாவின் மேலும் அவருடைய அமைப்பின் மேலும் நீங்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை எப்படி விடாமல் இருக்கலாம்?
16 பிரச்சினைகள் வரும்போது யெகோவாவின் மேலும் அவருடைய அமைப்பின் மேலும் நீங்கள் வைத்திருக்கிற நம்பிக்கையை உங்களால் விடாமல் இருக்க முடியும். ஆனால், அதற்கு நாம் தெளிந்த புத்தியோடு இருக்க வேண்டும், அதாவது உணர்ச்சிவசப்படாமல் நிதானமாக இருக்க வேண்டும்... தெளிவாக யோசிக்க வேண்டும்... விஷயங்களை யெகோவா பார்க்கிற விதமாகப் பார்க்க வேண்டும். உங்களுக்கு வந்த மாதிரியே பிரச்சினை வேறு யாருக்கு வந்திருக்கிறதென்று பைபிளில் படித்துப் பாருங்கள், அவர்களுடைய உதாரணத்தை ஆழமாக யோசித்துப் பாருங்கள். யெகோவாவிடம் உதவி கேட்டு ஜெபம் செய்யுங்கள். சபையிலிருந்து உங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ளாதீர்கள். அப்போதுதான், என்ன நடந்தாலும் சரி, யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் விட்டு சாத்தானால் உங்களைப் பிரிக்கவே முடியாது.—யாக். 4:7.
பாட்டு 126 விழிப்பாய், தைரியமாய் நில்லுங்கள்!
a சிலசமயம் யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் உண்மையாக இருப்பது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். முக்கியமாக சபைக்கு உள்ளே இருந்து பிரச்சினைகள் வரும்போது அது ரொம்பவே கஷ்டமாக இருக்கலாம். இந்தக் கட்டுரையில், சபைக்கு உள்ளே இருந்து வருகிற மூன்று பிரச்சினைகளைப் பற்றிப் பார்க்கப்போகிறோம். யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் தொடர்ந்து உண்மையாக இருக்க என்ன செய்யலாம் என்றும் பார்க்கப்போகிறோம்.
b சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
c இது சம்பந்தமாக இன்னும் சில ஆலோசனைகளைத் தெரிந்துகொள்வதற்கு ஆகஸ்ட் 15, 2009 காவற்கோபுரத்தில் பக்கம் 30-ல் வந்த “நீங்கள் முன்பு சேவை செய்தவரா? மீண்டும் சேவை செய்ய முடியுமா?” என்ற கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.
d இறைச்சிக்காக ஆட்டையும் மாட்டையும் வெட்ட வேண்டும் என்றால் குடும்பத் தலைவர்கள் அதை வழிபாட்டு கூடாரத்துக்கு எடுத்துக்கொண்டு வர வேண்டும் என்று திருச்சட்டம் சொன்னது. வழிபாட்டுக் கூடாரத்திலிருந்து ரொம்ப தூரத்தில் குடியிருந்தவர்கள் மட்டும் அப்படிச் செய்ய வேண்டியதில்லை என்றும் அது சொன்னது.—உபா. 12:21.