Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 45

ஊழியம் செய்ய யெகோவா நமக்கு உதவுகிறார்

ஊழியம் செய்ய யெகோவா நமக்கு உதவுகிறார்

“அவர்கள் நடுவே ஒரு தீர்க்கதரிசி இருந்தார் என்று நிச்சயம் தெரிந்துகொள்வார்கள்.”—எசே. 2:5.

பாட்டு 67 சுறுசுறுப்பாக பிரசங்கி!

இந்தக் கட்டுரையில்... a

1. நாம் என்ன எதிர்பார்க்கலாம், நாம் எதில் நம்பிக்கையாக இருக்கலாம்?

 ஊழியம் செய்யும்போது எதிர்ப்புகள் வரும் என்று நாம் எதிர்பார்க்கலாம். எதிர்காலத்தில் அது இன்னும் அதிகமாகலாம். (தானி. 11:44; 2 தீ. 3:12; வெளி. 16:21) இருந்தாலும், யெகோவா நமக்கு உதவி செய்வார் என்று நாம் நிச்சயம் நம்பலாம். ஏனென்றால், அவர் கொடுத்த நியமிப்புகளைச் செய்ய எப்போதுமே தன்னுடைய ஊழியர்களுக்கு அவர் உதவி செய்திருக்கிறார், அது எவ்வளவு கஷ்டமான நியமிப்பாக இருந்தாலும் சரி! இதைப் புரிந்துகொள்ள எசேக்கியேல் தீர்க்கதரிசியின் வாழ்க்கையில் நடந்த சில விஷயங்களைப் பார்க்கலாம். பாபிலோனில் கைதிகளாக இருந்த யூதர்களிடம் அவர் பிரசங்கித்தார்.

2. எசேக்கியேல் எப்படிப்பட்ட ஆட்களிடம் பிரசங்கிக்க வேண்டியிருந்ததாக யெகோவா சொன்னார், இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்? (எசேக்கியேல் 2:3-6)

2 எப்படிப்பட்ட ஆட்களிடம் எசேக்கியேல் பிரசங்கிக்க வேண்டியிருந்தது? யெகோவா அவர்களைப் பற்றிச் சொன்னபோது, அவர்கள் ‘கொஞ்சம்கூட அடங்காத, முரட்டுப் பிடிவாதமுள்ள ஜனங்கள்’ என்றும், முட்களையும் தேள்களையும் போல் ஆபத்தானவர்கள் என்றும் சொன்னார். அதனால்தான், எசேக்கியேலிடம் “பயப்படாதே” என்று யெகோவா திரும்பத் திரும்பச் சொன்னார். (எசேக்கியேல் 2:3-6-ஐ வாசியுங்கள்.) பிரசங்க வேலையைச் செய்ய இந்த மூன்று விஷயங்கள் எசேக்கியேலுக்கு உதவின: (1) யெகோவாதான் அவரை அனுப்பினார். (2) கடவுளுடைய சக்தி அவருக்குத் தேவையான பலத்தைக் கொடுத்தது. (3) கடவுளுடைய வார்த்தை அவருடைய விசுவாசத்தை அதிகமாக்கியது. இந்த மூன்று விஷயங்கள் எசேக்கியேலுக்கு எப்படி உதவின? இன்று நமக்கு எப்படி உதவும்?

எசேக்கியேலை யெகோவாதான் அனுப்பினார்

3. எந்த வார்த்தைகள் எசேக்கியேலைப் பலப்படுத்தியிருக்கும், தன்னுடைய ஆதரவு இருக்கிறது என்ற நம்பிக்கையை யெகோவா எசேக்கியேலுக்கு எப்படிக் கொடுத்தார்?

3 யெகோவா எசேக்கியேலிடம், “நான் உன்னை அனுப்புகிறேன்” என்று சொன்னார். (எசே. 2:3, 4) இந்த வார்த்தைகள் எசேக்கியேலை ரொம்ப பலப்படுத்தியிருக்கும். ஏனென்றால், மோசேயையும் ஏசாயாவையும் தீர்க்கதரிசிகளாக அனுப்பியபோது யெகோவா அவர்களிடம் இதே மாதிரியான வார்த்தைகளைத்தான் சொன்னார். (யாத். 3:10; ஏசா. 6:8) இது எசேக்கியேலுக்கு ஞாபகம் வந்திருக்கும். கஷ்டமான நியமிப்புகளைச் செய்ய அந்த இரண்டு தீர்க்கதரிசிகளுக்கும் யெகோவா எப்படி உதவி செய்தார் என்பதும் எசேக்கியேலுக்குத் தெரியும். அதனால், “நான் உன்னை அனுப்புகிறேன்” என்று இரண்டு தடவை எசேக்கியேலிடம் யெகோவா சொன்னபோது, யெகோவாவுடைய ஆதரவு தனக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை அவருக்குக் கிடைத்தது. அதோடு, எசேக்கியேல் புத்தகத்தில் நிறைய தடவை “யெகோவா என்னிடம்” என்ற வார்த்தைகள் இருக்கின்றன. (எசே. 3:16) “யெகோவா மறுபடியும் என்னிடம்” என்ற வார்த்தைகளும் எசேக்கியேல் புத்தகத்தில் திரும்பத் திரும்ப வருகின்றன. (எசே. 6:1) அதனால், யெகோவாதான் தன்னை அனுப்பினார் என்பதில் எசேக்கியேலுக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. எசேக்கியேலின் அப்பா ஆலய குருவாக இருந்தார். அதனால், யெகோவா தன்னுடைய ஊழியர்களுக்கு எப்போதுமே உதவி செய்வதாக வாக்குக் கொடுத்திருக்கிறார் என்பதைப் பற்றி அவர் எசேக்கியேலுக்கு சொல்லியிருப்பார். உதாரணத்துக்கு, ஈசாக்கிடமும் யாக்கோபிடமும் எரேமியாவிடமும், “நான் உன்னோடு இருக்கிறேன்” என்று யெகோவா சொல்லியிருக்கிறார்.—ஆதி. 26:24; 28:15; எரே. 1:8.

4. என்ன ஆறுதலான வார்த்தைகள் எசேக்கியேலுக்குப் பலம் கொடுத்திருக்கும்?

4 எசேக்கியேல் சொன்ன செய்தியை இஸ்ரவேலர்கள் கேட்டார்களா? கேட்கவில்லை. அவர்கள் எசேக்கியேலை ஒதுக்கியது யெகோவாவை ஒதுக்கியதுபோல் இருந்தது. எப்படிச் சொல்கிறோம்? யெகோவா எசேக்கியேலிடம், “இஸ்ரவேல் ஜனங்கள் நீ சொல்வதைக் கேட்க மாட்டார்கள். ஏனென்றால், நான் சொல்வதைக் கேட்க அவர்களுக்கு இஷ்டம் இல்லை” என்று ஏற்கெனவே சொல்லியிருந்தார். (எசே. 3:7) இந்த வார்த்தைகள் எசேக்கியேலுக்கு நம்பிக்கை கொடுத்தன. ஏனென்றால், ‘நீ சொல்றத ஜனங்க கேட்கலங்கறதுக்காக தீர்க்கதரிசியா உன் வேலைய நீ சரியா செய்யலனு அர்த்தம் கிடையாது’ என்று யெகோவா சொன்னதுபோல் இருந்தது. எசேக்கியேலுக்கு யெகோவா இன்னொரு நம்பிக்கையையும் கொடுத்தார். எசேக்கியேல் அறிவிக்கும் நியாயத்தீர்ப்புகள் நிறைவேறும்போது, அந்த ஜனங்கள் தங்கள் “நடுவில் ஒரு தீர்க்கதரிசி இருந்தார் என்று தெரிந்துகொள்வார்கள்” என்று யெகோவா சொன்னார். (எசே. 2:5; 33:33) யெகோவா சொன்ன இந்த ஆறுதலான வார்த்தைகள், தொடர்ந்து ஊழியம் செய்ய எசேக்கியேலுக்குப் பலம் கொடுத்திருக்கும். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

இன்று நம்மையும் யெகோவாதான் அனுப்புகிறார்

எசேக்கியேலுக்கு வந்ததுபோல் நமக்கு எதிர்ப்பு வரலாம். நாம் சொல்வதை மக்கள் காதில் வாங்காமல் இருக்கலாம். ஆனால், யெகோவா நம்மோடு இருக்கிறார் என்று நமக்குத் தெரியும் (பாராக்கள் 5-6)

5. ஏசாயா 44:8 நமக்கு எப்படித் தைரியம் கொடுக்கிறது?

5 ஊழியம் செய்ய யெகோவாதான் நம்மை அனுப்பியிருக்கிறார் என்பதை யோசிக்கும்போது நமக்குத் தைரியம் கிடைக்கிறது. அவருடைய ‘சாட்சிகள்’ என்று சொல்லி அவர் நம்மைக் கௌரவப்படுத்தியிருக்கிறார். (ஏசா. 43:10) அது நமக்குக் கிடைத்த எவ்வளவு பெரிய பாக்கியம், இல்லையா? “பயப்படாதே” என்று எசேக்கியேலிடம் யெகோவா சொன்னதுபோல், “நீங்கள் கதிகலங்க வேண்டாம்” என்று யெகோவா நம்மிடமும் சொல்கிறார். எசேக்கியேலை அனுப்பியது போலவே யெகோவாதான் நம்மையும் அனுப்பியிருக்கிறார், அவர் நமக்குத் துணையாக இருக்கிறார்.—ஏசாயா 44:8-ஐ வாசியுங்கள்.

6. (அ) ஏசாயா 43:2-ல் யெகோவா என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார்? (ஆ எது நமக்கு ஆறுதலையும் தெம்பையும் கொடுக்கிறது?

6 நமக்கு உதவி செய்வதாக யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். உதாரணத்துக்கு, ‘நீங்கள் என்னுடைய சாட்சிகள்’ என்று சொல்வதற்கு முன்பு அவர் இப்படிச் சொல்லியிருக்கிறார்: “நீ கடலைக் கடந்து போகிறபோது நான் உன்னோடு இருப்பேன். ஆற்றைக் கடந்து போகிறபோது அது உன்னை மூழ்கடிக்காது. நெருப்பில் நடந்தாலும் அது உன்னைச் சுட்டெரிக்காது. தீ ஜுவாலை உன்மேல் பட்டாலும் அது உன்னைப் பொசுக்காது.” (ஏசா. 43:2) ஊழியம் செய்யும்போது சிலசமயங்களில் நமக்கு வெள்ளம்போல் பிரச்சினைகளும் நெருப்புபோல் சோதனைகளும் வருகின்றன. ஆனாலும், யெகோவாவின் உதவியால் நாம் தொடர்ந்து பிரசங்கிக்கிறோம். (ஏசா. 41:13) எசேக்கியேலின் நாட்களில் இருந்தது போலவே இன்றைக்கும் நிறையப் பேர் நாம் சொல்லும் செய்தியைக் கேட்பதே இல்லை. அதற்காக, ஒரு யெகோவாவின் சாட்சியாக நம்முடைய வேலையை நாம் சரியாகச் செய்யவில்லை என்று அர்த்தம் இல்லை. நாம் தொடர்ந்து நல்ல செய்தியைச் சொல்வதைப் பார்த்து யெகோவா ரொம்ப சந்தோஷப்படுகிறார். இதைத் தெரிந்துகொள்வதே நமக்கு ஆறுதலாகவும் தெம்பாகவும் இருக்கிறது. “ஒவ்வொருவனும் தன்னுடைய உழைப்புக்கு ஏற்ற பலனைப் பெறுவான்” என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னார். (1 கொ. 3:8; 4:1, 2) “நம்மளோட உழைப்ப யெகோவா ஆசீர்வதிப்பார்னு தெரிஞ்சுக்குறப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்று ரொம்ப நாளாக பயனியர் ஊழியம் செய்யும் ஒரு சகோதரி சொல்கிறார்.

எசேக்கியேல் கடவுளுடைய சக்தியால் பலம் பெற்றார்

யெகோவாவின் பிரமாண்டமான பரலோக ரதத்தை ஒரு தரிசனத்தில் எசேக்கியேல் பார்த்தபோது ஊழியத்தை நன்றாக செய்ய முடியும் என்ற அவருடைய நம்பிக்கை அதிகமானது (பாரா 7)

7. தான் பார்த்த தரிசனத்தைப் பற்றி யோசித்துப் பார்த்தபோதெல்லாம் எசேக்கியேலுக்கு எப்படி இருந்தது? (அட்டைப் படம்)

7 கடவுளுடைய சக்திக்கு எவ்வளவு வல்லமை இருக்கிறது என்பதை எசேக்கியேல் ஒரு தரிசனத்தில் பார்த்தார். கடவுளுடைய சக்தி பலம் படைத்த தேவதூதர்களையும் பரலோக ரதத்தின் பிரமாண்டமான சக்கரங்களையும் என்ன செய்ய வைத்தது என்பதைப் பார்த்தார். (எசே. 1:20, 21) அதைப் பார்த்தபோது எசேக்கியேலுக்கு எப்படி இருந்தது? “அதைப் பார்த்தவுடன் நான் சாஷ்டாங்கமாக விழுந்தேன்” என்று அவர் எழுதியிருக்கிறார். அவர் அப்படியே மலைத்துப்போய் தரையில் விழுந்துவிட்டார். (எசே. 1:28) அந்தத் தரிசனத்தைப் பற்றி யோசித்து பார்த்தபோதெல்லாம் அவருடைய நம்பிக்கை அதிகமாகியிருக்கும். அதாவது, கடவுளுடைய சக்தியின் உதவியிருந்தால் ஊழியத்தை நன்றாகச் செய்ய முடியும் என்ற அவருடைய நம்பிக்கை அதிகமாகியிருக்கும்.

8-9. (அ) ‘எழுந்து நிற்க’ சொல்லி யெகோவா சொன்னபோது எசேக்கியேலுக்கு என்ன நடந்தது? (ஆ) பிடிவாதமான ஜனங்களிடம் பிரசங்கிக்க யெகோவா வேறு எப்படியெல்லாம் எசேக்கியேலைப் பலப்படுத்தினார்?

8 யெகோவா எசேக்கியேலிடம், “மனிதகுமாரனே, எழுந்து நில். நான் உன்னிடம் பேச வேண்டும்” என்று சொன்னார். அந்தக் கட்டளையினாலும் கடவுளுடைய சக்தியினாலும், எழுந்து நிற்க எசேக்கியேலுக்குப் பலம் கிடைத்தது. “அவருடைய சக்தி எனக்குள் வந்து என்னை எழுந்து நிற்க வைத்தது” என்று எசேக்கியேல் எழுதினார். (எசே. 2:1, 2) அதற்குப் பிறகு அவர் ஊழியம் செய்த நேரமெல்லாம் கடவுளுடைய சக்தி அவரை வழிநடத்தியது. (எசே. 3:22; 8:1; 33:22; 37:1; 40:1) ‘வீம்பும் பிடிவாதமும் பிடித்த’ ஆட்களிடம் கடவுளுடைய செய்தியைச் சொல்ல அந்தச் சக்தி அவரைப் பலப்படுத்தியது. (எசே. 3:7) யெகோவா எசேக்கியேலிடம், “நான் உன்னுடைய முகத்தை அவர்களுடைய முகத்தைப் போலவும் உன்னுடைய நெற்றியை அவர்களுடைய நெற்றியைப் போலவும் கடினமாக்குவேன். நான் உன்னுடைய நெற்றியை வைரம் போலக் கடினமாக்கியிருக்கிறேன்; கருங்கல்லைவிட உறுதியாக்கியிருக்கிறேன். நீ அவர்களை நினைத்துப் பயப்படாதே, அவர்களுடைய முகத்தைப் பார்த்துத் திகிலடையாதே” என்று சொன்னார். (எசே. 3:8, 9) வேறு வார்த்தைகளில் சொல்ல வேண்டும் என்றால், ‘இந்த ஜனங்களோட பிடிவாதத்த பாத்து நீ சோர்ந்துபோயிடாத, நான் உன்ன பலப்படுத்துவேன்’ என்று யெகோவா சொன்னதுபோல் இருந்தது.

9 ஊழியம் செய்ய வேண்டிய இடத்துக்கு எல்லாம் கடவுளுடைய சக்தி எசேக்கியேலைத் தூக்கிக்கொண்டு போனது. பிறகு, “யெகோவாவின் சக்தியால் முழுமையாக நிரப்பப்பட்டேன்” என்று எசேக்கியேல் எழுதினார். கடவுள் சொல்லச் சொன்ன செய்தியைப் புரிந்துகொள்ளவும் அதை ஜீரணிக்கவும் அவருக்கு ஒரு வாரம் தேவைப்பட்டது. (எசே. 3:14, 15) அதற்குப் பிறகு யெகோவா அவரை ஒரு சமவெளிக்குப் போகச் சொன்னார். அங்கே ‘கடவுளுடைய சக்தி [அவருக்குள்] வந்தது.’ (எசே. 3:23, 24) அதற்குப் பிறகு, ஊழியத்தை ஆரம்பிக்க எசேக்கியேல் தயாராகிவிட்டார்.

இன்று நாம் கடவுளுடைய சக்தியால் பலம் பெறுகிறோம்

ஊழியம் செய்ய அன்று எசேக்கியேலுக்கு எது உதவி செய்ததோ அதுதான் இன்று நமக்கும் உதவி செய்கிறது (பாரா 10)

10. ஊழியம் செய்ய நமக்கு என்ன தேவை, ஏன்?

10 ஊழியம் செய்ய நமக்கு என்ன தேவை? இதற்குப் பதில் தெரிந்துகொள்ள எசேக்கியேலுக்கு என்ன நடந்தது என்று யோசித்துப் பாருங்கள். அவர் ஊழியத்தை ஆரம்பிப்பதற்கு முன்பு அவருக்குத் தேவையான பலத்தைக் கடவுளுடைய சக்தி கொடுத்தது. இன்றைக்கும்கூட கடவுளுடைய சக்தி இருந்தால் மட்டும்தான் நம்மால் ஊழியம் செய்ய முடியும். ஏன்? ஏனென்றால், சாத்தான் நமக்கு எதிராகப் போர் செய்கிறான். நம்முடைய பிரசங்க வேலையை நிறுத்துவதிலேயே அவன் குறியாக இருக்கிறான். (வெளி. 12:17) மனிதர்களுடைய பார்வையில் நம்மால் சாத்தானை ஜெயிக்கவே முடியாது. ஆனால் உண்மையில், ஊழியம் செய்யும்போது நாம் அவனை ஜெயிக்கிறோம். (வெளி. 12:9-11) எப்படி? ஊழியம் செய்யும்போது சாத்தானுடைய மிரட்டல்களுக்கு நாம் பயப்படவில்லை என்பதைக் காட்டுகிறோம். ஒவ்வொரு தடவை நாம் பிரசங்கிக்கும்போதும் சாத்தான் நம்மிடம் தோற்றுப்போகிறான். எதிர்ப்பு வரும்போது நாம் விடாமல் ஊழியம் செய்வது எதைக் காட்டுகிறது? கடவுளுடைய சக்தி நமக்குப் பலம் கொடுக்கிறது என்பதையும், யெகோவாவின் அங்கீகாரம் நமக்கு இருக்கிறது என்பதையும் அது காட்டுகிறது.—மத். 5:10-12; 1 பே. 4:14.

11. கடவுளுடைய சக்தி நமக்கு என்ன கொடுக்கும், அந்தச் சக்தி நமக்கு எப்போதும் கிடைக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

11 யெகோவா எசேக்கியேலுக்கு ஊழியம் செய்யத் தேவையான பலத்தைக் கொடுத்ததிலிருந்து வேறு என்ன தெரிந்துகொள்கிறோம்? ஊழியத்தில் எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும், அதைச் சமாளிக்கத் தேவையான பலத்தைக் கடவுளுடைய சக்தி நமக்குக் கொடுக்கும். (2 கொ. 4:7-9) அப்படியென்றால், கடவுளுடைய சக்தி நமக்கு எப்போதும் கிடைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? யெகோவா நம்முடைய ஜெபத்துக்குக் கண்டிப்பாகப் பதில் கொடுப்பார் என்ற நம்பிக்கையோடு அவருடைய சக்திக்காக நாம் விடாமல் ஜெபம் செய்ய வேண்டும். “கேட்டுக்கொண்டே இருங்கள், . . . தேடிக்கொண்டே இருங்கள், . . . தட்டிக்கொண்டே இருங்கள்” என்று இயேசு தன்னுடைய சீஷர்களிடம் சொன்னார். இப்படி, யெகோவாவிடம் கேட்பவர்களுக்கு யெகோவா ‘தன்னுடைய சக்தியைக் கொடுப்பார்.’—லூக். 11:9, 13; அப். 1:14; 2:4.

எசேக்கியேலின் விசுவாசத்தை கடவுளுடைய வார்த்தை அதிகமாக்கியது

12. எசேக்கியேல் 2:9–3:3 சொல்கிறபடி, அந்தச் சுருள் எங்கிருந்து வந்தது, அதில் என்ன எழுதியிருந்தது?

12 கடவுளுடைய சக்தி மட்டுமல்ல, கடவுளுடைய வார்த்தையும் எசேக்கியேலுக்கு உதவியது, அது அவருடைய விசுவாசத்தைப் பலப்படுத்தியது. ஒரு கை அவர் முன்னால் ஒரு சுருளை நீட்டியதை எசேக்கியேல் ஒரு தரிசனத்தில் பார்த்தார். (எசேக்கியேல் 2:9–3:3-ஐ வாசியுங்கள்.) அந்தச் சுருள் எங்கிருந்து வந்தது? அதில் என்ன எழுதியிருந்தது? அது எப்படி எசேக்கியேலின் விசுவாசத்தை அதிகமாக்கியது? அதைப் பற்றி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். அந்தச் சுருள் கடவுளுடைய சிம்மாசனத்திலிருந்து வந்தது. எசேக்கியேல் ஏற்கெனவே பார்த்திருந்த நான்கு தேவதூதர்களில் ஒருவரைப் பயன்படுத்தி யெகோவா அந்தச் சுருளை எசேக்கியேலிடம் கொடுத்திருக்கலாம். (எசே. 1:8; 10:7, 20) அந்தச் சுருளில் கடவுளுடைய வார்த்தை இருந்தது. அதாவது, சிறைபிடிக்கப்பட்ட அடங்காத ஜனங்களுக்கு எசேக்கியேல் சொல்ல வேண்டிய நியாயத்தீர்ப்பு செய்தி இருந்தது. (எசே. 2:7) சுருளின் உள்ளே, வெளியே என இரண்டு பக்கமும் அந்தச் செய்தி விளக்கமாக எழுதப்பட்டிருந்தது.

13. சுருளை என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா எசேக்கியேலிடம் சொன்னார், அது ஏன் இனிப்பாக இருந்தது?

13 அந்தச் சுருளைச் சாப்பிட்டு ‘வயிற்றை நிரப்பும்படி’ யெகோவா எசேக்கியேலிடம் சொன்னார். யெகோவா சொன்னதைக் கேட்டு எசேக்கியேல் அதை முழுமையாகச் சாப்பிட்டார். இது எதற்கு அடையாளமாக இருந்தது? எசேக்கியேல், தான் சொல்ல வேண்டிய செய்தியை முழுமையாக ஜீரணிக்க வேண்டியிருந்தது, அதாவது புரிந்துகொள்ள வேண்டியிருந்தது. அது அவருடைய இரத்தத்தோடு இரத்தமாகக் கலந்து அவருடைய உணர்ச்சிகளைத் தொட வேண்டியிருந்தது. ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், அந்தச் சுருளை எசேக்கியேல் சாப்பிட்டபோது அது “தேன்போல் இனிப்பாக இருந்தது.” (எசே. 3:3) எந்த விதத்தில்? யெகோவாவின் தீர்க்கதரிசியாக சேவை செய்தது அவருக்கு ஒரு இனிப்பான, இனிமையான அனுபவமாக இருந்தது. (சங். 19:8-11) அப்படி ஒரு பெரிய பாக்கியத்தைக் கொடுத்ததற்காக அவர் யெகோவாவுக்கு ரொம்ப நன்றியோடு இருந்தார்.

14. கடவுள் கொடுத்த பொறுப்பைச் செய்ய தயாராவதற்கு எசேக்கியேலுக்கு எது உதவி செய்தது?

14 அதற்குப் பிறகு யெகோவா எசேக்கியேலிடம், “நான் உன்னிடம் சொல்வதையெல்லாம் நன்றாகக் கேட்டு உன் நெஞ்சில் பதிய வைத்துக்கொள்” என்று சொன்னார். (எசே. 3:10) சுருளில் இருந்த வார்த்தைகளை ஞாபகத்தில் வைக்கும்படியும், அதை நன்றாக யோசித்துப் பார்க்கும்படியும் யெகோவா எசேக்கியேலிடம் சொன்னார். அப்படிச் செய்தது எசேக்கியேலுடைய விசுவாசத்தை இன்னும் அதிகமாக்கியது. அதுமட்டுமல்ல, மக்களிடம் என்ன வலிமையான செய்தியைச் சொல்ல வேண்டும் என்பதையும் அவர் தெரிந்துகொண்டார். (எசே. 3:11) கடவுளுடைய செய்தி எசேக்கியேலின் உள்ளத்திலும் உதடுகளிலும் இருந்ததால், அதை எல்லாரிடமும் சொல்கிற பொறுப்பை முழுமையாகச் செய்து முடிக்க அவர் தயாராக இருந்தார்.—சங்கீதம் 19:14-ஐ ஒப்பிடுங்கள்.

நம்முடைய விசுவாசத்தை கடவுளுடைய வார்த்தை அதிகமாக்குகிறது

15. நாம் ஊழியத்தை விடாமல் செய்ய வேண்டும் என்றால் எதை ‘நெஞ்சில் பதிய வைத்துக்கொள்ள’ வேண்டும்?

15 இன்றைக்கு நாமும் யெகோவா சொல்லும் எல்லாவற்றையும் கேட்டு அதை நம்முடைய ‘நெஞ்சில் பதிய வைத்துக்கொள்ள’ வேண்டும். அப்போதுதான், கடவுளுடைய வார்த்தை நம்முடைய விசுவாசத்தை இன்னும் அதிகமாக்கும், நம்மால் தொடர்ந்து ஊழியம் செய்ய முடியும். இன்றைக்கு யெகோவா நம்மிடம் பைபிள் மூலமாகப் பேசுகிறார். நம்முடைய யோசனைகளும் உணர்ச்சிகளும் அவருடைய வார்த்தைக்கு ஏற்ற விதமாக இருக்க வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும்?

16. சுருளைப் பற்றிய தரிசனத்திலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்கிறோம், கடவுளுடைய வார்த்தையை நன்றாகப் புரிந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

16 நாம் சாப்பிடும் உணவு ஜீரணம் ஆகும்போதுதான் நம் உடலுக்குப் பலம் கிடைக்கிறது. அதுபோலவே, கடவுளுடைய வார்த்தையைப் படித்து அதைப் பற்றி நாம் நன்றாக யோசித்துப் பார்க்கும்போதுதான் நம்முடைய விசுவாசம் இன்னும் பலமாகும். சுருளைப் பற்றிய தரிசனத்திலிருந்து கற்றுக்கொண்ட பாடத்தை நாம் எப்போதுமே மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். கடவுளுடைய வார்த்தையால் ‘நம்முடைய வயிற்றை நிரப்ப’ வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். அதாவது, அதை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அதற்கு மூன்று விஷயங்களை நாம் செய்ய வேண்டும். முதலில், கடவுளுடைய யோசனைகளை நம்முடைய மனதில் பதிய வைக்க உதவி கேட்டு ஜெபம் செய்ய வேண்டும். பிறகு, பைபிளில் இருக்கிற ஒரு பகுதியை வாசிக்க வேண்டும். அதற்குப் பிறகு, வாசித்ததை நிறுத்தி நிதானமாக யோசித்துப் பார்க்க வேண்டும். நாம் எந்தளவுக்கு யோசித்துப் பார்க்கிறோமோ அந்தளவுக்குக் கடவுளுடைய வார்த்தையைப் புரிந்துகொள்வோம். அது நம்முடைய விசுவாசத்தை இன்னும் பலப்படுத்தும்.

17. பைபிளில் நாம் வாசிக்கிற விஷயங்களை நன்றாக யோசித்துப் பார்ப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

17 கடவுளுடைய வார்த்தையை வாசித்து, அதை நன்றாக யோசித்துப் பார்ப்பது ஏன் ரொம்ப முக்கியம்? அப்படிச் செய்தால்தான் இப்போது நம்மால் கடவுளுடைய செய்தியைத் தைரியமாகப் பிரசங்கிக்க முடியும். சீக்கிரத்தில் கடுமையான நியாயத்தீர்ப்பு செய்தியை நாம் சொல்ல வேண்டியிருந்தாலும், அப்போதும் நம்மால் தைரியமாகப் பிரசங்கிக்க முடியும். அதோடு, யெகோவாவின் அருமையான குணங்களைப் பற்றி யோசித்துப் பார்க்கும்போது அவரிடம் நாம் இன்னும் இன்னும் நெருக்கமாவோம். அதனால், நமக்கு மனநிம்மதியும் திருப்தியும் கிடைக்கும். அது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கும்.—சங். 119:103.

விடாமல் ஊழியம் செய்ய உதவி

18. மக்கள் எதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும், ஏன்?

18 எசேக்கியேலைப் போல நாம் ஒரு தீர்க்கதரிசி இல்லை என்பது உண்மைதான். ஆனால், பைபிளில் யெகோவா சொல்லியிருக்கிற செய்தியைத் தொடர்ந்து எல்லாருக்கும் சொல்ல வேண்டும் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதுவும், போதும் என்று அவர் சொல்கிற வரைக்கும் பிரசங்கிப்பதில் நாம் தீர்மானமாக இருக்கிறோம். நியாயத்தீர்ப்பு நேரம் வரும்போது, கடவுள் தங்களுக்கு முன்பே எச்சரிக்கை கொடுக்கவில்லை என்றோ தங்களைக் கண்டுகொள்ளவில்லை என்றோ யாருமே சொல்ல முடியாது. (எசே. 3:19; 18:23) இவ்வளவு நாள் நாம் கடவுளின் செய்தியைத்தான் சொல்லிக்கொண்டிருந்தோம் என்பதை அப்போது அவர்கள் புரிந்துகொள்ள வேண்டியிருக்கும்.

19. தொடர்ந்து ஊழியம் செய்ய நமக்கு எது உதவி செய்யும்?

19 விடாமல் ஊழியம் செய்ய நமக்கு எது உதவி செய்யும்? எசேக்கியேலுக்கு உதவி செய்த அதே மூன்று விஷயங்கள்தான். அதனால், யெகோவாதான் நம்மை அனுப்பியிருக்கிறார்... கடவுளுடைய சக்தி நமக்கு பலம் கொடுக்கிறது... கடவுளுடைய வார்த்தை நம்முடைய விசுவாசத்தை அதிகமாக்குகிறது... என்பதை நாம் எப்போதுமே மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். யெகோவாவின் உதவி இருப்பதால் நாம் தொடர்ந்து தைரியமாக ஊழியம் செய்வோம், “முடிவுவரை” சகித்திருப்போம்.—மத். 24:13.

பாட்டு 65 முன்னே செல்வோமே!

a ஊழியம் செய்ய எசேக்கியேல் தீர்க்கதரிசிக்கு உதவியாக இருந்த மூன்று விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். யெகோவா அவருக்கு எப்படி உதவி செய்தார் என்று தெரிந்துகொள்ளும்போது, ஊழியம் செய்ய யெகோவா நமக்கும் உதவுவார் என்ற நம்பிக்கை இன்னும் அதிகமாகும்.