படிப்புக் கட்டுரை 46
சந்தோஷமாக சகித்திருக்க யெகோவா நமக்கு உதவி செய்வார்
“உங்களுக்குக் கருணை காட்ட யெகோவா பொறுமையோடு காத்திருக்கிறார். உங்களுக்கு இரக்கம் காட்டுவதற்காக எழுந்திருப்பார்.”—ஏசா. 30:18.
பாட்டு 3 எம் பலமும் நம்பிக்கையும் நீரே!
இந்தக் கட்டுரையில்... a
1-2. (அ) என்னென்ன கேள்விகளைப் பற்றி நாம் பார்க்கப்போகிறோம்? (ஆ) நமக்கு உதவி செய்ய யெகோவா ஆசையாக இருக்கிறார் என்று எப்படிச் சொல்லலாம்?
இன்று நமக்கு வருகிற கஷ்டங்களைச் சமாளிப்பதற்கும் சந்தோஷமாக யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கும் யெகோவா நமக்கு உதவி செய்கிறார். எந்தெந்த விதங்களில்? அவர் கொடுக்கிற உதவியிலிருந்து முழுமையாக நன்மை அடைவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஆனால், இதோடு சம்பந்தப்பட்டிருக்கிற இன்னொரு கேள்வியை நாம் முதலில் பார்க்கலாம். நமக்கு உதவி செய்ய வேண்டும் என்று உண்மையிலேயே யெகோவா ஆசைப்படுகிறாரா?
2 இதற்கான பதிலைத் தெரிந்துகொள்வதற்கு அப்போஸ்தலன் பவுல் பயன்படுத்திய ஒரு வார்த்தையைப் பற்றிப் பார்க்கலாம். எபிரெயர்களுக்கு அவர் கடிதம் எழுதியபோது, “யெகோவா எனக்குத் துணையாக இருக்கிறார். நான் பயப்பட மாட்டேன், மனிதனால் என்னை என்ன செய்ய முடியும்?” என்று எழுதினார். (எபி. 13:6) இங்கே சொல்லப்பட்டிருக்கிற “துணை” என்ற வார்த்தை, உதவிக்காகக் கதறுகிறவர்களுக்கு ஓடோடிப் போய் உதவி செய்கிற ஒருவரைக் குறிப்பதாக சில பைபிள் ஆராய்ச்சிப் புத்தகங்கள் சொல்கின்றன. கஷ்டத்தில் இருக்கும் ஒருவரை யெகோவா ஓடோடிப் போய்க் காப்பாற்றுவதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். நமக்கு உதவி செய்ய யெகோவா எவ்வளவு ஆசை ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதை அப்போது உங்களால் புரிந்துகொள்ள முடியும். யெகோவா நமக்குத் துணையாக இருக்கும்போது, எப்படிப்பட்ட கஷ்டங்கள் வந்தாலும் அவற்றைச் சகித்துக்கொண்டு நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்.
3. கஷ்டங்களைச் சகித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க யெகோவா என்ன மூன்று வழிகளில் உதவி செய்கிறார்?
3 பிரச்சினைகளைச் சகித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க யெகோவா எப்படியெல்லாம் உதவி செய்கிறார்? அதைத் தெரிந்துகொள்வதற்கு ஏசாயா புத்தகத்தைக் கொஞ்சம் எடுத்துப் பார்க்கலாம். ஏன் ஏசாயா புத்தகத்தைப் பார்க்க வேண்டும்? ஏனென்றால், ஏசாயாவுக்கு யெகோவா வெளிப்படுத்திய நிறைய தீர்க்கதரிசனங்கள் இன்று நமக்குப் பொருந்துகின்றன. அதுமட்டுமல்ல, நாம் சுலபமாகப் புரிந்துகொள்கிற விதத்தில் யெகோவாவை ஏசாயா விவரித்திருக்கிறார். அதற்குச் சில உதாரணங்கள் ஏசாயா 30-வது அதிகாரத்தில் இருக்கின்றன. யெகோவா எப்படித் தன்னுடைய மக்களுக்கு மூன்று விதங்களில் உதவி செய்கிறார் என்று ஏசாயா ரொம்ப தத்ரூபமாக விவரித்திருக்கிறார். அந்த மூன்று விதங்கள் என்னென்ன? (1) அவர் நம்முடைய ஜெபங்களைக் காதுகொடுத்துக் கேட்கிறார், அதற்குப் பதில் கொடுக்கிறார். (2) நமக்கு வழிநடத்துதல் கொடுக்கிறார். (3) இப்போது நம்மை ஆசீர்வதிக்கிறார், எதிர்காலத்திலும் ஆசீர்வதிக்கப்போகிறார். இந்த மூன்று விஷயங்களைப் பற்றி இப்போது நாம் விவரமாகப் பார்க்கலாம்.
யெகோவா நம் ஜெபங்களைக் கேட்கிறார்
4. (அ) ஏசாயாவின் காலத்தில் இருந்த யூதர்களைப் பற்றி யெகோவா என்ன சொன்னார், அவர்களுக்கு என்ன நடந்தது? (ஆ) யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்களுக்கு அவர் என்ன நம்பிக்கை கொடுத்தார்? (ஏசாயா 30:18, 19)
4 ஏசாயா 30-வது அதிகாரத்தின் ஆரம்பத்தில், யெகோவா யூதர்களைப் பற்றிச் சொல்லும்போது, அவர்கள் ‘பாவத்துக்குமேல் பாவம் செய்கிற’ ‘முரட்டுப் பிடிவாதமுள்ள பிள்ளைகள்’ என்று சொன்னார். அதுமட்டுமல்ல, “இந்த ஜனங்கள் அடங்காதவர்கள், . . . யெகோவாவின் சட்டத்தை கேட்க மனமில்லாத பிள்ளைகள்” என்றும் சொன்னார். (ஏசா. 30:1, 9) அந்த ஜனங்கள் யெகோவா சொல்வதைக் கேட்காததால் மோசமான விளைவுகளைச் சந்திப்பார்கள் என்று ஏசாயா மூலமாக யெகோவா சொன்னார். (ஏசா. 30:5, 17; எரே. 25:8-11) அவர் சொன்ன மாதிரியே, பாபிலோனியர்கள் அவர்களைச் சிறைபிடித்துக் கொண்டுபோனார்கள். ஆனால், யூதர்களில் சிலர் யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள். அவர்களுக்கு நம்பிக்கையான ஒரு செய்தியை ஏசாயா சொன்னார். ஒருநாள் யெகோவா அவர்களை மறுபடியும் அவர்களுடைய சொந்த நாட்டுக்கே கூட்டிக்கொண்டு வருவார் என்று சொன்னார். (ஏசாயா 30:18, 19-ஐ வாசியுங்கள்.) ஏசாயா சொன்ன மாதிரியே நடந்தது. யெகோவா அவர்களை பாபிலோனிலிருந்து விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தார். ஆனால், அது உடனே நடக்கவில்லை. “உங்களுக்குக் கருணை காட்ட யெகோவா பொறுமையோடு காத்திருக்கிறார்” என்று ஏசாயா சொன்னதிலிருந்து, இது நடக்க காலம் எடுக்கும் என்பது தெரிந்தது. சொல்லப்போனால், இஸ்ரவேலர்கள் பாபிலோனில் கைதிகளாக 70 வருஷம் இருந்த பின்புதான், அவர்களில் சிலர் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். (ஏசா. 10:21; எரே. 29:10) தாய்நாட்டுக்குத் திரும்பி வந்ததும், இவ்வளவு வருஷங்களாக அவர்கள் சிந்திய கண்ணீரெல்லாம் ஆனந்தக் கண்ணீராக மாறியது.
5. ஏசாயா 30:19 என்ன நம்பிக்கையை நமக்குக் கொடுக்கிறது?
5 “நீ உதவிக்காகக் கதறும்போது அவர் கருணை காட்டுவார்” என்ற வார்த்தைகள் நமக்கு இன்று ஆறுதல் கொடுக்கின்றன. (ஏசா. 30:19) ஏனென்றால், நாம் கதறும்போது யெகோவா காதுகொடுத்துக் கேட்பார் என்று ஏசாயா நம்பிக்கை கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, “உன் குரலைக் கேட்டதுமே பதில் கொடுப்பார்” என்று அந்த வசனத்தில் சொன்னார். அதாவது, நம்முடைய ஜெபங்களுக்கு யெகோவா உடனடியாகப் பதில் கொடுப்பார் என்று ஏசாயா சொன்னார். இந்த வார்த்தைகள் எதைக் காட்டுகின்றன? உதவி கேட்பவர்களுக்கு ஓடோடி வந்து உதவி செய்ய யெகோவா எந்தளவுக்கு ஆசை ஆசையாகக் காத்துக்கொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுகின்றன. இதை நாம் எப்போதுமே மனதில் வைத்துக்கொண்டால், பிரச்சினைகளைச் சகித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க முடியும்.
6. யெகோவா தன் ஊழியர்கள் ஒவ்வொருவருடைய ஜெபத்தையும் கேட்கிறார் என்பதை ஏசாயாவின் வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன?
6 நம்முடைய ஜெபத்தைப் பற்றி இந்த வசனத்திலிருந்து வேறு என்ன விஷயத்தைத் தெரிந்துகொள்கிறோம்? நம் ஒவ்வொருவருடைய ஜெபத்தையும் யெகோவா கவனமாகக் கேட்கிறார். எப்படிச் சொல்லலாம்? ஏசாயா 30-வது அதிகாரத்தின் ஆரம்ப வசனங்களில், “உங்களுக்கு,” “நீங்கள்” என்று யெகோவா தன் ஜனங்கள் எல்லாரையும் மொத்தமாகப் பார்த்துப் பேசுவதுபோல் இருக்கிறது. ஆனால், 19-வது வசனத்தில் யெகோவா, “நீ,” “உன்” என்று தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் பேசுவதுபோல் இருக்கிறது. “நீ அழ மாட்டாய். நீ உதவிக்காகக் கதறும்போது அவர் கருணை காட்டுவார்; உன் குரலைக் கேட்டதுமே பதில் கொடுப்பார்” என்றெல்லாம் ஏசாயா எழுதியிருக்கிறார். இது எதைக் காட்டுகிறது? யெகோவா நம் ஒவ்வொருவர் மேலும் அக்கறை வைத்திருக்கிறார், நம் ஒவ்வொருவருடைய ஜெபத்தையும் கவனமாகக் கேட்கிறார். ஒரு அன்பான அப்பா, சோர்ந்துபோய் உட்கார்ந்திருக்கும் தன் மகனையோ மகளையோ பார்த்து, “நீ ஏன் உன் அண்ணா (இல்ல, அக்கா) மாதிரி தைரியமா இருக்க மாட்டேங்குற?” என்றெல்லாம் கேட்க மாட்டார். அதேபோல்தான், யெகோவாவும்! மற்றவர்களோடு அவர் நம்மை ஒப்பிடுவது இல்லை. நம் ஒவ்வொருவருடைய வேதனையையும் அவர் நன்றாகப் புரிந்துகொள்கிறார், அதை அவரிடம் சொல்லும்போது அக்கறையாக கேட்கிறார்.—சங். 116:1; ஏசா. 57:15.
7. விடாமல் ஜெபம் செய்வது முக்கியம் என்று ஏசாயாவும் இயேசுவும் சொன்ன வார்த்தைகள் எப்படிக் காட்டுகின்றன?
7 ஏதோவொரு விஷயத்தை நினைத்துக் கவலைப்பட்டு யெகோவாவிடம் நாம் ஜெபம் பண்ணும்போது, பெரும்பாலும் முதலில் அந்தப் பிரச்சினையைச் சகித்துக்கொள்வதற்குத் தேவையான பலத்தை யெகோவா கொடுப்பார். நாம் நினைத்த அளவுக்குச் சீக்கிரமாக அந்தப் பிரச்சினை தீரவில்லை என்றால், அதைத் தாங்கிக்கொள்வதற்குத் தேவையான சக்தியைத் திரும்பத் திரும்ப யெகோவாவிடம் கேட்க வேண்டும். அப்படிச் கேட்கச் சொல்லித்தான் யெகோவாவும் நம்மிடம் சொல்லியிருக்கிறார். “அவரிடம் வேண்டிக்கொண்டே இருங்கள்” என்று ஏசாயா சொன்ன வார்த்தைகளிலிருந்து இதைத் தெரிந்துகொள்கிறோம். “அவரை ஓய்வெடுக்க விடாதீர்கள்” என்பதுதான் இந்த வார்த்தைகளின் நேரடி மொழிபெயர்ப்பு. (ஏசா. 62:7) அப்படியென்றால், யெகோவாவை ஓய்வெடுக்கக்கூட விடாத மாதிரி, அந்தளவுக்கு அவரிடம் தொடர்ந்து ஜெபம் செய்ய வேண்டும். ஏசாயா சொன்ன வார்த்தைகள், லூக்கா 11:8-10, 13-ல் இயேசு சொன்ன உதாரணங்களைத்தான் ஞாபகப்படுத்துகின்றன. நாம் ‘விடாப்பிடியாக’ ஜெபம் பண்ண வேண்டும், கடவுளுடைய சக்திக்காக ‘கேட்டுக்கொண்டே இருக்க’ வேண்டும் என்று இயேசு சொன்னார். நல்ல முடிவுகளை எடுக்க வழிநடத்தும்படியும் யெகோவாவிடம் நாம் கெஞ்சிக் கேட்கலாம்.
யெகோவா நம்மை வழிநடத்துகிறார்
8. ஏசாயா 30:20, 21 அன்றைக்கு எப்படி நிறைவேறியது?
8 ஏசாயா 30:20, 21-ஐ வாசியுங்கள். பாபிலோன் படை எருசலேமை ஒன்றரை வருஷத்துக்கு சுற்றிவளைத்திருந்தார்கள். அப்போது அங்கிருந்த மக்கள் பட்ட வேதனையும் கஷ்டமும், தினமும் சாப்பிடுகிற சாப்பாட்டைப் போலவும், குடிக்கிற தண்ணீரைப் போலவும் சர்வ சாதாரணமாகிவிட்டன. ஆனால், வசனங்கள் 20, 21 சொல்வதுபோல், அவர்கள் மனம் திருந்தி தங்களை மாற்றிக்கொண்டால் யெகோவா அவர்களைக் காப்பாற்றுவதாக வாக்குக் கொடுத்திருந்தார். யெகோவா அவர்களுடைய ‘மகத்தான போதகர்’ என்றும், அதனால் அவருக்குப் பிடித்த மாதிரி அவரை வணங்க அவர் சொல்லித் தருவார் என்றும் ஏசாயா சொன்னார். யூதர்கள் பாபிலோனிலிருந்து விடுதலையானபோது இந்த வார்த்தைகள் நிறைவேறின. சொன்னதைப் போல் யெகோவா அவர்களுக்கு மகத்தான போதகராக இருந்தார். அவருடைய வழிநடத்துதலுடன் திரும்பவும் அவருடைய ஜனங்கள் உண்மை வணக்கத்தை நிலைநாட்டினார்கள். இன்றைக்கு நமக்கும் யெகோவா மகத்தான போதகராக இருக்கிறார், அதை நினைத்து நாம் ரொம்ப சந்தோஷப்படுகிறோம்.
9. இன்றைக்கு யெகோவா நம்மை வழிநடத்துகிற ஒரு வழி என்ன?
9 ஒரு டீச்சர் பிள்ளைகளுக்கு சொல்லிக்கொடுக்கிற மாதிரி யெகோவாவும் நமக்குச் சொல்லிக்கொடுப்பதாக ஏசாயா சொல்கிறார். யெகோவா நமக்கு இரண்டு விதங்களில் சொல்லிக்கொடுக்கிறார். முதலில், “உங்களுடைய மகத்தான போதகரை உங்கள் கண்களாலேயே பார்ப்பீர்கள்” என்று ஏசாயா சொல்கிறார். இங்கே சொல்லியிருக்கிற போதகர், மாணவர்கள் முன்னால் நின்று சொல்லித் தருவதைப் போல் ஏசாயா விவரிக்கிறார். இன்றைக்கு யெகோவா நம்முடைய போதகராக இருப்பது நமக்கு கிடைத்த பெரிய பாக்கியம்! யெகோவா எப்படி நமக்கு முன்னால் நின்று போதிக்கிறார்? அவருடைய அமைப்பின் மூலமாகத்தான். அமைப்பு மூலமாக நமக்குக் கிடைக்கிற அருமையான வழிநடத்துதலுக்காக நாம் ரொம்ப நன்றியோடு இருக்கிறோம். கூட்டங்களில், மாநாடுகளில், பிரசுரங்களில், பிராட்காஸ்டிங் நிகழ்ச்சிகளில் என பல வழிகளில் அமைப்பு நமக்கு அறிவுரைகள் கொடுக்கிறது. கஷ்ட காலங்களில் சகித்திருப்பதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் இவையெல்லாம் நமக்கு உதவி செய்கின்றன.
10. எந்த விதத்தில் ஒரு குரல் நமக்குப் பின்னாலிருந்து கேட்கிறது?
10 யெகோவா நம்மை வழிநடத்துகிற இன்னொரு விதத்தைப் பற்றி ஏசாயா சொல்லும்போது ஒரு “குரல் பின்னாலிருந்து உங்கள் காதுகளில் கேட்கும்” என்று சொல்கிறார். மாணவர்களை அக்கறையாக கவனித்துக்கொள்கிற ஒரு டீச்சர் அவர்களோடு எங்கேயாவது போகும்போது அவர்கள் பின்னாலேயே போய், ‘இங்க போங்க, அங்க போகாதீங்க’ என்றெல்லாம் சொல்வார். அப்படியொரு டீச்சராகத்தான் யெகோவாவை ஏசாயா இங்கே விவரிக்கிறார். யெகோவாவின் குரல் நமக்கு எப்படி இன்று பின்னாலிருந்து கேட்கிறது? யெகோவா அந்தக் காலத்திலேயே பைபிளை எழுதிவிட்டார், அதாவது கால ஓட்டத்தில் அது எல்லாமே நமக்குப் பின்னால் எழுதப்பட்ட விஷயங்கள். அதனால், பைபிளைப் படிக்கும்போது கடவுளுடைய குரலை நாம் பின்னாலிருந்து கேட்பதைப் போல் இருக்கிறது.—ஏசா. 51:4.
11. பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைச் சகித்துக்கொண்டு யெகோவாவுக்குச் சந்தோஷமாக சேவை செய்ய நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?
11 யெகோவா தன் அமைப்பு மூலமாகவும், பைபிள் மூலமாகவும் நம்மை வழிநடத்துகிறார் என்று இதுவரைக்கும் பார்த்தோம். அதிலிருந்து நாம் எப்படி முழுமையாக நன்மை அடையலாம்? ஏசாயா இரண்டு விஷயங்களைச் சொன்னதைக் கவனித்திருப்பீர்கள். முதலில், “இதுதான் சரியான வழி” என்று சொன்னார். இரண்டாவதாக, “இதிலே நடங்கள்” என்று சொன்னார். (ஏசா. 30:21) அப்படியென்றால், எது “சரியான வழி” என்று தெரிந்துகொண்டால் மட்டும் போதாது, ‘அதிலே நாம் நடக்கவும்’ வேண்டும். பைபிளில் இருக்கிற விஷயங்களை யெகோவாவின் அமைப்பு விளக்கிச் சொல்கிறது. அதனால், யெகோவா நம்மிடம் என்ன எதிர்பார்க்கிறார் என்று நாம் கற்றுக்கொள்கிறோம். அதை நம் வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்றும் தெரிந்துகொள்கிறோம். இதுபோல் நாம் கற்றுக்கொள்ளும்போதும், கற்றுக்கொண்டதைக் கடைப்பிடிக்கும்போதும்தான், பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைச் சகித்துக்கொண்டு யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்ய முடியும். அப்போதுதான் யெகோவாவுடைய ஆசீர்வாதமும் நமக்குக் கிடைக்கும்.
யெகோவா நம்மை ஆசீர்வதிக்கிறார்
12. ஏசாயா 30:23-26 சொல்கிறபடி, யெகோவா எப்படித் தன் ஜனங்களை ஆசீர்வதித்தார்?
12 ஏசாயா 30:23-26-ஐ வாசியுங்கள். பாபிலோனிலிருந்து திரும்பி வந்த யூதர்களின் விஷயத்தில் இந்தத் தீர்க்கதரிசனம் எப்படி நிறைவேறியது? அவர்களுக்கு ஏராளமான ஆசீர்வாதங்கள் கிடைத்தன. அவர்கள் சந்தோஷமாக வாழ்வதற்கும் யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்வதற்கும் என்னென்ன தேவையோ அவையெல்லாமே அவர்களுக்குக் கிடைத்தன. அந்த மக்களுக்கு யெகோவா ஏராளமான உணவு கொடுத்தார். அதைவிட முக்கியமாக, அவர்கள் அவரிடம் நெருங்கி வருவதற்கும் உண்மை வணக்கத்தை மறுபடியும் ஆரம்பிப்பதற்கும் தேவையான எல்லாவற்றையும் அவர்களுக்குக் கொடுத்தார். அதுவரை இல்லாத அளவுக்கு, ஆசீர்வாதங்களுக்கு மேல் ஆசீர்வாதங்களை யெகோவா அவர்களுக்குக் கொடுத்தார். 26-வது வசனம் சொல்கிறபடி, யெகோவா அவர்களுக்கு நிறைய வெளிச்சம் கொடுத்தார். அதாவது, அவருடைய வார்த்தையை நன்றாகப் புரிந்துகொள்ள உதவி செய்தார். (ஏசா. 60:2) யெகோவா அவருடைய ஊழியர்களை இவ்வளவு ஆசீர்வதித்ததால், அவர்களால் ‘சந்தோஷ இதயத்தோடும்’ மன பலத்தோடும் அவருக்குத் தொடர்ந்து சேவை செய்ய முடிந்தது.—ஏசா. 65:14.
13. உண்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய தீர்க்கதரிசனம் இன்றைக்கு எப்படி நிறைவேறிக்கொண்டிருக்கிறது?
13 உண்மை வணக்கம் திரும்ப நிலைநாட்டப்படுவதைப் பற்றிய தீர்க்கதரிசனம் இன்றைக்கு நமக்கும் பொருந்துமா? நிச்சயமாக! எப்படிச் சொல்கிறோம்? கி.பி. 1919 முதல் பொய் மத உலகப் பேரரசான மகா பாபிலோனிலிருந்து லட்சக்கணக்கான பேர் விடுதலையாகி வந்துகொண்டு இருக்கிறார்கள். அப்படி விடுதலையாகி வருகிறவர்கள், இஸ்ரவேலர்களுக்கு வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தைவிட ரொம்ப சிறந்த ஒரு இடத்துக்கு வந்திருக்கிறார்கள். அதுதான் ஆன்மீகப் பூஞ்சோலை. (ஏசா. 51:3; 66:8) ஆன்மீகப் பூஞ்சோலை என்றால் என்ன?
14. ஆன்மீகப் பூஞ்சோலை என்றால் என்ன, இன்றைக்கு யாரெல்லாம் அதில் இருக்கிறார்கள்? (வார்த்தையின் விளக்கத்தைப் பாருங்கள்.)
14 கி.பி. 1919-லிருந்து பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் ஆன்மீகப் பூஞ்சோலையில் வாழ்ந்துகொண்டு வருகிறார்கள். b காலம் போகப் போக, பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருக்கிற ‘வேறே ஆடுகளும்கூட’ இந்தப் பூஞ்சோலைக்குள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு யெகோவா நிறைய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருக்கிறார்.—யோவா. 10:16; ஏசா. 25:6; 65:13.
15. ஆன்மீகப் பூஞ்சோலை எங்கே இருக்கிறது?
15 ஆன்மீகப் பூஞ்சோலை இன்று எங்கே இருக்கிறது? யெகோவாவை வணங்குகிறவர்கள் உலகம் முழுவதும் இருக்கிறார்கள். அப்படியென்றால், அவர்கள் இருக்கிற ஆன்மீகப் பூஞ்சோலையும் உலகம் முழுவதும் இருக்கிறது. அதனால், நாம் இந்த உலகத்தில் எங்கே இருந்தாலும் சரி, உண்மை வணக்கத்துக்குத் தொடர்ந்து ஆதரவு கொடுத்தால், நாமும் இந்த ஆன்மீகப் பூஞ்சோலையில் இருக்க முடியும்.
16. ஆன்மீகப் பூஞ்சோலையில் தொடர்ந்து இருப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும், அதை நாம் எப்படிச் செய்யலாம்?
16 ஆன்மீகப் பூஞ்சோலையில் நாம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்றால், உலகம் முழுவதும் இருக்கிற கிறிஸ்தவ சபைக்காக நாம் எப்போதுமே நன்றியோடு இருக்க வேண்டும். எப்படி? அதில் இருக்கிறவர்களுடைய குறைகளைப் பார்க்காமல் நிறைகளைப் பார்க்க வேண்டும். (யோவா. 17:20, 21) அது ஏன் ரொம்ப முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு காட்டில் விதவிதமான மரங்கள் இருக்கும். அவைதான் அதற்கு அழகு. அதேபோல்தான், ஆன்மீகப் பூஞ்சோலையிலும் விதவிதமான ஆட்கள் இருக்கிறார்கள். (ஏசா. 44:4; 61:3) நாம் எப்போதுமே “மொத்த காட்டின்” அழகைத்தான் பார்க்க வேண்டும். “தனித்தனி மரங்களிடம்” இருக்கிற குறைகளைப் பார்க்கக் கூடாது. நம்முடைய குறைகளோ மற்றவர்களிடம் இருக்கிற குறைகளோ, உலகம் முழுவதும் ஒற்றுமையாக இருக்கிற கிறிஸ்தவ சபையின் அழகை நம் கண்ணிலிருந்து மறைத்துவிடும். அதற்கு நாம் ஒருநாளும் இடம் கொடுக்கக் கூடாது!
17. சபையின் ஒற்றுமையைக் கட்டிக்காக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்?
17 ஆன்மீகப் பூஞ்சோலையில் இருக்கும் ஒற்றுமையைக் கட்டிக்காக்க நாம் ஒவ்வொருவரும் என்ன செய்ய வேண்டும்? சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க வேண்டும். (மத். 5:9; ரோ. 12:18) சபையில் இருக்கிறவர்களுடன் சமாதானமாக இருப்பதற்கு நாம் ஒவ்வொரு தடவை முயற்சி எடுக்கும்போதும் ஆன்மீகப் பூஞ்சோலையின் அழகுக்கு அழகு சேர்க்கிறோம். ஆன்மீகப் பூஞ்சோலையில் இருக்கிற ஒவ்வொருவரையும் யெகோவாதான் ஈர்த்திருக்கிறார் என்பதை நாம் எப்போதுமே மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். (யோவா. 6:44) அவர்கள் ஒவ்வொருவரையுமே அவர் பொக்கிஷமாகப் பார்க்கிறார். அப்படிப்பட்டவர்களோடு ஒற்றுமையாகவும் சமாதானமாகவும் இருப்பதற்கு நாம் கடினமாக முயற்சி செய்யும்போது, யெகோவா அதைப் பார்த்து எவ்வளவு சந்தோஷப்படுவார் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்!—ஏசா. 26:3; ஆகா. 2:7.
18. நாம் அடிக்கடி எதைப் பற்றியெல்லாம் ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும், ஏன்?
18 ஆன்மீகப் பூஞ்சோலையில் யெகோவா நிறைய ஆசீர்வாதங்களைத் தருகிறார் என்று நாம் ஏற்கெனவே பார்த்தோம். அதிலிருந்து முழுமையாக நன்மையடைய வேண்டும் என்றால் நாம் என்ன செய்ய வேண்டும்? பைபிளிலும் பைபிள் பிரசுரங்களிலும் நாம் படிக்கிற விஷயங்களை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால், நல்ல கிறிஸ்தவ குணங்களை நம்மால் வளர்த்துக்கொள்ள முடியும். அப்போது, சபையில் “சகோதர அன்பையும் கனிவான பாசத்தையும்” காட்ட முடியும். (ரோ. 12:10) இப்போது நமக்குக் கிடைத்திருக்கிற ஆசீர்வாதங்களைப் பற்றி ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது யெகோவாவுடன் நமக்கு இருக்கிற பந்தம் பலமாகும். எதிர்காலத்தில் அவர் தரப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றி ஆழமாக யோசிக்கும்போது, யெகோவாவுக்கு என்றென்றைக்கும் சேவை செய்யப்போகிறோம் என்ற நம்பிக்கை நமக்கு ரொம்பவே நிஜமாகத் தெரியும். இது எல்லாமே யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்ய இன்று நமக்கு உதவி செய்யும்.
சகித்திருப்பதற்குத் தீர்மானமாக இருக்கிறோம்
19. (அ) ஏசாயா 30:18 சொல்கிறபடி, நாம் எதில் நம்பிக்கையாக இருக்கலாம்? (ஆ) பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைச் சகித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க நமக்கு எது உதவி செய்யும்?
19 யெகோவா சீக்கிரத்தில் இந்த மோசமான உலகத்துக்கு முடிவுகட்டப் போகிறார். அப்போது, நம்முடைய சார்பில் அவர் “எழுந்திருப்பார்.” (ஏசா. 30:18) யெகோவா “நியாயம் வழங்குகிற கடவுள்.” அதனால், அவர் குறித்திருக்கிற நாளில் சாத்தானின் உலகத்துக்குக் கண்டிப்பாக அழிவைக் கொண்டுவருவார். அது ஒரே ஒருநாள் தள்ளிப்போவதற்குக்கூட அவர் விட மாட்டார். இதில் நாம் நம்பிக்கையாக இருக்கிறோம். (ஏசா. 25:9) நம்மை அவர் காப்பாற்றப்போகிற அந்த நாளுக்காகப் பொறுமையாகக் காத்திருக்கிறோம். அதுவரைக்கும், மூன்று விஷயங்களைச் செய்ய நாம் தீர்மானமாக இருக்கிறோம். ஜெபம் செய்ய நமக்குக் கிடைத்திருக்கிற வாய்ப்பை ஒரு பெரிய பாக்கியமாக நினைப்பதற்கும்... பைபிளைப் படித்து அதன்படி நடப்பதற்கும்... நம்முடைய ஆசீர்வாதங்களைப் பற்றி ஆழமாக யோசிப்பதற்கும்... நாம் தீர்மானமாக இருக்கிறோம். இதையெல்லாம் நாம் செய்யும்போது, எவ்வளவு பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைச் சகித்துக்கொண்டு யெகோவாவுக்குச் சந்தோஷமாகச் சேவை செய்ய அவர் நமக்கு உதவி செய்வார்.
பாட்டு 142 நம்பிக்கை ஒரு நங்கூரம்
a பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைச் சகித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க யெகோவா தன்னை வணங்குகிறவர்களுக்கு உதவி செய்கிறார். அவர் உதவி செய்கிற மூன்று வழிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஏசாயா 30-வது அதிகாரத்திலிருந்து நாம் அதைப் பற்றிப் படிப்போம். அப்படிப் படிக்கும்போது, ஜெபம் செய்வதும்... பைபிள் படிப்பதும்... இப்போதும் எதிர்காலத்திலும் யெகோவா கொடுக்கப்போகிற ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பார்ப்பதும்... ஏன் முக்கியம் என்பதைப் புரிந்துகொள்வோம்.
b வார்த்தையின் விளக்கம்: நாம் எல்லாரும் யெகோவாவை ஒற்றுமையாக வணங்கும்போது, நாம் பாதுகாப்பான ஒரு ஆன்மீகப் பூஞ்சோலையில் இருக்கிறோம் என்று சொல்லலாம். இந்தப் பூஞ்சோலையில், பொய் மதத்தின் கலப்படம் இல்லாத ஆன்மீக உணவு நமக்கு ஏராளமாகக் கிடைக்கிறது, திருப்தி தருகிற ஊழிய வேலையும் நிறைய இருக்கிறது. யெகோவாவோடு நெருக்கமான பந்தம் நமக்குக் கிடைக்கிறது. அன்பாகவும் சமாதானமாகவும் பழகுகிற சகோதர சகோதரிகளுடைய நட்பு நமக்குக் கிடைக்கிறது. பிரச்சினைகள் வந்தாலும் அவற்றைச் சகித்துக்கொண்டு சந்தோஷமாக இருக்க அவர்கள் நமக்கு உதவி செய்கிறார்கள். யெகோவா ஏற்றுக்கொள்கிற விதத்தில் அவரை நாம் வணங்க ஆரம்பிக்கும்போதும், அவரைப் போல் நடந்துகொள்ள நம்மால் முடிந்ததை எல்லாம் செய்யும்போதும், இந்த ஆன்மீகப் பூஞ்சோலைக்குள் நாம் வருகிறோம் என்று சொல்லலாம்.