Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 47

யெகோவாவிடமிருந்து உங்களைப் பிரிக்க எதையும் விடாதீர்கள்!

யெகோவாவிடமிருந்து உங்களைப் பிரிக்க எதையும் விடாதீர்கள்!

“யெகோவாவே, நான் உங்களை நம்பியிருக்கிறேன்.”—சங். 31:14.

பாட்டு 122 அசைக்க முடியாதவர்களாக இருங்கள்!

இந்தக் கட்டுரையில்... a

1. யெகோவா நம்மிடம் நெருங்கி வர ஆசைப்படுகிறார் என்று நமக்கு எப்படித் தெரியும்?

 யெகோவா நம் எல்லாரையும் அவரிடம் நெருங்கி வரும்படி சொல்கிறார். (யாக். 4:8) அவர் நம்முடைய கடவுளாக... அப்பாவாக... ஃப்ரெண்டாக... இருக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார். அவர் நம்முடைய ஜெபங்களுக்குப் பதில் கொடுக்கிறார். கஷ்ட காலங்களில் நம் கூடவே இருந்து நமக்கு உதவி செய்கிறார். நமக்குக் கற்றுக்கொடுப்பதற்கும் நம்மைப் பாதுகாப்பதற்கும் அவருடைய அமைப்பைப் பயன்படுத்துகிறார். ஆனால், யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

2. யெகோவாவிடம் நெருங்கிப் போவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்?

2 யெகோவாவிடம் நாம் நெருங்கிப் போவதற்கு அவரிடம் நாம் ஜெபம் செய்ய வேண்டும்... அவருடைய வார்த்தையைப் படிக்க வேண்டும்... அதைப் பற்றி ஆழமாக யோசிக்க வேண்டும். அப்படிச் செய்தால், அவர்மேல் நமக்கு இருக்கும் அன்பும் மதிப்பும் அதிகமாகும். அதனால், நாம் ஆசையாக அவருக்குக் கீழ்ப்படிவோம், அவரைச் சந்தோஷமாகப் புகழ்வோம். அதற்கான எல்லா தகுதியும் அவருக்கு இருக்கிறது. (வெளி. 4:11) யெகோவாவைப் பற்றி நாம் எந்தளவுக்குத் தெரிந்துகொள்கிறோமோ அந்தளவுக்கு அவரை நம்புவோம். நமக்கு உதவி செய்வதற்காக அவர் பயன்படுத்தும் அமைப்பையும் நம்புவோம்.

3. யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்காக சாத்தான் எப்படி முயற்சி செய்கிறான், ஆனால் யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் விட்டுப் போகாமல் இருக்க நமக்கு எது உதவி செய்யும்? (சங்கீதம் 31:13, 14)

3 யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்காக சாத்தான் முயற்சி செய்கிறான். முக்கியமாக, நமக்கு பிரச்சினைகள் வருகிற சமயத்தில் அப்படி அவன் செய்கிறான். அவன் என்ன தந்திரத்தைப் பயன்படுத்துகிறான்? யெகோவாவின் மேலும் அவருடைய அமைப்பின் மேலும் நமக்கு இருக்கும் நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாகக் குலைக்கப் பார்க்கிறான். ஆனாலும், நம்மால் அவனுடைய வலையில் சிக்காமல் இருக்க முடியும். நம்முடைய விசுவாசத்தை நாம் பலமாக வைத்துக்கொண்டால்... யெகோவாமேல் அசைக்க முடியாத நம்பிக்கை வைத்தால்... யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் விட்டு நாம் என்றைக்குமே போக மாட்டோம்.—சங்கீதம் 31:13, 14-ஐ வாசியுங்கள்.

4. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றியெல்லாம் பார்க்கப்போகிறோம்?

4 சபைக்கு வெளியே இருந்து நமக்கு வரும் மூன்று பிரச்சினைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அவை ஒவ்வொன்றும் யெகோவாவின் மேலும் அவருடைய அமைப்பின் மேலும் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையைக் குலைத்துவிடலாம். இந்தப் பிரச்சினைகள் யெகோவாவிடமிருந்து நம்மை எப்படிப் பிரிக்கும்? சாத்தானின் வலையில் விழாமல் இருக்க நாம் என்ன செய்யலாம்?

பிரச்சினைகள் வரும்போது

5. பிரச்சினைகள் வரும்போது யெகோவாவின் மேலும் அவருடைய அமைப்பின் மேலும் நமக்கு இருக்கிற நம்பிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது என்று எப்படிச் சொல்லலாம்?

5 சிலசமயம் நமக்கு நிறைய பிரச்சினைகள் வருகின்றன. உதாரணத்துக்கு, குடும்பத்திலிருந்து எதிர்ப்பு வரலாம். இல்லையென்றால், நம்முடைய வேலை பறிபோகலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகள் வரும்போது யெகோவாவின் அமைப்புமேல் நாம் வைத்திருக்கும் நம்பிக்கை குறையலாம். யெகோவாவிடமிருந்து நாம் பிரிந்தும் போய்விடலாம். எப்படி? ஒரு பிரச்சினை தீராமல் ரொம்ப நாள் அப்படியே இருக்கும்போது நாம் நம்முடைய நம்பிக்கையை இழந்துவிடலாம், சோர்ந்துபோய்விடலாம். அப்படி ஒரு சூழ்நிலைமைக்காகத்தான் சாத்தான் காத்துக்கொண்டிருக்கிறான். அந்த மாதிரி சூழ்நிலைமைகளை அவன் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு, யெகோவாவுக்கு நம்மேல் அன்பே இல்லை என்று நம்மை நினைக்க வைக்கிறான். யெகோவாவும் அவருடைய அமைப்பும்தான் நம்முடைய பிரச்சினைக்கெல்லாம் காரணமோ என்று நம்மை சந்தேகப்பட வைக்கிறான். இதே மாதிரி ஒரு விஷயம்தான் எகிப்திலிருந்த இஸ்ரவேலர்களுக்கும் நடந்தது. எகிப்திலிருந்து அவர்களை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வருவதற்காக யெகோவா மோசேயையும் ஆரோனையும் நியமித்திருந்ததை முதலில் இஸ்ரவேலர்கள் நம்பினார்கள். (யாத். 4:29-31) ஆனால், அவர்களை பார்வோன் ரொம்ப கொடுமைப்படுத்த ஆரம்பித்ததும், மோசேயும் ஆரோனும்தான் தங்களுடைய பிரச்சினைக்கெல்லாம் காரணம் என்று சொன்னார்கள். “பார்வோனும் அவருடைய ஆட்களும் எங்களை வெறுக்கும்படி செய்துவிட்டீர்கள். எங்களைக் கொலை செய்வதற்காக நீங்களே அவர்கள் கையில் வாளைக் கொடுத்துவிட்டீர்கள்” என்று சொன்னார்கள். (யாத். 5:19-21) கடவுளுடைய உண்மை ஊழியர்களின் மேலேயே அவர்கள் பழிபோட்டார்கள். எவ்வளவு வருத்தமான விஷயம், இல்லையா? நீங்கள் ரொம்ப நாளாக ஒரு பிரச்சினையில் சிக்கித் தவித்துக்கொண்டு இருக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவின் மேலும் அவருடைய அமைப்பின் மேலும் உங்களுடைய நம்பிக்கை குறையாமல் பார்த்துக்கொள்ள என்ன செய்யலாம்?

6. பிரச்சினைகளைச் சமாளிப்பது பற்றி ஆபகூக் தீர்க்கதரிசியிடமிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? (ஆபகூக் 3:17-19)

6 உங்கள் மனதில் இருக்கிற எல்லாவற்றையும் ஜெபத்தில் யெகோவாவிடம் கொட்டுங்கள், அவரையே நம்பியிருங்கள். ஆபகூக் தீர்க்கதரிசிக்கு நிறைய பிரச்சினைகள் வந்தன. ஒருசமயத்தில், யெகோவாவுக்குத் தன்மேல் அக்கறை இருக்கிறதா என்று அவர் சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டார். அதனால், தன் மனதில் இருந்த எல்லாவற்றையும் யெகோவாவிடம் கொட்டினார். “யெகோவாவே, நான் எவ்வளவு காலத்துக்குத்தான் உதவிக்காகக் கதறுவேன், நீங்கள் ஏன் கேட்காமல் இருக்கிறீர்கள்? . . . கொடுமைகள் நடப்பதை ஏன் பொறுத்துக்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார். (ஆப. 1:2, 3) அவர் மனம்விட்டு செய்த ஜெபத்தை யெகோவா கேட்டார், பதிலும் கொடுத்தார். (ஆப. 2:2, 3) யெகோவா தன்னுடைய மக்களை முன்பு எப்படியெல்லாம் காப்பாற்றியிருக்கிறார் என்று ஆபகூக் யோசித்துப் பார்த்தபோது சந்தோஷம் மறுபடியும் அவரைத் தேடி வந்தது. யெகோவா அவர்மேல் அக்கறையாகத்தான் இருக்கிறார், எப்படிப்பட்ட பிரச்சினையையும் சகித்திருக்க உதவி செய்வார் என்று அவர் உறுதியாக நம்பினார். (ஆபகூக் 3:17-19-ஐ வாசியுங்கள்.) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வரும்போது, யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். உங்கள் மனதில் இருக்கிற எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள். அதற்குப் பிறகு, அவரையே நம்பியிருங்கள். அப்படிச் செய்யும்போது, அந்தப் பிரச்சினையைச் சகிக்கத் தேவையான பலத்தை யெகோவா கொடுப்பார் என்பதில் நீங்கள் உறுதியாக இருக்கலாம். அவர் உதவி செய்வதை நீங்கள் பார்க்கும்போது, அவர்மேல் இருக்கிற விசுவாசம் உங்களுக்கு அதிகமாகும்.

7. ஷெர்லியின் குடும்பத்தில் இருந்த ஒருவர் என்ன செய்ய முயற்சி பண்ணினார், யெகோவாமேல் இருந்த விசுவாசத்தை விட்டுவிடாமல் இருக்க ஷெர்லிக்கு எது உதவி செய்தது?

7 யெகோவாவிடம் நெருங்கியிருக்க உதவி செய்கிற விஷயங்களை எப்போதும் செய்யுங்கள். அதுதான் பப்புவா நியு கினியில் இருக்கிற சகோதரி ஷெர்லியும் செய்தார். b பிரச்சினைகளைச் சமாளிக்க அது அவருக்கு எப்படி உதவி செய்தது என்று பார்க்கலாம். ஷெர்லியின் குடும்பத்தார் ரொம்ப ஏழைகளாக இருந்தார்கள். சிலசமயம் அவர்கள் சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டார்கள். யெகோவாமேல் ஷெர்லிக்கு இருந்த நம்பிக்கையை உடைக்க அவருடைய குடும்பத்தில் இருந்த ஒருவர் முயற்சி பண்ணினார். “என்னமோ கடவுளோட சக்தி உனக்கு உதவி செய்யுது உதவி செய்யுதுன்னு சொல்றியே, எங்க உதவி செய்யுது? இன்னும் நம்ம குடும்பம் ஏழையாதான இருக்கு? ஊரெல்லாம் போய் கடவுள பத்தி சொல்றேன்னு டைம்தான் வேஸ்ட் பண்ணிட்டு இருக்குற” என்று அவர் சொன்னார். பிறகு என்ன நடந்தது? “அதெல்லாம் கேட்டப்போ கடவுளுக்கு உண்மையிலேயே எங்க மேல அக்கறை இருக்கா இல்லையான்னு சந்தேகப்பட ஆரம்பிச்சிட்டேன். அதனால உடனே யெகோவாகிட்ட ஜெபம் பண்ணுனேன். என் மனசுல இருந்த எல்லாத்தயும் அவர்கிட்ட சொன்னேன். பைபிளயும் நம்மளோட பிரசுரங்களையும் தொடர்ந்து படிச்சேன். ஊழியம் செய்றதயும் கூட்டங்களுக்கு போறதயும் நான் நிறுத்தவே இல்ல” என்று அவர் சொல்கிறார். தன் குடும்பத்தை யெகோவா எவ்வளவு நன்றாகப் பார்த்துக்கொள்கிறார் என்று சீக்கிரத்திலேயே ஷெர்லி புரிந்துகொண்டார். அவருடைய குடும்பம் ஒருநாள்கூட பட்டினியாக இருக்கவில்லை. அவர்கள் சந்தோஷமாக இருந்தார்கள். “யெகோவா என்னோட ஜெபங்களுக்கு பதில் கொடுக்குறத என்னால பார்க்க முடிஞ்சுது” என்று ஷெர்லி சொல்கிறார். (1 தீ. 6:6-8) யெகோவாவிடம் நெருங்கியிருக்க உதவி செய்கிற விஷயங்களை நீங்கள் எப்போதும் செய்தீர்கள் என்றால், எப்படிப்பட்ட கஷ்டமோ சந்தேகமோ வந்தாலும் நீங்களும் யெகோவாவை விட்டுப் போகவே மாட்டீர்கள்.

பொறுப்பில் இருக்கும் சகோதரர்கள் தவறாக நடத்தப்படும்போது

8. பொறுப்பில் இருக்கும் சகோதரர்களுக்கு என்ன நடக்கலாம்?

8 பொறுப்பில் இருக்கிற சகோதரர்களைப் பற்றி மீடியா மூலமாகவும் சமூக வலைதளங்கள் மூலமாகவும் எதிரிகள் பொய்களைப் பரப்புகிறார்கள். (சங். 31:13) அதுமட்டுமல்ல, சில அரசாங்கங்கள் நம்முடைய சகோதரர்களைக் கைது செய்திருக்கின்றன, குற்றவாளிகள் என்று தீர்ப்பு கொடுத்திருக்கின்றன. முதல் நூற்றாண்டில் அப்போஸ்தலன் பவுலைக்கூட எதிரிகள் இப்படித்தான் தவறாகக் குற்றம் சுமத்தி கைது செய்தார்கள். அப்போது, மற்ற சகோதர சகோதரிகள் என்ன செய்தார்கள்?

9. அப்போஸ்தலன் பவுல் சிறையில் அடைக்கப்பட்டபோது சில கிறிஸ்தவர்கள் என்ன செய்தார்கள்?

9 அப்போஸ்தலன் பவுல் ரோமில் கைதியாக இருந்தபோது சில கிறிஸ்தவர்கள் அவருக்கு உதவி செய்வதை நிறுத்திவிட்டார்கள். (2 தீ. 1:8, 15) ஏன்? எல்லாரும் பவுலை ஒரு குற்றவாளியாகப் பார்த்ததால் அவருக்கு உதவி செய்வதை இவர்கள் அவமானமாக நினைத்தார்களா? (2 தீ. 2:8, 9) அல்லது, அவருக்கு உதவி செய்தால் அவர்களும் துன்புறுத்தப்படுவார்கள் என்று பயந்தார்களா? காரணம் எதுவாக இருந்தாலும் சரி, பவுலுக்கு எப்படி இருந்திருக்கும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். அவர்களுக்காக அவர் நிறைய கஷ்டப்பட்டிருந்தார். ஏன், தன்னுடைய உயிரையேகூட பணயம் வைத்திருந்தார். (அப். 20:18-21; 2 கொ. 1:8) அவருக்கு உதவி தேவைப்பட்டபோது அவர்கள் அவரை விட்டுவிட்டுப் போய்விட்டார்கள். நாம் ஒருநாளும் அவர்களை மாதிரி நடந்துகொள்ளக் கூடாது! பொறுப்பில் இருக்கும் சகோதரர்கள் துன்புறுத்தப்படும்போது நாம் எதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்?

10. பொறுப்பில் இருக்கிற சகோதரர்கள் துன்புறுத்தப்படும்போது நாம் எதை ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும்?

10 நாம் ஏன் துன்புறுத்தப்படுகிறோம் என்பதையும், அதற்குப் பின்னால் இருப்பது யார் என்பதையும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். “கிறிஸ்து இயேசுவின் சீஷர்களாகக் கடவுள்பக்தியோடு வாழ விரும்புகிற எல்லாரும் துன்புறுத்தப்படுவார்கள்” என்று 2 தீமோத்தேயு 3:12 சொல்கிறது. அதனால், பொறுப்பில் இருக்கிற சகோதரர்களை சாத்தான் தாக்கும்போது நாம் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. அவர்களுடைய உத்தமத்தை முறிப்பதில்தான் சாத்தான் குறியாக இருக்கிறான். அதன் மூலம் நம்மையும் பயமுறுத்த வேண்டும் என்று நினைக்கிறான்.—1 பே. 5:8.

பவுல் கைதியாக இருந்தபோதும் ஒநேசிப்போரு தைரியமாக அவருக்கு உதவி செய்தார். இன்றைக்கும் சிறையில் இருக்கிற சாட்சிகளுக்கு மற்ற சகோதர சகோதரிகள் பக்கபலமாக இருக்கிறார்கள். அதுதான் இந்தப் படத்தில் நடித்துக் காட்டப்பட்டிருக்கிறது (பாராக்கள் 11-12)

11. ஒநேசிப்போருவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (2 தீமோத்தேயு 1:16-18)

11 உங்களுடைய சகோதரர்களுக்கு எப்போதுமே பக்கபலமாக இருங்கள், அவர்களை ஒருபோதும் கைவிட்டு விடாதீர்கள். (2 தீமோத்தேயு 1:16-18-ஐ வாசியுங்கள்.) பவுல் கைது செய்யப்பட்டபோது ஒநேசிப்போரு என்ற சகோதரர் மற்ற சகோதரர்களைப் போல் இல்லாமல் வித்தியாசமாக நடந்துகொண்டார். “[பவுல்] கைதியாக இருப்பதை நினைத்து அவர் வெட்கப்படவில்லை.” அதற்குப் பதிலாக, பவுல் எங்கே இருக்கிறார் என்று தேடிக் கண்டுபிடித்து, அவருக்குத் தேவையான உதவியெல்லாம் செய்தார். ஒநேசிப்போரு தன்னுடைய உயிரையே பணயம் வைத்து இப்படிச் செய்தார். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? சகோதரர்கள் துன்புறுத்தப்படும்போது நாம் மற்ற மனிதர்களைப் பார்த்துப் பயந்துபோய் நம் சகோதரர்களுக்கு உதவி செய்யாமல் இருந்துவிடக் கூடாது. அதற்குப் பதிலாக, அவர்களுக்குப் பக்கபலமாக நிற்க வேண்டும். அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்ய வேண்டும். (நீதி. 17:17) ஏனென்றால், அப்படிப்பட்ட சமயத்தில்தான் நம்முடைய அன்பும் ஆதரவும் நம்முடைய சகோதரர்களுக்குத் தேவை.

12. ரஷ்யாவில் இருக்கிற சகோதர சகோதரிகளிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

12 ரஷ்யாவில் இருக்கிற சகோதர சகோதரிகள் அங்கே சிறையில் இருக்கிற மற்ற சாட்சிகளுக்குப் பக்கபலமாக இருக்கிறார்கள். வழக்கு விசாரணை நடக்கும்போது அவர்களுக்கு ஆதரவாக இருப்பதற்காக நீதிமன்றத்துக்கே போகிறார்கள். இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? பொறுப்பில் இருக்கிற சகோதரர்களை எதிரிகள் பொய்யாகக் குற்றம்சாட்டும்போது... கைது செய்யும்போது... துன்புறுத்தும்போது... பயப்படாதீர்கள்! நம் சகோதரர்களுக்காக ஜெபம் செய்யுங்கள். அவர்களுடைய குடும்பத்தில் இருக்கிறவர்களைக் கவனித்துக்கொள்ளுங்கள். முடிந்த விதத்திலெல்லாம் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்.—அப். 12:5; 2 கொ. 1:10, 11.

ஏளனமாகப் பேசப்படும்போது

13. மற்றவர்கள் ஏளனம் பண்ணும்போது யெகோவாவின் மேலும் அவருடைய அமைப்பின் மேலும் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை எப்படிக் குறையலாம்?

13 சத்தியத்தில் இல்லாத சொந்தக்காரர்கள்... கூட வேலைப் பார்க்கிறவர்கள்... அல்லது கூடப் படிப்பவர்கள்... நாம் ஊழியம் செய்வதைப் பார்த்தோ, யெகோவாவின் சட்டதிட்டங்களின்படி நடப்பதைப் பார்த்தோ நம்மை ஏளனம் பண்ணலாம். (1 பே. 4:4) “உன்மேல எந்த தப்பும் சொல்லல. ஆனா உன் மதம் இருக்கே, ரொம்ப ஓவர். அதெல்லாம் இந்த காலத்துக்கு செட் ஆகாது” என்று நம்மிடம் சொல்லலாம். தவறு செய்தவர்களை சபைநீக்கம் செய்வதையோ அவர்களிடம் நாம் பேசாமல் இருப்பதையோ பார்த்து, “இதுதான் நீங்க அன்பு காட்டுற லட்சணமா?” என்று சிலர் கேட்கலாம். இப்படியெல்லாம் சொல்லி நம் மனதில் அவர்கள் சந்தேக விதையை விதைத்துவிடலாம். அதனால், ‘யெகோவாதான் என்கிட்ட ரொம்ப ஓவரா எதிர்பார்க்குறாரோ? அவரோட அமைப்பு ரொம்ப ஓவர் கண்டிப்பா இருக்காங்களோ?’ என்றெல்லாம் நாம் யோசிக்க ஆரம்பித்துவிடலாம். நீங்கள் அப்படித்தான் யோசிக்கிறீர்களா? அப்படியென்றால், யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் விட்டுப்போகாமல் உறுதியாக இருக்க எது உங்களுக்கு உதவி செய்யும்?

போலி நண்பர்கள் சொன்ன பொய்களை யோபு நம்பவில்லை. அவர்களுடைய ஏளனப் பேச்சைக் கேட்டு சோர்ந்துபோகாமல், யெகோவாவுக்கு உண்மையோடு இருக்க அவர் தீர்மானமாக இருந்தார் (பாரா 14)

14. யெகோவாவின் சட்டதிட்டங்களின்படி நடப்பதால் மற்றவர்கள் நம்மை ஏளனம் பண்ணும்போது நாம் என்ன செய்ய வேண்டும்? (சங்கீதம் 119:50-52)

14 யெகோவாவின் சட்டதிட்டங்களின்படி நடக்கத் தீர்மானமாக இருங்கள். மற்றவர்கள் ஏளனம் செய்தபோதுகூட யோபு யெகோவாவின் சட்டதிட்டங்களின்படிதான் நடந்தார். யோபுவின் போலி நண்பர் ஒருவர் அவரிடம், ‘நீ நல்லவனா இருக்குறதால கடவுளுக்கு என்ன பிரயோஜனம், அவரெல்லாம் அத கண்டுக்குறது இல்ல’ என்பதுபோல் சொன்னார். (யோபு 4:17, 18; 22:3) அந்தப் பொய்யை யோபு நம்பவில்லை. யெகோவாவின் சட்டதிட்டங்கள் சரியானது என்று அவருக்குத் தெரியும். அதன்படி நடக்க வேண்டுமென்பதில் அவர் தீர்மானமாக இருந்தார். மற்றவர்கள் என்ன சொன்னாலும் சரி, தன்னுடைய உத்தமத்தை அவர் விட்டுக்கொடுக்கவே இல்லை. (யோபு 27:5, 6) இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? மற்றவர்கள் உங்களை ஏளனம் செய்யும்போது யெகோவாவின் சட்டதிட்டங்கள் சரிதானா என்று சந்தேகப்படாதீர்கள். உங்களுடைய சொந்த அனுபவத்தையே கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். யெகோவாவின் சட்டதிட்டங்கள் சரியானது, அதன்படி நடப்பதுதான் நல்லது என்று உங்கள் வாழ்க்கையில் நீங்கள் நிறைய தடவை பார்த்திருப்பீர்கள், இல்லையா? யெகோவாவின் சட்டதிட்டங்களின்படி நடக்க அவருடைய அமைப்பு நமக்கு உதவி செய்கிறது. அதனால், அந்த அமைப்பைவிட்டு ஒருபோதும் போகக் கூடாது என்பதில் தீர்மானமாக இருங்கள். அப்போதுதான், மற்றவர்கள் எவ்வளவு ஏளனம் செய்தாலும் யெகோவாவைவிட்டு நீங்கள் போக மாட்டீர்கள்.—சங்கீதம் 119:50-52-ஐ வாசியுங்கள்.

15. பிரியாவுக்கு என்னென்ன பிரச்சினைகள் வந்தன, அதைப் பற்றி அவருடைய சொந்தக்காரர்கள் என்ன சொன்னார்கள்?

15 இந்தியாவில் இருக்கிற சகோதரி பிரியாவின் அனுபவத்தைக் கவனியுங்கள். யெகோவாவை வணங்கியதால் அவருடைய சொந்தக்காரர்கள் அவரை ஏளனம் பண்ணினார்கள். சகோதரி பிரியா 1997-ல் ஞானஸ்நானம் எடுத்தார். கொஞ்ச நாட்களிலேயே, சத்தியத்தில் இல்லாத அவருடைய கணவருக்கு வேலை போய்விட்டது. அதனால் அவருடைய கணவர், குடும்பமாகத் தன் அப்பா-அம்மாவின் வீட்டுக்குப் போய்விடலாம் என்று முடிவு பண்ணினார். அவருடைய அப்பா-அம்மா வேறொரு நகரத்தில் இருந்தார்கள். அங்கே பிரியாவுக்கு இன்னும் நிறைய பிரச்சினைகள் வந்தன. அவருடைய கணவருக்கு வேலை இல்லாததால் குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள இவர் முழுநேரம் வேலை செய்ய வேண்டியிருந்தது. அதுமட்டுமல்ல, கூட்டத்துக்காக அவர் கிட்டத்தட்ட 350 கிலோமீட்டர் தூரம் போக வேண்டியிருந்தது. அவருடைய கணவரின் குடும்பத்தில் இருந்தவர்கள் பிரியாவை எதிர்த்தார்கள். எதிர்ப்பு ரொம்ப ஜாஸ்தியாக இருந்ததால் அவர்கள் குடும்பமாக வேறொரு இடத்துக்குக் குடிமாற வேண்டியிருந்தது. அதற்குப் பிறகு, திடீரென்று பிரியாவின் கணவர் இறந்துவிட்டார். இது போதாதென்று அவருடைய ஒரு மகளும் 12 வயதிலேயே கேன்சரால் இறந்துவிட்டாள். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது மாதிரி, இதெல்லாம் நடந்ததற்கு பிரியாதான் காரணம் என்று அவருடைய சொந்தக்காரர்கள் சொன்னார்கள். பிரியா மட்டும் யெகோவாவின் சாட்சி ஆகவில்லை என்றால், இது எதுவுமே நடந்திருக்காது என்று சொன்னார்கள். இருந்தாலும், பிரியா யெகோவாமேல் வைத்திருந்த நம்பிக்கையை விடவே இல்லை. அவருடைய அமைப்பைவிட்டு விலகிப் போகவுமில்லை.

16. யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் விட்டுப் போகாததால் பிரியாவுக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தன?

16 சபை இருந்த இடம், பிரியா இருந்த இடத்திலிருந்து ரொம்ப தூரத்தில் இருந்தது. அதனால், அவருடைய ஏரியாவிலேயே ஊழியம் செய்யும்படி வட்டாரக் கண்காணி அவரிடம் சொன்னார். கூட்டங்களையும் அவருடைய வீட்டிலேயே நடத்தச் சொன்னார். இதைக் கேட்டபோது, ‘ஐயய்யோ இதயெல்லாம் என்னால செய்ய முடியுமான்னு தெரியலயே’ என்று அவர் யோசித்தார். ஆனாலும், வட்டாரக் கண்காணி சொன்னபடி தன்னுடைய ஏரியாவிலேயே ஊழியம் செய்தார், தன்னுடைய வீட்டிலேயே கூட்டங்களை நடத்தினார். மகள்களோடு சேர்ந்து குடும்ப வழிபாடும் தவறாமல் செய்தார். இதனால் என்ன பலன் கிடைத்தது? பிரியா நிறைய பைபிள் படிப்புகளை ஆரம்பித்தார். அவர்களில் நிறைய பேர் ஞானஸ்நானமும் எடுத்தார்கள். 2005-ல், பிரியா ஒழுங்கான பயனியராகச் சேவை செய்ய ஆரம்பித்தார். அவர் யெகோவாமேல் நம்பிக்கை வைத்ததற்கும் அவருடைய அமைப்புக்கு உண்மையாக இருந்ததற்கும் கைமேல் பலன் கிடைத்தது. அவருடைய மகள்கள் இப்போது யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்துகொண்டு வருகிறார்கள். அதுமட்டுமல்ல, அவருடைய ஏரியாவில் இப்போது இரண்டு சபைகள் இருக்கின்றன. பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும் சொந்தக்காரர்களின் ஏளனப் பேச்சைத் தாங்கிக்கொள்வதற்கும் யெகோவாதான் பலம் கொடுத்தார் என்பதை பிரியா உறுதியாக நம்புகிறார்.

யெகோவாவுக்கும் அவருடைய அமைப்புக்கும் உண்மையாக இருங்கள்

17. என்ன செய்ய நாம் தீர்மானமாக இருக்க வேண்டும்?

17 யெகோவாவிடமிருந்து நம்மைப் பிரிப்பதற்காக சாத்தான் என்னென்ன வழிகளைப் பயன்படுத்துகிறான் என்று இவ்வளவு நேரம் பார்த்தோம். முதலாவதாக, பிரச்சினைகள் வரும்போது யெகோவா நம்மைக் கைவிட்டுவிடுவார் என்றும், யெகோவாவின் அமைப்பில் இருப்பதால் நமக்கு ஏகப்பட்ட பிரச்சினைகள் வரும் என்றும் அவன் நம்மை நினைக்க வைக்கிறான். இரண்டாவதாக, பொறுப்பில் இருக்கிற சகோதரர்களை எதிரிகள் குற்றம் சுமத்துவதையும்... துன்புறுத்துவதையும்... சிறையில் போடுவதையும்... பார்த்து நாம் பயந்து போக வேண்டும் என்று சாத்தான் நினைக்கிறான். மூன்றாவதாக, மற்றவர்களுடைய ஏளனப் பேச்சைக் கேட்டு யெகோவாவின் சட்டதிட்டங்களின் மேலும் அவருடைய அமைப்பின் மேலும் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையை நாம் விட வேண்டுமென்று அவன் நினைக்கிறான். ஆனால், சாத்தானுடைய தந்திரங்கள் நமக்கு நன்றாகத் தெரியும், அதனால், நாம் ஏமாந்துபோவதில்லை. (2 கொ. 2:11) சாத்தானுடைய பொய்களை நம்பக் கூடாது என்பதில் உறுதியாய் இருங்கள். யெகோவாவையும் அவருடைய அமைப்பையும் விட்டுப் போகக் கூடாது என்பதில் தீர்மானமாக இருங்கள். யெகோவா உங்களைக் கைவிடவே மாட்டார். (சங். 28:7) அதனால், அவரிடமிருந்து உங்களைப் பிரிப்பதற்கு எதையுமே விடாதீர்கள்!—ரோ. 8:35-39.

18. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

18 சபைக்கு வெளியே இருந்து வரும் பிரச்சினைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் நாம் பார்த்தோம். ஆனால், சபைக்கு உள்ளே இருந்து வருகிற பிரச்சினைகள்கூட யெகோவாவின் மேலும் அவருடைய அமைப்பின் மேலும் நாம் வைத்திருக்கிற நம்பிக்கையைக் குலைத்துவிடலாம். அப்படிப்பட்ட பிரச்சினைகளை நாம் எப்படிச் சமாளிக்கலாம்? அதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாட்டு 118 எங்கள் விசுவாசத்தை அதிகமாக்குங்கள்

a இந்தக் கடைசி நாட்களில் நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டுமென்றால் அவரையும் அவருடைய அமைப்பையும் எப்போதும் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை உடைப்பதற்காக சாத்தான் நிறைய பிரச்சினைகளைக் கொண்டுவருகிறான். அதில் மூன்று பிரச்சினைகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம். அவனுடைய வலையில் விழாமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்பதையும் பார்ப்போம்.

b இந்தக் கட்டுரையில் வரும் சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.