Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

“யெகோவாவுக்காக உழைக்க வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது”

“யெகோவாவுக்காக உழைக்க வேண்டும் என்பதுதான் என் கனவாக இருந்தது”

சூரினாம் மழைக்காட்டில் இருந்த கிரான்போரி கிராமத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சின்ன தொகுதியை நாங்கள் பார்க்கப் போயிருந்தோம். பிறகு அங்கிருந்து டப்பானாஹோனி ஆற்றுக்குப் போய், ஒரு நீளமான படகில் ஏறிப் போனோம். அந்த ஆற்றில் ஒரு இடத்தில் தண்ணீர் ரொம்ப வேகமாக ஓடியது. அதைக் கடக்கும்போது படகின் மோட்டார் ஒரு பாறையில் மோதிவிட்டது. உடனே அந்த படகின் முன்பக்கம் தண்ணீருக்குள் முங்கியது. நாங்களும் தண்ணீருக்குள்ளே போய்விட்டோம். எனக்கு ஒரே படபடப்பாக ஆகிவிட்டது. வட்டார ஊழியம் செய்தபோது, எத்தனையோ வருஷங்கள் படகில் போய் வந்திருக்கிறேன். ஆனாலும், நான் நீச்சல் கற்றுக்கொள்ளவில்லை!

அடுத்து என்ன ஆனது என்று சொல்வதற்கு முன்னால் முழுநேர சேவையை நான் எப்படி ஆரம்பித்தேன் என்று சொல்கிறேன்.

1942-ல் கரீபியனில் இருக்கிற கூராசோ என்ற ஒரு அழகான தீவில்தான் நான் பிறந்தேன். என் அப்பாவுடைய சொந்த ஊர் சூரினாம். வேலைக்காக அவர் இந்தத் தீவுக்கு குடிமாறி வந்திருந்தார். நான் பிறப்பதற்கு இரண்டு வருஷங்களுக்கு முன்புதான் அப்பா ஞானஸ்நானம் எடுத்திருந்தார். அந்தத் தீவிலேயே முதல் யெகோவாவின் சாட்சி என் அப்பாதான். a எங்கள் வீட்டில் நாங்கள் ஐந்து பிள்ளைகள். எங்கள் எல்லாருக்கும் வாரா வாரம் அப்பா பைபிள் சொல்லித் தருவார். சிலசமயம் நாங்கள் வேண்டாவெறுப்பாகப் படிப்போம். எங்களை உட்கார வைத்து சொல்லிக் கொடுப்பதற்குள் அவருக்குப் போதும் போதும் என்று ஆகிவிடும். எனக்கு 14 வயது ஆனபோது நாங்கள் குடும்பமாக சூரினாமுக்குக் குடிமாறிப் போனோம். ஏனென்றால், எங்களுடைய அப்பா எங்கள் பாட்டியைக் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது.

நல்ல நண்பர்கள் கொடுத்த உற்சாகம்

சூரினாமுக்குப் போன பிறகு அங்கே யெகோவாவுக்கு ஆர்வமாக சேவை செய்துகொண்டிருந்த இளைஞர்களோடு நான் பழக ஆரம்பித்தேன். என்னைவிட அவர்கள் இரண்டு மூன்று வயதுதான் பெரியவர்கள். ஆனால், அவர்கள் ஒழுங்கான பயனியர் சேவை செய்துகொண்டிருந்தார்கள். ஊழியத்தில் கிடைத்த அனுபவத்தைப் பற்றி அவர்கள் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருப்பார்கள். அப்போது அவர்களுடைய முகமே ரொம்ப பிரகாசமாக இருக்கும். கூட்டம் முடிந்த பிறகு நானும் என்னுடைய ஃப்ரெண்ட்சும் பைபிளைப் பற்றிப் பேசுவோம். சிலசமயம் வெளியே உட்கார்ந்து வானத்தைப் பார்த்துப் பேசிக்கொண்டிருப்போம். இந்த நண்பர்கள்தான் என் கனவு நனவாவதற்கு உதவியாக இருந்தார்கள். யெகோவாவுக்கு உழைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கனவாக இருந்தது. அதனால், 16 வயதில் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். 18 வயதில் ஒழுங்கான பயனியராக ஆனேன்.

முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொண்டேன்

பராமரிபோவில் பயனியர் ஊழியம் செய்துகொண்டிருந்தபோது

நான் பயனியராக இருந்தபோது நிறைய பாடங்களைக் கற்றுக்கொண்டேன். இத்தனை வருஷங்கள் முழுநேர சேவையில் அந்தப் பாடங்கள் எனக்கு ரொம்ப உதவியாக இருந்திருக்கின்றன. மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுப்பது எவ்வளவு முக்கியம் என்பதுதான் நான் கற்றுக்கொண்ட முதல் பாடம். நான் பயனியர் சேவை செய்ய ஆரம்பித்தபோது வில்லியம் பான் சால் என்ற மிஷனரி என்மேல் அக்கறை எடுத்து எனக்குப் பயிற்சி கொடுத்தார். b சபை பொறுப்புகளை எப்படி நன்றாக செய்யலாம் என்று எனக்கு அவர் நிறைய சொல்லிக்கொடுத்தார். அந்தச் சமயத்தில் அந்தப் பயிற்சி எனக்கு ரொம்ப தேவையாக இருந்தது. ஆனால், அது எனக்குப் பின்புதான் புரிந்தது. அதற்கு அடுத்த வருஷமே விசேஷப் பயனியராக எனக்கு நியமிப்பு கிடைத்தது. சூரினாம் மழைக் காட்டுக்குள்ளே ஒதுக்குப்புறமாக இருந்த சின்னச் சின்ன தொகுதிகளுக்கு நான் உதவி செய்ய ஆரம்பித்தேன். தேவைப்பட்ட சமயத்தில் எனக்குப் பயிற்சி கொடுத்த சகோதரர்களுக்காக நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன். அந்தச் சமயத்திலிருந்து நானும் அவர்களைப் போல நேரம் ஒதுக்கி மற்றவர்களுக்குப் பயிற்சி கொடுக்க முயற்சி செய்துகொண்டு வருகிறேன்.

நான் கற்றுக்கொண்ட இரண்டாவது பாடம், எளிமையாக வாழ வேண்டும்... எல்லாவற்றையும் திட்டம் போட்டு செய்ய வேண்டும்... என்பதுதான். ஒவ்வொரு மாதம் ஆரம்பிக்கும்போதும், அந்த மாதத்துக்கு என்னவெல்லாம் தேவை என்று நானும் என்னோடு விசேஷப் பயனியராக இருந்தவரும் சேர்ந்து ஒரு லிஸ்ட் போடுவோம். அதற்குப் பிறகு, நானோ அல்லது அவரோ ரொம்ப தூரத்தில் இருக்கிற டவுனுக்குப் போய் தேவையான எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வருவோம். மாதச் செலவுக்காக எங்களுக்குக் கிடைத்த பணத்தை நாங்கள் சிக்கனமாக செலவுபண்ண வேண்டியிருந்தது. வாங்கிய மளிகை சாமானெல்லாம் மாதம் முழுக்க வருகிற மாதிரி பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஏனென்றால், ஏதாவது தீர்ந்துவிட்டால் அந்த நடுக்காட்டில் நாங்கள் என்ன பண்ணுவோம், யாரைப் போய்க் கேட்போம்! சின்ன வயதிலேயே எளிமையாக வாழ்வதற்கும் திட்டம்போட்டு வாழ்வதற்கும் கற்றுக்கொண்டதால் இதுவரைக்கும் யெகோவாவின் வேலையை முழு கவனத்தோடு என்னால் செய்ய முடிந்திருக்கிறது.

மக்களுக்கு அவர்களுடைய சொந்த மொழியிலேயே கற்றுக்கொடுத்தால்தான் பிரயோஜனமாக இருக்கும். இதுதான் நான் கற்றுக்கொண்ட மூன்றாவது பாடம். எனக்கு ஆங்கிலம், டச், பாபியமென்டோ மாதிரி மொழியெல்லாம் தெரியும். சூரினாம் மக்கள் பொதுவாகப் பேசிய ஸ்ரானன்டாங்கோ மொழியும் எனக்குத் தெரியும். ஆனால், காட்டுக்குள் இருந்த ஜனங்களெல்லாம் அவர்களுடைய மொழியிலேயே பேசியபோதுதான் நன்றாகக் கேட்டார்கள். அந்த மொழிகளைப் பேச கற்றுக்கொள்வது எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்தது. உதாரணத்துக்கு, சாரமக்கன் மொழியில் சரியான ஏற்ற இறக்கங்களோடு பேசவில்லை என்றால் வார்த்தைகளுடைய அர்த்தமே மாறிவிடும். ஆனாலும், நான் எடுத்த முயற்சி வீணாகவில்லை. அந்த மொழிகளைக் கற்றுக்கொண்டதால் இன்னும் எத்தனையோ பேருக்கு அவர்களுடைய மொழியிலேயே சத்தியத்தை என்னால் கற்றுக்கொடுக்க முடிந்திருக்கிறது.

இந்த மாதிரி புது மொழியைப் பேசியதால் நிறைய காமெடியெல்லாம் நடந்திருக்கிறது. உதாரணத்துக்கு, சாரமக்கன் மொழி பேசும் ஒரு பெண்ணுக்கு நான் பைபிள் படிப்பு எடுத்துக்கொண்டிருந்தேன். அவர் ஒருசமயம் வயிற்று வலியால் கஷ்டப்பட்டார். அவரிடம், “எப்படி இருக்கீங்க?” என்று கேட்பதாக நினைத்துக்கொண்டு, “கர்ப்பமா இருக்கீங்களா?” என்று கேட்டுவிட்டேன். அவருக்கு ஒரே தர்மசங்கடமாக ஆகிவிட்டது. இந்த மாதிரி அவ்வப்போது ஏடாகூடமாக நடந்தாலும் ஜனங்களுடைய சொந்த மொழியிலேயே பேசுவதற்குத்தான் எப்போதுமே முயற்சி பண்ணியிருக்கிறேன்.

கூடுதல் பொறுப்புகள்

1970-ல் நான் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். அந்த வருஷம் “யெகோவாவின் சாட்சிகளுடைய உலகத் தலைமை அலுவலகத்தைச் சுற்றிப் பார்க்கலாம்” என்ற ஸ்லைடை மழைக்காட்டில் இருந்த நிறைய தொகுதிகளுக்கு நான் காட்டினேன். ஒதுக்குப்புறமாக இருந்த அந்தத் தொகுதிகளைப் போய்ப் பார்ப்பதற்காக நானும் சில சகோதரர்களும் ஒரு நீளமான படகில் ஏறி ஆறுகள் வழியாகப் போவோம். ஜெனரேட்டர், பெட்ரோல் கேன், மண்ணெண்ணை விளக்கு, ஸ்லைடு ஷோ போட்டுக் காட்டுவதற்கான கருவிகள் எல்லாவற்றையும் படகில் கொண்டு போவோம். நாங்கள் போய்ச் சேர வேண்டிய இடத்துக்கு வந்த உடனே அவை எல்லாவற்றையும் படகிலிருந்து இறக்கி, ஸ்லைடு ஷோ காட்ட வேண்டிய இடத்துக்குக் கொண்டு போவோம். ஒதுக்குப்புறமான இடங்களில் இருந்த அந்த ஜனங்கள் எல்லாம் அந்த ஸ்லைடு ஷோவை அவ்வளவு விரும்பிப் பார்ப்பார்கள். அது இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கிறது. யெகோவாவைப் பற்றியும் அவருடைய அமைப்பைப் பற்றியும் மற்றவர்களுக்கு சொல்லிக்கொடுப்பது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அதற்காக நான் கஷ்டப்பட்டு உழைக்க வேண்டியிருந்தது. ஆனால், எனக்குக் கிடைத்த ஆசீர்வாதங்களுக்குப் பக்கத்தில் அதெல்லாம் ஒன்றுமே இல்லை.

மூன்று இழைகள் சேர்ந்த கயிறாய் ஆனோம்

செப்டம்பர் 1971-ல் ஈத்தலுக்கும் எனக்கும் கல்யாணம் ஆனது

கல்யாணம் பண்ணாமல் இருந்தபோது என்னால் யெகோவாவுக்கு நிறைய சேவை செய்ய முடிந்தது. ஆனாலும், எனக்கு ஒரு துணை இருந்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அதனால், ஒரு நல்ல பெண்ணைக் காட்டச் சொல்லி யெகோவாவிடம் நான் ஜெபம் பண்ண ஆரம்பித்தேன். அந்தப் பெண் மழைக்காட்டில் சிரமம் பார்க்காமல் சந்தோஷமாக முழுநேர சேவை செய்பவளாக இருக்க வேண்டுமென்று நான் கேட்டேன். கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்குப் பிறகு, ஈத்தல் என்ற பெண்ணை நான் காதலிக்க ஆரம்பித்தேன். அவள் விசேஷப் பயனியராக இருந்தாள். கஷ்டம் பார்க்காமல் யெகோவாவுக்கு மனதார சேவை செய்துகொண்டிருந்தாள். சின்ன வயதிலிருந்தே அப்போஸ்தலன் பவுலை அவளுக்கு ரொம்ப பிடிக்கும். அவரை மாதிரியே யெகோவாவுக்கு முழுமூச்சோடு சேவை செய்ய வேண்டுமென்று அவள் ஆசைப்பட்டாள். 1971 செப்டம்பர் மாதம் எங்களுக்கு கல்யாணம் ஆனது. அதற்குப் பிறகு நானும் அவளும் வட்டார சேவையை செய்ய ஆரம்பித்தோம்.

ஈத்தலின் குடும்பம் அவ்வளவு வசதியானவர்கள் கிடையாது. அதனால், வட்டார சேவையை இந்த மழைக்காட்டில் செய்தது ஈத்தலுக்கு சிரமமாகவே தெரியவில்லை. காட்டுக்கு ரொம்ப உள்ளே இருந்த சபைகளைச் சந்திக்கப் போனபோது, அது.. இது.. என்று நிறைய எடுத்துக்கொண்டு போகாமல் ரொம்ப கம்மியாகத்தான் எடுத்துக்கொண்டு போனோம். ஆற்றிலேயே துணி துவைத்தோம், ஆற்றிலேயே குளித்தோம். அங்கே இருந்தவர்கள் எங்களுக்கு எதைக் கொடுத்தாலும் அதைச் சாப்பிட்டோம். உடும்பு, பிரானா மீன், இல்லையென்றால் வேறு எதை அவர்கள் காட்டிலிருந்து வேட்டையாடிக் கொண்டுவந்தாலும் சரி, ஆற்றிலிருந்து பிடித்துக் கொண்டுவந்தாலும் சரி, அதை நாங்கள் சாப்பிட்டோம். சாப்பிடுவதற்கு தட்டு இல்லையென்றால் வாழை இலையில் சாப்பிட்டோம். ஸ்பூனும் கரண்டியும் இல்லாத நேரத்திலெல்லாம் கையில்தான் சாப்பிட்டோம். இந்த மாதிரி சின்னச் சின்ன சிரமங்கள் இருந்தாலும், ஈத்தலும் நானும் ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்ததால் மூன்று இழைகள் சேர்ந்த கயிறு மாதிரி ஆனோம். (பிர. 4:12) எவ்வளவு கோடி கொடுத்தாலும் இந்த மாதிரி ஒரு சேவையை நாங்க விட்டுக்கொடுக்கவே மாட்டோம்.

ஒதுக்குப்புறமான ஒரு சபைக்குப் போய்விட்டு நாங்கள் திரும்பி வந்துகொண்டிருந்தபோதுதான், ஆரம்பத்தில் நான் சொன்ன அந்தச் சம்பவம் நடந்தது. படகின் முன்பக்கம் திடீரென்று தண்ணீருக்குள் முங்கியது. ஆனால், முங்கிய வேகத்திலேயே திரும்ப மேலே வந்துவிட்டது. நல்லவேளை, நாங்கள் எல்லாரும் லைப் ஜாக்கெட் போட்டிருந்தோம். அதுமட்டுமல்ல, நாங்கள் படகிலிருந்து விழவில்லை. ஆனால், படகுக்குள்ளே தண்ணீர் வந்துவிட்டது. உடனே, சாப்பாடு கொண்டு போயிருந்த பாத்திரங்களை எடுத்து, அதிலிருந்த சாப்பாட்டை ஆற்றில் கொட்டிவிட்டு, அந்தப் பாத்திரங்களில் தண்ணீரை எடுத்து எடுத்து வெளியே ஊற்றினோம்.

இருந்த சாப்பாட்டையெல்லாம் ஆற்றில் கொட்டிவிட்டதால், சாப்பிட எங்களிடம் எதுவும் இல்லை. அதனால், மீன் பிடிக்க ஆரம்பித்தோம். ஆனால், எங்களுக்கு ஒரு மீன்கூட சிக்கவில்லை. அதனால், அன்றைக்கு தேவையான சாப்பாட்டைக் கொடுக்கச் சொல்லி யெகோவாவிடம் ஜெபம் பண்ணினோம். ஜெபம் பண்ணி முடித்தவுடனே எங்களோடு இருந்த ஒரு சகோதரர் வலையை வீசினார். ஒரு பெரிய மீன் சிக்கியது. அன்றைக்கு ராத்திரி நாங்கள் 5 பேரும் வயிறு நிறைய சாப்பிட்டோம்.

கணவன், அப்பா, பயணக் கண்காணி

நானும் ஈத்தலும் ஐந்து வருஷம் வட்டார சேவையில் இருந்த பிறகு, நாங்கள் எதிர்பார்க்காத ஒரு ஆசீர்வாதம் கிடைத்தது. நான் அப்பாவாக ஆகப்போகிறேன் என்ற செய்தியைக் கேட்டதும் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், எங்கள் வாழ்க்கை எப்படி மாறப்போகிறதோ என்று நான் யோசித்தேன். நாங்கள் இரண்டு பேரும் தொடர்ந்து முழுநேர ஊழியம் செய்யத்தான் ரொம்ப ஆசைப்பட்டோம். 1976-ல், என்னுடைய முதல் பையன் எத்னியேல் பிறந்தான். இரண்டு வருஷங்கள் கழித்து என்னுடைய இரண்டாவது பையன் ஜோவானி பிறந்தான்.

1983-ல், கிழக்கு சூரினாமில், கோடோ ஹோலோவுக்குப் பக்கத்தில் இருக்கும் டப்பானாஹோனி ஆற்றில் ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதைப் பார்க்கப் போயிருந்தபோது

சூரினாமில் அந்தச் சமயத்தில் தேவை இருந்ததால், எனக்குக் குழந்தைகள் பிறந்திருந்தாலும் வட்டார சேவையைத் தொடர்ந்து செய்யச் சொல்லி கிளை அலுவலகம் சொன்னது. பையன்கள் வளருகிற வரைக்கும், ஒருசில சபைகள் மட்டும் இருக்கிற வட்டாரங்களைப் பார்த்துக்கொள்ளும்படி சொன்னது. அதனால், பொதுவாக மாதத்துக்கு இரண்டு வாரம் நான் வட்டார சேவை செய்தேன். மற்ற நாட்கள் என்னுடைய சபையில் பயனியராக சேவை செய்தேன். வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த சபைகளைப் போய்ச் சந்திக்கும்போது ஈத்தலும் என்னுடைய பையன்களும் என்கூட வருவார்கள். ஆனால், காட்டுக்குள்ளே இருந்த சபைகளுக்கும் அங்கே நடந்த மாநாடுகளுக்கும் நான் தனியாகவே போய்விடுவேன்.

வட்டார சேவை செய்தபோது, ஒதுக்குப்புறத்தில் இருந்த சபைகளைச் சந்திப்பதற்காக அடிக்கடி படகில் போனேன்

எனக்கு இருந்த அத்தனை பொறுப்பையும் நான் சரியாகச் செய்வதற்கு நன்றாகத் திட்டம் போட வேண்டியிருந்தது. நான் வாரா வாரம் தவறாமல் குடும்பப் படிப்பு நடத்தினேன். நான் ஏதாவது சபையைச் சந்திக்க போய்விட்டால், ஈத்தல் பையன்களோடு சேர்ந்து குடும்பப் படிப்பு நடத்துவாள். ஆனால், முடிந்தவரைக்கும் நாங்கள் எல்லாவற்றையும் குடும்பமாகச் சேர்ந்து செய்ய முயற்சி பண்ணுவோம். அவ்வப்போது நானும் ஈத்தலும் பையன்களோடு சேர்ந்து விளையாடுவோம், இல்லையென்றால் பக்கத்தில் எங்கேயாவது போய்விட்டு வருவோம். பேச்சைத் தயாரிப்பதற்கும் மற்ற வேலைகளைச் செய்வதற்கும் பொதுவாக நான் ராத்திரி ரொம்ப நேரம் விழித்திருப்பேன். ஈத்தல் திறமைசாலியான மனைவியாக இருந்தாள். நீதிமொழிகள் 31:15 சொல்கிற மாதிரி, விடிவதற்கு முன்பாகவே எழுந்து, செய்ய வேண்டிய எல்லா வேலையையும் செய்துவிடுவாள். அதனால் பையன்கள் ஸ்கூலுக்குப் போவதற்கு முன்பாகவே நாங்கள் எல்லாரும் ஒன்றுசேர்ந்து தினவசனம் படிக்க முடிந்தது, ஒன்றுசேர்ந்து சாப்பிடவும் முடிந்தது. யெகோவா எனக்குக் கொடுத்திருக்கிற எல்லா வேலையையும் நன்றாகச் செய்வதற்கு ஈத்தல் எனக்கு எப்போதுமே உதவி செய்திருக்கிறாள். இப்படியொரு மனைவி கிடைத்ததற்கு நான் எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது.

எங்கள் பையன்கள் யெகோவாவையும் ஊழியத்தையும் நேசிக்க வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அதற்கு எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்தோம். முக்கியமாக, பையன்கள் முழுநேர ஊழியத்தைத் தங்களுடைய வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் ஆசைப்பட்டோம். அதுவும் நாங்கள் சொல்வதால் அல்ல, அவர்களாகவே ஆசைப்பட்டு அதைச் செய்ய வேண்டும் என்று நினைத்தோம். அதனால், முழுநேர ஊழியத்தில் கிடைக்கிற சந்தோஷத்தைப் பற்றித்தான் நாங்கள் எப்போதுமே அவர்களுக்குச் சொல்வோம். அதில் வந்த கஷ்டங்களையும் நாங்கள் சொல்வோம்தான். ஆனால், யெகோவா எங்களுக்கு எப்படி உதவி செய்தார் என்றும், குடும்பமாக எப்படி எங்களை ஆசீர்வதித்திருக்கிறார் என்றும்தான் முக்கியமாக அவர்களுக்குச் சொல்வோம். அதுமட்டுமல்ல, யெகோவாவுக்கு முதலிடம் கொடுத்த சகோதர சகோதரிகளோடு எப்போதும் எங்கள் பையன்கள் இருக்கிற மாதிரி நாங்கள் பார்த்துக்கொள்வோம்.

பிள்ளைகளை வளர்ப்பதற்கு எங்களுக்கு என்னவெல்லாம் தேவைப்பட்டதோ அவை எல்லாவற்றையும் யெகோவா எங்களுக்குக் கொடுத்தார். அதேசமயத்தில், என் பங்கில் செய்ய வேண்டியதையும் நான் செய்தேன். கல்யாணம் ஆவதற்கு முன்பு மழைக்காட்டில் விசேஷப் பயனியராக சேவை செய்தது பட்ஜெட் போட்டு வாழ எனக்குக் கற்றுக்கொடுத்தது. சிலசமயம் நாங்கள் என்னதான் செய்தாலும் கையில் காசு இருக்காது. அந்தச் சமயத்திலெல்லாம் யெகோவாதான் எங்களுக்குக் கைகொடுத்து உதவி செய்தார். உதாரணத்துக்கு, 1986-ல் இருந்து 1992 வரைக்கும் சூரினாமில் உள்நாட்டுக் கலவரம் நடந்தது. அந்தச் சமயத்தில் எங்களுக்குத் தேவையான அடிப்படைப் பொருள்கள்கூட அவ்வளவு சீக்கிரத்தில் கிடைக்காது. அப்போதும்கூட யெகோவா எங்களை நன்றாகக் கவனித்துக்கொண்டார்.—மத். 6:32.

என் வாழ்க்கையை நினைத்துப் பார்க்கிறேன்

இடது பக்கத்திலிருந்து வலது பக்கம்: நானும் என் மனைவி ஈத்தலும்

என்னுடைய மூத்த மகன் எத்னியேலும் அவனுடைய மனைவி நட்டாலியாவும்

என்னுடைய இரண்டாவது மகன் ஜோவானியும் அவனுடைய மனைவி கிறிஸ்டலும்

எங்கள் வாழ்க்கை முழுவதும் யெகோவா எப்போதுமே எங்கள் கூடவே இருந்திருக்கிறார், எங்களை அக்கறையாக கவனித்திருக்கிறார். எங்களுக்கு உண்மையான சந்தோஷத்தையும் திருப்தியையும் கொடுத்திருக்கிறார். எங்களுடைய பையன்கள் எங்களுக்குக் கிடைத்த பெரிய ஆசீர்வாதம். அவர்களை வளர்த்து யெகோவாவின் சேவைக்கே கொடுத்தது ஒரு பெரிய பாக்கியம்.

முழுநேர சேவையை அவர்கள் தங்களுடைய வாழ்க்கையாகவே ஆக்கிக்கொண்டதைப் பார்க்கும்போது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. எத்னியேலும் ஜோவானியும் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியில் கலந்துகொண்டு பட்டம் வாங்கியிருக்கிறார்கள். இப்போது சூரினாம் கிளை அலுவலகத்தில் அவரவர் மனைவியோடு சேர்ந்து சேவை செய்துகொண்டிருக்கிறார்கள். ஈத்தலுக்கும் எனக்கும் ரொம்ப வயதாகிவிட்டது. ஆனால், இப்போதும் விசேஷ பயனியர்களாக யெகோவாவுக்குச் சேவை செய்துகொண்டிருக்கிறோம். நாங்கள் ரொம்ப பிஸியாக இருக்கிறோம். அதனால், நீச்சல் கற்றுக்கொள்வதற்குக்கூட இன்னும் எனக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால், இவ்வளவு நாள் நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்கும்போது எனக்குக் கொஞ்சம்கூட வருத்தம் இல்லை. ஒன்று மட்டும் உறுதியாகச் சொல்வேன். சின்ன வயதிலேயே முழுநேர சேவைக்காக என்னுடைய வாழ்க்கையைக் கொடுத்ததுதான் நான் எடுத்த சிறந்த முடிவு. யெகோவாவுக்குச் சேவை செய்வதைவிட நல்ல வாழ்க்கை வேறு எதுவுமே இல்லை!

b வில்லியம் பான் சாலைப் பற்றி விழித்தெழு! அக்டோபர் 8, 1999-ல் வெளிவந்த “என் எதிர்பார்ப்புகளை மிஞ்சியது எதார்த்தம்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.