Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 44

பாட்டு 33 யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு

அநியாயத்தைச் சந்திக்கும்போது எப்படி நடந்துகொள்ளலாம்?

அநியாயத்தைச் சந்திக்கும்போது எப்படி நடந்துகொள்ளலாம்?

“தீமை உங்களை வெல்ல விடாமல், தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்.”ரோ. 12:21.

என்ன கற்றுக்கொள்வோம்?

அநியாயம் நடக்கும்போது பிரச்சினையைப் பெரிதாக்கி விடாமல், எப்படி அதைச் சமாளிக்கலாம் என்று கற்றுக்கொள்வோம்.

1-2. நாம் எப்படி அநியாயத்தால் பாதிக்கப்படலாம்?

 இயேசு ஒரு விதவையைப் பற்றிய கதை சொன்னார். அந்த விதவை தனக்கு நியாயம் கிடைப்பதற்காக நீதிபதியிடம் கேட்டுக்கொண்டே இருந்தாள். அவள் எப்படி உணர்ந்திருப்பாள் என்பது கதையைக் கேட்டுக்கொண்டிருந்த அவருடைய சீஷர்களுக்கு நன்றாகப் புரிந்திருக்கும். ஏனென்றால், அந்தக் காலத்தில் பாமர மக்கள் ரொம்ப அநியாயமாக நடத்தப்பட்டார்கள். (லூக். 18:1-5) அந்தப் பெண்ணுடைய உணர்ச்சிகளை நம்மாலும் புரிந்துகொள்ள முடியும். ஏனென்றால், நாமும் ஏதோ ஒரு சமயத்தில் அநியாயத்தைச் சந்தித்திருப்போம்.

2 இன்று உலகத்தில் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு, அடக்கி ஒடுக்குதல் என இவையெல்லாம் சர்வசாதாரணம் ஆகிவிட்டது. அதனால், இந்த உலகத்தில் நம்மை யாராவது அநியாயமாக நடத்தினால் நாம் ஆச்சரியப்பட மாட்டோம். (பிர. 5:8) ஆனால், சபையில் இருக்கும் சகோதர சகோதரிகள் நம்மை அநியாயமாக நடத்துவார்கள் என்று எதிர்பார்க்க மாட்டோம். இருந்தாலும், அப்படி நடந்துவிடலாம். நம்முடைய சகோதர சகோதரிகள் எதிரிகள் என்பதால் அல்ல, அவர்கள் பாவ இயல்புள்ளவர்கள் என்பதால்தான் ஏதாவது தவறு நடந்துவிடுகிறது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை இயேசுவிடமிருந்து கற்றுக்கொள்ள முடியும். பொல்லாத எதிரிகள் தங்களை அநியாயமாக நடத்தியபோது அவர்கள் பொறுமையாக நடந்துகொண்டார்கள். நம்மாலும் அப்படி நடந்துகொள்ள முடியும். எதிரிகளிடமே பொறுமையாக இருக்கிறோம் என்றால், சகோதர சகோதரிகளிடம் எவ்வளவு பொறுமையாக நடந்துகொள்ள வேண்டும்! சபைக்கு உள்ளேயோ வெளியிலோ நம்மை யாராவது அநியாயமாக நடத்தினால் யெகோவா எப்படி உணருகிறார்? நமக்கு நடக்கிற அநியாயத்தைப் பார்த்து அவர் கவலைப்படுகிறாரா?

3. நாம் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார், ஏன்?

3 மற்றவர்கள் நம்மை எப்படி நடத்துகிறார்கள் என்று யெகோவா கவனிக்கிறார். ஏனென்றால், நம்மேல் அவர் அக்கறை வைத்திருக்கிறார். அவர் “நியாயத்தை நேசிக்கிறார்.” (சங். 37:28) சரியான சமயத்தில் அவர் “நியாயம் வழங்குவார்” என்று இயேசுவும் உறுதியாகச் சொன்னார். (லூக். 18:7, 8) அதுமட்டுமல்ல, சீக்கிரத்தில் அநியாயத்தால் நாம் பட்ட கஷ்டங்களையெல்லாம் அவர் எடுத்துப்போடுவார். இனிமேலும் அநியாயம் தலைதூக்காது.—சங். 72:1, 2.

4. யெகோவா இன்று நமக்கு எப்படி உதவுகிறார்?

4 அநியாயத்தை யெகோவா ஒழித்துக்கட்டுவதற்காக நாம் காத்திருக்கிற சமயத்தில் அதைச் சமாளிப்பதற்கு அவர் நமக்கு உதவுகிறார். (2 பே. 3:13) உதாரணத்துக்கு, நமக்கு அநியாயம் நடக்கும்போது பிரச்சினையைப் பெரிதாக்காமல் இருக்க நாம் என்ன செய்யலாம் என்று சொல்லிக்கொடுக்கிறார். அதற்குத் தன்னுடைய மகனின் உதாரணத்தை பைபிளில் பதிவு செய்து வைத்திருக்கிறார். அதோடு, நடைமுறையான ஆலோசனைகளையும் நமக்குக் கொடுத்திருக்கிறார்.

எப்படி நடந்துகொள்கிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள்

5. அநியாயம் நடக்கும்போது நாம் ஏன் கவனமாக இருக்க வேண்டும்?

5 அநியாயம் நடக்கும்போது, மனமுடைந்து போய்விடுவோம், கவலையில் மூழ்கிவிடுவோம். (பிர. 7:7) யோபு, ஆபகூக் மாதிரியான உண்மையுள்ள ஆட்களும் அப்படி உணர்ந்திருக்கிறார்கள். (யோபு 6:2, 3; ஆப. 1:1-3) இந்த உணர்ச்சிகள் இயல்பானதுதான். ஆனால் அதேசமயம், நாம் முட்டாள்தனமாக எதையாவது செய்துவிடாமல் இருப்பதற்கும் கவனமாக இருக்க வேண்டும்.

6. அப்சலோமின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (படத்தையும் பாருங்கள்.)

6 ஏதாவது அநியாயம் நடந்தால், விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டு எதையாவது செய்ய வேண்டும் என்று நமக்குத் தோன்றும். ஆனால், அப்படிச் செய்தால், பிரச்சினை இன்னும் பெரிதாகலாம். தாவீது ராஜாவின் மகன் அப்சலோமை எடுத்துக்கொள்ளுங்கள். தன்னுடைய தங்கை தாமாரை அண்ணனான அம்னோன் கற்பழித்ததைக் கேள்விப்பட்டபோது, அவனுக்குப் பயங்கர கோபம் வந்தது. திருச்சட்டத்தின்படி, அம்னோன் செய்த செயலுக்கு மரண தண்டனைதான். (லேவி. 20:17) இந்தச் சம்பவத்தில், அப்சலோமின் கோபத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இருந்தாலும், விஷயங்களைத் தன் கையில் எடுத்துக்கொண்டு, அம்னோனைத் தீர்த்துக்கட்டுவதற்கு அவனுக்கு எந்த அதிகாரமும் இல்லை.—2 சா. 13:20-23, 28, 29.

தன்னுடைய தங்கை தாமார் கற்பழிக்கப்பட்டபோது, அப்சலோம் கோபத்தைக் கட்டுப்படுத்தவில்லை (பாரா 6)


7. அநியாயத்தைப் பார்த்தபோது சங்கீதக்காரர் ஆரம்பத்தில் எப்படி நடந்துகொண்டார்?

7 அநியாயம் செய்கிறவர்களுக்குத் தண்டனையே கிடைக்காத மாதிரி நமக்குத் தோன்றும்போது, ‘நான் மட்டும் சரியாக நடந்து என்ன பிரயோஜனம்?’ என்று யோசிக்கலாம். சங்கீதக்காரருக்கும் அப்படித்தான் இருந்தது. கெட்டவர்கள் ஓகோவென்று வாழ்வதுபோல் அவருக்குத் தெரிந்தது. “அப்படிப்பட்ட அக்கிரமக்காரர்களுக்கு எல்லாமே சுலபமாகக் கிடைத்துவிடுகிறது” என்று சலித்துக்கொண்டார். (சங். 73:12) சுற்றி நடக்கிற அநியாயத்தைப் பார்த்து சோர்ந்துபோனார். யெகோவாவுக்குச் சேவை செய்வதால் ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா என்ற சந்தேகம்கூட அவருக்கு வந்துவிட்டது. “நான் அதைப் புரிந்துகொள்ள முயன்றபோது, வேதனைதான் மிஞ்சியது” என்றார். (சங். 73:14, 16) அதுமட்டுமல்ல, “கிட்டத்தட்ட வழிதவறிப் போய்விட்டேன். கால் சறுக்கி விழும் நிலைக்குப் போய்விட்டேன்” என்றுகூட சொன்னார். (சங். 73:2) இதே மாதிரிதான் ஆல்பர்ட்டோ a என்ற சகோதரருக்கும் நடந்தது.

8. தனக்கு நடந்த அநியாயத்தை நினைத்து நினைத்து ஒரு சகோதரர் என்ன ஆனார்?

8 சபையின் பணத்தைத் திருடிவிட்டதாக ஆல்பர்ட்டோமீது அநியாயமான குற்றச்சாட்டு விழுந்தது. அதனால், அவர் பொறுப்புகளை இழந்துவிட்டார். சபையில் நிறைய பேருக்கு விஷயம் தெரிய வந்ததால், அவருடைய மதிப்பு மரியாதையும் போய்விட்டது. “எனக்குக் கோபம் பொத்துக்கொண்டு வந்தது, ஆத்திரம் ஆத்திரமாக வந்தது, வெறுப்பு நெஞ்சைக் கசக்கியது” என்று அவர் சொல்கிறார். அவர் இப்படியெல்லாம் உணர்ந்ததால், யெகோவாவுக்கும் அவருக்கும் இருக்கிற பந்தம் பலவீனமானது. அதனால், ஐந்து வருஷங்கள் கூட்டங்களுக்கு வருவதையே நிறுத்திவிட்டார். நாமும் நடந்த அநியாயத்தையே நினைத்து நினைத்து, கோபத்தை மனதில் வைத்துக்கொண்டிருந்தால் நமக்கும் இந்த மாதிரி நடந்துவிடலாம்!

இயேசு மாதிரியே அநியாயத்தைச் சமாளியுங்கள்

9. இயேசு என்ன அநியாயங்களைச் சகித்தார்? (படத்தையும் பாருங்கள்.)

9 அநியாயத்தைச் சமாளிப்பது எப்படி என்பதற்கு இயேசு ஒரு நல்ல முன்மாதிரி. குடும்பத்தில் இருக்கிறவர்களும் மற்றவர்களும் அவரை அநியாயமாக நடத்தினார்கள். அவருக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவருடைய சொந்தக்காரர்கள் சொன்னார்கள். அவர் பேய்களோடு சம்பந்தம் வைத்திருக்கிறார் என்று மதத் தலைவர்கள் குற்றம்சாட்டினார்கள். ரோமப் படைவீரர்கள் அவரைக் கேலி செய்தார்கள், அடித்துத் துன்புறுத்தினார்கள். கடைசியில், கொலையே செய்துவிட்டார்கள். (மாற். 3:21, 22; 14:55; 15:16-20, 35-37) இருந்தாலும், எல்லா அநியாயங்களையும் இயேசு சகித்துக்கொண்டார். பதிலுக்குப் பதில் செய்யவில்லை, பழிக்குப்பழி வாங்கவில்லை. அவருடைய உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

அநியாயம் நடக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இயேசு நல்ல முன்மாதிரி (பாராக்கள் 9-10)


10. அநியாயம் நடந்தபோது இயேசு எப்படி நடந்துகொண்டார்? (1 பேதுரு 2:21-23)

10 1 பேதுரு 2:21-23-ஐ வாசியுங்கள். b அநியாயம் நடக்கும்போது நாம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கு இயேசு நல்ல முன்மாதிரி! எப்போது அமைதியாக இருக்க வேண்டும், எப்போது பேச வேண்டும் என்பது அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. (மத். 26:62-64) தன்னைப் பற்றிச் சொல்லப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதில் சொல்லிக்கொண்டு இருக்கவில்லை. (மத். 11:19) அவர் பேசும்போதும், தன்னைத் துன்புறுத்துகிறவர்களை அவமானப்படுத்துகிற விதத்தில் பேசவில்லை. அவர்களை மிரட்டவும் இல்லை. இயேசு சுயக்கட்டுப்பாடு காட்டினார். ஏனென்றால், “நீதியான தீர்ப்பு கொடுக்கிறவரிடம் [அவர்] தன்னையே ஒப்படைத்தார்.” தனக்கு நடக்கிற அநியாயத்தையெல்லாம் யெகோவா பார்த்துக்கொண்டிருக்கிறார் என்பது இயேசுவுக்குத் தெரியும். சரியான சமயத்தில் அவர் இந்த எல்லா அநியாயங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்பார் என்றும் இயேசு நம்பினார்.

11. நம் பேச்சை எப்படிக் கட்டுப்படுத்தலாம்? (படங்களையும் பாருங்கள்.)

11 இயேசு மாதிரியே நாமும், என்ன சொல்கிறோம் என்பதில் கவனமாக இருக்க வேண்டும். ஒருவேளை, அது அவ்வளவு பெரிய அநியாயம் இல்லையென்றால் அதைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம் அல்லது பேசாமல் அமைதியாக இருந்துவிடலாம். எதையாவது பேசிவிட்டால் பிரச்சினை பெரிதாக வாய்ப்பிருக்கிறது. (பிர. 3:7; யாக். 1:19, 20) ஆனால் சிலசமயங்களில், நாம் பேச வேண்டியிருக்கலாம். ஒருவேளை, மற்றவர்கள் அநியாயமாக நடத்தப்படும்போது அவர்களுக்காக நாம் பேச வேண்டியிருக்கலாம். அல்லது, நம்முடைய நம்பிக்கைகளை ஆதரித்துப் பேச வேண்டியிருக்கலாம். (அப். 6:1, 2) அப்படிப் பேசும்போது, நிதானமாகவும் மரியாதையாகவும் பேசுவதற்கு நாம் கடுமையாக முயற்சி எடுக்க வேண்டும்.—1 பே. 3:15. c

எப்போது பேசுவது, எப்படிப் பேசுவது என்பதில் கவனமாக இருப்பதன் மூலம் இயேசு மாதிரியே நடந்துகொள்ளலாம் (பாராக்கள் 11-12)


12. “நீதியான தீர்ப்பு கொடுக்கிறவரிடம்” நாம் எப்படி நம்மையே ஒப்படைக்கலாம்?

12 “நீதியான தீர்ப்பு கொடுக்கிறவரிடம்” விஷயங்களை விட்டுவிடுவதன் மூலமும், நாம் இயேசு மாதிரியே நடந்துகொள்ளலாம். மற்றவர்கள் நம்மைத் தவறாக புரிந்துகொள்ளும்போது அல்லது தவறாக நடத்தும்போது, யெகோவாவுக்கு உண்மைகள் தெரியும் என்று நம்பலாம். அந்த நம்பிக்கை இருந்தால், அநியாயத்தைச் சகித்துக்கொள்ள முடியும். எல்லா அநியாயத்தையும் யெகோவா ஒருநாள் சரிசெய்துவிடுவார். அதனால், விஷயங்களை யெகோவா கையில் விட்டுவிட்டால் நாம் கோபப்படாமல் இருப்போம், மனதில் வன்மத்தை வளர்த்துக்கொள்ளாமல் இருப்போம். இல்லையென்றால், இந்த மாதிரி உணர்ச்சிகள் நம்மை உணர்ச்சிவசப்பட வைத்துவிடும், சந்தோஷத்தைக் கெடுத்துவிடும், யெகோவாவோடு இருக்கிற பந்தத்திலும் விரிசலை ஏற்படுத்திவிடும்.—சங். 37:8.

13. அநியாயத்தைச் சகித்துக்கொள்வது கஷ்டமாக இருந்தால் எது உங்களுக்கு ஆறுதல் தரும்?

13 இயேசு மாதிரி நம்மால் அப்படியே நடந்துகொள்ள முடியாது என்பது உண்மைதான். சிலசமயத்தில், எதையாவது சொல்லிவிட்டு அல்லது செய்துவிட்டு பிறகு நாம் வருத்தப்படலாம். (யாக். 3:2) சிலசமயம், நாம் அனுபவித்த சில அநியாயங்கள் நம் மனதிலும் உடலிலும் ஆறாத தழும்புகளை விட்டுவிட்டு போயிருக்கலாம். உங்களுக்கும் இப்படியெல்லாம் நடந்திருந்தால், நீங்கள் படுகிற கஷ்டம் என்னவென்று யெகோவாவுக்குத் தெரியும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இயேசுவும் உங்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வார். ஏனென்றால், அவரும் அநியாயமாக நடத்தப்பட்டிருக்கிறார். (எபி. 4:15, 16) அநியாயத்தைச் சமாளிப்பதற்கு இயேசுவுடைய உதாரணத்தைக் கொடுத்தது மட்டுமல்லாமல், வேறுசில ஆலோசனைகளையும் யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். இப்போது ரோமர் புத்தகத்திலிருந்து இரண்டு வசனங்களைப் பார்க்கலாம்.

“கடவுளுடைய கடும் கோபத்துக்கு விட்டுவிடுங்கள்”

14. ‘கடவுளுடைய கடும் கோபத்துக்கு விட்டுவிடுவது’ என்றால் என்ன? (ரோமர் 12:19)

14 ரோமர் 12:19-ஐ வாசியுங்கள். “கடவுளுடைய கடும் கோபத்துக்கு விட்டுவிடுங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களிடம் சொன்னார். இதற்கு என்ன அர்த்தம்? யெகோவா தன்னுடைய நேரத்தில், தன்னுடைய வழியில் நியாயம் செய்வதற்கு நாம் இடம்கொடுக்க வேண்டும் என்று அர்த்தம். அநியாயமாக நடத்தப்பட்ட பிறகு தனக்கு எப்படி இருந்தது என்று சகோதரர் ஜான் சொல்கிறார்: “பிரச்சினையை என் வழியில் சரிசெய்ய துடித்தேன். ஆனால், அந்த எண்ணத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. யெகோவாவுக்காக காத்திருக்க ரோமர் 12:19 எனக்கு உதவியது.”

15. பிரச்சினையை யெகோவா சரிசெய்வதற்காகக் காத்திருப்பது ஏன் நல்லது?

15 பிரச்சினையை யெகோவா சரிசெய்யும்வரை காத்திருப்பது நமக்குத்தான் நல்லது. ஏனென்றால், பிரச்சினையை நாமே சரிசெய்ய துடிப்பதால் வரும் டென்ஷனையும் மனச்சோர்வையும் தவிர்க்க முடியும். நமக்கு உதவி செய்ய யெகோவா முன்வருகிறார். “நானே பதிலடி கொடுப்பேன்” என்று வாக்குக் கொடுத்திருக்கிறார். ‘என் கையில் விட்டுவிடுங்கள், நான் பார்த்துக்கொள்கிறேன்!’ என்று அவரே சொல்வதுபோல் இருக்கிறது. யெகோவா கொடுத்திருக்கும் வாக்குறுதியை நம்பினால், பிரச்சினையை அவர் கையில் விட்டுவிடுவோம். அவர் அதைச் சரியான விதத்தில் சரிசெய்வார் என்று நம்புவோம். ஏற்கெனவே நாம் பார்த்த ஜான் இப்படிச் சொல்கிறார்: “நான் யெகோவாவுக்காகக் காத்திருந்தால் அந்தப் பிரச்சினையை என்னைவிட அவர் நன்றாகச் சரிசெய்வார் என்று எனக்குத் தெரியும்.”

“தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்”

16-17. ‘தீமையை எப்போதும் நன்மையால் வெல்ல’ ஜெபம் எப்படி நமக்கு உதவும்? (ரோமர் 12:21)

16 ரோமர் 12:21-ஐ வாசியுங்கள். “தீமையை எப்போதும் நன்மையால் வெல்லுங்கள்” என்று கிறிஸ்தவர்களிடம் பவுல் சொன்னார். இயேசுவும் மலைப் பிரசங்கத்தில் இப்படிச் சொன்னார்: “உங்கள் எதிரிகளிடம் தொடர்ந்து அன்பு காட்டுங்கள், உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காகத் தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்.” (மத். 5:44) சொன்ன மாதிரியே இயேசு நடந்துகொண்டார். ரோமப் படைவீரர்கள் அவரை மரக்கம்பத்தில் வைத்து ஆணியடித்தபோது அவர் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்! அவர் அனுபவித்த வலி, அவமானம், சந்தித்த அநியாயத்தையெல்லாம் நம்மால் கற்பனைகூட செய்துபார்க்க முடியாது.

17 இயேசு, அநியாயம் தன்னை ஜெயிக்க விடவில்லை. படைவீரர்களைச் சபிப்பதற்குப் பதிலாக, “தகப்பனே, இவர்களை மன்னித்துவிடுங்கள், இவர்கள் என்ன செய்கிறார்கள் என்று இவர்களுக்கே தெரியவில்லை” என்று ஜெபம் செய்தார். (லூக். 23:34) நம்மை அநியாயமாக நடத்துகிறவர்களுக்காக நாம் ஜெபம் செய்யும்போது நம் மனதில் இருக்கிற வன்மமும் கோபமும் குறையும். அவர்களை நாம் பார்க்கிற விதமும் மாறும்.

18. அநியாயத்தைச் சமாளிக்க ஜெபம் எப்படி ஆல்பர்ட்டோவுக்கும் ஜானுக்கும் உதவியது?

18 ஜெபம் செய்தது, ஏற்கெனவே பார்த்த இரண்டு சகோதரர்களுக்கும் உதவியது. ஆல்பர்ட்டோ இப்படிச் சொல்கிறார்: “என்னை அநியாயமாக நடத்திய சகோதரர்களுக்காக நான் ஜெபம் செய்தேன். நடந்ததைப் பற்றியே யோசித்து யோசித்து, கோபத்தை வளர்த்துக்கொள்ளாமல் இருக்க உதவுங்கள் என்று யெகோவாவிடம் நிறைய தடவை ஜெபம் செய்தேன்.” இப்போது ஆல்பர்ட்டோ யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்துவருகிறார். ஜான் இப்படிச் சொல்கிறார்: “என்னைக் காயப்படுத்திய சகோதரருக்காக நிறைய தடவை நான் ஜெபம் செய்தேன். அப்படிச் செய்தது அவர்மேல் கோபத்தை வைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கும் அவரை நியாயந்தீர்க்காமல் இருப்பதற்கும் உதவியது. எனக்கு மன சமாதானத்தையும் கொடுத்தது.”

19. இந்த உலகத்துக்கு முடிவு வரும்வரை நாம் என்ன செய்ய வேண்டும்? (1 பேதுரு 3:8, 9)

19 இந்த உலகத்துக்கு முடிவு வருவதற்குள், நாம் என்னென்ன அநியாயங்களைச் சந்திக்க வேண்டியிருக்குமோ தெரியவில்லை! ஆனால், என்ன நடந்தாலும் சரி, உதவிக்காக யெகோவாவிடம் ஜெபம் செய்வதை மட்டும் நிறுத்திவிடவே கூடாது. அதோடு, அநியாயம் நடக்கும்போது இயேசு மாதிரியே நடந்துகொள்ளலாம். பைபிள் நியமங்களைக் கடைப்பிடிக்கலாம். யெகோவா நம்மைக் கண்டிப்பாக ஆசீர்வதிப்பார்!1 பேதுரு 3:8, 9-ஐ வாசியுங்கள்.

பாட்டு 38 அவர் உன்னைப் பலப்படுத்துவார்

a பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.

b இரக்கமில்லாத முதலாளிகளிடமிருந்தும் கிறிஸ்தவர்களாக இல்லாத கணவர்களிடமிருந்தும், முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் அனுபவித்த அநியாயங்களைப் பற்றி அப்போஸ்தலன் பேதுரு தன்னுடைய முதல் கடிதத்தில் இரண்டு, மூன்று அதிகாரங்களில் சொல்லியிருக்கிறார்.—1 பே. 2:18-20; 3:1-6, 8, 9.

c jw.org வெப்சைட்டில், அன்பு உண்மையான சமாதானத்தைத் தரும் என்ற வீடியோவைப் பாருங்கள்.