Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 45

பாட்டு 138 நரைமுடி—அழகான கிரீடம்!

கடைசி வார்த்தைகள் கற்றுத்தரும் பாடங்கள்

கடைசி வார்த்தைகள் கற்றுத்தரும் பாடங்கள்

“வயதானவர்கள் ஞானம் உள்ளவர்கள்தானே? பெரியவர்கள் அனுபவம் உள்ளவர்கள்தானே?”யோபு 12:12.

என்ன கற்றுக்கொள்வோம்?

யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால் இன்றும் பலன்கள் கிடைக்கும், எதிர்காலத்தில் முடிவில்லாத வாழ்வும் கிடைக்கும்.

1. பெரியவர்களிடமிருந்து நாம் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்?

 வாழ்க்கையில் முக்கியமான முடிவுகள் எடுப்பதற்கு நம் எல்லாருக்குமே ஆலோசனை தேவை. சபையில் இருக்கிற மூப்பர்களிடமிருந்தும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களிடமிருந்தும் நமக்கு அது கிடைக்கும். நம்மைவிட ரொம்பப் பெரியவர்களாக இருப்பவர்கள் சொல்லும் ஆலோசனைகள் நம் காலத்துக்கு ஒத்துவராது என்று ஒதுக்கிவிடக் கூடாது. நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என்று யெகோவா எதிர்பார்க்கிறார். ஏனென்றால், நம்மைவிட அவர்களுக்கு அதிக அனுபவமும் புரிந்துகொள்ளுதலும் ஞானமும் இருக்கிறது.—யோபு 12:12.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 அன்றிருந்த உண்மையுள்ள பெரியவர்களைப் பயன்படுத்தி யெகோவா தன்னுடைய மக்களை உற்சாகப்படுத்தினார், வழிநடத்தினார். மோசே, தாவீது, அப்போஸ்தலன் யோவானைப் பற்றியெல்லாம் யோசித்துப் பாருங்கள். அவர்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்தார்கள், அப்போதிருந்த சூழ்நிலைமைகளும் வித்தியாசமாக இருந்தது. அவர்கள் தங்களுடைய வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில், தங்களைவிட வயதில் குறைந்தவர்களுக்கு ஞானமான ஆலோசனைகளைக் கொடுத்துவிட்டுப் போனார்கள். கடவுளுக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி அவர்கள் ஒவ்வொருவரும் சொன்னார்கள். அவர்களுடைய வார்த்தைகளை யெகோவா இன்று நமக்காகப் பதிவு செய்து வைத்திருக்கிறார். நாம் இளைஞர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, அவர்கள் கொடுத்த ஆலோசனைகளைப் படித்துப் பார்ப்பது பிரயோஜனமாக இருக்கும். (ரோ. 15:4; 2 தீ. 3:16) இந்தக் கட்டுரையில், யெகோவாவுக்கு உண்மையாக இருந்த இந்த மூன்று பெரியவர்கள் சொன்ன கடைசி வார்த்தைகளைப் பார்க்கலாம். அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்றும் பார்க்கலாம்.

“உங்களை நீண்ட காலம் வாழ வைப்பார்”

3. மோசே எப்படியெல்லாம் யெகோவாவுக்கும் அவருடைய மக்களுக்கும் சேவை செய்தார்?

3 மோசே தன்னுடைய வாழ்நாள் முழுக்க யெகோவாவுக்காகவே வாழ்ந்தார். அவர் ஒரு தீர்க்கதரிசியாக, நியாயாதிபதியாக, தலைவராக, சரித்திராசிரியராக இருந்தார். வாழ்க்கையில் மோசேக்கு ஏகப்பட்ட அனுபவம் இருந்தது. எகிப்தில் அடிமைகளாக இருந்த இஸ்ரவேல் தேசத்தை விடுதலை செய்து கூட்டிக்கொண்டு வந்தார். யெகோவா செய்த நிறைய அற்புதங்களை நேரில் பார்த்திருக்கிறார். பைபிளில் இருக்கிற முதல் ஐந்து புத்தகங்களையும், 90-வது சங்கீதத்தையும் எழுதுவதற்கு யெகோவா அவரைப் பயன்படுத்தினார். ஒருவேளை, சங்கீதம் 91-ஐயும் அவர் எழுதியிருக்கலாம். யோபு புத்தகத்தைக்கூட அவர்தான் எழுதியதாகத் தெரிகிறது.

4. மோசே யாரை உற்சாகப்படுத்தினார், ஏன்?

4 மோசே 120 வயதில் இறந்தார். அவர் இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு இஸ்ரவேலர்கள் எல்லாரையும் ஒன்றுகூட்டி யெகோவா அவர்களுக்காகச் செய்த எல்லா விஷயங்களையும் ஞாபகப்படுத்தினார். அவர் சொன்னதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களில் சிலர், யெகோவா செய்த அற்புதங்களையெல்லாம் சின்ன வயதில் கண்ணாரப் பார்த்தார்கள். எகிப்தியர்களை யெகோவா தண்டித்ததைப் பார்த்தார்கள். (யாத். 7:3, 4) செங்கடல் இரண்டாகப் பிளந்ததைப் பார்த்தார்கள். அதற்கு நடுவில் அவர்கள் நடந்து வந்தார்கள். பார்வோனுடைய படை அழிந்ததையும் பார்த்தார்கள். (யாத். 14:29-31) வனாந்தரத்தில், யெகோவா அவர்களை எப்படியெல்லாம் பாதுகாத்தார்... கவனித்துக்கொண்டார்... என்பதையும் பார்த்தார்கள். (உபா. 8:3, 4) இப்போது ஒரு தேசமாக, வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் நுழையும் தருணத்தில் நின்றுகொண்டு இருந்தார்கள். தனக்குக் கிடைத்த கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தி மோசே மக்களை உற்சாகப்படுத்தினார். a

5. உபாகமம் 30:19, 20-ல் இருக்கிற மோசேயின் கடைசி வார்த்தைகள் இஸ்ரவேலர்களுக்கு என்ன நம்பிக்கையைக் கொடுத்தது?

5 மோசே என்ன சொன்னார்? (உபாகமம் 30:19, 20-ஐ வாசியுங்கள்.) இஸ்ரவேல் தேசத்துக்கு ரொம்ப அற்புதமான எதிர்காலம் காத்திருந்தது. யெகோவாவுடைய ஆசீர்வாதத்தோடு, இஸ்ரவேலர்களால் நீண்ட காலம் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்தில் வாழ முடியும். அந்தத் தேசம் எவ்வளவு அழகான, செழிப்பான இடமாக இருந்தது! மோசே அதைப் பற்றி இப்படிச் சொன்னார்: “நீங்கள் கட்டாத பிரமாண்டமான நகரங்களையும், நீங்கள் உழைத்துச் சம்பாதிக்காத நல்ல நல்ல பொருள்கள் நிறைந்த வீடுகளையும், நீங்கள் வெட்டாத கிணறுகளையும், நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களையும் ஒலிவ மரங்களையும் உங்களுக்குக் கொடுப்பார்.”—உபா. 6:10, 11.

6. மற்ற தேசங்கள் இஸ்ரவேலைக் கைப்பற்றுவதற்கு யெகோவா ஏன் அனுமதித்தார்?

6 இஸ்ரவேலர்களுக்கு மோசே ஒரு எச்சரிப்பையும் கொடுத்தார். அந்த அழகான தேசத்தில் நீண்ட காலம் வாழ வேண்டுமென்றால், யெகோவாவுடைய கட்டளைகளுக்கு அவர்கள் கீழ்ப்படிய வேண்டியிருந்தது. யெகோவாவுடைய பேச்சைக் கேட்பதன் மூலமாகவும் அவருக்கு “உண்மையாக இருப்பதன்” மூலமாகவும் “வாழ்வைத் தேர்ந்தெடுக்க” மோசே அவர்களுக்குச் சொன்னார். ஆனால், இஸ்ரவேலர்கள் யெகோவாவை ஒதுக்கித்தள்ளிவிட்டார்கள். அதனால், கொஞ்சக் காலத்துக்குப் பிறகு அசீரியர்களும், அதற்குப் பிறகு பாபிலோனியர்களும் அந்தத் தேசத்தைக் கைப்பற்றுவதற்கும் இஸ்ரவேலர்களை அடிமைகளாகப் பிடித்துக்கொண்டு போவதற்கும் யெகோவா விட்டுவிட்டார்.—2 ரா. 17:6-8, 13, 14; 2 நா. 36:15-17, 20.

7. மோசேயின் வார்த்தைகளிலிருந்து நமக்கு என்ன பாடம்? (படத்தையும் பாருங்கள்.)

7 நமக்கு என்ன பாடம்? கீழ்ப்படிந்தால் வாழ்வு! வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் நுழைகிற தருணத்தில் இருந்த இஸ்ரவேலர்கள் மாதிரி, கடவுள் வாக்குக் கொடுத்த புதிய உலகத்துக்குள் நுழைகிற சமயத்தில் நாம் இருக்கிறோம். இந்தப் பூமி ரொம்பச் சீக்கிரம் அழகான ஒரு பூஞ்சோலையாக மாறப்போகிறது. (ஏசா. 35:1; லூக். 23:43) அப்போது சாத்தானும் அவனுடைய பேய்களும் இருக்க மாட்டார்கள். (வெளி. 20:2, 3) மக்களை யெகோவாவிடமிருந்து பிரிக்கிற பொய் மதமும் இருக்காது. (வெளி. 17:16) மக்களை அடக்கி ஒடுக்குகிற அரசாங்கங்கள் இருக்கவே இருக்காது. (வெளி. 19:19, 20) கலகக்காரர்களுக்கு அங்கே இடம் கிடையாது. (சங். 37:10, 11) எல்லாருமே யெகோவாவுடைய நீதியான சட்டங்களுக்குக் கீழ்ப்படிவார்கள். சமாதானமாக, ஒற்றுமையாக இருப்பார்கள். ஒருவரை ஒருவர் நம்புவார்கள். எங்கே பார்த்தாலும் அன்பு பூத்துக் குலுங்கும். (ஏசா. 11:9) எவ்வளவு அழகான ஒரு எதிர்காலம்! யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால், அந்த அழகான பூஞ்சோலையில் நூற்றுக்கணக்கான வருஷங்கள் மட்டுமல்ல, என்றென்றும் வாழ்வோம்!—சங். 37:29; யோவா. 3:16.

யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால், பூஞ்சோலை பூமியில் வெறும் நூற்றுக்கணக்கான வருஷங்கள் மட்டுமல்ல, என்றென்றும் வாழ்வோம் (பாரா 7)


8. முடிவில்லாத வாழ்க்கையைப் பற்றி யோசித்துப் பார்த்தது ஒரு மிஷனரிக்கு எப்படி உதவியது? (யூதா 20, 21)

8 முடிவில்லாத வாழ்க்கையைத் தருவதாக யெகோவா கொடுத்த வாக்குறுதியை ஆழமாக யோசித்துப் பார்த்தால், எப்பேர்ப்பட்ட சோதனைகள் வந்தாலும் யெகோவாவுக்கு நாம் உண்மையாக இருப்போம். (யூதா 20, 21-ஐ வாசியுங்கள்.) அந்த வாக்குறுதிமேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை நமக்குள் இருக்கிற பலவீனங்களை எதிர்த்துப் போராடுவதற்கான சக்தியையும் கொடுக்கும். ஆப்பிரிக்காவில் ரொம்பக் காலம் மிஷனரியாகச் சேவை செய்த ஒரு சகோதரர் தன்னிடமிருந்த ஒரு பலவீனத்தோடு போராடினார். அதைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “இந்தப் பிரச்சினையோடு நான் போராடி ஜெயித்தே ஆக வேண்டும் என்று நினைத்தேன். இல்லையென்றால், என்றென்றும் வாழ்கிற வாய்ப்பே எனக்குக் கிடைக்காமல் போய்விடுமே! அதனால், உதவி செய்யுங்கள் என்று யெகோவாவிடம் கெஞ்சிக் கேட்டுக்கொண்டே இருந்தேன். அவருடைய உதவி இருந்ததால், அந்தப் பலவீனத்தை என்னால் ஜெயிக்க முடிந்தது.”

“உனக்கு வெற்றி கிடைக்கும்”

9. தாவீது தன் வாழ்க்கையில் எப்படிப்பட்ட சோதனைகளைச் சந்தித்தார்?

9 தாவீது ஒரு மகாராஜா. அதோடு, அவர் ஒரு இசைக்கலைஞர், கவிஞர், போர்வீரர், தீர்க்கதரிசி. அவருக்கும் வாழ்க்கையில் ஏகப்பட்ட சோதனைகள் வந்தன. பொறாமைப்பிடித்த சவுல் ராஜா அவரைத் துரத்திக்கொண்டே இருந்ததால், கொஞ்சக் காலம் நாடோடியாக வாழ்ந்தார். ராஜாவாக ஆனப் பிறகு, அவருடைய சொந்த மகன் அப்சலோம் ஆட்சியைப் பறிக்க நினைத்தான். அதனால், அவனிடமிருந்தும் தப்பித்து ஓட வேண்டியிருந்தது. இந்த மாதிரி நிறைய கஷ்டங்களை அவர் சந்தித்தார். தன்னுடைய பலவீனங்களாலும் போராடினார். இருந்தாலும், தன்னுடைய கடைசி மூச்சுவரை யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார். அதனால்தான், தாவீது ‘என் இதயத்துக்குப் பிடித்தமானவன்’ என்று யெகோவா சொன்னார். இப்படிப்பட்ட ஒரு நபர் கடைசியாகக் கொடுத்த ஆலோசனை நமக்கு உண்மையிலேயே பிரயோஜனமாக இருக்கும்.—அப். 13:22; 1 ரா. 15:5.

10. தன்னுடைய மகனும் அடுத்த மன்னருமான சாலொமோனுக்கு தாவீது ஏன் ஆலோசனை கொடுத்தார்?

10 தன்னுடைய மகனும் அடுத்த மன்னருமான சாலொமோனுக்கு தாவீது என்ன ஆலோசனை கொடுத்தார் என்று பார்க்கலாம். யெகோவா தனக்கென்று ஒரு ஆலயத்தைக் கட்ட சாலொமோனைத் தேர்ந்தெடுத்திருந்தார். (1 நா. 22:5) சாலொமோனுக்கு முன்னால் நிறைய வேலைகள் இருந்தன. ஒரு பெரிய தேசத்தை வழிநடத்த யெகோவாவின் உதவி அவருக்குத் தேவைப்பட்டது. இப்போது தாவீது அவருக்கு என்ன ஆலோசனை கொடுப்பார்?

11. ஒன்று ராஜாக்கள் 2:2, 3-ல் சொல்லியிருக்கிற மாதிரி, தாவீது சாலொமோனுக்கு என்ன உறுதி கொடுத்தார், அவர் சொன்ன மாதிரியே எப்படி நடந்தது? (படத்தையும் பாருங்கள்.)

11 தாவீது என்ன சொன்னார்? (1 ராஜாக்கள் 2:2, 3-ஐ வாசியுங்கள்.) யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தால் வெற்றி கிடைக்கும் என்று தாவீது தன்னுடைய மகன் சாலொமோனிடம் சொன்னார். பல வருஷங்கள், சாலொமோனுடைய ஆட்சி கொடிகட்டிப் பறந்தது. (1 நா. 29:23-25) பிரமாண்டமான ஒரு ஆலயத்தை அவர் கட்டினார். பைபிளில் சில புத்தகங்களை எழுதினார். அவர் சொன்ன சில விஷயங்கள் வேறு பைபிள் புத்தகங்களிலும் இருக்கின்றன. அவருடைய ஞானத்தைப் பற்றியும் செல்வச்செழிப்பைப் பற்றியும் உலகமே பேசியது. (1 ரா. 4:34) ஆனால், தாவீது சொன்ன மாதிரி யெகோவாவுக்கு அவர் கீழ்ப்படிகிற வரைதான் அவருக்கு வெற்றி கிடைக்கும். கொஞ்சக் காலத்துக்குப் பிறகு, சாலொமோன் மற்ற கடவுள்களை வணங்க ஆரம்பித்தார். அதனால், யெகோவா தன்னுடைய ஆசீர்வாதத்தை எடுத்துவிட்டார்; நீதி நியாயத்தோடு ஆட்சி செய்வதற்கான ஞானம் அவருக்கு இல்லாமல் போனது.—1 ரா. 11:9, 10; 12:4.

யெகோவாவுக்கு நாம் கீழ்ப்படிந்தால், நல்ல முடிவுகளை எடுக்க அவர் நமக்கு ஞானத்தைக் கொடுப்பார் என்று தாவீதின் கடைசி வார்த்தைகள் காட்டுகிறது (பாராக்கள் 11-12) b


12. தாவீதின் வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

12 நமக்கு என்ன பாடம்? கீழ்ப்படிந்தால் வெற்றி! (சங். 1:1-3) சாலொமோனுக்குக் கொடுத்த மாதிரி பேரும் புகழும் செல்வச்செழிப்பும் கொடுப்பதாக யெகோவா இன்று நமக்கு வாக்கு கொடுக்கவில்லை. ஆனால், நாம் அவருக்குக் கீழ்ப்படிந்தால் நல்ல முடிவுகளை எடுப்பதற்குத் தேவையான ஞானத்தை அவர் நமக்குக் கொடுப்பார். (நீதி. 2:6, 7; யாக். 1:5) வேலை, படிப்பு, பொழுதுபோக்கு, பணம் சம்பந்தமான நல்ல முடிவுகளை எடுக்க அவர் கொடுத்திருக்கிற நியமங்கள் நமக்கு உதவுகிறது. கடவுள் கொடுக்கிற ஆலோசனைகளின்படி செய்யும்போது அவருக்கும் நமக்கும் இருக்கிற பந்தத்துக்கு எந்தப் பாதிப்பும் வராது. முடிவில்லாத வாழ்வும் நமக்குக் கிடைக்கும். (நீதி. 2:10, 11) உயிர் நண்பர்களைச் சம்பாதிக்க முடியும். குடும்ப வாழ்க்கையும் சந்தோஷமாக இருக்கும்.

13. வாழ்க்கையில் வெற்றிக்கான வழியை கார்மன் என்ற சகோதரி எப்படிக் கண்டுபிடித்தார்?

13 மொசாம்பிக்கில் வாழ்கிற கார்மன் என்ற சகோதரி, உயர்கல்விதான் வாழ்க்கையில் வெற்றி தரும் என்று நினைத்தார். அதனால், பல்கலைக்கழகத்தில் சேர்ந்து கட்டடக்கலை (architecture) படித்தார். அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் படித்த பாடம் எனக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஆனால் அது என்னுடைய நேரத்தையும் சக்தியையும் உறிஞ்சுவிட்டது. காலை 7:30 மணியிலிருந்து சாயங்காலம் 6:00 மணிவரை கல்லூரியிலேயே கிடந்தேன். அதனால், கூட்டங்களுக்குப் போவது ரொம்பக் கஷ்டமாக இருந்தது. யெகோவாவுக்கும் எனக்கும் இருக்கிற பந்தம் பலவீனமாகிவிட்டது. இரண்டு எஜமான்களுக்குச் சேவை செய்ய நான் முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன் என்று என் உள்மனம் சொன்னது.” (மத். 6:24) தன்னுடைய சூழ்நிலையைப் பற்றி அவர் ஜெபம் செய்தார். நம்முடைய பிரசுரங்களில் ஆராய்ச்சி செய்தார். பிறகு என்ன நடந்தது என்று அவர் சொல்கிறார்: “மூப்பர்களும் என்னுடைய அம்மாவும் எனக்குத் தேவையான ஆலோசனைகளைக் கொடுத்தார்கள். அதனால், படிப்பை நிறுத்திவிட்டு யெகோவாவுக்கு முழு நேரமாகச் சேவை செய்ய முடிவெடுத்தேன். இப்படிச் செய்ததால், வாழ்க்கையில் நல்ல நல்ல தீர்மானங்களை எடுக்க முடிந்தது. விட்டு வந்ததை நினைத்து இன்று நான் கொஞ்சம்கூட வருத்தப்படுவதில்லை.”

14. மோசேயும் தாவீதும் சொன்ன விஷயங்களின் முக்கியமான குறிப்பு என்ன?

14 மோசேயும் தாவீதும் யெகோவாவை ரொம்ப நேசித்தார்கள். அவருக்குக் கீழ்ப்படிவது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்து வைத்திருந்தார்கள். அதனால்தான், அவர்களுடைய கடைசி வார்த்தைகளில், தங்களுடைய முன்மாதிரியைப் பின்பற்றி யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைச் சொன்னார்கள். அதேசமயத்தில், இவர்கள் இரண்டு பேரும் எச்சரிப்பையும் கொடுத்தார்கள். அதாவது, யெகோவாவுக்கு உண்மையாக இல்லாமல் போய்விட்டால் அவருடைய பந்தத்தையும் அவர் தருகிற ஆசீர்வாதத்தையும் இழந்துவிடுவோம் என்று சொன்னார்கள். அவர்கள் கொடுத்திருக்கிற முத்தான ஆலோசனைகள் இன்றுவரை நமக்குப் பிரயோஜனமாக இருக்கிறது. பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, யெகோவாவுக்கு உண்மையாக இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி இன்னொருவரும் சொன்னார்.

“அதிகமான சந்தோஷம் எனக்கு வேறு எதுவும் இல்லை”

15. அப்போஸ்தலன் யோவான் தன்னுடைய வாழ்நாள் காலத்தில் என்னவெல்லாம் பார்த்தார்?

15 யோவான், இயேசுவுடைய நெருங்கிய நண்பராகவும் அப்போஸ்தலராகவும் இருந்தார். (மத். 10:2; யோவா. 19:26) இயேசு ஊழியம் செய்த சமயத்தில் யோவான் அவர் கூடவே இருந்தார். அவர் செய்த அற்புதங்களைப் பார்த்தார். கஷ்டமான சமயங்களிலும் அவரோடு இருந்தார். இயேசு கொல்லப்பட்டதையும் பார்த்தார், உயிர்த்தெழுப்பப்பட்டதையும் பார்த்தார். முதல் நூற்றாண்டில் ஒரு சின்ன தொகுதியாக இருந்த கிறிஸ்தவர்கள் பிரமாண்டமாக வளர்வதைப் பார்த்தார். நல்ல செய்தி ‘வானத்தின் கீழ் இருக்கிற எல்லா மக்களுக்கும் பிரசங்கிக்கப்பட்டதை’ பார்த்தார்.—கொலோ. 1:23.

16. யோவான் எழுதிய கடிதங்களால் யாரெல்லாம் பிரயோஜனம் அடைந்தார்கள்?

16 யோவான் தன்னுடைய வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் இருந்தார். பைபிளில் சில பகுதிகளை எழுதுவதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. ‘இயேசு கிறிஸ்து வெளிப்படுத்திய’ விறுவிறுப்பான சம்பவங்களைப் பதிவு செய்தார். (வெளி. 1:1) தன்னுடைய பெயரில் ஒரு சுவிசேஷ புத்தகத்தையும் எழுதினார். மூன்று கடிதங்களையும் எழுதினார். கடைசிக் கடிதத்தை உண்மையுள்ள கிறிஸ்தவரான காயுவுக்கு எழுதினார். காயுவை தன்னுடைய சொந்த மகனாக யோவான் பார்த்தார். (3 யோ. 1) அந்தச் சமயத்தில், இன்னும் நிறைய பேரையும் யோவான் தன்னுடைய சொந்த பிள்ளைகளாகப் பார்த்திருப்பார். இந்த உண்மையுள்ள, வயதான கிறிஸ்தவர் சொன்ன விஷயங்கள் அன்றுமுதல் இன்றுவரை நம் எல்லாரையுமே உற்சாகப்படுத்துகிறது.

17. மூன்று யோவான் 4-ன்படி, எது அதிக சந்தோஷத்தைக் கொடுக்கிறது?

17 யோவான் என்ன எழுதினார்? (3 யோவான் 4-ஐ வாசியுங்கள்.) கடவுளுக்குக் கீழ்ப்படிவதால் கிடைக்கிற சந்தோஷத்தைப் பற்றி யோவான் எழுதினார். மூன்றாவது கடிதத்தை அவர் எழுதிய சமயத்தில் சிலர் ஏற்கெனவே பொய் போதனைகளைப் பரப்பிக்கொண்டு இருந்தார்கள். அது சபைக்குள் பிரிவினைகளை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. ஆனால், மற்றவர்கள் ‘சத்தியத்தில் நடந்தார்கள்.’ யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து ‘அவருடைய கட்டளைகளின்படி நடந்தார்கள்.’ (2 யோ. 4, 6) அந்த உண்மையுள்ள கிறிஸ்தவர்கள் யோவானை மட்டுமல்ல யெகோவாவுடைய மனதையும் சந்தோஷப்படுத்தினார்கள்.—நீதி. 27:11.

18. யோவானுடைய வார்த்தைகளிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்?

18 நமக்கு என்ன பாடம்? யெகோவாவுக்கு உண்மையாக இருந்தால் சந்தோஷம் கிடைக்கும். (1 யோ. 5:3) இதை யோசித்துப் பாருங்கள்: நாம் சத்தியத்தை ஏற்றுக்கொண்டதையும் இந்த உலகத்திலிருந்து வருகிற சோதனைகளுக்கு இணங்கிவிடாமல் உறுதியாக இருப்பதையும் பார்த்து யெகோவா ரொம்பச் சந்தோஷப்படுகிறார். (நீதி. 23:15) யெகோவாவைச் சந்தோஷப்படுத்தியிருக்கிறோம் என்று நினைக்கும்போதே மனதுக்குள் மகிழ்ச்சி ஏற்படுகிறது. நம்மைப் பார்த்து, பரலோகத்தில் இருக்கிற தேவதூதர்களும் சந்தோஷப்படுகிறார்கள். (லூக். 15:10) சோதனைகள், கஷ்டங்கள் மத்தியில் மற்ற சகோதர சகோதரிகள் யெகோவாவுக்கு உண்மையாக இருப்பதைப் பார்க்கும்போது நமக்கு சந்தோஷம் கிடைக்கிறது. (2 தெ. 1:4) எதிர்காலத்தில், இந்த உலகம் அழியும்போது, சாத்தானுடைய கட்டுப்பாட்டிலிருந்த இந்த உலகத்திலேயே நாம் யெகோவாவுக்கு உண்மையாக இருந்திருக்கிறோம் என்ற திருப்தியும் சந்தோஷமும் நமக்குக் கிடைக்கும்.

19. மற்றவர்களுக்குச் சத்தியத்தைச் சொல்லிக்கொடுப்பதைப் பற்றி சகோதரி ரேச்சல் என்ன சொல்கிறார்? (படத்தையும் பாருங்கள்.)

19 சத்தியத்தை மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுக்கும்போதும் நமக்குச் சந்தோஷம் கிடைக்கிறது. டொமினிகன் குடியரசில் வாழ்கிற ரேச்சல் என்ற சகோதரியும் இந்தச் சந்தோஷத்தை அனுபவித்திருக்கிறார். நாம் வணங்குகிற அற்புதமான கடவுளைப் பற்றி மக்களுக்குச் சொல்லிக்கொடுப்பதற்குத் தனக்குக் கிடைத்த வாய்ப்பைக் கவுரவமாக நினைக்கிறார். நிறைய பேர் யெகோவாவை வணங்குவதற்கு அவர் உதவி செய்திருக்கிறார். அவர் இப்படிச் சொல்கிறார்: “என்னிடம் பைபிள் படிக்கிறவர்கள் யெகோவாவை நேசிக்க ஆரம்பிப்பதைப் பார்க்கும்போது எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கும். அந்தச் சந்தோஷத்தை எப்படி விவரிப்பது என்றே தெரியவில்லை. அவர்கள் யெகோவாமேல் நம்பிக்கை வைக்கிறார்கள். அவருடைய இதயத்தை சந்தோஷப்படுத்துவதற்காக வாழ்க்கையில் மாற்றங்கள் செய்கிறார்கள். அவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதற்காக நான் போட்ட முயற்சி, செய்த தியாகம் எல்லாம் அந்தச் சந்தோஷத்துக்கு ஈடே ஆகாது.”

மற்றவர்கள் யெகோவாவை நேசிப்பதற்கும், அவருக்குக் கீழ்ப்படிவதற்கும் நாம் உதவும்போது சந்தோஷம் கிடைக்கிறது (பாரா 19)


உண்மையுள்ள ஊழியர்களின் கடைசி வார்த்தைகளிலிருந்து பயனடையுங்கள்

20. மோசே, தாவீது, யோவான்—இந்த மூன்று பேருக்கும் நமக்கும் எந்தெந்த விஷயங்கள் ஒத்துப்போகிறது?

20 நம் காலத்துக்கும், மோசே, தாவீது, யோவான் வாழ்ந்த காலத்துக்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன. இருந்தாலும், நமக்கும் அவர்களுக்கும் நிறைய விஷயங்கள் ஒத்துப்போகின்றன. அவர்களும் உண்மை கடவுளுக்குச் சேவை செய்தார்கள். நாமும் அவருக்குச் சேவை செய்கிறோம். அவர்களைப் போலவே நாமும் யெகோவாவிடம் ஜெபம் செய்கிறோம், அவரை நம்பியிருக்கிறோம். வழிநடத்துதலுக்காக அவரையே எதிர்பார்த்திருக்கிறோம். அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களை அவர் அளவில்லாமல் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கை அவர்களைப் போலவே நமக்கும் இருக்கிறது.

21. தாவீது, மோசே, யோவான் மாதிரியான பெரியவர்கள் கொடுத்த ஆலோசனைகளின்படி செய்யும்போது நமக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

21 இந்தப் பெரியவர்கள் கொடுத்த ஆலோசனைகளின்படி நாம் யெகோவாவுக்குக் கீழ்ப்படியலாம். அப்படிச் செய்யும்போது உண்மையான வெற்றி நம் வசமாகும். ‘நீண்ட கால வாழ்க்கை’ நமக்குச் சொந்தமாகும். (உபா. 30:20) யெகோவாவைப் பிரியப்படுத்துகிற சந்தோஷம் நெஞ்சில் பூத்துக்குலுங்கும். யெகோவா தன்னுடைய வாக்குறுதிகள் எல்லாவற்றையும் நிறைவேற்றும்போது நமக்குக் கிடைக்கிற சந்தோஷமும் ஆசீர்வாதமும் நம் கற்பனைக்கு எட்டாததாக இருக்கும்!—எபே. 3:20.

பாட்டு 129 சகித்தே ஓடுவோம்!

a செங்கடலில் யெகோவா செய்த அற்புதத்தைப் பார்த்த பெரும்பாலான இஸ்ரவேலர்கள், வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் நுழைவதற்கு முன்பே இறந்துவிட்டார்கள். (எண். 14:22, 23) ஏனென்றால், 20 வயதும் அதற்கு மேலும் ஆகியிருந்த, பெயர்ப்பதிவு செய்யப்பட்ட எல்லாருமே வனாந்தரத்திலேயே இறந்துவிடுவார்கள் என்று யெகோவா சொல்லியிருந்தார். (எண். 14:29) ஆனால், யோசுவா, காலேப், 20 வயதுக்குக் கீழ் இருந்த நிறைய பேர் மற்றும் லேவி கோத்திரத்தைச் சேர்ந்த நிறைய பேர் யெகோவா சொன்ன மாதிரியே யோர்தான் ஆற்றைக் கடந்து கானான் தேசத்துக்குள் போனார்கள்.—உபா. 1:24-40.

b பட விளக்கங்கள்: இடது: தாவீது தன் வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் தன்னுடைய மகன் சாலொமோனுக்கு ஞானமான ஆலோசனை கொடுக்கிறார். வலது: பயனியர் ஊழியப் பள்ளியில் யெகோவா கொடுக்கும் கல்வியிலிருந்து சகோதர சகோதரிகள் பயனடைகிறார்கள்.