Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 46

பாட்டு 49 யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்

சகோதரர்களே, உதவி ஊழியர்களாக ஆவதற்கு முயற்சி எடுக்கிறீர்களா?

சகோதரர்களே, உதவி ஊழியர்களாக ஆவதற்கு முயற்சி எடுக்கிறீர்களா?

“வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது.”அப். 20:35.

என்ன கற்றுக்கொள்வோம்?

ஞானஸ்நானம் எடுத்த சகோதரர்கள் உதவி ஊழியர்களாக ஆவதற்கான ஆசையையும் தகுதிகளையும் வளர்த்துக்கொள்ள என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக்கொள்வோம்.

1. உதவி ஊழியர்களைப் பற்றி அப்போஸ்தலன் பவுல் என்ன நினைத்தார்?

 உதவி ஊழியர்கள் சபையில் ரொம்ப முக்கியமான வேலையைச் செய்கிறார்கள். இந்த உண்மையுள்ள ஆண்களை அப்போஸ்தலன் பவுல் ரொம்ப உயர்வாக மதித்தார். ஒருசமயம், பிலிப்பியில் இருந்த கிறிஸ்தவர்களுக்குக் கடிதம் எழுதியபோது, மூப்பர்களுக்கு வாழ்த்துச் சொல்வதோடு அவர் நிறுத்திக்கொள்ளவில்லை; உதவி ஊழியர்களுக்கும் குறிப்பாக வாழ்த்துச் சொன்னார்.—பிலி. 1:1.

2. ஒரு உதவி ஊழியராகச் சேவை செய்வதைப் பற்றி சகோதரர் லூயிஸ் என்ன சொன்னார்?

2 மற்றவர்களுக்கு உதவி செய்வதால் உதவி ஊழியர்களுக்கு நிறைய சந்தோஷம் கிடைக்கிறது. சிறியவர்கள் பெரியவர்கள் என ஞானஸ்நானம் எடுத்த நிறைய சகோதரர்கள் உதவி ஊழியர்களாகச் சேவை செய்கிறார்கள். உதாரணத்துக்கு, டேவன் என்ற சகோதரர் 18 வயதிலேயே உதவி ஊழியர் ஆகிவிட்டார். லூயிஸ் என்ற சகோதரர் 50 வயதைத் தாண்டியப் பிறகு உதவி ஊழியர் ஆனார். ஒரு உதவி ஊழியராகச் சேவை செய்வதைப் பற்றி லூயிஸ் இப்படிச் சொன்னார்: “சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்காக உழைப்பது எனக்கு ரொம்பச் சந்தோஷமாக இருக்கிறது. அவர்கள் எனக்கு நிறைய அன்பு காட்டியிருக்கிறார்கள். அவர்கள்மேல் நான் வைத்திருக்கும் அன்பைக் காட்டுவதற்கு எனக்கு இப்போது ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது.” இவரைப் போலத்தான் நிறைய உதவி ஊழியர்களும் நினைக்கிறார்கள்.

3. இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?

3 நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த ஒரு சகோதரராக இருந்தால், உதவி ஊழியர் ஆவதற்கு ஏன் குறிக்கோள் வைக்கக் கூடாது? அப்படிச் சேவை செய்ய எது உங்களைத் தூண்டும்? நீங்கள் என்னென்ன தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று பைபிள் சொல்கிறது? இந்தக் கேள்விகளுக்கான பதில்களை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். முதலில், ஒரு உதவி ஊழியர் என்னென்ன வேலைகள் செய்கிறார் என்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

உதவி ஊழியர்கள் சபைக்கு எப்படி உதவுகிறார்கள்?

4. உதவி ஊழியர்களுக்கு என்னென்ன வேலைகள் இருக்கின்றன? (படத்தையும் பாருங்கள்.)

4 உதவி ஊழியர்கள் ஞானஸ்நானம் எடுத்த சகோதரர்களாக இருக்கிறார்கள்; கடவுளுடைய சக்தியால் அவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். சபை வேலைகளைச் செய்வதற்கு அவர்கள் மூப்பர்களுக்கு உதவுகிறார்கள். உதாரணத்துக்கு, ஊழியம் செய்வதற்குப் போதுமான இடம் இருக்கிறதா, பத்திரிகைகள் இருக்கிறதா என்று சில உதவி ஊழியர்கள் பார்த்துக்கொள்கிறார்கள். மற்றவர்கள், ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்வது, பராமரிப்பது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள். சபைக் கூட்டங்கள் நடக்கும்போது, சில உதவி ஊழியர்கள் அட்டன்டண்டுகளாக சேவை செய்கிறார்கள். வேறுசிலர், ஆடியோ-வீடியோவைக் கவனித்துக்கொள்கிறார்கள். பொதுவாக, இப்படிப்பட்ட நடைமுறை வேலைகளைச் செய்ய வேண்டியிருந்தாலும், உதவி ஊழியராக நியமிக்கப்படுகிற ஒருவர், முதலில் யெகோவாவை நேசிக்கிறவராக இருப்பார்; யெகோவாவுடைய நீதியான நெறிமுறைகள்படி வாழ்கிறவராகவும், சகோதர சகோதரிகள்மேல் நிறைய அன்பு வைத்திருக்கிறவராகவும் இருப்பார். (மத். 22:37-39) ஞானஸ்நானம் எடுத்த ஒரு சகோதரர் உதவி ஊழியராக ஆவதற்கு எப்படி முயற்சி எடுக்கலாம்?

மற்றவர்களுக்காக மனதார வேலை செய்வதன் மூலம், உதவி ஊழியர்கள் இயேசு மாதிரி நடந்துகொள்கிறார்கள் (பாரா 4)


5. உதவி ஊழியராக ஆக விரும்புகிறவர் என்ன செய்ய வேண்டும்?

5 உதவி ஊழியராக ஆவதற்கு ஒருவர் வளர்த்துக்கொள்ள வேண்டிய தகுதிகளைப் பற்றி பைபிள் சொல்கிறது. (1 தீ. 3:8-10, 12, 13) இந்தத் தகுதிகளை நன்றாகப் படித்துப் பாருங்கள். பிறகு, அவற்றை வளர்த்துக்கொள்ள கடினமாக முயற்சி செய்யுங்கள். ஆனால் அதற்கு முன்பு, நீங்கள் ஏன் ஒரு உதவி ஊழியர் ஆக ஆசைப்படுகிறீர்கள் என்று யோசித்துப் பாருங்கள். அதாவது, உங்கள் உள்நோக்கத்தை ஆராய்ந்து பாருங்கள்.

உதவி ஊழியர் ஆவதற்கு எது உங்களைத் தூண்டுகிறது?

6. சகோதர சகோதரிகளுக்குச் சேவை செய்ய எது உங்களைத் தூண்டுகிறது? (மத்தேயு 20:28; படத்தையும் பாருங்கள்.)

6 நம்முடைய மிகச் சிறந்த முன்மாதிரியான இயேசு கிறிஸ்துவைப் பற்றி யோசித்துப் பாருங்கள். அவர் தன்னுடைய அப்பாமேலும் மக்கள்மேலும் அன்பு வைத்திருந்தார். கடினமாக உழைக்கவும், மற்றவர்கள் தாழ்வாக நினைத்த வேலைகளைக்கூட இறங்கிச் செய்யவும் அந்த அன்புதான் அவரைத் தூண்டியது. (மத்தேயு 20:28-ஐ வாசியுங்கள்; யோவா. 13:5, 14, 15) நீங்களும் அன்பினால் தூண்டப்பட்டு வேலை செய்தால், யெகோவா உங்களை ஆசீர்வதிப்பார்; உதவி ஊழியர் ஆக வேண்டும் என்ற உங்கள் குறிக்கோளை எட்டிப்பிடிக்க உதவுவார்.—1 கொ. 16:14; 1 பே. 5:5.

நம்மையே பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ளாமல், மற்றவர்களுக்கு மனத்தாழ்மையாகச் சேவை செய்வது எப்படி என்பதை இயேசு செய்து காட்டுகிறார் (பாரா 6)


7. பெரிய ஆளாகக் காட்டிக்கொள்ள நினைக்கும் எண்ணத்தை ஒரு சகோதரர் ஏன் தவிர்க்க வேண்டும்?

7 தங்களையே பெரிய ஆளாகக் காட்டிக்கொள்கிறவர்களைத்தான் இந்த உலகம் தலையில் வைத்துக் கொண்டாடுகிறது. ஆனால் யெகோவாவுடைய அமைப்பில் அப்படிக் கிடையாது. அன்பினால் தூண்டப்பட்டு சேவை செய்கிற ஒரு சகோதரர், பதவி ஆசை பிடித்தவராக இருக்க மாட்டார். மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்தத் துடிக்க மாட்டார். சபையில் தனக்கென்று ஒரு அந்தஸ்து வேண்டும் என்றும் நினைக்க மாட்டார். ஒருவேளை, பதவி ஆசை பிடித்த ஒருவருக்குப் பொறுப்பு கொடுக்கப்பட்டால் என்ன ஆகும்? சபையில் சில சாதாரண வேலைகளை ‘செய்ய முடியாது’ என்று அவர் சொல்லிவிடலாம். ‘அதெல்லாம் என்னுடைய தகுதிக்குக் கீழ்’ என்று அவர் நினைக்கலாம். ஆனால், யெகோவாவின் அருமையான ஆடுகளைக் கவனித்துக்கொள்வதற்கு அப்படிப்பட்ட வேலைகள் அவசியமானதாக இருக்கலாம். (யோவா. 10:12) பெருமையினாலோ மற்றவர்கள் தன்னைப் பெரிய ஆளாக நினைக்க வேண்டும் என்ற ஆசையினாலோ யெகோவாவுக்குச் சேவை செய்ய ஒருவர் நினைத்தால், அவர் எடுக்கிற முயற்சிகளை யெகோவா கட்டாயம் ஆசீர்வதிக்க மாட்டார்.—1 கொ. 10:24, 33; 13:4, 5.

8. இயேசு தன்னுடைய அப்போஸ்தலர்களுக்கு என்ன ஆலோசனை கொடுத்தார்?

8 பொறுப்புகளை எடுத்துச் செய்ய வேண்டும் என்று இயேசுவின் நெருங்கிய நண்பர்கள் ஆசைப்பட்டார்கள். ஆனால், அவர்களுக்கே சிலசமயம் உள்நோக்கம் சரியில்லாமல் இருந்தது. உதாரணத்துக்கு, யாக்கோபையும் யோவானையும் எடுத்துக்கொள்ளுங்கள். இயேசுவுடைய அரசாங்கத்தில் தங்களுக்கு ஒரு விசேஷமான இடம் வேண்டும் என்று கேட்டார்கள். அவர்கள் அப்படிக் கேட்டது சரி என்று இயேசு சொல்லவில்லை. அவர் தன்னுடைய 12 அப்போஸ்தலர்களையும் கூப்பிட்டு இப்படிச் சொன்னார்: “உங்களில் உயர்ந்தவனாக இருக்க விரும்புகிறவன் உங்களுக்குச் சேவை செய்கிறவனாக இருக்க வேண்டும். உங்களில் முதலாவதாக இருக்க விரும்புகிறவன் எல்லாருக்கும் அடிமையாக இருக்க வேண்டும்.” (மாற். 10:35-37, 43, 44) அதனால், பொறுப்புகளை எடுத்துச் செய்ய ஆசைப்படும் ஒரு சகோதரருக்கு உள்நோக்கம் சரியாக இருக்க வேண்டும். அதாவது, மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற உள்நோக்கம் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட சகோதரர்கள் சபைக்கு ஆசீர்வாதமாக இருப்பார்கள்.—1 தெ. 2:8.

மற்றவர்களுக்குச் சேவை செய்யும் ஆசையை நீங்கள் எப்படி அதிகமாக்கலாம்?

9. மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையை நீங்கள் எப்படி அதிகமாக்கலாம்?

9 உங்களுக்கு யெகோவாமேல் அன்பு இருக்கிறது, மற்றவர்களுக்கு உதவ ஆசைப்படுகிறீர்கள். இருந்தாலும், ஒரு உதவி ஊழியர் செய்ய வேண்டிய நிறைய வேலைகளை எடுத்து செய்வதற்கான ஆசை உங்களுக்கு இல்லாமல் இருக்கலாம். அந்த ஆசையை நீங்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம்? சகோதர சகோதரிகளுக்காகச் சேவை செய்தால் எவ்வளவு சந்தோஷம் கிடைக்கும் என்று யோசித்துப் பாருங்கள். “வாங்குவதைவிட கொடுப்பதில்தான் அதிக சந்தோஷம் இருக்கிறது” என்று இயேசு சொன்னார். (அப். 20:35) இந்த வார்த்தைகளின்படிதான் அவரும் வாழ்ந்தார். மற்றவர்களுக்குச் சேவை செய்ததால் உண்மையான சந்தோஷத்தை அவர் அனுபவித்தார். உங்களாலும் அதை அனுபவிக்க முடியும்!

10. மற்றவர்களுக்குச் சேவை செய்வது தனக்குச் சந்தோஷம் என்பதை இயேசு எப்படிக் காட்டினார்? (மாற்கு 6:31-34)

10 மற்றவர்களுக்குச் சேவை செய்வது இயேசுவுக்கு எப்படிச் சந்தோஷத்தைக் கொடுத்தது என்பதற்கு ஒரு உதாரணத்தை இப்போது பார்க்கலாம். (மாற்கு 6:31-34-ஐ வாசியுங்கள்.) ஒருசமயம், இயேசுவும் அவருடைய சீஷர்களும் ரொம்பக் களைத்துப்போய் இருந்தார்கள். அதனால், ஓய்வெடுக்க ஒரு தனிமையான இடத்துக்குப் போனார்கள். அவர்கள் அங்கே போவதற்கு முன்பே, மக்கள் அந்த இடத்துக்குப் போய்விட்டார்கள். இயேசு ஏதாவது சொல்லிக்கொடுப்பார் என்று ஆசையாகக் காத்திருந்தார்கள். இயேசுவுக்கும் சீஷர்களுக்கும் “சாப்பிடுவதற்குக்கூட . . . நேரமே கிடைக்கவில்லை.” இந்தச் சூழ்நிலைமையில், ‘என்னால் இப்போது கற்றுக்கொடுக்க முடியாது’ என்று இயேசு சொல்லியிருக்கலாம். அல்லது, ஏதாவது ஒன்றிரண்டு விஷயங்களை மட்டும் கற்றுக்கொடுத்துவிட்டு அவர்களைத் திருப்பி அனுப்பியிருக்கலாம். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. அவருக்கு மக்கள்மேல் அன்பு இருந்ததால், “அவர்களுக்கு நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார்,” ‘ரொம்ப நேரம்’ கற்றுக்கொடுத்தார். (மாற். 6:35) மக்களைப் பார்த்து ‘மனம் உருகியதால்’ அப்படிச் செய்தார், வெறும் கடமைக்காக அல்ல. இயேசு அவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று ஆசைப்பட்டதுக்குக் காரணம்: அவர்கள்மேல் இருந்த அன்புதான்! மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போது இயேசுவுக்கு நிறையச் சந்தோஷம் கிடைத்தது.

11. இயேசு எப்படி மக்களின் தேவைகளைக் கவனித்துக்கொண்டார்? (படத்தையும் பாருங்கள்.)

11 மக்களுக்குச் சேவை செய்தபோது, இயேசு அவர்களுடைய தேவைகளையும் கவனித்துக்கொண்டார். வெறுமனே கற்றுக்கொடுப்பதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. அங்கே கூடிவந்திருந்த மக்களுக்கு அவர் அற்புதமாக உணவு கொடுத்தார். அவருடைய சீஷர்களைப் பரிமாறச் சொன்னார். (மாற். 6:41) மற்றவர்களுக்கு எப்படிச் சேவை செய்வது என்பதை இதன்மூலம் சீஷர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். மற்றவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதைக் காட்டினார். இந்த மாதிரியான வேலைகளைத்தான் இன்று உதவி ஊழியர்களும் செய்கிறார்கள். கொஞ்சம் கற்பனை செய்துபாருங்கள்: ‘எல்லாரும் திருப்தியாக சாப்பிட்டு’ முடிக்கும்வரை இயேசுவோடு சேர்ந்து சீஷர்கள் உணவு பரிமாறினார்கள். அது அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! (மாற். 6:42) இந்தச் சந்தர்ப்பத்தில் மட்டுமல்ல, சொல்லப்போனால், பூமியில் வாழ்ந்த காலம் முழுக்க இயேசு மக்களுக்குச் சேவை செய்தார். தன்னைவிட மற்றவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதுதான் அவருக்கு ரொம்ப முக்கியமாக இருந்தது. (மத். 4:23; 8:16) இப்படி, மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுப்பதிலும், அவர்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்வதிலும் இயேசுவுக்குப் பெரிய சந்தோஷமும் திருப்தியும் கிடைத்தது. நீங்களும் ஒரு உதவி ஊழியராகச் சுயநலம் இல்லாமல் மற்றவர்களுக்குச் சேவை செய்யும்போது, அதிக சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்.

உங்களுக்கு யெகோவாமேல் அன்பு இருந்தால்... மற்றவர்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை இருந்தால்... சகோதர சகோதரிகளுக்காக எதையும் செய்வதற்குத் தயாராக இருப்பீர்கள் (பாரா 11) a


12. சபைக்குப் பிரயோஜனமான திறமைகள் நம்மிடம் இல்லை என்று நாம் ஏன் நினைக்கக் கூடாது?

12 உங்களுக்கு எந்தவொரு விசேஷ திறமையும் இல்லை என்று நினைக்கிறீர்களா? சோர்ந்துவிடாதீர்கள்! சபைக்குப் பிரயோஜனமாக இருப்பதற்குத் தேவையான திறமைகள் கண்டிப்பாக உங்களுக்கு இருக்கும். ஜெபம் செய்துவிட்டு, 1 கொரிந்தியர் 12:12-30-ல் பவுல் சொன்ன வார்த்தைகளை யோசித்துப் பாருங்கள். யெகோவாவுடைய ஊழியர்கள் ஒவ்வொருவருமே சபைக்கு ரொம்ப முக்கியமானவர்கள் என்று பவுலுடைய வார்த்தைகள் காட்டுகின்றன. ஒருவேளை, இப்போது உங்களுக்கு உதவி ஊழியராகச் சேவை செய்வதற்கான தகுதிகள் இல்லையென்றால், கவலைப்படாதீர்கள். யெகோவாவுக்குச் சேவை செய்வதற்கும் சகோதர சகோதரிகளுக்கு உதவியாக இருப்பதற்கும் உங்களால் என்ன முடியுமோ அதைச் செய்யுங்கள். மூப்பர்கள் உங்களுடைய திறமைகளை மனதில் வைத்து, உங்களால் செய்ய முடிந்த வேலைகளைக் கொடுப்பார்கள் என்பதில் நம்பிக்கையாக இருங்கள்.—ரோ. 12:4-8.

13. உதவி ஊழியர் ஆவதற்கான தகுதிகளை உங்களால் எட்டிப்பிடிக்க முடியும் என்று ஏன் சொல்லலாம்?

13 இதையும் யோசித்துப் பாருங்கள்: பொதுவாக ஒரு உதவி ஊழியருக்கு இருக்க வேண்டிய தகுதிகளில், நிறைய தகுதிகள் எல்லா கிறிஸ்தவர்களுமே வளர்த்துக்கொள்ள வேண்டியவைதான். யெகோவாவிடம் நெருங்கி வருவது, அவருக்குப் பிடித்த மாதிரி வாழ்வது, மற்றவர்களுக்குச் சந்தோஷமாகக் கொடுப்பது என இவையெல்லாமே கிறிஸ்தவர்கள் எல்லாரும் செய்ய வேண்டியவைதான். அதனால், ஒரு உதவி ஊழியர் ஆவதற்குத் தேவையான நிறைய தகுதிகளை நீங்கள் ஏற்கெனவே வளர்த்திருப்பீர்கள். இருந்தாலும், குறிப்பாக என்னென்ன தகுதிகளை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கும் என்று இப்போது பார்க்கலாம்.

உதவி ஊழியர் ஆவதற்கு எப்படித் தகுதிகளை வளர்த்துக்கொள்ளலாம்?

14. “பொறுப்புடன் நடக்கிறவர்” என்றால் என்ன அர்த்தம்? (1 தீமோத்தேயு 3:8-10, 12)

14 உதவி ஊழியர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டிய சில தகுதிகளைப் பற்றி 1 தீமோத்தேயு 3:8-10, 12 சொல்கிறது. (வாசியுங்கள்.) அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம். ஒரு உதவி ஊழியர், ‘பொறுப்புடன் நடக்கிறவராக’ இருக்க வேண்டும். இந்த வார்த்தைகளை, “மற்றவர்களுடைய மரியாதையைச் சம்பாதிக்கிறவராக,” “கண்ணியமானவராக,” அல்லது “மதிப்புக்குரியவராக” என்றுகூட மொழிபெயர்க்கலாம். அதற்காக, நீங்கள் ஜாலியாகவே இருக்கக் கூடாது என்றோ எப்போதும் சீரியஸாக இருக்க வேண்டும் என்றோ அர்த்தம் கிடையாது. (பிர. 3:1, 4) அதேசமயத்தில், உங்களுக்குக் கொடுக்கப்படுகிற எல்லா வேலைகளையும் பொறுப்போடு செய்து முடிக்கிறவராக இருக்க வேண்டும். நீங்கள் நம்பகமானவர் என்ற பெயர் எடுத்தால், சபையில் இருக்கிறவர்களுடைய மரியாதையை உங்களால் சம்பாதிக்க முடியும்.

15. “இரண்டு விதமாகப் பேசாதவர்,” “அநியாய லாபம் சம்பாதிக்க அலையாதவர்” என்றால் என்ன அர்த்தம்?

15 “இரண்டு விதமாகப் பேசாதவர்” என்றால், நீங்கள் உண்மையானவர், நேர்மையானவர், நம்பகமானவர் என்று அர்த்தம். நீங்கள் வார்த்தை மாற மாட்டீர்கள். வெளிவேஷம் போட்டு மற்றவர்களை ஏமாற்ற மாட்டீர்கள். (நீதி. 3:32) “அநியாய லாபம் சம்பாதிக்க அலையாதவர்” என்றால், நீங்கள் வியாபார விஷயங்களிலும், பண விஷயங்களிலும் நேர்மையாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். சபையில், சகோதர சகோதரிகளிடம் இருக்கிற நட்பைப் பயன்படுத்தி ஆதாயம் தேடாதவராக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

16. (அ) “திராட்சமதுவை அளவுக்கு அதிகமாகக் குடிக்காதவர்” என்றால் என்ன அர்த்தம்? (ஆ) “சுத்த மனசாட்சி” இருக்கிறவர் என்றால் என்ன அர்த்தம்?

16 “திராட்சமதுவை அளவுக்கு அதிகமாகக் குடிக்காதவர்” என்றால் என்ன அர்த்தம்? மதுபானங்களைப் பயன்படுத்தும்போது அளவுக்கு அதிகமாகக் குடிக்காதவர் அல்லது குடிகாரர் என்று பெயர் எடுக்காதவர் என்று அர்த்தம். “சுத்த மனசாட்சி” இருக்கிறவர் என்றால், யெகோவாவுடைய நெறிமுறைகளுக்கு ஏற்ற மாதிரி வாழ்கிறவர் என்று அர்த்தம். நீங்கள் தவறு செய்கிற இயல்புள்ளவராக இருந்தாலும், யெகோவாவோடு நல்ல உறவு இருப்பதால் உங்கள் மனதில் சமாதானம் இருக்கும், மனது குறுகுறுக்காது.

17. ‘தகுதியுள்ளவர்களா என்று . . . சோதிக்கப்படுவது’ என்றால் என்ன அர்த்தம்? (1 தீமோத்தேயு 3:10; படத்தையும் பாருங்கள்.)

17 ‘தகுதியுள்ளவரா என்று . . . சோதிக்கப்பட்டவர்’ என்றால், உங்களுக்குக் கொடுக்கப்பட்ட வேலையை நீங்கள் நல்லபடியாகச் செய்து முடிப்பீர்கள்... மூப்பர்கள் உங்களை நம்பலாம்... என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறீர்கள் என்று அர்த்தம். அதனால், மூப்பர்கள் ஏதாவது ஒரு வேலையை உங்களுக்குக் கொடுத்தால், அவர்களுடைய ஆலோசனைகளைக் கேட்டு கவனமாகச் செய்யுங்கள். அது சம்பந்தமாக அமைப்பு கொடுத்திருக்கும் வழிநடத்துதல்களையும் சரியாகப் பின்பற்றுங்கள். உங்களுக்குக் கொடுக்கப்படும் வேலையை எப்படிச் செய்ய வேண்டும், எப்போது செய்து முடிக்க வேண்டும் என்பதையெல்லாம் நன்றாகத் தெரிந்து வைத்திருங்கள். ஒவ்வொரு வேலையையும் நீங்கள் நன்றாக... ஆர்வமாக... செய்யும்போது, சபையில் இருக்கிற மற்றவர்கள் அதைக் கவனிப்பார்கள். பொறுப்பான ஒரு சகோதரராக நீங்கள் வளர்ந்து வருவதைப் பார்ப்பார்கள். மூப்பர்களே, சபையில் இருக்கிற ஞானஸ்நானம் எடுத்த சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்குத் தயாராக இருங்கள். (1 தீமோத்தேயு 3:10-ஐ வாசியுங்கள்.) உங்கள் சபையில், 10-14 வயதில் அல்லது அதற்கும் குறைவான வயதில், ஞானஸ்நானம் எடுத்த சகோதரர்கள் இருக்கிறார்களா? அவர்களுடைய தனிப்பட்ட பைபிள் படிப்புப் பழக்கம் நன்றாக இருக்கிறதா? கூட்டங்களுக்கு நன்றாகத் தயாரிக்கிறார்களா? தவறாமல் கூட்டங்களில் பதில் சொல்கிறார்களா? ஊழியத்தில் தவறாமல் கலந்துகொள்கிறார்களா? அப்படியென்றால், அவர்களுடைய வயதுக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ற சில பொறுப்புகளைக் கொடுங்கள். இந்த விதத்தில், இளம் சகோதரர்களை ‘தகுதியுள்ளவர்களா’ என்று சோதித்துப் பார்க்க முடியும். அப்படிச் செய்தால், 17 முதல் 19 வயதிலேயே, உதவி ஊழியராக நியமிக்கப்படுவதற்கான தகுதிகளை அவர்கள் வளர்த்துக்கொள்ள முடியும்.

ஞானஸ்நானம் எடுத்த சகோதரர்களுக்குப் பொறுப்புகளைக் கொடுப்பதன் மூலம், அவர்கள் தகுதியுள்ளவர்களா என்று மூப்பர்கள் சோதித்துப் பார்க்கலாம் (பாரா 17)


18. ‘எந்தக் குற்றச்சாட்டும் இல்லாதவர்’ என்றால் என்ன அர்த்தம்?

18 ‘எந்தக் குற்றச்சாட்டும் இல்லாமல்’ இருப்பவர் என்றால், மோசமான ஒரு தவறைச் செய்ததற்கான எந்த நியாயமான குற்றச்சாட்டும் உங்கள்மேல் இல்லை என்று அர்த்தம். கிறிஸ்தவர்கள்மேல் பொய்க் குற்றச்சாட்டுகள் வரலாம் என்பது உண்மைதான். இயேசுமேல்கூட நிறைய பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்கள். தன்னுடைய சீஷர்களுக்கும் அதே நிலைமை வரலாம் என்று இயேசு முன்பே சொன்னார். (யோவா. 15:20) ஆனால், இயேசுவின் நடத்தையைப் போல் உங்களுடைய நடத்தையும் சுத்தமானதாக இருந்தால், சபையில் இருக்கிறவர்களிடம் நல்ல பெயரைச் சம்பாதிப்பீர்கள்.—மத். 11:19.

19. ‘ஒரே மனைவியை உடைய கணவராக’ இருப்பதில் என்ன உட்பட்டிருக்கிறது?

19 ‘ஒரே மனைவியை உடைய கணவராக’ இருக்க வேண்டும். முதல்முதலில் யெகோவா திருமணத்தைச் செய்து வைத்தபோது, ஒரு ஆணும் ஒரு பெண்ணும்தான் திருமண பந்தத்தில் இணைய வேண்டும் என்ற நெறிமுறையை வைத்தார்; நீங்கள் கல்யாணமானவராக இருந்தால் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். (மத். 19:3-9) ஒரு கிறிஸ்தவர், பாலியல் முறைகேட்டில் ஈடுபடவே கூடாது. (எபி. 13:4) அதுமட்டுமல்ல, உங்களுடைய மனைவிக்கு நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும். அதாவது, மற்ற பெண்கள்மேல் கண்வைக்கக் கூடாது; எந்த விதமான தவறான எண்ணத்தோடும் பழகக் கூடாது.—யோபு 31:1.

20. தன்னுடைய குடும்பத்தை ஒருவர் எப்படி “நல்ல விதத்தில்” கவனித்துக்கொள்வார்?

20 “தங்கள் பிள்ளைகளையும், வீட்டாரையும் நல்ல விதத்தில் நடத்துகிறவர்களாக” இருக்க வேண்டும். நீங்கள் ஒரு குடும்பத் தலைவராக இருந்தால், உங்களுக்கு இருக்கிற பொறுப்புகளை முக்கியமானதாக நினைக்க வேண்டும். தவறாமல் குடும்ப வழிபாட்டை நடத்த வேண்டும். குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரோடும் சேர்ந்து, முடிந்தவரை அடிக்கடி ஊழியம் செய்ய வேண்டும். பிள்ளைகள் யெகோவாவிடம் நெருக்கமான பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு உதவி செய்ய வேண்டும். (எபே. 6:4) குடும்பத்தை நன்றாகக் கவனித்துக்கொள்கிற ஒருவர், சபையையும் தன்னால் நன்றாகக் கவனித்துக்கொள்ள முடியும் என்பதைக் காட்டுகிறார்.—1 தீமோத்தேயு 3:5-ஐ ஒப்பிடுங்கள்.

21. நீங்கள் இன்னும் ஒரு உதவி ஊழியர் ஆகவில்லை என்றால் என்ன செய்யலாம்?

21 சகோதரர்களே, நீங்கள் இன்னும் ஒரு உதவி ஊழியராக ஆகவில்லை என்றால் தயவுசெய்து இந்தக் கட்டுரையில் இருக்கிற விஷயங்களை நன்றாக யோசித்துப் பாருங்கள். இதைப் பற்றி ஜெபம் செய்யுங்கள். உதவி ஊழியர்களுக்கு என்னென்ன தகுதிகள் தேவைப்படுகிறது என்பதைப் படியுங்கள். பிறகு, அந்தத் தகுதிகளை எட்டிப்பிடிக்கக் கடினமாக உழையுங்கள். யெகோவாமேலும், சகோதர சகோதரிகள்மேலும் உங்களுக்கு எவ்வளவு அன்பு இருக்கிறது என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுக்குச் சேவை செய்வதற்கான ஆசையை அதிகமாக்குங்கள். (1 பே. 4:8, 10) சகோதர சகோதரிகளுக்குச் சேவை செய்வதால் கிடைக்கிற சந்தோஷத்தை அனுபவியுங்கள். உதவி ஊழியர் ஆவதற்கு நீங்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிக்கட்டும்!—பிலி. 2:13.

பாட்டு 17 ‘நீங்கள் சொன்னதை செய்வேன்!’

a பட விளக்கங்கள்: இயேசு மனத்தாழ்மையோடு மற்றவர்களுக்குச் சேவை செய்கிறார் (இடது படம்); வயதான சகோதரி ஒருவருக்கு உதவி ஊழியர் உதவி செய்கிறார் (வலது படம்).