Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 47

பாட்டு 103 மேய்ப்பர்கள்—கடவுள் தரும் பரிசு

சகோதரர்களே, மூப்பர்களாக ஆவதற்கு முயற்சி எடுக்கிறீர்களா?

சகோதரர்களே, மூப்பர்களாக ஆவதற்கு முயற்சி எடுக்கிறீர்களா?

“கண்காணியாவதற்கு முயற்சி செய்கிற ஒருவர் சிறந்த வேலையை விரும்புகிறார்.”1 தீ. 3:1.

என்ன கற்றுக்கொள்வோம்?

ஒரு சகோதரர் மூப்பராகச் சேவை செய்வதற்குத் தேவைப்படும் சில தகுதிகளைப் பற்றி இந்தக் கட்டுரையில் கற்றுக்கொள்வோம்.

1-2. ஒரு மூப்பர் செய்கிற “சிறந்த வேலை” என்ன?

 நீங்கள் கொஞ்சக் காலமாக உதவி ஊழியராகச் சேவை செய்துவருகிறீர்களா? அப்படியென்றால், ஒரு மூப்பர் ஆவதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ள நீங்கள் உழைத்துக்கொண்டு இருப்பீர்கள். அந்த “சிறந்த வேலையை“ செய்யும் தகுதிகளை உங்களால் எட்டிப்பிடிக்க முடியுமா?—1 தீ. 3:1.

2 ஒரு மூப்பர் என்னென்ன வேலைகளைச் செய்கிறார்? ஊழியம் செய்வதில் ஒரு நல்ல முன்மாதிரி வைக்கிறார். சபையில் இருக்கிறவர்களுக்கு மேய்ப்புச் சந்திப்பு செய்வதற்கும் அவர்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கும் கடினமாக உழைக்கிறார். சகோதர சகோதரிகளுடைய விசுவாசத்தைத் தன்னுடைய சொல்லாலும் செயலாலும் பலப்படுத்துகிறார். அதனால்தான், இப்படிக் கடினமாக உழைக்கிற மூப்பர்களை ‘பரிசுகள்’ என்று பைபிள் சொல்கிறது.—எபே. 4:8.

3. ஒரு சகோதரர் எப்படி மூப்பர் ஆகலாம்? (1 தீமோத்தேயு 3:1-7; தீத்து 1:5-9)

3 நீங்கள் எப்படி ஒரு மூப்பர் ஆகலாம்? மூப்பர் ஆவது என்பது ஒரு வேலையில் சேருவது போல கிடையாது. பொதுவாக, ஒரு வேலையில் சேருவதற்கு அந்த வேலைக்குத் தேவையான திறமைகள் இருந்தாலே போதும், உங்களுக்கு வேலை கிடைத்துவிடும். ஆனால், ஒரு மூப்பராகச் சேவை செய்வதற்கு, வெறுமனே ஊழியம் செய்வதிலும் கற்றுக்கொடுப்பதிலும் திறமைகள் இருந்தால் மட்டும் போதாது. 1 தீமோத்தேயு 3:1-7 மற்றும் தீத்து 1:5-9-ல் சொல்லியிருக்கிற மூப்பர்களுக்கான தகுதிகளை நீங்கள் எட்டிப்பிடிக்க வேண்டும். (வாசியுங்கள்.) இந்தக் கட்டுரையில், மூப்பர்களிடம் எதிர்பார்க்கப்படுகிற மூன்று முக்கியமான விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்: (1) சபைக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல பெயர் சம்பாதிப்பது, (2) ஒரு குடும்பத் தலைவராக நல்ல முன்மாதிரி வைப்பது, (3) மனசார சபைக்குச் சேவை செய்வது.

நல்ல பெயர் எடுங்கள்

4. “குற்றம்சாட்டப்படாதவராக” இருப்பது என்றால் என்ன அர்த்தம்?

4 ஒரு மூப்பராக ஆவதற்கு நீங்கள் “குற்றம்சாட்டப்படாதவராக” இருக்க வேண்டும். அதாவது, சபைக்குள் உங்களுக்கு நல்ல பெயர் இருக்க வேண்டும். உங்களுடைய நடத்தை நாலு பேர் கேள்வி கேட்கிற மாதிரி இருக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, நீங்கள் “வெளியாட்களிடமும் நல்ல பெயர் எடுத்தவராக இருக்க வேண்டும்.” யெகோவாவை வணங்காதவர்கள் நம்முடைய நம்பிக்கைகளை வேண்டுமானால் குறை சொல்லலாம்; ஆனால், நம்முடைய நேர்மையையோ நடத்தையையோ குறை சொல்வதற்கு எந்த நியாயமான காரணமும் இருக்கக் கூடாது. (தானி. 6:4, 5) உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: “சபையிலும் வெளியாட்களிடமும் நான் என்ன பெயர் எடுத்திருக்கிறேன்?”

5. நீங்கள் ‘நல்ல காரியங்களை விரும்புகிறவர்’ என்று எப்படிக் காட்டலாம்?

5 நீங்கள் “நல்ல காரியங்களை விரும்புகிறவராக” இருந்தால், மற்றவர்களிடம் இருக்கிற நல்லதைப் பார்ப்பீர்கள். அவர்களுடைய நல்ல நல்ல குணங்களுக்காக அவர்களைப் பாராட்டுவீர்கள். மற்றவர்களுக்கு நல்லது செய்வதை நினைத்து சந்தோஷப்படுவீர்கள்; உங்களிடம் எதிர்பார்க்கப்படுவதைவிட அதிகமாக செய்வீர்கள். (1 தெ. 2:8) மூப்பர்களுக்கு இந்தக் குணம் ஏன் ரொம்ப முக்கியம்? ஏனென்றால், சபையில் இருக்கிறவர்களுக்கு மேய்ப்புச் சந்திப்பு செய்வதற்கும் மற்ற பொறுப்புகளைச் செய்வதற்கும் மூப்பர்கள் தங்களுடைய பொன்னான நேரத்தைத் தியாகம் செய்ய வேண்டியிருக்கிறது. (1 பே. 5:1-3) ஆனால், நீங்கள் செய்கிற தியாகங்களைவிட உங்களுக்குக் கிடைக்கிற சந்தோஷம் ரொம்ப ரொம்ப அதிகம்!—அப். 20:35.

6. ‘உபசரிக்கும் குணத்தை’ காட்டுவதற்கு ஒருசில வழிகள் என்ன? (எபிரெயர் 13:2, 16; படத்தையும் பாருங்கள்.)

6 நீங்கள் “உபசரிக்கும் குணமுள்ளவராக” இருந்தால், உங்களுடைய நெருங்கிய நட்பு வட்டாரத்தில் இருக்கிறவர்களையும் தாண்டி மற்றவர்களுக்கும் நல்லது செய்வீர்கள். (1 பே. 4:9) உபசரிக்கும் குணம் இருக்கிற ஒருவரைப் பற்றி பைபிள் ஆராய்ச்சிப் புத்தகம் ஒன்று இப்படிச் சொல்கிறது: “அவர் முன்பின் தெரியாதவர்களுக்குத் தன்னுடைய இதயக் கதவையும் வீட்டு வாசல் கதவையும் திறந்து வைத்திருப்பார்.” உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘சபைக்கு வருகிறவர்களை நன்றாக உபசரிக்கிற ஒருவர் என்ற பெயரை நான் சம்பாதித்திருக்கிறேனா?’ (எபிரெயர் 13:2, 16-ஐ வாசியுங்கள்.) உபசரிக்கும் குணம் இருக்கிற ஒரு சகோதரர், தன்னிடம் இருப்பதை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வார். அதாவது, ஏழை எளியவர்களோடும், சபைக்குப் பேச்சுக் கொடுக்க வருகிறவர்களோடும், கடினமாக உழைக்கிற வட்டாரக் கண்காணிகள் போன்றவர்களோடும் பகிர்ந்துகொள்வார்.—ஆதி. 18:2-8; நீதி. 3:27; லூக். 14:13, 14; அப். 16:15; ரோ. 12:13.

உபசரிக்கும் குணம் இருக்கும் ஒரு தம்பதி, ஒரு வட்டாரக் கண்காணியையும் அவருடைய மனைவியையும் அன்பாக வரவேற்கிறார்கள் (பாரா 6)


7. ஒரு மூப்பர் ‘பண ஆசையில்லாதவர்’ என்பதை எப்படிக் காட்டலாம்?

7 ‘பண ஆசையில்லாதவர்’ என்றால், பணம் பொருளைச் சேர்ப்பதுதான் வாழ்க்கையில் முக்கியம் என்று நீங்கள் நினைக்க மாட்டீர்கள். நீங்கள் ஏழையாக இருந்தாலும் பணக்காரராக இருந்தாலும், கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு வாழ்க்கையில் முதலிடம் கொடுப்பீர்கள். (மத். 6:33) உங்களுடைய நேரம், சக்தி மற்ற வளங்கள் எல்லாவற்றையும் யெகோவாவை வணங்குவதற்கு... குடும்பத்தை நன்றாகப் பார்த்துக்கொள்வதற்கு... சபையில் இருக்கிறவர்களுக்குச் சேவை செய்வதற்கு... பயன்படுத்துவீர்கள். (மத். 6:24; 1 யோ. 2:15-17) உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘பணத்தைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன்? இருப்பதே போதும் என்று நினைக்கிறேனா? அல்லது, நிறைய பணத்தையும் சொத்தையும் வாங்கி குவிக்க வேண்டும் என்பதிலேயே குறியாக இருக்கிறேனா?’—1 தீ. 6:6, 17-19.

8. நீங்கள் ‘பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவர்,’ ‘சுயக்கட்டுப்பாடுள்ளவர்’ என்பதைக் காட்டுவதற்கான சில வழிகள் என்ன?

8 “பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாதவராக,” “சுயக்கட்டுப்பாடுள்ளவராக” இருக்கிறீர்கள் என்றால் என்ன அர்த்தம்? வாழ்க்கையில் எல்லா விஷயங்களிலும், அதாவது சாப்பிடுவது, குடிப்பது, உடை உடுத்துவது, தலை வாருவது, பொழுதுபோக்கு என எல்லா விஷயத்திலும் நீங்கள் கட்டுப்பாடோடு இருக்கிறீர்கள், அளவுக்குமீறிப் போக மாட்டீர்கள் என்று அர்த்தம். யெகோவாவை வணங்காதவர்களுடைய வாழ்க்கை முறையை காப்பியடிக்க நினைக்க மாட்டீர்கள். (லூக். 21:34; யாக். 4:4) மற்றவர்கள் உங்களைச் சூடேற்றினாலும், நீங்கள் அமைதியாகவும் நிதானமாகவும் இருப்பீர்கள். நீங்கள் ஒரு “குடிகாரராக” இருக்கக் கூடாது. அதுமட்டுமல்ல, ‘நிறைய குடிக்கிறவர்’ என்ற பெயரையும் நீங்கள் எடுத்திருக்கக் கூடாது. உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘நான் வாழும் விதம், என்னுடைய பழக்கவழக்கங்களில் அளவுக்குமீறி போகாமல், சுயக்கட்டுப்பாடோடு இருக்கிறேன் என்பதைக் காட்டுகிறதா?’

9. ‘தெளிந்த புத்தியுள்ளவர்,’ ‘ஒழுங்குள்ளவர்’ என்றால் என்ன அர்த்தம்?

9 நீங்கள் ‘தெளிந்த புத்தியுள்ளவர்’ என்றால், வாழ்க்கையில் எல்லா சூழ்நிலையிலும் பைபிள் சொல்கிற மாதிரி முடிவுகளை எடுப்பீர்கள். பைபிள் நியமங்களை ஆழமாக யோசித்துப் பார்ப்பதால், ஒரு விஷயத்தைப் பற்றி நன்றாகப் புரிந்து வைத்திருப்பீர்கள், ஞானமாக முடிவெடுப்பீர்கள். கையில் இருக்கிற ஒன்றிரண்டு தகவல்களை வைத்து அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுத்துவிட மாட்டீர்கள்; தேவையான எல்லா தகவல்களும் இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்வீர்கள். (நீதி. 18:13) இப்படியெல்லாம் செய்தால், நீங்கள் எடுக்கிற ஞானமான முடிவுகள் யெகோவா மாதிரியே நீங்கள் யோசிக்கிறீர்கள் என்பதைக் காட்டும். நீங்கள் “ஒழுங்குள்ளவராக” இருந்தால், எல்லா விஷயங்களையும் ஒழுங்கோடு செய்து முடிப்பீர்கள், நேரம் தவறாதவராக இருப்பீர்கள். நம்பகமானவர் என்றும் அமைப்பு கொடுக்கிற எல்லா வழிநடத்துதல்களையும் அப்படியே கடைப்பிடிப்பவர் என்றும் பெயர் எடுத்திருப்பீர்கள். இவ்வளவு நேரம் நாம் பார்த்த இந்தக் குணங்களை எல்லாம் நீங்கள் வளர்த்தால் சபையில் நல்ல பெயரைச் சம்பாதிப்பீர்கள். இப்போது, ஒரு குடும்பத் தலைவராக நல்ல முன்மாதிரி வைப்பதைப் பற்றிப் பார்க்கலாம்.

குடும்பத் தலைவராக நல்ல முன்மாதிரி வையுங்கள்

10. “தன்னுடைய குடும்பத்தைச் சிறந்த விதத்தில் நடத்துகிறவராக” இருப்பதை ஒருவர் எப்படிக் காட்டுவார்?

10 நீங்கள் ஒரு கணவரா? ஒரு மூப்பராக நீங்கள் ஆக வேண்டுமென்றால், உங்கள் குடும்பம் என்ன பெயரைச் சம்பாதித்து இருக்கிறது என்பதும் ரொம்ப முக்கியம். அதனால், உங்களுடைய “குடும்பத்தைச் சிறந்த விதத்தில் நடத்துகிறவராக” நீங்கள் இருக்க வேண்டும். அதாவது, குடும்பத்தை அன்பாகக் கவனித்துக்கொள்கிறவர்... குடும்பத்துக்காக நல்ல நல்ல முடிவுகளை எடுக்கிறவர்... என்று நீங்கள் பெயர் எடுத்திருக்க வேண்டும். அதுமட்டுமல்ல, நீங்கள் தவறாமல் குடும்ப வழிபாடு நடத்துகிறவராக இருக்க வேண்டும். கூட்டங்களிலும் ஊழியத்திலும் கலந்துகொள்வதற்கு, உங்களுடைய குடும்பத்தை நன்றாக வழிநடத்துகிறவராக இருக்க வேண்டும். இதெல்லாம் ஏன் ரொம்ப முக்கியம்? அப்போஸ்தலன் பவுல் இப்படிக் கேட்டார்: “ஒருவருக்குத் தன்னுடைய குடும்பத்தையே நடத்தத் தெரியவில்லை என்றால் கடவுளுடைய சபையை எப்படிக் கவனித்துக்கொள்வார்?”—1 தீ. 3:5.

11-12. ஒரு சகோதரர் மூப்பராகச் சேவை செய்வதற்கு, அவருடைய பிள்ளைகளின் நடத்தை ஏன் ரொம்ப முக்கியம்? (படத்தையும் பாருங்கள்.)

11 நீங்கள் ஒரு அப்பாவா? அப்படியென்றால், மைனராக இருக்கும் உங்களுடைய பிள்ளைகள், ‘நல்ல நடத்தையும் கீழ்ப்படிதலும் உள்ள பிள்ளைகளாக’ இருக்க வேண்டும். அவர்களுக்கு நீங்கள் அன்பாகச் சொல்லிக்கொடுக்க வேண்டும், பயிற்சி கொடுக்க வேண்டும். எல்லா பிள்ளைகளையும் போல் அவர்களும் ஜாலியாக, சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று நீங்கள் ஆசைப்படுவீர்கள். அதில் தவறில்லை. ஆனால், நீங்கள் நன்றாகப் பயிற்சி கொடுத்திருப்பதால், கீழ்ப்படிதலுள்ள... மரியாதையுள்ள... ஒழுங்காக நடந்துகொள்கிற... பிள்ளைகளாக அவர்கள் இருப்பார்கள். அவர்கள் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கும், பைபிள் நியமங்களின்படி வாழ்வதற்கும், ஞானஸ்நானம் எடுக்குமளவுக்கு முன்னேறுவதற்கும் உங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்ய வேண்டும்.

12 “பிள்ளைகள் விசுவாசிகளாகவும், மோசமானவர்கள் என்றோ அடங்காதவர்கள் என்றோ பெயர் எடுக்காதவர்களாகவும் இருக்க வேண்டும்.” ஞானஸ்நானம் எடுத்த அல்லது ஞானஸ்நானத்தை நோக்கி முன்னேறிக்கொண்டு இருக்கும் உங்களுடைய பிள்ளை, படுமோசமான பாவத்தைச் செய்துவிட்டால், ஒரு அப்பாவாக அது உங்களை எப்படிப் பாதிக்கும்? அந்தப் பிள்ளைக்குத் தேவையான பயிற்சியையும் கண்டிப்பையும் நீங்கள் கொடுக்காமல் இருந்திருக்கிறீர்கள் என்றால், மூப்பராகச் சேவை செய்வதற்கான தகுதியை நீங்கள் ஒருவேளை இழந்துவிடலாம்.—அக்டோபர் 15, 1996 காவற்கோபுரத்தில் பக்கம் 21-ல் பாராக்கள் 6-7-ஐ பாருங்கள்.

யெகோவாவுக்கும் சபைக்கும் சேவை செய்ய குடும்பத் தலைவர்கள் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுக்கிறார்கள் (பாரா 11)


சபைக்குச் சேவை செய்யுங்கள்

13. நீங்கள் ‘நியாயமானவர்,’ ‘தன்னுடைய இஷ்டப்படி நடக்காதவர்’ என்று எப்படிக் காட்டலாம்?

13 நல்ல கிறிஸ்தவ குணங்களைக் காட்டுகிற சகோதரர்கள் சபைக்கு ஒரு சொத்து! “நியாயமானவராக” நடந்துகொள்கிற ஒருவர் மற்றவர்களோடு சமாதானமாக இருப்பதற்குக் கடினமாக உழைப்பார். ஒருவருக்கு ஒருவர் சமாதானமாக இருப்பதற்கும் உதவுவார். நீங்கள் நியாயமானவராக இருக்க வேண்டும் என்று நினைத்தால், மற்றவர்கள் சொல்வதைக் காதுகொடுத்து கேளுங்கள், அவர்களுடைய கருத்துகளையும் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள். உதாரணத்துக்கு, நீங்கள் மூப்பர் ஆகிவிட்டதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். மூப்பர்களுடைய கூட்டத்தில், பெரும்பாலான மூப்பர்கள் ஒரு முடிவை எடுக்க விரும்புகிறார்கள். அது பைபிள் நியமத்துக்கும் எதிராக இல்லை. ஆனால், உங்களுக்கு அதில் விருப்பம் இல்லை. இருந்தாலும், அந்த முடிவுக்கு நீங்கள் ஆதரவு கொடுப்பீர்களா? ‘தன்னுடைய இஷ்டப்படி நடக்காதவர்’ என்றால், நீங்கள் நினைத்தபடிதான் எல்லாமே நடக்க வேண்டும் என்று அடம்பிடிக்காதவராக இருப்பீர்கள். நிறைய ஆலோசனைக்காரர்கள் இருப்பதில் பயன் இருக்கிறது என்பதைப் புரிந்துவைத்திருப்பீர்கள். (ஆதி. 13:8, 9; நீதி. 15:22) ‘தகராறு செய்கிறவராகவோ’ “முன்கோபக்காரராகவோ” நீங்கள் இருக்க மாட்டீர்கள். அதற்கு என்ன அர்த்தம்? மற்றவர்களிடம் மரியாதை இல்லாமல் நடந்துகொள்ள மாட்டீர்கள் அல்லது அவர்களோடு வாக்குவாதம் பண்ண மாட்டீர்கள். அதற்குப் பதிலாக, அவர்களிடம் அன்பாக நடந்துகொள்வீர்கள். நீங்கள் சமாதானம் பண்ணுகிறவராக இருப்பீர்கள். இறுக்கமான சூழ்நிலையில்கூட சமாதானத்தை உண்டுபண்ணுவதற்கு நீங்களே முதல்படி எடுப்பீர்கள். (யாக். 3:17, 18) உங்களுடைய அன்பான வார்த்தைகள் உங்களை எதிர்க்கிறவர்கள் உட்பட எல்லாருடைய மனதையும் இளக வைக்கும்.—நியா. 8:1-3; நீதி. 20:3; 25:15; மத். 5:23, 24.

14. “சமீபத்தில் கிறிஸ்தவரானவராக இருக்கக் கூடாது,” “உண்மையுள்ளவராக” இருக்க வேண்டும் என்பதற்கு என்ன அர்த்தம்?

14 மூப்பராக ஆவதற்கு ஒருவர்“சமீபத்தில் கிறிஸ்தவரானவராக இருக்கக் கூடாது.” அதற்காக, நீங்கள் ஞானஸ்நானம் எடுத்து ரொம்ப வருஷங்கள் ஆகியிருக்க வேண்டும் என்று அவசியமில்லை. இருந்தாலும், யெகோவாவோடு உங்களுக்கு இருக்கிற பந்தம் பலமாவதற்கும் பைபிளைப் பயன்படுத்தி ஞானமான முடிவுகளை எடுக்கப் பழகுவதற்கும் காலம் எடுக்கும். நீங்கள் ஒரு மூப்பராக நியமிக்கப்படுவதற்கு முன்பே இயேசு மாதிரி மனத்தாழ்மையாக இருப்பதைக் காட்ட வேண்டும். சபையில் உங்களுக்குப் பொறுப்புகள் கொடுக்கப்படும்வரை யெகோவாவுக்காகப் பொறுமையோடு காத்திருப்பதையும் நிரூபித்துக் காட்ட வேண்டும். (மத். 20:23; பிலி. 2:5-8) நீங்கள் “உண்மையுள்ளவராக” இருக்க வேண்டும். அதாவது, யெகோவாவுக்கு உண்மையாக இருக்க வேண்டும்; அவருடைய நீதியான நெறிமுறைகளின்படி வாழ வேண்டும். அதுமட்டுமல்ல, யெகோவாவுடைய அமைப்பு மூலமாகக் கொடுக்கப்படுகிற வழிநடத்துதல்களுக்கும் உண்மையோடு கீழ்ப்படிய வேண்டும்.—1 தீ. 4:15.

15. மூப்பர் ஆவதற்கு ஒரு சகோதரர் சிறந்த பேச்சாளராக இருக்க வேண்டுமா? விளக்குங்கள்.

15 கண்காணியாக இருக்கிற ஒருவர் “கற்றுக்கொடுக்கத் தகுதியுள்ளவராகவும் இருக்க வேண்டும்” என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. அப்படியென்றால், அவர் சிறந்த பேச்சாளராக இருக்க வேண்டும் என்று அர்த்தமா? இல்லை. இன்று நிறைய மூப்பர்கள் சிறந்த பேச்சாளர்களாக இல்லை என்றாலும், ஊழியம் செய்யும்போதும் மேய்ப்பு சந்திப்புகள் செய்யும்போதும் பைபிளிலிருந்து திறமையாகச் சொல்லிக்கொடுக்கிறார்கள். (1 கொரிந்தியர் 12:28, 29-ஐயும் எபேசியர் 4:11-ஐயும் ஒப்பிடுங்கள்.) நீங்கள் சிறந்த பேச்சாளராக இல்லாவிட்டாலும், அப்படி ஆவதற்குத் தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும். அதற்கு நீங்கள் என்ன செய்யலாம்?

16. மற்றவர்களுக்குத் திறமையாக சொல்லிக்கொடுப்பதில் நீங்கள் எப்படி முன்னேறலாம்? (படத்தையும் பாருங்கள்.)

16 “சத்திய வார்த்தையை உறுதியோடு பிடித்துக்கொண்டிருக்கிறவராகவும் இருக்க வேண்டும்.” நீங்கள் மேடையிலிருந்து கற்றுக்கொடுத்தாலும் சரி, மற்றவர்களுக்குத் தனிப்பட்ட விதமாக ஆலோசனை கொடுத்தாலும் சரி, எப்போதும் கடவுளுடைய வார்த்தையின் அடிப்படையில் சொல்லிக்கொடுங்கள். அப்போதுதான் நீங்கள் திறமையாகக் கற்றுக்கொடுக்கிற ஒருவராக ஆக முடியும். பைபிளையும் அமைப்பு வெளியிட்டிருக்கும் பிரசுரங்களையும் நன்றாகப் படியுங்கள். (நீதி. 15:28; 16:23) ஒரு வசனத்துக்கு நம்முடைய பிரசுரங்களில் என்ன விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதை நன்றாகத் தெரிந்துவைத்துக்கொள்ளுங்கள்; அப்போதுதான் அதைச் சரியாகப் பொருத்திக் காட்ட முடியும். கற்றுக்கொடுக்கும்போது மற்றவர்களுடைய இதயத்தைத் தொடுவதற்குக் கடினமாக முயற்சி செய்யுங்கள். நீங்கள் எப்படி முன்னேறலாம் என்று அனுபவமுள்ள மூப்பர்களிடம் ஆலோசனை கேளுங்கள்; அதன்படி செய்யுங்கள். (1 தீ. 5:17) மூப்பர்கள் “மற்றவர்களை உற்சாகப்படுத்த” வேண்டும். சிலசமயத்தில், மற்றவர்களுக்கு ஆலோசனை கொடுக்க அல்லது அவர்களை “கண்டிக்க” வேண்டியிருக்கும். எதுவாக இருந்தாலும், எப்போதுமே அன்பாக நடந்துகொள்ளுங்கள். மென்மையாகவும் அன்பாகவும் கடவுளுடைய வார்த்தையிலிருந்து சொல்லிக்கொடுத்தால், நீங்கள் சிறந்த விதத்தில் கற்றுக்கொடுக்கிறவராக ஆக முடியும். பெரிய போதகரான இயேசுவைப் பின்பற்ற முடியும்.—மத். 11:28-30; 2 தீ. 2:24.

முதிர்ச்சியுள்ள ஒரு மூப்பரோடு சேவை செய்யும்போது பைபிளைப் பயன்படுத்தி கற்றுக்கொடுக்க ஒரு உதவி ஊழியர் கற்றுக்கொள்கிறார். தான் கொடுக்கப்போகும் பேச்சைக் கண்ணாடி முன்பு நின்று பேசிப் பழகுகிறார் (பாரா 16)


தொடர்ந்து முயற்சி எடுங்கள்

17. (அ) தொடர்ந்து முயற்சி எடுப்பதற்கு உதவி ஊழியர்கள் எந்த விஷயத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளலாம்? (ஆ) ஒரு சகோதரருடைய தகுதிகளைப் பரிசீலனை செய்யும்போது மூப்பர்கள் எதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்? (“ மற்றவர்களுடைய தகுதிகளைப் பரிசீலனை செய்யும்போது அடக்கத்தோடு நடந்துகொள்ளுங்கள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

17 ஒரு மூப்பராக ஆவதற்கு என்னென்ன தகுதிகள் தேவைப்படுகிறது என்பதை இவ்வளவு நேரம் பார்த்தோம். இதையெல்லாம் பார்த்த பிறகு, ‘இவ்வளவு தகுதிகள் இருக்கிறதா? என்னால் எல்லாம் ஒரு மூப்பர் ஆக முடியாது’ என்று சில உதவி ஊழியர்கள் நினைக்கலாம். ஆனால், இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: யெகோவாவும் சரி அவருடைய அமைப்பும் சரி, இந்த எல்லா குணங்களையும் நீங்கள் நூற்றுக்கு நூறு அப்படியே காட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பது இல்லை. (1 பே. 2:21) யெகோவாவுடைய சக்தி சக்திவாய்ந்தது! இந்தக் குணங்களை நீங்கள் வளர்த்துக்கொள்வதற்கு அது உங்களுக்கு உதவும். (பிலி. 2:13) நீங்கள் ஏதாவது ஒரு குறிப்பிட்ட குணத்தை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால், அதைப் பற்றி யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். நன்றாக ஆராய்ச்சி செய்துபாருங்கள். நீங்கள் எப்படி முன்னேறலாம் என்று ஒரு மூப்பரிடம் ஆலோசனை கேளுங்கள்.

18. எல்லா உதவி ஊழியர்களும் என்ன செய்வது நல்லது?

18 சகோதரர்களே, ஏற்கெனவே மூப்பர்களாகச் சேவை செய்கிறவர்கள் உட்பட நாம் எல்லாருமே, இந்தக் கட்டுரையில் பார்த்த குணங்களைத் தொடர்ந்து வளர்க்க முயற்சி செய்யலாம். (பிலி. 3:16) நீங்கள் ஒரு உதவி ஊழியரா? அப்படியென்றால், இந்தத் தகுதிகளை வளர்த்துக்கொள்வதற்குத் தொடர்ந்து முயற்சி எடுங்கள். உங்களுக்குப் பயிற்சி கொடுப்பதற்கும் உங்களை வடிவமைப்பதற்கும் யெகோவாவிடம் உதவி கேளுங்கள். இப்படிச் செய்யும்போது, நீங்கள் யெகோவாவுக்கும் சபைக்கும் இன்னும் பிரயோஜனமாக இருக்க முடியும். (ஏசா. 64:8) ஒரு மூப்பராக ஆவதற்கு நீங்கள் எடுக்கிற முயற்சிகளை யெகோவா ஆசீர்வதிப்பார்!

பாட்டு 101 ஒற்றுமையாக உழைப்போம்