Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

யெகோவா எங்களைப் பலப்படுத்தினார்—போர் காலத்திலும் சமாதான காலத்திலும்

யெகோவா எங்களைப் பலப்படுத்தினார்—போர் காலத்திலும் சமாதான காலத்திலும்

பால்: அது நவம்பர் 1985. நாங்கள் ரொம்ப உற்சாகமாக இருந்தோம். எங்களுடைய முதல் மிஷனரி நியமிப்புக்காக மேற்கு ஆப்பிரிக்காவிலிருந்த லைபீரியாவுக்குப் போய்க்கொண்டிருந்தோம். செனிகல் என்ற இடத்தில் விமானம் நின்றது. “இன்னும் ஒரு மணிநேரத்தில் நாம் லைபீரியாவில் இருப்போம்!” என்று சந்தோஷமாக சொன்னாள் என் மனைவி ஆன்னி. ஆனால் திடீரென்று, “லைபீரியாவுக்குப் போகிற பயணிகள் இங்கேயே இறங்கிவிடுங்கள். ஆட்சியைக் கவிழ்க்க கலவரம் நடப்பதால் அங்கே விமானம் தரை இறங்காது” என்ற அறிவிப்பு செய்யப்பட்டது. அடுத்த 10 நாட்கள், செனிகலில் இருந்த மிஷனரிகளுடன்தான் தங்கினோம். லைபீரியாவில் ஊரடங்கு உத்தரவு பற்றியும் வண்டி வண்டியாக பிணங்களை எடுத்துக்கொண்டு போவதைப் பற்றியும் செய்திகளில் கேட்டோம். ஊரடங்கை மீறுகிறவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.

ஆன்னி: நாங்கள் சாகசப் பிரியர்கள் கிடையாது. நான் சின்ன வயதிலிருந்தே எல்லாவற்றுக்கும் பயப்படுவேன். ‘பயந்தாங்கொள்ளி ஆன்னி’ என்றே எனக்கு பட்டம்கட்டிவிட்டார்கள். சாலையைக் கடக்கவே எனக்குக் கை கால் உதறும்! ஆனாலும், லைபீரியாவுக்குப் போக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

பால்: ஆன்னியும் நானும் மேற்கு இங்கிலாந்தில் ஒரே ஊரில்தான் வளர்ந்தோம். இரண்டு பேருமே ஸ்கூல் முடித்தப் பிறகு, பயனியர் செய்ய ஆரம்பித்தோம். என் அப்பா அம்மாவும், ஆன்னியின் அம்மாவும் எங்களை உற்சாகப்படுத்தினார்கள். முழுநேர சேவை செய்ய வேண்டும் என்ற எங்கள் முடிவுக்கு ஆதரவாக இருந்தார்கள். நான் 19 வயதில் பெத்தேலுக்குப் போனேன். 1982-ல் எங்கள் கல்யாணத்துக்குப் பிறகு ஆன்னியும் பெத்தேலுக்கு வந்தாள்.

கிலியட்டில் பட்டம் பெற்றபோது, செப்டம்பர் 8, 1985

ஆன்னி: பெத்தேல் சேவை எங்களுக்குப் பிடித்திருந்தது. ஆனால் தேவை அதிகம் இருக்கிற ஒரு நாட்டில் ஊழியம் செய்ய வேண்டும் என்பதும் எங்கள் ஆசை. முன்பு மிஷனரிகளாக இருந்தவர்களோடு பெத்தேலில் சேவை செய்ததால், இந்த ஆசை இன்னும் அதிகமானது. அதைப் பற்றி ஒவ்வொரு ராத்திரியும் ஜெபம் பண்ணினோம். மூன்று வருஷம் ஜெபம் பண்ணினோம்! பிறகு, 1985-ல் 79-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்தது! எங்களுக்கு ஒரே சந்தோஷம்! மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கிற லைபீரியாவுக்கு நியமிக்கப்பட்டோம்.

சகோதர சகோதரிகளுடைய அன்பு பலம் கொடுத்தது

பால்: லைபீரியாவுக்குள் செல்ல அனுமதிக்கப்பட்ட முதல் விமானத்திலேயே ஏறிவிட்டோம். அங்கே நிலைமை பதட்டமாகத்தான் இருந்தது. ஊரடங்கு உத்தரவும் அமலில் இருந்தது. காரிலிருந்து சின்ன சத்தம் கேட்டால்கூட மக்கள் எல்லாரும் அலறியடித்துக்கொண்டு ஓடுவார்கள். எல்லாரையும் பயம் கவ்வியிருந்தது! நாங்கள் பயப்படாமல், நிதானமாக இருக்க தினமும் ராத்திரி சங்கீதத்திலிருந்து சில வசனங்களைப் படிப்போம். சூழ்நிலை பயங்கரமாக இருந்தாலும், எங்கள் நியமிப்பு எங்களுக்கு ரொம்பப் பிடித்திருந்தது. ஆன்னி தினமும் ஊழியத்துக்குப் போய்விடுவாள். நான் பெத்தேலில் சகோதரர் ஜான் ஷெருக்குடன் a வேலை செய்தேன். அவர் ரொம்ப நாள் லைபீரியாவில் இருந்ததால், சகோதர சகோதரிகளைப் பற்றியும் அவர்கள் அனுபவித்த கஷ்டங்களைப் பற்றியும் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தார். அவரிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டேன்.

ஆன்னி: எங்கள் நியமிப்பை நாங்கள் நேசித்ததற்குக் காரணம், அங்கிருந்த சகோதர சகோதரிகள்தான். அவர்கள் எங்கள்மேல் அன்பைப் பொழிந்தார்கள்; யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள். ஒரே குடும்பம் மாதிரி ஆகிவிட்டோம். அவர்கள் கொடுத்த சில ஆலோசனைகள் எங்களுக்கு உதவியாக இருந்தது, எங்களை உற்சாகப்படுத்தியது. அந்த நாடு, ஊழியத்துக்கு ஒரு சொர்க்க பூமி. ஒரு வீட்டில் பேசிவிட்டு சீக்கிரம் கிளம்பினால்தான் மக்கள் சங்கடப்படுவார்கள். சாதாரணமாகவே மக்கள் தெருக்களில் நின்று பைபிளைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பார்கள். நாமும் அவர்களோடு சேர்ந்து சகஜமாக பைபிளைப் பற்றிப் பேசலாம். எங்களுக்கு ஏகப்பட்ட பைபிள் படிப்புகள் கிடைத்தன. நடத்தத்தான் நேரமே பத்தவில்லை. இது ஒரு விதத்தில் சுகமான சுமைதான்!

பயங்கள் மத்தியிலும் பலம் கிடைத்தது

லைபீரியா பெத்தேலில் அகதிகளின் தேவைகளைக் கவனித்துக்கொண்டபோது, 1990

பால்: நான்கு வருஷங்கள் ஓரளவு அமைதி இருந்தது. ஆனால், 1989-ல் சூழ்நிலை திடீரென்று மாறியது, உள்நாட்டுப் போர் வெடித்தது! ஜூலை 2, 1990-ல் போராட்டக் கும்பல் பெத்தேலைச் சுற்றியிருந்த பகுதியைக் கைப்பற்றியது. மூன்று மாதத்துக்கு எங்களுக்கு வெளி உலகத்தோடு தொடர்பே இல்லாமல் போனது. குடும்பத்திடமும் உலகத் தலைமை அலுவலகத்திடமும் தொடர்பு துண்டிக்கப்பட்டது. எங்கே பார்த்தாலும் வன்முறை, கூச்சல், குழப்பம். சாப்பாடு கிடைக்கவில்லை. பெண்கள் கற்பழிக்கப்பட்டார்கள். 14 வருஷங்களுக்கு நிலைமை இப்படியேதான் இருந்தது. நாடே தலைகீழானது.

ஆன்னி: சில இனத்தைச் சேர்ந்தவர்கள் மற்ற இனத்தைச் சேர்ந்தவர்களோடு சண்டை போட்டார்கள், மக்களைக் கொன்று குவித்தார்கள். தெருக்களில் எங்கே பார்த்தாலும் ஆயுதம் ஏந்திய ஆட்கள்தான் கண்ணில் பட்டார்கள். வினோதமான உடைகளைப் போட்டுக்கொண்டு சுற்றித் திரிந்தார்கள். ஒவ்வொரு வீட்டையும் சூறையாடினார்கள். மனிதர்களை வெட்டிக் கொல்வதை கோழிகளை வெட்டுவதுபோல் நினைத்தார்கள். சோதனைச் சாவடிகளில் பிணக் குவியல்கள் இருந்தன. கிளை அலுவலகத்துக்குப் பக்கத்தில்கூட பிணங்கள் கிடந்தன. யெகோவாவின் சாட்சிகள் சிலரும் கொல்லப்பட்டார்கள். இரண்டு மிஷனரிகளும் கொல்லப்பட்டார்கள்.

உயிரைப் பணயம்வைத்து, தாக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்த சாட்சிகளை சகோதர சகோதரிகள் ஒளித்து வைத்தார்கள். மிஷனரிகளும் பெத்தேல் ஊழியர்களும்கூட அப்படிச் செய்தார்கள். உயிர்தப்பி ஓடிவந்த சகோதர சகோதரிகள் பெத்தேலின் கீழ்த்தளத்தில் தங்கவைக்கப்பட்டார்கள். ஒருசிலர் எங்களோடு மேல்தளத்தில் ரூமில் இருந்தார்கள். எங்கள் ரூமில் ஏழு பேரைத் தங்கவைத்தோம்.

பால்: யாரையாவது ஒளித்து வைத்திருக்கிறோமா என்று பார்ப்பதற்காக, ஒவ்வொரு நாளும் போராட்டக்காரர்கள் பெத்தேலுக்குள் நுழைய முயற்சி பண்ணினார்கள். பாதுகாப்புக்காக பெத்தேலில் நான்கு பேரை வைத்திருந்தோம். இரண்டு பேர் வெளியே இருந்த வாசல் கதவுக்குப் போய் போராட்டக்காரர்களோடு பேசுவார்கள். இரண்டு பேர் ஜன்னல் வழியாக அதைப் பார்த்துக்கொண்டிருப்பார்கள். கதவுக்குப் பக்கத்திலிருந்த அந்த இரண்டு பேர், கைகளை தங்கள் முன்னால் வைத்தபடி நின்றுகொண்டிருந்தால், எந்தப் பிரச்சினையும் இல்லை என்று அர்த்தம். கையைப் பின்னால் வைத்திருந்தால் அந்தப் போராட்டக்காரர்கள் வெறித்தனமாக நடந்துகொள்கிறார்கள் என்று அர்த்தம். ஜன்னல் பக்கத்தில் நின்றவர்கள் இதைப் பார்த்ததும் சகோதர சகோதரிகளை ஓடி ஒளிந்துகொள்ளச் சொல்வார்கள்.

ஆன்னி: ஒருநாள், வெறிபிடித்த கும்பல் ஒன்று பெத்தேலுக்குள் வந்துவிட்டது. நானும் ஒரு சகோதரியும் குளியலறையில் ஒளிந்துகொண்டோம். அங்கே ஒரு அலமாரி இருந்தது. அதற்குள்ளே ஒளிந்துகொள்ள ஒரு சின்ன இடம் இருந்தது. அந்தச் சகோதரி, அதில் கஷ்டப்பட்டு ஒளிந்துகொண்டார். அதற்குள் அந்தப் போராட்டக்காரர்கள் மேல்தளத்துக்கு வந்துவிட்டார்கள். கையில் துப்பாக்கிகளை வைத்திருந்தார்கள். குளியலறையின் கதவைப் படபடவென்று தட்டினார்கள். பால் அவர்களிடம், “என் மனைவி பாத்ரூமில் இருக்கிறாள்” என்று சொல்லி அவர்களை உள்ளே வரவிடாமல் இருக்கக் கெஞ்சினார். அந்தச் சகோதரி ஒளிந்துகொண்டிருந்த இடத்தை மூடி வைக்கும்போது சத்தம் வந்துவிட்டது. பிறகு, ஷெல்ஃபில் இருந்த பொருள்களை மறுபடியும் அடுக்க லேட் ஆகிவிட்டது. அவர்களுக்குச் சந்தேகம் வந்துவிடுமோ என்று பயந்தேன். பயத்தில் உச்சியிலிருந்து உள்ளங்கால் வரை உதறல் எடுத்தது. யெகோவாவிடம் மனதுக்குள் ஜெபம் பண்ணினேன். உதவிக்காகக் கெஞ்சினேன். பிறகு, கதவைத் திறந்தேன். ஒன்றுமே நடக்காத மாதிரி, நிதானமாக, “என்ன ஆச்சு?” என்று கேட்டேன். கும்பலில் இருந்த ஒருவன் என்னைத் தள்ளிவிட்டு குளியலறைக்குள் வந்தான். நேராக அந்த அலமாரியிடம் போனான். அதைத் திறந்தான். ஷெல்ஃபில் இருந்த எல்லாவற்றையும் எடுத்துப் போட்டுத் தேடினான். எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை. அவனும் அந்தக் கும்பலில் இருந்தவர்களும் மற்ற அறைகளிலும் தேடினார்கள். மாடி அறையிலும் தேடினார்கள். ஆனால் அவர்களால் எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.

இருளைத் தாண்டி சத்தியம் பிரகாசித்தது

பால்: பல மாதங்களுக்கு, எங்களிடம் உணவு ரொம்பக் குறைவாக இருந்தது. ஆன்மீக உணவுதான் தொடர்ந்து உயிர் வாழ வைத்தது. பெத்தேல் காலை வழிபாடு நிகழ்ச்சிதான் எங்களுடைய “காலை உணவு.” அதிலிருந்து கிடைத்த பலம் ஒவ்வொரு நாளையும் ஓட்ட உதவியது.

சாப்பாடும் தண்ணீரும் காலியாகியிருந்தால், அதைத் தேடி நாங்கள் வெளியே போக வேண்டிய நிலைமை வந்திருக்கும். அப்படிப் போயிருந்தால், உள்ளே ஒளிந்திருந்த சகோதர சகோதரிகள் கொல்லப்பட்டிருப்பார்கள். ஆனால், எங்களுக்குத் தேவையானதையெல்லாம் யெகோவா சரியான நேரத்தில் கொடுத்தார். அது பெரிய அற்புதம்! அவர் எங்களை நன்றாகப் பார்த்துக்கொண்டார்; பயப்படாமல் நிதானமாக இருக்க உதவினார்.

உலகை இருள் போர்த்திய சமயத்தில், சத்திய ஒளி பிரகாசமாக வீசியது. உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அடிக்கடி தப்பித்து ஓட வேண்டியிருந்தாலும், சகோதர சகோதரிகளுடைய விசுவாசம் குறையவே இல்லை. இந்தப் போர், “மிகுந்த உபத்திரவத்துக்கு ஒரு பயிற்சி” என்று சிலர் சொன்னார்கள். தைரியமாக இருந்த மூப்பர்களும், இளம் சகோதரர்களும் முன்நின்று மற்றவர்களை வழிநடத்தினார்கள். தப்பித்துப் போனபோது எல்லா சகோதர சகோதரிகளும் ஒன்றாக இருந்தார்கள். போன இடமெல்லாம் பிரசங்கித்தார்கள். காடுகளில் கிடைத்த பொருள்களை வைத்து தற்காலிக ராஜ்ய மன்றத்தை அமைத்து, கூட்டங்களை நடத்தினார்கள். கலவர பூமியில் கூட்டங்கள்தான் ஆறுதல் தரும் பூஞ்சோலையாக இருந்தது. பிரசங்க வேலையும் இந்தக் கஷ்டங்களைச் சமாளிக்க உதவியது. நிவாரணப் பொருள்களைக் கொடுக்கப் போனபோது, துணிமணிகளை கேட்பதற்குப் பதிலாக, ஊழியம் செய்ய பைகளைச் சகோதரர்கள் கேட்டார்கள். அதைப் பார்த்து எங்கள் மனம் மெழுகாய் உருகியது! பயத்திலும் வேதனையிலும் மூழ்கிப்போயிருந்த மக்கள் நல்ல செய்தியை ஆர்வமாகக் கேட்டார்கள். சாட்சிகள் எவ்வளவு சந்தோஷமாக, நம்பிக்கையாக இருக்கிறார்கள் என்பதைப் பார்த்து அவர்கள் அசந்துபோனார்கள். இருண்ட வானில் சாட்சிகள் ஒளியாகப் பிரகாசித்தார்கள். (மத். 5:14-16) சகோதரர்களுடைய ஆர்வத்தைப் பார்த்து போராட்டக்காரர்களில் சிலர்கூட சாட்சிகளாக மாறினார்கள்.

பிரிவுகளைத் தாங்க பலம் கிடைத்தது

பால்: சிலசமயங்களில் நாங்கள் லைபீரியாவை விட்டு வெளியே போக வேண்டியிருந்தது. மூன்று முறை, போன கொஞ்ச நாளிலேயே திரும்பி வந்துவிட்டோம். ஆனால் இரண்டு முறை, கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு, நாட்டை விட்டு வெளியே இருக்க வேண்டியிருந்தது. எங்கள் உணர்ச்சிகளை ஒரு மிஷனரி சகோதரி இப்படிச் சொன்னார்: “நியமிப்பில் எங்களையே முழுமையாகக் கொடுக்கச் சொல்லி கிலியட் பள்ளியில் கற்றுக்கொண்டோம். அப்படித்தான் செய்தோம். அதனால், இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், சகோதரர்களை விட்டுவிட்டு வருவது எங்கள் உயிரையே விட்டுவிட்டு வருவது போல் இருந்தது!” லைபீரியாவில் நடந்த ஊழிய வேலைக்கு, பக்கத்து நாடுகளில் தங்கியிருந்து எங்களால் உதவ முடிந்தது. அது கொஞ்சம் திருப்தியாக இருந்தது.

லைபீரியாவுக்கு சந்தோஷமாக திரும்பி வந்தோம், 1997

ஆன்னி: மே 1996-ல், அமைப்பின் காரில், 16 கிலோமீட்டர் தள்ளியிருந்த ஒரு பாதுகாப்பான ஊருக்கு நாங்கள் நான்கு பேர் கிளம்பினோம். காரில், அமைப்பின் முக்கிய ஆவணங்கள் இருந்தன. நாங்கள் கிளம்பிய சமயத்தில், வெறிபிடித்த போராட்டக்காரர்கள் அந்த இடத்தில் தாக்குதல் நடத்தினார்கள். வானத்தைப் பார்த்துச் சுட்டார்கள். எங்கள் வண்டியை நிறுத்தினார்கள். மூன்று பேரை காரிலிருந்து வெளியே இழுத்துப் போட்டுவிட்டு, வண்டியை ஓட்டிக்கொண்டு போய்விட்டார்கள். அந்த வண்டியில்தான் பால் இருந்தார். நாங்கள் செய்வதறியாமல் உறைந்துபோனோம். ஆனால் திடீரென்று கூட்டத்துக்கு நடுவிலிருந்து பால் எங்களை நோக்கி நடந்து வந்தார். அவருடைய தலையில் இரத்தம் வழிந்தது. சுட்டுவிட்டார்களோ என்று நினைத்தோம். ஆனால் சுட்டிருந்தால் எப்படி நடந்து வருவார் என்று பிறகுதான் தோன்றியது! அந்தக் கும்பலில் இருந்த ஒருவன் பாலை அடித்து, வண்டியிலிருந்து வெளியே தள்ளிவிட்டிருக்கிறான். நல்லவேளை, காயம் சின்னதுதான்.

பக்கத்தில் ஒரு ராணுவ வண்டி இருந்தது. அதற்குள் மக்கள் கூட்டம் பிதுங்கியது. எல்லார் முகத்திலும் பயத்தின் ரேகை தெரிந்தது. நாங்கள் அந்த வண்டியின் வெளியே, விரல்நுனியால் பிடித்துக்கொண்டு, ஓரத்தில் தொங்கிக்கொண்டு வந்தோம். வண்டி பயங்கர வேகத்தில் பறந்தது. கை நழுவி விழுந்து விடுவோமோ என்று பயந்தோம். வண்டியை நிறுத்தச் சொல்லி டிரைவரிடம் கெஞ்சினோம். அவரும் பீதியில் இருந்ததால் நாங்கள் கத்தியதை எல்லாம் அவர் காதில் வாங்கவே இல்லை. எப்படியோ பத்திரமாகப் போய் சேர்ந்தோம். ஆனால், வண்டியை விட்டு இறங்கும்போது, கை கால் நரம்பெல்லாம் நடுங்கியது. தொங்கிக்கொண்டே வந்ததால் களைத்துப்போனோம்.

பால்: எங்களிடம் எதுவுமே இல்லை. உடையும் கிழிந்துபோய் அழுக்காக இருந்தது. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்து, ‘பரவாயில்லை, நாம் இன்னும் உயிரோடு இருக்கிறோமே!’ என்று சந்தோஷப்பட்டோம். ராத்திரி, திறந்தவெளியில்தான் தூங்கினோம். துப்பாக்கி குண்டுகளால் துளைக்கப்பட்ட ஒரு ஹெலிகாப்டர் பக்கத்தில் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் உடைந்து விடும் நிலையில் இருந்தது. அதில்தான் அடுத்த நாள் சியர்ரா லியோனுக்குப் போனோம். எப்படியோ உயிரோடு வந்து சேர்ந்துவிட்டோம். ஆனால், லைபீரியாவில் இருந்த சகோதர சகோதரிகளை நினைத்தபோது, துக்கம் தொண்டையை அடைத்தது.

எதிர்பார்க்காத சவாலை சமாளிக்க பலம் கிடைத்தது

ஆன்னி: சியர்ரா லியோனில் இருந்த ஃப்ரீ டவுனில் பெத்தேல் இருந்தது. அங்கே பத்திரமாக வந்து சேர்ந்தோம். சகோதரர்கள் எங்களை நன்றாகப் பார்த்துக்கொண்டார்கள். ஆனால், இங்கே வந்த பிறகு கொஞ்சம்கூட எதிர்பார்க்காத ஒரு பிரச்சினையை நான் சந்தித்தேன். லைபீரியாவில் நடந்த கொடூரமான சம்பவங்கள் என் கண்முன் வந்துவந்து போனது. பகலில் பயத்திலேயே இருந்தேன். என்னைச் சுற்றியிருந்த விஷயங்கள் கனவா நிஜமா என்றுகூட எனக்குத் தெரியவில்லை. ராத்திரியில் பயங்கரமாக வியர்க்கும்; உடம்பெல்லாம் நடுங்கும். ஏதாவது நடந்துவிடுமோ என்று நினைத்து பயப்படுவேன். மூச்சுவிட முடியாமல் திணறுவேன். பால் என்னை அவர் கைக்குள் அணைத்து வைத்துக்கொள்வார்; என்னோடு சேர்ந்து ஜெபம் செய்வார். நடுக்கம் நிற்கும்வரை ராஜ்ய பாடல்களைப் பாடுவோம். நான் பைத்தியமாகப் போகிறேன் என்று நினைத்து கவலைப்பட்டேன். இனிமேலும் மிஷனரியாக இருக்க முடியாது என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

அடுத்து நடந்ததை என்னால் மறக்கவே முடியாது. அந்த வாரமே இரண்டு பத்திரிகைகள் கிடைத்தன. ஒன்று, ஜூன் 8, 1996 விழித்தெழு! அதில் “பீதிக்குள்ளாக்கும் நோய்த்தாக்கங்களைச் சமாளித்தல்” என்ற ஒரு கட்டுரை இருந்தது. அந்தக் கட்டுரையைப் படித்த பிறகு, உண்மையிலேயே எனக்கு என்ன பிரச்சினை என்பது புரிந்தது. இரண்டாவது பத்திரிகை, மே 15, 1996 காவற்கோபுரம். அதில், “அவர்களின் பலத்தை எங்கிருந்து பெறுகின்றனர்?” என்ற ஒரு கட்டுரை இருந்தது. சிறகு உடைந்த ஒரு பட்டாம்பூச்சியின் படம் அதில் இருந்தது. பட்டாம்பூச்சியின் சிறகுகள் சேதமடைந்திருந்தாலும், அவற்றால் தொடர்ந்து சாப்பிடவும் பறக்கவும் முடியும். அப்படியென்றால், மனதளவில் உடைந்து போயிருந்தாலும், யெகோவாவின் சக்தி இருந்தால் நம்மாலும் மற்றவர்களுக்கு உதவ முடியும் என்று அந்தக் கட்டுரை சொன்னது. இந்த இரண்டு கட்டுரைகளும் யெகோவாவிடமிருந்து எனக்குச் சரியான நேரத்தில் வந்தன. (மத். 24:45) இந்த மாதிரி இன்னும் நிறைய கட்டுரைகளைக் கண்டுபிடித்து, சேகரித்து வைத்தேன். அவற்றைப் படித்தேன். போகப் போக, மன அழுத்தத்திலிருந்து நான் கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்தேன்.

மாற்றங்களை ஏற்றுக்கொள்ள பலம் கிடைத்தது

பால்: லைபீரியாவுக்கு வந்தபோதெல்லாம் சந்தோஷமாக இருந்தது. 2004-ன் கடைசியில், நாங்கள் அங்கே வந்து 20 வருஷங்கள் ஆகியிருந்தது. போரும் முடிந்துவிட்டது. கிளை அலுவலகத்தில் சில கட்டுமான வேலைகளைச் செய்வதற்கு திட்டங்கள் போட்டுக்கொண்டு இருந்தார்கள். ஆனால் திடீரென்று எங்களுக்குப் புதிதாக ஒரு நியமிப்பு வந்தது.

அந்த சமயம் எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது. சகோதர சகோதரிகள் நெருக்கமாக ஆகிவிட்டதால், அவர்களை விட்டுப் பிரிவதை தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. ஆனால், கிலியட் பள்ளிக்குப் போனபோது எங்களுடைய குடும்பத்தை விட்டுவிட்டுத்தான் போனோம்; யெகோவாவுடைய கையில் நம்மை ஒப்படைக்கும்போது எவ்வளவு ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்பதை அப்போது பார்த்தோம். அதை யோசித்துப் பார்த்தது, இந்த நியமிப்பை ஏற்றுக்கொள்ள உதவியது. அடுத்த நியமிப்புக்காக, கானாவுக்குப் போனோம்.

ஆன்னி: லைபீரியாவை விட்டுக் கிளம்பியபோது எங்கள் கண்கள் குளமானது. ஃபிராங்க் என்ற வயதான, அனுபவமுள்ள ஒரு சகோதரர் இப்படிச் சொன்னார்: “நீங்கள் எங்களை மறந்துவிட வேண்டும்!” அவர் சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. பிறகு இப்படிச் சொன்னார்: “எங்களை நீங்கள் மறக்க மாட்டீர்கள் என்று தெரியும். ஆனால் அங்கே இருக்கிற சகோதர சகோதரிகள்மேல் முழு கவனத்தைச் செலுத்துங்கள். புது நியமிப்பை சந்தோஷமாகச் செய்யுங்கள். அது யெகோவாவிடமிருந்து வந்திருக்கிறது.” அவர் சொன்னது, தெரியாத இடத்தில் மறுபடியும் ஒரு புதிய பயணத்தைத் தொடர பலம் கொடுத்தது.

பால்: கானாவில், சகோதர சகோதரிகளோடு நாங்கள் சீக்கிரமாகவே நன்றாகப் பழகிவிட்டோம். அங்கே நிறைய சாட்சிகள் இருந்தார்கள். அவர்களுடைய விசுவாசத்தில் இருந்து நிறைய கற்றுக்கொண்டோம். அங்கே 13 வருஷங்கள் உருண்டோடியது. பிறகு வேறொரு நியமிப்புக் கிடைத்தது. கென்யாவில் இருக்கிற கிழக்கு ஆப்பிரிக்க கிளை அலுவலகத்துக்குப் போனோம். லைபீரியாவிலும் கானாவிலும் இருந்த சகோதரர்களை விட்டுப் பிரிந்தது கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனாலும், கென்யாவிலும் நாங்கள் ஒரு குடும்பம் மாதிரி ஆகிவிட்டோம். தேவை அதிகம் இருக்கிற இந்தப் பெரிய நாட்டில் இப்போது நாங்கள் சேவை செய்து வருகிறோம்.

கிழக்கு ஆப்பிரிக்க கிளை அலுவலகப் பிராந்தியத்தில் புது நண்பர்களுடன், 2023

கடந்து வந்த பாதை

ஆன்னி: திகில் நிறைந்த சம்பவங்களை நான் பார்த்திருக்கிறேன். பயம், நடுக்கம் என எல்லாமே எனக்குள் இருந்தது. இந்த மாதிரி சம்பவங்கள் நம்மை உடலளவிலும் மனதளவிலும் பாதிக்கும். ஆனால், யெகோவா நம்மை அற்புதமாகப் பாதுகாப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. துப்பாக்கிச் சத்தம் கேட்டால் இப்போதும் எனக்குக் குலை நடுங்கும், வயிறு பிசையும், கைகள் மரத்துப்போய்விடும். ஆனால் பலத்துக்காக யெகோவாவை நம்பியிருக்கக் கற்றுக்கொண்டேன். அவர் தரும் உதவியை எடுத்துக்கொள்கிறேன். சகோதர சகோதரிகள் மூலமாக அவர் எனக்கு உதவுகிறார். அவரோடு இருக்கிற பந்தத்தைப் பலமாக வைத்துக்கொள்ள என்ன செய்ய வேண்டுமோ, அவற்றைத் தவறாமல் செய்தால், நம் நியமிப்பை நன்றாகச் செய்வதற்கு யெகோவா உதவுவார்.

பால்: “உங்களுடைய நியமிப்பு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?” என்று சிலர் கேட்பார்கள். நாம் சேவை செய்யும் நாடு அழகாக இருக்கலாம். ஆனால் திடீரென்று எல்லாம் தலைகீழாகிவிடலாம்; ஆபத்தாகக்கூட மாறிவிடலாம். அதனால், நாட்டைவிட, அங்கே இருக்கிற சகோதர சகோதரிகள்தான் முக்கியம். அவர்கள் நம் குடும்பம். வித்தியாசமான பின்னணியிலிருந்து வந்திருந்தாலும் நம் எண்ணங்கள் ஒன்றுதான். சகோதர சகோதரிகளைப் பலப்படுத்துவதற்காக யெகோவா எங்களை அனுப்பியதாக நினைத்தோம். உண்மையில், அவர்களிடமிருந்துதான் எங்களுக்குப் பலம் கிடைத்திருக்கிறது.

புதிய இடத்துக்குப் போகும்போதெல்லாம் அங்கே ஒரு அற்புதத்தைப் பார்க்கிறோம்—அதுதான் யெகோவாவின் குடும்பம்! சபையின் பாகமாக இருக்கும்வரை நமக்கு ஒரு குடும்பம் இருக்கிறது, தஞ்சமடைய ஒரு கூடு இருக்கிறது. தொடர்ந்து யெகோவாவை நம்பியிருக்கும்வரை, எதையும் சந்திக்க நமக்குப் பலம் கிடைக்கும்.—பிலி. 4:13.

a சகோதரர் ஜான் ஷெருக்கின் வாழ்க்கை சரிதையை மார்ச் 15, 1973 ஆங்கில காவற்கோபுரத்தில் வெளிவந்த “கடவுளுக்கும் கிறிஸ்துவுக்கும் நான் நன்றியோடு இருக்கிறேன்” என்ற கட்டுரையில் பாருங்கள்.