Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

கடவுளுடைய அளவற்ற கருணையை நிறைய வழிகளில் ருசித்திருக்கிறோம்!

கடவுளுடைய அளவற்ற கருணையை நிறைய வழிகளில் ருசித்திருக்கிறோம்!

என்னுடைய அப்பா பெயர் ஆர்த்தர். தன்னுடைய இளம் வயதிலேயே அவர் கடவுளை மிகவும் நேசித்தார். அதனால், மெத்தடிஸ்ட் சர்ச்சின் ஊழியராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஆனால், பைபிள் மாணாக்கர்களுடைய பிரசுரங்கள் சிலவற்றைப் படித்தவுடன் தன்னுடைய மனதை மாற்றிக்கொண்டார். அவர்களோடு சேர்ந்து யெகோவாவை வணங்க ஆரம்பித்தார். பிறகு, 1914-ல், அவருடைய 17-வது வயதில் ஞானஸ்நானம் எடுத்தார். முதல் உலகப் போரின்போது, ராணுவத்தில் சேரும்படி அவர் அழைக்கப்பட்டார். ஆனால், போர் செய்ய முடியாது என்று அவர் சொல்லிவிட்டதால், அவருக்கு 10 மாத சிறைத்தண்டனை கொடுக்கப்பட்டது. கனடா, ஒன்டாரியோவில் இருக்கும் கிங்ஸ்டன் சிறைச்சாலையில் அவர் தள்ளப்பட்டார். விடுதலையான உடனே அவர் கால்பார்ட்டராக (இப்போது பயனியர்) ஆனார்.

1926-ல், ஹாஸல் வில்கின்ஸன் என்பவரை என்னுடைய அப்பா கல்யாணம் செய்தார். ஹாஸல் வில்கின்ஸனுடைய அம்மா, 1908-ல் சத்தியத்தைத் தெரிந்துகொண்டார். ஏப்ரல் 24, 1931-ல் நான் பிறந்தேன். என்னோடு பிறந்தவர்கள் மொத்தம் 3 பேர், நான் இரண்டாவது பிள்ளை. என்னுடைய அப்பா பைபிளை மிகவும் நேசித்தார், அதன்மீது அதிக மதிப்பு வைத்திருந்தார். பைபிளை நேசிக்கவும், மதிக்கவும் எங்களுக்கும் கற்றுக்கொடுத்தார். யெகோவாவை வணங்குவது எங்களுடைய வாழ்க்கையில் மிக முக்கியமானதாக இருந்தது. குடும்பமாக நாங்கள் தவறாமல் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்தோம்.—அப். 20:20.

அப்பாவைப் போலவே நடுநிலைமையோடு இருந்தேன், பயனியர் ஊழியம் செய்தேன்

1939-ல், இரண்டாம் உலகப் போர் ஆரம்பித்தது. அதற்கு அடுத்த வருஷம், யெகோவாவின் சாட்சிகளுடைய வேலை கனடாவில் தடை செய்யப்பட்டது. பள்ளிக்குப் போகிற பிள்ளைகள் எல்லாருமே தேசிய கொடிக்கு வணக்கம் செலுத்த வேண்டியிருந்தது; தங்கள் வகுப்பறைகளில் தேசிய கீதம் பாட வேண்டியிருந்தது. அப்போதெல்லாம், நானும் என்னுடைய சகோதரி டோரத்தியும் வகுப்பறையைவிட்டு வெளியே போவதற்கு எங்களுடைய ஆசிரியர்கள் அனுமதி கொடுத்திருந்தார்கள். ஆனால், ஒருநாள் என்னுடைய ஆசிரியர், என்னை பயந்தாங்கொள்ளி என்று சொல்லி என்னை அவமானப்படுத்தினார். பள்ளி முடிந்த பிறகு, என்னுடைய வகுப்பில் இருந்த மாணவர்கள் என்னைத் தாக்கினார்கள், அப்படியே என்னை தரையில் தள்ளினார்கள். “மனுஷர்களுக்குக் கீழ்ப்படிவதைவிட கடவுளுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்” என்பதில் உறுதியாக இருக்க அந்தச் சம்பவம் எனக்கு உதவியது.—அப். 5:29.

ஜூலை 1942-ல் என்னுடைய 11-வது வயதில், பண்ணையிலிருந்த ஒரு தண்ணீர்த் தொட்டியில் நான் ஞானஸ்நானம் எடுத்தேன். என்னுடைய பள்ளி விடுமுறை நாட்களில், பயனியர் ஊழியம் செய்தேன். அதை இப்போது துணைப் பயனியர் ஊழியம் என்று சொல்கிறோம். ஒன்டாரியோவின் வடக்குப் பகுதிகளில், நானும் 3 சகோதரர்களும் ஒரு வருஷத்துக்கு ஊழியம் செய்தோம்; அந்தப் பகுதிகளில் இருந்த மரம் வெட்டுகிற ஆட்களிடம் பிரசங்கித்தோம்.

மே 1, 1949-ல் ஒழுங்கான பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்தேன். பிறகு, கனடா கிளை அலுவலகத்தில் நடந்துகொண்டிருந்த கட்டுமான வேலைக்கு அழைக்கப்பட்டேன். அதற்குப் பிறகு, கனடா பெத்தேலிலேயே சேவை செய்ய ஆரம்பித்தேன். அங்கே அச்சடிக்கும் வேலை எனக்குக் கொடுக்கப்பட்டது. அப்போது, ‘ஃப்ளாட் பெட்’ என்ற அச்சு இயந்திரத்தை இயக்குவதற்குக் கற்றுக்கொண்டேன். கனடாவில் இருக்கும் யெகோவாவின் சாட்சிகள் துன்புறுத்தப்படுவதைப் பற்றி விளக்குகிற ஒரு துண்டுப்பிரதியைப் பல வாரங்களாக இரவு முழுவதும் அச்சடித்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது.

பிறகு, நான் ஊழிய இலாகாவில் சேவை செய்தேன். அந்தச் சமயத்தில், கியுபெக் என்ற இடத்தில் கடுமையான துன்புறுத்துதல் இருந்தது. அங்கே போய் ஊழியம் செய்வதற்குச் சில பயனியர்கள் தயாராக இருந்தார்கள். அவர்களைப் பேட்டி எடுப்பதற்கு நான் நியமிக்கப்பட்டேன். அந்தப் பயனியர்களில், மேரி ஸாஸூலா என்ற ஒரு சகோதரியும் இருந்தார். ஆல்பர்ட்டாவில் இருக்கிற எட்மண்டன் என்ற இடத்திலிருந்து அவர் வந்திருந்தார். அவருடைய அப்பா அம்மா, ஆர்த்தடாக்ஸ் சர்ச்சின் அங்கத்தினர்களாக இருந்தார்கள். மேரியும் அவருடைய அண்ணனும் யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படிப்பதை நிறுத்தாததால் அவருடைய அப்பா அம்மா அவர்கள் இரண்டு பேரையும் வீட்டைவிட்டு துரத்திவிட்டார்கள். மேரியும் அவருடைய அண்ணனும், ஜூன் 1951-ல் ஞானஸ்நானம் எடுத்திருந்தார்கள். ஆறு மாதங்களுக்குப் பிறகு, பயனியர் ஊழியம் செய்ய ஆரம்பித்திருந்தார்கள். மேரியைப் பேட்டி எடுத்தபோது, அவர் யெகோவாவை எந்தளவு நேசித்தார் என்பதைத் தெரிந்துகொள்ள முடிந்தது. அவளைப் போன்ற ஒரு பெண்ணைத்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று நினைத்தது எனக்கு இன்னும் ஞாபகம் இருக்கிறது. 9 மாதங்களுக்குப் பிறகு, ஜனவரி 30, 1954-ல் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். கல்யாணம் முடிந்த ஒரு வாரத்துக்குப் பிறகு, வட்டார சேவை செய்வதற்குத் தேவையான பயிற்சியைக் கொடுப்பதற்காக எங்களை அழைத்தார்கள். அடுத்த 2 வருஷங்களுக்கு, ஒன்டாரியோவின் வடக்குப் பகுதிகளில் நாங்கள் வட்டார சேவை செய்தோம்.

உலகம் முழுவதும் நடந்துகொண்டிருந்த பிரசங்க வேலை தொடர்ந்து வளர ஆரம்பித்தது. அதனால், நிறைய மிஷனரிகள் தேவைப்பட்டார்கள். கனடாவில், பனிக்காலத்தில், உறைய வைக்கும் அளவுக்குக் குளிர் இருக்கும். வெயில் காலத்தில், கொசுக்களுடைய தொல்லையையும் தாங்க முடியாது. இவை இரண்டையும் சமாளித்து எங்களால் வாழ முடியுமென்றால், உலகத்தில் வேறு எங்கே வேண்டுமானாலும் எங்களால் வாழ முடியுமென்று நினைத்தோம். நாங்கள் 27-வது கிலியட் பள்ளியில் கலந்துகொண்டு, ஜூலை 1956-ல் பட்டம் பெற்றோம். நவம்பரில் எங்களுடைய புதிய நியமிப்புக்காக, பிரேசிலுக்குப் போனோம்.

பிரேசிலில் மிஷனரி ஊழியம்

பிரேசிலுக்குப் போனவுடன், நாங்கள் போர்ச்சுகீஸ் மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். முதலில், உரையாடலை ஆரம்பிப்பதற்கான சுலபமான வழிகளைக் கற்றுக்கொண்டோம். பிறகு, பத்திரிகைகளை ஊழியத்தில் கொடுப்பது சம்பந்தமாக சில சுருக்கமான உரையாடல்களை மனப்பாடம் செய்தோம். ஊழியத்தில் ஆர்வம் காட்டுகிறவர்களிடம், கடவுளுடைய அரசாங்கத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை விளக்கும் ஒரு வசனத்தை வாசித்துக் காட்டலாம் என்று முடிவு செய்திருந்தோம். நாங்கள் ஊழியத்துக்குப் போன முதல் நாளில், ஒரு பெண் எங்கள் செய்தியை ஆர்வமாகக் கேட்டார். அதனால், வெளிப்படுத்துதல் 21:3, 4-ஐ நான் வாசித்துக் காட்டினேன்; பிறகு, எனக்கு மயக்கம் வந்துவிட்டது! ஏனென்றால், வெயிலிலும் புழுக்கத்திலும் இருந்து எனக்குப் பழக்கமே இல்லை. வெயில் தாங்க முடியாமல், நான் தொடர்ந்து கஷ்டப்பட்டேன்.

கம்பாஸ் என்ற இடத்தில்தான் நாங்கள் மிஷனரிகளாக நியமிக்கப்பட்டிருந்தோம். இப்போது அங்கே 15 சபைகள் இருக்கின்றன! ஆனால், முதல் முதலில் நாங்கள் அங்கே போனபோது, அந்த நகரத்தில் ஒரேவொரு ஒதுக்குப்புறமான தொகுதியும் மிஷனரிகளுக்கான ஒரு வீடும்தான் இருந்தன. எஸ்தர் ட்ரேஸி, ராமோனா பாயர், லூஸா ஷ்வார்ட்ஸ், லொரைய்ன் ஃப்ரூக்ஸ் (இப்போது வாலன்) என 4 சகோதரிகள் அந்த வீட்டில் இருந்தார்கள். மிஷனரி வீட்டில், துணிகளைத் துவைப்பதும் சமைப்பதற்குத் தேவையான மரத்துண்டுகளைக் கொண்டுவருவதும்தான் என்னுடைய நியமிப்பாக இருந்தது. ஒருநாள், திங்கள்கிழமை ராத்திரி காவற்கோபுர படிப்புக்குப் பிறகு, ‘ஸோஃபாவில்’ இருந்த தலையணையில் தன் தலையைச் சாய்த்தபடி மேரி படுத்திருந்தாள். அன்று நடந்த விஷயங்களைப் பற்றி நாங்கள் இரண்டு பேரும் பேசிக்கொண்டிருந்தோம். மேரி எழுந்தபோது, அந்தத் தலையணையிலிருந்து திடீரென ஒரு பாம்பு வந்தது! எதிர்பாராமல் வந்த இந்த விருந்தாளியை நான் கொல்லும்வரை ஒரே பரபரப்பாக இருந்தது!

ஒரு வருஷத்துக்கு நாங்கள் போர்ச்சுகீஸ் மொழியைக் கற்றுக்கொண்டோம். பிறகு, நான் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். மின்சாரமே இல்லாத இடங்களில் தங்கினோம், பாயில் படுத்தோம், குதிரையிலும் குதிரை வண்டியிலும் பயணம் செய்தோம். ஒதுக்குப்புறமான இடத்தில் ஊழியம் செய்வதற்காக, ஓர் ஊரில் இருந்த மலைகளுக்கு ரயில் வண்டியில் போனோம். அங்கே ஓர் அறையை வாடகைக்கு எடுத்தோம். ஊழியத்தில் கொடுப்பதற்காக கிளை அலுவலகம் எங்களுக்கு 800 பத்திரிகைகளைக் கொடுத்திருந்தது. பத்திரிகைகளை எடுத்துவர நாங்கள் பல முறை தபால் நிலையத்துக்குப் போக வேண்டியிருந்தது.

1962-ல், பிரேசில் முழுவதுமாக நிறைய இடங்களில் ஆறு மாதங்கள்வரை ராஜ்ய ஊழியப் பள்ளி நடந்தது. அடுத்தடுத்து நடந்த அந்தப் பள்ளிகளுக்கு மேரி இல்லாமல் நான் மட்டும் தனியாகப் போக வேண்டியிருந்தது. வகுப்புகளை நடத்துவதற்காக மனாஸ், பெலம், போர்ட்லெஜா, ரெஸிஃப், சால்வடார் ஆகிய இடங்களுக்கு நான் போனேன். மனாஸ் என்ற இடத்தில் இருந்தபோது, ‘ஓப்ரா ஹவுஸ்’ என்ற பிரபலமான அரங்கத்தில் மாவட்ட மாநாடு நடத்த ஏற்பாடு செய்தேன். அப்போது, பயங்கர மழை பெய்தது. அதனால், மாநாட்டில் இருந்த எங்களுக்கு குடிப்பதற்குச் சுத்தமான தண்ணீரோ சாப்பிடுவதற்கு நல்ல இடமோ கிடைக்கவில்லை. அதனால், ஒரு ராணுவ அதிகாரியிடம் இதைப் பற்றி பேசினேன். மாநாடு முடியும்வரை எங்களுக்குத் தண்ணீர் கிடைப்பதற்கு அவர் ஏற்பாடு செய்தார். அதோடு, இரண்டு பெரிய கூடாரங்களைப் போடுவதற்கு அவர் ராணுவ வீரர்களையும் அனுப்பினார். சமைப்பதற்கும் சாப்பிடுவதற்கும் அந்தக் கூடாரங்களை நாங்கள் பயன்படுத்தினோம்.

நான் இல்லாத சமயத்தில், வியாபார இடங்களில் மேரி ஊழியம் செய்தாள். அங்கிருந்த மக்கள் பணம் சம்பாதிப்பதற்காக போர்ச்சுகலிலிருந்து பிரேசிலுக்கு வந்தவர்கள். அவர்கள் யாருமே பைபிள் செய்தியைக் கேட்காததால், மேரி தன்னுடைய நண்பர்களிடம், “இந்த உலகத்துல நான் வாழ விரும்புற கடைசி இடம் போர்ச்சுகலாத்தான் இருக்கும்” என்று சொன்னாள். கொஞ்ச நாட்களிலேயே, எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. பிரசங்க வேலை தடை செய்யப்பட்டிருந்த போர்ச்சுகலில் சேவை செய்யும்படி அந்தக் கடிதத்தில் சொல்லப்பட்டிருந்தது. இது மேரிக்குப் பயங்கர அதிர்ச்சியாக இருந்தது! இருந்தாலும், எங்களுக்கு வந்த நியமிப்பை ஏற்றுக்கொண்டு போர்ச்சுகலுக்குப் போனோம்.

போர்ச்சுகலில் எங்களுடைய நியமிப்பு

ஆகஸ்ட் 1964-ல், போர்ச்சுகலில் உள்ள லிஸ்பன் என்ற இடத்துக்குப் போனோம். அங்கிருந்த சகோதரர்களுக்கு ரகசிய போலீஸ் நிறைய பிரச்சினைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தது. அதனால், உள்ளூரில் இருந்த யெகோவாவின் சாட்சிகளைத் தொடர்புகொள்வது ஞானமானதாக இருக்கவில்லை. அதனால், ஒரு அறையை வாடகைக்கு எடுத்து நாங்கள் அதில் தங்கியிருந்தோம். எங்களுக்கு விசா கிடைத்த பிறகு, ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தோம். 5 மாதங்களுக்குப் பிறகுதான், நாங்கள் கிளை அலுவலகத்தைத் தொடர்புகொண்டோம். கடைசியில், நாங்கள் கூட்டங்களுக்குப் போக ஆரம்பித்தோம்; அது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது!

போலீஸ்காரர்கள் நம்முடைய சகோதரர்களின் வீடுகளை விடாமல் சோதனை செய்துகொண்டிருந்த விஷயம் எங்களுக்குத் தெரியவந்தது. ராஜ்ய மன்றங்கள் மூடப்பட்டிருந்ததால் சபைக் கூட்டங்கள் சகோதரர்களுடைய வீடுகளில் நடத்தப்பட்டன. நூற்றுக்கணக்கான சகோதர சகோதரிகளை அவர்கள் காவல் நிலையத்துக்குக் கொண்டுபோனார்கள்; அங்கே அவர்களிடம் நிறைய கேள்விகளைக் கேட்டார்கள், அவர்களைக் கொடுமைப்படுத்தினார்கள். பொறுப்பிலிருந்த சகோதரர்களின் பெயரைச் சொல்லும்படி அவர்களைக் கட்டாயப்படுத்தினார்கள். அதனால், சகோதரர்கள் எல்லாரும் ஒருவரையொருவர் குடும்பப் பெயரை வைத்து அழைக்காமல் முதல் பெயரை வைத்து அழைத்துக்கொண்டார்கள்.

சகோதரர்களுக்குப் பிரசுரங்கள் கிடைக்கும்படி பார்த்துக்கொள்வது எங்களுடைய முக்கிய வேலையாக இருந்தது. சோதனைகளைச் சகிப்பதற்கு அந்தப் பிரசுரங்கள் நம்முடைய சகோதரர்களுக்கு உதவியது. காவற்கோபுர படிப்புக் கட்டுரைகளையும் மற்ற பிரசுரங்களையும் ஒரு விசேஷ பேப்பரில் மேரி ‘டைப்’ செய்வாள். பிறகு, நிறைய நகல்கள் எடுப்பதற்கு அந்த பேப்பர் பயன்படுத்தப்பட்டது.

நீதிமன்றத்தில் நல்ல செய்தியை ஆதரித்துப் பேசினோம்

ஜூன் 1966-ல், லிஸ்பனில் இருக்கிற நீதிமன்றத்தில், ஒரு முக்கியமான வழக்கு நடந்தது. சட்ட விரோதமாக ஒருவருடைய வீட்டில் கூடிவந்ததாக, ஃபாஸூ சபையிலிருந்த 49 பேரும் குற்றம்சாட்டப்பட்டிருந்தார்கள். அந்த வழக்கில் நாங்கள் தோற்றுப்போவோம் என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும், அந்த விசாரணைக்காக அவர்களைத் தயார்படுத்தினேன். அவர்களுக்கு எதிராக வழக்காடும் வக்கீலைப் போல நடித்தேன்; அவர்களிடம் குறுக்கு விசாரணை செய்தேன். நாங்கள் எதிர்பார்த்தபடியே, அந்த வழக்கில் தோற்றுப்போனோம். அதனால், அந்த 49 சகோதர சகோதரிகளும் சிறைக்குப் போக வேண்டியிருந்தது. அதில் சிலர் 45 நாட்கள்வரையிலும், சிலர் 5 1/மாதங்கள்வரையிலும் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. அந்த வழக்கு ஒரு பெரிய சாட்சியாக மாறியது. சொல்லப்போனால், வழக்கின்போது, கமாலியேலுடைய வார்த்தைகளை பைபிளிலிருந்து மேற்கோள்காட்டி எங்களுடைய வக்கீல் வாதாடினார். (அப். 5:33-39) அந்த வழக்கு மீடியாக்களிலும் வந்தது. பிறகு, அந்த வக்கீல் எங்களோடு பைபிள் படிக்கவும் கூட்டங்களுக்கு வரவும் ஆரம்பித்தார்; அது எங்களுக்கு அதிக சந்தோஷத்தைத் தந்தது.

டிசம்பர் 1966-ல், நான் கிளை அலுவலகக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். சட்டம் சம்பந்தப்பட்ட விஷயங்களைக் கவனித்துக்கொள்வதில் அதிக நேரம் செலவுசெய்தேன். போர்ச்சுகலில் பிரசங்க வேலை செய்வதற்கான உரிமை யெகோவாவின் சாட்சிகளுக்கு இருப்பதை நிரூபிப்பதற்குத் தேவையான ஆதாரங்களைச் சேகரித்தோம். (பிலி. 1:7) கடைசியில், டிசம்பர் 18, 1974-ல் நம்முடைய வேலை சட்டப்பூர்வமாக்கப்பட்டது. எங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்துகொள்ள, சகோதரர்கள் நேதன் நார் மற்றும் ஃப்ரெட்ரிக் ஃப்ரான்ஸ், தலைமை அலுவலகத்திலிருந்து வந்திருந்தார்கள். ஓபோர்டோ மற்றும் லிஸ்பனில் மறக்க முடியாத ஒரு கூட்டம் நடந்தது; அதில் மொத்தம் 46,870 பேர் கலந்துகொண்டார்கள்.

போர்ச்சுகீஸ் மொழி பேசப்பட்ட அஸோர்ஸ், வெர்ட் முனை, மெடீரா, சாவோடோம், பிரின்சிப் ஆகிய தீவுகளிலும் பிரசங்க வேலை செய்யப்பட வேண்டும் என்பது யெகோவாவின் விருப்பமாக இருந்தது. அங்கிருந்த பிரஸ்தாபிகளின் எண்ணிக்கை அதிகமானதால், ஒரு பெரிய கிளை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டது. பிறகு, ஏப்ரல் 23, 1988-ல், அர்ப்பணிப்புப் பேச்சைக் கொடுப்பதற்காக சகோதரர் மில்டன் ஹென்ஷல் வந்திருந்தார். அர்ப்பணிப்பு விழாவில், மொத்தம் 45,522 சகோதர சகோதரிகள் கலந்துகொண்டார்கள். முன்பு போர்ச்சுகலில் சேவை செய்த 20 மிஷனரிகள் அந்த விழாவுக்கு வந்திருந்தார்கள்.

விசுவாசமுள்ள சகோதரர்களிடமிருந்து நாங்கள் கற்றுக்கொண்டோம்

இத்தனை வருஷங்களில், நானும் மேரியும் உண்மையுள்ள சகோதரர்களிடமிருந்து நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். அதை நினைத்தால் எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. உதாரணத்துக்கு, ஒரு சமயம், சகோதரர் தியோடர் ஜாரக்ஸோடு மண்டல சந்திப்பில் இருந்தபோது, ஒரு முக்கியமான பாடம் கற்றுக்கொண்டேன். நாங்கள் போயிருந்த கிளை அலுவலகத்தில் ஒரு பெரிய பிரச்சினை இருந்தது. அந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக, தங்களால் முடிந்த எல்லாவற்றையும் அந்தக் கிளை அலுவலகக் குழுவினர் செய்திருந்தார்கள். ஆனாலும், அவர்களால் அதைத் தீர்க்க முடியவில்லை. அதை நினைத்து அவர்கள் கவலையாக இருந்தபோது, “இப்போ கடவுளோட சக்தி செயல்படுறதுக்கு விட்டுடுங்க” என்று சொல்லி சகோதரர் ஜாரக்ஸ் அவர்களை ஆறுதல்படுத்தினார். அதோடு, சகோதரர் ஃப்ரான்ஸ் சொன்னதையும் என்னால் மறக்கவே முடியாது. பல வருஷங்களுக்கு முன்பு, நானும் மேரியும் புருக்லினுக்குப் போயிருந்தோம். அப்போது, உற்சாகப்படுத்தும் விதத்தில் ஏதாவது சொல்லும்படி நாங்கள் அவரிடம் கேட்டோம்; அதற்கு அவர் இப்படிச் சொன்னார்: “நான் உங்களுக்கு சொல்றது இதுதான்: என்ன கஷ்டம் வந்தாலும் யெகோவாவோட அமைப்ப விட்டு போயிடாதீங்க. கடவுளோட அரசாங்கத்த பத்தின நல்ல செய்திய சொல்லுங்கனு இயேசு தன்னோட சீஷர்களுக்கு கட்டளை கொடுத்தார். அந்த கட்டளைப்படி செய்ற ஒரே அமைப்பு யெகோவாவோட அமைப்புதான்!”

அவர் சொன்னபடி செய்தது எனக்கும் மேரிக்கும் அதிக சந்தோஷத்தைத் தந்திருக்கிறது. மண்டல சந்திப்புக்காக உலகம் முழுவதும் இருக்கிற கிளை அலுவலகங்களுக்கு நாங்கள் போயிருக்கிறோம். அங்கே கிடைத்த அனுபவங்களை எங்களால் மறக்கவே முடியாது. எல்லா வயதிலும் இருந்த யெகோவாவின் ஊழியர்களை எங்களால் சந்திக்க முடிந்தது. யெகோவாவுக்காக அவர்கள் செய்யும் சேவையை நாங்கள் பாராட்டினோம், தொடர்ந்து அப்படிச் சேவை செய்யும்படி அவர்களை உற்சாகப்படுத்தினோம்.

பல வருஷங்கள் கடந்துவிட்டன. எங்கள் இரண்டு பேருக்கும் 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது. மேரிக்கு நிறைய உடல்நலப் பிரச்சினைகள் இருக்கின்றன. (2 கொ. 12:9) நாங்கள் மற்ற பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறோம். ஆனால், இவையெல்லாம் எங்களுடைய விசுவாசத்தையும், யெகோவாவுக்கு எப்போதும் உண்மையோடு இருக்க வேண்டுமென்ற எங்கள் தீர்மானத்தையும் பலப்படுத்தியிருக்கின்றன. இத்தனை வருஷங்களாக யெகோவாவுக்கு நாங்கள் செய்த சேவையை நினைத்துப் பார்க்கும்போது, யெகோவாவுடைய அளவற்ற கருணையை நாங்கள் ஏராளமான வழிகளில் ருசித்திருக்கிறோம் என்பதை எங்களால் உணர முடிகிறது. *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

^ பாரா. 29 இந்தக் கட்டுரையைத் தயாரித்துக்கொண்டிருந்த சமயத்தில், கடைசிவரை யெகோவாவுக்கு உண்மையோடு இருந்த சகோதரர் டக்லஸ் கெஸ்ட், இறந்துபோனார். (இறந்த நாள்: அக்டோபர் 25, 2015)