Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சந்தோஷம்—கடவுள் தரும் ஒரு குணம்

சந்தோஷம்—கடவுள் தரும் ஒரு குணம்

எல்லாருமே சந்தோஷமாக இருக்கத்தான் ஆசைப்படுகிறார்கள். ஆனால் இந்தக் கடைசிக் காலத்தில், “சமாளிக்க முடியாத அளவுக்கு” நம் எல்லாருக்குமே பிரச்சினைகள் இருக்கின்றன. (2 தீ. 3:1) அநியாயமாக நடத்தப்படுவதால், உடம்பு சரியில்லாமல் போவதால், வேலை பறிபோவதால், அல்லது அன்பானவர் யாராவது இறந்துபோவதால் சிலர் சந்தோஷத்தை இழந்துவிடுகிறார்கள். மற்றவர்கள், வேறு சில காரணங்களால் கவலையில் அல்லது சோகத்தில் மூழ்கிவிடுகிறார்கள். ஏன், யெகோவாவை வணங்குகிறவர்கள்கூட சோர்ந்துபோய், கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் சந்தோஷத்தை இழந்துவிடலாம். உங்களுக்கு இப்படி நடந்திருக்கிறதா? அப்படியென்றால், இழந்த சந்தோஷத்தை மீண்டும் பெற நீங்கள் என்ன செய்யலாம்?

இந்தக் கேள்விக்குப் பதில் தெரிந்துகொள்வதற்கு முன்பு, உண்மையான சந்தோஷம் என்றால் என்ன என்பதையும், கஷ்டங்கள் வந்தபோதிலும் சிலர் எப்படி சந்தோஷமாக இருந்திருக்கிறார்கள் என்பதையும் தெரிந்துகொள்ளலாம். பிறகு, சந்தோஷத்தை இழந்துவிடாமல் இருக்கவும், அதை அதிகரிக்கவும் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.

சந்தோஷம் என்றால் என்ன?

வெறுமனே சிரித்துக்கொண்டே இருப்பதை சந்தோஷம் என்று சொல்ல முடியாது. உதாரணத்துக்கு, ஒரு நபர் குடித்துவிட்டு நன்றாக சிரித்துக்கொண்டிருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அதற்காக, போதை தெளிந்த பிறகும் அவர் சிரித்துக்கொண்டே இருப்பார் என்று சொல்ல முடியுமா? முடியாது. ஏனென்றால், முன்பு இருந்த அதே பிரச்சினைகள்தான் இப்போதும் இருக்கும். அவருக்கு இருந்த சந்தோஷம் தற்காலிகமானதுதான்; அது உண்மையான சந்தோஷமும் கிடையாது.—நீதி. 14:13.

நமக்கு ஏதாவது நல்லது நடக்கும்போதோ, நல்லது நடக்கும் என்று நாம் எதிர்பார்க்கும்போதோ நம் இதயத்தின் ஆழத்தில் ஏற்படும் ஒரு உணர்வுதான் சந்தோஷம். உண்மையான சந்தோஷம், எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் நம் இதயத்தைவிட்டு நீங்காது. (1 தெ. 1:6) ஒருவேளை நமக்கு ஏதாவது பிரச்சினை இருந்தாலும் நாம் சந்தோஷமாகத்தான் இருப்போம். அப்போஸ்தலர்களின் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். இயேசுவைப் பற்றிப் பிரசங்கித்ததால், அவர்கள் அடிவாங்கினார்கள். இருந்தாலும், “அவருடைய பெயருக்காகத் தாங்கள் அவமானப்படத் தகுதியுள்ளவர்களெனக் கருதப்பட்டதை நினைத்து அப்போஸ்தலர்கள் சந்தோஷமாக நியாயசங்கத்தைவிட்டுப் போனார்கள்.” (அப். 5:41) அடிவாங்கியதை நினைத்து அவர்கள் சந்தோஷப்படவில்லை, கடவுளுக்கு உண்மையோடு இருந்ததை நினைத்துதான் சந்தோஷப்பட்டார்கள்.

சந்தோஷம் என்ற குணத்தோடு நாம் பிறப்பதும் இல்லை, தானாகவே அது வந்துவிடுவதும் இல்லை. ஏனென்றால், உண்மையான சந்தோஷம் என்பது கடவுளுடைய சக்தியால் உண்டாகிற ஒரு குணம். கடவுளுடைய சக்தி, “புதிய சுபாவத்தை” அணிந்துகொள்ள நமக்கு உதவுகிறது; அந்தச் சுபாவத்தில் உட்பட்டிருக்கிற ஒரு குணம்தான் சந்தோஷம். (எபே. 4:24; கலா. 5:22) நம் இதயத்தில் சந்தோஷம் இருக்கும்போது பிரச்சினைகளை நம்மால் சுலபமாகச் சமாளிக்க முடியும்.

நாம் பின்பற்ற வேண்டிய உதாரணங்கள்

இந்த உலகத்தில் நல்ல விஷயங்கள் நடக்க வேண்டும் என்று யெகோவா விரும்பினார்; ஆனால், இப்போது எங்கு பார்த்தாலும் கெட்ட விஷயங்கள்தான் நடக்கின்றன. மக்கள் அநியாய அக்கிரமம் செய்கிறார்கள்; இருந்தாலும், யெகோவா தன்னுடைய சந்தோஷத்தை இழப்பதில்லை. “பலமும் சந்தோஷமும் அவருடைய வீட்டில் இருக்கின்றன” என்று பைபிள் சொல்கிறது. (1 நா. 16:27) தன்னுடைய மக்கள் செய்கிற நல்ல செயல்களைப் பார்த்தும் யெகோவா சந்தோஷப்படுகிறார்.—நீதி. 27:11.

எதிர்பார்ப்பது நடக்காதபோதும் நாம் சந்தோஷத்தை இழக்காமல் இருந்தால், யெகோவாவைப் பின்பற்றுகிறவர்களாக இருப்போம். கவலைப்படுவதற்குப் பதிலாக இப்போது நாம் அனுபவிக்கும் ஆசீர்வாதங்களை நினைத்து நாம் சந்தோஷப்படலாம். அதோடு, எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் இன்னும் பெரிய ஆசீர்வாதங்களுக்காகப் பொறுமையோடு காத்திருக்கலாம். *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

பல பிரச்சினைகள் வந்தபோதிலும் சந்தோஷமாக இருந்த நிறையப் பேருடைய உதாரணங்கள் பைபிளில் இருக்கின்றன. உதாரணத்துக்கு, ஆபிரகாமைப் பற்றி இப்போது பார்க்கலாம். அவருடைய உயிர் ஆபத்தில் இருந்த சமயத்திலும், மற்றவர்கள் அவருக்குப் பிரச்சினைகள் கொடுத்த சமயத்திலும் அவர் தன்னுடைய சந்தோஷத்தை இழக்கவில்லை. (ஆதி. 12:10-20; 14:8-16; 16:4, 5; 20:1-18; 21:8, 9) எது அவருக்கு உதவியது? மேசியாவின் ஆட்சியின் கீழ் புதிய உலகத்தில் வாழும் நம்பிக்கையைப் பற்றி யோசித்ததுதான் அவருக்கு உதவியது. (ஆதி. 22:15-18; எபி. 11:10) “உங்கள் தகப்பனாகிய ஆபிரகாம் என் நாளைப் பார்க்கப்போகிற எதிர்பார்ப்பில் ரொம்பச் சந்தோஷமாக இருந்தார்” என்று இயேசுவும்கூட சொன்னார். (யோவா. 8:56) எதிர்காலத்தில் கிடைக்கப்போகும் சந்தோஷமான வாழ்க்கையைப் பற்றி நினைத்துக்கொண்டே இருக்கும்போது நம்மால் ஆபிரகாமைப் பின்பற்ற முடியும்.—ரோ. 8:21.

பவுலுக்கும் சீலாவுக்கும் பலமான விசுவாசம் இருந்தது; நிறையக் கஷ்டங்கள் வந்தபோதிலும் அவர்கள் சந்தோஷத்தை இழக்கவில்லை. உதாரணத்துக்கு, அவர்கள் பயங்கரமாக அடிக்கப்பட்டு சிறையில் தள்ளப்பட்டபோது, “ஜெபம் செய்துகொண்டும் கடவுளைப் புகழ்ந்து பாடிக்கொண்டும் இருந்தார்கள்.” (அப். 16:23-25) எதிர்காலத்தைப் பற்றிய கடவுளுடைய வாக்குறுதிகளை யோசித்துக்கொண்டே இருந்ததால்தான் அவர்களால் கஷ்டங்களைச் சகிக்க முடிந்தது. அதோடு, இயேசுவின் சீஷர்களாக இருப்பதால்தான் கஷ்டப்படுகிறோம் என்பதை நினைத்து அவர்கள் சந்தோஷப்பட்டார்கள். கடவுளுக்கு உண்மையாக சேவை செய்வதால் கிடைக்கும் நல்ல பலன்களை ஞாபகம் வைத்திருந்தால், நம்மாலும் பவுலையும் சீலாவையும் பின்பற்ற முடியும்.—பிலி. 1:12-14.

இன்றும், நிறைய சகோதர சகோதரிகள் கஷ்டங்கள் மத்தியிலும் தங்கள் சந்தோஷத்தை இழக்காமல் இருக்கிறார்கள். உதாரணத்துக்கு, நவம்பர் 2013-ல் ஹயான் என்ற பயங்கரமான சூறாவளி பிலிப்பைன்சைத் தாக்கியது. அதில் 1,000-க்கும் அதிகமான சாட்சிகளுடைய வீடுகளும் நாசமாயின. டக்லோபன் நகரத்தில் இருந்த ஜார்ஜ் என்ற சகோதரரின் வீடும் தரைமட்டமானது. “இந்த பயங்கரமான சம்பவத்துக்கு அப்புறமும் சகோதரர்கள் சந்தோஷமா இருக்காங்க. எங்க மனசுல இருக்கிற சந்தோஷத்தை சொல்ல வார்த்தையே இல்ல” என்று அவர் சொல்கிறார். யெகோவா நமக்கு செய்ததையெல்லாம் நினைத்துப் பார்க்கும்போதும், எப்போதுமே அவருக்கு நன்றியோடு இருக்கும்போதும், எவ்வளவு பெரிய கஷ்டங்கள் வந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும். யெகோவா கொடுத்திருக்கும் வேறு என்ன ஆசீர்வாதங்களை நினைத்து நாம் சந்தோஷமாக இருக்கலாம்?

சந்தோஷத்துக்கான காரணங்கள்

நம் சந்தோஷத்துக்கான மிக முக்கியக் காரணம், யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தம்தான். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். இந்தப் பிரபஞ்சத்தின் பேரரசரையே நமக்குத் தெரியும்! அதுவும், அவர் நம்முடைய தகப்பன், நம்முடைய கடவுள், நம்முடைய நண்பர்!—சங். 71:17, 18.

யெகோவா நமக்கு உயிரையும், வாழ்க்கையை அனுபவிக்கும் திறனையும் கொடுத்திருக்கிறார். இதற்காகவும் நாம் அவருக்கு நன்றியோடு இருக்கிறோம். (பிர. 3:12, 13) யெகோவா நம்மை ஈர்த்திருப்பதால், நமக்காக அவர் என்ன நோக்கம் வைத்திருக்கிறார் என்பதையும், நாம் எப்படி வாழ வேண்டும் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (கொலோ. 1:9, 10) ஆனால், இந்த உலகத்தில் நிறையப் பேருக்கு ஏன் வாழ்கிறோம் என்பதே புரிவதில்லை. நமக்கும் மற்றவர்களுக்கும் இருக்கிற இந்த வித்தியாசத்தைப் பற்றி பவுல் இப்படி விளக்கினார்: “‘தன்மீது அன்பு காட்டுகிறவர்களுக்காகக் கடவுள் தயார் செய்திருக்கிறவற்றைக் கண்கள் பார்க்கவும் இல்லை, காதுகள் கேட்கவும் இல்லை, அவை மனிதர்களுடைய இதயத்தில் தோன்றவும் இல்லை.’ அவற்றை நமக்குத்தான் கடவுள் தன்னுடைய சக்தியின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.” (1 கொ. 2:9, 10) யெகோவாவின் விருப்பத்தையும் நோக்கத்தையும் புரிந்துகொள்வது நமக்கு சந்தோஷத்தைத் தருகிறது.

இன்னும் நிறைய விஷயங்களை யெகோவா நமக்காகச் செய்திருக்கிறார். அதாவது, நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்கு ஏற்பாடு செய்திருக்கிறார். (1 யோ. 2:12) சீக்கிரத்தில் வரப்போகும் புதிய உலகத்தில் வாழும் நம்பிக்கையை நமக்குக் கொடுத்திருக்கிறார். (ரோ. 12:12) அதோடு, நமக்கு நிறைய நண்பர்களைக் கொடுத்திருக்கிறார்; அவர்களோடு சேர்ந்து நாம் அவரை வணங்குகிறோம். (சங். 133:1) அதுமட்டுமல்ல, சாத்தானிடமிருந்தும் பேய்களிடமிருந்தும் அவர் நம்மைப் பாதுகாக்கிறார். (சங். 91:11) யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் இந்த அருமையான விஷயங்களைப் பற்றி நாம் எப்போதும் யோசித்துக்கொண்டிருந்தால், நம் சந்தோஷம் இன்னும் அதிகமாகும்.—பிலி. 4:4.

இன்னும் சந்தோஷமாக இருக்க நாம் என்ன செய்யலாம்?

ஏற்கெனவே சந்தோஷமாக இருக்கும் ஒரு கிறிஸ்தவர் எப்படி இன்னும் அதிக சந்தோஷத்தை அனுபவிக்கலாம்? “என்னைப் போலவே நீங்களும் நிறைவான சந்தோஷத்தை அனுபவிக்க வேண்டும் என்பதற்காக இவற்றை உங்களுக்குச் சொல்லியிருக்கிறேன்” என்று இயேசு சொன்னார். (யோவா. 15:11) நம்மால் இன்னும் அதிக சந்தோஷத்தை அனுபவிக்க முடியும் என்பதை இந்த வார்த்தைகள் காட்டுகின்றன. நம் சந்தோஷத்தை நெருப்புக்கு ஒப்பிடலாம். நெருப்பு நன்றாக எரிய வேண்டுமென்றால், நிறைய விறகுகளைப் போட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதேபோல், நம் சந்தோஷத்தை அதிகரிப்பதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? சந்தோஷம் என்பது கடவுளுடைய சக்தியால் உண்டாகிற ஒரு குணம் என்பதால், கடவுளுடைய சக்திக்காகக் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அதோடு, கடவுளுடைய சக்தியால் எழுதப்பட்ட பைபிளைப் படித்து, அதைப் பற்றி எப்போதும் நாம் தியானிக்க வேண்டும்.—சங். 1:1, 2; லூக். 11:13.

யெகோவாவை சந்தோஷப்படுத்தும் காரியங்களைச் செய்வதில் சுறுசுறுப்பாக இருக்கும்போதும் நமக்கு இன்னும் அதிக சந்தோஷம் கிடைக்கும். (சங். 35:27; 112:1) ஏன் அப்படிச் சொல்கிறோம்? “உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து, அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்” என்பதற்காகத்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்று பைபிள் சொல்கிறது. “இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.” (பிர. 12:13) கடவுளுடைய விருப்பத்தைச் செய்யும் விதத்தில்தான் யெகோவா நம்மை வடிவமைத்திருக்கிறார். அப்படியென்றால், யெகோவாவுக்கு சேவை செய்வதுதான் வாழ்க்கையிலேயே அதிகமான சந்தோஷத்தை நமக்குத் தரும். *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

சந்தோஷமாக இருப்பதால் கிடைக்கும் பலன்கள்

சந்தோஷத்தை நாம் அதிகரிக்கும்போது இன்னும் நிறையப் பலன்கள் கிடைக்கும். உதாரணத்துக்கு, பிரச்சினைகள் மத்தியிலும் நாம் யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்வதைப் பார்க்கும்போது அவர் நம்மேல் வைத்திருக்கும் பிரியம் அதிகமாகும். (உபா. 16:15; 1 தெ. 5:16-18) அதோடு, நமக்கு உண்மையான சந்தோஷம் இருப்பதால், பொருள் வசதிகள்தான் நம் வாழ்க்கையில் ரொம்ப முக்கியம் என்று நினைக்க மாட்டோம். அதற்குப் பதிலாக, கடவுளுடைய அரசாங்கத்துக்காக இன்னும் பெரிய தியாகங்கள் செய்ய முயற்சி செய்வோம். (மத். 13:44) யெகோவாவுடைய சேவையை அதிகமாகச் செய்வதால் கிடைக்கும் பலன்களைப் பார்க்கும்போது நம் சந்தோஷம் அதிகமாகும்; நமக்கு மனநிறைவும் கிடைக்கும். அதோடு, நாம் மற்றவர்களையும் சந்தோஷப்படுத்துவோம்.—அப். 20:35; பிலி. 1:3-5.

நம் சந்தோஷம் அதிகமாகும்போது நம் ஆரோக்கியம் முன்னேறவும் வாய்ப்பிருக்கிறது. “சந்தோஷமான உள்ளம் அருமையான மருந்து” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 17:22) உடல்நலத்தைப் பற்றி அமெரிக்காவில் இருக்கிற நெப்ராஸ்கா பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி செய்த ஒருவர் இப்படிச் சொல்கிறார்: “இப்போ நீங்க சந்தோஷமாவும் திருப்தியாவும் வாழ்ந்தா, எதிர்காலத்துல ஆரோக்கியமா இருப்பீங்கன்னு எதிர்பார்க்கலாம்.” அவர் சொல்வது பைபிள் சொல்வதோடு ஒத்துப்போகிறது.

இதுவரை பார்த்தபடி, பிரச்சினைகள் நிறைந்த காலத்தில் நாம் வாழ்ந்தாலும் நம்மால் உண்மையான சந்தோஷத்தை அனுபவிக்க முடியும். அதற்கு என்ன செய்ய வேண்டும்? ஜெபம் செய்வதன் மூலமும், பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் படித்துத் தியானிப்பதன் மூலமும் கடவுளுடைய சக்தியைப் பெற்றுக்கொள்ள வேண்டும்; யெகோவா இப்போது நமக்கு கொடுத்திருக்கும் ஆசீர்வாதங்களைப் பற்றி யோசித்துப் பார்க்க வேண்டும்; மற்றவர்களின் விசுவாசத்தைப் பின்பற்ற வேண்டும்; யெகோவாவின் விருப்பத்தைச் செய்ய வேண்டும். அப்போது, சங்கீதம் 64:10-ல் இருக்கிற இந்த வார்த்தைகள் நம் வாழ்க்கையில் நிறைவேறுவதைப் பார்ப்போம்: “நீதிமான்கள் யெகோவாவை நினைத்து சந்தோஷப்பட்டு, அவரிடம் தஞ்சம் அடைவார்கள்.”

^ பாரா. 10 ‘கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை’ விளக்கும் இந்தத் தொடர்கட்டுரையில், பிற்பாடு பொறுமையைப் பற்றியும் சிந்திப்போம்.