Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நோவா, தானியேல், யோபு​—⁠இவர்களுடைய விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் பின்பற்றுங்கள்

நோவா, தானியேல், யோபு​—⁠இவர்களுடைய விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் பின்பற்றுங்கள்

“நோவா, தானியேல், யோபு . . . தங்களுடைய நீதியினால் தங்களை மட்டும்தான் காப்பாற்றிக்கொள்ள முடியும்.”—எசே. 14:14.

பாடல்கள்: 120, 54

1, 2. (அ) நோவா, தானியேல், யோபுவின் உதாரணங்களிலிருந்து நாம் எப்படி உற்சாகமடையலாம்? (ஆ) எசேக்கியேல் 14:14-ஐ எப்படிப்பட்ட சூழ்நிலையில் எசேக்கியேல் எழுதினார்?

நோய், பணப்பிரச்சினை, அல்லது துன்புறுத்தலால் கஷ்டப்படுகிறீர்களா? தொடர்ந்து யெகோவாவுக்கு சந்தோஷமாக சேவை செய்வது சிலசமயங்களில் கஷ்டமாக இருக்கிறதா? அப்படியென்றால், நோவா, தானியேல், யோபுவின் உதாரணங்களை நன்றாக யோசித்துப் பார்ப்பது உங்களுக்கு உற்சாகத்தைத் தரும். அவர்களும் பாவ இயல்புள்ளவர்கள்தான், இன்று நமக்கு இருக்கிற அதே போன்ற பிரச்சினைகள்தான் அவர்களுக்கும் இருந்தன. சிலசமயங்களில், உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளைக்கூட அவர்கள் சந்தித்தார்கள். ஆனால், அவர்கள் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாக இருந்தார்கள்; யெகோவாவின் பார்வையில், விசுவாசத்துக்கும் கீழ்ப்படிதலுக்கும் முன்மாதிரிகளாக இருந்தார்கள்.எசேக்கியேல் 14:12-14-ஐ வாசியுங்கள்.

2 இந்தக் கட்டுரையின் முக்கிய வசனத்தை, கி.மு. 612-ல் பாபிலோனியாவில் எசேக்கியேல் எழுதினார். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (எசே. 1:1; 8:1) ஐந்தே வருஷங்களில், அதாவது கி.மு. 607-ல், எருசலேமுக்கு அழிவு வரவிருந்தது. நோவா, தானியேல், யோபுவைப் போல விசுவாசத்தோடும் கீழ்ப்படிதலோடும் இருந்த ஒரு சிலர் மட்டும்தான் அந்த அழிவில் தப்பித்தார்கள். (எசே. 9:1-5) எரேமியா, பாருக், எபெத்மெலேக், ரேகாபியர்கள் அவர்களில் சிலர்!

3. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றித் தெரிந்துகொள்வோம்?

3 நோவா, தானியேல், யோபுவைப் போல யெகோவாவின் பார்வையில் நீதிமான்களாக இருப்பவர்கள்தான் இந்த மோசமான உலகத்துக்கு வரப்போகிற அழிவிலிருந்து தப்பிப்பார்கள். (வெளி. 7:9, 14) அதனால், தன் பார்வையில் சரியானதைச் செய்த அந்த மூன்று பேரை யெகோவா ஏன் முன்மாதிரிகளாகக் குறிப்பிட்டிருக்கிறார் என்று இந்தக் கட்டுரையில் பார்க்கலாம். அவர்களுக்கு என்ன சவால்கள் இருந்தன, அவர்களுடைய விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் நாம் எப்படிப் பின்பற்றலாம் என்றும் பார்க்கலாம்.

நோவா—900 வருஷங்களுக்கும் மேல் விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டினார்!

4, 5. நோவாவுக்கு என்னென்ன சவால்கள் இருந்தன, எந்த விஷயங்கள் நம்மை ஆச்சரியப்பட வைக்கின்றன?

4 நோவாவுக்கு சில சவால்கள் இருந்தன. நோவாவுடைய கொள்ளுத்தாத்தாவாகிய ஏனோக்கின் காலத்திலேயே, ஜனங்கள் படுமோசமானவர்களாக இருந்தார்கள். யெகோவாவைப் பற்றி அவர்கள் “அதிர்ச்சியூட்டும்” விதமாக ‘பேசினார்கள்.’ (யூ. 14, 15) வன்முறை அதிகமாகிக்கொண்டே போனது. நோவாவின் காலத்துக்குள், “பூமியெங்கும் வன்முறை நடந்தது.” பொல்லாத தேவதூதர்கள் மனித உருவெடுத்து வந்து, பெண்களைக் கல்யாணம் செய்தார்கள். அவர்களுக்குப் பிறந்த மகன்கள் கொடூரமானவர்களாக இருந்தார்கள், வன்முறையில் இறங்கினார்கள். (ஆதி. 6:2-4, 11, 12) ஆனால், நோவா வித்தியாசமாக இருந்ததை எல்லாராலும் பார்க்க முடிந்தது. “நோவா யெகோவாவுக்குப் பிரியமானவராக இருந்தார்.” சுற்றியிருந்த ஜனங்களைப் போல் இல்லாமல், நோவா சரியானதைச் செய்தார். அவர் “உண்மைக் கடவுளின் வழியில் நடந்தார்.”—ஆதி. 6:8, 9.

5 இந்த வார்த்தைகளிலிருந்து நோவாவைப் பற்றி என்ன தெரிந்துகொள்கிறோம்? முதலாவதாக, பெருவெள்ளம் வருவதற்கு முன்பு, வெறும் 70 வருஷங்களோ 80 வருஷங்களோ அல்ல, 600 வருஷங்கள் நோவா விசுவாசமாக இருந்தார்! (ஆதி. 7:11) இரண்டாவதாக, அவருக்கு உதவியும் உற்சாகமும் தருவதற்கு இன்று இருப்பதுபோல் அன்று சபைகள் இல்லை. கூடப்பிறந்தவர்களே அவருக்கு ஆதரவாக இருக்கவில்லை என்று தெரிகிறது. *—அடிக்குறிப்பைப் பாருங்கள்.

6. நோவா எப்படித் தைரியத்தைக் காட்டினார்?

6 நல்ல மனிதராக வாழ்ந்தால் மட்டும் போதும் என்று நோவா நினைக்கவில்லை. யெகோவாமேல் இருந்த விசுவாசத்தைப் பற்றி அவர் தைரியமாகப் பேசினார்; அவர் ‘நீதியைப் பிரசங்கித்தார்.’ (2 பே. 2:5) “இந்த விசுவாசத்தால்தான் உலகத்தை அவர் [அதாவது, நோவா] கண்டனம் செய்தார்” என்று பவுல் சொன்னார். (எபி. 11:7) ஜனங்கள் அவரைக் கிண்டல் செய்திருப்பார்கள், பிரசங்கிக்காதபடி தடுத்திருப்பார்கள், அடித்து உதைக்கப்போவதாகவும் மிரட்டியிருப்பார்கள். ஆனால், மனிதர்களைப் பார்த்து நோவா பயப்படவில்லை. (நீதி. 29:25) அவர் விசுவாசமாக இருந்தார். அதனால், யெகோவா அவருக்குத் தைரியம் கொடுத்தார். இன்று இருக்கிற ஊழியர்களுக்கும் அதே போன்ற தைரியத்தை யெகோவா தருகிறார்.

7. பேழையைக் கட்டும் விஷயத்தில் நோவாவுக்கு என்னென்ன சவால்கள் இருந்தன?

7 ஒரு பெரிய பேழையைக் கட்டும்படி நோவாவிடம் யெகோவா சொன்னபோது, அவர் ஏற்கெனவே 500 வருஷங்களுக்கும் மேல் விசுவாசத்தோடு இருந்திருந்தார். மிருகங்களையும் சில மனிதர்களையும் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றுவதற்குத்தான் அந்தப் பேழையைக் கட்டும்படி யெகோவா சொன்னார். (ஆதி. 5:32; 6:14) ‘இவ்வளவு பெரிய பேழைய எப்படி கட்டப்போறேன்’ என்று நோவா யோசித்திருக்கலாம். ஜனங்கள் தன்னை இன்னும் அதிகமாகக் கிண்டல் செய்வார்கள் என்பதும், தன்னை கஷ்டப்படுத்துவார்கள் என்பதும் அவருக்குத் தெரிந்திருந்தது. ஆனாலும், அவர் விசுவாசத்தோடு இருந்தார், கீழ்ப்படிதலைக் காட்டினார். “அவர் அப்படியே செய்தார்.”—ஆதி. 6:22.

8. தன் குடும்பத்தைக் கவனித்துக்கொள்ளும் விஷயத்தில் நோவா எப்படி யெகோவாவை நம்பியிருந்தார்?

8 நோவாவுக்கு இன்னொரு சவாலும் இருந்தது. அதாவது, தன் மனைவியையும் பிள்ளைகளையும் அவர் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்தது. பெருவெள்ளத்துக்கு முன்பு, பயிர் செய்ய ஜனங்கள் ரொம்பவே கடினமாக உழைத்தார்கள்; நோவாவும் கடினமாக உழைத்தார். (ஆதி. 5:28, 29) ஆனாலும், தன் குடும்பத்தின் தேவைகளை நினைத்து அவர் கவலைப்பட்டுக்கொண்டே இருக்கவில்லை. யெகோவாவுடைய சேவையைத்தான் எப்போதும் மிக முக்கியமானதாக நினைத்தார். பேழையைக் கட்டுவதில் 40 அல்லது 50 வருஷங்களாக அவர் மும்முரமாக இருந்தபோதிலும், யெகோவாவோடு இருந்த பந்தத்தைக் காத்துக்கொள்வதிலும் கவனமாக இருந்தார். பெருவெள்ளத்துக்குப் பிறகு, இன்னும் 350 வருஷங்களுக்கு அவர் கவனமாக இருந்தார். (ஆதி. 9:28) விசுவாசத்துக்கும் கீழ்ப்படிதலுக்கும் நோவா அருமையான முன்மாதிரி!

9, 10. (அ) நோவாவைப் போல நாம் எப்படி விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டலாம்? (ஆ) கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில் தீர்மானமாக இருந்தால், எதைப் பற்றி நீங்கள் உறுதியாக இருக்கலாம்?

9 நோவாவைப் போல விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் நம்மால் காட்ட முடியும். விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்ட, நாம் யெகோவாவுக்கு முதலிடம் தர வேண்டும், அவருடைய நீதிநெறிகளை ஆதரிக்க வேண்டும், சாத்தானின் உலகத்திலிருந்து விலகியிருக்க வேண்டும். (மத். 6:33; யோவா. 15:19) இதையெல்லாம் செய்யும்போது உலக ஜனங்களுக்கு நம்மைப் பிடிக்காது என்பது உண்மைதான். உதாரணத்துக்கு, செக்ஸ் மற்றும் திருமணம் சம்பந்தப்பட்ட கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படிவதில் நாம் தீர்மானமாக இருப்பதால், நம்மைப் பற்றிய தவறான தகவல்களை ஜனங்கள் மீடியாவில் பரப்பலாம். (மல்கியா 3:17, 18-ஐ வாசியுங்கள்.) இருந்தாலும், நோவாவைப் போல, நாம் மனிதர்களுக்கு அல்ல யெகோவாவுக்குத்தான் பயப்படுகிறோம்; அதாவது அவர்மேல் ஆழ்ந்த மரியாதை வைத்திருக்கிறோம். அதனால், அவருக்கு ஏமாற்றம் தர நாம் விரும்புவதில்லை. அவரால் மட்டும்தான் நமக்கு முடிவில்லாத வாழ்வைத் தர முடியும் என்பது நமக்குத் தெரியும்.—லூக். 12:4, 5.

10 உங்களை இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘மத்தவங்க கேலி கிண்டல் செஞ்சாலும், என்னை பத்தி தப்பா பேசினாலும், கடவுளுக்கு பிடிச்ச மாதிரி தொடர்ந்து நடப்பேனா? வாழ்க்கைய ஓட்டுறது கஷ்டமா இருந்தாலும், என் குடும்பத்துக்கு தேவையானத யெகோவா தருவாருன்னு நம்புறேனா?’ நோவாவைப் போல நீங்களும் யெகோவாவை நம்பினால்... அவருக்குக் கீழ்ப்படிந்தால்... யெகோவா உங்களைக் கவனித்துக்கொள்வார் என்பதில் உறுதியாக இருக்கலாம்.—பிலி. 4:6, 7.

தானியேல்—அக்கிரமம் நிறைந்த நகரத்தில் விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டினார்

11. தானியேலுக்கும் அவருடைய மூன்று நண்பர்களுக்கும் பாபிலோனில் இருந்த பெரிய சவால்கள் என்ன? (ஆரம்பப் படம்)

11 தானியேலுக்கு சில சவால்கள் இருந்தன. பொய்க் கடவுள்களும் ஆவியுலகத் தொடர்பும் நிறைந்திருந்த பாபிலோனில் தானியேல் வாழ வேண்டியிருந்தது. அங்கிருந்த ஜனங்களுக்கு யூதர்களைப் பிடிக்கவில்லை; யூதர்களையும் அவர்களின் கடவுளான யெகோவாவையும் அவர்கள் கிண்டலாகப் பேசினார்கள். (சங். 137:1, 3) யெகோவாவை நேசித்த யூதர்களுக்கும் தானியேலுக்கும் அது எவ்வளவு வேதனையைத் தந்திருக்கும்! அதோடு, பாபிலோன் ராஜாவுக்கு சேவை செய்ய, தானியேலுக்கும் அவருடைய மூன்று நண்பர்களான அனனியா, மீஷாவேல், அசரியா ஆகியவர்களுக்கும் பயிற்சி தரப்படவிருந்ததால், நிறையப் பேர் அவர்கள்மேல் எப்போதும் ஒரு கண் வைத்திருந்தார்கள். ராஜா சாப்பிடும் உணவை சாப்பிட வேண்டும் என்றும் அவர்களுக்குச் சொல்லப்பட்டது. ஆனால், யெகோவா தடை செய்திருந்த உணவு வகைகள் அதில் இருந்ததால், தானியேல் ‘ராஜாவுடைய உணவினால் . . . தன்னைத் தீட்டுப்படுத்திக்கொள்ளவில்லை.’—தானி. 1:5-8, 14-17.

12. (அ) தானியேல் எப்படிப்பட்டவராக இருந்தார்? (ஆ) தானியேலை யெகோவா எப்படிப் பார்த்தார்?

12 தானியேல் திறமைசாலியாக இருந்ததால், ராஜா அவருக்கு விசேஷமான பொறுப்புகளைக் கொடுத்தார். (தானி. 1:19, 20) இதுவும் தானியேலுக்கு ஒரு சவாலாக இருந்தது. மேலோட்டமாகப் பார்த்தால், அது அவ்வளவு பெரிய சவாலாகத் தெரியவில்லை. அந்தப் பொறுப்பை நினைத்து தானியேல் தலைக்கனம் அடையவில்லை, எப்போதுமே தான் சொல்வதுதான் சரியென்று நினைக்கவில்லை. தொடர்ந்து தாழ்மையாகவும் அடக்கமாகவும் இருந்தார். தன்னுடைய வெற்றிக்கு யெகோவாதான் காரணம் என்று எப்போதுமே அவர் சொன்னார். (தானி. 2:30) இதை நினைத்துப் பாருங்கள்: பின்பற்றுவதற்கு நல்ல முன்மாதிரிகள் என்று நோவாவையும் யோபுவையும் பற்றி யெகோவா சொன்னபோது, தானியேலையும் சேர்த்துக்கொண்டார். ஆனால் அப்போது, நோவாவும் யோபுவும் தங்கள் வாழ்நாள் முழுவதும் யெகோவாவுக்கு விசுவாசமாக சேவை செய்து முடித்திருந்தார்கள்; தானியேலோ இளைஞராகத்தான் இருந்தார்! யெகோவா தானியேலின் மேல் எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தார்! தானியேலும் தன் வாழ்க்கை முழுவதும் விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டினார். அவருக்குக் கிட்டத்தட்ட 100 வயதானபோது, கடவுளுடைய தூதர் அவரிடம், “தானியேலே, கடவுளுக்கு மிகவும் பிரியமானவனே” என்று கனிவோடு சொன்னார்.—தானி. 10:11.

13. தானியேல் மிக முக்கியமான அதிகாரியாக ஆவதற்கு யெகோவா ஏன் அவருக்கு உதவியிருக்கலாம்?

13 தானியேலுக்கு யெகோவாவுடைய ஆதரவு இருந்ததால், பாபிலோன் சாம்ராஜ்யத்திலும், பிற்பாடு மேதிய பெர்சிய சாம்ராஜ்யத்திலும் மிக முக்கியமான அதிகாரியாக இருந்தார். (தானி. 1:21; 6:1, 2) தன் மக்கள் எகிப்தில் இருந்தபோது யோசேப்பின் மூலமும், பெர்சியாவில் இருந்தபோது எஸ்தர் மற்றும் மொர்தெகாயின் மூலமும் யெகோவா உதவியிருந்தார். அதேபோல, பாபிலோனிலிருந்த தன் மக்களுக்கு தானியேலின் மூலம் உதவுவதற்காக யெகோவா அவருக்கு அந்த அதிகாரத்தைக் கொடுத்திருக்கலாம். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (தானி. 2:48) யெகோவா தானியேலைப் பயன்படுத்தியதைப் பார்த்து, எசேக்கியேலும் சிறைபிடிக்கப்பட்ட யூதர்களும் ரொம்பவே உற்சாகம் அடைந்திருப்பார்கள், இல்லையா?

நாம் யெகோவாவுக்கு உத்தமமாக இருக்கும்போது, அவருக்குப் பிரியமானவர்களாக இருப்போம் (பாராக்கள் 14, 15)

14, 15. (அ) நம் சூழ்நிலை எப்படி தானியேலின் சூழ்நிலையைப் போலவே இருக்கிறது? (ஆ) தானியேலுடைய பெற்றோரிடமிருந்து இன்றிருக்கும் பெற்றோர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 தானியேலைப் போல விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் நம்மால் காட்ட முடியும். இன்றும், எங்கு பார்த்தாலும் ஒழுக்கக்கேடும் பொய் வணக்கமும்தான் இருக்கின்றன. பொய் மதங்களின் சாம்ராஜ்யமான மகா பாபிலோன், ஜனங்களைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறது; மகா பாபிலோனை, ‘பேய்களின் குடியிருப்பு’ என்று பைபிள் சொல்கிறது. (வெளி. 18:2) ஆனால், நாம் இந்த உலகத்தில் அன்னியர்களைப் போல இருக்கிறோம். நாம் ரொம்பவே வித்தியாசமாக இருப்பதைக் கவனிக்கிற ஜனங்கள், நம்மைக் கேலி கிண்டல் செய்கிறார்கள். (மாற். 13:13) இருந்தாலும், தானியேலைப் போல நாமும் நம் கடவுளாகிய யெகோவாவிடம் நெருங்கி வரலாம். நாம் மனத்தாழ்மையாக இருந்தால்... யெகோவாவை நம்பியிருந்தால்... அவருக்குக் கீழ்ப்படிந்தால்... நம்மையும் அவர் பிரியமானவர்களாகவும், அருமைச் செல்வங்களாகவும் நினைப்பார்.—ஆகா. 2:7.

15 தானியேலின் பெற்றோரிடமிருந்து இன்றிருக்கும் பெற்றோர்கள் முக்கியமான பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம். தானியேல் சின்னப் பையனாக யூதாவில் இருந்தபோது, அவரைச் சுற்றியிருந்த பெரும்பாலானவர்கள் மிக மோசமானவர்களாக இருந்தார்கள். இருந்தாலும், யெகோவாவை நேசிக்கும் ஒரு நபராக தானியேல் வளர்ந்தார். இது ஏதோ தற்செயலாக நடந்திருக்காது. அவருடைய பெற்றோர் யெகோவாவைப் பற்றி அவருக்குச் சொல்லிக்கொடுத்திருக்க வேண்டும். (நீதி. 22:6) தானியேலுடைய பெயரின் அர்த்தமே, “கடவுளே என் நீதிபதி” என்பதுதான். அவருடைய பெற்றோர் யெகோவாவை நேசித்தார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது. (தானி. 1:6, அடிக்குறிப்பு) பெற்றோர்களே, உங்கள் பிள்ளைகளுக்கு யெகோவாவைப் பற்றி சொல்லிக்கொடுக்கும்போது பொறுமையாக இருங்கள், சோர்ந்துவிடாதீர்கள். (எபே. 6:4) அவர்களோடும் அவர்களுக்காகவும் ஜெபம் செய்யுங்கள். யெகோவாவின் பார்வையில் எது சரியோ, அதை நேசிக்கக் கற்றுக்கொடுப்பதற்காக உங்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யுங்கள். அப்போது, யெகோவா உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பார்.—சங். 37:5.

யோபு—எல்லா நிலைமையிலும் விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டினார்

16, 17. தன் வாழ்க்கையின் வெவ்வேறு கட்டத்தில் யோபு என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தார்?

16 யோபுவுக்கு சில சவால்கள் இருந்தன. தன் வாழ்க்கையில் யோபு பெரிய மாற்றங்களைச் சந்தித்தார். ஆரம்பத்தில், “கிழக்குப் பிரதேசங்களில் வாழ்ந்த எல்லாரையும்விட அவர் அதிக மதிப்பும் மரியாதையும் பெற்றவராக இருந்தார்.” (யோபு 1:3) அவர் மிகப் பெரிய பணக்காரராக, பிரபலமானவராக இருந்தார். ஜனங்களுக்கு அவர்மேல் மதிப்பு மரியாதை இருந்தது. (யோபு 29:7-16) இருந்தாலும், மற்றவர்களைவிட தான் உயர்ந்தவன் என்றோ, தனக்குக் கடவுள் தேவையில்லை என்றோ யோபு நினைக்கவில்லை. இது நமக்கு எப்படித் தெரியும்? யெகோவா அவரை, “என் ஊழியன்” என்றார். அதோடு, “பூமியில் அவனைப் போல் யாருமே இல்லை. அவன் நேர்மையானவன், உத்தமன். எனக்குப் பயந்து நடக்கிறான், கெட்டதை வெறுத்து ஒதுக்குகிறான்” என்றும் சொன்னார்.—யோபு 1:8.

17 திடீரென்று யோபுவின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. எல்லாமே அவருடைய கையைவிட்டுப் போனது; மனச்சோர்வு அவரை வாட்டியது, சாவதே மேல் என்று அவர் நினைத்தார். எல்லாவற்றுக்கும் சாத்தான்தான் காரணம் என்பது இன்று நமக்குத் தெரியும். சுயநலத்துக்காகத்தான் யோபு யெகோவாவுக்குச் சேவை செய்கிறார் என்று அவன் குற்றம்சாட்டினான். (யோபு 1:9, 10-ஐ வாசியுங்கள்.) இந்த மோசமான குற்றச்சாட்டை யெகோவா லேசாக எடுத்துக்கொள்ளவில்லை. சாத்தான் ஒரு பொய்யன் என்பதைக் காட்ட நடவடிக்கை எடுத்தார். அதாவது, யோபு தன் உத்தமத்தை நிரூபிக்கவும், அன்பால்தான் தன்னை வணங்குகிறார் என்பதை நிரூபிக்கவும், யெகோவா அவருக்கு வாய்ப்புக் கொடுத்தார்.

18. (அ) யோபுவின் விஷயத்தில் எது உங்களைக் கவர்ந்தது? (ஆ) யோபுவிடம் யெகோவா நடந்துகொண்ட விதத்திலிருந்து, யெகோவாவைப் பற்றி நீங்கள் என்ன தெரிந்துகொள்கிறீர்கள்?

18 யோபுவைத் திரும்பத் திரும்ப சாத்தான் தாக்கினான். அந்தக் கஷ்டங்களுக்குக் கடவுள்தான் காரணம் என்று நினைக்க வைத்தான். (யோபு 1:13-21) பிறகு, யோபுவின் போலி நண்பர்கள், வேதனைப்படுத்தும் விதத்தில் பேசினார்கள். யோபு ரொம்ப மோசமானவர் என்றும், அதனால்தான் கடவுள் அவரைத் தண்டிக்கிறார் என்றும் சொன்னார்கள். (யோபு 2:11; 22:1, 5-10) இவ்வளவு நடந்தும் யோபு தொடர்ந்து உண்மையோடு இருந்தார். சிலசமயங்களில் அவர் முட்டாள்தனமாகப் பேசியது உண்மைதான். (யோபு 6:1-3) அவர் வேதனையிலும் மனச்சோர்விலும் இருந்ததால்தான் அப்படிப் பேசினார் என்பதை யெகோவா புரிந்துகொண்டார். ஒரு பெரிய ரவுடியைப் போல் சாத்தான் யோபுவைத் திரும்பத் திரும்பத் தாக்கியபோதிலும், அவரை அவமானப்படுத்தியபோதிலும், யெகோவாமேல் இருந்த நம்பிக்கையை அவர் ஒருபோதும் விட்டுக்கொடுக்கவில்லை; யெகோவாவும் அதை கவனித்தார். அந்தக் கொடுமைகள் முடிந்தவுடன், முன்பைவிட இரண்டு மடங்கு ஆசீர்வாதங்களை யெகோவா கொடுத்தார். அதோடு, இன்னும் 140 வருஷங்கள் வாழும் வாய்ப்பையும் கொடுத்தார். (யாக். 5:11) அத்தனை காலமும், யோபு முழு இதயத்தோடு யெகோவாவுக்கு சேவை செய்தார். இது எப்படி நமக்குத் தெரியும்? யோபு இறந்து நூற்றுக்கணக்கான வருஷங்களுக்குப் பிறகு, இந்தக் கட்டுரையின் முக்கிய வசனமான எசேக்கியேல் 14:14 எழுதப்பட்டது; இதிலிருந்து நாம் தெரிந்துகொள்ளலாம்.

19, 20. (அ) யோபுவைப் போல நாம் எப்படி விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்டலாம்? (ஆ) யெகோவாவைப் போல நாமும் எப்படி மற்றவர்களிடம் கரிசனையோடு நடந்துகொள்ளலாம்?

19 யோபுவைப் போல விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் நம்மால் காட்ட முடியும். நாம் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்தாலும், நம் வாழ்க்கையில் யெகோவாதான் முக்கியம் என்பதை நாம் உறுதிசெய்துகொள்ள வேண்டும். முழுமையாக அவரை நம்பவும், முழு இதயத்தோடு அவருக்குக் கீழ்ப்படியவும் நாம் ஆசைப்படுகிறோம். அப்படிச் செய்ய யோபுவுக்கு இருந்ததைவிட நமக்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. சாத்தான் மற்றும் அவனுடைய தந்திரங்களைப் பற்றி இன்று நமக்கு நிறையத் தெரியும். (2 கொ. 2:11) கடவுள் ஏன் துன்பத்தை விட்டுவைத்திருக்கிறார் என்று, பைபிள் மூலம், அதிலும் யோபு புத்தகம் மூலம், நாம் தெரிந்துகொள்கிறோம். கடவுளுடைய அரசாங்கம், இயேசு கிறிஸ்துவால் ஆளப்படும் உண்மையான அரசாங்கம் என்பதை தானியேல் தீர்க்கதரிசனத்திலிருந்து நாம் தெரிந்துகொள்கிறோம். (தானி. 7:13, 14) அது சீக்கிரத்தில் இந்த முழு பூமியையும் ஆட்சி செய்யும் என்பதும், எல்லா கஷ்டங்களுக்கும் முடிவுகட்டும் என்பதும் நமக்குத் தெரியும்.

20 கஷ்டத்திலிருக்கும் சகோதர சகோதரிகளுக்கு நாம் கரிசனை காட்ட வேண்டும் என்பதை யோபுவின் அனுபவம் காட்டுகிறது. யோபுவைப் போல அவர்களும் முட்டாள்தனமாகப் பேசலாம். (பிர. 7:7) ஆனால், நாம் அவர்களைத் தவறாக நினைக்கவோ, அவர்கள் ஏதோ தவறு செய்துவிட்டதாக குற்றம்சாட்டவோ கூடாது; புரிந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். அப்படிச் செய்தால், அன்பும் இரக்கமும் காட்டுகிற நம் அப்பாவான யெகோவாவைப் போலவே நம்மால் இருக்க முடியும்.—சங். 103:8.

யெகோவா “உங்களைப் பலப்படுத்துவார்”

21. நோவா, தானியேல், மற்றும் யோபுவின் அனுபவங்கள், 1 பேதுரு 5:10-ல் இருக்கிற வார்த்தைகளை நமக்கு எப்படி ஞாபகப்படுத்துகின்றன?

21 நோவாவும் தானியேலும் யோபுவும் வெவ்வேறு காலகட்டத்தில் வாழ்ந்தார்கள். அவர்களுடைய சூழ்நிலைகளும் ரொம்பவே வித்தியாசமாக இருந்தன. இருந்தாலும், சவால்களை அவர்கள் சகித்தார்கள். அவர்களுடைய அனுபவங்கள், பேதுரு சொன்ன இந்த வார்த்தைகளை நமக்கு ஞாபகப்படுத்துகின்றன: “அளவற்ற கருணை நிறைந்த கடவுள், கொஞ்சக் காலம் நீங்கள் கஷ்டம் அனுபவித்த பின்பு உங்களுடைய பயிற்சியை முடிப்பார். உங்களை உறுதிப்படுத்துவார், உங்களைப் பலப்படுத்துவார், உங்களை உறுதியான அஸ்திவாரத்தின் மேல் நிற்க வைப்பார்.”—1 பே. 5:10.

22. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்ப்போம்?

22 இன்றிருக்கும் கடவுளுடைய ஊழியர்களின் விஷயத்திலும் 1 பேதுரு 5:10-ல் இருக்கும் வார்த்தைகள் உண்மையாக இருக்கின்றன. தன் ஊழியர்களைப் பலப்படுத்துவதாகவும் உறுதிப்படுத்துவதாகவும் யெகோவா வாக்குக் கொடுக்கிறார். யெகோவா நம்மைப் பலப்படுத்த வேண்டும் என்றும், நாம் அவருக்குத் தொடர்ந்து உறுதியோடும், விசுவாசத்தோடும் இருக்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறோம். அதனால், நோவா, தானியேல், மற்றும் யோபுவைப் போல் விசுவாசத்தையும் கீழ்ப்படிதலையும் காட்ட நாம் ஆசைப்படுகிறோம். யெகோவாவை நன்றாகத் தெரிந்துவைத்திருந்ததால்தான் இவர்கள் மூன்று பேராலும் தொடர்ந்து விசுவாசத்தோடு இருக்க முடிந்தது; இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம். சொல்லப்போனால், தங்களிடம் யெகோவா எதிர்பார்த்த ‘எல்லாவற்றையும் [அவர்கள்] புரிந்துகொண்டார்கள்.’ (நீதி. 28:5) நம்மாலும் அவற்றைப் புரிந்துகொள்ள முடியும்.

^ பாரா. 2 கி.மு. 617-ல் எசேக்கியேல் பாபிலோனியாவுக்குக் கொண்டுபோகப்பட்டார். அங்கே கொண்டுபோகப்பட்ட ‘ஆறாம் வருஷத்தில்,’ அதாவது கி.மு. 612-ல், எசேக்கியேல் 8:1–19:14-ஐ அவர் எழுதினார்.

^ பாரா. 5 நோவாவுடைய அப்பாவான லாமேக்கு, யெகோவாவுக்கு விசுவாசமாக இருந்தார்; ஆனால், பெருவெள்ளம் வருவதற்கு கிட்டத்தட்ட ஐந்து வருஷங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். நோவாவுடைய அம்மாவும் கூடப்பிறந்தவர்களும் பெருவெள்ளம் வந்தபோது உயிரோடு இருந்திருக்கலாம்; ஆனால், அவர்கள் தப்பிக்கவில்லை.

^ பாரா. 13 யூதர்களுக்கு உதவ அனனியா, மீஷாவேல் மற்றும் அசரியாவுக்கு யெகோவா இதுபோல் செய்திருக்கலாம்.—தானி. 2:49.