வாழ்க்கை சரிதை
என் ‘வழியில் இருந்த தடைகளையெல்லாம் யெகோவா நீக்கினார்’
“உங்களுக்கு எந்த வசனம் ரொம்ப பிடிக்கும்?” என்று ஓர் இளம் சகோதரர் என்னிடம் கேட்டார். உடனே “நீதிமொழிகள் 3:5, 6” என்று சொன்னேன். “யெகோவாவை முழு இதயத்தோடு நம்பு. உன்னுடைய சொந்த புத்தியை நம்பாதே. எதைச் செய்தாலும் அவரை மனதில் வைத்துச் செய். அப்போது, உன் வழியில் இருக்கும் தடைகளையெல்லாம் அவர் நீக்கிவிடுவார்” என்று அது சொல்கிறது. உண்மையிலேயே என் வழியில் இருந்த தடைகளையெல்லாம் யெகோவா நீக்கினார். எப்படி என்று தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்களா? என் கதையை சொல்கிறேன், கேளுங்கள்.
சரியான வழியைக் கண்டுபிடிக்க அப்பா அம்மா உதவினார்கள்
1920-க்குப் பிறகு என் அப்பா அம்மாவுக்குச் சத்தியம் கிடைத்தது. கல்யாணத்துக்கு முன்பாகவே அவர்கள் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்டார்கள். 1939-ன் ஆரம்பத்தில் நான் பிறந்தேன். நான் சின்னப் பையனாக இங்கிலாந்தில் இருந்தபோது, அப்பா அம்மாவோடு சேர்ந்து கூட்டங்களுக்குப் போவேன். தேவராஜ்ய ஊழியப் பள்ளி எனக்கு ரொம்ப பிடிக்கும். நான் முதன்முதலில் பேச்சு கொடுத்தது என் கண்ணுக்குள் அப்படியே இருக்கிறது. எல்லாரும் என்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக ஒரு பெட்டியின் மேல் ஏறி நின்று பேச்சு கொடுத்தேன். அப்போது எனக்கு ஆறு வயது! பெரியவர்கள் முன்பாக நின்று பேச்சு கொடுப்பதற்கு ரொம்ப படபடப்பாக இருந்தது.
ஊழியத்தில் நான் என்ன பேச வேண்டும் என்பதை என்னுடைய அப்பா ஒரு அட்டையில் டைப் செய்து கொடுப்பார். எனக்கு எட்டு வயது இருந்தபோது, முதன்முதலாக தனியாகப் போய் ஒரு வீட்டுக் கதவைத் தட்டினேன். அந்த வீட்டில் இருந்தவர் என் அட்டையை வாங்கி படித்தார். “தேவனே சத்தியபரர்” என்ற புத்தகத்தையும் வாங்கிக்கொண்டார். அது எனக்குப் பயங்கர சந்தோஷமாக இருந்தது. உடனே ஓடிப்போய் அப்பாவிடம் சொன்னேன். ஊழியத்துக்கும் கூட்டங்களுக்கும் போவது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. யெகோவாவுக்கு முழுநேரமாக சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையை வளர்க்கவும் உதவியது.
என் பெயரில் காவற்கோபுர பத்திரிகையை அப்பா சந்தா செய்திருந்தார். பத்திரிகை வந்த உடனே அதை படித்துவிடுவேன். அதைப் படிக்கப்படிக்க சத்தியத்தை ரொம்ப நேசிக்க ஆரம்பித்தேன். யெகோவாமேல் இருக்கும் நம்பிக்கையும் அதிகமானது. அதனால், அவருக்கு என்னை அர்ப்பணித்தேன்.
1950-ல் நியு யார்க்கில் நடந்த ‘தேவராஜ்ய அதிகரிப்பு’ என்ற மாநாட்டில் கலந்துகொள்வதற்காக நாங்கள் குடும்பமாக போனோம். ஆகஸ்ட் 3, வியாழக்கிழமை அன்று சகோதரர் காரி பார்பர் (பிற்பாடு இவர் ஆளும் குழுவில் சேவை செய்தார்) ஞானஸ்நான பேச்சைக் கொடுத்தார். அந்த நாளின் பொருள் “மிஷனரி நாள்.” பேச்சு முடிந்ததற்குப் பிறகு ஞானஸ்நானம் எடுக்கப்போகிறவர்களிடம்
சகோதரர் இரண்டு கேள்விகளைக் கேட்டார். நான் எழுந்து நின்று “ஆம்” என்று பதில் சொன்னேன். அப்போது எனக்கு 11 வயது! வாழ்க்கையில் முக்கியமான ஒரு முடிவை எடுத்திருக்கிறேன் என்பதை அப்போது புரிந்துகொண்டேன். எனக்குத் தண்ணீருக்குள் இறங்குவது என்றால் பயங்கர பயம்! ஏனென்றால் அப்போது எனக்கு நீச்சல் தெரியாது. அதனால், ஞானஸ்நான தொட்டிவரை என்னுடைய சித்தப்பா என்கூட வந்தார். ‘ஒண்ணும் ஆகாது, பயப்படாத’ என்று சொல்லி தைரியப்படுத்தினார். சொல்லப்போனால், என் கால் தொட்டியின் தரையில் படவே இல்லை! ஒரு சகோதரர் எனக்கு ஞானஸ்நானம் கொடுத்தார், இன்னொருவர் என்னை தொட்டியிலிருந்து தூக்கிவிட்டார். அன்றுமுதல் இன்றுவரை என் வழியில் இருக்கிற தடைகளையெல்லாம் யெகோவா நீக்கினார்.யெகோவாவை நம்பினேன்
பள்ளி படிப்பு முடித்த உடனே ஒரு பயனியராக ஆக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். ஆனால், உயர் கல்வி படிக்கச் சொல்லி ஆசிரியர்கள் கட்டாயப்படுத்தினார்கள். அவர்களுடைய பேச்சைக் கேட்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். உயர் கல்வியையும் நன்றாகப் படிக்க வேண்டும், சத்தியத்திலும் உறுதியாக இருக்க வேண்டும் என்றால் அது நடக்காத காரியம் என்பதைப் புரிந்துகொண்டேன். அதனால், படிப்பை நிறுத்த வேண்டும் என்று முடிவு எடுத்தேன். முதல் வருஷம் முடிந்த உடனே படிப்பை நிறுத்தப்போவதற்கான காரணத்தை ஒரு கடிதத்தில் எழுதி ஆசிரியர்களிடம் கொடுத்தேன். யெகோவாவின் மேல் முழு நம்பிக்கை வைத்து உடனடியாக ஒரு பயனியராக ஆனேன்.
ஜூலை 1957-ல் வெல்லிங்பெரா என்ற ஊரில் முழுநேர சேவையை ஆரம்பித்தேன். கூட சேர்ந்து ஊழியம் செய்வதற்கு அனுபவமுள்ள பயனியர்கள் யாராவது இருக்கிறார்களா என்று லண்டன் பெத்தேலில் இருந்த சகோதரர்களிடம் கேட்டேன். சகோதரர் பெர்ட் வாஸி என்னோடு சேர்ந்து ஊழியம் செய்ய ஆரம்பித்தார். நிறைய விஷயங்களை அவர் எனக்கு சொல்லி கொடுத்தார். நன்றாக அட்டவணை போட்டு ஊழியம் செய்வது எப்படி என்பதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டேன். எங்களுடைய சபையில் வயதான சகோதரிகள் ஆறு பேரும் சகோதரர் வாஸியும் நானும்தான் இருந்தோம். எல்லா கூட்டங்களுக்காக தயாரித்ததும் அதில் கலந்துகொண்டதும் யெகோவாமேல் இருக்கும் நம்பிக்கையை அதிகமாக்கியது. நிறைய பதில் சொன்னதன் மூலம் என்னுடைய விசுவாசத்தை காட்டுவதற்கு வாய்ப்பு கிடைத்தது.
ராணுவ சேவையை மறுத்ததால் கொஞ்ச நாள் சிறையில் இருந்தேன். பிறகு, விசேஷ பயனியராக சேவை செய்த சகோதரி பார்பராவை சந்தித்தேன். 1959-ல் நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம். அமைப்பு எங்கே போக சொன்னாலும் அங்கே போக தயாராக இருந்தோம். முதலில், இங்கிலாந்தின் வடமேற்கு பகுதியில் இருந்த லாங்கஷெர் என்ற இடத்துக்குப் போனோம். பிறகு, 1961-ல் லண்டன் பெத்தேலில் நடந்த ராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அந்தப் பள்ளி ஒரு மாதத்துக்கு நடந்தது. பள்ளி முடிந்ததும் நான் வட்டாரக் கண்காணியாக நியமிக்கப்பட்டேன். அது எனக்கு ரொம்பவே ஆச்சரியமாக இருந்தது. பிர்மிங்ஹாம் என்ற இடத்தில், இரண்டு வாரத்துக்கு அனுபவமுள்ள ஒரு வட்டாரக் கண்காணி எனக்குப் பயிற்சி கொடுத்தார். பார்பராவும் என்னோடு இருப்பதற்கு அனுமதி கொடுத்திருந்தார்கள். அதற்குப் பிறகு, எங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த லாங்கஷெர் மற்றும் செஷெர் பகுதிகளுக்குப் போனோம்.
யெகோவாவை நம்பியதால் கிடைத்த ஆசீர்வாதம்
ஆகஸ்ட் 1962-ல், கிளை அலுவலகத்திடமிருந்து எங்களுக்கு ஒரு கடிதம் வந்தது. அதைப் பிரித்துப்பார்த்தபோது, கிலியட் பள்ளிக்கான விண்ணப்பம் இருந்தது. எங்களுக்குச் சந்தோஷம் தாங்க முடியவில்லை! உடனடியாக ஜெபம் செய்துவிட்டு, விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கிளை அலுவலகத்துக்கு அனுப்பிவைத்தோம். ஐந்து மாதம் கழித்து 38-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்வதற்காக நியு யார்க்குக்கு கிளம்பினோம். அந்தப் பள்ளி பத்து மாதங்களுக்கு நடந்தது.
பைபிளைப் பற்றியும் அமைப்பைப் பற்றியும் மட்டுமல்ல உலகம் முழுவதும் இருக்கிற சகோதர சகோதரிகளைப் பற்றியும் தெரிந்துகொண்டோம். அந்தப் பள்ளியில் கலந்துகொண்டபோது எனக்கு 24 வயது, பார்பராவுக்கு 23! எங்களோடு படித்தவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். எங்களுடைய போதகர்களில் ஒருவரான சகோதரர் ஃப்ரெட் ரஸ்கோடு சேர்ந்து தினமும் வேலை செய்யும் பாக்கியம் எனக்குக் கிடைத்தது. ஆலோசனை கொடுக்கும்போது, எப்போதும் பைபிளிலிருந்துதான் கொடுக்க வேண்டும் என்ற முக்கியமான பாடத்தை அவர் சொல்லிக்கொடுத்தார். அனுபவமுள்ள சகோதரர்களான நேதன் நார், ஃப்ரெட்ரிக் ஃப்ரான்ஸ், கார்ல் க்ளைன் ஆகியவர்கள் அடிக்கடி பேச்சுகள் கொடுத்தார்கள். சகோதரர் ஏ. ஹச். மேக்மில்லனைப் பற்றியும் சொல்லியே ஆக வேண்டும்! அவர் மனத்தாழ்மையானவர்! அவரிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். 1914-1919 வரை இருந்த சோதனை காலத்தில் யெகோவா எப்படியெல்லாம் உதவினார் என்பதை அவருடைய பேச்சிலிருந்து தெரிந்துகொண்டோம்.
நியமிப்பில் மாற்றம்
கிலியட் பள்ளி முடியும் சமயத்தில், நாங்கள் ஆப்பிரிக்காவில் இருக்கும் புரூண்டிக்கு நியமிக்கப்பட்டிருப்பதாக சகோதரர் நார் சொன்னார். அந்த நாட்டில் எத்தனை பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள் என்பதைப் பார்ப்பதற்கு உடனே பெத்தேல் லைப்ரரிக்கு ஓடினோம். இயர்புக்கை திறந்துபார்த்தால், அந்த நாட்டின் பெயரே அதில் இல்லை! அந்த நாட்டில் அதுவரைக்கும் யாருமே ஊழியம் செய்யவில்லை. முன்பின் தெரியாத ஒரு கண்டத்துக்கு நாங்கள் போக வேண்டியிருந்தது. அதை நினைத்து ரொம்ப பயந்துபோனோம். நன்றாக ஜெபம் செய்த பிறகுதான் மனதுக்கு நிம்மதியாக இருந்தது.
நாங்கள் போன இடத்தில் எல்லாமே புதிதாக இருந்தது. சீதோஷ்ணம், கலாச்சாரம், மொழி என எல்லாமே எங்களுக்கு புதிதுதான். இப்போது நாங்கள் பிரெஞ்சு மொழியை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. தங்குவதற்கு ஓர் இடத்தைக் கண்டுபிடிப்பதும் ரொம்ப கஷ்டமாக இருந்தது. நாங்கள் அங்கே போய் இரண்டு நாட்களுக்குப் பிறகு கிலியட் பள்ளியில் எங்களோடு படித்த ஹேரீ ஆர்னட் எங்களைப் பார்க்க வந்தார். அவர் முன்பு சேவை செய்துகொண்டிருந்த ஜாம்பியாவுக்கே அவரை நியமித்திருந்தார்கள். அதனால், அங்கே போகிற வழியில் எங்களைப் பார்க்க அவர் வந்தார். தங்குவதற்கு ஒரு வீட்டைக் கண்டுபிடிக்க உதவினார். அதுதான் எங்களுடைய முதல் மிஷனரி வீடு! உள்ளூர் அதிகாரிகளுக்கு யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி அவ்வளவாக எதுவும் தெரியவில்லை. அதனால், அவர்கள் எங்களை எதிர்க்க ஆரம்பித்தார்கள். எங்களுடைய நியமிப்பை அப்போதுதான் ஆரம்பித்திருந்தோம்! ஆனால் அதற்குள், அங்கே தங்கி வேலை செய்வதற்கு எங்களுக்கு அனுமதி இல்லை என்றும் ஊரைவிட்டு நாங்கள் கிளம்ப வேண்டும் என்றும் உள்ளூர் அதிகாரிகள் சொல்லிவிட்டார்கள். வேறு வழியில்லாமல், அங்கிருந்து கிளம்பி வேறொரு நாட்டுக்கு போக வேண்டியதாகிவிட்டது. கடைசியில், உகாண்டாவுக்கு வந்து சேர்ந்தோம்!
ஆனால் எங்களிடம் விசா இல்லாததால் ரொம்ப பயமாக இருந்தது. யெகோவாவை நம்பியிருந்தோம்! உகாண்டாவில் தேவை அதிகமாக இருந்ததால் கனடாவை சேர்ந்த ஒரு சகோதரர் அங்கே சேவை செய்துகொண்டிருந்தார். எங்களுடைய சூழ்நிலையை அதிகாரிகளிடம் அவர் எடுத்து சொன்னார். அந்த நாட்டில் தங்குவதற்கு அனுமதி வாங்க, அந்த அதிகாரி சில மாதங்கள் அவகாசம் கொடுத்தார். யெகோவா எங்கள் கூடவே இருந்ததை புரிந்துகொள்ள முடிந்தது.
புரூண்டியில் இருந்த நிலைமை இங்கே இல்லை. ஏனென்றால், இங்கே ஏற்கெனவே ஊழிய வேலை நடந்துகொண்டுதான் இருந்தது. ஆனால் நாடு முழுவதும் வெறும் 28 பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். நாங்கள் ஊழியம் செய்த பகுதியில் நிறைய பேர் ஆங்கிலம் பேசினார்கள். ஆனால் ஆர்வமுள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்றால், உள்ளூர் மொழிகளில் ஒன்றை கற்றுக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டோம். கம்பாலாவை சுற்றி இருந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் லுகாண்டா மொழி பேசினார்கள். அதனால் அந்த மொழியைக் கற்றுக்கொள்ள ஆரம்பித்தோம். அதைச் சரளமாக பேசுவதற்கு நிறைய வருஷங்கள் ஆனது. ஆனால் அப்படிக் கற்றுக்கொண்டதால் எங்களால் நன்றாக ஊழியம் செய்ய முடிந்தது. எங்களோடு பைபிள் படித்தவர்களைப் பற்றியும் நன்றாகப் புரிந்துகொண்டோம். கற்றுக்கொண்டதைப் பற்றி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை அவர்களும் மனம்திறந்து வெளிப்படையாக சொன்னார்கள்.
பல இடங்களுக்குப் பயணம்
எங்களுக்கு இன்னொரு அருமையான வாய்ப்பு கிடைத்தது. எங்கெல்லாம் விசேஷ பயனியர்கள் தேவைப்படுகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள, நாடு முழுவதும் பயணம் செய்தோம். கென்யா கிளை அலுவலகம்தான் அந்த வேலையைச் செய்யச் சொன்னது. போன இடங்களில் இருந்த ஜனங்களுக்கு யெகோவாவின் சாட்சிகளைப் பற்றி முன்பின் தெரியாது என்றாலும், எங்களை நன்றாகக் கவனித்துக்கொண்டார்கள். சாப்பாடுகூட செய்து கொடுத்தார்கள்.
அதற்குப் பிறகு, கம்பாலாவிலிருந்து இரண்டு நாட்கள் ரயிலில் பயணம் செய்து கென்யாவில் இருக்கிற மோம்பாசர் துறைமுகத்துக்குப் போனேன். பிறகு, அங்கிருந்து இந்தியப் பெருங்கடலில் இருக்கிற ஸேசேல்ஸ் தீவுக்குப் போய்ச் சேர்ந்தேன். 1965-லிருந்து 1972 வரை அடிக்கடி அந்தத் தீவுக்குப் போனேன். அப்போது பார்பராவும் என்னோடு வந்தாள். அந்தத் தீவில் இரண்டே இரண்டு பிரஸ்தாபிகள்தான் இருந்தார்கள். பிறகு ஒரு தொகுதி உருவானது. அதற்குப் பிறகு, அது ஒரு சபையாக மாறியது. எரிட்ரியா, எத்தியோப்பியா, சூடான் போன்ற நாடுகளுக்கும் பயணம் செய்தேன்.
அந்தச் சமயத்தில், ராணுவத்தின் கட்டுப்பாட்டுக்குள் உகாண்டா வந்தது. வெளிநாட்டுக்காரர்கள் தங்கள் வீடுகளுக்குப் பக்கத்தில் இருக்கிற போலீஸ் அலுவலகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்ய வேண்டும் என்று சட்டம் போட்டார்கள். நாங்கள் உடனடியாக அதைச் செய்தோம். கொஞ்ச நாள் கழித்து கம்பாலா வழியாகப் போய்க்கொண்டிருந்தபோது, என்னையும் இன்னொரு மிஷனரியையும் ரகசிய போலீஸார் தடுத்து நிறுத்தினார்கள். நாங்கள் ரொம்ப பயந்துவிட்டோம். நாங்கள் உளவாளிகள் என்று சொல்லி தலைமை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டிக்கொண்டு போனார்கள். நாங்கள் யாருடைய பிரச்சினைக்கும் போவதில்லை என்றும் நாங்கள் மிஷனரிகள் என்றும் எடுத்து சொன்னோம். நாங்கள் ஏற்கெனவே பெயர்ப்பதிவு செய்துவிட்டோம் என்று சொன்னதை அவர்கள் காதில் போட்டுக்கொள்ளவே இல்லை. பிறகு, மிஷனரி வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கிற போலீஸ் அலுவலகத்துக்கு போலீஸ்காரர்கள் எங்களைக் கூட்டிக்கொண்டு போனார்கள். நாங்கள் ஏற்கெனவே பதிவு செய்திருந்த விஷயம் அங்கே இருந்த அதிகாரிக்குத் தெரிந்திருந்ததால் எங்களை விட்டுவிடும்படி அந்த போலீஸ்காரர்களிடம் சொன்னார். அப்போதுதான் நிம்மதியாக இருந்தது. “அரசனுடையதை அரசனுக்கு . . . கொடுங்கள்” என்று பைபிளில் சொல்லியிருப்பதைப் போல் செய்வது எவ்வளவு நல்லது என்பது எனக்கு நன்றாகப் புரிந்தது.—மாற். 12:17.
அந்தச் சமயங்களில், சோதனை சாவடியைத் தாண்டிப் போவது சவாலாக இருந்தது. ஏனென்றால், அங்கிருந்த ராணுவ வீரர்கள் பெரும்பாலும் குடிபோதையில்தான் இருப்பார்கள். ஒவ்வொரு தடவையும் ஜெபம் செய்தோம். அதனால், பதற்றப்படாமல் இருக்க முடிந்தது. போக வேண்டிய இடத்துக்கு பத்திரமாகப் போய்ச் சேரவும் முடிந்தது. கடைசியில், வெளிநாட்டு மிஷனரிகள் எல்லாரும்
உகாண்டாவை விட்டு வெளியேற வேண்டும் என்று 1973-ல் ஒரு சட்டம் போட்டார்கள். அது எங்களுக்கு ரொம்பக் கஷ்டமாக இருந்தது.மறுபடியும் புதிய நியமிப்பு கிடைத்தது. இந்தத் தடவை மேற்கு ஆப்பிரிக்காவில் இருக்கிற கோட் டீவார். இது எங்களுக்குப் பெரிய மாற்றம் என்று சொல்லலாம். புது கலாச்சாரத்தை கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது. மறுபடியும் பிரெஞ்சு மொழி பேச வேண்டியிருந்தது. நிறைய நாடுகளிலிருந்து வந்திருந்த மிஷனரிகளோடு ஒத்துப்போக வேண்டியிருந்தது. அந்தச் சமயத்திலும் யெகோவா எங்களுக்கு உதவினார். நிறைய பேர் நல்ல செய்தியை ஏற்றுக்கொண்டார்கள். யெகோவாவை நம்பியதால் எங்கள் வழியிலிருந்த தடைகளையெல்லாம் அவர் நீக்கியதைப் பார்த்தோம்.
சூழ்நிலை மாறுகிறது
பார்பராவுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. சிகிச்சைக்காக நிறைய தடவை ஐரோப்பாவுக்கு போயும் பிரயோஜனம் இல்லாமல் போய்விட்டது. ஆப்பிரிக்காவில் தொடர்ந்து சேவை செய்ய எங்களால் முடியாது என்பதை 1983-ல் புரிந்துகொண்டோம். நாங்கள் நொந்துபோய்விட்டோம்.
நாங்கள் லண்டன் பெத்தேலில் இருந்தபோது பார்பராவின் உடல்நிலை ரொம்ப மோசமாகி கடைசியில் இறந்துபோனாள். பெத்தேலில் இருந்த சகோதர சகோதரிகள் எனக்கு ஆறுதலாக இருந்தார்கள். அந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதற்கும் யெகோவாமேல் தொடர்ந்து நம்பிக்கையாக இருப்பதற்கும் ஒரு தம்பதி எனக்கு ரொம்பவே உதவினார்கள். ஆன் என்ற சகோதரி அவ்வப்போது பெத்தேலுக்கு வந்து சேவை செய்துகொண்டிருந்தாள். 1989-ல், அவளை நான் கல்யாணம் செய்துகொண்டேன். முன்பு அவள் விசேஷ பயனியர் சேவை செய்துகொண்டிருந்தாள். யெகோவாமேல் அவள் அளவுகடந்த அன்பு வைத்திருக்கிறாள். நாங்கள் இரண்டு பேரும் இன்றுவரை லண்டன் பெத்தேலில் சேவை செய்துவருகிறோம்.
1995-லிருந்து 2018 வரை, தலைமை அலுவலகப் பிரதிநிதியாக சேவை செய்கிற பாக்கியம் எனக்குக் கிடைத்தது. (அப்போது, மண்டலக் கண்காணி) கிட்டத்தட்ட 60 நாடுகளுக்குப் போனேன். சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருந்தாலும் யெகோவா தன்னுடைய பிள்ளைகளை ஆசீர்வதிக்கிறார்! போன எல்லா நாடுகளிலும் இதை நான் கண்ணாரப் பார்த்தேன்.
2017-ல், தலைமை அலுவலகப் பிரதிநிதியாக ஆப்பிரிக்காவுக்குப் போனேன். முதல் தடவையாக ஆனை புரூண்டிக்கு கூட்டிக்கொண்டு போனது ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அங்கிருந்த வளர்ச்சியைப் பார்த்து அப்படியே அசந்துபோய்விட்டோம். 1964-ல் நான் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்த ஒரு தெருவில் இன்று பெத்தேல் இருக்கிறது. புரூண்டியில் இன்று 15,500-க்கும் அதிகமான பிரஸ்தாபிகள் இருக்கிறார்கள்.
2018-ல் நான் எந்தெந்த நாடுகளுக்குப் போக வேண்டும் என்ற பட்டியலைப் பார்த்தபோது ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏனென்றால், கோட் டீவார் அதில் இருந்தது. அதன் தலைநகரம் அபித்ஜானுக்குப் போனபோது என்னுடைய சொந்த வீட்டுக்குப் போனதுபோல் இருந்தது. பெத்தேலில் தங்கியிருந்தபோது டெலிபோன் பட்டியலைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது, ஸோஸோ என்பவர் என்னுடைய அறைக்கு அடுத்த அறையில் இருப்பதைத் தெரிந்துகொண்டேன். ‘தெரிஞ்ச பேரா இருக்கே’ என்று யோசித்தேன். அபித்ஜானில் முன்பு நகரக் கண்காணியாக சேவை செய்த சகோதரர்தான் அவர் என்று நினைத்தேன். ஆனால், அது அவரல்ல, அவருடைய மகன் என்பது பிறகுதான் புரிந்தது.
சொன்னதைச் செய்கிற கடவுள்தான் யெகோவா! நாம் எவ்வளவு மோசமான சூழ்நிலையில் இருந்தாலும், அவரை நம்பினால், நம் பாதையில் இருக்கிற தடைகளையெல்லாம் நீக்கிவிடுவார் என்பதை அனுபவத்தில் பார்த்திருக்கிறேன். புதிய உலகத்துக்குப் போகிற பாதையில் தொடர்ந்து நடக்க ஆசைப்படுகிறேன். அந்தப் பாதை இப்போது இருப்பதைவிட புதிய உலகத்தில் இன்னும் பிரகாசமாக இருக்கும்.—நீதி. 4:18.