Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 6

”பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறான்”

”பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறான்”

“பெண்ணுக்கு ஆண் தலையாக இருக்கிறான்.”—1 கொ. 11:3.

பாட்டு 5 ஏசு நமக்கு முன்மாதிரி

இந்தக் கட்டுரையில்... *

1. கணவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன் ஒரு பெண் எதைப் பற்றியெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும்?

நாம் எல்லாருமே பரிபூரண தலைவரான இயேசு கிறிஸ்துவின் தலைமை ஸ்தானத்தின் கீழ் இருக்கிறோம். ஆனால், ஒரு பெண்ணுக்குக் கல்யாணம் ஆகும்போது, பாவ இயல்புள்ள ஓர் ஆணுடைய தலைமை ஸ்தானத்தின் கீழ் வருகிறாள். அதனால், சில சவால்கள் வரலாம். கணவரைத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பு ஒரு பெண் இதையெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும்: ‘இவர் ஒரு நல்ல குடும்பத் தலைவரா இருப்பாரா? கடவுளோட விஷயங்களுக்கு முதலிடம் கொடுக்குறாரா? அப்படி இல்லனா, கல்யாணத்துக்கு அப்புறம் குடும்பமா யெகோவாகிட்ட நல்ல பந்தத்த வெச்சிக்க உதவுவாருங்குறது என்ன நிச்சயம்?’ அதோடு, தன்னைப் பற்றியும் ஒரு பெண் இப்படியெல்லாம் யோசித்துப் பார்க்க வேண்டும்: ‘ஒரு நல்ல மனைவியா இருக்குறதுக்கு தேவையான குணங்கள் என்கிட்ட இருக்கா? நான் பொறுமையா இருக்குறனா? தாராள குணத்த காட்டுறனா? யெகோவாவோட எனக்கு நல்ல பந்தம் இருக்கா?’ (பிர. 4:9, 12) கல்யாண வாழ்க்கை கற்கண்டாய் இனிக்குமா இனிக்காதா என்பது, ஓரளவு கல்யாணத்துக்கு முன்பு ஒரு பெண் எடுக்கும் முடிவுகளைப் பொறுத்து இருக்கிறது.

2. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

2 லட்சக்கணக்கான சகோதரிகள் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள். அதற்காக அவர்களை மனதார பாராட்ட வேண்டும். இப்படிப்பட்ட அருமையான சகோதரிகளோடு சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்வது நமக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தக் கட்டுரையில் மூன்று கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம். (1) மனைவிகளுக்கு இருக்கும் சில சவால்கள் என்ன? (2) தங்கள் கணவருக்கு அவர்கள் ஏன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்? (3) இயேசுவிடமிருந்தும் அபிகாயிலிடமிருந்தும் இயேசுவின் அம்மா மரியாளிடமிருந்தும் கணவர்களும் மனைவிகளும் என்ன கற்றுக்கொள்ளலாம்?

மனைவிகளுக்கு இருக்கும் சில சவால்கள் என்ன?

3. கல்யாண வாழ்க்கையில் ஏன் பிரச்சினைகள் வரலாம்?

3 கல்யாணம் என்பது கடவுள் கொடுத்த அழகான பரிசு! அதில் எந்தக் குறையும் இல்லை. ஆனால், நாம் எல்லாரும் குறையுள்ளவர்கள். (1 யோ. 1:8) அதனால்தான், கல்யாணம் செய்பவர்களுக்கு “உபத்திரவங்கள்” வரும் என்று பைபிள் சொல்கிறது. (1 கொ. 7:28) மனைவிகளுக்கு இருக்கும் சில சவால்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

4. கணவருக்குக் கட்டுப்பட்டு நடப்பது தங்களை இழிவுபடுத்துவதுபோல் இருப்பதாக சில பெண்கள் ஏன் நினைக்கலாம்?

4 கணவருக்குக் கட்டுப்பட்டு நடப்பது தங்களை இழிவுபடுத்துவதுபோல் இருப்பதாக சில பெண்கள் நினைக்கிறார்கள். அவர்களுடைய கலாச்சாரமோ வளர்ந்த விதமோ அதற்குக் காரணமாக இருக்கலாம். “நான் வாழ்ற இடத்துல பெண்கள் எல்லா விதத்துலயும் ஆண்களுக்கு சமமா இருக்கணும்னு சொல்லிக்கிட்டே இருப்பாங்க. கணவர்களுக்கு யெகோவா அதிகாரம் கொடுத்திருக்குறார்னும், மனைவிகள் அவங்களுக்கு கட்டுப்பட்டு நடக்கணும்னும், அதே சமயத்துல மனைவிகள மதிப்பு மரியாதையா நடத்தணும்னும் யெகோவா எதிர்பார்க்குறாருனு எனக்கு தெரியும். ஆனா இந்த உலகத்தோட கருத்தே வேற! அதனால, கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்கிறது எனக்கு கஷ்டமா இருக்கு” என்று அமெரிக்காவில் இருக்கிற மாரிசால் என்ற சகோதரி சொல்கிறார்.

5. பெண்களைப் பற்றிச் சிலருக்கு என்ன தவறான எண்ணம் இருக்கிறது?

5 ஆண்களைவிட பெண்கள் தாழ்வானவர்கள் என்று சில ஆண்கள் நினைக்கிறார்கள். “நான் வாழ்ற இடத்துல, ஆண்கள் சாப்பிட்டதுக்கு அப்புறம்தான் பெண்கள் சாப்பிடணும். பொண்ணுங்கதான் சமைக்கணும், வீட்ட சுத்தம் செய்யணும். அவங்க சின்ன பிள்ளைகளா இருந்தாலும் அவங்கதான் செய்யணும்னு எதிர்பார்ப்பாங்க. ஆனா ஆம்பள பசங்கள, ‘நீதான் வீட்டுக்கே ராஜா’னு சொல்லி வளர்ப்பாங்க. அவங்க சின்ன பசங்களா இருந்தாகூட, அவங்களோட அம்மாவும் அக்கா தங்கச்சிகளும்தான் அவங்களுக்கு எல்லா வேலையும் செஞ்சு கொடுக்கணும்” என்று தென் அமெரிக்காவில் வாழ்கிற இவான் என்ற சகோதரி சொல்கிறார். ஆசியாவில் வாழ்கிற இங்லிங் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “எங்க ஊர்ல ஒரு பழமொழி இருக்கு. பெண்களுக்கு புத்திசாலித்தனமோ திறமைகளோ தேவை இல்லங்குறதுதான் அதோட அர்த்தம். அவங்களுக்கு வீட்டு வேலை செய்ய தெரிஞ்சா போதும். மத்தபடி கணவர்கள்கிட்ட கருத்து சொல்றதுக்கு அவங்களுக்கு எந்த உரிமையும் இல்ல.” அன்பில்லாமலும் பைபிள் சொல்வதைக் கேட்காமலும் நடந்துகொள்கிற கணவர்கள் மனைவியின் வாழ்க்கையை பாரமாக்கிவிடுகிறார்கள். இயேசுவைப் பின்பற்றாமலும் போய்விடுகிறார்கள். யெகோவாவின் மனதையும் வேதனைப்படுத்துகிறார்கள்.—எபே. 5:28, 29; 1 பே. 3:7.

6. யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள மனைவிகள் என்ன செய்ய வேண்டும்?

6 குடும்பத்தில் இருப்பவர்கள் யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள கணவர்கள் உதவ வேண்டுமென்றும், அவர்களுடைய உணர்ச்சிகளைக் கருத்தில் எடுத்துக்கொண்டு அதற்குத் தகுந்தபடி நடந்துகொள்ள வேண்டுமென்றும், அவர்களுடைய பொருளாதாரத் தேவைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்றும் போன கட்டுரையில் பார்த்தோம். (1 தீ. 5:8) அதேசமயத்தில், யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள மனைவிகளும் முயற்சி செய்ய வேண்டும். அதற்கு, பைபிளைப் படிப்பதற்கும் ஆழமாக யோசிப்பதற்கும் மனம்விட்டு ஜெபம் செய்வதற்கும் நேரம் ஒதுக்க வேண்டும். இவற்றையெல்லாம் செய்வது கஷ்டமாக இருக்கலாம். நிறைய வேலைகள் இருப்பதால் நேரமோ சக்தியோ இல்லை என்று அவர்கள் நினைக்கலாம். ஆனால் இவற்றையெல்லாம் செய்வது முக்கியம். ஏனென்றால், ஒவ்வொருவரும் தன்னிடம் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார்.—அப். 17:27.

7. மனைவிகள் எதைப் புரிந்துகொள்ள வேண்டும்?

7 கணவர்கள் தவறு செய்கிற இயல்புள்ளவர்களாக இருப்பதால், அவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க மனைவிகள் நிறைய முயற்சி எடுக்க வேண்டியிருக்கும். ஆனால், கணவர்களுக்கு ஏன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்பதைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்பதைப் புரிந்துகொள்ளும்போது அப்படிச் செய்வது சுலபமாக இருக்கும்.

ஏன் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்?

8. எபேசியர் 5:22-24 சொல்வதுபோல், மனைவிகள் ஏன் கணவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்?

8 மனைவிகள் கணவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பதால் அவர்கள் அப்படிச் செய்ய வேண்டும். (எபேசியர் 5:22-24-ஐ வாசியுங்கள்.) தங்கள்மேல் யெகோவாவுக்கு அன்பு இருக்கிறது என்றும் தங்களுடைய நன்மைக்காகத்தான் இதைச் சொல்லியிருக்கிறார் என்றும் மனைவிகள் நம்புகிறார்கள். அதனால் மனப்பூர்வமாக தங்கள் கணவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார்கள்.—உபா. 6:24; 1 யோ. 5:3.

9. மனைவிகள் கணவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்போது குடும்பம் எப்படி இருக்கும்?

9 இந்த உலகத்துக்கு யெகோவாவைப் பற்றித் தெரியாது. அதனால், அவருக்குக் கீழ்ப்படியும்படி இந்த உலகம் யாரையும் ஊக்கப்படுத்துவது இல்லை. கட்டுப்பட்டு நடப்பது தங்களை இழிவுபடுத்துவதாக மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், பெண்களை இழிவுபடுத்துகிற ஒரு விஷயத்தைச் செய்யும்படி யெகோவா சொல்லவே மாட்டார். யெகோவா சொல்வதைக் கேட்டு மனைவிகள் கணவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்போது குடும்பத்தில் சமாதானம் இருக்கும். (சங். 119:165) கணவர் பிள்ளைகள் என முழு குடும்பமே சந்தோஷமாக இருக்கும்.

10. சகோதரி கேரல் சொன்னதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

10 தவறு செய்கிற இயல்புடைய கணவர்களுக்கு மனைவிகள் கட்டுப்பட்டு நடக்கும்போது, தலைமை ஸ்தானத்தை ஏற்பாடு செய்த யெகோவாமேல் இருக்கிற அன்பையும் மரியாதையையும் காட்டுகிறார்கள். “என்னோட கணவரும் அப்பப்ப ஏதாவது தப்பு செஞ்சிடுவார்னு எனக்கு தெரியும். ஆனா, அந்த சமயத்துல நான் எப்படி நடந்துக்குறேங்குறது யெகோவாகிட்ட எனக்கு இருக்கிற பந்தத்த நான் எந்தளவுக்கு மதிக்கிறேங்குறத காட்டுது. அதனால, கட்டுப்பட்டு நடக்க முயற்சி செய்றேன். யெகோவாவ சந்தோஷப்படுத்ததான் ஆசப்படுறேன்” என்று தென் அமெரிக்காவில் வாழ்கிற கேரல் சொல்கிறார்.

11. மன்னிப்பதற்கு சகோதரி அனிஸுக்கு எது உதவுகிறது, அவரிடமிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்?

11 தன்னுடைய உணர்வுகளையும் பிரச்சினைகளையும் தன்னுடைய கணவர் புரிந்துகொள்வதில்லை என்று ஒரு மனைவி நினைக்கும்போது, அவருக்கு மரியாதை காட்டுவதும் கட்டுப்பட்டு நடப்பதும் கஷ்டமாக இருக்கலாம். அதைப் பற்றி அனிஸ் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நாம எல்லாருமே தப்பு செய்றவங்கதான். அதனால, கோபப்படாம இருக்க முயற்சி செய்றேன். யெகோவா மாதிரியே நானும் தாராளமா மன்னிக்கணும்னு ஆசப்படுறேன். அப்படி மன்னிக்கிறப்போ மனநிம்மதி கிடைக்குது.” (சங். 86:5) மன்னிக்கத் தெரிந்த ஒரு மனைவிக்கு, கட்டுப்பட்டு நடப்பது கஷ்டமாக இருக்காது.

பைபிள் உதாரணங்கள்

12. எப்படிப்பட்டவர்களைப் பற்றி பைபிள் சொல்கிறது?

12 கட்டுப்பட்டு நடக்கிறவர்கள் பலவீனமானவர்கள் என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால், அது உண்மை கிடையாது. கட்டுப்பட்டு நடந்தவர்கள் எவ்வளவு தைரியத்தைக் காட்டியிருக்கிறார்கள் என்பதைப் பற்றி பைபிள் சொல்கிறது. இயேசு, அபிகாயில், மரியாளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

13. யெகோவாவுக்கு இயேசு ஏன் கட்டுப்பட்டு நடக்கிறார்? விளக்குங்கள்.

13 இயேசு யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடக்கிறார். அவரிடம் புத்திசாலித்தனமோ திறமைகளோ இல்லாததால் அவர் கட்டுப்பட்டு நடக்கிறாரா? இல்லை! அவர் ரொம்ப புத்திசாலியாக இருந்ததால்தான் மற்றவர்களுக்கு எளிமையாகவும் தெளிவாகவும் கற்றுக்கொடுக்க முடிந்தது. (யோவா. 7:45, 46) இயேசுவுக்கு இருந்த திறமையை யெகோவா உயர்வாக மதித்தார். அதனால்தான் பிரபஞ்சத்தைப் படைக்கும்போது தனக்கு உதவியாக இருப்பதற்கு இயேசுவை அனுமதித்தார். (நீதி. 8:30; எபி. 1:2-4) இயேசுவை உயிர்த்தெழுப்பியதற்குப் பிறகு ‘பரலோகத்திலும் பூமியிலும் அவருக்கு எல்லா அதிகாரத்தையும்’ கொடுத்தார். (மத். 28:18) இவ்வளவு திறமைகள் இருந்தாலும் யெகோவா சொல்கிறபடிதான் இயேசு எப்போதுமே செய்கிறார். ஏனென்றால், யெகோவாவை அவர் ரொம்ப நேசிக்கிறார்.—யோவா. 14:31.

14. (அ) பெண்களை யெகோவா பார்க்கும் விதத்திலிருந்து கணவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (ஆ) நீதிமொழிகள் 31-ல் இருக்கிற விஷயங்களிலிருந்து என்ன கற்றுக்கொள்ளலாம்?

14 கணவர்களுக்குப் பாடங்கள்: ஆண்களைவிட பெண்களைத் தாழ்வானவர்களாக யெகோவா பார்க்கிறாரா? அதனால்தான் கணவர்களுக்கு மனைவிகள் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று சொல்கிறாரா? இல்லவே இல்லை! இயேசுவோடு சேர்ந்து ஆட்சி செய்வதற்கு பெண்களையும் அவர் தேர்ந்தெடுத்திருக்கிறாரே! (கலா. 3:26-29) இயேசுவை நம்பி யெகோவா எப்படி அதிகாரத்தைக் கொடுத்திருக்கிறாரோ, அதேபோல் கணவர்களும் மனைவிகளை நம்பி சில அதிகாரங்களைக் கொடுக்க வேண்டும். திறமைசாலியான ஒரு மனைவி, வீட்டு நிர்வாகத்தைக் கவனிப்பதாகவும் நிலங்களை வாங்கி விற்பதாகவும் வியாபாரத்தை கவனிப்பதாகவும் பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 31:15, 16, 18-ஐ வாசியுங்கள்.) தங்களுடைய கருத்துகளைச் சொல்வதற்கு உரிமை இல்லாத அடிமைகளைப் போல் அவள் கிடையாது. அவளுடைய கணவர் அவளை நம்புகிறார். அவளுடைய கருத்துகளைக் கேட்கிறார். (நீதிமொழிகள் 31:11, 26, 27-ஐ வாசியுங்கள்.) கணவர்கள் தங்களுடைய மனைவியை இப்படி மரியாதையோடு நடத்தும்போது மனைவிகள் சந்தோஷமாக கட்டுப்பட்டு நடப்பார்கள்.

யெகோவாவுக்கு இயேசு கட்டுப்பட்டு நடந்ததிலிருந்து திறமைசாலியான மனைவிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (பாரா 15)

15. இயேசுவிடமிருந்து மனைவிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

15 மனைவிக்குப் பாடங்கள்: இயேசு பெரிய பெரிய காரியங்களைச் சாதித்திருந்தபோதும் யெகோவாவுக்குக் கட்டுப்பட்டு நடப்பதைத் தாழ்வாக நினைக்கவில்லை. (1 கொ. 15:28; பிலி. 2:5, 6) இயேசுவைப் போலவே நடந்துகொள்ள விரும்புகிற திறமைசாலியான ஒரு மனைவியும், கட்டுப்பட்டு நடப்பதைத் தாழ்வாக நினைக்க மாட்டாள். கணவர்மேல் இருக்கும் அன்பால் மட்டுமல்ல, முக்கியமாக யெகோவாமேல் இருக்கிற அன்பாலும் மரியாதையாலும் அவள் தன் கணவருக்குக் கட்டுப்பட்டு நடப்பாள்.

தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் அபிகாயில் உணவுப் பொருள்களைக் கொண்டுவந்து கொடுக்கிறாள். தாவீதுக்கு முன்பாக மண்டிபோட்டு தலைவணங்குகிறாள். பழிக்குப் பழிவாங்க வேண்டாம் என்றும் கொலைப்பழியை சுமக்க வேண்டாம் என்றும் தாவீதிடம் கெஞ்சிக் கேட்கிறாள் (பாரா 16)

16. அபிகாயிலுக்கு என்னென்ன சவால்கள் இருந்ததாக 1 சாமுவேல் 25:3, 23-28 சொல்கிறது? (அட்டைப் படம்)

16 அபிகாயிலின் கணவனுடைய பெயர் நாபால். அவன் ஒரு சுயநலவாதி, திமிர் பிடித்தவன், நன்றி கெட்டவன்! ஒரு சமயம், அவனைக் கொல்வதற்காக தாவீதும் அவருடைய ஆட்களும் வந்தார்கள். அப்போது, ‘இவங்கெல்லாம் சேர்ந்து நாபால தீர்த்துக்கட்டட்டும். அப்பதான் நம்ம நிம்மதியா இருக்க முடியும்’ என்று அபிகாயில் நினைத்தாளா? இல்லை! நாபாலையும் தன்னுடைய பெரிய குடும்பத்தையும் காப்பாற்றுவதற்காகத் தன்னால் முடிந்த எல்லாவற்றையும் செய்தாள். கைகளில் ஆயுதம் வைத்திருந்த 400 பேருக்கு முன்பாக போய் நிற்பதற்கும் தாவீதிடம் பேசுவதற்கும் அவளுக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்கும்! ஒருபடி மேலே போய், நாபால் செய்த தவறுக்கு அவள் பொறுப்பேற்றுக்கொண்டாள்! (1 சாமுவேல் 25:3-யும், 23-28-யும் வாசியுங்கள்.) ஒரு பெரிய தவறிலிருந்து தன்னைத் தடுப்பதற்காக யெகோவாதான் இந்தத் தைரியமான பெண்ணை அனுப்பியிருக்கிறார் என்பதை தாவீது உடனடியாகப் புரிந்துகொண்டார்.

17. தாவீதிடமிருந்தும் அபிகாயிலிடமிருந்தும் கணவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

17 கணவர்களுக்குப் பாடங்கள்: அபிகாயில் புத்திசாலியான ஒரு பெண். அவள் சொன்னதை தாவீது கேட்டதால் தன்மேல் இரத்தப்பழி விழாமல் அவரால் பார்த்துக்கொள்ள முடிந்தது. அதேபோல், புத்திசாலியான கணவர்கள் முக்கியமான முடிவுகளை எடுக்கும்போது தன்னுடைய மனைவியின் கருத்துகளைக் கேட்பார்கள். தவறான முடிவுகளை எடுக்காமல் இருப்பதற்கு ஒருவேளை மனைவியின் கருத்துகள் அவர்களுக்கு உதவலாம்.

18. அபிகாயிலிடமிருந்து மனைவிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

18 மனைவிகளுக்குப் பாடங்கள்: ஒரு மனைவிக்கு யெகோவாமேல் அன்பும் மரியாதையும் இருந்தால், அந்தக் குடும்பம் நன்றாக இருக்கும். ஒருவேளை அவளுடைய கணவன் யெகோவாவை வணங்காதவராகவோ யெகோவா சொல்கிறபடி வாழாதவராகவோ இருந்தால்கூட அவளால் குடும்பம் சந்தோஷமாக இருக்கும். கல்யாண வாழ்க்கையை முறித்துக்கொள்ளலாம் என்று அவள் நினைக்க மாட்டாள். கணவருக்கு மரியாதை கொடுப்பாள், கட்டுப்பட்டு நடப்பாள். தன்னுடைய கணவரும் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுமளவுக்கு நடந்துகொள்வாள். (1 பே. 3:1, 2) நல்ல மனைவியாக இருந்தும் சில சமயங்களில் அவளுடைய கணவர் எந்த மாற்றமும் செய்யாமல் இருக்கலாம். ஆனாலும், யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்து கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்கும் அந்த மனைவியை யெகோவா உயர்வாக நினைக்கிறார்.

19. எந்த மாதிரியான சூழ்நிலைகளில் மனைவிகள் தங்கள் கணவருக்குக் கீழ்ப்படிய மாட்டார்கள்?

19 மனைவிகள் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடந்தாலும், பைபிளுக்கு விரோதமாக கணவர் எதையாவது செய்யச் சொன்னால் அவர்கள் செய்ய மாட்டார்கள். உதாரணத்துக்கு, சத்தியத்தில் இல்லாத கணவர்கள் தங்கள் மனைவியை பொய் சொல்ல சொல்லலாம், திருட சொல்லலாம். இல்லையென்றால், யெகோவாவுக்குப் பிடிக்காத எதையாவது செய்யச் சொல்லலாம். இந்த மாதிரியான சூழ்நிலைகளில் மனைவிகள் அதை மறுத்துவிட வேண்டும். அதை ஏன் செய்ய முடியாது என்பதை அன்பாகவும், அதேசமயத்தில் உறுதியாகவும் தங்கள் கணவருக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். ஏனென்றால், மனைவிகள் உட்பட கிறிஸ்தவர்கள் எல்லாரும் முதலில் யெகோவாவுக்குத்தான் கீழ்ப்படிய வேண்டும்.—அப். 5:29.

பாரா 20 *

20. யெகோவாவோடு மரியாளுக்கு நெருங்கிய பந்தம் இருந்தது என்பது நமக்கு எப்படித் தெரியும்?

20 மரியாளுக்கு யெகோவாவிடம் நெருங்கிய பந்தம் இருந்தது. வேதவசனங்களை அவள் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தாள். யோவான் ஸ்நானகரின் அம்மாவான எலிசபெத்திடம் பேசியபோது, 20-க்கும் அதிகமான தடவை எபிரெய வேதாகமத்தில் இருந்த வசனங்களை மேற்கோள்காட்டி பேசினாள். (லூக். 1:46-55) மரியாளை யெகோவா நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். தன்னுடைய மகனை மரியாள் சீராட்டி பாராட்டி வளர்ப்பாள் என்ற நம்பிக்கை அவருக்கு இருந்தது. மரியாளுக்கு யோசேப்போடு கல்யாணம் நிச்சயமாகியிருந்தும் யோசேப்புக்கு முன்னால் தேவதூதர் முதலில் தோன்றவில்லை. மரியாளுக்கு முன்னால் தோன்றிதான் கடவுளுடைய மகனை அவள் பெற்றெடுப்பாள் என்று சொன்னார். (லூக். 1:26-33) இயேசு இறந்து பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகும் யெகோவாவோடு மரியாள் ஒரு நெருங்கிய பந்தத்தை வைத்திருந்தாள்!—அப். 1:14.

21. மரியாளைப் பற்றிய பதிவிலிருந்து கணவர்கள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

21 கணவர்களுக்குப் பாடங்கள்: ஞானமுள்ள ஒரு கணவர் தன்னுடைய மனைவிக்கு பைபிளைப் பற்றி அதிகமாகத் தெரிந்திருப்பதைப் பார்த்து சந்தோஷப்படுவார். அப்படிப்பட்ட ஒரு மனைவி குடும்பத்துக்கு ஓர் ஆசீர்வாதமாக இருக்கிறாள் என்பதைத் தெரிந்துவைத்திருப்பார். தன்னுடைய அதிகாரம் பறிபோய்விடுமோ என்று நினைத்து பயப்பட மாட்டார். ஒருவேளை, கணவனைவிட மனைவி அதிகம் படித்திருந்தாலும் குடும்ப வழிபாட்டையும் வழிபாடு சம்பந்தப்பட்ட மற்ற விஷயங்களையும் கணவர்தான் முன்னின்று நடத்த வேண்டும்.—எபே. 6:4.

ஆர்வமாக பைபிளைப் படிப்பதைப் பற்றியும் ஆழமாக யோசித்துப் பார்ப்பதைப் பற்றியும் மரியாளிடமிருந்து மனைவிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்? (பாரா 22) *

22. மரியாளிடமிருந்து மனைவிகள் என்ன கற்றுக்கொள்ளலாம்?

22 மனைவிகளுக்குப் பாடங்கள்: மனைவிகள் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியிருந்தாலும், அவர்களுடைய விசுவாசத்தைப் பலமாக வைத்துக்கொள்வது அவர்களுடைய பொறுப்புதான். (கலா. 6:5) அதற்கு, பைபிளையும் பிரசுரங்களையும் படித்து அவற்றை ஆழமாக யோசித்துப் பார்க்க நேரம் ஒதுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, யெகோவாமீது அன்பும் மரியாதையும் வளரும், கணவனுக்குக் கட்டுப்பட்டு நடப்பதும் சந்தோஷத்தைத் தரும்.

23. கணவர்களுக்குக் கட்டுப்பட்டு நடக்கிற மனைவிகள் தங்களுக்கும் குடும்பத்துக்கும் சபைக்கும் எந்த விதத்தில் பிரயோஜனமாக இருக்கிறார்கள்?

23 தலைமை ஸ்தானத்துக்குக் கீழ்ப்படியாத மனைவிகளைவிட, யெகோவாமேல் இருக்கிற அன்பால் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்கிற மனைவிகளுக்குச் சந்தோஷமும் திருப்தியும் நிறைவாக இருக்கும். இளம் ஆண்களுக்கும் பெண்களுக்கும் அவர்கள் முன்மாதிரிகளாக இருக்கிறார்கள். குடும்பத்தில் மட்டுமல்ல சபையிலும் சந்தோஷமும் சமாதானமும் பெருகுவதற்கு உதவுகிறார்கள். (தீத். 2:3-5) சொல்லப்போனால், யெகோவாவின் சாட்சிகளில் பெண்கள்தான் நிறைய பேர்! (சங். 68:11) ஆண்களாக இருந்தாலும் சரி, பெண்களாக இருந்தாலும் சரி, நம் எல்லாராலும் சபையின் சந்தோஷம் பெருகுவதற்கு உதவ முடியும். இதைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

பாட்டு 36 ‘தேவன் இணைத்த பந்தம்’

^ பாரா. 5 மனைவிகள் தங்கள் கணவருக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். கட்டுப்பட்டு நடப்பது என்றால் என்ன? இயேசுவிடமிருந்தும் பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற சில பெண்களிடமிருந்தும் கணவர்களும் மனைவிகளும் இதைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ளலாம்.

^ பாரா. 68 படவிளக்கம்: யோவான் ஸ்நானகரின் அம்மாவான எலிசபெத்திடம் மரியாள் பேசியபோது, தான் மனப்பாடம் செய்துவைத்திருந்த வசனங்களை மேற்கோள்காட்டி பேசினாள்.

^ பாரா. 70 படவிளக்கம்: ஒரு சகோதரருடைய மனைவி, யெகோவாவோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்ள, நேரம் ஒதுக்கி பைபிளைப் படிக்கிறார்.