ஆளும் குழுவின் இரண்டு புதிய அங்கத்தினர்கள்
ஜனவரி 18, 2023 புதன்கிழமை அன்று, jw.org வெப்சைட்டில் ஒரு விசேஷ அறிவிப்பு வந்தது. சகோதரர்கள் கேஜ் ஃப்லீகல் மற்றும் ஜெஃப்ரி வின்டர், யெகோவாவின் சாட்சிகளுடைய ஆளும் குழுவின் புதிய அங்கத்தினர்களாக சேர்க்கப்பட்டிருப்பதாக அதில் சொல்லியிருந்தது. இந்த இரண்டு சகோதரர்களும் ரொம்ப வருஷங்களாக யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்து வருகிறார்கள்.
சகோதரர் ஃப்லீகல், அமெரிக்காவில் இருக்கிற மேற்கு பென்ஸில்வேனியாவில் வளர்ந்தார். அவருடைய அப்பா அம்மா அவரை சத்தியத்தில் வளர்த்தார்கள். அவர் டீனேஜ் வயதில் இருந்தபோது, தேவை அதிகம் இருக்கிற ஒரு சின்ன ஊருக்கு அவருடைய குடும்பம் குடிமாறியது. அதன்பிறகு கொஞ்ச காலம் கழித்து, அதாவது, நவம்பர் 20, 1988-ல் சகோதரர் ஃப்லீகல் ஞானஸ்நானம் எடுத்தார்.
சகோதரர் ஃப்லீகலின் அப்பா அம்மா அவரை முழுநேர சேவை செய்ய எப்போதும் உற்சாகப்படுத்தினார்கள். அவர்கள் அடிக்கடி வட்டாரக் கண்காணிகளையும் பெத்தேலில் சேவை செய்யும் சகோதர சகோதரிகளையும் தங்கள் வீட்டுக்குக் கூப்பிட்டு உபசரித்தார்கள். அந்த சகோதர சகோதரிகள் சந்தோஷமாக இருந்ததை சகோதரர் ஃப்லீகலால் பார்க்க முடிந்தது. ஞானஸ்நானம் எடுத்து கொஞ்ச நாளில், அதாவது, செப்டம்பர் 1, 1989-ல் ஒழுங்கான பயனியராக அவர் சேவை செய்ய ஆரம்பித்தார். இரண்டு வருஷங்களுக்குப் பிறகு, 12 வயதில் வைத்த குறிக்கோளை அவர் அடைந்தார். அதாவது, பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தார். அக்டோபர் 1991-ல் புருக்லின் பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தார்.
பெத்தேலில் சகோதரர் ஃப்லீகல், எட்டு வருஷங்கள் புத்தகங்களை பைண்டிங் செய்யும் இலாகாவில் சேவை செய்தார். அதற்குப் பிறகு, ஊழிய இலாகாவில் வேலை செய்ய ஆரம்பித்தார். அந்த சமயத்தில், கொஞ்ச வருஷங்கள் ரஷ்ய மொழி சபைக்குப் போனார். 2006-ல் நாடியா என்ற சகோதரியை கல்யாணம் செய்துகொண்டார். சகோதரரோடு சேர்ந்து சகோதரி நாடியாவும் பெத்தேலில் சேவை செய்தார். அவர்கள் இரண்டு பேரும் போர்ச்சுகீஸ் மொழி பேசும் பகுதியில் ஊழியம் செய்திருக்கிறார்கள். பிறகு, பத்து வருஷங்களுக்கும்மேல் ஸ்பானிஷ் மொழி பேசும் பகுதியில் ஊழியம் செய்திருக்கிறார்கள். ஊழிய இலாகாவில் ரொம்ப வருஷங்கள் சேவை செய்த பிறகு, சகோதரர் ஃப்லீகல் போதனாக் குழு அலுவலகத்தில் வேலை செய்ய ஆரம்பித்தார். பிறகு, ஊழியக் குழு அலுவலகத்தில் வேலை செய்தார். மார்ச் 2022-ல் ஆளும் குழுவுடைய ஊழியக் குழுவின் உதவியாளராக நியமிக்கப்பட்டார்.
சகோதரர் வின்டர், அமெரிக்காவில் கலிபோர்னியாவில் இருக்கிற மியூரியேட்டா என்ற நகரத்தில் வளர்ந்தார். அவருடைய அப்பா அம்மா அவரை சத்தியத்தில் வளர்த்தார்கள். மார்ச் 29, 1986-ல் அவர் ஞானஸ்நானம் எடுத்தார். அடுத்த மாதமே துணை பயனியர் ஊழியம் செய்தார். அது அவருக்கு ரொம்ப பிடித்திருந்ததால், அதைத் தொடர்ந்து செய்தார். சில மாதங்களுக்குத் துணை பயனியராக சேவை செய்த பிறகு, அக்டோபர் 1, 1986-ல் ஒழுங்கான பயனியராக சேவை செய்ய ஆரம்பித்தார்.
டீனேஜில் இருந்தபோது, பெத்தேலில் சேவை செய்துகொண்டிருந்த தன்னுடைய இரண்டு அண்ணன்களை பார்க்க சகோதரர் வின்டர் போயிருந்தார். அப்படி பார்க்க போனதால், பெத்தேலில் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை அவருக்கு வந்தது. மே 1990-ல் வால்கிலில் இருக்கிற பெத்தேலில் சேவை செய்ய ஆரம்பித்தார்.
பெத்தேலில் சகோதரர் வின்டர் நிறைய இலாகாக்களில் வேலை செய்திருக்கிறார். சுத்தம் செய்யும் இலாகா, பெத்தேல் பண்ணை, பெத்தேல் அலுவலகம் போன்ற இலாகாக்களில் வேலை செய்திருக்கிறார். 1997-ல் ஏஞ்சலா என்ற சகோதரியைக் கல்யாணம் செய்தார். அப்போதிலிருந்து அவர்கள் இரண்டு பேருமே பெத்தேலில் சேவை செய்து வருகிறார்கள். 2014-ல் அவர்கள் வார்விக்குக்கு வந்தார்கள். தலைமை அலுவலகத்தின் கட்டுமான வேலையில் சகோதரர் உதவி செய்தார். 2016-ல் பேட்டர்சனில் இருக்கிற உவாட்ச்டவர் கல்வி மையத்துக்கு மாறிப் போனார்கள். அங்கே, ஆடியோ-வீடியோ இலாகாவில் சகோதரர் வின்டர் சேவை செய்தார். நான்கு வருஷங்களுக்குப் பிறகு, மறுபடியும் அவர்கள் வார்விக்குக்கு மாறி வந்தார்கள். அங்கே ஊழியர்களின் குழுவின் அலுவலகத்தில் சகோதரர் வேலை செய்தார். பிறகு, மார்ச் 2022-ல் ஆளும் குழுவுடைய ஊழியர்களின் குழுவின் உதவியாளராக நியமிக்கப்பட்டார்.
இப்படிப்பட்ட “மனிதர்களைப் பரிசுகளாக” யெகோவா நமக்குக் கொடுத்திருக்கிறார். (எபே. 4:8) இவர்கள் கடவுளுடைய அரசாங்கத்துக்காகக் கடினமாக வேலை செய்கிறார்கள். யெகோவா அவர்களைத் தொடர்ந்து ஆசீர்வதிக்க நாம் ஜெபம் செய்யலாம்!