Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 5

பாட்டு 27 கடவுளுடைய மகன்கள் வெளிப்படுவார்கள்

‘நான் ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டேன்’!

‘நான் ஒருபோதும் உன்னைக் கைவிட மாட்டேன்’!

“‘நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்’ என்று [கடவுள்] சொல்லியிருக்கிறார்.”எபி. 13:5ஆ.

என்ன கற்றுக்கொள்வோம்?

பூமியில் மீதியாக இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் பரலோகத்துக்கு போன பிறகு, பூமியில் இருக்கும் கடவுளுடைய ஊழியர்கள் கைவிடப்பட மாட்டார்கள். இதில் நாம் எப்படி உறுதியாக இருக்கலாம் என்று பார்ப்போம்.

1. பரலோக நம்பிக்கையுள்ள எல்லாரும் எப்போது பரலோகத்துக்கு போவார்கள்?

 சில வருஷங்களுக்கு முன்பு, பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் எல்லாரும் எப்போது பரலோகத்துக்கு போவார்கள் என்ற சந்தேகம் நமக்கு இருந்தது. அர்மகெதோன் போருக்குப் பிறகும்கூட அவர்களில் சிலர் பூஞ்சோலை பூமியில் இருப்பார்கள் என்று ஒருசமயம் நாம் நினைத்தோம். ஆனால், ஜூலை 15, 2013 காவற்கோபுரத்தில் ஒரு புதிய விளக்கம் வந்தது. அர்மகெதோன் போர் ஆரம்பிப்பதற்கு முன்பே அவர்கள் எல்லாரும் பரலோகத்துக்குப் போவார்கள் என்று அதிலிருந்து தெரிந்துகொண்டோம்.—மத். 24:31.

2. நமக்கு என்ன கேள்வி வரலாம், இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?

2 அப்படியென்றால், “மிகுந்த உபத்திரவம்” சமயத்தில் ‘வேறே ஆடுகளுக்கு’ என்ன நடக்கும் என்ற சந்தேகம் வரலாம். (யோவா. 10:16; மத். 24:21) ஒருவேளை, பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எல்லாரும் பரலோகத்துக்குப் போன பிறகு நம்மை வழிநடத்த யாருமே இருக்க மாட்டார்களோ என்று சிலர் கவலைப்படலாம். அவர்கள் அப்படி நினைப்பதற்கு இரண்டு பைபிள் பதிவுகள் காரணமாக இருக்கலாம். அதைப் பற்றி இப்போது பார்க்கலாம். அதேசமயத்தில், அவர்கள் ஏன் அப்படிக் கவலைப்பட தேவையில்லை என்றும் பார்க்கலாம்.

என்ன நடக்காது?

3-4. சிலர் என்ன யோசிக்கலாம், ஏன்?

3 ஆளும் குழுவில் இருக்கிற எல்லாரும் பரலோகத்துக்குப் போன பிறகு, வேறே ஆடுகள் யெகோவாவை வணங்குவதை நிறுத்திவிடுவார்களோ என்று சிலர் யோசிக்கலாம். சில பைபிள் பதிவுகளை மனதில் வைத்து அவர்கள் அப்படி யோசிக்கலாம். இப்போது, இரண்டு பதிவுகளைப் பார்க்கலாம். முதலில், தலைமை குரு யோய்தாவைப் பற்றிப் பார்க்கலாம். அவர் யெகோவாவுக்கு உண்மையாக சேவை செய்தார். அவரும் அவருடைய மனைவி யோசேபியாத்தும் யோவாஸ் என்ற சின்ன பையனைக் காப்பாற்றினார்கள். யெகோவாவுக்குப் பயந்து நடக்கிற நல்ல ராஜாவாக அவர் ஆக உதவினார்கள். யோய்தா உயிரோடு இருந்தவரை யோவாஸ் யெகோவாவுக்குப் பயந்து நடந்தார். ஆனால், யோய்தா இறந்த பிறகு அவர் கெட்ட விஷயங்களை செய்ய ஆரம்பித்துவிட்டார். கெட்ட அதிகாரிகள் சொல்வதைக் கேட்டு யெகோவாவை விட்டே போய்விட்டார்.—2 நா. 24:2, 15-19.

4 அடுத்த உதாரணம், இரண்டாவது நூற்றாண்டில் வாழ்ந்த கிறிஸ்தவர்கள். அப்போஸ்தலர்களில் கடைசியாக உயிரோடு இருந்த யோவான், அன்றிருந்த கிறிஸ்தவர்கள் யெகோவாவுக்கு உண்மையாக இருக்க உதவினார். (3 யோ. 4) மற்ற அப்போஸ்தலர்களோடு சேர்ந்து அவரும் விசுவாசதுரோகத்துக்கு எதிராக பயங்கரமாக போராடினார். (1 யோ. 2:18; 2 தெ. 2:7) ஆனால், அவர் இறந்த பிறகு, விசுவாசதுரோகம் காட்டுத்தீ போல் பரவியது. சில வருஷங்களிலேயே, கிறிஸ்தவ சபை விசுவாசதுரோகத்துக்குள் முழுமையாக மூழ்கிவிட்டது.

5. இந்த இரண்டு பதிவுகளை வைத்து நாம் எந்த முடிவுக்கு வரவேண்டிய அவசியம் இல்லை?

5 பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் எல்லாரும் பரலோகத்துக்குப் போன பிறகு, இந்த இரண்டு பைபிள் பதிவுகளில் நடந்தது போல வேறே ஆடுகளுக்கு ஏதாவது நடக்குமா? ஒருவேளை, யோவாஸ் மாதிரி அவர்கள் யெகோவாவுக்கு சேவை செய்வதை நிறுத்திவிடுவார்களா? அல்லது, இரண்டாவது நூற்றாண்டு கிறிஸ்தவர்களைப் போல் விசுவாசதுரோகத்துக்குள் போய்விடுவார்களா? நிச்சயமாக இல்லை! பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் போன பிறகும் வேறே ஆடுகளைச் சேர்ந்தவர்கள் யெகோவாவை சரியான விதத்தில் தொடர்ந்து வணங்குவார்கள். யெகோவாவும் அவர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுப்பார். அதில் நாம் ஏன் உறுதியாக இருக்கலாம்?

தூய வணக்கம் கறைபடாது

6. என்ன மூன்று காலப்பகுதிகளைப் பற்றி இப்போது நாம் பார்க்க போகிறோம்?

6 எதிர்காலத்தில் சூழ்நிலைகள் எவ்வளவு மோசமானாலும், தூய வணக்கம் கறைபடாது என்பதில் நாம் ஏன் நம்பிக்கையோடு இருக்கலாம்? நாம் வாழ்கிற இந்தக் காலப்பகுதியைப் பற்றி பைபிள் சொல்கிற சில தகவல்களிலிருந்து அந்த நம்பிக்கை கிடைக்கிறது. நாம் வாழ்கிற இந்த காலப்பகுதி, அன்று இஸ்ரவேலர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் இருந்தும் இரண்டாவது நூற்றாண்டு கிறிஸ்தவர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் இருந்தும் ரொம்பவே வித்தியாசப்படுகிறது. அதனால், இந்த மூன்று காலப்பகுதிகளைப் பற்றிக் கொஞ்சம் அலசிப் பார்க்கலாம்: (1) இஸ்ரவேலர்கள் வாழ்ந்த காலப்பகுதி, (2) அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு வந்த காலப்பகுதி, (3) நம்முடைய காலப்பகுதி, அதாவது “எல்லாம் புதுப்பிக்கப்படுகிற” காலப்பகுதி.—அப். 3:21.

7. இஸ்ரவேல் மக்களும் அவர்களுடைய ராஜாவும் கெட்ட வழியில் போனபோது, யெகோவாவுக்கு உண்மையாக இருந்தவர்கள் நம்பிக்கை இழந்திருப்பார்களா?

7 இஸ்ரவேலர்கள் வாழ்ந்த காலப்பகுதி. இறப்பதற்குக் கொஞ்சம் முன்பு, மோசே இஸ்ரவேலர்களிடம் இப்படிச் சொன்னார்: “நான் இறந்த பின்பு நீங்கள் அக்கிரமம் செய்வீர்கள் என்றும் நான் காட்டிய வழியைவிட்டு விலகிப்போவீர்கள் என்றும் எனக்கு நன்றாகத் தெரியும்.” (உபா. 31:29) அவர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனால், யெகோவா அவர்களை அந்தத் தேசத்தை விட்டே துரத்தியடித்து விடுவார் என்றும் மோசே எச்சரித்தார். (உபா. 28:35, 36) காலங்கள் போகப் போக, அவர் சொன்னது அப்படியே நடந்தது. நிறைய ராஜாக்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள், மக்களையும் அவரைவிட்டு விலகிப் போக வைத்தார்கள். அதனால், கெட்டவர்களை யெகோவா அழிக்க முடிவு செய்தார். தன்னுடைய மக்களை, இஸ்ரவேல் ராஜாக்கள் ஆட்சி செய்வதற்கும் அவர் அனுமதிக்கவில்லை. (எசே. 21:25-27) ஆனால், அந்த சமயத்தில் வாழ்ந்த உண்மையுள்ள இஸ்ரவேலர்கள் நம்பிக்கை இழந்திருப்பார்களா? இல்லை! யெகோவா சொன்னதெல்லாம் அப்படியே நடந்ததை அவர்கள் பார்த்ததால், தைரியமாக அவருக்குத் தொடர்ந்து சேவை செய்தார்கள்.—ஏசா. 55:10, 11.

8. இரண்டாவது நூற்றாண்டில் கிறிஸ்தவ சபை கறைபட்டதை நினைத்து நாம் ஆச்சரியப்பட வேண்டுமா? விளக்குங்கள்.

8 அப்போஸ்தலர்கள் இறந்த பிறகு வந்த காலப்பகுதி. இரண்டாவது நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவ சபை கறைபட்டதை நினைத்து நாம் ஆச்சரியப்பட வேண்டுமா? தேவையில்லை. ஏனென்றால், பெரியளவில் விசுவாசதுரோகம் வரும் என்று ஏற்கெனவே இயேசு சொல்லியிருந்தார். (மத். 7:21-23; 13:24-30, 36-43) இயேசு சொன்ன தீர்க்கதரிசனம் முதல் நூற்றாண்டிலேயே நிறைவேற ஆரம்பித்துவிட்டது என்று அப்போஸ்தலன் பவுல், பேதுரு மற்றும் யோவானும் சொன்னார்கள். (2 தெ. 2:3, 7; 2 பே. 2:1; 1 யோ. 2:18) தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டது போலவே, இரண்டாவது நூற்றாண்டில் கிறிஸ்தவ சபை கறைபட்டது. பொய் போதனைகள் நிறைந்த ஒரு கிறிஸ்தவ மதம் உருவானது. அது பொய் மதத்தின், அதாவது மகா பாபிலோனின், ஒரு முக்கியமான பாகமாக ஆனது.

9. நாம் வாழ்கிற இந்தக் காலப்பகுதி எப்படி வித்தியாசப்பட்டிருக்கிறது?

9 ‘எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலப்பகுதி.’ நாம் வாழ்கிற இந்தக் காலப்பகுதி, இஸ்ரவேலர்கள் வாழ்ந்த காலப்பகுதியில் இருந்தும் இரண்டாவது நூற்றாண்டில் விசுவாசதுரோகம் வந்த காலப்பகுதியில் இருந்தும் வித்தியாசப்படுகிறது. அப்படியென்றால், நாம் எந்தக் காலப்பகுதியில் வாழ்கிறோம்? ஒருவேளை, “கடைசி நாட்களில்” என்று நீங்கள் சொல்லலாம். (2 தீ. 3:1) ஆனால், இன்னொரு பிரமாண்டமான காலப்பகுதி அதே சமயத்தில் ஆரம்பித்ததாக பைபிள் சொல்கிறது. இந்தப் பூமியைப் பூஞ்சோலையாக மாற்றி மனிதர்கள் எல்லாரும் பரிபூரணமாக ஆகும்வரை அந்தக் காலப்பகுதி தொடரும். இந்தக் காலப்பகுதியை ‘எல்லாம் புதுப்பிக்கப்படுகிற காலப்பகுதி’ என்று பைபிள் சொல்கிறது. (அப். 3:21) அது, 1914-ல் ஆரம்பித்தது. அந்த சமயத்தில் எது புதுப்பிக்கப்பட்டது? யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்கிற ஒரு ஆட்சி புதுப்பிக்கப்பட்டது. கடவுளுடைய அரசாங்கத்தின் ராஜாவாக இயேசு அரியணை ஏறினார். அந்த சமயத்தில், தாவீதின் வம்சத்தில் வந்த ஒரு உண்மையுள்ள ராஜா மறுபடியும் யெகோவாவை பிரதிநிதித்துவம் செய்து ஆட்சி செய்ய ஆரம்பித்தார். ஆனால், 1914-ல் ஆட்சியை மட்டும்தான் யெகோவா புதுப்பித்தாரா? இல்லை. சீக்கிரத்திலேயே தூய வணக்கத்தையும் யெகோவா புதுப்பித்தார். (ஏசா. 2:2-4; எசே. 11:17-20) தூய வணக்கம் மறுபடியும் கறைபடுமா?

10. (அ) நம்முடைய நாட்களில் தூய வணக்கம் எப்படி இருக்கும் என்று பைபிள் சொன்னது? (ஏசாயா 54:17) (ஆ) இந்தத் தீர்க்கதரிசனங்கள் நமக்கு ஏன் நம்பிக்கையைக் கொடுக்கிறது?

10 ஏசாயா 54:17-ஐ வாசியுங்கள். “உன்னைத் தாக்குவதற்காக உருவாக்கப்படுகிற எந்த ஆயுதமும் ஒன்றுமில்லாமல் போகும்.” இந்தத் தீர்க்கதரிசனத்தைப் பற்றி யோசிக்கும்போது உங்களுக்குப் புல்லரிக்கிறதா? இது நம்முடைய நாளில் நிறைவேறி வருகிறது. அதுமட்டுமல்ல, “உன் பிள்ளைகள் எல்லாரும் யெகோவாவினால் கற்பிக்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் மிகுந்த சமாதானத்தோடு இருப்பார்கள். நீ நீதியில் உறுதியாக நிலைநாட்டப்படுவாய். . . . நீ எதற்குமே பயப்பட மாட்டாய், எதுவுமே உன்னைப் பயமுறுத்தாது. திகில் உன்னை நெருங்காது” என்று யெகோவா சொல்லியிருக்கிறார். (ஏசா. 54:13, 14) இந்த ஆறுதலான தீர்க்கதரிசனமும் இன்று நிறைவேறிக்கொண்டிருக்கிறது. யெகோவாவின் மக்கள் செய்துவருகிற கற்பிக்கிற வேலையை ‘இந்த உலகத்தின் கடவுளாக’ இருக்கிற சாத்தானால்கூட தடுத்து நிறுத்த முடியவில்லை. (2 கொ. 4:4) தூய வணக்கம் புதுப்பிக்கப்பட்டு இப்போது நிலைநாட்டப்பட்டிருக்கிறது; அது மறுபடியும் கறைபடவே படாது. அது என்றென்றும் நிலைத்திருக்கும். நமக்கு எதிராக வரும் எந்த ஆயுதமும் தவிடுபொடியாகும்!

என்ன நடக்கும்?

11. பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் போன பிறகு திரள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் பயப்பட வேண்டுமா?

11 பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் போன பிறகு என்ன நடக்கும்? திரள் கூட்டத்தை சேர்ந்தவர்கள் பயப்பட வேண்டுமா? இயேசுதான் நம்முடைய மேய்ப்பர் என்பதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். அவர்தான் சபைக்குத் தலைவர். “கிறிஸ்து ஒருவர்தான் உங்கள் தலைவர்” என்று அவரே சொல்லியிருக்கிறார். (மத். 23:10) கிறிஸ்துவே நம்முடைய தலைவராக இருப்பதால் நாம் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய தலைவர் அவருடைய வேலையை சரியாக செய்வார். எதிர்காலத்தில் கிறிஸ்து தன்னுடைய மக்களை எப்படி வழிநடத்துவார் என்பதைப் பற்றிய எல்லா விவரங்களும் இப்போது நமக்குத் தெரியாதுதான். ஆனால், நமக்கு நம்பிக்கை தரும் சில பைபிள் பதிவுகளை இப்போது பார்க்கலாம்.

12. யெகோவா எப்படி இந்த சமயங்களில் தன்னுடைய மக்களைப் பார்த்துக்கொண்டார்: (அ) மோசே இறந்த பிறகு? (ஆ) எலியாவுக்கு வேறு நியமிப்பு கிடைத்த பிறகு? (படத்தையும் பாருங்கள்.)

12 இஸ்ரவேலர்கள் வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போவதற்கு முன்பே மோசே இறந்துவிட்டார். அப்போது கடவுளுடைய மக்களுக்கு என்ன ஆனது? தலைவர் இல்லாமல் அப்படியே நிற்கதியாக ஆனார்களா? இல்லை! தனக்கு உண்மையாக இருந்தவரை யெகோவா அவர்களை நன்றாகப் பார்த்துக்கொண்டார். மோசே இறப்பதற்கு முன்பே, மக்களை வழிநடத்துவதற்காக யோசுவாவை நியமிக்க சொல்லி யெகோவா சொல்லியிருந்தார். மோசேயும் பல வருஷங்களாக யோசுவாவுக்குப் பயிற்சி கொடுத்து வந்தார். (யாத். 33:11; உபா. 34:9) அதுமட்டுமல்ல, மக்களை வழிநடத்த திறமையான மற்ற ஆண்களும் இருந்தார்கள். ஆயிரம் பேருக்கு, நூறு பேருக்கு, ஐம்பது பேருக்கு, பத்து பேருக்குத் தலைவர்கள் இருந்தார்கள். (உபா. 1:15) இவர்கள் எல்லாரும் கடவுளுடைய மக்களை நன்றாக பார்த்துக்கொண்டார்கள். அடுத்து, எலியாவுடைய காலத்தைப் பற்றி பார்க்கலாம். பல வருஷங்களாக அவர் மக்களை உண்மை வணக்கத்தின் பக்கம் வழிநடத்திவந்தார். ஆனால், யெகோவா ஒரு சமயம் அவரை யூதாவுக்குப் போய் சேவை செய்ய சொன்னார். (2 ரா. 2:1; 2 நா. 21:12) பத்து கோத்திர ராஜ்யத்தில் இருந்த உண்மையுள்ள மக்களுக்கு அப்போது எப்படி இருந்திருக்கும்? வழிநடத்த யாருமே இல்லை என்று அவர்கள் உணர்ந்தார்களா? இல்லை. எலியா பல வருஷங்களாக எலிசாவுக்குப் பயிற்சி கொடுத்திருந்தார். அதுமட்டுமல்ல, ‘தீர்க்கதரிசிகளின் மகன்களும்’ இருந்தார்கள். அவர்களுக்கும் நிறைய பயிற்சி கிடைத்திருந்தது. (2 ரா. 2:7) அப்படியென்றால், கடவுளுடைய மக்களை வழிநடத்த நிறைய உண்மையுள்ள ஆண்கள் இருந்திருப்பார்கள். யெகோவா தன்னுடைய நோக்கத்தைத் தொடர்ந்து நிறைவேற்றினார்; மக்களையும் நன்றாக பார்த்துக்கொண்டார்.

மோசேயும் (இடது பக்கத்தில் இருக்கிற படம்) எலியாவும் (வலது பக்கத்தில் இருக்கிற படம்) தங்களுக்கு அடுத்து மக்களை வழிநடத்த மற்றவர்களுக்குப் பயிற்சிக் கொடுத்தார்கள் (பாரா 12)


13. எபிரெயர் 13:5-ன் இரண்டாவது பாகத்தில் யெகோவா நமக்கு என்ன வாக்குக் கொடுத்திருக்கிறார்? (படத்தையும் பாருங்கள்.)

13 இந்த உதாரணங்களைப் பார்க்கும்போது நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் போன பிறகு நமக்கு என்ன ஆகுமோ என்று கவலைப்பட வேண்டுமா? தேவையில்லை என்ற முடிவுக்கு நீங்களே வந்திருப்பீர்கள். பூமியில் இருக்கும் தன்னுடைய மக்களை யெகோவா கைவிடவே மாட்டார் என்று பைபிள் ரொம்ப தெளிவாக காட்டுகிறது. (எபிரெயர் 13:5ஆ-ஐ வாசியுங்கள்.) இன்று, யெகோவாவுடைய மக்களை வழிநடத்துகிற பரலோக நம்பிக்கையுள்ள சகோதரர்களும் மற்றவர்களுக்குப் பயிற்சிக் கொடுப்பது எந்தளவு முக்கியம் என்பதை புரிந்துவைத்திருக்கிறார்கள்—மோசே மற்றும் எலியா மாதிரியே! பல வருஷங்களாகவே ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் வேறே ஆடுகளைச் சேர்ந்த சகோதரர்களுக்குப் பயிற்சி கொடுத்து வருகிறார்கள். உதாரணத்துக்கு, மூப்பர்களுக்கும் வட்டாரக் கண்காணிகளுக்கும் கிளை அலுவலகக் குழு அங்கத்தினர்களுக்கும் பெத்தேலில் இருக்கிற கண்காணிகளுக்கும் மற்றவர்களுக்கும் நிறைய பள்ளிகளை ஏற்பாடு செய்கிறார்கள். அதுமட்டுமல்ல, ஆளும் குழுவின் கீழ் இருக்கிற வெவ்வேறு குழுக்களில் சேவை செய்கிற உதவியாளர்களுக்கும் இந்த சகோதரர்கள் தனிப்பட்ட விதமாக பயிற்சிக் கொடுக்கிறார்கள். உதவியாளர்கள் இப்போதே பெரிய பெரிய பொறுப்புகளை செய்கிறார்கள். கிறிஸ்துவின் ஆடுகளைத் தொடர்ந்து பார்த்துக்கொள்வதற்கு இவர்கள் இப்போதே தயாராக இருக்கிறார்கள்.

ஆளும் குழுவில் இருக்கிறவர்கள் உதவியாளர்களுக்குப் பயிற்சிக் கொடுக்கிறார்கள். அதோடு, மூப்பர்கள், வட்டாரக் கண்காணிகள், கிளை அலுவலகக் குழு அங்கத்தினர்கள், பெத்தேலில் இருக்கும் கண்காணிகள், மிஷனரிகள் போன்றவர்களுக்குப் பயிற்சிக் கொடுக்க நிறைய பள்ளிகளை ஏற்பாடு செய்கிறார்கள் (பாரா 13)


14. இதுவரை பார்த்ததிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

14 இதுவரை பார்த்ததிலிருந்து நாம் என்ன கற்றுக்கொண்டோம்? மிகுந்த உபத்திரவத்தின் கடைசியில், பரலோக நம்பிக்கையுள்ள எல்லாரும் போன பிறகு, தூய வணக்கம் ஒழிந்துபோகாது. யெகோவாவுடைய மக்கள் தொடர்ந்து அவரை வணங்குவார்கள். இயேசு நம்முடைய தலைவராக இருப்பதால், நமக்கு ஒரு குறையும் இருக்காது. அந்த சமயத்தில், மாகோகு தேசத்தின் கோகு, அதாவது உலக நாடுகளின் கூட்டணி, நம்மைத் தாக்கும் என்பது உண்மைதான். (எசே. 38:18-20) ஆனால், அந்தத் தாக்குதல் தோல்வியில்தான் போய் முடியும். அதாவது, நாம் யெகோவாவை வணங்குவதை அவர்களால் தடுக்கவே முடியாது. யெகோவா கண்டிப்பாக தன்னுடைய மக்களைக் காப்பாற்றுவார். அதைத்தான் அப்போஸ்தலன் யோவான் ஒரு தரிசனத்தில் பார்த்தார். “மிகுந்த உபத்திரவத்திலிருந்து,” வேறே ஆடுகளைச் சேர்ந்த “திரள் கூட்டமான மக்கள்” தப்பித்து வருவதை அவர் பார்த்தார். (வெளி. 7:9, 14) அப்படியென்றால், யெகோவா அவர்களைக் கண்டிப்பாக காப்பாற்றுவார் என்று தெரிகிறது.

15-16. வெளிப்படுத்துதல் 17:14 சொல்வதுபோல், அர்மகெதோன் போரின்போது பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் என்ன செய்வார்கள், இது ஏன் நமக்குத் தைரியத்தைத் தருகிறது?

15 ஒருவேளை சிலர் இப்படி யோசிக்கலாம்: ‘பரலோக நம்பிக்கை உள்ளவர்களுக்கு என்ன ஆகும்? பரலோகத்துக்குப் போன பிறகு அவர்கள் என்ன செய்வார்கள்?’ பைபிள் அதற்குப் பதில் சொல்கிறது. இந்த உலகத்தின் அரசாங்கங்கள் ‘ஆட்டுக்குட்டியானவரோடு போர் செய்யும்’ என்று அது சொல்கிறது. ஆனால், அவர்கள் கண்டிப்பாக தோற்றுத்தான் போவார்கள். ஏனென்றால், ஆட்டுக்குட்டியானவர் “அவர்களை ஜெயித்துவிடுவார்” என்று அந்த வசனம் தொடர்ந்து சொல்கிறது. அவருக்கு யார் உதவி செய்வார்கள்? அந்த வசனத்தில், “அழைக்கப்பட்டவர்கள்,” “தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்,” “உண்மையுள்ளவர்கள்” என்று சொல்லப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 17:14-ஐ வாசியுங்கள்.) இவர்கள் வேறு யாருமில்லை, உயிர்த்தெழுந்து பரலோகத்துக்குப் போகிற கிறிஸ்தவர்கள்தான்! மிகுந்த உபத்திரவத்தின் கடைசியில் பரலோகத்துக்குப் போன பிறகு இவர்களுக்குக் கிடைக்கும் முதல் நியமிப்பே போர் செய்வதுதான். இது எவ்வளவு பெரிய நியமிப்பு! யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கு முன்பு இவர்களில் சிலர் சண்டைப் போட்டிருக்கிறார்கள். சிலர் ராணுவத்தில்கூட வேலை செய்திருக்கிறார்கள். ஆனால், உண்மை கிறிஸ்தவர்களாக ஆன பிறகு மற்றவர்களோடு சமாதானமாக இருக்க கற்றுக்கொண்டார்கள். (கலா. 5:22; 2 தெ. 3:16) போர் செய்வதையும் அதற்கு ஆதரவு கொடுப்பதையும் நிறுத்திவிட்டார்கள். ஆனால், பரலோகத்துக்குப் போன பிறகு, இயேசுவோடும் அவருடைய தூதர்களோடும் சேர்ந்து இவர்கள் போர் செய்வார்கள். கடவுளுடைய எதிரிகளை அந்தக் கடைசி போரில் வெட்டி வீழ்த்துவார்கள்.

16 இதை யோசித்துப் பாருங்கள்: பரலோக நம்பிக்கையுள்ளவர்களில் சிலர் இப்போது வயதானவர்களாகவும் பலவீனமானவர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், பரலோகத்துக்குப் போன பிறகு அழிவே இல்லாத ஒரு மகத்தான ஆவி உடல் அவர்களுக்குக் கிடைக்கும். அவர்கள் தங்களுடைய தளபதியான இயேசுவோடு சேர்ந்து போர் செய்வார்கள். அர்மகெதோன் போர் முடிந்த பிறகு, மனிதர்கள் பரிபூரணமாக ஆவதற்கு அவரோடு சேர்ந்து உழைப்பார்கள். இவர்கள் சாதாரண மனிதர்களாக பூமியில் செய்ததைவிட, பரலோகத்துக்குப் போன பிறகு பூமியில் இருக்கும் தங்களுடைய சகோதர சகோதரிகளுக்கு இன்னும் நிறைய உதவி செய்வார்கள்.

17. அர்மகெதோன் போர் சமயத்தில் கடவுளுடைய ஊழியர்கள் எல்லாருமே பாதுகாப்பாக இருப்பார்கள் என்று எப்படி சொல்கிறோம்?

17 நீங்கள் வேறே ஆடுகளை சேர்ந்த ஒருவரா? அப்படியென்றால், அர்மகெதோன் போர் ஆரம்பிக்கும்போது நீங்கள் என்ன செய்ய வேண்டும்? ஒரே வரியில் சொன்னால்: யெகோவாவை நம்ப வேண்டும், அவர் சொல்வதை கேட்க வேண்டும்! பைபிள் சொல்லும் இந்த விஷயத்தையும் நீங்கள் செய்ய வேண்டியிருக்கலாம்: “உங்களுடைய உள்ளறைகளுக்குப் போங்கள். கதவுகளை அடைத்துக்கொள்ளுங்கள். கடவுளுடைய கோபம் தீரும்வரை கொஞ்ச நேரத்துக்கு ஒளிந்துகொள்ளுங்கள்.” (ஏசா. 26:20) கடவுளுடைய ஊழியர்களாக நாம் எல்லாருமே, பரலோகத்தில் இருந்தாலும் சரி, பூமியில் இருந்தாலும் சரி, அந்த சமயத்தில் பாதுகாப்பாக இருப்போம். அதனால் அப்போஸ்தலன் பவுலைப் போலவே நாமும் இப்படி சொல்லலாம்: “அரசாங்கங்களோ, இன்றுள்ள காரியங்களோ, இனிவரும் காரியங்களோ, . . . கடவுள் காட்டுகிற அன்பிலிருந்து நம்மைப் பிரிக்க முடியாதென்று உறுதியாக நம்புகி[றோம்].” (ரோ. 8:38, 39) இதை எப்போதும் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: யெகோவா உங்கள்மேல் உயிரையே வைத்திருக்கிறார்; உங்களை அம்போ என்று விட்டுவிட மாட்டார்!

பரலோக நம்பிக்கையுள்ள எல்லாரும் பரலோகத்துக்குப் போன பிறகு,

  • என்ன நடக்காது?

  • தூய வணக்கம் கறைபடாது என்று ஏன் உறுதியாக இருக்கலாம்?

  • யெகோவா தன்னுடைய மக்களை பார்த்துக்கொள்வார் என்று ஏன் நம்பலாம்?

பாட்டு 8 யெகோவா நம் தஞ்சம்!