உங்களுக்குத் தெரியுமா?
பைபிளில் ஏன் சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டிருக்கின்றன?
பைபிளை எழுதியவர்கள் சிலசமயங்களில் ஒரே வார்த்தையைத் திரும்பத் திரும்ப எழுதியிருக்கிறார்கள். அதற்கு, இந்தமாதிரி மூன்று காரணங்கள் இருந்திருக்கலாம்:
எழுதப்பட்ட காலப்பகுதி. ஆரம்பகால இஸ்ரவேலர்களில், பெரும்பாலானவர்களிடம் திருச்சட்டத்தின் பிரதிகள் சொந்தமாக இருக்கவில்லை. வழிபாட்டுக் கூடாரத்தில் கடவுளை வணங்குவதற்காக ஒன்றாகக் கூடிவந்த சமயத்தில்தான் திருச்சட்டம் வாசிக்கப்பட்டதை அவர்கள் கேட்டிருப்பார்கள். (உபா. 31:10-12) அதுபோன்ற சமயங்களில் அவர்கள் ஒரு பெரிய கூட்டமாக பல மணிநேரங்கள் நின்று, வாசிக்கப்பட்டதைக் கேட்டிருப்பார்கள்; நிறைய கவனச்சிதறல்கள் அவர்களுக்கு இருந்திருக்கும். (நெ. 8:2, 3, 7) இதுபோன்ற சமயங்களில் சில வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டதால், மக்களால் சில வசனங்களை நன்றாக ஞாபகம் வைத்துக்கொண்டு அதைக் கடைப்பிடிக்கவும் முடிந்திருக்கும். அதோடு முக்கியமான சில விஷயங்களை, அதாவது கடவுளுடைய சட்டங்களையும் நீதித் தீர்ப்புகளையும், மனதில் பதியவைக்கவும் உதவியாக இருந்திருக்கும்.—லேவி. 18:4-22; உபா. 5:1.
எழுதப்பட்ட விதம். பைபிளில் கிட்டத்தட்ட 10 சதவீதம் பாடல்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, சங்கீதம், உன்னதப்பாட்டு, புலம்பல் மாதிரியான புத்தகங்களை சொல்லலாம். சில பாடல்களில் சில வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் வருகின்றன. இப்படி வருவதால், அந்த பாட்டின் முக்கிய பொருள் மனதில் பதியும்; அதை மனப்பாடம் செய்வதும் சுலபமாக இருந்திருக்கும். உதாரணத்துக்கு, சங்கீதம் 115:9-11-ல் வரும் வரிகளைப் பாருங்கள்: “இஸ்ரவேலர்களே, யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள். அவரே உங்கள் துணை, அவரே உங்கள் கேடயம். ஆரோன் வம்சத்தாரே, யெகோவாவை நம்புங்கள். அவரே உங்கள் துணை, அவரே உங்கள் கேடயம். யெகோவாவுக்குப் பயந்து நடக்கிறவர்களே, யெகோவாவை நம்புங்கள். அவரே உங்கள் துணை, அவரே உங்கள் கேடயம்.” இந்த பாடல் வரிகளில் சில வார்த்தைகள் மறுபடியும் மறுபடியும் சொல்லப்பட்டிருப்பதைக் கவனித்தீர்களா? இந்தப் பாட்டைப் பாடியவர்களின் இதயத்தில் யெகோவாவைப் பற்றிய முக்கியமான உண்மைகள் கண்டிப்பாக பதிந்திருக்கும், இல்லையா?
முக்கிய குறிப்புகளை மனதில் பதிய வைப்பதற்காக. பைபிள் எழுத்தாளர்கள் சில முக்கியமான உண்மைகளைத் திரும்ப திரும்ப எழுதியிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் இரத்தம் சாப்பிடக் கூடாது என்று யெகோவா கட்டளை கொடுத்தபோது, அதற்கான காரணத்தை மோசே மூலமாக மறுபடியும் மறுபடியும் பதிவு செய்தார். இரத்தத்தில்தான் உயிர் இருக்கிறது என்று மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று கடவுள் நினைத்தார். (லேவி. 17:11, 14) ரொம்ப காலத்துக்குப் பிறகு, எருசலேமிலிருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்களைப் பற்றி சொன்னார்கள். அப்போது, இரத்தத்துக்கு விலகி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் மறுபடியும் வலியுறுத்தி சொன்னார்கள்.—அப். 15:20, 29.
பைபிளில் சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டிருப்பது உண்மைதான்! அதற்காக, வசனங்களில் இருக்கும் வார்த்தைகளை நாம் சடங்கு மாதிரி திரும்பத் திரும்ப சொல்ல வேண்டும் என்று யெகோவா நினைப்பதில்லை. சொல்லப்போனால், ஜெபம் செய்யும்போது “சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லாதீர்கள்” என்று இயேசு சொன்னார். (மத். 6:7) நாம் எந்தெந்த விஷயங்களுக்காக ஜெபம் செய்யலாம் என்றும் சொல்லிக்கொடுத்தார். (மத். 6:9-13) ஒரே வார்த்தையை நாம் ஜெபத்தில் திரும்பத் திரும்ப சொல்வதில்லை. ஆனால், ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி திரும்பத் திரும்ப ஜெபம் செய்ய நினைத்தால், அதில் தவறு இல்லை.—மத். 7:7-11.
பைபிளில், குறிப்பிட்ட சில வார்த்தைகள் திரும்பத் திரும்ப சொல்லப்பட்டிருப்பதற்கு நல்ல காரணங்கள் இருக்கின்றன. நம்முடைய மகத்தான போதகர், நமக்கு பிரயோஜனமான விஷயங்களை சொல்லிக்கொடுக்கும் ஒரு வழி இது!—ஏசா. 48:17, 18