Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 8

பாட்டு 123 தேவ அமைப்புக்கு பணிந்து செல்வோம்

யெகோவா காட்டும் வழியில் தொடர்ந்து நடங்கள்

யெகோவா காட்டும் வழியில் தொடர்ந்து நடங்கள்

“யெகோவாவாகிய நானே . . . உங்களுக்குப் பிரயோஜனமானதை . . . கற்றுக்கொடுக்கிறேன்.”ஏசா. 48:17.

என்ன கற்றுக்கொள்வோம்?

இன்று யெகோவா தன்னுடைய மக்களுக்கு எப்படி வழிகாட்டுகிறார் என்றும், அவர் காட்டும் வழியில் நடப்பதால் என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்றும் கற்றுக்கொள்வோம்.

1. யெகோவா காட்டும் வழியில் நாம் ஏன் நடக்க வேண்டும்? விளக்குங்கள்.

 அடர்ந்த காடு! கும்மிருட்டு!! மிருகங்களின் சத்தம் காதில் விழுகிறது. விஷ பூச்சிகளின் “கீச் கீச்” காதைக் கிழிக்கிறது. விஷ செடிகளும் புதர்களும் சுற்றி இருக்கிறது. பாதையும் கரடுமுரடாக இருக்கிறது. நீங்கள் திக்குத்தெரியாமல் நிற்கிறீர்கள். அந்த நேரம் பார்த்து, அனுபவமுள்ள ஒரு வழிகாட்டி வருகிறார். ஆபத்தில் மாட்டிக்கொள்ளாமல் பாதுகாப்பாக வெளியே போக அவர் உதவுகிறார். உயிரே திரும்பி வந்ததுபோல் உங்களுக்கு இருக்கும், இல்லையா? இந்த உலகமும் அப்படி ஒரு காடுதான்! நம்மை சுற்றி நிறைய ஆபத்துகள் இருக்கின்றன. யெகோவாவோடு நமக்கு இருக்கும் பந்தத்தை அவை கெடுக்கின்றன. ஆனால், யெகோவா நமக்கு வழிகாட்டியாக இருக்கிறார். சுற்றி இருக்கும் ஆபத்தில் மாட்டிக்கொள்ளாதபடி அவர் நம்மைக் காப்பாற்றுகிறார். நாம் போய் சேரவேண்டிய இடத்துக்கும், அதாவது பூஞ்சோலை பூமிக்கும், பத்திரமாக கூட்டிக்கொண்டு போவார்.

2. யெகோவா நமக்கு எப்படி வழிகாட்டுகிறார்?

2 இன்று யெகோவா நமக்கு எப்படி வழிகாட்டுகிறார்? முக்கியமாக, தன்னுடைய வார்த்தையாகிய பைபிள் மூலம்! அதேசமயத்தில், அவர் மனிதர்களையும் பயன்படுத்துகிறார். உதாரணத்துக்கு, “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” மூலம் ஆன்மீக உணவைத் தருகிறார். (மத். 24:45) அதோடு, இன்னும் சில மனிதர்களையும் யெகோவா பயன்படுத்துகிறார். அதாவது, வட்டாரக் கண்காணிகளையும் மூப்பர்களையும் பயன்படுத்தி கஷ்டமான சூழ்நிலையை சமாளிக்க தேவையான ஆலோசனைகளைக் கொடுக்கிறார். இக்கட்டான காலங்களில் அவர்கள் கொடுக்கிற உதவிக்கு நாம் எவ்வளவு நன்றியோடு இருக்கிறோம்! யெகோவாவின் நட்பை எப்போதும் இழந்துவிடாமல் இருக்கவும் பூஞ்சோலைக்கான பாதையில் வழித்தவறிவிடாமல் இருக்கவும் இவை எல்லாமே நமக்கு உதவுகின்றன.

3. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?

3 இருந்தாலும், யெகோவா கொடுக்கிற வழிநடத்துதலின்படி செய்வது சிலசமயம் நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். அதுவும், குறையுள்ள மனிதர்கள் மூலம் அந்த வழிநடத்துதல் வரும்போது அப்படி இருக்கலாம். ஏன்? ஒருவேளை, நாம் விரும்புவதுபோல் அந்த ஆலோசனை இல்லாமல் இருக்கலாம். அல்லது, அவர்கள் சொல்வது நடைமுறைக்கு ஒத்துவராத மாதிரி தோன்றலாம். அதனால், அது யெகோவாவிடமிருந்து வந்திருக்காது என்று நாம் யோசிக்கலாம். அந்தமாதிரி சமயங்களில், யெகோவாதான் தன்னுடைய மக்களுக்கு வழிகாட்டுகிறார் என்றும், அவர் காட்டுகிற வழியில் நடந்தால் கண்டிப்பாக ஆசீர்வாதங்கள் கிடைக்கும் என்றும் நாம் நம்ப வேண்டும். அந்த நம்பிக்கையை வளர்க்க இந்தக் கட்டுரை உதவும். மூன்று விஷயங்களை இப்போது பார்க்கலாம்: (1) பைபிள் காலங்களில் யெகோவா தன்னுடைய மக்களுக்கு எப்படி வழிகாட்டினார்? (2) இன்று எப்படி வழிகாட்டுகிறார்? (3) அவர் காட்டும் வழியில் நடந்தால் என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்?

அன்றுமுதல் இன்றுவரை யெகோவா மனிதர்களைப் பயன்படுத்தி தன்னுடைய மக்களுக்கு வழிகாட்டுகிறார் (பாரா 3)


இஸ்ரவேலர்களுக்கு யெகோவா வழிகாட்டினார்

4-5. இஸ்ரவேலர்களை வழிநடத்த மோசேயைத்தான் யெகோவா பயன்படுத்தினார் என்று எப்படிக் காட்டினார்? (அட்டைப் படத்தைப் பாருங்கள்.)

4 எகிப்திலிருந்து இஸ்ரவேலர்களைக் கூட்டிக்கொண்டு வருவதற்கு யெகோவா மோசேயை நியமித்தார். மோசே மூலமாக தான்தான் அந்த மக்களை வழிநடத்துகிறார் என்பதை காட்ட யெகோவா தெளிவான ஆதாரங்களைக் கொடுத்திருந்தார். உதாரணத்துக்கு, பகலில் மேகத் தூணையும் ராத்திரியில் நெருப்புத் தூணையும் கொடுத்திருந்தார். (யாத். 13:21) அந்த மேகத் தூணை பின்தொடர்ந்து மோசே இஸ்ரவேலர்களை செங்கடலுக்குக் கூட்டிக்கொண்டு வந்தார். ஆனால் அங்கே வந்ததும், கடலுக்கும் எகிப்திய படைக்கும் இடையே சிக்கிக்கொண்டதாக நினைத்து மக்கள் பயந்தார்கள். மோசே தங்களைத் தவறாக கூட்டிக்கொண்டு வந்துவிட்டாரோ என்று அவர்கள் யோசித்தார்கள். ஆனால், மோசே தவறு எதுவும் செய்யவில்லை. யெகோவாதான் ஒரு காரணத்துக்காக தன் மக்களை மோசே மூலமாக அங்கே கூட்டிக்கொண்டு வந்திருந்தார். (யாத். 14:2) அங்கே, பிரமாண்டமான விதத்தின் யெகோவா தன் மக்களைக் காப்பாற்றினார்.—யாத். 14:26-28.

வனாந்தரத்தில் கடவுளுடைய மக்களை வழிநடத்த மோசே மேகத் தூணை நம்பியிருந்தார் (பாராக்கள் 4-5)


5 அப்போதுமுதல் 40 வருஷங்களுக்கு, இஸ்ரவேலர்களை வழிநடத்த மோசே அந்த மேகத் தூணை நம்பியிருந்தார். அதைப் பயன்படுத்தி யெகோவா தன் மக்களை வனாந்தரம் வழியாக கூட்டிக்கொண்டு வந்தார். a கொஞ்ச காலத்துக்கு, யெகோவா அந்த மேகத் தூணை மோசேயின் கூடாரத்துக்குமேல் நிற்க வைத்தார். இஸ்ரவேலர்கள் எல்லாராலும் அதை பார்க்க முடிந்தது. (யாத். 33:7, 9, 10) அதிலிருந்து மோசேயிடம் யெகோவா அறிவுரைகளைக் கொடுத்தார்; மோசே அதை மக்களுக்கு சொன்னார். (சங். 99:7) இப்படி, மோசேயின் மூலமாகத்தான் யெகோவா தங்களை வழிநடத்துகிறார் என்பதை இஸ்ரவேலர்களால் தெளிவாக பார்க்க முடிந்தது.

மோசேயும் யோசுவாவும் (பாராக்கள் 5, 7)


6. யெகோவா வழிகாட்டியபோது இஸ்ரவேலர்கள் எப்படி நடந்துகொண்டார்கள்? (எண்ணாகமம் 14:2, 10, 11)

6 வருத்தமான விஷயம் என்னவென்றால், இவ்வளவு தெளிவான ஆதாரங்கள் இருந்தும் மோசேயைப் பயன்படுத்திதான் யெகோவா தங்களுக்கு வழிகாட்டுகிறார் என்பதை நிறைய இஸ்ரவேலர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. (எண்ணாகமம் 14:2, 10, 11-ஐ வாசியுங்கள்.) ஒருதடவை மட்டுமல்ல, மறுபடியும் மறுபடியும் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால் அந்தத் தலைமுறையை சேர்ந்த யாராலும் வாக்குக்கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் போக முடியவில்லை.—எண். 14:30.

7. யாரெல்லாம் யெகோவா காட்டிய வழியில் நடந்தார்கள்? (எண்ணாகமம் 14:24) (படத்தையும் பாருங்கள்.)

7 ஆனாலும், சில இஸ்ரவேலர்கள் யெகோவா காட்டிய வழியில் நடந்தார்கள். உதாரணத்துக்கு, “காலேப் . . . முழு இதயத்தோடு எனக்குக் கீழ்ப்படிந்துவருகிறான்” என்று யெகோவா சொன்னார். (எண்ணாகமம் 14:24-ஐ வாசியுங்கள்.) யெகோவா காலேபை ஆசீர்வதித்தார். சொல்லப்போனால், கானான் தேசத்தில் அவர் கேட்ட பகுதியை யெகோவா அவருக்குக் கொடுத்தார். (யோசு. 14:12-14) இஸ்ரவேலர்களுடைய அடுத்த தலைமுறையும் யெகோவா காட்டிய வழியில் நடந்தார்கள். மோசேக்கு அடுத்து யோசுவா தலைவராக ஆனபோது அவருக்கு அவர்கள் “வாழ்நாள் காலமெல்லாம் மதிப்பு மரியாதை காட்டினார்கள்.” (யோசு. 4:14) அதனால், யெகோவா அவர்களையும் ஆசீர்வதித்தார்; கானான் தேசத்தில் குடிவைத்தார்.—யோசு. 21:43, 44.

8. ராஜாக்களின் காலத்தில் யெகோவா எப்படி தன்னுடைய மக்களுக்கு வழிகாட்டினார்? (படத்தையும் பாருங்கள்.)

8 பல வருஷங்கள் கழித்து, யெகோவா நியாயாதிபதிகளைப் பயன்படுத்தி தன் மக்களுக்கு வழிகாட்டினார். பிறகு ராஜாக்களின் காலத்தில், யெகோவா தீர்க்கதரிசிகளை நியமித்து அவர்கள் மூலமாக வழிகாட்டினார். யெகோவாவுக்கு உண்மையாக இருந்த ராஜாக்கள் தீர்க்கதரிசிகள் சொல்வதைக் கேட்டார்கள். உதாரணத்துக்கு, தாவீது ராஜா, நாத்தான் தீர்க்கதரிசி தன்னைத் திருத்தியபோது மனத்தாழ்மையோடு அதை ஏற்றுக்கொண்டார். (2 சா. 12:7, 13; 1 நா. 17:3, 4) யோசபாத் ராஜாவும் யகாசியேல் தீர்க்கதரிசி கொடுத்த வழிநடத்துதலின்படி செய்தார். அதோடு, “தீர்க்கதரிசிகள் சொன்னதை நம்புங்கள்” என்று சொல்லி மக்களையும் உற்சாகப்படுத்தினார். (2 நா. 20:14, 15, 20) எசேக்கியா ராஜாவும் நெருக்கடியான ஒரு சூழ்நிலையில் வழிநடத்துதலுக்காக ஏசாயா தீர்க்கதரிசியிடம் போனார். (ஏசா. 37:1-6) ராஜாக்கள் வழிநடத்துதலுக்காக தீர்க்கதரிசிகளிடம் போனபோதெல்லாம் யெகோவா அவர்களை ஆசீர்வதித்தார்; தேசத்தையும் பாதுகாத்தார். (2 நா. 20:29, 30; 32:22) தீர்க்கதரிசிகளைப் பயன்படுத்திதான் யெகோவா மக்களுக்கு வழிகாட்டினார் என்பது அப்போது இருந்த எல்லாருக்கும் தெளிவாக தெரிந்திருக்கும். இருந்தாலும், பெரும்பாலான ராஜாக்களும் மக்களும் தீர்க்கதரிசிகள் சொன்னதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை.—எரே. 35:12-15.

எசேக்கியா ராஜாவும் ஏசாயா தீர்க்கதரிசியும் (பாரா 8)


ஆரம்பகால கிறிஸ்தவர்களுக்கு யெகோவா வழிகாட்டினார்

9. முதல் நூற்றாண்டில் இருந்த கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்ட யெகோவா யாரைப் பயன்படுத்தினார்? (படத்தையும் பாருங்கள்.)

9 முதல் நூற்றாண்டில் யெகோவா கிறிஸ்தவ சபையை உருவாக்கினார். அவர்களுக்கு எப்படி வழிகாட்டினார்? சபைக்குத் தலைவராக இயேசுவை நியமித்தார். (எபே. 5:23) ஆனால், சபையில் இருந்த ஒவ்வொருவரையும் இயேசு தனித்தனியாக வழிநடத்தவில்லை. அதற்குப் பதிலாக, எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களையும் மூப்பர்களையும் பயன்படுத்தினார். (அப். 15:1, 2) அதோடு, சபைகளிலும் சில மூப்பர்கள் நியமிக்கப்பட்டிருந்தார்கள்.—1 தெ. 5:12; தீத். 1:5.

எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் (பாரா 9)


10. (அ) ஆரம்பகால கிறிஸ்தவர்கள் யெகோவா காட்டிய வழியில் நடந்தார்களா? (அப். 15:30, 31) (ஆ) வழிகாட்டுவதற்காக யெகோவா பயன்படுத்தியவர்களை பைபிள் காலங்களிலிருந்த சிலர் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை? (“ தெளிவான ஆதாரங்களை சிலர் ஏன் ஏற்றுக்கொள்ளவில்லை” என்ற பெட்டியைப் பாருங்கள்.)

10 யெகோவா காட்டிய வழியில் ஆரம்பகால கிறிஸ்தவர்கள் நடந்தார்களா? பெரும்பாலானவர்கள் நடந்தார்கள்! சொல்லப்போனால், எருசலேமில் இருந்த அப்போஸ்தலர்களும் மூப்பர்களும் சொன்னதைக் கேட்டு அவர்கள் “உற்சாகமும் சந்தோஷமும் அடைந்தார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (அப்போஸ்தலர் 15:30, 31-ஐ வாசியுங்கள்.) அப்படியென்றால், இன்று யெகோவா தன்னுடைய மக்களுக்கு எப்படி வழிகாட்டுகிறார்?

இன்று யெகோவா நமக்கு வழிகாட்டுகிறார்

11. சமீப காலங்களில் யெகோவா தன்னுடைய மக்களுக்கு எப்படி வழிகாட்டியிருக்கிறார்?

11 யெகோவா இன்றும் தன்னுடைய மக்களுக்கு வழிகாட்டுகிறார். தன்னுடைய வார்த்தையின் மூலமாகவும் சபையின் தலைவராக இருக்கும் தன்னுடைய மகன் மூலமாகவும் அதை செய்கிறார். அவர் மனிதர்களையும் பயன்படுத்துகிறார். அதற்கு ஏதாவது ஆதாரம் இருக்கிறதா? கண்டிப்பாக! 1870-க்கு பிறகு என்ன நடந்தது என்று கவனியுங்கள். சார்ல்ஸ் டி. ரஸலும் அவரோடு இருந்தவர்களும், கடவுளுடைய அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட ஏதோவொரு முக்கியமான விஷயம் 1914-ல் நடக்கும் என்று கண்டுபிடித்தார்கள். (தானி. 4:25, 26) தீர்க்கதரிசனங்களை ஆராய்ச்சி செய்ததால் அந்த முடிவுக்கு வந்தார்கள். அவர்களுடைய ஆராய்ச்சியை யெகோவா வழிநடத்தினாரா? ஆமாம்! 1914-ல் நடந்த சம்பவங்கள் கடவுளுடைய அரசாங்கம் அப்போது ஆட்சி செய்ய ஆரம்பித்தது என்பதை உறுதிப்படுத்தியது. அப்போதுதான் முதல் உலகப் போர் வெடித்தது. பிறகு, கொள்ளைநோய்கள், நிலநடுக்கங்கள், பஞ்சங்கள் தொடர்ந்தன. (லூக். 21:10, 11) நிச்சயமாகவே தன்னுடைய மக்களுக்கு வழிகாட்ட இந்த உண்மையுள்ள ஆண்களை யெகோவா பயன்படுத்தியிருக்கிறார் என்பது தெரிகிறது.

12-13. இரண்டாவது உலகப் போர் சமயத்தில் ஊழியத்தை நன்றாக செய்ய என்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டன?

12 இரண்டாவது உலகப் போர் சமயத்தில் என்ன நடந்தது என்று கவனியுங்கள். வெளிப்படுத்துதல் 17:8-ஐ ஆராய்ச்சி செய்த பிறகு, அந்த சமயத்தில் நடந்த போர் அர்மகெதோனில் போய் முடியாது என்றும், அதற்குப் பதிலாக சமாதானமான ஒரு காலப்பகுதி வரும் என்றும் பொறுப்பில் இருந்த சகோதரர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால், ஊழியத்தை அதிகமாக செய்ய முடிவெடுத்தார்கள். அதற்காக, உவாட்ச்டவர் கிலியட் பைபிள் கல்லூரியை (கிலியட் பள்ளியை) ஆரம்பித்தார்கள். அந்த சமயத்தில் இப்படி ஒரு பயிற்சியை ஆரம்பிப்பது நடைமுறைக்கு ஒத்துவராதது போல் தெரிந்திருக்கலாம். இருந்தாலும், அவர்கள் அதை செய்தார்கள். அதில் மிஷனரிகளுக்குப் பயிற்சி கொடுத்து, உலகம் முழுவதும் ஊழியம் செய்ய அனுப்பினார்கள். போர் சமயத்தில்கூட மிஷனரிகள் அனுப்பப்பட்டார்கள். அதோடு, சபையில் இருந்தவர்களுக்குப் பயிற்சி கொடுக்க, “தேவராஜ்ய ஊழியத்துக்கான பயிற்சி” b என்ற ஒரு பயிற்சியை உண்மையுள்ள அடிமை ஆரம்பித்து வைத்தது. ஊழிய வேலைக்காக யெகோவா தன் மக்களை எப்படியெல்லாம் தயார்ப்படுத்தியிருக்கிறார்!

13 இதையெல்லாம் யோசித்துப் பார்க்கும்போது அந்தக் கஷ்டமான காலத்தில் யெகோவாதான் தன் மக்களுக்கு வழிகாட்டியிருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு, யெகோவாவின் மக்களால் நிறைய நாடுகளில் சுதந்திரமாக ஊழியம் செய்ய முடிந்தது. இப்போது இந்த வேலை மிகப் பெரிய அளவில் நடந்துகொண்டிருக்கிறது.

14. யெகோவாவின் அமைப்பிடமிருந்தும் மூப்பர்களிடமிருந்தும் கிடைக்கும் வழிநடத்தலை நாம் ஏன் நம்பலாம்? (வெளிப்படுத்துதல் 2:1) (படத்தையும் பாருங்கள்.)

14 இன்று ஆளும் குழுவில் இருக்கும் சகோதரர்கள் வழிநடத்தலுக்காக இயேசுவை நம்பியிருக்கிறார்கள். யெகோவாவும் இயேசுவும் என்ன ஆலோசனையைக் கொடுக்க நினைக்கிறார்களோ அதையே இவர்களும் கொடுக்க நினைக்கிறார்கள். வட்டாரக் கண்காணிகளையும் மூப்பர்களையும் பயன்படுத்தி சபைகளுக்கு இவர்கள் வழிநடத்தலை கொடுக்கிறார்கள். c அபிஷேகம் செய்யப்பட்ட மூப்பர்கள், ஒருவிதத்தில் எல்லா மூப்பர்களும், இயேசுவின் “வலது கையில்” இருக்கிறார்கள். (வெளிப்படுத்துதல் 2:1-ஐ வாசியுங்கள்.) இந்த மூப்பர்கள் எல்லாரும் குறையுள்ளவர்கள்தான்; சிலசமயங்களில் அவர்கள் தவறுகள் செய்யலாம். மோசே, யோசுவா மற்றும் அப்போஸ்தலர்களும் சிலசமயங்களில் தவறுகள் செய்தார்கள். (எண். 20:12; யோசு. 9:14, 15; ரோ. 3:23) ஆனாலும், உண்மையுள்ள அடிமையையும் சபையில் இருக்கிற மூப்பர்களையும் இயேசு கவனமாக வழிநடத்தி வருகிறார். அவர் “இந்தச் சகாப்தத்தின் கடைசிக் கட்டம்வரை எல்லா நாட்களிலும்” அவர்களைத் தொடர்ந்து வழிநடத்துவார். (மத். 28:20) அதனால், இந்த சகோதரர்கள் மூலமாக இயேசு கொடுக்கும் வழிநடத்தலை நாம் தாராளமாக நம்பலாம்.

இன்று இருக்கும் ஆளும் குழு (பாராக்கள் 14)


யெகோவா காட்டும் வழியில் நடந்தால் ஆசீர்வாதம்

15-16. யெகோவா காட்டிய வழியில் நடந்தவர்களின் அனுபவங்களில் இருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?

15 யெகோவா காட்டும் வழியில் நடக்கும்போது இப்போதே நமக்கு ஆசீர்வாதங்கள் கிடைக்கும். ஆன்ட்ரு மற்றும் ரோஸ் d தம்பதியின் அனுபவத்தைப் பார்க்கலாம். வாழ்க்கையை எளிமையாக வைப்பதைப் பற்றி அமைப்பு தந்த ஆலோசனைக்கு அவர்கள் கீழ்ப்படிந்தார்கள். (எபி. 13:5) அதனால், அமைப்பின் கட்டுமான வேலைகளில் வாலண்டியர்களாக அவர்களால் வேலை செய்ய முடிந்தது. அதைப் பற்றி சகோதரி ரோஸ் இப்படி சொல்கிறார்: “நாங்கள் ரொம்ப சின்ன இடங்களில் தங்க வேண்டியிருந்தது; சமைப்பதற்கு அங்கே கிச்சன்கூட இருக்காது. ஃபோட்டோ எடுப்பது என்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம். அதற்காக நான் பயன்படுத்திய கேமராக்களையும் மற்ற கருவிகளையும் விற்க வேண்டியிருந்தது. அப்போது எனக்கு அழுகையே வந்தது. ஆனால், ஆபிரகாமின் மனைவி சாராளைப் பற்றி யோசித்தேன். விட்டுவந்ததைப் பற்றி அவர் யோசிக்கவில்லை; எதிர்காலத்தைப் பற்றிதான் யோசித்தார். நானும் சாராளைப் போல் இருக்க வேண்டும் என்று நினைத்தேன்.” (எபி. 11:15) தியாகங்கள் செய்ததால் இந்தத் தம்பதிக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைத்தன? “எங்களிடம் இருக்கும் எல்லாவற்றையும் யெகோவாவுக்காக கொடுக்கிறோம் என்ற திருப்தி இருக்கிறது. யெகோவா கொடுக்கும் வேலையை செய்வதால் புதிய உலகத்தில் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை இப்போதே ருசித்து பார்க்க முடிகிறது” என்கிறார் ரோஸ். சகோதரர் ஆன்ட்ருவும் இப்படிச் சொல்கிறார்: “கடவுளுடைய அரசாங்கத்துக்காக எங்களுடைய நேரம் சக்தி எல்லாவற்றையும் கொடுக்கிறோம் என்ற சந்தோஷம் எங்களுக்கு இருக்கிறது.”

16 மார்ஷியா என்ற சகோதரியின் அனுபவத்தைப் பாருங்கள். யெகோவாவுக்கு சேவை செய்வதை வாழ்க்கையாக ஆக்கிக்கொள்ளுங்கள் என்று அமைப்பு தந்த ஆலோசனையை அவர் மனதில் பதிய வைத்துக்கொண்டார். (மத். 6:33; ரோ. 12:11) அதனால், பள்ளி படிப்பு முடிந்ததும் அவர் என்ன செய்தார்? மார்ஷியாவே சொல்கிறார்: “காலேஜில் நான்கு வருஷங்கள் படிப்பதற்கு எனக்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. இருந்தாலும், நான் யெகோவாவுக்கு சேவை செய்ய ஆசைப்பட்டேன். அதனால், தொழிற்கல்வி கற்றுத் தருகிற இன்ஸ்ட்டிட்யூட்டில் சேர்ந்து ஒரு தொழில் கற்றுக்கொண்டேன். ஊழியத்துக்கு அது கைகொடுத்தது. உண்மையிலேயே நான் எடுத்த நல்ல முடிவு அது. நான் விரும்பும் நேரத்தில் என்னால் வேலை செய்ய முடிகிறது. பயனியர் ஊழியத்தையும் சந்தோஷமாக செய்கிறேன்; பெத்தேலில் கம்யூட்டராகவும் சேவை செய்கிறேன். இன்னும் நிறைய விதங்களிலும் என்னால் சேவை செய்ய முடிகிறது.”

17. யெகோவா காட்டும் வழியில் தொடர்ந்து நடப்பதால் வேறு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும்? (ஏசாயா 48:17, 18)

17 “பொருளாசை வேண்டாம்...” “கடவுளுடைய சட்டங்களை மீறும்படி எதையாவது செய்துவிடாதீர்கள்...” போன்ற ஆலோசனைகளும் நமக்குக் கிடைக்கின்றன. இவற்றுக்குக் கீழ்ப்படிவதாலும் நமக்கு ஆசீர்வாதம்தான்! ஏனென்றால் அதன்படி செய்யும்போது, சுத்தமான மனசாட்சி இருக்கும், தேவையில்லாத பிரச்சினையில் மாட்டிக்கொள்ள மாட்டோம், யெகோவாவை முழு மனதோடு வணங்குவோம். (1 தீ. 6:9, 10) அதோடு, சந்தோஷம், மனநிம்மதி, திருப்தி கிடைக்கும்.ஏசாயா 48:17, 18-ஐ வாசியுங்கள்.

18. யெகோவா காட்டும் வழியில் தொடர்ந்து நடக்க வேண்டும் என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?

18 மிகுந்த உபத்திரவத்தின்போதும் சரி, ஆயிர வருஷ ஆட்சியிலும் சரி, யெகோவா மனிதர்களைப் பயன்படுத்தி நமக்கு வழிகாட்டுவார் என்பதில் சந்தேகமே இல்லை. (சங். 45:16) அந்த சமயத்தில், நம்முடைய விருப்பங்களை ஓரம் கட்டிவிட்டு யெகோவாவின் ஆலோசனைகளை ஏற்றுக்கொள்வோமா? அது, இப்போது கிடைக்கும் வழிநடத்தலுக்கு நாம் எந்தளவுக்குக் கீழ்ப்படிகிறோம் என்பதைப் பொறுத்து இருக்கும். அதனால், யெகோவா கொடுக்கும் எல்லா வழிநடத்தலுக்கும் நாம் கீழ்ப்படியலாம்; அவர் நியமித்திருக்கும் ஆட்கள் கொடுக்கும் ஆலோசனைகளுக்கும் கீழ்ப்படியலாம். (ஏசா. 32:1, 2; எபி. 13:17) நம் வழிகாட்டியான யெகோவாவை, நாம் தாராளமாக நம்பலாம். ஆன்மீக விதத்தில் எந்த ஆபத்தும் வராதபடி அவர் நம்மைப் பாதுகாப்பார். போய் சேரவேண்டிய இடத்துக்கு, அதாவது பூஞ்சோலைக்கு, பத்திரமாக போய் சேர வழி காட்டுவார்.

உங்கள் பதில் என்ன?

  • யெகோவா எப்படி இஸ்ரவேலர்களுக்கு வழிகாட்டினார்?

  • யெகோவா எப்படி ஆரம்பக் கால கிறிஸ்தவர்களுக்கு வழிகாட்டினார்?

  • யெகோவா காட்டும் வழியில் நடப்பதால் இப்போது நமக்கு என்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன?

பாட்டு 48 யெகோவாவுடன் தினம் நடப்போம்

a இஸ்ரவேலர்களை வாக்குக் கொடுக்கப்பட்ட தேசத்துக்குள் வழிநடத்த யெகோவா ஒரு தேவதூதரையும் பயன்படுத்தினார். அவர் ‘இஸ்ரவேல் ஜனங்களுக்கு முன்னால் போய்க்கொண்டிருந்தார்.’ அந்த தேவதூதர் மிகாவேல். அதாவது, பூமிக்கு வருவதற்கு முன்பு பரலோகத்தில் இருந்த இயேசு.—யாத். 14:19; 32:34.

b இந்தப் பயிற்சி பிற்பாடு “தேவராஜ்ய ஊழிய பள்ளி” என்று அழைக்கப்பட்டது. இதுபோன்ற பயிற்சிகள் இப்போது நமக்கு வாரநாள் கூட்டங்களில் கிடைக்கிறது.

c பிப்ரவரி 2021 காவற்கோபுரத்தில் பக்கம் 18-ல் இருக்கிற “ஆளும் குழுவின் பொறுப்புகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

d சில பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.