தோள் கொடுக்கும் தோழனாக இருங்கள்
கஷ்டங்களை தன்னந்தனியாகச் சமாளிக்கிற கொடுமையை அனுபவித்திருக்கிறீர்களா? “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். (2 தீ. 3:1) அதனால், சோர்ந்து போவதற்கும், தனிமையாக உணர்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இருந்தாலும், பிரச்சினைகளோடு தனியாகப் போராட வேண்டியதில்லை; தோள் கொடுக்கும் தோழர்கள் நமக்கு இருக்கிறார்கள். “கஷ்ட காலங்களில்” அவர்களுடைய உதவி எவ்வளவு முக்கியம் என்பதை பைபிள்கூட சொல்கிறது.—நீதி. 17:17.
உண்மையான நண்பர்கள் எப்படி உதவி செய்வார்கள்?
அப்போஸ்தலன் பவுலோடு சேர்ந்து மிஷனரி ஊழியம் செய்தவர்கள் அவருக்கு நல்ல நண்பர்களாக இருந்தார்கள். அவருக்கு நிறைய உதவிகளைச் செய்தார்கள். (கொலோ. 4:7-11) ரோமில் பவுல் கைதியாக இருந்தபோது அவரால் செய்ய முடியாத விஷயங்களை அவருடைய நண்பர்கள் செய்துகொடுத்தார்கள். உதாரணத்துக்கு எப்பாப்பிரோதீத்து, பிலிப்பியில் இருந்த சகோதர சகோதரிகள் பவுலுக்குக் கொடுத்து அனுப்பிய பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தார். (பிலி. 4:18) தீகிக்கு, பவுலின் கடிதங்களை வெவ்வேறு சபைகளுக்குக் கொண்டுபோக உதவினார். வீட்டுக்காவலில் இருந்தபோதும் சரி, சிறையில் இருந்தபோதும் சரி, பவுலால் தன்னுடைய ஊழியத்தை விடாமல் செய்ய முடிந்ததற்கு காரணம் அவருடைய நண்பர்கள். நீங்கள் எப்படி ஒரு உண்மையான நண்பராக இருக்கலாம்?
உண்மையான நட்புக்கு இருக்கிற சக்தியை நம் காலத்திலும் பார்க்க முடிகிறது. ஸ்பெயினில் வாழ்கிற எலிசபெத் என்ற ஒரு ஒழுங்கான பயனியருக்கு, ஒரு சகோதரி நல்ல நண்பராக இருந்திருக்கிறார். அவர் என்ன செய்தார்? எலிசபெத்தின் அம்மாவுக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தபோது, எலிசபெத்தை ஆறுதல்படுத்துவதற்காக பைபிள் வசனங்களை அடிப்படையாக வைத்து நிறைய மெசேஜுகளை அனுப்பினார். “ஒவ்வொரு நாளையும் தைரியமாகச் சமாளிப்பதற்கு அந்த மெசேஜுகள் எனக்கு உதவியது. நான் தனியாக இல்லை என்பதை அவை புரியவைத்தன” என்கிறார் எலிசபெத்.—நீதி. 18:24.
சபையில் இருக்கிற சகோதர சகோதரிகளுக்குத் தேவையான உதவிகளைச் செய்வதன் மூலமாக அவர்களோடு இருக்கிற நட்பை பலப்படுத்த முடியும். உதாரணத்துக்கு, வயதான சகோதரரையோ சகோதரியையோ கூட்டங்களுக்கு அல்லது ஊழியத்துக்குக் கூட்டிக்கொண்டு போக முடியுமா? அப்படிச் செய்தால் அவர்களுக்கும் உற்சாகம் கிடைக்கும், உங்களுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். (ரோ. 1:12) ஆனால், வீட்டைவிட்டு வெளியே வர முடியாத சூழ்நிலையில் சிலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு எப்படி நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருக்கலாம்?
வீட்டிலேயே முடங்கி இருப்பவர்களுக்கு உண்மையான நண்பராக இருங்கள்
சில சகோதர சகோதரிகளால் உடம்பு முடியாததாலோ வேறுசில சூழ்நிலையாலோ கூட்டங்களுக்கு நேரில் வர முடியாமல் இருக்கலாம். டேவிட் என்ற சகோதரருக்கு அதுதான் நடந்தது. அவருக்கு புற்றுநோய் இருந்ததால், ஆறு மாதத்துக்கும் அதிகமாக அவர் கீமோதெரப்பி சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். அந்தச் சமயத்தில், அவரும் அவருடைய மனைவி லிடியாவும் இன்டெர்நெட் வழியாக கூட்டங்களில் கலந்துகொண்டார்கள்.
சபையில் இருந்த நண்பர்கள் அவர்களுக்கு எப்படி உதவினார்கள்? கூட்டம் முடிந்த பிறகு, ராஜ்ய மன்றத்தில்
இருந்த சிலர் வீடியோ கான்ஃப்ரன்ஸ் வழியாக டேவிட் மற்றும் லிடியாவிடம் பேசினார்கள். டேவிடும் லிடியாவும் கூட்டங்களில் பதில் சொன்னால், அவர்களைப் பாராட்டி மெசேஜ் அனுப்பினார்கள். இதனால் என்ன பலன் கிடைத்தது? டேவிடாலும் லிடியாவாலும் தனிமை உணர்வை சமாளிக்க முடிந்தது.வீட்டைவிட்டு வெளியே வர முடியாதவர்களோடு சேர்ந்து உங்களால் ஊழியம் செய்ய முடியுமா? சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தாலே அதைச் செய்ய முடியும். அப்படிச் செய்யும்போது நாம் அவர்களை மறந்துவிடவில்லை என்பதைக் காட்டுவோம். (நீதி. 3:27) ஒருவேளை, அவர்களோடு சேர்ந்து கடிதங்கள் எழுதி ஊழியம் செய்யலாம். அல்லது, ஃபோன் மூலமாக ஊழியம் செய்யலாம். ஊழியக் கூட்டத்தை வீடியோ கான்ஃப்ரன்ஸ் மூலமாகப் பார்ப்பதற்குச் செய்யப்படும் ஏற்பாடுகூட அவர்களுக்கு ரொம்ப உதவியாக இருக்கும். இந்த ஏற்பாட்டை நினைத்து டேவிடும் லிடியாவும் ரொம்பச் சந்தோஷப்பட்டார்கள். “சகோதர சகோதரிகளோடு சேர்ந்து ஊழியக் கூட்டத்திலும் ஜெபத்திலும் கலந்துகொள்வது எங்களை உற்சாகப்படுத்தியது” என்று டேவிட் சொல்கிறார். ஒருவேளை சூழ்நிலை அனுமதித்தால், அதுவும் அது பாதுகாப்பாக இருந்தால், வீட்டிலேயே முடங்கி இருக்கிறவர்களின் வீடுகளுக்கு உங்களுடைய பைபிள் மாணவர்களைக் கூட்டிக்கொண்டு போய் அங்கே படிப்பு நடத்த முடியுமா என்று பாருங்கள்.
இப்படிப்பட்ட சகோதர சகோதரிகளோடு சேர்ந்து உழைக்கும்போது அவர்களுடைய நல்ல நல்ல குணங்களைப் பார்க்க முடியும்; அவர்களோடு நண்பராகவும் முடியும். அவர்களோடு சேர்ந்து ஊழியம் செய்யும்போது, மனதைத் தொடும் விதத்தில் கடவுளுடைய வார்த்தையை எப்படித் திறமையாகப் பயன்படுத்துகிறார்கள் என்று பார்க்க முடியும். இப்படியெல்லாம் செய்யும்போது அவர்களிடம் நாம் இன்னும் நெருக்கமாக ஆவோம். நம்முடைய நட்பு வட்டம் பெரிதாகும்.—2 கொ. 6:13.
பவுல், கஷ்டத்தில் இருந்தபோது அவருடைய நண்பர் தீத்து அவரைப் பார்க்க வந்தது அவருக்கு ஆறுதலாக இருந்தது. (2 கொ. 7:5-7) இதிலிருந்து ஒரு முக்கியமான பாடத்தைத் தெரிந்துகொள்கிறோம்: ஆறுதலான வார்த்தைகளைப் பேசுவதோடு நிறுத்திக்கொள்ளாமல், கஷ்டப்படுகிறவர்கள் கூடவே இருப்பதன் மூலமும், உதவுவதன் மூலமும் அவர்களுக்கு ஆறுதல் கொடுக்க முடியும்.—1 யோ. 3:18.
துன்புறுத்தப்படுகிறவர்களுக்கு உண்மையான நண்பராக இருங்கள்
ஒருவருக்கு ஒருவர் ஆதரவு கொடுப்பதில் ரஷ்யாவில் இருக்கிற நம் சகோதர சகோதரிகள் உண்மையிலேயே ஒரு நல்ல முன்மாதிரி. சர்கே மற்றும் அவருடைய மனைவி டாட்டியானாவின் அனுபவத்தைப் பார்க்கலாம். ஒருசமயம் போலீஸ் அவர்களுடைய வீட்டைச் சோதனை செய்ய வந்தார்கள். பிறகு, அவர்கள் இரண்டு பேரையும் விசாரணைக்காகக் கூட்டிக்கொண்டு போய்விட்டார்கள். டாட்டியானாவை முதலில் விடுதலை செய்தார்கள். சர்கே சொல்கிறார்: “[டாட்டியானா] வீட்டுக்கு வந்தவுடன் ஒரு சகோதரி ரொம்ப தைரியமாக அவளைப் பார்ப்பதற்கு வந்தார். பிறகு, கொஞ்சம் நேரத்திலேயே இன்னும் நிறைய சகோதர சகோதரிகள் வந்தார்கள். எங்கள் வீட்டில் சிதறிக் கிடந்த பொருள்களை ஒதுக்கி வைக்க உதவினார்கள்.”
“நீதிமொழிகள் 17:17 எப்போதும் எனக்கு ரொம்ப பிடிக்கும். அந்த வசனம் இப்படிச் சொல்கிறது: ‘உண்மையான நண்பன் எல்லா சமயத்திலும் அன்பு காட்டுகிறான். கஷ்ட காலங்களில் உதவுவதற்காகப் பிறந்த சகோதரனாக இருக்கிறான்.’ துன்புறுத்துதலை அனுபவித்துக்கொண்டிருக்கும் இந்தச் சமயத்தில் இந்த வார்த்தைகளுடைய அர்த்தத்தை என்னால் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ள முடிகிறது. இந்தச் சூழ்நிலையை என்னால் தனியாக சமாளித்திருக்கவே முடியாது. துணிச்சலோடும் தைரியத்தோடும் என் பக்கம் நிற்கிற நண்பர்களை யெகோவா கொடுத்திருக்கிறார்” என்கிறார் சர்கே.
கஷ்டமான சூழ்நிலைகளை நாம் சந்திக்கும்போது தோள் கொடுக்கிற தோழர்கள் நமக்குத் தேவை. அதுவும், மிகுந்த உபத்திரவம் சமயத்தில் ரொம்பவே தேவை. அதனால், நாமும் மற்றவர்களுக்கு இப்போதே ஒரு உண்மையான நண்பராக இருக்கலாம்!—1 பே. 4:7, 8.