Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நம்மையே பெரிய ஆளாக நினைப்பது சரியா?

நம்மையே பெரிய ஆளாக நினைப்பது சரியா?

மற்றவர்கள் தங்களை விசேஷமாக நடத்த வேண்டும் என்றும் தங்களுக்குத்தான் முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் இன்று நிறைய பேர் நினைக்கிறார்கள். எவ்வளவு கிடைத்தாலும் அவர்கள் திருப்தி ஆவதில்லை; இன்னும் அதிகமாக கிடைப்பதற்குத் தங்களுக்குத் தகுதி இருக்கிறது என்று நினைக்கிறார்கள். இப்படிப்பட்ட எண்ணம் சுயநலம் என்ற விதையிலிருந்து முளைக்கிறது. சுயநலமான, நன்றிகெட்ட ஆட்கள் கடைசி நாட்களில் இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது.—2 தீ. 3:2.

தன்னையே பெரிய ஆளாக நினைக்கும் எண்ணமும் சுயநலமும் இன்றோ நேற்றோ வந்தது கிடையாது. ஆதாம் ஏவாள் காலத்திலிருந்தே இருக்கிறது. நல்லது கெட்டதைத் தீர்மானிக்கிற உரிமை தங்களுக்கே வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அதனால், மோசமான விளைவுகளைச் சந்தித்தார்கள். யூதாவை ஆட்சி செய்த உசியா ராஜா, ஆலயத்தில் தூபம் காட்டுவதற்கு தனக்கு உரிமை இருக்கிறது என்று நினைத்தார். ஆனால் உண்மையில் அதைத் தொடக்கூட அவருக்கு அதிகாரம் இல்லை. (2 நா. 26:18, 19) பரிசேயர்களும் சதுசேயர்களும் ஆபிரகாமின் சந்ததியில் வந்த ஒரே காரணத்துக்காக கடவுள் தங்களை விசேஷமாக கவனிப்பார் என்று நினைத்துக்கொண்டார்கள்.—மத். 3:9.

இன்று நம்மைச் சுற்றியும் இப்படிப்பட்ட ஆட்கள்தான் இருக்கிறார்கள். அவர்களுடைய சுபாவம் நம்மையும் தொற்றிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. (கலா. 5:26) ‘ஒரு பொறுப்பு கிடைப்பதற்கு எனக்குத்தான் தகுதி இருக்கிறது... மற்றவர்கள் என்னை விசேஷமாக நடத்த வேண்டும்...’ என்று நாமும் யோசிக்க ஆரம்பித்துவிடலாம். இப்படி யோசிக்காமல் இருக்க என்ன செய்வது? இந்த விஷயத்தில் யெகோவாவின் எண்ணம் என்ன என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு உதவும் இரண்டு பைபிள் நியமங்களை இப்போது பார்க்கலாம்:

ஒவ்வொருவருக்கும் என்ன கிடைக்க வேண்டும் என்பதை யெகோவாதான் முடிவு செய்வார். சில உதாரணங்களைப் பார்க்கலாம்.

  • குடும்பம் என்ற ஏற்பாட்டில் கணவனுக்கு மனைவியிடமிருந்து மரியாதையும், மனைவிக்கு கணவனிடமிருந்து அன்பும் கிடைக்க வேண்டும். (எபே. 5:33) தம்பதிகளுக்கு தங்கள் துணையிடமிருந்து மட்டுமே கிடைக்க வேண்டிய காதல் கிடைக்க வேண்டும். (1 கொ. 7:3) பெற்றோருக்குப் பிள்ளைகளின் கீழ்ப்படிதலும், மரியாதையும் கிடைக்க வேண்டும். பிள்ளைகளுக்குப் பெற்றோரின் அன்பும் ஆதரவும் கிடைக்க வேண்டும். இதையெல்லாம் முடிவு செய்தவர் யெகோவாதான்!—2 கொ. 12:14; எபே. 6:2.

  • சபையில், கடினமாக உழைக்கிற மூப்பர்கள் நம் மரியாதையைப் பெற தகுதியானவர்கள். (1 தெ. 5:12) இருந்தாலும் மற்றவர்கள்மேல் அதிகாரம் செலுத்தும் உரிமை அவர்களுக்கு இல்லை.—1 பே. 5:2, 3.

  • அரசாங்கங்களுக்கு நம்மிடம் வரி கேட்கிற அதிகாரத்தை யெகோவா கொடுத்திருக்கிறார். நம் மதிப்பு மரியாதையைப் பெற்றுக்கொள்ளும் உரிமை அவர்களுக்கு இருக்கிறது.—ரோ. 13:1, 6, 7.

ஒவ்வொருவருக்கும் கிடைக்க வேண்டியதைவிட ரொம்ப அதிகமாகவே யெகோவா கொடுக்கிறார். பாவ இயல்புள்ளவர்களாக இருப்பதால் நியாயப்படி நமக்குக் கிடைக்க வேண்டியது மரணம்தான். (ரோ. 6:23) ஆனால் யெகோவாவுக்கு நம்மேல் மாறாத அன்பு இருப்பதால் எக்கச்சக்கமான ஆசீர்வாதங்களைக் கொடுக்கிறார். (சங். 103:10, 11) அவரிடமிருந்து கிடைக்கிற ஒவ்வொரு ஆசீர்வாதமும், பொறுப்பும் அவருடைய அளவற்ற கருணையால் கிடைக்கிறது.—ரோ. 12:6-8; எபே. 2:8.

பெரிய ஆளாக நினைத்துக்கொள்வதைத் தவிர்ப்பது எப்படி?

உலகத்தில் இருக்கிறவர்களைப் போல் யோசிக்காதீர்கள். நமக்குத்தான் எல்லாமே அதிகமாகக் கிடைக்க வேண்டும்... அதற்கான தகுதி நமக்கு இருக்கிறது... என்று நாமே நினைத்துக்கொள்ளலாம். இந்த எண்ணம் சுலபமாக வந்துவிட வாய்ப்பு இருக்கிறது என்பதைக் காட்ட, திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய வந்த கூலியாட்களைப் பற்றிய உதாரணத்தை இயேசு சொன்னார். சிலர், சுட்டெரிக்கிற வெயிலில் காலையிலிருந்து வேலை செய்தார்கள். வேறுசிலர், கடைசி ஒரு மணிநேரம்தான் வேலை செய்தார்கள். காலையிலிருந்து வேலை செய்தவர்கள், தங்களுக்கு அதிக கூலி கிடைக்க தகுதி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டார்கள். (மத். 20:1-16) இயேசு சொல்ல வந்த பாடம்? யாருக்கு என்ன கிடைக்க வேண்டும் என்பதை கடவுள்தான் முடிவு பண்ணுவார். கிடைப்பதில் நாம் திருப்தியாக இருக்க வேண்டும்.

நாள் முழுவதும் வேலை செய்தவர்கள் தங்களுக்கு நிறைய கூலி கிடைக்க தகுதி இருக்கிறது என்று நினைத்துக்கொண்டார்கள்

கிடைத்ததை வைத்து நன்றியோடு இருங்கள், அதிகத்தை எதிர்பார்க்காதீர்கள். (1 தெ. 5:18) பவுல் கொரிந்துவில் இருந்தபோது சகோதரர்களிடம் பொருளுதவி கேட்கவில்லை. அப்படிக் கேட்க உரிமை இருந்தும், அவர் அப்படிச் செய்யவில்லை. (1 கொ. 9:11-14) பவுலைப் போலவே, நமக்குக் கிடைக்கிற ஆசீர்வாதங்களுக்காக நன்றியோடு இருக்க வேண்டும். நமக்கு உதவ வேண்டிய கடமை மற்றவர்களுக்கு இருக்கிறது என்று நினைக்கக் கூடாது.

அப்போஸ்தலன் பவுல் மற்றவர்களிடமிருந்து பொருளுதவியை எதிர்பார்க்கவில்லை

மனத்தாழ்மையை வளர்த்துக்கொள்ளுங்கள். ஒருவர் தன்னையே பெரிய ஆளாக யோசித்தால், தனக்குக் கிடைக்க வேண்டியதைவிட அதிகமாக எதிர்பார்க்க ஆரம்பித்துவிடுவார். இந்த மாதிரி யோசனைகள் விஷம்போல் ஆபத்தானது. இந்த விஷத்தை முறிப்பதற்கான மருந்து, மனத்தாழ்மை!

மனத்தாழ்மையால்தான் தானியேல் தீர்க்கதரிசி யெகோவாவுடைய பார்வையில் வைரமாக ஜொலித்தார்

தானியேல் தீர்க்கதரிசி மனத்தாழ்மைக்கு ஒரு அருமையான முன்மாதிரி. அவருக்கு விசேஷ பொறுப்புகளும் சலுகைகளும் கிடைத்தன. அதற்கெல்லாம் தனக்குத் தகுதி இருக்கிறது என்று அவர் நினைக்க வாய்ப்பு இருந்தது. ஏனென்றால், அவருக்கு நல்ல குடும்பப் பின்னணியும், அழகும், திறமையும், அறிவும் இருந்தது. (தானி. 1:3, 4, 19, 20) ஆனாலும் அவர் அப்படி நினைக்கவில்லை; மனத்தாழ்மையாக இருந்தார். அதனால்தான் யெகோவாவுடைய பார்வையில் வைரமாக ஜொலித்தார்.—தானி. 2:30; 10:11, 12.

தங்களையே பெரிய ஆளாக நினைக்கும் எண்ணம் இந்த உலகத்தில் காற்று மாதிரி பரவியிருந்தாலும் அது நம்மேல் வீசாமல் பார்த்துக்கொள்ளலாம். யெகோவாவின் அளவற்ற கருணையால் கிடைத்திருக்கிற ஆசீர்வாதங்களை நினைத்து நாம் சந்தோஷப்படலாம்!