படிப்புக் கட்டுரை 6
பாட்டு 18 மீட்புவிலைக்கு நன்றி!
யெகோவாவின் மன்னிப்பு—ஏன் நன்றியோடு இருக்கிறோம்?
“கடவுள் தன்னுடைய ஒரே . . . [மகனை] தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.”—யோவா. 3:16.
என்ன கற்றுக்கொள்வோம்?
நம்முடைய பாவங்களை மன்னிக்க யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதைப் பற்றிக் கற்றுக்கொள்வோம். அதைத் தெரிந்துகொள்ளும்போது யெகோவா நமக்குக் காட்டிய மன்னிப்புக்காக இன்னும் நன்றியோடு இருப்போம்.
1-2. இன்று மனிதர்களுடைய நிலைமை எப்படி பாரா 1-ல் சொல்லப்பட்டிருக்கிற இளைஞனுடைய நிலைமை மாதிரி இருக்கிறது?
இந்தக் கதையைக் கற்பனை செய்து பாருங்கள்: ஒரு இளைஞன் வசதியான குடும்பத்தில் வளர்கிறான். ஆனால், ஒரு நாள் அவனுடைய அப்பா அம்மா விபத்தில் இறந்துவிடுகிறார்கள். இந்தச் செய்தி அவனை இடியாய் தாக்குகிறது. இடிமேல் இடி விழுந்ததுபோல் இன்னொரு செய்தியும் வருகிறது. அவனுடைய அப்பா அம்மா, குடும்ப சொத்தையெல்லாம் நாசமாக்கி பெரிய கடன்காரர்களாக இருந்திருக்கிறார்கள். குடும்பத்தின் சொத்து அவனுக்கு வந்து சேர்வதற்குப் பதிலாக, அவனுடைய அப்பா அம்மா விட்டுவிட்டு போன கடன்தான் வந்து சேர்கிறது. கடன் கொடுத்தவர்களும் கடனைத் திருப்பித் தரச் சொல்லி அவனைப் பாடாய் படுத்துகிறார்கள். அவன் திருப்பிக் கொடுக்க வேண்டிய கடன் அவன் நினைத்துகூட பார்க்க முடியாத அளவுக்குப் பெரியது.
2 ஒரு விதத்தில் நாமும் இந்த இளைஞனை மாதிரிதான் இருக்கிறோம். நம்முடைய அப்பா அம்மா ஆதாம் ஏவாள், எந்தக் குறையும் இல்லாத ஒரு அழகான பூஞ்சோலையில் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். (ஆதி. 1:27; 2:7-9) அவர்களுடைய வாழ்க்கை ரொம்ப செழிப்பாக இருந்தது. மரணமே இல்லாமல் வாழ்கிற வாய்ப்பும் அவர்களுக்கு இருந்தது. ஆனால், அந்த நிலைமை தலைகீழாக மாறியது. அவர்களுடைய அழகான வீட்டையும் இழந்தார்கள், என்றென்றும் வாழும் வாய்ப்பையும் இழந்தார்கள். அவர்களுடைய பிள்ளைகளுக்கு எதை அவர்கள் சொத்தாக விட்டுவிட்டு போனார்கள்? அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது. இப்படி, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” (ரோ. 5:12) பாவத்தையும் அதனால் வந்த மரணத்தையும்தான் ஆதாம் நமக்குச் சொத்தாக விட்டுவிட்டு போயிருக்கிறான். பாவம் என்ற இந்தப் பெரிய கடனிலிருந்து நம்முடைய சொந்த முயற்சியால் வெளியே வரவே முடியாது.—சங். 49:8.
3. நம்முடைய பாவங்களை ஏன் ‘கடன்களோடு’ ஒப்பிடலாம்?
3 பாவத்தை இயேசு ‘கடன்களுக்கு’ ஒப்பிட்டுப் பேசினார். (மத். 6:12; லூக். 11:4) நாம் பாவம் செய்யும்போது யெகோவாவிடம் கடனாளிகளாக ஆகிறோம். அதனால், நாம் பாவத்துக்கு ஈடாக ஒரு தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கிறது. ஒருவேளை, அந்தக் கடனை நாம் திருப்பிக் கொடுக்கவில்லை என்றால் நம்முடைய மரணம்தான் அந்தக் கடனை ரத்து செய்யும்.—ரோ. 6:7, 23.
4. (அ) உதவி கிடைக்கவில்லை என்றால் பாவிகளாக இருக்கிற நம் எல்லாருக்குமே என்ன ஆகும்? (சங். 49:7-9) (ஆ) பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற “பாவம்” என்ற வார்த்தைக்கு என்ன அர்த்தம்? (“ பாவம்” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
4 நம்முடைய சொந்த முயற்சியால் ஆதாம் ஏவாள் இழந்த எல்லாவற்றையுமே நம்மால் சம்பாதிக்க முடியாது. (சங்கீதம் 49:7-9-ஐ வாசியுங்கள்.) ஒருவருடைய உதவி இல்லாமல் எதிர்கால நம்பிக்கையோ உயிர்த்தெழுதல் நம்பிக்கையோ நமக்குக் கிடைத்திருக்காது. சொல்லப்போனால், மிருகங்களை மாதிரி நாம் செத்துப் போயிருப்போம். (பிர. 3:19; 2 பே. 2:12) அப்படியென்றால், நம் உதவிக்கு வந்தது யார்?
5. பாவம் என்ற கடனை அடைப்பதற்கு யெகோவா நமக்கு எப்படி உதவியிருக்கிறார்? (படத்தைப் பாருங்கள்.)
5 முன்பு பார்த்த இளைஞனைப் பற்றி யோசித்துப் பாருங்கள். ஒருவேளை, ஒரு பணக்காரர் வந்து ‘உன்னுடைய கடனையெல்லாம் நான் கட்டிவிடுகிறேன்’ என்று சொன்னால் அந்த இளைஞனுக்கு எப்படி இருக்கும்? கண்டிப்பாக அவனுடைய மனதில் நன்றி பொங்கும். அந்தப் பணக்காரர் கொடுக்கிற உதவியை அவன் ஏற்றுக்கொள்வான். நம்முடைய அன்பான அப்பா யெகோவாவும் நமக்கு உதவி செய்ய வந்திருக்கிறார். ஆதாமிடமிருந்து நமக்கு வந்த பாவம் என்ற கடனை ஈடுகட்ட யெகோவா நமக்கு ஒரு பரிசு கொடுத்திருக்கிறார். அதைப் பற்றி இயேசு இப்படிச் சொன்னார்: “கடவுள் தன்னுடைய ஒரே மகன்மேல் விசுவாசம் வைக்கிற யாரும் அழிந்துபோகாமல் முடிவில்லாத வாழ்வைப் பெற வேண்டும் என்பதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மேல் அன்பு காட்டினார்.” (யோவா. 3:16) யெகோவா கொடுத்திருக்கிற இந்தப் பரிசால் நமக்கு இன்னொரு நல்லதும் நடந்திருக்கிறது. அதாவது, அவரோடு நம்மால் ஒரு நல்ல பந்தத்தையும் வைத்துக்கொள்ள முடிகிறது.
6. இந்தக் கட்டுரையில் எந்த வார்த்தைகளுக்கான விளக்கத்தைப் பார்ப்போம், ஏன்?
6 யெகோவா கொடுத்திருக்கிற பரிசிலிருந்து நாம் எப்படி நன்மையடையலாம்? நம்முடைய ‘கடன்களிலிருந்து,’ அதாவது பாவத்திலிருந்து, நமக்கு எப்படி மன்னிப்பு கிடைக்கும்? இந்தக் கேள்விகளுக்குப் பதில் தெரிந்துகொள்ள பைபிள் பயன்படுத்தும் சில வார்த்தைகளைப் பற்றிப் பார்க்கலாம். அந்த வார்த்தைகள்: சமரசம், பாவ பரிகாரம், பிராயச்சித்தம், மீட்புவிலை, மீட்கப்படுவது, நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவது. இந்த ஒவ்வொரு வார்த்தைக்கான அர்த்தத்தையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். இந்த வார்த்தைகளைப் பற்றி ஆழமாக யோசிக்கும்போது, நம்மை மன்னிப்பதற்காக யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அவருக்கு இன்னும் நன்றியோடு இருப்போம்.
குறிக்கோள்: சமரசமாவது
7. (அ) ஆதாம் ஏவாள் வேறு எதையும்கூட இழந்துவிட்டார்கள்? (ஆ) ஆதாம் ஏவாளுடைய பிள்ளைகளாக நமக்கு என்ன தேவை இருக்கிறது? (ரோமர் 5:10, 11)
7 ஆதாம் ஏவாள் என்றென்றும் வாழ்கிற வாய்ப்பை மட்டுமே இழக்கவில்லை. தங்களுடைய அப்பாவான யெகோவாவோடு இருந்த நல்ல பந்தத்தையும் இழந்துவிட்டார்கள். ஆரம்பத்தில் அவர்கள் யெகோவாவுடைய குடும்பத்தில் ஒருவராகத்தான் இருந்தார்கள். (லூக். 3:38) ஆனால், கீழ்ப்படியாமல் போனபோது அவருடைய குடும்பத்திலிருந்து துரத்தப்பட்டார்கள். இவையெல்லாம் அவர்களுக்குக் குழந்தைகள் பிறப்பதற்கு முன்பு நடந்தது. (ஆதி. 3:23, 24; 4:1) அதனால், ஆதாம் ஏவாளுடைய பிள்ளைகளாக நம் யாராலும் யெகோவாவுடைய குடும்பத்தில் ஒருவராக ஆக முடியவில்லை. அந்தக் குடும்பத்தில் ஒருவராக ஆவதற்கும், அவரோடு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கும் நாம் அவரோடு சமரசம் ஆக வேண்டிய அவசியம் இருக்கிறது. (ரோமர் 5:10, 11-ஐ வாசியுங்கள்.) இங்கே பயன்படுத்தப்பட்டிருக்கிற “சமரசம்” என்ற வார்த்தைக்கான கிரேக்க வார்த்தை “ஒரு எதிரியை நண்பராக ஆக்கிக்கொள்வதை” குறிக்கலாம் என்று ஒரு ஆராய்ச்சிக் குறிப்பு சொல்கிறது. அப்படிப் பார்த்தால், எதிரிகளாக இருக்கிற நம்மைத் தன்னுடைய நண்பராக ஆக்கிக்கொள்வதற்கு யெகோவாதான் முதல்படி எடுத்திருக்கிறார். இது எவ்வளவு பெரிய விஷயம்! சரி, அதை அவர் எப்படிச் செய்தார்?
யெகோவா செய்த ஏற்பாடு: பாவ பரிகாரம்
8. (அ) பாவ பரிகாரம் என்றால் என்ன? (ஆ) பிராயச்சித்தம் என்றால் என்ன?
8 யெகோவா பாவ பரிகாரம் என்ற ஒரு ஏற்பாட்டைச் செய்தார். பாவமுள்ள மனிதர்கள் தன்னோடு ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்கு இந்த ஏற்பாடு உதவுகிறது. பரிகாரம் செய்வது என்பது, இழந்து போன ஒரு விஷயத்தை ஈடுகட்ட அதற்குச் சமமாக இருக்கிற இன்னொரு விஷயத்தைக் கொடுப்பதை அர்த்தப்படுத்துகிறது. இந்த ஏற்பாட்டின் மூலம் இழந்தது நமக்குத் திரும்ப கிடைக்கும். ஆதாம் எதை இழந்தானோ அது நமக்குக் கிடைக்க வேண்டுமென்பதற்காக யெகோவா இந்த ஏற்பாட்டைச் செய்திருக்கிறார். கிறிஸ்தவ கிரேக்க வேதாகமத்தில் “பரிகாரம்” என்ற வார்த்தையின் அர்த்தத்தைக் கொடுக்கிற இன்னொரு வார்த்தையும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அதுதான் பிராயச்சித்தம். (ரோ. 3:25) யெகோவாவோடு சமாதானமாவதற்காகவும் ஒரு நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வதற்காகவும் செய்யப்பட்ட ஒரு செயல்தான் பிராயச்சித்தம்.
9. இஸ்ரவேலர்களுடைய பாவத்தை மன்னிப்பதற்காக யெகோவா தற்காலிகமாக என்ன ஏற்பாடு செய்திருந்தார்?
9 இஸ்ரவேலர்களுடைய பாவத்தை மன்னிப்பதற்காக யெகோவா தற்காலிகமாக ஒரு ஏற்பாடு செய்தார். அதனால், இஸ்ரவேலர்களால் யெகோவாவோடு ஒரு நல்ல பந்தத்தையும் வைத்துக்கொள்ள முடிந்தது. இஸ்ரவேல் தேசத்தில் வருஷத்துக்கு ஒரு தடவை பாவ பரிகார நாள் அனுசரிக்கப்பட்டது. அந்த நாளில், தலைமை குரு மக்களுடைய சார்பாக மிருக பலிகளைச் செலுத்துவார். உண்மைதான், மனிதர்களுடைய பாவத்துக்கு மிருக பலிகள் ஈடாகாது. ஏனென்றால், மிருகங்களுடைய உயிர் மனிதர்களுடைய உயிருக்குச் சமம் கிடையாது. ஆனால் இஸ்ரவேலர்கள் மனம் திருந்தி, யெகோவா தங்களிடம் எதிர்பார்த்த பலிகளைக் கொடுத்தபோது, அவர் அவர்களுடைய பாவங்களை மன்னிக்கத் தயாராக இருந்தார். (எபி. 10:1-4) அதுமட்டுமல்ல, இந்த ஏற்பாடும் அவர்கள் செலுத்திய மற்ற பாவ பரிகார பலிகளும் தாங்கள் பாவிகள் என்பதை அவர்களுக்கு ஞாபகப்படுத்தியது. இதற்கு நிரந்தரமான ஒரு தீர்வு தேவை என்பதையும் அவர்களுக்கு ஞாபகப்படுத்தியது.
10. பாவங்களை மன்னிப்பதற்கு யெகோவா செய்த நிரந்தரமான ஏற்பாடு என்ன?
10 எல்லாருடைய பாவத்தையும் மன்னிப்பதற்கு நிரந்தரமான ஒரு ஏற்பாட்டை யெகோவா செய்தார். தன்னுடைய அன்பு மகனை “பலருடைய பாவங்களைச் சுமப்பதற்காக எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக” பலியாகக் கொடுத்தார். (எபி. 9:28) இயேசுவும் “பலருடைய உயிருக்கு ஈடாகத் தன்னுடைய உயிரை மீட்புவிலையாக” கொடுத்தார். (மத். 20:28) சரி, மீட்புவிலை என்றால் என்ன?
கொடுக்கப்பட்ட தொகை: மீட்புவிலை
11. (அ) பைபிளைப் பொறுத்தவரை மீட்புவிலை என்றால் என்ன? (ஆ) மீட்புவிலை கொடுக்கப்படுவதற்கு என்ன தேவைப்பட்டது?
11 பைபிளைப் பொறுத்தவரை, பாவ பரிகாரம் செய்வதற்கும், சமரசம் செய்வதற்கும் கொடுக்கப்படுகிற தொகைதான் மீட்புவிலை. a இழந்ததை மறுபடியும் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், மீட்புவிலை கொடுக்கப்பட வேண்டும் என்று யெகோவா நினைத்தார். ஆதாம் ஏவாள் பரிபூரணமான வாழ்க்கையை இழந்தார்கள். அதோடு சேர்த்து, என்றென்றைக்கும் வாழ்கிற நம்பிக்கையையும் இழந்துவிட்டார்கள். அவர்கள் இழந்த இந்த விஷயங்களுக்குச் சரிசமமான ஒரு மீட்புவிலைதான் கொடுக்கப்பட வேண்டும். (1 தீ. 2:6) இது எப்படிக் கொடுக்கப்படும்? இதை ஒரு ஆண்தான் கொடுக்க முடியும். (1) அவர் பரிபூரணமாக இருக்க வேண்டும்; (2) அவரால் என்றென்றைக்கும் பூமியில் வாழ முடிய வேண்டும்; (3) மனிதர்களுக்காக தன்னுடைய உயிரைத் தியாகம் செய்கிற விருப்பம் அவருக்கு இருக்க வேண்டும். இப்படிப்பட்ட ஒரு நபருடைய உயிர்தான் ஆதாம் இழந்த அந்த உயிருக்குச் சரியான பரிகாரமாக இருக்க முடியும்.
12. இயேசுவால் ஏன் மீட்புவிலையைக் கொடுக்க முடிந்தது?
12 மீட்புவிலையை இயேசுவால் ஏன் கொடுக்க முடிந்தது என்பதற்கு மூன்று காரணங்களைப் பார்க்கலாம். (1) அவர் பரிபூரணமாக இருந்தார். “அவர் பாவம் செய்யவில்லை.” (1 பே. 2:22) (2) பாவமே செய்யாததால், அவரால் பூமியில் என்றென்றும் வாழ முடிந்திருக்கும். (3) மனிதர்களுக்காக இறப்பதற்கும், தன்னுடைய உயிரைத் தியாகம் செய்வதற்கும் அவர் தயாராக இருந்தார். (எபி. 10:9, 10) பாவம் செய்வதற்கு முன்பு இருந்த ஆதாமுக்கு, பரிபூரண மனிதரான இயேசு சமமாக இருந்தார். (1 கொ. 15:45) அதனால், தன்னுடைய மரணத்தின் மூலம் ஆதாம் செய்த பாவத்துக்கு இயேசுவால் பரிகாரம் செய்ய முடிந்தது. அதாவது, ஆதாம் எதையெல்லாம் இழந்தானோ அதற்கெல்லாம் ஈடுகட்ட முடிந்தது. (ரோ. 5:19) அதனால்தான் பைபிள் இயேசுவை “கடைசி ஆதாம்” என்று சொல்கிறது. இதற்குப் பிறகு இன்னொரு பரிபூரண நபர் வந்து ஆதாம் இழந்ததையெல்லாம் மீட்டுக் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. இயேசுவே “எல்லா காலத்துக்கும் ஒரே தடவையாக” பலியானார்.—எபி. 7:27; 10:12.
13. பாவ பரிகார ஏற்பாட்டுக்கும், மீட்புவிலைக்கும் என்ன வித்தியாசம்?
13 பாவ பரிகார ஏற்பாட்டுக்கும், மீட்புவிலைக்கும் என்ன வித்தியாசம்? மனிதர்கள் தன்னோடு ஒரு நல்ல பந்தத்தை மறுபடியும் வைத்துக்கொள்வதற்காக யெகோவா செய்த ஏற்பாடுதான் பாவ பரிகார ஏற்பாடு. மனிதர்களுடைய பாவ பரிகாரத்துக்காக கொடுக்கப்பட்ட விலைதான் மீட்புவிலை. அந்த விலைதான் இயேசு நமக்காக சிந்திய இரத்தம்.—எபே. 1:7; எபி. 9:14.
பலன்கள்: மீட்கப்படுவது மற்றும் நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவது
14. இப்போது நாம் எதைப் பற்றிப் பார்ப்போம், ஏன்?
14 பாவ பரிகார ஏற்பாட்டினால் என்ன பலன்கள் கிடைக்கின்றன? இந்தப் பலன்களைப் பற்றி விவரிக்க பைபிள் நிறைய வார்த்தைகளைப் பயன்படுத்துகிறது. இந்த வார்த்தைகள் கிட்டத்தட்ட ஒரே அர்த்தத்தைக் கொடுத்தாலும், அந்த ஒவ்வொரு வார்த்தையும் பாவ பரிகார ஏற்பாட்டைப் பற்றிய ஒவ்வொரு அம்சத்தை விளக்குகிறது. இந்த வார்த்தைகளை ஆழமாக யோசித்துப் பார்க்கும்போது, யெகோவாவின் மன்னிப்பிலிருந்து நாம் எப்படி நன்மையடைகிறோம் என்று தெரிந்துகொள்ள முடியும்.
15-16. (அ) பைபிளில் “மீட்கப்படுவது” என்ற வார்த்தை எதைக் குறிக்கிறது? (ஆ) மீட்கப்படுவதைப் பற்றி நினைக்கும்போது நமக்கு எப்படியிருக்கிறது?
15 பைபிளில் மீட்கப்படுவது என்ற வார்த்தை, மீட்புவிலை கொடுக்கப்பட்டதால் விடுதலை செய்யப்படுவதைக் குறிக்கிறது. இதை அப்போஸ்தலன் பேதுரு இப்படிச் சொல்கிறார்: “உங்கள் முன்னோர்களிடமிருந்து வந்த வீணான வாழ்க்கை முறையிலிருந்து, அழியக்கூடிய பொருள்களான தங்கம், வெள்ளி போன்றவற்றால் நீங்கள் விடுவிக்கப்படாமல், மாசில்லாத, களங்கமில்லாத ஆட்டுக்குட்டியாகிய கிறிஸ்துவின் விலைமதிப்புள்ள இரத்தத்தால் விடுவிக்கப்பட்டு [நே.மொ., “மீட்கப்பட்டு.”] இருக்கிறீர்கள், இது உங்களுக்கே தெரியும்.”—1 பே. 1:18, 19, அடிக்குறிப்பு.
16 மீட்புவிலை கொடுக்கப்பட்டதால்தான் பாவத்தின் கொடூர பிடியிலிருந்தும், மரணத்திலிருந்தும் நம்மால் விடுதலையாக முடிகிறது. (ரோ. 5:21) இயேசுவின் இரத்தம், அதாவது அவருடைய உயிர்தான், நம்மை மீட்கிறது. இதற்காக நாம் யெகோவாவுக்கும், இயேசுவுக்கும் என்றென்றைக்குமே நன்றியோடு இருக்கிறோம்.—1 கொ. 15:22.
17-18. (அ) நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்படுவது என்றால் அர்த்தம் என்ன? (ஆ) இதனால் நமக்கு என்ன நன்மை?
17 ஒருவரை நீதிமானாக ஏற்றுக்கொள்வது என்றால், அவர் செய்த பாவத்தை ரத்து செய்து, அந்தப் பாவத்தைத் துடைத்தழிப்பதைக் குறிக்கிறது. இப்படிச் செய்வதால், யெகோவா தன்னுடைய நீதியான தராதரத்தை விட்டு இறங்கிவிடுகிறார் என்று அர்த்தம் கிடையாது. ஏனென்றால், நாம் ஏதோ நீதிமான்களாக நடந்துகொண்டதாலோ அல்லது நம்முடைய பாவங்களைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாலோ அவர் இப்படிச் செய்யவில்லை. பாவ பரிகார ஏற்பாட்டிலும், மீட்புவிலையிலும் நாம் விசுவாசம் வைத்ததால்தான் யெகோவா நம்முடைய பாவங்களை ரத்து செய்கிறார்.—ரோ. 3:24; கலா. 2:16.
18 யெகோவா நம்மை நீதிமான்களாக ஏற்றுக்கொள்வதால் என்ன நன்மை கிடைக்கிறது? இயேசுவோடு பரலோகத்தில் ஆட்சி செய்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறவர்கள் ஏற்கெனவே நீதிமான்களாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இருக்கிறார்கள். அவர்கள் கடவுளுடைய பிள்ளைகளாக இருக்கிறார்கள். (தீத். 3:7; 1 யோ. 3:1) அவர்களுடைய பாவங்கள் மன்னிக்கப்பட்டிருக்கின்றன. சொல்லப்போனால், அவர்கள் பாவமே செய்யாத மாதிரி யெகோவா அவர்களைப் பார்க்கிறார். அதனால், கடவுளுடைய அரசாங்கத்தில் இருப்பதற்கு அவர்கள் தகுதி பெற்றிருக்கிறார்கள். (ரோ. 8:1, 2, 30) பூமியில் வாழ்கிற நம்பிக்கை இருக்கிறவர்களைப் பற்றி என்ன சொல்லலாம்? கடவுள் அவர்களையும் நீதிமான்களாக ஏற்றுக்கொண்டு தன்னுடைய நண்பர்களாக பார்க்கிறார். அவர்களுடைய பாவங்களையும் மன்னிக்கிறார். (யாக். 2:21-23) அர்மகெதோனில் தப்பிக்கிற திரள் கூட்டமான மக்களால் மரணம் இல்லாமல் என்றென்றும் வாழ முடியும். (யோவா. 11:26) ஏற்கெனவே இறந்துபோன “நீதிமான்களும்,” “அநீதிமான்களும்” உயிர்த்தெழுப்பப்படுவார்கள். (அப். 24:15; யோவா. 5:28, 29) கடைசியில், பூமியில் வாழ்கிற யெகோவாவுடைய உண்மையுள்ள ஊழியர்கள் எல்லாருமே “கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையை” பெறுவார்கள். (ரோ. 8:21) பாவ பரிகார ஏற்பாட்டினால், நம்முடைய அப்பா யெகோவாவோடு நம்மால் முழுமையாக சமரசமாக முடியும். இது எவ்வளவு பெரிய ஆசீர்வாதம், இல்லையா!
19. நம்முடைய சூழ்நிலை இப்போது எப்படி நல்லபடியாக மாறியிருக்கிறது? (“ யெகோவாவின் மன்னிப்பு” என்ற பெட்டியையும் பாருங்கள்.)
19 ஒருகாலத்தில் நம்முடைய சூழ்நிலை, முதல் பாராவில் சொல்லப்பட்ட இளைஞனை மாதிரிதான் இருந்தது. திருப்பி கொடுக்க முடியாத அளவுக்கு ஒரு பெரிய கடனில் நாம் விழுந்திருந்தோம். யெகோவாதான் நம்மைத் தூக்கிவிட்டிருக்கிறார். அவர் செய்திருக்கிற பாவ பரிகாரம் என்ற ஏற்பாட்டினாலும், இயேசு கொடுத்த மீட்புவிலையாலும் நம்முடைய சூழ்நிலை இப்போது மாறியிருக்கிறது. இயேசுமேல் நாம் விசுவாசம் வைப்பதால் பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் நாம் மீட்கப்படுகிறோம், அதாவது விடுவிக்கப்படுகிறோம். நம்முடைய பாவங்கள் ரத்து செய்யப்படுகிறது. அதாவது, நாம் பாவமே செய்யாத மாதிரி யெகோவா அதைத் துடைத்தழிக்கிறார். எல்லாவற்றையும்விட முக்கியமாக, நம்முடைய அன்பான அப்பா யெகோவாவோடு நம்மால் ஒரு நல்ல பந்தத்தை இப்போதே வைத்துக்கொள்ள முடிகிறது.
20. அடுத்த கட்டுரையில் எதைப் பற்றிப் பார்ப்போம்?
20 யெகோவாவும் இயேசுவும் நமக்காக செய்திருப்பதை யோசித்துப் பார்க்கும்போது நம் இதயம் நன்றியால் நிறைகிறது. (2 கொ. 5:15) அவர்களுடைய உதவி மட்டும் இல்லையென்றால், நம்முடைய வாழ்க்கை என்ன ஆகியிருக்கும்! மீட்புவிலையால் தனிப்பட்ட நபர்களாக நமக்கு நிறைய நன்மைகள் இருக்கின்றன. அதைப் புரிந்துகொள்வதற்கு உதவி செய்கிற நிறைய உதாரணங்களை அடுத்த கட்டுரையில் அலசிப் பார்ப்போம்.
பாட்டு 10 யெகோவாவைப் புகழ்வேன்
a சில மொழிகளில், “மீட்புவிலை” என்ற வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகளின் நேரடி அர்த்தம்: “ஒரு உயிருக்குக் கொடுக்கப்படும் விலை,” அல்லது, “கொடுக்கப்பட்ட ஒரு தொகை.”