படிப்புக் கட்டுரை 8
பாட்டு 130 மன்னியுங்கள்
யெகோவாவின் மன்னிப்பு—நீங்கள் எப்படிப் பின்பற்றலாம்?
“யெகோவா உங்களைத் தாராளமாக மன்னித்ததுபோல் நீங்களும் ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்.”—கொலோ. 3:13.
என்ன கற்றுக்கொள்வோம்?
நம்முடைய மனதைக் காயப்படுத்தியவர்களை மன்னிப்பதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்று கற்றுக்கொள்வோம்.
1-2. (அ) ஒருவரை மன்னிப்பது நமக்கு எப்போது கஷ்டமாக இருக்கலாம்? (ஆ) சகோதரி டென்னிஸ் எப்படி மன்னித்தார்?
மற்றவர்களை மன்னிப்பது உங்களுக்குக் கஷ்டமாக இருக்கிறதா? நம்மில் நிறையப் பேருக்கு அது கஷ்டமாக இருக்கும். அதுவும், நம்மை ரொம்பவே காயப்படுத்துகிற மாதிரி அவர்கள் ஏதாவது சொன்னாலோ செய்தாலோ நமக்கு அவர்களை மன்னிப்பது கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நம்முடைய மனதில் ஏற்பட்ட வலியை நம்மால் சமாளிக்க முடியும்; மன்னிக்கவும் முடியும். அதற்கு ஒரு உதாரணம்தான் சகோதரி டென்னிஸ். a அவர் காட்டிய மன்னிப்பு சாதாரண மன்னிப்பே கிடையாது. அவருக்கு என்ன நடந்தது என்று பார்க்கலாம். 2017-ல் சகோதரி டென்னிஸும் அவருடைய குடும்பமும் புதிதாக திறக்கப்பட்ட யெகோவாவின் சாட்சிகளுடைய உலக தலைமை அலுவலகத்தைப் பார்க்கப் போனார்கள். அவர்கள் அதைப் பார்த்துவிட்டு வீடு திரும்பும் வழியில் இன்னொரு கார் கட்டுப்பாட்டை இழந்து இவர்களுடைய வண்டியில் மோதியது. இந்த விபத்தில், சகோதரி டென்னிஸ் சுயநினைவை இழந்துவிட்டார். அவர் கண்விழித்தபோது அவருடைய பிள்ளைகளுக்குப் பயங்கரமாக அடிபட்டிருந்ததையும் அவருடைய கணவர் பிரையன் இறந்துவிட்டதையும் தெரிந்துகொண்டார். அதைப் பற்றி டென்னிஸ் இப்படிச் சொல்கிறார்: “நான் அப்படியே உடைந்து போய்விட்டேன். ஒரே குழப்பமாக இருந்தது.” அந்த இன்னொரு காரை ஓட்டிக்கொண்டு வந்தவர் போதையாலோ கவனம்சிதறியதாலோ இந்த விபத்தை ஏற்படுத்தவில்லை என்றும், இது எதிர்பாராமல் நடந்த விபத்து என்றும் டென்னிஸ் பிறகு தெரிந்துகொண்டார். மனசுக்குச் சமாதானத்தைத் தரச் சொல்லி அவர் யெகோவாவிடம் ஜெபம் செய்தார்.
2 அந்த டிரைவர்மேல் கொலை குற்றம் சுமத்தப்பட்டது. அவருடைய குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்குச் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருந்தது. ஆனால், சகோதரி டென்னிஸின் வாக்குமூலத்தைப் பொறுத்துதான் அந்த டிரைவருக்குத் தண்டனை கிடைக்கும் என்று நீதிமன்றம் சொன்னது. அதைப் பற்றி டென்னிஸ் இப்படிச் சொல்கிறார்: “என் வாழ்க்கையின் வேதனையான அந்த நிமிஷங்களைப் பற்றித் திரும்பவும் பேச வேண்டியிருக்கும் என்று நினைத்தபோது, என் காயத்துக்கு மேல் போடப்பட்டிருந்த தையல்களைப் பிரித்து ஒரு மூட்டை உப்பை அதன்மேல் கொட்டிய மாதிரி இருந்தது!” சில வாரங்களுக்குப் பிறகு, தன்னுடைய குடும்பத்துக்கு இவ்வளவு வலியைத் தந்த அந்த டிரைவருக்கு முன்பு வாக்குமூலம் கொடுக்க டென்னிஸ் நீதிமன்றத்தில் உட்கார்ந்திருந்தார். டென்னிஸ் என்ன சொன்னார்? டிரைவருக்கு இரக்கம் காட்டச் சொல்லி நீதிபதியிடம் கேட்டார். b அவர் பேசி முடித்த உடனே அந்த நீதிபதி அழ ஆரம்பித்துவிட்டார். நீதிபதி இப்படிச் சொன்னார்: “என்னுடைய 25 வருஷ அனுபவத்தில், இந்த நீதிமன்றத்தில் யாரும் இப்படிப் பேசி நான் கேட்டதே இல்லை. தப்பு செய்தவருக்கு இரக்கம் காட்டச் சொல்லி பாதிக்கப்பட்ட குடும்பம் கேட்பதை நான் பார்த்ததே இல்லை. இங்கே யாருமே அன்பாகப் பேசவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.”
3. டென்னிஸ் ஏன் மன்னித்தார்?
3 இப்படி மன்னிப்பதற்கு டென்னிஸுக்கு எது உதவியது? அவர் யெகோவாவுடைய மன்னிப்பைப் பற்றி யோசித்துப் பார்த்தார். (மீ. 7:18) நம்மை யெகோவா மன்னிப்பதற்காக நாம் நன்றியோடு இருந்தால், மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்ற எண்ணம் நமக்கு வரும்.
4. நாம் என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார்? (எபேசியர் 4:32)
4 யெகோவா நம்மைத் தாராளமாக மன்னிக்கிற மாதிரி நாமும் மற்றவர்களைத் தாராளமாக மன்னிக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (எபேசியர் 4:32-ஐ வாசியுங்கள்.) நம்மைக் காயப்படுத்தியவர்களை மன்னிக்க நாம் தயாராக இருக்க வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். (சங். 86:5; லூக். 17:4) இதை இன்னும் நன்றாக செய்ய உதவுகிற மூன்று விஷயங்களைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.
நமக்குள் என்ன உணர்ச்சிகள் வரலாம்?
5. நீதிமொழிகள் 12:18 சொல்கிற மாதிரி, யாராவது நம்முடைய மனதைக் காயப்படுத்திவிட்டால் நமக்கு எப்படி இருக்கலாம்?
5 ஒருவருடைய சொல்லோ செயலோ நம்மை ரொம்பவே காயப்படுத்திவிடலாம். அதுவும், அவர் நம் நண்பராகவோ குடும்பத்தில் ஒருவராகவோ இருந்தால் சொல்லவே வேண்டாம். (சங். 55:12-14) அது கத்தியால் குத்திய மாதிரி வலிக்கலாம். (நீதிமொழிகள் 12:18-ஐ வாசியுங்கள்.) அதுபோன்ற சமயங்களில், நம்முடைய வலியை வெறுமனே அடக்கிக்கொள்ளலாம் அல்லது கண்டுகொள்ளாமல் இருக்கலாம் என்று நமக்குத் தோன்றலாம். ஆனால் அப்படிச் செய்வது, குத்தப்பட்ட கத்தியை அப்படியே விட்டுவிடுவது போலத்தான் இருக்கும். அதேமாதிரி, மனதில் ஏற்பட்ட காயத்தைக் கண்டுகொள்ளாமல் இருந்தால் அது தானாக சரியாகும் என்று எதிர்பார்க்க முடியாது.
6. ஒருவர் நம்மைக் காயப்படுத்தும்போது பொதுவாக நாம் எப்படி நடந்துகொள்வோம்?
6 ஒருவர் நம்மைக் காயப்படுத்தும்போது நமக்குச் சட்டென்று கோபம் வந்துவிடலாம். சொல்லப்போனால், நமக்குப் பயங்கர கோபம் வரலாம் என்று பைபிள்கூட ஒத்துக்கொள்கிறது. ஆனால், நாம் கோபமாகவே இருந்துவிடக் கூடாது என்றும் அது எச்சரிக்கிறது. (சங். 4:4; எபே. 4:26) ஏன்? ஏனென்றால், பெரும்பாலும் உணர்ச்சிகள் செயல்களாக உருவெடுக்கிறது. அதுமட்டுமல்ல, நாம் கோபமாகவே இருக்கும்போது தப்பு செய்வதற்கும் வாய்ப்பு இருக்கிறது. (யாக். 1:20) இதை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்: கோபப்படுவது சட்டென்று வருகிற ஒரு உணர்ச்சி. ஆனால், கோபத்தை வைத்துக்கொண்டே இருப்பது நாம் எடுக்கிற ஒரு முடிவு.
கோபப்படுவது சட்டென்று வருகிற ஒரு உணர்ச்சி; ஆனால், கோபமாகவே இருப்பது நாம் எடுக்கிற ஒரு முடிவு
7. யாராவது நம்மைக் காயப்படுத்தும்போது வேறு எந்த மாதிரி உணர்ச்சிகள் நமக்கு வரலாம்?
7 யாராவது நம்மை மோசமாக நடத்தும்போது வேறு உணர்ச்சிகளும் நம் மனதை வாட்டி எடுக்கலாம். உதாரணத்துக்கு, ஹானா என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நான் சின்ன வயதில் இருந்தபோது, என்னுடைய அப்பா என் அம்மாவை விட்டுவிட்டு போய்விட்டார். என்னைப் பார்த்துக்கொள்வதற்காக வேலைக்கு வைத்திருந்த ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்துகொண்டார். அந்தச் சமயத்தில், நான் தன்னந்தனி ஆனதுபோல் உணர்ந்தேன். அவர்களுக்குக் குழந்தைகள் பிறந்தபோது என்னுடைய இடத்தை இன்னொருவர் எடுத்த மாதிரி இருந்தது. யாருக்கும் நான் தேவையில்லை என்ற உணர்வு வந்தது.” ஜார்ஜெட் என்ற சகோதரி தன்னுடைய கணவர் தனக்குத் துரோகம் செய்ததைப் பற்றி இப்படிச் சொல்கிறார்: “நாங்கள் இருவரும் சின்ன வயதில் இருந்தே நல்ல ஃபிரண்ட்ஸ். பயனியர் சேவையையும் சேர்ந்துதான் செய்தோம். அதனால், அவர் துரோகம் செய்ததைப் பற்றித் தெரிய வந்தபோது என் மனசு சுக்குநூறாக உடைந்தது.” கடைசியில் அவர்களுடைய கல்யாண வாழ்க்கை விவாகரத்தில் போய் முடிந்தது. நவோமி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “என் கணவர் என் மனசை நோகடிப்பார் என்று நான் நினைத்துகூட பார்த்தது இல்லை. அவர் ஆபாசத்தைப் பார்த்துகொண்டிருந்ததாகவும் அதை இத்தனை நாளாக என்னிடமிருந்து மறைத்துவிட்டதாகவும் சொன்னபோது, என்னை ஏமாற்றிவிட்ட மாதிரியும், எனக்குத் துரோகம் செய்த மாதிரியும் உணர்ந்தேன்.”
8. (அ) என்ன காரணங்களுக்காக நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும்? (ஆ) மன்னிப்பதால் நமக்கு என்ன நன்மைகள் கிடைக்கும்? (“ ஒருவர் நம் மனதை ஆழமாக காயப்படுத்தினால்...” என்ற பெட்டியைப் பாருங்கள்.)
8 மற்றவர்கள் நம்மிடம் என்ன சொல்கிறார்கள்... எப்படி நடந்துகொள்கிறார்கள்... என்பது நம் கையில் இல்லை; அந்தச் சமயத்தில் நாம் எப்படி நடந்துகொள்கிறோம் என்பது நம் கையில்தான் இருக்கிறது. ஆனால், மன்னிப்பதுதான் பெரும்பாலும் ஒரு நல்ல முடிவாக இருக்கும். ஏன்? ஏனென்றால், நாம் யெகோவாவை நேசிக்கிறோம்; நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்று அவர் ஆசைப்படுகிறார். கோபத்தை விட்டுவிடாமலும் மன்னிக்காமலும் இருந்தால், முட்டாள்தனமாக எதையாவது செய்துவிட வாய்ப்பிருக்கிறது; நம் உடல்நலமும் பாதிக்கப்படலாம். (நீதி. 14:17, 29, 30) கிறிஸ்டீன் என்ற சகோதரியின் உதாரணத்தைக் கவனியுங்கள். அவர் இப்படிச் சொல்கிறார்: “நான் கோபமாக இருக்கும்போது என் முகத்தில் சிரிப்பே இருக்காது. எதெல்லாம் உடம்புக்கு நல்லது இல்லையோ அதையெல்லாம் எடுத்து சாப்பிட்டுக்கொண்டு இருப்பேன். சரியாக தூங்கவும் முடியாது. உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதும் கஷ்டமாகிவிடும். அதனால் என் கணவரிடமும் மற்றவர்களிடமும் சரியாக நடந்துகொள்ளாமல் போய்விடுவேன்.”
9. நாம் ஏன் வெறுப்பையும் கோபத்தையும் விட்டுவிட வேண்டும்?
9 ஒருவேளை நம்மைக் காயப்படுத்தியவர், தான் செய்த தவறுக்காக நம்மிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்றாலும், அவர் ஏற்படுத்திய பாதிப்பை நம்மால் குறைக்க முடியும். எப்படி? முன்பு பார்த்த ஜார்ஜட் இப்படிச் சொல்கிறார்: “என்னுடைய முன்னாள் கணவர்மேல் இருந்த கோபத்தையும் வெறுப்பையும் விடுவதற்கு எனக்குக் கொஞ்சம் நாள் ஆனது உண்மைதான். ஆனாலும் அப்படி விட்டுவிட நான் முயற்சி எடுத்ததால், என் மனசுக்குச் சமாதானம் கிடைத்தது.” நம் மனதில் இருக்கிற வெறுப்பை விட்டுவிட்டால், நம்முடைய இதயம் பாரமாகாதபடி பார்த்துக்கொள்வோம்; மற்றவர்களிடமும் நல்ல பந்தத்தை வைத்துக்கொள்வோம். இப்படிச் செய்வதால், நமக்கே நாம் நல்லது செய்கிறோம். எப்படி? கசப்பான அந்த அனுபவத்தைப் பற்றியே யோசித்துக்கொண்டிருக்காமல், வாழ்க்கையில் சந்தோஷமாக முன்னோக்கி போவோம். (நீதி. 11:17) ஆனால் இவற்றையெல்லாம் செய்தப் பிறகும், உங்களால் மன்னிக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?
உணர்ச்சிகளை எப்படிச் சமாளிக்கலாம்?
10. நம் மனம் ஆறுவதற்கு ஏன் நேரம் கொடுக்க வேண்டும்? (படங்களையும் பாருங்கள்.)
10 கோபத்தையும் வெறுப்பையும் மனதிலிருந்து எடுத்துப்போட நீங்கள் என்ன செய்யலாம்? ஒரு வழி: உங்களுக்கே கொஞ்சம் நேரம் கொடுங்கள். ஒருவருக்குப் பயங்கரமாக அடிபட்டிருந்தால், சிகிச்சை கிடைத்தப் பிறகும் அவர் குணமாவதற்குக் கொஞ்சம் காலம் எடுக்கும். அதேமாதிரி, நம் மனதில் ஏற்பட்ட காயம் ஆறுவதற்கும், காயப்படுத்தியவரை மனசார மன்னிப்பதற்கும் நமக்குக் கொஞ்சம் காலம் தேவைப்படும்.—பிர. 3:3; 1 பே. 1:22.
11. மன்னிப்பதற்கு ஜெபம் எப்படி உதவும்?
11 ஜெபம் செய்யுங்கள். மன்னிப்பதற்கு உதவச் சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள். c மேலே பார்த்த ஹானா, ஜெபம் செய்தது எப்படி உதவியாக இருந்தது என்று சொல்கிறார்: “எங்கள் குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரையும் மன்னிக்கச் சொல்லி யெகோவாவிடம் கேட்டேன். ஏனென்றால், நாங்கள் சில விஷயங்களைச் சரியாக செய்யவோ சொல்லவோ இல்லை. பிறகு, என் அப்பாவுக்கும் அவர் இப்போது கல்யாணம் செய்திருக்கிற மனைவிக்கும் ஒரு கடிதம் எழுதினேன். அதில், நான் அவர்களை மன்னித்துவிட்டதாக சொன்னேன்.” இதைச் செய்வது ஹானாவுக்குக் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனால், அவர் இப்படிச் சொல்கிறார்: “யெகோவாவை மாதிரியே நானும் மன்னிக்க முயற்சி செய்தால், ஒருநாள் என்னுடைய அப்பாவும் அவருடைய மனைவியும் யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுவார்கள் என்று நம்புகிறேன்.”
12. நாம் ஏன் யெகோவாவை நம்ப வேண்டும்? (நீதிமொழிகள் 3:5, 6)
12 உங்கள் உணர்ச்சிகளை அல்ல, யெகோவாவை நம்புங்கள். (நீதிமொழிகள் 3:5, 6-ஐ வாசியுங்கள்.) நமக்கு எது சிறந்தது என்று அவருக்கு நன்றாக தெரியும். (ஏசா. 55:8, 9) நமக்குக் கெடுதல் உண்டாக்கும் ஒரு விஷயத்தை அவர் செய்யச் சொல்லவே மாட்டார். அதனால், அவர் நம்மை மன்னிக்கச் சொல்லும்போது, அது நம்முடைய நன்மைக்குத்தான் என்று உறுதியாக நம்பலாம். (சங். 40:4; ஏசா. 48:17, 18) நாம் யோசிப்பதுதான் சரி என்று நம்முடைய உணர்ச்சிகளை நம்பினால், நம்மால் மற்றவர்களை மன்னிக்கவே முடியாது. (நீதி. 14:12; எரே. 17:9) ஏற்கெனவே பார்த்து நவோமி இப்படிச் சொல்கிறார்: “என்னுடைய கணவர் ஆபாசத்தைப் பார்ப்பதற்காக அவரை மன்னிக்காமல் இருப்பதுதான் சரி என்று ஆரம்பத்தில் நினைத்துக்கொண்டேன். நான் அவரை மன்னித்துவிட்டால், அவர் மறுபடியும் என்னைக் காயப்படுத்திவிடுவாரோ... என்னை வேதனைப்படுத்தியதை மறந்துவிடுவாரோ... என்று நினைத்தேன். யெகோவா என்னுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வார் என்றும் நினைத்துக்கொண்டேன். ஆனால், அதற்குப் பிறகுதான் ஒரு விஷயத்தை யோசித்தேன். யெகோவா என் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்வார் என்பது உண்மைதான்; அதற்காக, அவற்றை அவர் ஏற்றுக்கொள்கிறார் என்று அர்த்தம் கிடையாது. நான் எவ்வளவு வேதனைப்படுகிறேன் என்பதும், என் மனசில் ஏற்பட்ட காயங்கள் ஆறுவதற்கு நேரம் எடுக்கும் என்பதும் அவருக்குத் தெரியும். இருந்தாலும், நான் மன்னிக்க வேண்டும் என்றுதான் யெகோவா விரும்புகிறார்.” d
நல்ல எண்ணங்களால் மனதை நிரப்புங்கள்
13. ரோமர் 12:18-21 சொல்கிற மாதிரி, நாம் என்ன செய்ய வேண்டும்?
13 நம் மனதை ஆழமாகக் காயப்படுத்திய ஒருவரை மன்னிக்கும்போது, அந்த விஷயத்தைப் பற்றி வெறுமனே பேசாமல் இருப்பது மட்டும் போதாது. ஒருவேளை, அப்படிக் காயப்படுத்தியது நம் சகோதரராகவோ சகோதரியாகவோ இருந்தால், சமாதானம் பண்ணுவதுதான் நம்முடைய குறிக்கோளாக இருக்க வேண்டும். (மத். 5:23, 24) மனதில் இருக்கிற கோபத்தையும் வெறுப்பையும் எடுத்துப்போட்டுவிட்டு, அதற்குப் பதிலாக இரக்கத்தையும் மன்னிப்பையும் நாம் காட்டலாம். (ரோமர் 12:18-21-ஐ வாசியுங்கள்; 1 பே. 3:9) இதைச் செய்ய எது நமக்கு உதவும்?
14. நாம் என்ன செய்யக் கடினமாக முயற்சி எடுக்க வேண்டும், ஏன்?
14 நம்மைக் காயப்படுத்தியவரை யெகோவா எப்படிப் பார்ப்பாரோ, அதேமாதிரி நாமும் அவரைப் பார்க்க கடினமாக முயற்சி செய்ய வேண்டும். மக்களிடம் இருக்கிற நல்ல விஷயங்களை மட்டுமே யெகோவா பார்க்கிறார். (2 நா. 16:9; சங். 130:3) பெரும்பாலும், மக்களிடம் நாம் எதைப் பார்க்க நினைக்கிறோமோ, அதுதான் நம் கண்ணுக்குத் தெரியும். நல்ல விஷயத்தை பார்க்க நினைத்தால், நல்ல விஷயங்கள் தெரியும். குறை கண்டுபிடிக்க நினைத்தால், குறைகள்தான் தெரியும். மற்றவர்களிடம் இருக்கிற நல்லதைப் பார்க்கும்போது அவர்களை மன்னிப்பது சுலபமாக இருக்கும். ஜரட் என்ற சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “என்னைக் காயப்படுத்திய சகோதரர் செய்த தவறையும் அவர் செய்த நல்ல விஷயங்களையும் நான் ஒப்பிட்டுப் பார்ப்பேன். அவரிடம் நல்ல விஷயங்கள்தான் அதிகமாக இருக்கும். இதைப் பற்றி யோசிப்பது அவரை மன்னிக்க உதவுகிறது.”
15. ‘உங்களை மன்னித்துவிட்டேன்’ என்று வாய்விட்டு சொல்வது ஏன் நல்லது?
15 நாம் செய்ய வேண்டிய இன்னொரு முக்கியமான விஷயம்: நாம் மற்றவர்களை மன்னித்துவிட்டதாக அவர்களிடம் சொல்வதுதான். ஏன்? ஏற்கெனவே பார்த்த நவோமி இப்படிச் சொல்கிறார்: “என் கணவர் என்னிடம், ‘என்னை மன்னித்துவிட்டாயா?’ என்று கேட்டபோது, நான் அவரை மன்னித்துவிட்டேன் என்று வாய்விட்டு சொல்ல முடியவில்லை. அப்போதுதான் நான் அவரை இன்னும் மனசார மன்னிக்கவில்லை என்று புரிந்தது. போகப்போக, என்னால் அவரை மன்னிக்க முடிந்தது. ‘நான் உங்களை மன்னித்துவிட்டேன்’ என்ற அந்த மூன்று வார்த்தைகளைச் சொல்லவும் முடிந்தது. இதைக் கேட்டபோது அவருடைய கண்ணில் கண்ணீர் நிறைந்தது. அவருக்குக் கிடைத்த நிம்மதியை என்னால் உணர முடிந்தது; என் மனசுக்கும் சமாதானம் கிடைத்தது. அப்போதுமுதல், நான் அவரை நம்ப ஆரம்பித்தேன். நாங்கள் இப்போது மறுபடியும் பெஸ்ட் ஃபிரெண்ட்ஸ் போல் ஆகிவிட்டோம்.”
16. மன்னிப்பைப் பற்றி நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
16 நாம் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். (கொலோ. 3:13) இருந்தாலும், அப்படிச் செய்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், நம் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அதைச் சமாளிக்க முயற்சி எடுத்தால் நம்மால் மன்னிக்க முடியும்; நல்ல எண்ணங்களையும் வளர்த்துக்கொள்ள முடியும்.—“ மன்னிப்பதற்கு மூன்று படிகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.
மன்னிப்பதால் கிடைக்கும் நன்மைகளை யோசித்துப் பாருங்கள்
17. மன்னிப்பதால் நமக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன?
17 மன்னிப்பதற்கு நமக்கு நிறையக் காரணங்கள் இருக்கின்றன. சில காரணங்களை இப்போது பார்க்கலாம்: முதலில், நம்முடைய இரக்கமுள்ள அப்பாவான யெகோவாவை மாதிரியே நாம் நடந்துகொள்கிறோம்; அவரைச் சந்தோஷப்படுத்துகிறோம். (லூக். 6:36) இரண்டாவது, யெகோவா நமக்குக் காட்டியிருக்கிற மன்னிப்புக்கு நாம் நன்றியோடு இருப்பதைக் காட்டுகிறோம். (மத். 6:12) மூன்றாவது, நமக்கு நல்ல ஆரோக்கியம் இருக்கும்; நம்மைச் சுற்றி இருக்கும் நட்பு வட்டம் செழிப்பாக இருக்கும்.
18-19. மன்னிப்பதால் என்ன பலன்கள் கிடைக்கலாம்?
18 நாம் மற்றவர்களை மன்னிக்கும்போது எதிர்பார்க்காத ஆசீர்வாதங்கள் கிடைக்கும். ஆரம்பத்தில் பார்த்த சகோதரி டென்னிஸின் விஷயத்தில் என்ன நடந்தது என்று பார்க்கலாம். விபத்தை ஏற்படுத்திய அந்த நபர், விசாரணை முடிந்த பிறகு தற்கொலை செய்துகொள்ள நினைத்திருந்திருக்கிறார். அது, அந்தச் சமயத்தில் டென்னிஸுக்குத் தெரியாது. ஆனால், டென்னிஸ் அவரை மன்னித்தது அவருடைய மனசை ஆழமாகத் தொட்டது. அதனால், யெகோவாவின் சாட்சிகளோடு சேர்ந்து பைபிள் படிக்க ஆரம்பித்தார்.
19 சிலசமயத்தில், ஒருவரை மன்னிப்பதுதான் வாழ்க்கையிலேயே கஷ்டமான விஷயம் என்று நாம் நினைக்கலாம். ஆனால், அப்படிச் செய்வது ஆசீர்வாதங்களை அள்ளித் தரும். (மத். 5:7) அதனால், யெகோவா மாதிரியே மற்றவர்களை மன்னிப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் செய்யலாம்!
பாட்டு 125 இரக்கம் காட்டுவோம்!
a சில பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன.
b இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பது ஒவ்வொரு கிறிஸ்தவருடைய தனிப்பட்ட தீர்மானம்.
c “ஒருவரை ஒருவர் மன்னியுங்கள்,” “மனப்பூர்வமாய் மன்னியுங்கள்,” “மீண்டும் நண்பராவோம்!” போன்ற சிறப்பு பாடல்களுக்கான வீடியோக்களை jw.org வெப்சைட்டில் பாருங்கள்.
d ஆபாசத்தைப் பார்ப்பது ஒரு பாவம்தான். தவறு செய்தவருடைய துணைக்கு அது வலியையும் வேதனையையும் கொடுக்கும். ஆனாலும் பைபிளைப் பொறுத்தவரை, அது விவாகரத்துக்கான காரணம் இல்லை.