வாழ்க்கை சரிதை
“யெகோவா என்னைத் தனிமையில் விட்டுவிடவில்லை”
நிறைய சூழ்நிலைகள் நம்மைத் தனிமை உணர்வுக்குள் தள்ளிவிடலாம். அன்பானவர்களைப் பறிகொடுக்கும்போது, முன்பின் தெரியாத ஒரு இடத்தில் இருக்கும்போது, அல்லது நம்மைச் சுற்றி உண்மையிலேயே யாருமே இல்லாதபோது நாம் தன்னந்தனியாக உணர்வோம். இந்த எல்லா சூழ்நிலைகளையும் நான் கடந்து வந்திருக்கிறேன். ஆனால், இப்போது என் வாழ்க்கையைத் திரும்பிப் பார்த்தால் யெகோவா என்னைத் தனியாக விடவே இல்லை என்பது தெரிகிறது. என் கதையைச் சொல்கிறேன், கேளுங்கள்!
அப்பா அம்மா வைத்த முன்மாதிரி
ஒருகாலத்தில், அப்பா அம்மா கத்தோலிக்க மதத்தின் தீவிர பக்தர்கள். ஆனால், பைபிளிலிருந்து கடவுளுடைய பெயர் யெகோவா என்று தெரிந்துகொண்டபோது யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள். அப்பா, மரவேலை செய்கிறவர்; இயேசுவின் சிலைகளைச் செய்வார். யெகோவாவின் சாட்சியாக ஆன பிறகு அதை நிறுத்திவிட்டார். அதற்குப் பதிலாக, எங்கள் வீட்டின் கீழ்த்தளத்தை ராஜ்ய மன்றமாக மாற்றுவதற்கு தன்னுடைய திறமைகளைப் பயன்படுத்தினார். எங்கள் ஊரிலேயே அதுதான் முதல் ராஜ்ய மன்றம். பிலிப்பைன்ஸின் தலைநகரமான மணிலாவில் இருக்கிற சான் யுவான் டெல் மான்டெவில் அது இருந்தது.
1952-ல் நான் பிறந்தேன். எனக்கு முன்பு பிறந்த என்னுடைய நான்கு அண்ணன்களுக்கும், மூன்று அக்காக்களுக்கும் யெகோவாவைப் பற்றி அப்பா அம்மா எப்படிச் சொல்லிக்கொடுத்தார்களோ அதேமாதிரி எனக்கும் சொல்லிக்கொடுத்தார்கள். வளரவளர, தினமும் பைபிளிலிருந்து ஒரு அதிகாரத்தைப் படிக்க சொல்லி அப்பா என்னிடம் சொன்னார். மற்ற பிரசுரங்களையும் அவர் என்னோடு சேர்ந்து படிப்பார். அவ்வப்போது, பயணக் கண்காணிகளையும் கிளை அலுவலக பிரதிநிதிகளாக வந்த சகோதரர்களையும் வீட்டில் தங்குவதற்காக அப்பா அம்மா கூப்பிடுவார்கள். குடும்பமாக நாங்கள் அவர்களோடு சேர்ந்து பேசிப் பழகியது ரொம்பச் சந்தோஷமாக இருந்தது. அவர்களுடைய அனுபவங்களிலிருந்து நிறைய கற்றுக்கொண்டோம். அவர்களைப் பார்த்தபோது யெகோவாவுக்கு அதிகமாகச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசை எங்களுக்கும் வந்தது.
அப்பா அம்மா யெகோவாமேல் அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருந்தார்கள். எனக்கு நல்ல முன்மாதிரியை வைத்துவிட்டு போனார்கள். உடம்பு முடியாமல் அம்மா இறந்துபோனார். அதற்குப் பிறகு, 1971-ல் நானும் என் அப்பாவும் பயனியர் சேவையை ஆரம்பித்தோம். 1973-ல் எனக்கு 20 வயது இருந்தபோது அப்பாவும் இறந்துவிட்டார். அப்பா அம்மாவின் இழப்பை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியவில்லை. வாழ்க்கை வெறுமையாகிவிட்டது, தன்னந்தனியாக உணர்ந்தேன். ஆனால் பைபிளில் இருக்கிற ‘உறுதியான, நம்பகமான’ நம்பிக்கை என்னைத் தூக்கி நிறுத்தியது; யெகோவாவிடம் நெருக்கமாக உதவியது. (எபி. 6:19) அப்பா இறந்து கொஞ்ச நாளிலேயே எனக்கு விசேஷ பயனியர் நியமிப்பு கிடைத்தது. பலவான் மாகாணத்திலிருந்த கோரன் என்ற தீவுக்குப் போனேன்.
தனியாகச் செய்த கஷ்டமான நியமிப்புகள்
கோரனுக்குப் போனபோது எனக்கு 21 வயது. நகரத்திலேயே வாழ்ந்ததால் தீவு வாழ்க்கை ரொம்பப் புதிதாக இருந்தது. அங்கே அந்தளவுக்கு மின்சார வசதியோ தண்ணீர் வசதியோ
போக்குவரத்து வசதியோ இல்லை. சகோதரர்கள் கொஞ்சம் பேர்தான் இருந்தார்கள். என்னோடு சேர்ந்து பயனியராகச் சேவை செய்ய யாருமே இல்லை. சிலசமயங்களில் தனியாக ஊழியத்துக்குப் போவேன். அங்கே போன முதல் மாதத்தில் நான் ரொம்ப தனியாக இருப்பதுபோல் உணர்ந்தேன். குடும்பமும் நண்பர்களும் பக்கத்தில் இல்லாதது கொடுமையாக இருந்தது. ராத்திரி நேரத்தில் வானத்தில் இருந்த நட்சத்திரங்களைப் பார்த்துக்கொண்டிருப்பேன்; கண்ணில் கண்ணீர் தாரைதாரையாகக் கொட்டும். நியமிப்பை விட்டுவிட்டு வீட்டுக்கே போய்விடலாம் என்று தோன்றும்.அந்த மாதிரி சமயங்களில் யெகோவாவிடம் என் மனதில் இருந்த எல்லாவற்றையும் கொட்டுவேன். பைபிளிலும் பிரசுரங்களிலும் படித்த நல்ல நல்ல விஷயங்களை ஞாபகப்படுத்திக்கொள்வேன். சங்கீதம் 19:14 எனக்கு அடிக்கடி ஞாபகம் வரும். யெகோவாவுக்குப் பிரியமான விஷயங்களை ஆழமாக யோசித்தால் அவர் ‘என் கற்பாறையாகவும், என்னை விடுவிக்கிறவராகவும்’ இருப்பார் என்பதைப் புரிந்துகொண்டேன். அவருடைய செயல்கள், குணங்கள் போன்றவற்றைப் பற்றி யோசிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டேன். “நீங்கள் ஒருபோதும் தனிமையில் இல்லை” a என்ற காவற்கோபுர கட்டுரை எனக்கு உதவியது. அதைத் திரும்பத் திரும்ப படித்தேன். நான் தனியாக இருந்தாலும், தனிமையில் இருக்கவில்லை. ஏனென்றால், யெகோவாவோடு நிறைய நேரம் செலவு பண்ணினேன். அவரோடு நிறைய பேசினேன், அவரைப் பற்றி நிறைய படித்தேன், ஆழமாக யோசித்தேன்.
கோரனுக்கு வந்த கொஞ்ச நாளிலேயே மூப்பராக நியமிக்கப்பட்டேன். அங்கே நான் மட்டும்தான் மூப்பராக இருந்ததால், வாராவாரம் தேவராஜ்ய ஊழியப் பள்ளி, ஊழியக் கூட்டம், சபை புத்தகப் படிப்பு, காவற்கோபுர படிப்பு என எல்லாவற்றையும் நடத்த ஆரம்பித்தேன். அதோடு, வாராவாரம் பொதுப் பேச்சையும் கொடுத்தேன். தலைக்குமேல் வேலை இருந்ததால் தனியாக இருக்கிறேன் என்று யோசிப்பதற்குக்கூட நேரம் இல்லாமல் போனது.
கோரனில் ஊழியம் செய்தபோது நல்ல பலன்கள் கிடைத்தன. என்னோடு படித்த பைபிள் மாணவர்கள் சிலர் ஞானஸ்நானம் எடுத்தார்கள். ஆனால், அங்கேயும் சில சவால்கள் இருந்தன. சிலசமயம் ஊழியம் செய்கிற பகுதிக்கு நடந்துபோவதற்கே அரை நாள் ஆகிவிடும். ஊழியம் முடித்த பிறகு எங்கே தூங்குவது என்றுகூட தெரியாது. ஊழியப் பகுதியில் நிறைய சின்னச் சின்ன தீவுகள் இருந்தன. மோட்டர் படகில்தான் அங்கெல்லாம் போக வேண்டியிருந்தது. சிலசமயம் புயல் காற்று அடிக்கும். எனக்கு நீச்சல் வேறு தெரியாது! இவ்வளவு பிரச்சினைகள் இருந்தாலும் யெகோவா என்னைப் பாதுகாத்தார்; என்னை நன்றாகக் கவனித்துக்கொண்டார். அடுத்த நியமிப்பில் வரவிருந்த பெரிய சவால்களைச் சமாளிக்க யெகோவா என்னைத் தயார்படுத்திக்கொண்டு இருந்தார் என்று பிறகுதான் புரிந்தது.
பாப்புவா நியூ கினி
1978-ல் பாப்புவா நியூ கினி என்ற ஒரு நாட்டுக்கு நியமிக்கப்பட்டேன். இது, ஆஸ்திரேலியாவுக்கு வடக்கில் இருந்த மலைப்பிரதேசம். அதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 30 லட்சம். அங்கே 800-க்கும் அதிகமான மொழிகள் பேசப்பட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஆனால் மக்கள் பெரும்பாலும் மெலனீசியன் பிட்ஜின் மொழியைப் பேசினார்கள்; அதை டோக் பிஸின் என்றும் சொல்வார்கள்.
பாப்புவா நியூ கினியின் தலைநகரமான போர்ட் மோர்ஸ்பியில் ஒரு ஆங்கில சபைக்குக் கொஞ்சநாள் நியமிக்கப்பட்டேன். பிறகு, டோக் பிஸின் மொழி பேசுகிற சபைக்கு மாறிப்போனேன். அந்த மொழியைக் கற்றுக்கொள்வதற்காக வகுப்புக்குப் போனேன். கற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்ள அந்த மொழியில் ஊழியமும் செய்தேன். அதனால் அதைச் சீக்கிரமாகக் கற்றுக்கொள்ள முடிந்தது. கொஞ்ச நாளிலேயே அந்த மொழியில் ஒரு பொதுப் பேச்சைக்கூட என்னால் கொடுக்க முடிந்தது. பாப்புவா நியூ கினிக்கு வந்து ஒரு வருஷம்கூட ஆகவில்லை, அதற்குள் வட்டார கண்காணியாக நியமிப்பு கிடைத்தது. இது எனக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது! அந்த மொழி பேசுகிற பெரிய பெரிய நிறைய மாகாணங்களுக்குப் போய் சபைகளைச் சந்திக்க வேண்டியிருந்தது.
சபைகள் தூரம் தூரமாக இருந்ததால் நிறைய வட்டார மாநாடுகளுக்கு நான் ஏற்பாடு செய்ய வேண்டியிருந்தது; நிறைய பயணமும் செய்ய வேண்டியிருந்தது. ஆரம்பத்தில் ரொம்பத் தனியாக உணர்ந்தேன். ஏனென்றால் நாடு, மொழி, கலாச்சாரம் என எல்லாமே புதுசாக இருந்தது. அந்த இடம், மலைப்பிரதேசமாக இருந்ததாலும் கரடுமுரடான நிலப்பகுதியாக இருந்ததாலும் சபைகளை சந்திக்க விமானத்தில்தான் பயணம் செய்ய முடியும். அதனால் ஒவ்வொரு வாரமும் விமானத்தில் போனேன்.
சிலசமயங்களில் மோசமான நிலைமையில் இருந்த ஒரு சின்ன விமானத்தில் நான் தனியாகப் பயணம் செய்தேன். கடலில் பயணம் செய்தபோது பயத்தில் எவ்வளவு நடுங்கினேனோ அதே நடுக்கத்தோடுதான் வானத்திலும் பறந்தேன்.அங்கே கொஞ்சம் பேரிடம்தான் டெலிப்ஃபோன் இருந்தது, அதனால் சபைகளுக்குக் கடிதங்களை எழுதினேன். நிறைய சமயங்களில், கடிதங்கள் போய்ச் சேர்வதற்கு முன்பு நான் அங்கே போய் சேர்ந்துவிடுவேன். அங்கே உள்ளவர்களிடம் யெகோவாவின் சாட்சிகள் எங்கே இருக்கிறார்கள் என்று கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கும். ஒவ்வொரு தடவை சகோதரர்களைக் கண்டுபிடிக்கும்போதும், அவர்கள் என்னை அன்பாக வரவேற்றார்கள்; பாசமாகப் பேசினார்கள். அதையெல்லாம் பார்த்தபோது அவர்களுக்காக எடுத்த முயற்சி வீண்போகவில்லை என்று தெரிந்தது. யெகோவா எனக்கு உதவுவதை பல தடவை உணர்ந்திருக்கிறேன். அதனால், அவரோடு இருந்த பந்தம் பலமாக ஆனது.
போகன்வில் என்ற தீவில் முதல்முதலில் ஒரு கூட்டத்துக்குப் போனபோது ஒரு தம்பதி சிரித்த முகத்தோடு என்னிடம் வந்து, “எங்களை ஞாபகம் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். போர்ட் மோர்ஸ்பிக்கு முதல்முதலில் போயிருந்தபோது அவர்களுக்கு சாட்சிக் கொடுத்திருந்தேன். அங்கிருந்து கிளம்பியபோது இன்னொரு சகோதரரிடம் அவர்களுக்குத் தொடர்ந்து பைபிள் படிப்பை நடத்தச் சொல்லிவிட்டு வந்தேன். இப்போது அவர்கள் இரண்டு பேருமே ஞானஸ்நானம் எடுத்திருந்தார்கள். எனக்குச் சந்தோஷமாக இருந்தது. பாப்புவா நியூ கினியில் நான் இருந்த மூன்று வருஷங்களில் யெகோவா எனக்கு நிறைய ஆசீர்வாதங்களைக் கொடுத்திருந்தார். அதில் இதுவும் ஒன்று!
சுறுசுறுப்பாக சுழன்ற ஒரு சின்ன குடும்பம்
1978-ல், கோரனிலிருந்து கிளம்புவதற்கு முன்பு அடெல் என்ற ஒரு சகோதரியைச் சந்தித்திருந்தேன். அவள் ரொம்ப அழகாக இருந்தாள். மற்றவர்களுக்காக நிறைய தியாகங்கள் செய்வாள். ஒழுங்கான பயனியராகச் சேவை செய்துகொண்டிருந்தாள். அவளுக்கு சாமுவேல், ஷர்லி என்று இரண்டு பிள்ளைகள் இருந்தார்கள். வயதான அம்மாவையும் கவனித்துக்கொண்டிருந்தாள். மே 1981-ல் நான் பிலிப்பைன்ஸுக்கு திரும்பிப் போய் அவளைக் கல்யாணம் செய்தேன். கல்யாணம் ஆன பிறகு நாங்கள் இரண்டு பேரும் ஒழுங்கான பயனியராகச் சேவை செய்தோம்; எங்கள் குடும்பத்தையும் கவனித்துக்கொண்டோம்.
எனக்கு ஒரு குடும்பம் இருந்தாலும் 1983-ல் என்னை மறுபடியும் விசேஷ பயனியராக நியமித்தார்கள். பலாவன் மாகாணத்தில் இருந்த லினபாகன் தீவுக்கு நியமித்தார்கள். யெகோவாவின் சாட்சிகளே இல்லாத அந்த இடத்துக்கு நாங்கள் குடும்பமாகக் குடிமாறி போனோம். அங்கே போய் ஒரு வருஷம் கழித்து அடெலுடைய அம்மா இறந்துபோனார். ஆனால் நாங்கள் ஊழியத்தை மும்முரமாகச் செய்துகொண்டிருந்ததால் அந்த இழப்பைத் தாங்கிக்கொள்ள முடிந்தது. நாங்கள் நிறைய பைபிள் படிப்புகளை நடத்தினோம். அவர்கள் ஆர்வமாகப் படித்தார்கள், கூட்டங்களுக்கு வர ஆசைப்பட்டார்கள். ஒரு சின்ன ராஜ்ய மன்றம் தேவைப்படும் அளவுக்கு எங்களுக்கு பைபிள் படிப்புகள் கிடைத்தன. அதனால், நாங்களே ஒரு ராஜ்ய மன்றத்தைக் கட்டினோம். நாங்கள் அங்கே போய் மூன்று வருஷங்களுக்குப் பிறகு நடந்த ஒரு நினைவுநாள் நிகழ்ச்சிக்கு 110 பேர் வந்திருந்தார்கள். எங்களுக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை. நாங்கள் அந்தத் தீவைவிட்டு கிளம்பிய பிறகு அவர்களில் நிறைய பேர் ஞானஸ்நானம் எடுத்தார்கள்.
1986-ல் குலியன் என்ற தீவுக்கு என்னை நியமித்தார்கள். அங்கே தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடியிருப்பு இருந்தது. அங்கே போன பிறகு அடெலுக்கும் விசேஷ பயனியர் நியமிப்பு வந்தது. ஆரம்பத்தில், தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களிடம் பேசுவது பயமாக இருந்தது. ஆனால் அங்கே இருந்த சகோதர சகோதரிகள் எங்களைத் தைரியப்படுத்தினார்கள். தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற்கனவே சிகிச்சை எடுத்துக்கொண்டதால் அந்த நோய் மற்றவர்களுக்குப் பரவாது என்று தைரியம் சொன்னார்கள். பாதிக்கப்பட்டவர்களில் சிலர், ஒரு சகோதரியின் வீட்டில் கூட்டங்களுக்காக வந்தார்கள். சீக்கிரத்திலேயே அப்படிப்பட்டவர்களிடமும் பிரசங்கிக்க நாங்கள் பழகிக்கொண்டோம். ‘கடவுளும் எங்களை ஒதுக்கிவிட்டார், மக்களும் எங்களை ஒதுக்குகிறார்கள்’ என்று பொதுவாக அவர்கள் யோசிப்பார்கள். அவர்களிடம் பைபிள் நம்பிக்கைகளைப் பற்றிப் பேசுவது எங்கள் மனதுக்கு இதமாக இருந்தது. அந்த லூக். 5:12, 13.
வியாதியால் ரொம்பவே வேதனைப்பட்டுக்கொண்டிருந்த அவர்கள், நோயே இல்லாத வாழ்க்கையைப் பற்றிக் கேட்டபோது பூரித்துப்போனார்கள்.—குலியனில் வாழ பழகுவதற்கு எங்கள் பிள்ளைகளுக்கும் உதவினோம். சாமுவேலுக்கும் ஷர்லிக்கும் நல்ல நண்பர்கள் இருக்க வேண்டும் என்பதற்காக கோரனிலிருந்து இரண்டு இளம் சகோதரிகளை வர வைத்தோம். அவர்கள் நான்கு பேரும் ஊழியத்தைச் சந்தோஷமாகச் செய்தார்கள். நிறைய பிள்ளைகளுக்கு பைபிள் படிப்பு நடத்தினார்கள். அந்தப் பிள்ளைகளுடைய பெற்றோர்களுக்கு நானும் அடெலும் படிப்பு நடத்தினோம். ஒருசமயத்தில், 11 குடும்பங்களுக்கு நாங்கள் படிப்பு நடத்தினோம். அவர்கள் நல்ல மாற்றங்கள் செய்ததால் சீக்கிரத்திலேயே ஒரு புதிய சபை உருவானது.
ஆரம்பத்தில் அந்தப் பகுதியில் நான் மட்டும்தான் மூப்பராக இருந்தேன். குலியனில் இருந்த எட்டு பிரஸ்தாபிகளுக்காக வாராவாரம் கூட்டங்களை நடத்த கிளை அலுவலகம் என்னிடம் சொன்னது. மர்லி என்ற இன்னொரு கிராமத்திலிருந்த ஒன்பது பிரஸ்தாபிகளுக்காகவும் கூட்டங்களை நடத்த கிளை அலுவலகம் சொன்னது. ஆனால் அங்கே படகில்தான் போக முடியும்; அதற்கு மூன்று மணிநேரம் ஆகும். கூட்டங்களுக்குப் பிறகு, நாங்கள் குடும்பமாக ஹால்சி என்ற இன்னொரு கிராமத்துக்கு பைபிள் படிப்புகளை நடத்தப் போவோம். மலைப்பகுதி வழியாக ரொம்ப நேரம் நடந்து போக வேண்டியிருக்கும்.
நாட்கள் போகப்போக மர்லி மற்றும் ஹால்சி கிராமங்களிலிருந்த நிறைய பேர் சத்தியத்துக்குள் வந்தார்கள். அதனால் அந்த இரண்டு இடங்களிலும் ராஜ்ய மன்றங்களைக் கட்டினோம். லினபாகன் தீவில் நடந்த மாதிரியே இங்கேயும் நடந்தது. சகோதரர்களும் ஆர்வமுள்ளவர்களும் ராஜ்ய மன்றத்தைக் கட்டுவதற்குத் தேவையான பெரும்பாலான பொருள்களைக் கொண்டுவந்து கொடுத்தார்கள்; அவர்களே வேலையும் செய்தார்கள். மர்லியில் இருந்த ராஜ்ய மன்றத்தில் கிட்டத்தட்ட 200 பேர் உட்கார முடியும். அந்த ராஜ்ய மன்றத்தை இன்னும் பெரிதாகவும் ஆக்க முடியும். அதனால் மாநாடுகளையும் அங்கே நடத்தினோம்.
தனிமை உணர்வும், மீண்டும் மலர்ந்த மகிழ்ச்சியும்
பிள்ளைகள் வளர்ந்த பிறகு 1993-ல், நானும் அடெலும் பிலிப்பைன்ஸில் வட்டார சேவை செய்ய ஆரம்பித்தோம். பிறகு 2000-ல், ஊழியப் பயிற்சி பள்ளியில் கலந்துகொண்டேன். அந்தப் பள்ளியை நடத்த எனக்குப் பயிற்சிக் கிடைக்க வேண்டும் என்பதற்காக அதில் கலந்துகொண்டேன். இவ்வளவு பெரிய நியமிப்பை செய்ய முடியுமா என்று யோசித்தேன். ஆனால் அடெல் என்னை உற்சாகப்படுத்திக்கொண்டே இருந்தாள். இந்தப் புது நியமிப்பை நல்லபடியாகச் செய்ய யெகோவா கண்டிப்பாகப் பலம் கொடுப்பார் என்று ஞாபகப்படுத்தினாள். (பிலி. 4:13) அடெல், தன்னுடைய அனுபவத்திலிருந்து அதைச் சொன்னாள். ஏனென்றால், உடல்நல பிரச்சினைகளோடு போராடிக்கொண்டு அவள் தன் நியமிப்பைச் செய்துகொண்டிருந்தாள்.
2006-ல் பள்ளி போதகராக சேவை செய்துகொண்டிருந்தபோது, ஒரு செய்தி எங்களை இடியாய் தாக்கியது. அடெலுக்கு
பார்கின்சன் நோய் இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சியில் உறைந்து போனோம்! அவளைக் கவனித்துக்கொள்வதற்காக என் நியமிப்பை விட்டுவிடலாம் என்று யோசித்தேன். ஆனால், அடெல் சொன்னாள்: “இந்த நோயைச் சமாளிப்பதற்கு ஒரு டாக்டரை நீங்கள் கண்டுபிடியுங்கள். நியமிப்பைத் தொடர்ந்து செய்ய யெகோவா நமக்கு உதவுவார்.” அடுத்த ஆறு வருஷத்துக்கு அந்த நோயோடு அவள் போராடிக்கொண்டிருந்தாலும், எந்தக் குறையும் சொல்லவில்லை. யெகோவாவுக்குத் தொடர்ந்து சேவை செய்தாள். நடக்க முடியாத சூழ்நிலை வந்தபோது, வீல்சேரில் இருந்தபடி ஊழியம் செய்தாள். அவ்வளவாகப் பேச முடியாமல் போனபோது, கூட்டங்களில் ஓரிரண்டு வார்த்தைகளில் பதில் சொன்னாள். 2013-ல் அவள் இறக்கும்வரை, அவள் காட்டிய சகிப்புத்தன்மைக்காக சகோதர சகோதரிகள் அவளைப் பாராட்டி மெசேஜ்களை அனுப்பினார்கள். ஒரு அன்பான, அருமையான துணையோடு 30 வருஷங்கள் வாழ்ந்திருக்கிறேன். அவள் இறந்த பிறகு, மறுபடியும் தனிமை உணர்வு என்னை வாட்டியது. சோகத்தில் மூழ்கினேன்!என் நியமிப்பை விட்டுவிடாமல் தொடர்ந்து செய்ய வேண்டும் என்பதுதான் அடெலின் ஆசை. அதனால் அதைத் தொடர்ந்தேன். என்னையே பிஸியாக வைத்துக்கொண்டதால் தனிமையை சமாளிக்க முடிந்தது. 2014-லிருந்து 2017 வரை, எனக்கு இன்னொரு நியமிப்பு கிடைத்தது. நம்முடைய வேலைக்குக் கட்டுப்பாடுகள் இருந்த சில நாடுகளில் டாகலாக் மொழி சபைகளைச் சந்திக்கிற நியமிப்பு கிடைத்தது. பிறகு, தைவானிலும் அமெரிக்காவிலும் கனடாவிலும் இருக்கிற டாகலாக் மொழி சபைகளைச் சந்தித்தேன். 2019-ல், இந்தியாவிலும், தாய்லாந்திலும் ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கு வாய்ப்பு கிடைத்தது. இந்த நியமிப்புகளால் என் வாழ்க்கையில் சந்தோஷம் சேர்ந்தது. இப்படியெல்லாம் யெகோவாவுடைய சேவையில் மூழ்கியிருந்ததால் எனக்குள் மகிழ்ச்சி மீண்டும் மலர்ந்தது.
யெகோவா பக்கத்திலேயே இருக்கிறார்
ஒவ்வொரு தடவை புதிய நியமிப்பு கிடைக்கும்போதும் அங்கே இருக்கிற சகோதர சகோதரிகளோடு ரொம்ப நெருக்கமாகிவிடுவேன். அவர்களைவிட்டு பிரியும்போது மனசு வலிக்கும். அந்த மாதிரி சமயங்களில் யெகோவாவை முழுமையாக நம்ப கற்றுக்கொண்டேன். அவர் எனக்கு எப்போதுமே துணையாக இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அதனால் எவ்வளவு பெரிய மாற்றங்கள் வந்தாலும், அதற்கு ஏற்றபடி என்னையே மாற்றிக்கொள்ள முடிகிறது. இப்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒரு விசேஷ பயனியராக சேவை செய்கிறேன். இந்தப் புதிய சபையில் இருக்கிற சகோதர சகோதரிகள் என்னை நன்றாகக் கவனித்துக்கொள்கிறார்கள். ஒரு நல்ல குடும்பமாக நாங்கள் ஆகிவிட்டோம். சாமுவேலும் ஷர்லியும்கூட தங்கள் அம்மாவை மாதிரியே யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்கிறார்கள். அதைப் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது.—3 யோ. 4.
உண்மைதான், வாழ்க்கையில் நிறைய கஷ்டங்களைச் சந்தித்திருக்கிறேன். என் அன்பான மனைவி, ரொம்பக் கஷ்டப்பட்டு இறந்துபோனதைப் பார்த்தேன்; அதுமட்டுமல்ல, புதுப்புது சூழ்நிலைகளுக்கு ஏற்றபடி என்னை மாற்றிக்கொள்ள வேண்டியிருந்தது. இருந்தாலும், யெகோவா ‘ஒருவருக்கும் தூரமானவராக இல்லை’ என்று பைபிள் சொல்வது உண்மை என்பதை ருசித்திருக்கிறேன். (அப். 17:27) சாட்சிகளே இல்லாத இடத்தில் நாம் தனியாக இருந்தாலும் யெகோவா நமக்குத் துணையாக இருப்பார். நம்மைக் காப்பாற்ற முடியாத அளவுக்கு அவருடைய ‘கை சின்னது கிடையாது.’ (ஏசா. 59:1) யெகோவா, என் கற்பாறையாக எப்போதும் என் கூடவே இருந்திருக்கிறார். அவருக்கு நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன். யெகோவா என்னைத் தனிமையில் விட்டுவிடவில்லை, என்றுமே!
a செப்டம்பர் 1, 1972 ஆங்கில காவற்கோபுரத்தில் பக். 521-527-ஐ பாருங்கள்.