Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

ஞானமுள்ளவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்

ஞானமுள்ளவர்களிடமிருந்து நிறைய கற்றுக்கொண்டேன்

அமெரிக்கா, தென் டகோட்டாவில் இருக்கிற ப்ரூக்கிங்ஸ் என்ற இடத்தில் அப்போது நான் இருந்தேன். அது குளிரான ஒரு காலை நேரம். பயங்கர குளிரால் அந்தப் பகுதி சீக்கிரத்தில் உறையப் போவதை என்னால் உணர முடிந்தது. தானியங்களைக் கொட்டி வைக்கும் ஒரு களஞ்சியத்தில் நானும் இன்னும் சிலரும் நின்றுகொண்டிருந்தோம். அந்தக் களஞ்சியம் சூடாக்கப்படாததால் நாங்கள் நடுங்கிக்கொண்டிருந்தோம். எங்களுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய தொட்டி இருந்தது. அதில் இருந்த தண்ணீர் ரொம்ப ஜில்லென்று இருந்தது. நாங்கள் ஏன் அங்கே நின்றுகொண்டிருந்தோம், தெரியுமா? என்னைப் பற்றி சொல்லும்போது, அதற்கான காரணத்தை நீங்களே தெரிந்துகொள்வீர்கள்.

என்னுடைய குடும்பம்

என் பெரியப்பா ஆல்ஃப்ரெடும் என் அப்பாவும்

மார்ச் 7, 1936-ல் நான் பிறந்தேன். என் அப்பா அம்மாவுக்கு மொத்தம் 4 பிள்ளைகள்; நான்தான் கடைசி பையன். தென் டகோட்டாவின் கிழக்குப் பகுதியிலுள்ள ஒரு சிறிய பண்ணையில் நாங்கள் வாழ்ந்துகொண்டிருந்தோம். எங்கள் குடும்பத்தில் பண்ணை வேலை முக்கியமாக இருந்தாலும், அதுமட்டுமே ரொம்ப முக்கியமாக இருக்கவில்லை. என் அப்பா அம்மா 1934-ல் யெகோவாவின் சாட்சிகளாக ஞானஸ்நானம் எடுத்திருந்தார்கள். தங்கள் வாழ்க்கையை அவர்கள் யெகோவாவுக்கு அர்ப்பணித்திருந்தார்கள். அதனால், அவருடைய விருப்பத்தைச் செய்வதுதான் அவர்களுக்கு மிக முக்கியமாக இருந்தது. தென் டகோட்டாவிலுள்ள காண்டே என்ற இடத்தில் எங்களுடைய சிறிய சபை இருந்தது. அந்தச் சபையில், என் அப்பா க்ளாரென்சும், பிற்பாடு என் பெரியப்பா ஆல்ஃப்ரெடும் கம்பெனி சர்வன்ட்டாக (இப்போது மூப்பர் குழுவின் ஒருங்கிணைப்பாளர்) சேவை செய்தார்கள்.

நாங்கள் தவறாமல் கூட்டங்களுக்குப் போவோம். பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற அருமையான எதிர்காலத்தைப் பற்றி மற்றவர்களுக்குச் சொல்வதற்காகத் தவறாமல் வீட்டுக்கு வீடு ஊழியமும் செய்வோம். என் அப்பா அம்மாவின் முன்மாதிரியாலும் அவர்கள் எங்களுக்குக் கொடுத்த பயிற்சியாலும் நாங்கள் யெகோவாவை அதிகமாக நேசித்தோம். நானும் என் அக்கா டாரத்தியும் 6 வயதில் பிரஸ்தாபிகளாக ஆனோம். 1943-ல், தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் நான் சேர்ந்தேன்; அப்போதுதான் அந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

1952-ல் பயனியர் ஊழியம்

மாநாடுகள் எங்களுக்கு ரொம்ப முக்கியமாக இருந்தது. 1949-ல், தென் டகோட்டாவில் இருக்கிற ஸூ ஃபால்ஸ் என்ற இடத்தில் ஒரு மாநாடு நடந்தது. “நீங்கள் நினைப்பதைவிட அது பக்கத்தில் இருக்கிறது!” என்ற தலைப்பில் சகோதரர் க்ரான்ட் சூட்டர் பேச்சு கொடுத்தார். தங்களை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருக்கும் எல்லா கிறிஸ்தவர்களும் தங்கள் வாழ்க்கையை கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிப்பதற்குப் பயன்படுத்த வேண்டும் என்று அவர் அந்தப் பேச்சில் சொன்னார். அதற்குப் பிறகு, நான் என் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்தேன். நவம்பர் 12, 1949-ல் ப்ரூக்கிங்சில் நடந்த அடுத்த வட்டார மாநாட்டில் ஞானஸ்நானம் எடுத்தேன். அதற்காகத்தான் நான் ஆரம்பத்தில் சொன்ன அந்தச் சூடாக்கப்படாத களஞ்சியத்தில் நின்றுகொண்டிருந்தேன். ஞானஸ்நானம் எடுப்பதற்காக, நானும் மற்ற 3 பேரும் ஸ்டீலால் செய்யப்பட்ட அந்தப் பெரிய தொட்டிக்குப் பக்கத்தில் காத்துக்கொண்டிருந்தோம்.

பிறகு, பயனியர் ஊழியம் செய்ய முடிவெடுத்தேன். ஜனவரி 1, 1952-ல் எனக்கு 15 வயது இருக்கும்போது, நான் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தேன். “ஞானமுள்ளவர்களோடு நடக்கிறவன் ஞானமடைவான்” என்று பைபிள் சொல்கிறது. என் குடும்பத்தில் ஞானமுள்ளவர்கள் நிறைய பேர் இருந்தார்கள். பயனியர் ஊழியம் செய்வதாக நான் எடுத்த தீர்மானத்தை அவர்கள் ஆதரித்தார்கள். (நீதி. 13:20) என் பெரியப்பா ஜூலியசோடு நான் அடிக்கடி ஊழியத்துக்குப் போவேன். அப்போது அவருக்கு 60 வயது. அவர் என்னைவிட பல வருஷங்கள் மூத்தவராக இருந்தாலும் நாங்கள் சந்தோஷமாக ஊழியம் செய்வோம். அவரிடமிருந்தும் அவருடைய வாழ்க்கை அனுபவத்திலிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். டாரத்தியும் சீக்கிரத்தில் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தார்.

வட்டாரக் கண்காணிகள் செய்த உதவி

என்னுடைய சிறு வயதில், நிறைய வட்டாரக் கண்காணிகளையும் அவர்களுடைய மனைவிகளையும் என் அப்பா அம்மா எங்கள் வீட்டில் தங்க வைப்பார்கள். அவர்களில், ஜெஸி கான்ட்வெல் மற்றும் அவருடைய மனைவி லின் கான்ட்வெல் எனக்கு ரொம்பவே உதவி செய்தார்கள். என்மீது அக்கறையாக இருந்தார்கள், என்னை உற்சாகப்படுத்தினார்கள். அதனால், பயனியர் செய்ய வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன். பக்கத்திலுள்ள சபைகளை அவர்கள் சந்திக்க வரும்போது, அவர்களோடு ஊழியம் செய்வதற்கு சில சமயங்களில் என்னைக் கூப்பிடுவார்கள். அவர்களோடு அப்படி நேரம் செலவு செய்தது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர்களைப் போலவே நானும் யெகோவாவுக்கு மும்முரமாக சேவை செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்.

அடுத்ததாக எங்கள் சபைக்கு வந்த வட்டாரக் கண்காணியின் பெயர் பட் மில்லர். அவரும் அவருடைய மனைவி ஜோனும் எங்கள் சபைக்கு வந்தபோது எனக்கு 18 வயது. அந்தச் சமயத்தில் ‘ட்ராஃப்ட் போர்டுக்கு’ முன்னால், அதாவது யாரெல்லாம் ராணுவத்தில் சேர வேண்டும் என்று முடிவெடுக்கும் குழுவுக்கு முன்னால், நான் ஆஜராக வேண்டியிருந்தது. அரசியலில் நடுநிலைமையோடு இருக்க வேண்டும் என்ற இயேசுவின் கட்டளைக்கு விரோதமாக இருந்த ஒரு வேலையைச் செய்யும்படி அவர்கள் என்னிடம் எதிர்பார்த்தார்கள். ஆனால், கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். (யோவா. 15:19) அதனால், என்னை ஒரு ஊழியராகக் கருதும்படி அவர்களிடம் கேட்டுக்கொண்டேன்.

அந்தக் குழுவைச் சந்திப்பதற்கு என்னோடு வருவதாக சகோதரர் மில்லர் சொன்னபோது எனக்குப் பயங்கர சந்தோஷமாக இருந்தது. அவர் எல்லாரிடமும் நட்பாகப் பேசுவார்; அவ்வளவு சீக்கிரம் யாருக்கும் பயப்பட மாட்டார். பைபிள் வசனங்களையும் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். அவர் என்னோடு வந்ததால் எனக்கு ரொம்பவே தைரியமாக இருந்தது. அந்தக் குழுவைச் சந்தித்துப் பேசிய பிறகு, 1954-ல், கோடைக்காலத்தின் பிற்பகுதியில் என்னை ஊழியராகக் கருதுவதற்கு அந்தக் குழு ஒத்துக்கொண்டது. அப்போது, யெகோவாவுக்கு இன்னும் அதிகமாகச் சேவை செய்ய எனக்கு வாய்ப்பு கிடைத்தது.

புது பெத்தேல் ஊழியரான நான் ஃபார்முக்குச் சொந்தமான வண்டியோடு

கொஞ்சக் காலத்திலேயே, நியு யார்க், ஸ்டேட்டன் தீவில் இருந்த பெத்தேலில் சேவை செய்வதற்கான அழைப்பு எனக்கு வந்தது. அந்தச் சமயத்தில் அது உவாட்ச்டவர் ஃபார்ம் என்று அழைக்கப்பட்டது. அங்கே 3 வருஷங்கள் நான் சேவை செய்தேன். ஞானமுள்ள நிறைய சகோதர சகோதரிகளை அங்கே சந்தித்தேன், அவர்களோடு வேலை செய்தேன். அதனால், எனக்கு அருமையான அனுபவங்கள் கிடைத்தன.

பெத்தேல் சேவை

சகோதரர் ஃப்ரான்சுடன் WBBR-ல்

ஸ்டேட்டன் தீவில் இருந்த அந்த உவாட்ச்டவர் ஃபார்மில் WBBR ரேடியோ ஸ்டேஷன் இருந்தது. அது யெகோவாவின் சாட்சிகளால் 1924-லிருந்து 1957 வரை இயக்கப்பட்டது. 15-லிருந்து 20 பெத்தேல் ஊழியர்கள்தான் அந்த ஃபார்மில் நியமிக்கப்பட்டிருந்தார்கள். அதிலிருந்த நிறைய பேர், என்னைப் போலவே இளைஞர்களாகவும் அனுபவம் இல்லாதவர்களாகவும் இருந்தார்கள். ஆனால், பரலோக நம்பிக்கையுள்ள எல்டென் உட்வர்த் என்ற ஒரு வயதான சகோதரர் எங்களோடு வேலை செய்தார். அவர் எங்களுக்கு ஒரு அப்பாவைப் போல இருந்தார், நிறைய விஷயங்களைக் கற்றுக்கொடுத்தார். சில சமயங்களில், எங்களுக்குள் பிரச்சினைகள் வரும்போது, ‘அபூரண மனுஷங்களை பயன்படுத்தி யெகோவா செஞ்சிக்கிட்டு வர்ற வேலைய பார்க்குறப்போ ரொம்ப ஆச்சரியமா இருக்கு’ என்று அவர் சொல்வார்.

ஹாரி பீட்டர்சன் வைராக்கியமாக ஊழியம் செய்வார்

சகோதரர் ஃப்ரெட்ரிக் ஃப்ரான்ஸ் எங்களோடு இருந்தது எங்களுக்குக் கிடைத்த பெரிய பாக்கியம்! அவர் ஞானமுள்ளவர், பைபிள் வசனங்கள் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. எங்கள் ஒவ்வொருவர் மீதும் அவர் அக்கறை காட்டினார். ஹாரி பீட்டர்சன் என்ற சகோதரர்தான் எங்களுக்காகச் சமைப்பார். அவருடைய சொந்தப் பெயர் பாப்பார்கைரோபோலோஸ். ஆனால், அந்தப் பெயரை வைத்து கூப்பிடுவதற்குப் பதிலாக அவருடைய கடைசி பெயரை வைத்து கூப்பிடுவதுதான் எங்களுக்குச் சுலபமாக இருந்தது. அவரும் பரலோக நம்பிக்கையுள்ள சகோதரராக இருந்தார். ஊழியம் செய்வது அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவர் பெத்தேலில் நன்றாக வேலை செய்தாலும், ஊழியத்தை ஒருபோதும் தவறவிட மாட்டார்; ஒவ்வொரு மாதமும் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளைக் கொடுப்பார். பைபிள் வசனங்களை அவர் நன்றாகத் தெரிந்துவைத்திருந்தார். நாங்கள் கேட்ட நிறைய கேள்விகளுக்கு அவர் பதில் சொன்னார்.

ஞானமுள்ள சகோதரிகளின் முன்மாதிரி

உவாட்ச்டவர் ஃபார்மில் விளைந்த காய்கறிகளையும் பழங்களையும் பதப்படுத்தி நாங்கள் டின்களில் சேகரிப்போம். பெத்தேல் குடும்பத்துக்காக ஒவ்வொரு வருஷமும் காய்கறிகளையும் பழங்களையும் பதப்படுத்தி சுமார் 45,000 டின்களில் அடைத்து வைப்போம். எட்டா ஹெத் என்ற சகோதரியோடு நான் வேலை செய்தேன். அவர் உண்மையிலேயே ஞானமுள்ள சகோதரி! காய்கறிகளையும் பழங்களையும் பதப்படுத்துவதற்கான செய்முறைகளை அவர்தான் சொல்வார். எங்களோடு வேலை செய்வதற்காக உள்ளூரிலிருந்து சகோதரிகள் வருவார்கள். அவர்களுடைய வேலைகளைத் திட்டமிடுவதற்கு எட்டா உதவுவார். பதப்படுத்துவதைப் பற்றி எட்டாவுக்கு நன்றாகத் தெரிந்திருந்தாலும், உவாட்ச்டவர் ஃபார்மில் இருந்த கண்காணிகளிடம் அவர் எப்போதும் மரியாதையோடு நடந்துகொள்வார். கடவுளுடைய அமைப்பில் இருக்கும் தலைமை ஸ்தானத்துக்குக் கீழ்ப்படிவதில் அவர் ஒரு நல்ல முன்மாதிரி!

எட்டா ஹெத் மற்றும் ஏஞ்சலாவுடன்

உவாட்ச்டவர் ஃபார்முக்கு உதவி செய்ய வந்த இளம் சகோதரிகளில் ஏஞ்சலா ரோமானோ என்ற சகோதரியும் இருந்தார். அவர் சத்தியத்துக்கு வந்தபோது எட்டா அவருக்கு உதவி செய்திருக்கிறார். நானும் ஏஞ்சியும் ஏப்ரல் 1958-ல் கல்யாணம் செய்துகொண்டோம். நாங்கள் இருவரும் சேர்ந்து 58 வருஷங்கள் யெகோவாவுக்குச் சேவை செய்திருக்கிறோம். இத்தனை வருஷங்களாக ஏஞ்சி யெகோவாவுக்கு உண்மையோடு இருந்திருக்கிறாள்; எங்கள் திருமண பந்தம் பலப்படுவதற்கு இது உதவியாக இருந்திருக்கிறது. அவள் ஞானமுள்ளவள், என்ன பிரச்சினை வந்தாலும் என்னால் அவளை முழுமையாகச் சார்ந்திருக்க முடியும்.

மிஷனரி ஊழியமும் பயண வேலையும்

1957-ல், ஸ்டேட்டன் தீவில் இருந்த WBBR ரேடியோ ஸ்டேஷன் விற்கப்பட்டது. அதனால், கொஞ்சக் காலத்துக்கு நான் புருக்லின் பெத்தேலில் சேவை செய்தேன். பிறகு, நானும் ஏஞ்சியும் கல்யாணம் செய்துகொண்டதால், பெத்தேலை விட்டு போக வேண்டியிருந்தது. ஸ்டேட்டன் தீவில் நாங்கள் 3 வருஷம் பயனியர் ஊழியம் செய்தோம். கொஞ்சக் காலத்துக்கு, அந்த ரேடியோ ஸ்டேஷனுடைய புதிய உரிமையாளர்களிடம் வேலை செய்தேன். அப்போது, அந்த ஸ்டேஷன் WPOW என்று அழைக்கப்பட்டது.

தேவையுள்ள இடங்களில் சேவை செய்யும் இலக்கு இருந்ததால், நானும் ஏஞ்சியும் எங்கள் வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டோம். நெப்ராஸ்காவில் இருக்கிற ஃபால்ஸ் சிட்டி என்ற இடத்தில், விசேஷ பயனியராக ஊழியம் செய்யும்படி 1961-ல் எங்களுக்கு அழைப்பு வந்தது. வாழ்க்கையை எளிமையாக வைத்துக்கொண்டதால், அந்த அழைப்பை எங்களால் ஏற்றுக்கொள்ள முடிந்தது. அங்கே போன கொஞ்ச நாட்களிலேயே, ராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்துகொள்வதற்கான அழைப்பு வந்தது. அதனால், ஒரு மாதத்துக்கு நியு யார்க்கில் இருக்கிற சௌத் லான்சிங் என்ற இடத்துக்குப் போனோம். அங்கே கிடைத்த பயிற்சி ரொம்ப அருமையாக இருந்தது. அந்தப் பள்ளி முடிந்ததும் திரும்பவும் நெப்ராஸ்காவுக்குப் போவோம் என்று நினைத்தோம். ஆனால், கம்போடியாவில் மிஷனரியாகச் சேவை செய்வதற்காக நாங்கள் நியமிக்கப்பட்டோம். அந்த நியமிப்பு கிடைத்தபோது, எங்களுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. தென் கிழக்கு ஆசியாவில் இருக்கும் அந்த அழகான நாட்டில் நாங்கள் பார்த்தது, கேட்டது, ருசித்தது என எல்லாமே எங்களுக்குப் புதிதாக இருந்தது. கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை அங்கிருந்த மக்களுக்குச் சொல்ல நாங்கள் உண்மையிலேயே ஆர்வமாக இருந்தோம்.

ஆனால், கம்போடியாவில் அரசியல் மாற்றம் ஏற்பட்டதால் நாங்கள் தென் வியட்நாமுக்குப் போக வேண்டியிருந்தது. 2 வருஷங்களுக்குப் பிறகு, என் உடல்நிலை ரொம்ப மோசமானது. அதனால், திரும்பவும் அமெரிக்காவுக்குப் போனோம். என் உடல்நிலை சரியாவதற்குக் கொஞ்சக் காலம் தேவைப்பட்டது. என் உடல்நிலை தேறியதும், நாங்கள் மறுபடியும் பயனியர் ஊழியத்தை ஆரம்பித்தோம்.

1975-ல், டிவியில் பேட்டி கொடுப்பதற்கு முன்பு நானும் ஏஞ்சலாவும்

மார்ச் 1965-ல், நாங்கள் பயண வேலையை ஆரம்பித்தோம். நானும் ஏஞ்சியும் மொத்தம் 33 வருஷங்கள் வட்டார மற்றும் மாவட்ட வேலையைச் சந்தோஷமாகச் செய்தோம், மாநாடுகளிலும் உதவினோம். மாநாடுகள் என்றாலே எனக்கு ஒரே சந்தோஷம்தான்! அதனால், இந்த வேலைகளை ஆர்வத்தோடு செய்தேன். சில வருஷங்கள், நியு யார்க்கில் இருந்த சபைகளையும் அதைச் சுற்றியிருந்த சபைகளையும் சந்தித்தோம். அப்போது, யாங்க்கி ஸ்டேடியத்தில் நிறைய மாநாடுகள் நடந்தன.

பெத்தேலுக்குத் திரும்ப வந்ததும், தேவராஜ்ய பள்ளிகளும்

இத்தனை வருஷங்களில், ஏஞ்சிக்கும் எனக்கும் புதிய நியமிப்புகள் நிறைய கிடைத்திருக்கின்றன. எங்களுக்குக் கிடைத்த வேறு சில நியமிப்புகள் கஷ்டமாகவும் இருந்திருக்கின்றன. 1995-ல், ஊழியப் பயிற்சி பள்ளியின் போதனையாளராக நியமிக்கப்பட்டேன். 3 வருஷங்களுக்குப் பிறகு, நாங்கள் பெத்தேலுக்கு அழைக்கப்பட்டோம். 40 வருஷங்களுக்குப் பிறகு மறுபடியும் பெத்தேலில் சேவை செய்வதற்கான அந்த வாய்ப்பு கிடைத்ததற்காக ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஏனென்றால், விசேஷ முழுநேர சேவையை நான் பெத்தேலில்தான் ஆரம்பித்திருந்தேன். பெத்தேலில் கொஞ்சக் காலத்துக்கு ஊழிய இலாகாவிலும், நிறைய பள்ளிகளில் போதனையாளராகவும் சேவை செய்தேன். 2007-ல், பெத்தேலில் நடக்கும் எல்லா பள்ளிகளையும் கவனித்துக்கொள்வதற்காக தேவராஜ்ய பள்ளிகளின் இலாகாவை ஆளும் குழு ஆரம்பித்தது. சில வருஷங்களுக்கு நான் அந்த இலாகாவின் கண்காணியாகச் சேவை செய்தேன்.

சமீப வருஷங்களில், பெத்தேலில் நடக்கும் பள்ளிகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 2008-ல், சபை மூப்பர்களுக்கான பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அடுத்த 2 வருஷங்களுக்குள், பேட்டர்ஸன் மற்றும் புருக்லின் பெத்தேலில் 12,000-க்கும் அதிகமான மூப்பர்களுக்குப் பயிற்சி கொடுக்கப்பட்டது. மற்ற இடங்களிலும் இந்தப் பள்ளி நடந்து வருகிறது. 2010-ல், ஊழியப் பயிற்சி பள்ளியின் பெயர், மணமாகாத சகோதரர்களுக்கான பைபிள் பள்ளி என்று மாற்றப்பட்டது. அதோடு, கிறிஸ்தவத் தம்பதிகளுக்கான பைபிள் பள்ளி என்ற புதிய பள்ளியும் ஆரம்பிக்கப்பட்டது.

செப்டம்பர் 2014-ல், இந்த இரண்டு பள்ளிகளும் ஒன்றாக இணைக்கப்பட்டு, ராஜ்ய நற்செய்தியாளர்களுக்கான பள்ளி என்ற ஒரு புதிய பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. தம்பதிகளும், மணமாகாத சகோதரர்களும், மணமாகாத சகோதரிகளும் இந்தப் பள்ளியில் கலந்துகொள்ளலாம். இந்தப் பள்ளி தங்களுடைய நாடுகளிலும் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டபோது அந்தந்த நாடுகளிலிருந்த சகோதர சகோதரிகள் ரொம்பவே சந்தோஷப்பட்டார்கள். இந்தப் பள்ளிகளில் கலந்துகொள்ள நிறைய பேருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்பதை நினைக்கும்போது, ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இந்தப் பள்ளியில் கிடைக்கும் பயிற்சியைப் பெற்றுக்கொள்வதற்காக நிறைய பேர் தங்களுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்திருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களைச் சந்திப்பதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காக நான் நன்றியோடு இருக்கிறேன்.

அந்தப் பெரிய தொட்டியில் ஞானஸ்நானம் எடுத்ததற்கு முன்பிருந்து இதுவரைக்கும், ஞானமுள்ளவர்கள் நிறைய பேரை என் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறேன். சத்திய பாதையில் நடப்பதற்கு அவர்கள் எனக்கு உதவியதற்காக நான் யெகோவாவுக்கு நன்றி சொல்கிறேன். அவர்களுக்கும் எனக்கும் ஒரே வயது இல்லைதான்; அவர்களுடைய கலாச்சாரமும் என்னுடைய கலாச்சாரமும் வேறு வேறுதான். இருந்தாலும், அவர்கள் எல்லாரும் ஆன்மீக மனிதர்களாக இருந்தார்கள்! யெகோவாமீது அவர்கள் வைத்திருக்கும் ஆழமான அன்பை அவர்களுடைய செயல்களிலிருந்தும் மனப்பான்மையிலிருந்தும் தெளிவாகப் பார்க்க முடிந்தது. யெகோவாவுடைய அமைப்பில், ஞானமுள்ளவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம். அந்த மாதிரியான ஞானமுள்ள நண்பர்கள் நிறைய பேர் எனக்குக் கிடைத்திருக்கிறார்கள், அவர்களிடமிருந்து நான் நிறைய கற்றுக்கொண்டிருக்கிறேன்!

உலகம் முழுவதிலுமிருந்து வருகிற மாணவர்களிடம் பேசுவதில் எனக்கு ரொம்ப சந்தோஷம்