Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாசகர் கேட்கும் கேள்விகள்

வாசகர் கேட்கும் கேள்விகள்

அப்போஸ்தலன் பவுலுக்கு வழுக்கைத் தலை இருப்பது போல அல்லது கொஞ்சம் முடி மட்டுமே இருப்பது போல, யெகோவாவின் சாட்சிகள் ஏன் காட்டுகிறார்கள்?

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், பவுலின் தோற்றத்தைப் பற்றி இன்றுள்ள யாருக்கும் தெரியாது. நம் பிரசுரங்களில் வருகிற அவருடைய படங்கள், அவருடைய உண்மையான உருவம் கிடையாது. அவை வெறுமனே ஓவியங்கள்தான். அதோடு, அவை தொல்பொருள் ஆராய்ச்சியின் மூலம் நிரூபிக்கப்பட்டவையும் கிடையாது.

ஆனாலும், பவுலின் தோற்றத்தைப் பற்றிய சில விவரங்கள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, மார்ச் 1, 1902 தேதியிட்ட சீயோனின் காவற்கோபுரம், அப்படிப்பட்ட ஒரு விவரத்தைப் பற்றி இப்படிச் சொன்னது: “பவுலின் தோற்றத்தைப் பற்றி . . . கிட்டத்தட்ட கி.பி. 150-ல் எழுதப்பட்ட ‘பவுல் மற்றும் தெக்லாவின் நடவடிக்கைகள்’ என்ற புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ளது; அந்த விவரங்கள், அநேகமாக சரியானவை; பாரம்பரியத்தை அடிப்படையாகக் கொண்டவை. அவர் ‘குள்ளமாகவும், வழுக்கைத் தலையோடும், வளைந்த கால்களோடும், கட்டுடலோடும், ஒட்டிய புருவங்களோடும், நீளமான மூக்கோடும்’ இருந்ததாக அந்தப் புத்தகம் சொல்கிறது.”

அந்தப் பழங்கால புத்தகத்தைப் பற்றி, தி ஆக்ஸ்ஃபோர்ட் டிக்ஷனரி ஆஃப் தி க்றிஸ்டியன் சர்ச் (1997 பதிப்பு) இப்படிச் சொல்கிறது: “‘நடவடிக்கைகள்’ புத்தகத்தில் சில வரலாற்று உண்மைகள் இருப்பதை மறுக்க முடியாது.” பவுல் மற்றும் தெக்லாவின் நடவடிக்கைகள் புத்தகத்தின் 80 கிரேக்க கையெழுத்துப் பிரதிகள் இருப்பதை வைத்துப் பார்க்கும்போது, அந்தப் புத்தகம் எழுதி முடிக்கப்பட்ட சில நூற்றாண்டுகள்வரை அது உயர்வாகக் கருதப்பட்டதாகத் தெரிகிறது. மற்ற மொழிகளிலும் அதன் பிரதிகள் இருக்கின்றன. இப்படி, பழங்காலத்திலிருந்த சில அத்தாட்சிகளின் அடிப்படையில்தான் நம்முடைய பிரசுரங்களில் பவுலின் ஓவியங்கள் வரையப்படுகின்றன.

ஆனால், பவுலின் தோற்றத்தைவிட மிக முக்கியமான மற்ற விஷயங்கள் இருக்கின்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. பவுல் செய்த ஊழியத்தின்போதுகூட, குறை கண்டுபிடிக்கும் சிலர், “நேரில் பார்க்கும்போது அவனுடைய தோற்றம் கம்பீரமாக இல்லை, பேச்சும் அர்த்தமுள்ளதாக இல்லை” என்று சொன்னார்கள். (2 கொ. 10:10) ஆனால், இயேசு அவருக்கு அற்புதமாகக் காட்சியளித்ததையும், அதனால் அவர் கிறிஸ்தவராக ஆனதையும் நாம் மறந்துவிடக் கூடாது. ‘மற்ற தேசத்து மக்களுக்கு [இயேசுவின்] பெயரை அறிவிப்பதற்கு [தேர்ந்தெடுக்கப்பட்ட] ஒரு கருவியாக’ அவர் என்னவெல்லாம் சாதித்தார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. (அப். 9:3-5, 15; 22:6-8) அதோடு, யெகோவாவின் சக்தியால் தூண்டப்பட்டு பவுல் எழுதிய பைபிள் புத்தகங்களிலிருந்து நாம் எப்படிப் பிரயோஜனம் அடைகிறோம் என்பதையும் யோசித்துப் பாருங்கள்.

கிறிஸ்தவராக ஆவதற்கு முன்பு தான் சாதித்த விஷயங்களைப் பற்றி பவுல் பெருமையடிக்கவில்லை. தன்னுடைய தோற்றத்தைப் பற்றியும் அவர் எதுவும் சொல்லவில்லை. (அப். 26:4, 5; பிலி. 3:4-6) “அப்போஸ்தலர்கள் எல்லாரிலும் நான் அற்பமானவன்; . . . அப்போஸ்தலன் என்று அழைக்கப்படுவதற்குக்கூட தகுதியில்லாதவன்” என்று சொன்னார். (1 கொ. 15:9) பிற்பாடு, “பரிசுத்தவான்கள் எல்லாரிலும் நான் மிக மிக அற்பமானவனாக இருந்தாலும், கிறிஸ்துவிடமிருந்து வரும் எல்லையில்லாத ஆசீர்வாதங்களைப் பற்றிய நல்ல செய்தியை மற்ற தேசத்து மக்களுக்கு அறிவிப்பதற்காகக் கடவுள் தன்னுடைய அளவற்ற கருணையை எனக்குத் தந்தார்” என்றும் எழுதினார். (எபே. 3:8) பவுல் பிரசங்கித்த செய்திதான் முக்கியமே தவிர, பவுலின் தோற்றம் முக்கியமல்ல!