Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

சந்தோஷமாக உபசரிப்பது​—⁠ரொம்ப முக்கியம்!

சந்தோஷமாக உபசரிப்பது​—⁠ரொம்ப முக்கியம்!

“முணுமுணுக்காமல் ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்.” —1 பே. 4:9.

பாடல்கள்: 124, 119

1. முதல் நூற்றாண்டிலிருந்த சகோதரர்கள் என்ன கஷ்டங்களை அனுபவித்தார்கள்?

கி.பி. 62-க்கும் 64-க்கும் இடைப்பட்ட ஒரு சமயத்தில், ‘பொந்து, கலாத்தியா, கப்பத்தோக்கியா, ஆசியா, பித்தினியா ஆகிய இடங்களுக்குச் சிதறிப்போய்த் தற்காலிகக் குடிமக்களாக வாழ்கிறவர்களுக்கு’ அப்போஸ்தலன் பேதுரு ஒரு கடிதம் எழுதினார். (1 பே. 1:1) அந்தச் சகோதர சகோதரிகள் வெவ்வேறு இடங்களிலிருந்து வந்திருந்தார்கள். “துன்பம் என்ற தீயில்” அவர்கள் சோதிக்கப்பட்டார்கள், துன்புறுத்தலை அனுபவித்தார்கள். அதனால், அவர்களுக்கு உற்சாகமும் வழிநடத்துதலும் தேவைப்பட்டன. அதோடு, மிக ஆபத்தான ஒரு சமயத்தில் அவர்கள் வாழ்ந்துகொண்டிருந்தார்கள். “எல்லாவற்றுக்கும் முடிவு நெருங்கிவிட்டது” என்று பேதுரு எழுதினார். அதாவது, இன்னும் 10 வருஷங்களுக்குள் எருசலேம் அழிக்கப்படவிருந்தது. அந்த இக்கட்டான காலகட்டத்தைச் சமாளிக்க எல்லா இடங்களிலுமிருந்த கிறிஸ்தவர்களுக்கு எது உதவியது?—1 பே. 4:4, 7, 12.

2, 3. ஒருவரை ஒருவர் உபசரிக்கும்படி பேதுரு ஏன் தன் சகோதரர்களிடம் சொன்னார்? (ஆரம்பப் படம்)

2 ‘ஒருவரை ஒருவர் உபசரிக்கும்படி,’ சகோதர சகோதரிகளை பேதுரு உற்சாகப்படுத்தினார். (1 பே. 4:9) “உபசரித்தல்” என்பதற்கான கிரேக்க வார்த்தைக்கு, “அன்னியர்கள்மேல் அன்பு காட்டுவது அல்லது அவர்களுக்குத் தயவு காட்டுவது” என்று அர்த்தம். ஆனால், நன்றாகப் பழக்கப்பட்ட, ஒன்றாகச் சேர்ந்து வேலைகளைச் செய்கிற சகோதர சகோதரிகளிடம்தான் “ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்” என்று பேதுரு சொன்னார். உபசரிப்பது அவர்களுக்கு எப்படி உதவும்?

3 உபசரிக்கும்போது ஒருவரோடு ஒருவர் நட்பாகப் பழக முடியும். உங்களை யாராவது வீட்டுக்கு அழைத்தபோது, அவர்களோடு சேர்ந்து சந்தோஷமாக நேரம் செலவழித்த அனுபவம் இருக்கிறதா? அதோடு, நீங்கள் மற்றவர்களை அழைத்தபோது, அவர்களோடு நட்பாகப் பழகும் வாய்ப்பு உங்களுக்கும் கிடைத்திருக்கும். நம் சகோதர சகோதரிகளோடு நட்பாகப் பழகுவதற்கு ஒரு சிறந்த வழி, அவர்களை உபசரிப்பது! பேதுரு வாழ்ந்த காலத்தில் நிலைமைகள் மோசமாகிக் கொண்டே போனதால், கிறிஸ்தவர்கள் ஒருவரோடு ஒருவர் இன்னும் நெருக்கமாக இருக்க வேண்டியிருந்தது. இந்தக் “கடைசி நாட்களில்” நாமும் அப்படித்தான் இருக்க வேண்டும்.—2 தீ. 3:1.

4. இந்தக் கட்டுரையில் எதைப் பற்றி பார்ப்போம்?

4 என்னென்ன வழிகளில் நாம் “ஒருவரை ஒருவர்” உபசரிக்கலாம்? உபசரிப்பதற்கு எவையெல்லாம் தடையாக இருக்கலாம், ஆனாலும் நாம் எப்படி முன்னேறலாம்? நல்ல விருந்தாளிகளாக இருக்க என்ன செய்யலாம்?

உபசரிப்பதற்கான வாய்ப்புகள்

5. உபசரிக்கும் குணத்தைக் கூட்டங்களில் எப்படிக் காட்டலாம்?

5 கூட்டங்கள். யெகோவாவும், அவருடைய அமைப்பும் கூட்டங்களுக்கு நம்மை அழைக்கிறார்கள். கூட்டங்களுக்கு வருகிற ஒவ்வொருவரும், முக்கியமாக புதியவர்கள், சௌகரியமாக உணர வேண்டும் என்று நாம் ஆசைப்படுகிறோம். (ரோ. 15:7) அவர்களும் யெகோவாவின் விருந்தாளிகள்தான்! அதனால், அவர்களுடைய தோற்றமும் உடையும் எப்படியிருந்தாலும் அவர்களை நன்றாக வரவேற்க வேண்டும், சௌகரியமாக உணர வைக்க வேண்டும். (யாக். 2:1-4) புதிதாக யாராவது கூட்டத்துக்கு வந்திருந்தால், அவர்களை அழைத்து உங்கள் பக்கத்தில் உட்கார வைக்க முடியுமா? அப்படிச் செய்யும்போது, கூட்டங்களில் நடப்பதைப் புரிந்துகொள்ள அல்லது வசனங்களைக் கண்டுபிடிக்க அவருக்கு நம்மால் உதவ முடியும்; அதற்கு அவர் ரொம்ப நன்றியோடும் இருப்பார். ‘உபசரிப்பதைப் பழக்கமாக்கிக்கொள்வதற்கு’ இது ஒரு சிறந்த வழி!—ரோ. 12:13.

6. முக்கியமாக யாரை நாம் உபசரிக்க வேண்டும்?

6 டீ, காபி குடிப்பதற்கு அல்லது சாப்பாட்டுக்கு அழைப்பது. பைபிள் காலங்களிலிருந்த ஜனங்கள், விருந்தாளிகளை தங்கள் வீட்டுக்கு அழைத்து, சாப்பாடு கொடுப்பதன் மூலம் அவர்களை உபசரித்தார்கள்; அவர்களோடு நட்பாகவும் சமாதானமாகவும் பழக ஆசைப்பட்டதைக் காட்டுவதற்காக அப்படிச் செய்தார்கள். (ஆதி. 18:1-8; நியா. 13:15; லூக். 24:28-30) யாரை நாம் முக்கியமாக உபசரிக்க வேண்டும்? சபையிலிருக்கிற சகோதர சகோதரிகளைத்தான்! உலக நிலைமைகள் மோசமாகிக்கொண்டே போகும் இந்தச் சமயத்தில் நம் சகோதர சகோதரிகள் நமக்குத் தேவை; நாமும் அவர்களுடைய உண்மையான நண்பர்களாக இருக்க வேண்டும். 2011-ல், அமெரிக்க பெத்தேலில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, காவற்கோபுர படிப்பை மாலை 6:45-லிருந்து 6:15-க்கு ஆளும் குழு மாற்றியது. கூட்டம் சீக்கிரத்தில் முடிந்தால், பெத்தேல் அங்கத்தினர்கள் ஒருவரை ஒருவர் உபசரிக்க முடியும் என்பதற்காகத்தான் இந்த மாற்றம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மற்ற கிளை அலுவலகங்களிலும் இதே போல் செய்யப்பட்டது. பெத்தேல் அங்கத்தினர்கள் ஒருவரோடு ஒருவர் இன்னும் நன்றாகப் பழக இது உதவியது.

7, 8. நம் சபைக்கு பேச்சு கொடுக்க வருகிற சகோதரர்களை நாம் எப்படி உபசரிக்கலாம்?

7 சில சமயங்களில், வேறு சபையிலிருக்கிற சகோதரர்களும், வட்டாரக் கண்காணிகளும், பெத்தேல் பிரதிநிதிகளும் பேச்சு கொடுப்பதற்காக நம் சபைக்கு வருகிறார்கள். அப்படி வருகிறவர்களை நாம் உபசரிக்கலாம், இல்லையா? (3 யோவான் 5-8-ஐ வாசியுங்கள்.) அப்படி உபசரிப்பதற்கான ஒரு வழி, அவர்களை டீ, காபி குடிக்க அல்லது சாப்பாட்டுக்கு அழைப்பது!

8 “இத்தன வருஷங்களா, பேச்சு கொடுக்க வந்த நிறைய சகோதரர்களையும், அவங்க மனைவிகளையும் வீட்டுக்கு கூப்பிடுற வாய்ப்பு எங்களுக்கு கிடைச்சுது” என்று அமெரிக்காவிலிருக்கிற ஒரு சகோதரி சொல்கிறார். அப்படிக் கூப்பிட்ட ஒவ்வொரு முறையும் அவர்களுடைய விசுவாசம் பலப்பட்டதாகவும் சந்தோஷமான அனுபவம் கிடைத்ததாகவும் அவர் உணருகிறார். “அது எங்களுக்கு கஷ்டமாவே தெரியல” என்று அவர் சொல்கிறார்.

9, 10. (அ) யாரை நம் வீட்டில் தங்கவைக்க வேண்டியிருக்கலாம்? (ஆ) உங்கள் வீடு பெரியதாக இருந்தால்தான் மற்றவர்களை தங்க வைக்க முடியுமா? ஒரு உதாரணம் கொடுங்கள்.

9 வீட்டில் தங்கவைப்பது. விருந்தாளிகளை வீட்டில் தங்க வைப்பது, பைபிள் காலங்களிலிருந்த பொதுவான ஒரு வழக்கம். (யோபு 31:32; பிலே. 22) இன்று நமக்கும் அந்த வாய்ப்பிருக்கிறது. வட்டாரக் கண்காணிகள் சபைகளைச் சந்திக்கும்போது, தங்குவதற்கு அவர்களுக்கு ஒரு இடம் தேவைப்படுகிறது. தேவராஜ்ய பள்ளிகளில் கலந்துகொள்பவர்கள் மற்றும் கட்டுமான வேலை செய்யும் வாலண்டியர்களின் விஷயத்திலும் இதுதான் உண்மை! இயற்கைப் பேரழிவில் வீடுகளை இழந்தவர்கள், தங்கள் வீடு சரி செய்யப்படும்வரை மற்றவர்களின் வீடுகளில் தங்க வேண்டியிருக்கிறது. பெரிய வீடு வைத்திருப்பவர்கள்தான் இது போல் உதவ முடியும் என்று நாம் நினைக்கக் கூடாது. பெரிய வீடு வைத்திருப்பவர்கள், ஏற்கெனவே நிறைய தடவை அப்படித் தங்க வைத்திருக்கிறார்கள். அதனால், உங்கள் வீடு சின்னதாக இருந்தாலும், மற்றவர்களை தங்க வைக்க முடியுமா?

10 தேவராஜ்ய பள்ளியில் கலந்துகொள்வதற்காக வந்த மாணவர்கள் தன் வீட்டில் தங்கியதைப் பற்றி, தென் கொரியாவில் இருக்கிற ஒரு சகோதரர் இப்படி எழுதுகிறார்: “அப்போதுதான் எங்களுக்குப் புதிதாகக் கல்யாணம் ஆகியிருந்தது, எங்கள் வீடும் சின்னதாக இருந்தது. அதனால், ஆரம்பத்தில் நான் தயங்கினேன். ஆனால், மாணவர்கள் எங்கள் வீட்டில் தங்கியது ஒரு சந்தோஷமான அனுபவம்! ஒன்றாகச் சேர்ந்து யெகோவாவுக்குச் சேவை செய்யும்போதும், ஆன்மீக இலக்குகளை நாடும்போதும் ஒரு தம்பதியால் எவ்வளவு சந்தோஷமாக இருக்க முடியும் என்பதை அந்த அனுபவத்திலிருந்து தெரிந்துகொண்டோம். புதுத் தம்பதியான எங்களுக்கு அது உற்சாகமாக இருந்தது.”

11. உங்கள் சபைக்குப் புதிதாக வந்திருக்கிற சகோதர சகோதரிகளை நீங்கள் ஏன் உபசரிக்க வேண்டும்?

11 சபைக்குப் புதிதாக வந்திருக்கிற சகோதர சகோதரிகளுக்கு. சில சகோதர சகோதரிகள் வேறு சபையிலிருந்து உங்கள் பகுதிக்கு குடிமாறியிருக்கலாம். உங்கள் சபையில் தேவை இருப்பதால், அவர்கள் அப்படி வந்திருக்கலாம். அல்லது உங்கள் சபையில் அவர்கள் பயனியர்களாக நியமிக்கப்பட்டிருக்கலாம். அவர்களுக்கு இது ஒரு பெரிய மாற்றம்! புது இடம்... புது சபை... சில சமயங்களில் புது மொழி அல்லது கலாச்சாரம்... என நிறைய விஷயங்களுக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்டவர்களை டீ, காபி குடிக்கவோ சாப்பாட்டுக்கோ அழைக்க முடியுமா? அல்லது ஒன்றாகச் சேர்ந்து எங்கேயாவது வெளியில்போக முடியுமா? புதிய நண்பர்களை உருவாக்கவும், புது இடத்துக்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்ளவும் இது அவர்களுக்கு உதவும்.

12. உபசரிப்பதற்கு நாம் நிறைய செய்ய வேண்டுமென்று அவசியமில்லை என்பதற்கு ஒரு உதாரணம் கொடுங்கள்.

12 உபசரிப்பதற்கு, நீங்கள் நிறைய செய்ய வேண்டுமென்று அவசியம் இல்லை. (லூக்கா 10:41, 42-ஐ வாசியுங்கள்.) தானும் தன் மனைவியும் புதிதாக மிஷனரிகளாக நியமிக்கப்பட்டபோது நடந்ததைப் பற்றி ஒரு சகோதரர் இப்படிச் சொல்கிறார்: “எங்களுக்கு அப்போ சின்ன வயசு, அனுபவமும் அவ்வளவா இல்ல, வீட்டு ஞாபகமா இருந்துச்சு. ஒருநாள் சாயங்காலம், என் மனைவிக்கு வீட்டு ஞாபகம் வந்ததால சோர்ந்து போயிட்டா. நான் என்ன சொல்லியும், அவ சரியாகல. கிட்டத்தட்ட 7:30 மணி இருக்கும். அப்போ, யாரோ கதவ தட்டுனாங்க. பைபிள படிக்கிற ஒருத்தங்க, கையில மூணு ஆரஞ்சு பழத்த வைச்சிட்டு நின்னுட்டிருந்தாங்க. புதுசா மிஷனரிகளா வந்துருக்குற எங்கள பார்க்குறதுக்காக அவங்க வந்திருந்தாங்க. அவங்கள உள்ள கூப்புட்டு, ஒரு டம்ளர் தண்ணி கொடுத்தோம். அப்புறம் டீயும் ‘ஹாட் சாக்லேட்டும்’ கொடுத்தோம். எங்களுக்கு ஸ்வாஹிலி மொழி தெரியல, அவங்களுக்கு ஆங்கிலம் தெரியல.” உள்ளூர் சகோதர சகோதரிகளோடு நன்றாகப் பழகவும் சந்தோஷமாக இருக்கவும் இந்தச் சம்பவம் அவர்களுக்கு உதவியது.

தடைகளைச் சமாளியுங்கள்

13. உபசரிக்கும் குணம் உங்களுக்கு எப்படி உதவும்?

13 உபசரிப்பதற்கு நீங்கள் எப்போதாவது தயங்கியிருக்கிறீர்களா? அப்படியென்றால், ஒன்றாகச் சேர்ந்து நேரம் செலவிடுகிற அருமையான தருணங்களையும், முடிவில்லாத நட்பையும் நீங்கள் இழந்திருக்கிறீர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். தனிமையுணர்வைச் சமாளிப்பதற்கான ஒரு சிறந்த வழி, உபசரிப்பதுதான்! இருந்தாலும், உபசரிப்பதற்கு சிலர் ஏன் தயங்குகிறார்கள்? அதற்கான சில காரணங்களை இப்போது பார்க்கலாம்.

14. உபசரிக்கவோ உபசரிப்பை ஏற்றுக்கொள்ளவோ, போதிய நேரமோ சக்தியோ இல்லையென்று நினைத்தால், நாம் என்ன செய்ய வேண்டும்?

14 நேரமும் சக்தியும் இல்லை. யெகோவாவின் மக்களுக்கு செய்வதற்கு நிறைய வேலைகள் இருக்கின்றன; எப்போதும் பிஸியாக இருக்கிறார்கள். அதனால், உபசரிப்பதற்கு நேரமோ சக்தியோ இல்லை என்று அவர்களில் சிலர் நினைக்கலாம். நீங்கள் அப்படி நினைத்தால், உங்கள் அட்டவணையை மாற்ற வேண்டியிருக்கலாம். அப்போதுதான், உபசரிக்கவும் உபசரிப்பை ஏற்றுக்கொள்ளவும் முடியும். இதைச் செய்வது முக்கியம்; ஏனென்றால், உபசரிக்கும் குணத்தைக் காட்டும்படி பைபிள் சொல்கிறது. (எபி. 13:2) உபசரிப்பது நல்ல விஷயம் என்பதை மறந்துவிடாதீர்கள். நீங்கள் உபசரிக்கும் குணத்தைக் காட்ட வேண்டுமென்றால், முக்கியமில்லாத விஷயங்களுக்கு நேரம் ஒதுக்குவதைக் குறைத்துக்கொள்ள வேண்டியிருக்கும்.

15. தங்களால் உபசரிக்கும் குணத்தைக் காட்ட முடியாது என்று ஏன் சிலர் நினைக்கிறார்கள்?

15 உங்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ‘உபசரிக்கணுங்குற ஆசை இருக்கு, ஆனா, என்னால முடியல’ என்று எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா? ஒருவேளை உங்களுக்குக் கூச்ச சுபாவம் இருப்பதால், ‘வீட்டுக்கு வர்றவங்களுக்கு சலிப்புத் தட்டிடுமோ’ என்று நீங்கள் நினைக்கலாம். அல்லது அவ்வளவாகப் பணம் இல்லாததால், மற்ற சகோதர சகோதரிகளைப் போல் உங்களால் நிறைய செய்ய முடியாது என்று நினைக்கலாம். ஆனால், நீங்கள் நட்பாகப் பழகினாலே போதும். உங்கள் வீடு வசதியாக இல்லையே என்று நினைத்து கவலைப்பட வேண்டாம். நீங்கள் வீட்டை சுத்தமாக வைத்திருந்தாலே போதும், விருந்தாளிகள் சந்தோஷப்படுவார்கள்.

16, 17. மற்றவர்களை வீட்டுக்கு அழைப்பதை நினைத்து நீங்கள் கவலைப்பட்டால், என்ன செய்யலாம்?

16 மற்றவர்களை வீட்டுக்கு அழைப்பதை நினைத்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா? உங்களைப் போலவே சிலர் உணர்ந்திருக்கிறார்கள். பிரிட்டனில் இருக்கும் ஒரு மூப்பர் இப்படி சொல்கிறார்: “விருந்தாளிகள வீட்டுக்கு கூப்புடுறப்போ ஒருவேளை கொஞ்சம் படபடப்பா இருக்கலாம். ஆனா, யெகோவாவோட சேவை சம்பந்தப்பட்ட விஷயங்கள செய்றதுல கிடைக்குற திருப்தி... பலன்கள்... இதோட ஒப்பிடறப்போ, நம்ம கவலைகளெல்லாம் பறந்துபோயிடும். அவங்களோட உட்கார்ந்து காபி குடிச்சிக்கிட்டு, அப்படியே ஜாலியா பேசுறப்போ கிடைக்கிற சந்தோஷமே தனிதான்.” நம் வீட்டுக்கு வரும் விருந்தாளிகளை அக்கறையோடு நடத்துவது முக்கியம். (பிலி. 2:4) தங்கள் வாழ்க்கையில் கிடைத்த சுவாரஸ்யமான அனுபவங்களைப் பற்றி பேசுவது சிலருக்கு ரொம்ப பிடிக்கும். ஒருவேளை, இதுபோன்ற சந்தர்ப்பங்களில்தான் மற்றவர்களுடைய அனுபவங்களைக் கேட்க முடியும். இன்னொரு மூப்பர் இப்படி எழுதுகிறார்: “என் சபையில் இருக்கிற நண்பர்களை வீட்டுக்கு அழைக்கும்போது, அவர்களைப் புரிந்துகொள்ளவும், அவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொள்ளவும், முக்கியமாக அவர்கள் எப்படி சத்தியத்துக்கு வந்தார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவும் முடிகிறது.” உங்கள் விருந்தாளிகள்மேல் அக்கறை காட்டினால், எல்லாருமே சந்தோஷத்தை அனுபவிக்கலாம் என்பதில் சந்தேகமே இல்லை.

17 தேவராஜ்ய பள்ளிகளில் கலந்துகொள்கிற மாணவர்களை அடிக்கடி தன் வீட்டில் தங்கவைக்கிற ஒரு பயனியர் சகோதரி இப்படிச் சொல்கிறார்: “என் வீட்டுல அவ்வளவா வசதிகள் இல்ல, பழைய சாமான்களைதான் விலைகொடுத்து வாங்கி வைச்சிருந்தேன். அதனால, மத்தவங்கள தங்கவைக்குறத நினைச்சு ஆரம்பத்துல தயங்குனேன். ஆனா, அந்த பள்ளி போதகர்கள்ல ஒருத்தரோட மனைவி, என் கவலைய போக்குனாங்க. அவங்களும் அவங்களோட கணவரும் வட்டார சேவை செய்றப்போ, அவங்கள மாதிரியே வாழ்க்கைய எளிமையா வைச்சுக்கிட்டு, யெகோவாவுக்கு சேவை செய்றவங்களோட வீட்டுல தங்குறதுதான், அவங்களுக்கு ரொம்ப சந்தோஷத்த கொடுக்குறதா சொன்னாங்க. ஒருவேளை அப்படிப்பட்டவங்களோட வீட்டுல அவ்வளவு வசதி இல்லன்னாலும், அவங்க சந்தோஷத்த அனுபவிக்கிறதா சொன்னாங்க. நாங்க சின்ன பிள்ளைங்களா இருந்தப்போ, என் அம்மா சொன்னதுதான் எனக்கு ஞாபகம் வந்துச்சு. ‘அன்போடு பரிமாறப்படும் காய்கறியே மேல்’ அப்படினு அவங்க அடிக்கடி சொல்லுவாங்க.” (நீதி. 15:17) அதனால், தேவையில்லாமல் கவலைப்படாதீர்கள். உங்கள் விருந்தாளிகள்மேல் நீங்கள் காட்டுகிற அன்பைவிட வேறொன்றும் பெரிதல்ல.

18, 19. மற்றவர்கள்மேல் இருக்கிற தவறான எண்ணத்தை மாற்றிக்கொள்ள உபசரிக்கும் குணம் எப்படி உதவும்?

18 மற்றவர்களைப் பற்றிய அபிப்பிராயம். சபையில் இருக்கிற யாராவது உங்களைப் புண்படுத்தியிருக்கலாம்; அதை மறப்பதும் உங்களுக்குக் கஷ்டமாக இருக்கலாம். அல்லது யாராவது உங்களை எரிச்சல்படுத்தியிருக்கலாம். அதனால், ஆரம்பத்தில் அவர்களை உங்களுக்குப் பிடிக்காமல் போயிருக்கலாம். அந்த எண்ணத்தை நீங்கள் மாற்றிக்கொள்ளாவிட்டால், அவர்களை எப்போதும் தவறாகத்தான் நினைப்பீர்கள். அப்படிப்பட்டவர்களை வீட்டுக்கு அழைக்க ஒருவேளை உங்களுக்கு மனம் வராமல் இருக்கலாம்.

19 நீங்கள் உபசரிக்கும் குணத்தைக் காட்டினால், மற்றவர்களோடு இருக்கிற பந்தத்தில், ஏன், எதிரிகளோடு இருக்கிற பந்தத்தில்கூட முன்னேற முடியும் என்று பைபிள் சொல்கிறது. (நீதிமொழிகள் 25:21, 22-ஐ வாசியுங்கள்.) நீங்கள் யாரையாவது உங்கள் வீட்டுக்கு அழைத்தால், அவர்கள்மேல் உங்களுக்கு இருக்கிற தவறான எண்ணம் போவதற்கு வாய்ப்பிருக்கிறது. உங்களுக்குள் ஒரு சுமூகமான உறவு ஏற்படுவதற்கும் வாய்ப்பிருக்கிறது. எந்தக் குணங்களைப் பார்த்து யெகோவா அவரை சத்தியத்துக்கு ஈர்த்தாரோ, அந்த நல்ல குணங்களை நீங்களும் பார்க்க ஆரம்பிப்பீர்கள். (யோவா. 6:44) ஒருவேளை, நீங்கள் அழைப்பீர்கள் என்று ஒருவர் கொஞ்சம்கூட எதிர்பார்த்திருக்க மாட்டார். ஆனால், அன்பால் தூண்டப்பட்டு நீங்கள் அவரை அழைக்கும்போது, உங்கள் இரண்டு பேருக்கும் இடையே நட்பு மலரும். அன்பால் தூண்டப்பட்டு இதைச் செய்ய எது உதவும்? அதற்கு ஒரு வழி, பிலிப்பியர் 2:3-ல் இருப்பதைச் செய்வது! “மனத்தாழ்மையினால் . . . மற்றவர்களை உங்களைவிட உயர்ந்தவர்களாகக் கருதுங்கள்” என்று அது சொல்கிறது. நம் சகோதர சகோதரிகள் எந்தெந்த விதங்களில் நம்மைவிட உயர்ந்தவர்கள் என்று யோசித்துப் பார்க்க வேண்டும். அவர்களுடைய விசுவாசம், சகிப்புத்தன்மை, அல்லது மற்ற கிறிஸ்தவ குணங்களைக் கவனித்து, அவற்றிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம். அப்போது, அவர்கள்மேல் இருக்கிற அன்பு அதிகமாகும், அவர்களை உபசரிப்பதும் சுலபமாகும்.

நல்ல விருந்தாளிகளாக இருங்கள்

பொதுவாகவே, விருந்தாளிகளை நன்றாகக் கவனிக்க வேண்டும் என்றுதான் எல்லாரும் நினைப்பார்கள் (பாரா 20)

20. யாராவது ஒருவருடைய வீட்டுக்கு நாம் வருவதாகச் சொன்னால், சொன்ன சொல்லை எப்படிக் காப்பாற்றலாம்?

20 “யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்?” என்று சங்கீதக்காரரான தாவீது கேட்டார். பிறகு, யெகோவா தன்னுடைய விருந்தாளிகளிடம் எதிர்பார்க்கிற குணங்களைப் பற்றி அவர் சொன்னார். (சங். 15:1) சொன்ன சொல்லைக் காப்பாற்றுவது, அந்தக் குணங்களில் ஒன்று. அதைப் பற்றி தாவீது இப்படிச் சொன்னார்: “எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும் கொடுத்த வாக்கை மீற மாட்டான்.” (சங். 15:4) நாம் ஒருவருடைய வீட்டுக்கு வருகிறோம் என்று சொன்னால், முக்கியமான காரணம் இருந்தால் தவிர, போகாமல் இருக்கக் கூடாது. நம்மை அழைத்தவர், நம்முடைய வருகைக்காக தயாராக இருப்பார். நாம் போகாவிட்டால், அவருடைய முயற்சிகளெல்லாம் வீணாகிவிடும். (மத். 5:37) சிலர், ஒருவருடைய வீட்டுக்கு வருவதாகச் சொல்லிவிட்டு, பிறகு, தனக்குப் பிடித்த வேறொருவர் கூப்பிட்டார் என்பதற்காக, முதலில் கூப்பிட்டவருடைய வீட்டுக்குப் போகாமல் விட்டுவிடுகிறார்கள். அப்படிச் செய்தால், அவர்மேல் நமக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது என்று சொல்ல முடியுமா? நம்மை அழைப்பவர்கள் நமக்காக என்ன செய்கிறார்களோ, அதற்கு நாம் நன்றியோடு இருக்க வேண்டும்! (லூக். 10:7) நம்மால் போகவே முடியாத சூழ்நிலை இருந்தால், முன்கூட்டியே சொல்லிவிடுவது நல்லது. அப்படிச் செய்யும்போது அவர்கள்மேல் நமக்கு அன்பும் மரியாதையும் இருக்கிறது என்று அர்த்தம்.

21. நல்ல விருந்தாளிகளாக இருக்க, உள்ளூர் கலாச்சாரத்தை மதிப்பது எப்படி உதவும்?

21 உள்ளூர் கலாச்சாரத்தையும் மதிக்க வேண்டும். சில கலாச்சாரங்களில், எதிர்பார்க்காமல் வருகிற விருந்தாளிகள் வரவேற்கப்படுகிறார்கள். மற்ற கலாச்சாரங்களில், சொல்லிவிட்டு வரவேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில இடங்களில், தாங்கள் சமைத்த சிறந்தவற்றை விருந்தாளிகளுக்குக் கொடுக்கிறார்கள்; பிறகுதான் அவர்கள் சாப்பிடுகிறார்கள். மற்ற இடங்களிலோ, சமைத்தவற்றை எல்லாரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடுகிறார்கள். சில இடங்களில், வீட்டுக்கு வருகிறவர்களும் ஏதாவது கொண்டுவருகிறார்கள். மற்ற இடங்களில், வீட்டுக்கு வருகிறவர்கள் எதையும் கொண்டுவரக் கூடாது என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில கலாச்சாரங்களில், தங்களுக்கு வரும் அழைப்பை ஓரிரண்டு தடவை நாசூக்காக மறுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற கலாச்சாரங்களில், முதல் அழைப்பை மறுப்பதே அவமரியாதையாகக் கருதப்படுகிறது. நம்மை அழைப்பவர்கள் சந்தோஷமாக இருப்பதற்கு நம்மால் முடிந்த எல்லாவற்றையும் நாம் செய்ய வேண்டும்.

22. ஒருவரை ஒருவர் உபசரிப்பது ஏன் ரொம்ப முக்கியம்?

22 “எல்லாவற்றுக்கும் முடிவு நெருங்கிவிட்டது” என்று பேதுரு சொன்னார். (1 பே. 4:7) அதுவும், இதுவரையில் இல்லாத மிகுந்த உபத்திரவத்தை நாம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம். உலக நிலைமைகள் மோசமாகிக்கொண்டே போகப்போக, நம் சகோதர சகோதரிகள்மேல் இருக்கிற அன்பு ஆழமாகிக்கொண்டே இருக்க வேண்டும். “ஒருவரை ஒருவர் உபசரியுங்கள்” என்ற பேதுருவின் அறிவுரையின்படி நடப்பது இப்போது ரொம்பவே அவசியம். (1 பே. 4:9) இன்றும் என்றும், உபசரிப்பது சந்தோஷமான ஒரு விஷயம்! அது அவசியமானதும்கூட!