Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கண்டித்துத் திருத்தப்படுவது​—⁠ஞானத்தைத் தருகிறது!

கண்டித்துத் திருத்தப்படுவது​—⁠ஞானத்தைத் தருகிறது!

‘புத்திமதியை [அதாவது, கண்டித்துத் திருத்தப்படுவதை] கேட்டு ஞானம் அடையுங்கள்.’—நீதி. 8:32, 33.

பாடல்கள்: 64, 120

1. நாம் எப்படி ஞானத்தைப் பெறலாம், அது நமக்கு எப்படி உதவும்?

ஞானம் யெகோவாவிடமிருந்து வருகிறது, மற்றவர்களுக்கும் அதை அவர் தாராளமாகக் கொடுக்கிறார். ‘உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாக இருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அப்படிக் கேட்கிறவர்களை அவர் திட்ட மாட்டார். எல்லாருக்கும் தாராளமாகக் கொடுப்பார்’ என்று யாக்கோபு 1:5 சொல்கிறது. கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்துவதை ஏற்றுக்கொள்வது, ஞானத்தைப் பெறுவதற்கான ஒரு வழி! அதை ஏற்றுக்கொள்வது, தவறு செய்வதிலிருந்து நம்மைப் பாதுகாக்கும்; தொடர்ந்து யெகோவாவுடன் நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ளவும் உதவும். (நீதி. 2:10-12) அதோடு, என்றென்றும் வாழும் அருமையான நம்பிக்கையையும் கொடுக்கும்.—யூ. 21.

2. கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்தும்போது, அதை நேசிக்க நாம் எப்படிக் கற்றுக்கொள்ளலாம்?

2 நாம் பாவ இயல்புள்ளவர்கள், நாம் வளர்ந்த விதமும் வித்தியாசப்படுகிறது. அதனால், கண்டித்துத் திருத்தப்படுவதை ஏற்றுக்கொள்வது அல்லது நம் நன்மைக்காகத்தான் கண்டித்துத் திருத்தப்படுகிறோம் என்று ஒத்துக்கொள்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ஆனால், கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்துவதால் கிடைக்கும் நன்மைகளை அனுபவிக்கும்போது, யெகோவா நம்மேல் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்கிறோம். “என் மகனே, யெகோவாவின் புத்திமதியை ஒதுக்கித்தள்ளாதே” என்று நீதிமொழிகள் 3:11, 12 சொல்கிறது. பிறகு, ‘தான் நேசிக்கிறவர்களை யெகோவா கண்டிக்கிறார்’ என்றும் அது சொல்கிறது. நமக்கு எது நல்லது என்று யெகோவாவுக்குத் தெரியும் என்பதை நாம் உறுதியாக நம்பலாம். (எபிரெயர் 12:5-11-ஐ வாசியுங்கள்.) நம்மைப் பற்றி கடவுளுக்கு நன்றாகத் தெரியும். அதனால், அவர் நம்மைக் கண்டித்துத் திருத்துவது எப்போதுமே சரியானதாகவும் தேவையானதாகவும்தான் இருக்கும். இந்தக் கட்டுரையில், கண்டித்துத் திருத்துவதில் அடங்கியிருக்கிற நான்கு அம்சங்களைப் பற்றி பார்க்கலாம். (1) நம்மை நாமே கட்டுப்படுத்துவது, அதாவது சுயக்கட்டுப்பாடு (2) பெற்றோர்கள் பிள்ளைகளை கண்டித்துத் திருத்துவது (3) சபை மூலமாகக் கண்டித்துத் திருத்தப்படுவது (4) கண்டித்துத் திருத்தப்படுவதால் ஏற்படும் தற்காலிகமான வேதனையைவிட கடும் வேதனையைத் தரும் ஒரு விஷயம்.

சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வது ஏன் ஞானமானது?

3. பிள்ளைகள் எப்படி சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வார்கள்? உதாரணம் கொடுங்கள்.

3 சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்வதில், நம்மை நாமே கட்டுப்படுத்துவது அடங்குகிறது. அதாவது, நம்முடைய பழக்கங்களிலும் சிந்தனைகளிலும் முன்னேற்றம் செய்வது அடங்குகிறது. பிறக்கும்போதே நாம் சுயக்கட்டுப்பாட்டுடன் பிறப்பதில்லை, நாம்தான் அதை வளர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, ஒரு அப்பாவோ அம்மாவோ பிள்ளைக்கு சைக்கிள் ஓட்ட கற்றுக்கொடுப்பதைப் பற்றி பார்க்கலாம். முதலில், அவன் கீழே விழுந்துவிடாமல் இருக்க, அவனுடைய அப்பாவோ அம்மாவோ சைக்கிளைப் பிடித்துக்கொள்வார்கள். கீழே விழாமல் ஓட்டுவது எப்படி என்று அவன் ஓரளவு கற்றுக்கொண்ட பிறகு, சைக்கிளைப் பிடிக்காமல், கொஞ்ச தூரத்துக்கு அவனையே ஓட்டவிடுவார்கள். பிள்ளை இனி கீழே விழாமல் ஓட்டுவான் என்ற முழு நம்பிக்கை வந்தவுடன், அவனைத் தனியாக ஓட்ட விட்டுவிடுவார்கள். அதேபோல, சுயக்கட்டுப்பாடு காட்ட பிள்ளைகளுக்கு உதவும் விஷயத்திலும் பெற்றோர்கள் பொறுமையாக இருக்க வேண்டும். பிள்ளைகளை ‘யெகோவா சொல்கிற விதத்தில் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியின்படி வளர்க்க’ வேண்டும். அப்போது, சுயக்கட்டுப்பாட்டையும் ஞானத்தையும் பிள்ளைகள் வளர்த்துக்கொள்வார்கள்.”—எபே. 6:4.

4, 5. (அ) சுயக்கட்டுப்பாடு, ‘புதிய சுபாவத்தின்’ ஒரு முக்கியமான பாகம் என்று ஏன் சொல்லலாம்? (ஆ) தவறுகள் செய்யும்போது நாம் ஏன் சோர்ந்துவிடக் கூடாது?

4 பெரியவர்கள் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்ளும் விஷயத்திலும் இதுதான் உண்மை. அவர்களுக்கு ஏற்கெனவே ஓரளவு சுயக்கட்டுப்பாடு இருந்தாலும், இன்னும் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக அவர்கள் ஆகவில்லை. “புதிய சுபாவத்தை” அணிந்துகொள்ள ஆரம்பிக்கும்போதும், கிறிஸ்துவைப் போல நடந்துகொள்ள முயற்சி செய்யும்போதும், அவர்கள் முதிர்ச்சியுள்ள கிறிஸ்தவர்களாக ஆகிறார்கள். (எபே. 4:23, 24) “கடவுள்பக்தியற்ற நடத்தையையும் உலக ஆசைகளையும் விட்டுவிடுவதற்கும் தெளிந்த புத்தியுள்ளவர்களாக, நீதிமான்களாக, கடவுள்பக்தி உள்ளவர்களாக இந்த உலகத்தில் வாழ்வதற்கும்” சுயக்கட்டுப்பாடு உதவுகிறது.—தீத். 2:12.

5 இருந்தாலும் நாம் எல்லாருமே பாவிகள்தான். (பிர. 7:20) அதனால் நாம் ஏதாவது தவறு செய்யும்போது, நமக்குப் போதியளவு சுயக்கட்டுப்பாடு இல்லை என்றோ, சுயக்கட்டுப்பாடு கொஞ்சம்கூட இல்லை என்றோ அர்த்தமா? இல்லை! “நீதிமான் ஏழு தடவை விழுந்தாலும் மறுபடியும் எழுந்து நிற்பான்” என்று நீதிமொழிகள் 24:16 சொல்கிறது. ‘எழுந்து நிற்க’ எது உதவும்? நம்முடைய பலம் அல்ல, யெகோவாவுடைய சக்திதான் உதவும். (பிலிப்பியர் 4:13-ஐ வாசியுங்கள்.) கடவுளுடைய சக்தி பிறப்பிக்கிற குணங்களில் சுயக்கட்டுப்பாடும், அதாவது நம்மை நாமே கட்டுப்படுத்துவதும், அடங்கும்.

6. பைபிளை எப்படி இன்னும் நன்றாகப் படிக்கலாம்?

6 ஜெபம் செய்வதும், பைபிளைப் படிப்பதும், தியானிப்பதும்கூட சுயக்கட்டுப்பாட்டை வளர்த்துக்கொள்ள உதவும். ஆனால், பைபிளைப் படிப்பது கஷ்டமாக இருந்தாலோ படிப்பதற்குப் பிடிக்கவில்லை என்றாலோ என்ன செய்யலாம்? சோர்ந்துவிடாதீர்கள்! கடவுளுடைய வார்த்தையின் மீது ‘ஏக்கத்தை வளர்த்துக்கொள்ள’ யெகோவாவிடம் உதவி கேட்டால், அவர் நிச்சயம் உதவுவார். (1 பே. 2:2) பைபிளைப் படிக்க நேரம் ஒதுக்குவதற்கு உதவும்படி யெகோவாவிடம் கேளுங்கள். பிறகு, ஆரம்பத்தில் கொஞ்ச நேரத்துக்கு பைபிளைப் படியுங்கள். அப்படிச் செய்தால், போகப்போக, பைபிளைப் படிப்பது சுலபமானதாகவும் சந்தோஷமானதாகவும் ஆகிவிடும். யெகோவாவின் அருமையான எண்ணங்களைப் பற்றி அமைதியான சூழலில் தியானிக்கவும் நீங்கள் விரும்புவீர்கள்.—1 தீ. 4:15.

7. யெகோவாவின் சேவையில் நாம் வைத்திருக்கும் இலக்குகளை அடைய சுயக்கட்டுப்பாடு எப்படி உதவும்?

7 யெகோவாவின் சேவையில் நாம் வைத்திருக்கும் இலக்குகளை அடைய சுயக்கட்டுப்பாடு உதவும். ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம். ஒரு அப்பா, யெகோவாவின் சேவையில் இருக்கும் ஆர்வத்தை இழந்துகொண்டே வருவதாக உணர்ந்தார். அதனால் ஒழுங்கான பயனியராக ஆக வேண்டும் என்று இலக்கு வைத்தார். அதை அடைய சுயக்கட்டுப்பாடு எப்படி உதவியது? நம் பத்திரிகைகளில் இருக்கும் பயனியர் ஊழியம் சம்பந்தப்பட்ட கட்டுரைகளைப் படித்தார். அதைப் பற்றி ஜெபம் செய்தார். இப்படிச் செய்ததால் யெகோவாவுடன் இருக்கும் பந்தம் பலமானது. தன்னால் முடிந்தபோதெல்லாம் துணைப் பயனியர் ஊழியமும் செய்தார். தன்னுடைய இலக்கை அடைவதைத் தடுக்க வேறு எதற்குமே அவர் இடம்கொடுக்கவில்லை. இலக்கின் மீதே கவனமாக இருந்தார். கொஞ்சக் காலத்துக்குப் பிறகு ஒழுங்கான பயனியராக ஆனார்.

யெகோவா சொல்கிற விதத்தில் பிள்ளைகளைக் கண்டித்துத் திருத்துங்கள்

சரி எது தவறு எது என்று பிறக்கும்போதே பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை; அவர்களுக்குப் பயிற்சி தேவை (பாரா 8)

8-10. யெகோவாவுக்கு சேவை செய்யும் விதத்தில் பிள்ளைகளை வளர்ப்பதற்கு பெற்றோர்களுக்கு எது உதவும்? உதாரணம் கொடுங்கள்.

8 ‘யெகோவா சொல்கிற விதத்தில் பிள்ளைகளைக் கண்டித்து அவர் தருகிற புத்திமதியின்படி அவர்களை வளர்க்கும்’ பொறுப்பை யெகோவா பெற்றோர்களுக்குத்தான் கொடுத்திருக்கிறார். (எபே. 6:4) இன்றைய உலகத்தில் இதைச் செய்வது ரொம்ப கஷ்டம். (2 தீ. 3:1-5) பிறக்கும்போதே பிள்ளைகளுக்கு எது சரி எது தவறு என்று தெரியாது. அவர்களுடைய மனசாட்சியும் பயிற்றுவிக்கப்பட்டிருக்காது. அதனால், அதை பயிற்றுவிப்பதற்கு கண்டித்துத் திருத்துவது அவசியம். (ரோ. 2:14, 15) “கண்டித்துத் திருத்துவது” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் கிரேக்க வார்த்தைக்கு, “பிள்ளை வளர்ப்பு” அல்லது பிள்ளைகள் பொறுப்புள்ள நபர்களாக ஆகும் விதத்தில் அவர்களை வளர்ப்பது என்றும் ஒரு அர்த்தம் இருப்பதாக பைபிள் அறிஞர் ஒருவர் சொன்னார்.

9 பெற்றோர்கள் பிள்ளைகளை அன்போடு கண்டித்துத் திருத்தும்போது பிள்ளைகள் பாதுகாப்பாக உணருவார்கள். சுதந்திரத்துக்கு ஒரு வரம்பு இருப்பதையும், தாங்கள் செய்கிற ஒவ்வொன்றுக்கும் விளைவுகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் என்பதையும் பிள்ளைகள் கற்றுக்கொள்வார்கள். பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை வளர்ப்பதற்கு யெகோவா தரும் ஞானத்தை நம்பியிருப்பது ரொம்ப முக்கியம். பிள்ளைகளை வளர்ப்பதைப் பற்றிய அபிப்பிராயம் இடத்துக்கு இடம் வித்தியாசப்படுகிறது; காலங்கள் போகப்போக அபிப்பிராயங்களும் மாறுகிறது. ஆனால் கடவுள் சொல்வதைக் கேட்கும் பெற்றோர்கள், இந்த உலகத்தில் இருக்கும் ஞானத்தையோ தங்கள் சொந்த அனுபவத்தையோ நம்ப வேண்டியதில்லை.

10 நோவாவின் உதாரணத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? பேழையைக் கட்டச் சொல்லி யெகோவா அவரிடம் சொன்னபோது, அதை எப்படிக் கட்டுவதென்று நோவாவுக்குத் தெரியாது. அவர் யெகோவாவை நம்பியிருக்க வேண்டியிருந்தது. அவர் “அப்படியே செய்தார்” அல்லது யெகோவா சொன்னபடியே செய்தார் என்று பைபிள் சொல்கிறது. (ஆதி. 6:22) அதன் பலன் என்ன? நோவாவையும் அவருடைய குடும்பத்தையும் அந்தப் பேழை காப்பாற்றியது! ஒரு அப்பாவாகவும் நோவா வெற்றியடைந்தார். அவரால் எப்படி வெற்றியடைய முடிந்தது? அவர் கடவுளுடைய ஞானத்தை நம்பியிருந்தார்! பெருவெள்ளத்துக்கு முன்பிருந்த உலக நிலைமை மிக மோசமாக இருந்தபோதிலும், தன்னுடைய பிள்ளைகளுக்கு நோவா நன்றாகக் கற்றுக்கொடுத்தார், நல்ல முன்மாதிரியும் வைத்தார்.—ஆதி. 6:5.

11. தங்கள் பிள்ளைகளுக்குப் பயிற்சி கொடுக்க பெற்றோர்கள் ஏன் கடினமாக முயற்சி செய்ய வேண்டும்?

11 நீங்கள் ஒரு பெற்றோரா? அப்படியென்றால், நோவாவைப் போல நீங்களும் ‘அப்படியே செய்ய’ எது உதவும்? யெகோவா சொல்வதைக் கேளுங்கள். பிள்ளைகளை வளர்க்க அவர் உங்களுக்கு உதவ இடம்கொடுங்கள். பைபிள் மற்றும் அவருடைய அமைப்பு தரும் அறிவுரைகளின்படி நடங்கள். இவற்றையெல்லாம் செய்தால், பிற்பாடு உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு நன்றியோடு இருப்பார்கள். “என் அப்பா அம்மா என்னை வளர்த்த விதத்துக்காக நான் ரொம்ப நன்றியோடு இருக்கிறேன். என் மனதைத் தொட அவர்களால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்தார்கள்” என்று ஒரு சகோதரர் எழுதினார். யெகோவாவிடம் நெருக்கமான பந்தத்தை வளர்த்துக்கொள்ள தன் அப்பா அம்மாதான் உதவியதாக அவர் சொல்கிறார். பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க தங்களால் முடிந்ததையெல்லாம் செய்தும்கூட, சில பிள்ளைகள் யெகோவாவைவிட்டுப் போய்விடுகிறார்கள். ஆனால், பெற்றோர் தங்களால் முடிந்ததைச் செய்ததால், அவர்கள் சுத்தமான மனசாட்சியோடு இருக்கலாம். தங்கள் பிள்ளை என்றாவது ஒருநாள் திரும்பவும் யெகோவாவிடம் வருவான் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கலாம்.

12, 13. (அ) பிள்ளை சபைநீக்கம் செய்யப்படும்போது, பெற்றோர்கள் தங்கள் கீழ்ப்படிதலை எப்படிக் காட்டலாம்? (ஆ) ஒரு பெற்றோர் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தது, அவர்களுடைய மகளுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது?

12 பிள்ளை சபை நீக்கம் செய்யப்படுவது, சில பெற்றோர்களுக்கு மிகப் பெரிய சோதனையாக இருக்கலாம். அதுபோன்ற சமயங்களில், யெகோவாவுக்குக் கீழ்ப்படிவது அவர்களுக்குச் சவாலாக இருக்கலாம். சபை நீக்கம் செய்யப்பட்டிருந்த ஒருவருடைய அம்மா இப்படி ஒத்துக்கொள்கிறார்: “என் பொண்ணுகிட்டயும் பேத்திகிட்டயும் பேசுறத அனுமதிக்கிற மாதிரியான கட்டுரைகள் ஏதாவது இருக்குமான்னு பிரசுரங்கள்ல தேடினேன்.” ஆனால், அவருடைய கணவர் அவருக்கு அன்பாக உதவினார். அவர்களுடைய மகளின் விஷயம் இனி அவர்கள் கையில் இல்லை என்பதையும், அதில் தலையிடக் கூடாது என்பதையும் புரியவைத்தார்.

13 சில வருஷங்களுக்குப் பிறகு, அவர்களுடைய மகள் திரும்பவும் சபையில் சேர்த்துக்கொள்ளப்பட்டாள். “எங்க பொண்ணு இப்போ தினமும் போன் பண்றா, இல்லனா மெசேஜ் அனுப்புறா. நாங்க கடவுளுக்குக் கீழ்ப்படிஞ்சதால, என்மேலயும் என் கணவர்மேலயும் அவ ரொம்ப மரியாதை வைச்சிருக்கா. இப்போ எங்களுக்குள்ள அருமையான பந்தம் இருக்கு” என்று அவளுடைய அம்மா சொல்கிறார். உங்கள் மகனோ மகளோ சபை நீக்கம் செய்யப்பட்டிருந்தால், நீங்கள் ‘யெகோவாவை முழு இதயத்தோடு நம்புவீர்களா?’ ‘உங்களுடைய சொந்த புத்தியை நம்பவில்லை’ என்பதை யெகோவாவுக்கு நிரூபித்துக் காட்டுவீர்களா? (நீதி. 3:5, 6) யெகோவா நம்மைக் கண்டித்துத் திருத்தும்போது, அவர் எவ்வளவு ஞானமானவர் என்பதையும், நம்மேல் அவர் எவ்வளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதையும் நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. எல்லா மக்களுக்காகவும், அவர் தன்னுடைய மகனையே கொடுத்திருக்கிறார்! அந்த மக்களில் உங்கள் மகன் அல்லது மகளும் ஒருவர் என்பதை மறந்துவிடாதீர்கள்! எல்லாருக்குமே முடிவில்லாத வாழ்வு கிடைக்க வேண்டுமென்று கடவுள் ஆசைப்படுகிறார். (2 பேதுரு 3:9-ஐ வாசியுங்கள்.) அதனால், பெற்றோர்களே, கீழ்ப்படிவது ரொம்ப கஷ்டமாக இருக்கும்போதுகூட, யெகோவாவின் கண்டிப்பும் வழிநடத்துதலும் சரியானது என்பதைத் தொடர்ந்து நம்புங்கள். கடவுள் நம்மைக் கண்டித்துத் திருத்தும்போது, அதை ஏற்றுக்கொள்ளுங்கள், அதை எதிர்த்துப் போராடாதீர்கள்.

சபை மூலமாகக் கண்டித்துத் திருத்தப்படுவது

14. “உண்மையும் விவேகமும் உள்ள நிர்வாகி” மூலம் யெகோவா கொடுக்கிற அறிவுரையிலிருந்து நாம் எப்படிப் பிரயோஜனம் அடைகிறோம்?

14 கிறிஸ்தவ சபையைக் கவனித்துக்கொள்வதாகவும், பாதுகாப்பதாகவும், சபைக்குக் கற்றுக்கொடுப்பதாகவும் யெகோவா வாக்குக் கொடுத்திருக்கிறார். இவற்றை அவர் பல வழிகளில் செய்கிறார். உதாரணத்துக்கு, சபையைக் கவனிக்க தன் மகனை நியமித்திருக்கிறார்; அவருடைய மகனான இயேசு, நமக்கு ஆன்மீக உணவு கிடைக்கவும், நாம் உண்மையோடு நிலைத்திருக்கவும், ‘உண்மையும் விவேகமும் உள்ள நிர்வாகியை’ நியமித்திருக்கிறார். (லூக். 12:42) அந்த ‘நிர்வாகியின்’ மூலம் அருமையான அறிவுரைகள் நமக்குக் கிடைக்கின்றன அல்லது அந்த நிர்வாகியால் நாம் கண்டித்துத் திருத்தப்படுகிறோம். நீங்கள் கேட்ட ஒரு பேச்சோ, படித்த ஒரு கட்டுரையோ, உங்கள் சிந்தனையை அல்லது செயலை மாற்றிக்கொள்ள உதவியிருக்கிறதா? அப்படி மாற்றிக்கொண்டதை நினைத்து நீங்கள் சந்தோஷப்படலாம். ஏனென்றால், அப்படிச் செய்ததன் மூலம், உங்களைக் கண்டித்துத் திருத்த யெகோவாவுக்கு நீங்கள் இடம்கொடுத்திருக்கிறீர்கள்!—நீதி. 2:1-5.

15, 16. (அ) மூப்பர்கள் செய்யும் வேலையிலிருந்து நீங்கள் எப்படிப் பிரயோஜனம் அடையலாம்? (ஆ) மூப்பர்கள் தங்கள் வேலையைச் சந்தோஷமாகச் செய்ய நீங்கள் எப்படி உதவலாம்?

15 சபையை அன்போடு கவனித்துக்கொள்ள, மூப்பர்களையும் இயேசு நியமித்திருக்கிறார். “மனிதர்களை,” அதாவது மூப்பர்களை, அவர் “பரிசுகளாகக் கொடுத்தார்” என்று பைபிள் சொல்கிறது. (எபே. 4:8, 11-13) மூப்பர்களுடைய சேவையிலிருந்து நாம் எப்படிப் பிரயோஜனம் அடையலாம்? அவர்களுடைய விசுவாசத்தையும், நல்ல முன்மாதிரியையும் நாம் பின்பற்றலாம். பைபிளிலிருந்து அவர்கள் தரும் ஆலோசனைகளைக் கேட்டு நடக்கலாம். (எபிரெயர் 13:7, 17-ஐ வாசியுங்கள்.) மூப்பர்கள் நம்மை நேசிக்கிறார்கள், யெகோவாவிடம் நாம் நெருங்கிய பந்தத்தை வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசைப்படுகிறார்கள். கூட்டங்களை நாம் தவறவிடுவதையோ, நம் ஆர்வம் குறைவதையோ அவர்கள் கவனிக்கும்போது, உடனடியாக உதவுகிறார்கள். நாம் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்டு, நம்மை அன்போடு உற்சாகப்படுத்துகிறார்கள். பைபிளிலிருந்து ஞானமான ஆலோசனைகளைக் கொடுக்கிறார்கள். அவர்களுடைய உதவியை, யெகோவா உங்கள்மேல் வைத்திருக்கிற அன்புக்கு அத்தாட்சியாகப் பார்க்கிறீர்களா?

16 ஆலோசனை கொடுப்பது மூப்பர்களுக்குச் சுலபமான ஒரு விஷயமல்ல! தான் செய்த மோசமான பாவத்தைத் தாவீது ராஜா மறைத்தபோது, அவரிடம் நாத்தான் தீர்க்கதரிசி பேசினார். அப்போது நாத்தானுக்கு எப்படி இருந்திருக்கும்? (2 சா. 12:1-14) 12 அப்போஸ்தலர்களில் ஒருவரான பேதுரு, யூதரல்லாத கிறிஸ்தவர்களை பாரபட்சமாக நடத்தியபோது, அப்போஸ்தலன் பவுல் அவருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தது. அப்போது, பவுலுக்குத் தைரியம் தேவைப்பட்டிருக்கும், இல்லையா? (கலா. 2:11-14) அதனால், மூப்பர்கள் உங்களுக்கு ஆலோசனை கொடுப்பதை நீங்கள் எப்படி சுலபமாக்கலாம்? மனத்தாழ்மையாக இருங்கள், நன்றியோடு இருங்கள், தயக்கமில்லாமல் பேச இடம்கொடுங்கள். அவர்களுடைய ஆலோசனையை, கடவுளுடைய அன்புக்கு அத்தாட்சியாகப் பாருங்கள். தங்கள் வேலையை மூப்பர்கள் சந்தோஷமாக செய்யும்போது, நீங்கள் பிரயோஜனம் அடையலாம்.

17. மூப்பர்கள் எப்படி ஒரு சகோதரிக்கு உதவினார்கள்?

17 கடந்த காலத்தில் ஏற்பட்ட அனுபவத்தால், யெகோவாவை நேசிப்பது தனக்குக் கஷ்டமாக இருந்ததாகவும், மனச்சோர்வில் மூழ்கிவிட்டதாகவும் ஒரு சகோதரி சொல்கிறார். “மூப்பர்கள்கிட்ட பேசணுங்குறது எனக்குத் தெரிஞ்சிருந்துச்சு. அவங்க என்னை மட்டமா நினைக்கல, கூனிக்குறுக வைக்கல. என்னை உற்சாகப்படுத்துனாங்க, பலப்படுத்துனாங்க. ஒவ்வொரு கூட்டத்துக்கு அப்புறமும், அவங்க எவ்வளவு வேலையா இருந்தாலும், யாராவது ஒரு மூப்பராவது என்கிட்ட வந்து நலம் விசாரிப்பாங்க. கடந்த கால அனுபவத்தால, கடவுளோட அன்புக்கு நான் தகுதி இல்லாதவனு நினைச்சேன். ஆனா, சபையையும் மூப்பர்களையும் பயன்படுத்தி யெகோவா தன்னோட அன்பை திரும்ப திரும்ப எனக்கு ஞாபகப்படுத்துனாரு. யெகோவாவவிட்டு எப்பவும் போயிட கூடாதுனு நான் ஜெபம் பண்றேன்.”

கண்டித்துத் திருத்தப்படுவதால் வரும் தற்காலிகமான வேதனையைவிட கடும் வேதனை

18, 19. கண்டித்துத் திருத்தப்படுவதால் வரும் வேதனையைவிட கடும் வேதனையைத் தருவது எது? உதாரணம் கொடுங்கள்.

18 கண்டித்துத் திருத்தப்படுவது நமக்கு வேதனையைத் தரலாம், ஆனால் கண்டித்துத் திருத்தப்படுவதை ஒதுக்கித்தள்ளுவதால் வரும் விளைவுகள், அதைவிட வேதனையைத் தந்துவிடும். (எபி. 12:11) காயீன் மற்றும் சிதேக்கியா ராஜாவின் மோசமான அனுபவங்களிலிருந்து நாம் பாடம் கற்றுக்கொள்ளலாம். தன் தம்பி ஆபேலை காயீன் வெறுத்ததையும் அவனைக் கொல்ல நினைத்ததையும் யெகோவா பார்த்தபோது, அவனிடம், “நீ ஏன் இவ்வளவு கோபமாக இருக்கிறாய்? ஏன் முகத்தைத் தொங்கப்போட்டுக்கொண்டு இருக்கிறாய்? நீ மனம் மாறி நல்லது செய்தால், உன்னை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேனா? நீ நல்லது செய்யவில்லை என்றால், இதோ, பாவம் உன் கதவுக்கு வெளியில் பதுங்கியிருக்கிறது. அது உன்மேல் பாய்வதற்குக் காத்திருக்கிறது. ஆனால், நீ அதை அடக்க வேண்டும்” என்று சொல்லி அவனை எச்சரித்தார். (ஆதி. 4:6, 7) ஆனால், காயீன் அந்த எச்சரிப்பை காதில் வாங்கவே இல்லை. கடைசியில் என்ன நடந்தது? அவன் ஆபேலைக் கொலை செய்தான், அதனால் வந்த மோசமான விளைவுகளை காலமெல்லாம் அனுபவித்தான். (ஆதி. 4:11, 12) அவன் மட்டும் கடவுள் பேச்சைக் கேட்டிருந்தால், அவ்வளவு வலியும் வேதனையும் அவனுக்கு வந்திருக்குமா?

19 சிதேக்கியா ராஜா திறமையில்லாத, மோசமான ராஜாவாக இருந்தான். அவனுடைய ஆட்சியின்போது, எருசலேம் மக்கள் பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அவன் தன்னை மாற்றிக்கொள்வதற்காக, எரேமியா தீர்க்கதரிசி அவனைத் திரும்பத் திரும்ப எச்சரித்தார். ஆனால், யெகோவா கண்டித்துத் திருத்தியபோது, அவன் அதை அலட்சியம் செய்தான். அதன் விளைவு பயங்கரமானதாக இருந்தது. (எரே. 52:8-11) அதுபோன்ற வேதனையை நாம் அனுபவிக்க வேண்டும் என்று யெகோவா விரும்புவதில்லை.ஏசாயா 48:17, 18-ஐ வாசியுங்கள்.

20. கடவுள் கண்டித்துத் திருத்துவதை ஏற்றுக்கொள்பவர்களுக்கும், அதை அலட்சியம் செய்பவர்களுக்கும் என்ன நடக்கும்?

20 இன்று, உலகத்திலிருக்கிற நிறைய பேர், கடவுளால் கண்டித்துத் திருத்தப்படுவதை அலட்சியப்படுத்துகிறார்கள், அதைக் கேலி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் சீக்கிரத்தில் கடும் விளைவுகளை அனுபவிப்பார்கள். (நீதி. 1:24-31) அதனால், நாம் ‘புத்திமதியை [அதாவது, கண்டித்துத் திருத்தப்படுவதை] கேட்டு ஞானம் அடையலாம்.’ நீதிமொழிகள் 4:13 சொல்வது போல், ‘புத்திமதிகளை உறுதியாகப் பிடித்துக்கொள்ளலாம், அவற்றை விட்டுவிடாமல் இருக்கலாம். அவற்றைப் பாதுகாத்துக்கொள்ளலாம், அவை நமக்கு வாழ்வு தரும்.”