Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் எடுப்பது முக்கியம்!

கிறிஸ்தவர்கள் ஞானஸ்நானம் எடுப்பது முக்கியம்!

“ஞானஸ்நானம், . . . இப்போது உங்களைக் காப்பாற்றுகிறது”—1 பே. 3:21.

பாடல்கள்: 7, 56

1, 2. (அ) தங்கள் பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படும்போது, சில பெற்றோர்களுக்கு என்ன கேள்விகள் வருகின்றன? (ஆ) ஞானஸ்நானம் எடுக்கப்போகிறவர்கள், யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்திருக்கிறார்களா என்ற கேள்வியை ஏன் கேட்டுக்கொள்ள வேண்டும்? (ஆரம்பப் படம்)

ஞானஸ்நானம் எடுக்கப்போகிறவர்களின் வரிசையில் தங்களுடைய பிள்ளை மரியா நின்றுகொண்டிருப்பதை அவளுடைய அப்பா அம்மா பார்க்கிறார்கள். பேச்சாளர் இரண்டு கேள்விகளைக் கேட்கிறார். சத்தமாகவும் தெளிவாகவும் மரியா பதில் சொல்கிறாள். அதற்குப் பிறகு, மரியா ஞானஸ்நானம் எடுக்கிறாள்.

2 தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுத்த தங்களுடைய மகளை நினைத்து, மரியாவின் அப்பா அம்மா ரொம்ப சந்தோஷப்பட்டார்கள். ஆனால், சில நாட்களுக்கு முன்பு மரியாவுடைய அம்மாவின் மனதில் சில கேள்விகள் ஓடிக்கொண்டிருந்தன. ‘ஞானஸ்நானம் எடுக்குற அளவுக்கு மரியாவுக்கு வயசாயிடுச்சா? யெகோவாவுக்கு அர்ப்பணிக்குறது எவ்வளவு முக்கியமான விஷயம்ங்குறத அவ புரிஞ்சுவைச்சிருக்காளா? அவ இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு ஞானஸ்நானம் எடுக்கணுமா?’ என்றெல்லாம் அவர் யோசித்தார். ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று தங்களுடைய பிள்ளைகள் சொல்லும்போது, நிறைய பெற்றோர்களுக்கு இதுபோன்ற கேள்விகள் வருகின்றன. (பிர. 5:5) ஏனென்றால், யெகோவாவுக்குத் தன்னை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுப்பதுதான் தன் வாழ்க்கையில் ஒருவர் எடுக்கிற மிக முக்கியமான தீர்மானம்!—“ யெகோவாவுக்கு உங்களை அர்ப்பணித்திருக்கிறீர்களா?” என்ற பெட்டியைப் பாருங்கள்.

3, 4. (அ) ஞானஸ்நானம் எடுப்பது மிக முக்கியம் என்பதை அப்போஸ்தலன் பேதுரு எப்படிக் கற்றுக்கொடுக்கிறார்? (ஆ) ஞானஸ்நானத்தை, நோவா பேழையைக் கட்டியதோடு பேதுரு ஏன் ஒப்பிட்டார்?

3 ஞானஸ்நானத்தை, நோவா பேழையைக் கட்டியதோடு பேதுரு ஒப்பிட்டார். “இதற்கு ஒப்பாக இருக்கிற ஞானஸ்நானம், . . . இப்போது உங்களைக் காப்பாற்றுகிறது” என்று அவர் சொன்னார். (1 பேதுரு 3:20, 21-ஐ வாசியுங்கள்.) நோவா பேழையைக் கட்டியதைப் பார்த்த மக்கள், அவர் முழுமனதோடு கடவுளுடைய விருப்பத்தைச் செய்ய ஆசைப்பட்டார் என்பதைப் புரிந்துகொண்டார்கள். யெகோவா கொடுத்த வேலையை நோவா உண்மையோடு செய்தார். அவர் விசுவாசத்தைக் காட்டியதால், யெகோவா அவரையும் அவருடைய குடும்பத்தாரையும் பெருவெள்ளத்திலிருந்து காப்பாற்றினார். பேதுரு நமக்கு என்ன பாடத்தைக் கற்றுக்கொடுக்கிறார்?

4 ஜனங்கள் பேழையைப் பார்த்தபோது, கடவுள்மீது நோவா விசுவாசமாக இருந்தார் என்பதைத் தெரிந்துகொண்டார்கள். அதேபோல், ஒருவர் ஞானஸ்நானம் எடுப்பதை மற்றவர்கள் பார்க்கும்போது, அவர் இயேசுவின் பலியிலும் உயிர்த்தெழுதலிலும் விசுவாசம் வைத்திருப்பதால், தன் வாழ்க்கையை கடவுளுக்கு அர்ப்பணித்திருக்கிறார் என்பதைத் தெரிந்துகொள்வார்கள். ஞானஸ்நானம் எடுக்கிறவர்கள், நோவாவைப் போல கடவுளுக்குக் கீழ்ப்படிகிறார்கள், அவர் கொடுத்த வேலையைச் செய்கிறார்கள். பெருவெள்ளத்திலிருந்து நோவாவைக் காப்பாற்றியது போலவே, இந்த மோசமான உலகத்தை அழிக்கும்போது, ஞானஸ்நானம் எடுத்த தன்னுடைய உண்மை ஊழியர்களை யெகோவா காப்பாற்றுவார். (மாற். 13:10; வெளி. 7:9, 10) நம் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதும் ஞானஸ்நானம் எடுப்பதும் மிக முக்கியம் என்பது தெளிவாகத் தெரிகிறது. சொல்லப்போனால், ஞானஸ்நானம் எடுப்பதைத் தள்ளிப்போட்டுக்கொண்டே போனால், ஒருவருக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்காமல் போய்விடலாம்.

5. இந்தக் கட்டுரையில் நாம் எதைத் தெரிந்துகொள்வோம்?

5 ஞானஸ்நானம் எடுப்பதன் முக்கியத்துவத்தை இதுவரை கவனித்தோம். இப்போது இந்த மூன்று கேள்விகளுக்கான பதில்களை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்: ஞானஸ்நானத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது? ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு என்ன செய்ய வேண்டும்? நம்முடைய பிள்ளைகளுக்கோ பைபிள் மாணாக்கர்களுக்கோ கற்றுக்கொடுக்கும்போது, ஞானஸ்நானம் எடுப்பதன் முக்கியத்துவத்தை எப்போதும் ஞாபகத்தில் வைப்பது ஏன் அவசியம்?

ஞானஸ்நானத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

6, 7. (அ) யோவான் கொடுத்த ஞானஸ்நானத்துக்கு என்ன அர்த்தம்? (ஆ) யோவான் கொடுத்த மிக முக்கியமான ஞானஸ்நானம் எது, அந்த ஞானஸ்நானத்துக்கு என்ன அர்த்தம்?

6 மற்றவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்த முதல் நபர் யோவான் ஸ்நானகர்தான் என்பதை பைபிளிலிருந்து தெரிந்துகொள்கிறோம். (மத். 3:1-6) பாவத்தைவிட்டு மனம் திருந்தியிருப்பதைக் காட்டுவதற்காக, அதாவது மோசேயின் திருச்சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல் போய்விட்டதை நினைத்து மனம் வருந்துவதைக் காட்டுவதற்காக, அவர்கள் ஞானஸ்நானம் எடுத்தார்கள். மிக முக்கியமான ஒரு ஞானஸ்நானத்தைக் கொடுக்கும் பாக்கியமும் யோவானுக்குக் கிடைத்தது. அதுதான், கடவுளுடைய பரிபூரண மகனான இயேசுவுக்குக் கொடுத்த ஞானஸ்நானம்! (மத். 3:13-17) இயேசு பாவமே செய்ததில்லை; அவர் மனம் திருந்த வேண்டிய அவசியமும் இருக்கவில்லை. (1 பே. 2:22) அதனால், அந்த ஞானஸ்நானத்துக்கு வேறு அர்த்தம் இருந்தது. அதாவது, கடவுளுடைய விருப்பத்தைச் செய்யத் தயாராக இருந்ததைக் காட்டுவதற்காகத்தான் இயேசு ஞானஸ்நானம் எடுத்தார்.—எபி. 10:7.

7 இயேசு பிரசங்க வேலையை ஆரம்பித்த பிறகு, அவருடைய சீஷர்கள் மற்றவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுத்தார்கள். (யோவா. 3:22; 4:1, 2) மோசேயின் திருச்சட்டத்துக்கு எதிராகச் செய்த பாவத்திலிருந்து மனம் திருந்தியதைக் காட்டுவதற்காகத்தான் அவர்களும் ஞானஸ்நானம் எடுத்தார்கள். ஆனால், இயேசு இறந்து உயிர்த்தெழுப்பப்பட்ட பிறகு, அவருடைய சீஷராக ஆக விரும்பியவர்கள், வேறொரு காரணத்திற்காக ஞானஸ்நானம் எடுக்க வேண்டியிருந்தது.

8. (அ) தன்னுடைய உயிர்த்தெழுதலுக்குப் பிறகு இயேசு என்ன கட்டளையைக் கொடுத்தார்? (ஆ) ஞானஸ்நானம் எடுப்பது ஏன் முக்கியம்?

8 கி.பி. 33-ல், தான் உயிர்த்தெழுந்த கொஞ்ச நாட்களில், 500-க்கும் அதிகமான ஆட்களிடம் இயேசு பேசினார். ஆண்களும் பெண்களும் இருந்த அந்தக் கூட்டத்தில், பிள்ளைகளும் இருந்திருக்கலாம். “நீங்கள் புறப்பட்டுப் போய், எல்லா தேசத்தாரையும் சீஷர்களாக்கி, பரலோகத் தகப்பனின் பெயரிலும், அவருடைய மகனின் பெயரிலும், அவருடைய சக்தியின் பெயரிலும் ஞானஸ்நானம் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட எல்லாவற்றையும் அவர்கள் கடைப்பிடிக்கும்படி அவர்களுக்குக் கற்றுக்கொடுங்கள்” என்ற கட்டளையை அந்தச் சமயத்தில் கொடுத்திருக்கலாம். (மத். 28:19, 20; 1 கொ. 15:6) மற்றவர்களைச் சீஷராக்கும்படி, இயேசு தன்னைப் பின்பற்றியவர்களுக்குக் கட்டளை கொடுத்தார். அவருடைய சீஷராக ஆக விரும்புகிறவர்கள், அல்லது அவருடைய ‘நுகத்தடியை’ ஏற்றுக்கொள்ள விரும்புகிறவர்கள், ஞானஸ்நானம் எடுக்க வேண்டும். (மத். 11:29, 30) கடவுளுக்குப் பிடித்த விதத்தில் அவருக்கு சேவை செய்ய வேண்டுமென்றால், கடவுள் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற இயேசுவைத்தான் பயன்படுத்துகிறார் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு, அவர்கள் ஞானஸ்நானம் எடுக்கலாம். இப்படி எடுக்கும் ஞானஸ்நானத்தை கடவுள் ஏற்றுக்கொள்கிறார். ஞானஸ்நானம் எடுப்பதன் முக்கியத்துவத்தை இயேசுவின் ஆரம்பக் கால சீஷர்கள் புரிந்துவைத்திருந்தார்கள் என்பதற்கு பைபிளில் நிறைய ஆதாரங்கள் இருக்கின்றன. ஞானஸ்நானம் எடுப்பதைத் தள்ளிப்போடலாம் என்று அவர்கள் நினைக்கவில்லை.—அப். 2:41; 9:18; 16:14, 15, 32, 33.

தாமதிக்காதீர்கள்!

9, 10. ஞானஸ்நானம் எடுக்கும் விஷயத்தில் எத்தியோப்பிய மந்திரி மற்றும் சவுலிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

9 அப்போஸ்தலர் 8:35, 36-ஐ வாசியுங்கள். யூத மதத்துக்கு மாறியிருந்த எத்தியோப்பிய மந்திரியின் உதாரணத்தை இப்போது பார்க்கலாம். எருசலேம் ஆலயத்தில் கடவுளை வணங்கிவிட்டுத் தன் ஊருக்குத் திரும்பிப் போய்க்கொண்டிருந்த அவரிடம் பிரசங்கிக்கும்படி யெகோவாவின் தூதர் பிலிப்புவை அனுப்பினார். “இயேசுவைப் பற்றிய நல்ல செய்தியை” பிலிப்பு அந்த மந்திரிக்கு எடுத்துச் சொன்னார். அப்போது அவர் என்ன செய்தார்? இயேசுவை எஜமானாக ஏற்றுக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொண்டார். கிறிஸ்தவர்களிடம் யெகோவா எதை எதிர்பார்த்தாரோ அதைச் செய்ய வேண்டும் என்றும் ஆசைப்பட்டார். அதனால், தாமதிக்காமல் உடனடியாக ஞானஸ்நானம் எடுத்தார்.

10 யூதராக இருந்த சவுலின் உதாரணத்தைப் பார்க்கலாம். யூத தேசம் முழுவதுமே கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருந்தது; இருந்தாலும், யூதர்கள் தனக்குக் கீழ்ப்படியாததால் யெகோவா அவர்களை ஒதுக்கித்தள்ளினார். ஆனால், யூதர்களின் வணக்கத்தை கடவுள் இன்னமும் ஏற்றுக்கொள்கிறார் என்று சவுல் நம்பினார். அதனால், கிறிஸ்தவர்களை அவர் துன்புறுத்தினார். ஒரு நாள், உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு, அதாவது இறந்துபோய்விட்டதாக சவுலால் கருதப்பட்ட இயேசு, பரலோகத்திலிருந்து அவரிடம் பேசினார். அப்போது சவுல் என்ன செய்தார்? கிறிஸ்தவரான அனனியாவின் உதவியைச் சந்தோஷமாக ஏற்றுக்கொண்டார். “அவர் எழுந்துபோய் ஞானஸ்நானம் எடுத்தார்” என்று பைபிள் சொல்கிறது. (அப். 9:17, 18; கலா. 1:14) பிற்பாடு, அவர் அப்போஸ்தலன் பவுல் என்று அறியப்பட்டார். கடவுள் தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்ற இயேசுவைத்தான் பயன்படுத்துகிறார் என்று தெரிந்தவுடனேயே, சவுல் தாமதிக்காமல் ஞானஸ்நானம் எடுத்தார்!அப்போஸ்தலர் 22:12-16-ஐ வாசியுங்கள்.

11. (அ) நம்மோடு சேர்ந்து இன்று பைபிள் படிப்பவர்கள் ஏன் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்? (ஆ) மற்றவர்கள் ஞானஸ்நானம் எடுக்கும்போது நாம் எப்படி உணருகிறோம்?

11 இன்று பைபிள் படிப்பு படிப்பவர்களும் எத்தியோப்பிய மந்திரி மற்றும் சவுலைப் போலத்தான் செய்கிறார்கள். அவர்கள் இளைஞர்களாக இருந்தாலும் சரி, வயதானவர்களாக இருந்தாலும் சரி! ஏனென்றால், பைபிள் சொல்வதை அவர்கள் நேசிக்கிறார்கள், அதை நம்புகிறார்கள்; யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்து, ஞானஸ்நானம் எடுக்க விரும்புகிறார்கள். சொல்லப்போனால், ஒவ்வொரு மாநாட்டிலும், ஞானஸ்நானப் பேச்சு ஒரு விசேஷ அம்சமாக இருக்கிறது. பைபிள் படிப்பு படிப்பவர்கள் சத்தியத்தை ஏற்றுக்கொண்டு, ஞானஸ்நானம் எடுக்கத் தீர்மானிப்பதைப் பார்த்து யெகோவாவின் சாட்சிகள் சந்தோஷப்படுகிறார்கள். தங்களுடைய பிள்ளைகள் ஞானஸ்நானம் எடுப்பதைப் பார்த்து பெற்றோர்கள் ரொம்ப சந்தோஷப்படுகிறார்கள். 2017-ம் ஊழிய ஆண்டில், யெகோவாவுக்குத் தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்திருப்பதைக் காட்டும் விதத்தில், 2,84,000-க்கும் அதிகமானவர்கள் ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள். (அப். 13:48) ஞானஸ்நானம் எடுப்பது முக்கியம் என்பது அவர்களுக்குப் புரிந்திருந்தது! ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே ஒருவர் என்ன செய்ய வேண்டும்?

12. ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு, பைபிள் படிப்பவர் என்ன செய்ய வேண்டும்?

12 கடவுளைப் பற்றிய உண்மைகளை... மனிதர்களையும் இந்தப் பூமியையும் அவர் படைத்ததற்கான காரணத்தை... மனிதகுலத்தைக் காப்பாற்றுவதற்காக அவர் என்ன செய்திருக்கிறார் என்ற விஷயத்தை... ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே அவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். (1 தீ. 2:3-6) பிறகு, விசுவாசத்தை வளர்க்க வேண்டும்; கடவுளுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியவும், அவர் வெறுப்பதைச் செய்யாமல் இருக்கவும் அந்த விசுவாசம் அவர்களுக்கு உதவும். (அப். 3:19) இப்படியெல்லாம் செய்வது ரொம்ப முக்கியம்; ஏனென்றால், தான் வெறுக்கும் காரியங்களைச் செய்கிறவர்களுடைய அர்ப்பணிப்பைக் கடவுள் ஏற்றுக்கொள்ள மாட்டார். (1 கொ. 6:9, 10) வேறு சில விஷயங்களையும் அவர்கள் செய்ய வேண்டும். அதாவது, யெகோவாவுக்குத் தங்களை அர்ப்பணித்திருப்பவர்கள், கூட்டங்களுக்குப் போக வேண்டும். தவறாமல் நல்ல செய்தியைப் பிரசங்கிக்க வேண்டும், மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் வேண்டும். கிறிஸ்துவைப் பின்பற்ற விரும்புகிறவர்களிடமிருந்து இது எதிர்பார்க்கப்படுகிறது! (அப். 1:8) பைபிள் படிப்பு படிப்பவர்கள் கண்டிப்பாக இவற்றையெல்லாம் செய்ய வேண்டும். பிறகு, தன் வாழ்க்கையை யெகோவாவுக்கு அர்ப்பணித்திருப்பதை ஜெபத்தில் சொல்லலாம்; அதன்பின், ஞானஸ்நானம் எடுக்கலாம்.

பைபிள் படிப்பவர் ஞானஸ்நானம் எடுப்பதே உங்கள் குறிக்கோளாக இருக்கட்டும்

பைபிள் படிப்பு எடுக்கும்போது, ஞானஸ்நானம் எடுப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றி சொல்கிறீர்களா? (பாரா 13)

13. மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது, அவர்கள் கிறிஸ்துவின் சீஷராக ஆவதற்கு ஞானஸ்நானம் எடுப்பது முக்கியம் என்பதை நாம் ஏன் ஞாபகம் வைக்க வேண்டும்?

13 நம் பிள்ளைகளும் நம்மோடு பைபிள் படிப்பவர்களும் உண்மையிலேயே இயேசுவின் சீஷராக ஆக வேண்டுமென்றால், அவர்கள் ஞானஸ்நானம் எடுப்பது முக்கியம் என்பதை நாம் ஞாபகம் வைக்க வேண்டும். அப்போதுதான், யெகோவாவுக்கு அர்ப்பணிப்பதும் ஞானஸ்நானம் எடுப்பதும் எந்தளவு முக்கியம் என்பதை, சரியான சமயத்தில் அவர்களிடம் சொல்ல நாம் தயங்க மாட்டோம். நம் பிள்ளைகளும், நம்மோடு பைபிள் படிப்பவர்களும் தொடர்ந்து முன்னேற்றம் செய்ய வேண்டுமென்றும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமென்றுதானே நாம் ஆசைப்படுகிறோம்!

14. ஞானஸ்நானம் எடுக்கச் சொல்லி ஏன் நாம் யாரையும் கட்டாயப்படுத்தக் கூடாது?

14 நம் பிள்ளைகளையோ நம்மோடு பைபிள் படிப்பவர்களையோ ஞானஸ்நானம் எடுக்கச் சொல்லி நாம் கட்டாயப்படுத்தக் கூடாது. ஏனென்றால், தனக்கு சேவை செய்யும்படி யெகோவா யாரையும் கட்டாயப்படுத்துவதில்லை. (1 யோ. 4:8) மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுக்கும்போது, யெகோவாவுடன் நல்ல பந்தத்தை வளர்த்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதை அவர்கள் புரிந்துகொள்ள நாம் உதவ வேண்டும். சத்தியத்தைத் தெரிந்துகொண்டதற்காக அவர்கள் நன்றியோடு இருக்கும்போது... உண்மைக் கிறிஸ்தவர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படுகிற எல்லா விஷயங்களையும் செய்ய உண்மையிலேயே விரும்பும்போது... அவர்களாகவே ஞானஸ்நானம் எடுப்பார்கள்.—2 கொ. 5:14, 15.

15, 16. (அ) ஞானஸ்நானம் எடுப்பதற்கு வயது வரம்பு இருக்கிறதா? விளக்கவும். (ஆ) வேறு மதத்தில் ஞானஸ்நானம் எடுத்திருந்தாலும், யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு ஒருவர் ஏன் மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்?

15 ஞானஸ்நானம் எடுப்பதற்கு வயது வரம்பு கிடையாது. ஏனென்றால், ஒவ்வொருவரும் வித்தியாசப்பட்டவர்கள். சிலர் மற்றவர்களைவிட சீக்கிரமாக முன்னேற்றம் செய்கிறார்கள். நிறைய பேர், இளவயதிலேயே ஞானஸ்நானம் எடுக்கிறார்கள்; வயதாகியும் யெகோவாவுக்கு உண்மையோடு நிலைத்திருக்கிறார்கள். மற்றவர்களுக்கு ரொம்ப வயதான காலத்தில்தான் சத்தியம் கிடைக்கிறது; அதற்குப் பிறகுதான் அவர்கள் ஞானஸ்நானம் எடுக்கிறார்கள். 100 வயதைத் தாண்டியவர்கள்கூட ஞானஸ்நானம் எடுத்திருக்கிறார்கள்!

16 யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படித்த பெண்மணி ஒருவர், ஏற்கெனவே நிறைய மதங்களில் ஞானஸ்நானம் எடுத்திருந்தார். அதனால், மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டுமா என்று தனக்கு படிப்பு நடத்தியவரிடம் கேட்டார். படிப்பு நடத்தியவர், அவருடைய கேள்விக்கு பைபிளிலிருந்து பதில் சொன்னார். கடவுள் என்ன எதிர்பார்க்கிறார் என்பதைப் புரிந்துகொண்டவுடன், அவர் ஞானஸ்நானம் எடுத்தார்; அப்போது அவருக்குக் கிட்டத்தட்ட 80 வயது! இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? யெகோவாவுடைய விருப்பத்தைப் பற்றிய திருத்தமான அறிவைத் தெரிந்துகொண்ட பிறகு எடுக்கும் ஞானஸ்நானத்தைத்தான் அவர் ஏற்றுக்கொள்வார். ஒருவேளை, வேறு மதத்தில் இருந்தபோது நாம் ஞானஸ்நானம் எடுத்திருக்கலாம். ஆனால், யெகோவாவின் சாட்சியாக ஆவதற்கு, நாம் மறுபடியும் ஞானஸ்நானம் எடுக்க வேண்டும்.அப்போஸ்தலர் 19:3-5-ஐ வாசியுங்கள்.

17. ஞானஸ்நானம் எடுக்கும் நாளில், ஒருவர் எதைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும்?

17 ஞானஸ்நானம் எடுக்கும் அந்த நாள், ரொம்ப ரொம்ப சந்தோஷமான நாள்! ஆனால் அந்த நாள், அர்ப்பணிப்பதிலும் ஞானஸ்நானம் எடுப்பதிலும் என்னவெல்லாம் அடங்கியிருக்கின்றன என்பதை நினைத்துப் பார்க்க வேண்டிய நாளும்கூட! உண்மைக் கிறிஸ்தவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிற காரியங்களைச் செய்வதற்கு கடின உழைப்பு தேவை. இயேசுவின் சீஷர்கள், ‘இனி தங்களுக்காக வாழாமல் தங்களுக்காக இறந்து உயிரோடு எழுப்பப்பட்டவருக்காகவே வாழ வேண்டும்.’—2 கொ. 5:15; மத். 16:24.

18. அடுத்த கட்டுரையில் நாம் எதைப் பற்றி பார்ப்போம்?

18 உண்மைக் கிறிஸ்தவராக ஆக வேண்டுமென்ற தீர்மானம், மிக முக்கியமான ஒரு தீர்மானம் என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்துகொண்டோம். அதனால்தான், ஆரம்பத்தில் சொல்லப்பட்ட மரியாவுடைய அம்மாவின் மனதில் சில கேள்விகள் ஓடின. உங்களுக்குப் பிள்ளைகள் இருக்கிறார்களா? அப்படியென்றால், ஒருவேளை உங்கள் மனதிலும் இந்தக் கேள்விகள் ஓடிக்கொண்டிருக்கலாம்: ‘என் பிள்ளை ஞானஸ்நானம் எடுக்குற அளவுக்கு முன்னேற்றம் செஞ்சிருக்கானா? யெகோவாவுக்கு அர்ப்பணிக்கிற அளவுக்கு அவர பத்தி தெரிஞ்சு வைச்சிருக்கானா? நல்லா படிச்சு, ஒரு வேலைக்கு போனதுக்கு அப்புறம்தான் என் பிள்ளை ஞானஸ்நானம் எடுக்கணுமா? ஞானஸ்நானம் எடுத்ததுக்கு அப்புறம் என் பிள்ளை பெரிசா ஏதாவது தப்பு பண்ணிட்டா என்ன செய்றது?’ இவற்றைப் பற்றி அடுத்த கட்டுரையில் பார்க்கலாம். அதோடு, ஞானஸ்நானத்தைப் பற்றிய சரியான எண்ணத்தை பெற்றோர்கள் எப்படி வளர்த்துக்கொள்ளலாம் என்றும் பார்க்கலாம்.