Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

வாழ்க்கை சரிதை

யெகோவா என்னைக் கைவிட்டதே இல்லை!

யெகோவா என்னைக் கைவிட்டதே இல்லை!

ஒரு தடவை அடால்ஃப் ஹிட்லர் பேச்சு கொடுத்துக்கொண்­டிருந்தார். பேச்சு முடிந்ததும், அவருக்கு பூ கொடுப்பதற்காக நிறுத்தப்பட்டிருந்த நான்கு சிறுமிகளில் நானும் ஒருத்தி. என் அப்பாவுக்கு நாஸி அமைப்பில் ரொம்பவே ஈடுபாடு இருந்தது. அதன் உள்ளூர் தலைவருக்கு அவர் கார் ஓட்டுனராக இருந்தார். என் அம்மா, கத்தோலிக்க மதத்தின் தீவிர பக்தை! நான் கன்னியாஸ்திரீயாக ஆக வேண்டுமென்று அம்மா ஆசைப்பட்டார். இவர்கள் இரண்டு பேருமே இப்படியிருந்தாலும், நான் நாஸி அமைப்பிலும் சேரவில்லை, கன்னியாஸ்திரீயாகவும் ஆகவில்லை. ஏன்? சொல்கிறேன், கேளுங்கள்.

ஆஸ்திரியாவில் இருக்கிற கிராஸ் என்ற ஊரில் நான் வளர்ந்தேன். எனக்கு ஏழு வயது இருந்தபோது மதத்தைப் பற்றி போதிக்கும் ஒரு பள்ளிக்கு அனுப்பப்பட்டேன். ஆனால், குருமார்களும் கன்னியாஸ்திரீகளும் ஒழுக்கக்கேடாக நடந்துகொண்டதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். அதனால், ஒரே வருஷத்துக்குள் பள்ளியை விட்டு வெளியேறினேன்; அம்மாவும் அதற்கு சம்மதித்தார்.

ராணுவ சீருடையில் இருக்கும் என் அப்பாவோடு எங்கள் குடும்பம்

பிற்பாடு, விடுதியில் தங்கி படிக்கும் ஒரு பள்ளியில் சேர்ந்தேன். ஆனால், கிராஸில் கடுமையான வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால், என்னை கூட்டிக்கொண்டு போக ஒரு நாள் ராத்திரி அப்பா வந்தார். நாங்கள் ஸ்லாட்மின் என்ற ஊரில் தஞ்சம் புகுந்தோம். நாங்கள் ஒரு பாலத்தைத் தாண்டிய உடனே, அது வெடித்துத் தகர்க்கப்பட்டது! இன்னொரு தடவை, தாழ்வாக பறந்துகொண்டிருந்த ஒரு போர் விமானம், என் பாட்டியையும் என்னையும் நோக்கி சுட்டது. போருக்குப் பிறகு, சர்ச்சும் அரசாங்கமும் எங்களைக் கைவிட்டுவிட்டது போல் நாங்கள் உணர்ந்தோம்.

கடவுளைப் பற்றி தெரிந்துகொண்டேன்

1950-ல், ஒரு யெகோவாவின் சாட்சி, அம்மாவிடம் சத்தியத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். அவர்கள் பேசிக்கொள்வதை நான் கவனிப்பேன்; சிலசமயங்களில் அம்மாவோடு கூட்டங்களுக்கும் போவேன். யெகோவாவின் சாட்சிகளிடம் சத்தியம் இருக்கிறது என்ற நம்பிக்கை வந்தவுடன், 1952-ல் அம்மா ஞானஸ்நானம் எடுத்தார்.

எங்கள் ஊரிலிருந்த யெகோவாவின் சாட்சிகளின் சபை, வயதான பெண்களடங்கிய ‘லேடீஸ் க்ளப்’ மாதிரி இருந்தது. பிற்பாடு, வேறொரு சபைக்குப் போனோம். அந்தச் சபையில் நிறைய இளைஞர்கள் இருந்தார்கள். நான் கிராஸில் இருந்தபோது, எல்லா கூட்டங்களுக்கும் போக ஆரம்பித்தேன். நான் கற்றுக்கொண்டிருந்தது சத்தியம்தான் என்பது சீக்கிரத்தில் புரிந்தது. யெகோவா, தன்னுடைய ஊழியர்களுக்கு பக்கபலமாக இருக்கிறார் என்பதையும் தெரிந்துகொண்டேன். அதுவும், ரொம்ப கஷ்டமான சூழ்நிலைகளில் நாம் தனியாகப் போராடும்போது, அவர் நமக்குப் பக்கபலமாக இருப்பார்.—சங். 3:5, 6.

சத்தியத்தை மற்றவர்களுக்கும் சொல்ல ஆசைப்பட்டேன். முதலில், என்கூடப் பிறந்தவர்களுக்கு சொன்னேன். என் நான்கு அக்காக்களும் ஏற்கெனவே வெவ்வேறு கிராமங்களில் தங்கி பள்ளி ஆசிரியைகளாக வேலை செய்துகொண்டிருந்தார்கள். நான் அவர்களைப் போய்ப் பார்த்து, பைபிள் படிக்கும்படி சொன்னேன். கடைசியில், என்கூடப் பிறந்த எல்லாருமே பைபிளைப் படித்தார்கள், யெகோவாவின் சாட்சிகளாகவும் ஆனார்கள்.

நான் வீட்டுக்கு வீடு ஊழியத்தை ஆரம்பித்த இரண்டாவது வாரம், 30 வயதைத் தாண்டிய ஒரு பெண்ணுக்கு பைபிள் படிப்பை ஆரம்பித்தேன். முதலில் அவரும், பிற்பாடு அவருடைய கணவரும் இரண்டு மகன்களும் ஞானஸ்நானம் எடுக்குமளவுக்கு முன்னேறினார்கள். அவர்களுக்குப் பைபிள் படிப்பு நடத்தியதால் என் விசுவாசம் பலப்பட்டது. எப்படியென்றால், எனக்கு யாரும் முறையாக பைபிள் படிப்பு நடத்தாததால், அந்தப் பெண்ணுக்கு பைபிள் படிப்பு நடத்துவதற்கு ஒவ்வொரு அதிகாரத்தையும் நன்றாகத் தயாரிக்க வேண்டியிருந்தது. அதாவது, முதலில் எனக்கு நானே கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது; பிறகு, அவருக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது. இப்படிச் செய்தது சத்தியத்தை இன்னும் அதிகமாக மதிக்க உதவியது. யெகோவாவுக்கு என்னை அர்ப்பணித்திருந்ததை, ஏப்ரல் 1954-ல் தண்ணீர் ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் காட்டினேன்.

‘கொடுமைப்படுத்தப்பட்டும் கைவிடப்படவில்லை’

1955-ல், ஜெர்மனி, பிரான்சு மற்றும் இங்கிலாந்தில் நடந்த சர்வதேச மாநாடுகளில் கலந்துகொண்டேன். லண்டனில் இருந்தபோது, சகோதரர் ஆல்பர்ட் ஷ்ரோடரைச் சந்தித்தேன். அவர் கிலியட் பள்ளியின் போதகராக இருந்தார்; பிற்பாடு, ஆளும் குழு அங்கத்தினராக ஆனார். ஒரு தடவை பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்குப் போயிருந்தபோது, அங்கிருந்த சில பைபிள் கையெழுத்துப் பிரதிகளை எங்களுக்குக் காட்டினார். அதில் கடவுளுடைய பெயர் எபிரெய எழுத்துகளில் இருந்தது. அதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் விளக்கினார். அது என் மனதைத் தொட்டது; யெகோவாவையும் சத்தியத்தையும் இன்னும் அதிகமாக நேசிக்க உதவியது. பைபிளில் இருக்கிற சத்தியத்தை இன்னும் நிறைய பேருக்குச் சொல்ல நான் முடிவு செய்தேன்.

ஆஸ்திரியாவில் இருக்கிற மிஸ்டல்பாக்கில் விசேஷ பயனியராக சேவை செய்தபோது, என் பார்ட்னரோடு (வலது)

ஜனவரி 1, 1956-ல் முழு நேர பயனியர் சேவையை ஆரம்பித்தேன். நான்கு மாதங்களுக்குப் பிறகு, ஆஸ்திரியாவில் விசேஷ பயனியராக நியமிக்கப்பட்டேன். நான் நியமிக்கப்பட்ட மிஸ்டல்பாக் ஊரில் அப்போது ஒரு யெகோவாவின் சாட்சிகூட கிடையாது. என் நியமிப்பில் எனக்கு ஒரு சவால் இருந்தது. அதாவது, எனக்கும் என் பார்ட்னருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருந்தன. உதாரணத்துக்கு, எனக்குக் கிட்டத்தட்ட 19 வயது, அந்தச் சகோதரிக்கு 25 வயது. நான் நகரத்தில் வளர்ந்தவள், அவர் கிராமத்தில் வளர்ந்தவர். காலையில் ரொம்ப நேரம் தூங்குவது எனக்குப் பிடிக்கும், ஆனால் அவர் சீக்கிரமே எழுந்துவிடுவார். ராத்திரியில் ரொம்ப நேரம் விழித்திருப்பது எனக்குப் பிடிக்கும், அவருக்கோ சீக்கிரம் தூங்குவதுதான் பிடிக்கும். இருந்தாலும், பைபிள் அறிவுரைகளின்படி நடந்ததால், எங்களால் ஒன்று சேர்ந்து சந்தோஷமாகவும் வெற்றிகரமாகவும் பயனியர் ஊழியம் செய்ய முடிந்தது.

ஆனால், இதைவிட பெரிய சவால்களும் இருந்தன. நாங்கள் துன்புறுத்தலை அனுபவித்தோம், ஆனாலும் ‘கைவிடப்படவில்லை.’ (2 கொ. 4:7-9) ஒரு ஒதுக்குப்புறமான கிராமத்தில் ஊழியம் செய்தபோது, அங்கிருந்த ஜனங்கள் நாய்களை அவிழ்த்துவிட்டுவிட்டார்கள். பெரிய பெரிய நாய்கள் குரைத்துக்கொண்டே என்னையும் என் பார்ட்னரையும் சுற்றிவளைத்துக்கொண்டன; பல்லைக் காட்டிக்கொண்டு வெறியோடு எங்களுக்குப் பக்கத்தில் வந்தன. நாங்கள் ஒருவர் கையை ஒருவர் இறுக்கமாகப் பிடித்துக்கொண்டோம். நான் சத்தமாக, “யெகோவா அப்பா, நாய்ங்க எங்களை கடிச்சுதுனா, நாங்க சீக்கிரமே செத்துடணும்” என்று ஜெபம்கூட செய்ய ஆரம்பித்துவிட்டேன். அவை எங்களை நெருங்கின. ஆனால், திடீரென்று அப்படியே நின்றன. பிறகு, வாலை ஆட்டிக்கொண்டே போய்விட்டன. யெகோவாதான் எங்களைக் காப்பாற்றினார் என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதற்குப் பிறகு, அந்தக் கிராமம் முழுவதும் ஊழியம் செய்தோம். ஜனங்கள் காதுகொடுத்துக் கேட்டது எங்களுக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. நாய்கள் எங்களைக் கடிக்காமல் இருந்ததை நினைத்து அவர்கள் ஆச்சரியப்பட்டிருக்கலாம். அல்லது அந்த ஆபத்தான சூழ்நிலைக்குப் பிறகும் நாங்கள் தொடர்ந்து ஊழியம் செய்ததை அவர்கள் நினைத்துப் பார்த்திருக்கலாம். காலப்போக்கில், சிலர் யெகோவாவின் சாட்சிகளாக ஆனார்கள்.

இன்னொரு பயங்கரமான சம்பவம் நடந்தது. ஒரு தடவை எங்கள் வீட்டின் உரிமையாளர் நன்றாகக் குடித்துவிட்டு வந்தார். பக்கத்து வீட்டுக்காரர்களை நாங்கள் தொந்தரவு செய்வதாகச் சொல்லி, எங்களைக் கொல்லப்போவதாக அவருடைய மனைவியிடம் சொல்லிக்கொண்டிருந்தார். அவருடைய மனைவி அவரை சாந்தப்படுத்த முயற்சி செய்தும், அவர் கேட்கவில்லை. முதல் மாடியிலிருந்த எங்கள் அறையிலிருந்து இதையெல்லாம் நாங்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். உடனே, கதவையொட்டி சேர்களைப் போட்டு, நன்றாக அதைச் சாத்தினோம். பிறகு, துணிமணிகளையும் பொருள்களையும் அவசர அவசரமாக எடுத்துவைத்தோம். கதவைத் திறந்து பார்த்தபோது, அந்த வீட்டின் உரிமையாளர் மாடியின் மேல்படியில் பெரிய கத்தியோடு நின்றுகொண்டிருந்தார்! உடனே, பின்கதவு வழியாக எங்கள் பொருள்களை எடுத்துக்கொண்டு, அங்கிருந்த பெரிய தோட்டத்துக்குள் புகுந்தோம். இனிமேல் இந்த வீட்டுப் பக்கமே வரக் கூடாது என்று நினைத்துக்கொண்டு தப்பித்து ஓடினோம்.

ஒரு ஹோட்டலுக்குப் போய், எங்களுக்கு ஒரு ரூம் வேண்டுமென்று கேட்டோம். கிட்டத்தட்ட அங்கே ஒரு வருஷம் தங்கினோம். அங்கே தங்கியது, ரொம்ப பிரயோஜனமாக இருந்தது. ஏனென்றால், ஊருக்கு நடுவில் அந்த ஹோட்டல் இருந்ததால், எங்கள் பைபிள் மாணாக்கர்களில் சிலர், அங்கே வந்து பைபிள் படிக்க ஆசைப்பட்டார்கள். சீக்கிரத்தில், எங்கள் அறையிலேயே சபை பைபிள் படிப்பையும், காவற்கோபுர படிப்பையும் ஆரம்பித்தோம். கிட்டத்தட்ட 15 பேர் கலந்துகொண்டார்கள்.

மிஸ்டல்பாக்கில் ஒரு வருஷத்துக்கும்மேல் இருந்தோம். பிறகு, கிராஸூக்கு தென்கிழக்கில் இருக்கிற ஃபெல்ட்பாக் என்ற ஊருக்கு நியமிக்கப்பட்டேன். ஒரு சகோதரி எனக்கு புதிய பயனியர் பார்ட்னராகக் கிடைத்தார். அந்த ஊரிலும் சபைகள் இல்லை. மரத்தாலான ஒரு வீட்டின் இரண்டாவது மாடியிலிருந்த ஒரு சின்ன அறையில் தங்கினோம். அந்த மரச் சட்டங்களின் இடைவெளியில் காற்று வீசியதால், சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும். அதனால், செய்தித்தாள்களை வைத்து இடைவெளிகளை அடைத்தோம். அதோடு, கிணற்றிலிருந்து தண்ணீர் இறைக்க வேண்டியிருந்தது. ஆனால், இப்படிக் கஷ்டப்பட்டதெல்லாம் வீண்போகவில்லை! ஏனென்றால், சில மாதங்களுக்குள் அங்கே ஒரு தொகுதி உருவானது. காலப்போக்கில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த கிட்டத்தட்ட 30 பேர் சத்தியத்துக்கு வந்தார்கள்.

கடவுளுடைய அரசாங்கம் சம்பந்தப்பட்ட வேலைகளை முதலிடத்தில் வைப்பவர்களை யெகோவா ஒருபோதும் கைவிட மாட்டார் என்பதில் எனக்கு இருந்த நம்பிக்கையை இதுபோன்ற அனுபவங்கள் பலப்படுத்தின. நமக்கு யாருமே உதவ முடியவில்லை என்றாலும், யெகோவா எப்போதுமே நம் பக்கத்தில் இருக்கிறார்.—சங். 121:1-3.

“நீதியான வலது கையால்” கடவுள் என்னைத் தாங்கினார்

1958-ல், நியு யார்க் நகரத்திலிருந்த ‘யாங்க்கி ஸ்டேடியத்திலும்’ ‘போலோ க்ரவுண்ட்ஸிலும்’ சர்வதேச மாநாடு நடக்கவிருந்தது. அதற்குப் போவதற்கு நான் விண்ணப்பித்தேன். அப்போது, 32-வது கிலியட் பள்ளியில் கலந்துகொள்ள எனக்கு விருப்பம் இருக்கிறதா என்று ஆஸ்திரியா கிளை அலுவலகம் என்னைக் கேட்டது. அந்த அருமையான பாக்கியத்தை எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்? உடனே ஒத்துக்கொண்டேன்!

கிலியட் பள்ளியில், சகோதரர் மார்ட்டின் பொயட்ஸிங்கரின் இருக்கைக்கு அடுத்ததாகத்தான் என் இருக்கை இருந்தது. நாஸி சித்திரவதை முகாம்களில் அவர் பயங்கர கஷ்டங்களை அனுபவித்திருந்தார். அவரும் பிற்பாடு ஆளும் குழு அங்கத்தினராக ஆனார். வகுப்பு நடந்துகொண்டிருக்கும்போது, சிலசமயங்களில், “எரிக்கா, இதுக்கு ஜெர்மன் மொழியில என்ன அர்த்தம்?” என்று கிசுகிசுப்பார்.

பள்ளியின் பாதி காலம் முடிந்திருந்த சமயத்தில், சகோதரர் நேதன் நார் எங்கள் நியமிப்புகளை அறிவித்தார். பராகுவே நாட்டுக்கு நான் நியமிக்கப்பட்டேன். அப்போது நான் சின்னப் பெண்ணாக இருந்ததால், அங்கே போவதற்கு அப்பாவின் அனுமதி தேவைப்பட்டது. அனுமதி கிடைத்தவுடனே, மார்ச் 1959-ல் பராகுவேயில் காலடி எடுத்து வைத்தேன். அஸன்ஷியன் என்ற நகரத்திலிருந்த மிஷனரி இல்லத்தில் தங்கும்படி சொன்னார்கள். அங்கே எனக்கு ஒரு சகோதரி புதிய பயனியர் பார்ட்னராகக் கிடைத்தார்.

சீக்கிரத்திலேயே 30 வது கிலியட் பள்ளியில் பட்டம் பெற்ற வால்ட்டர் ப்ரைட்டைச் சந்தித்தேன். கொஞ்சக் காலத்தில், நாங்கள் கல்யாணம் செய்துகொண்டோம்; எங்கள் வாழ்க்கையில் வந்த சவால்களை ஒன்றாகச் சேர்ந்து சமாளிக்க முடிந்தது. கஷ்டங்கள் வந்தபோதெல்லாம், “பயப்படாதே, நான் உன்னோடு இருக்கிறேன். கவலைப்படாதே, நான் உன் கடவுள். நான் உன்னைப் பலப்படுத்துவேன்” என்று ஏசாயா 41:10-ல் யெகோவா கொடுத்திருக்கிற வாக்குறுதியைப் படிப்போம். கடவுளுக்கு உண்மையாக இருப்பதற்கு முயற்சி எடுக்கும்போதும், கடவுளுடைய அரசாங்கத்தை முதலிடத்தில் வைக்கும்போதும், அவர் நம்மைக் கைவிடவே மாட்டார் என்ற உறுதியை அந்த வாக்குறுதி எங்களுக்குத் தந்தது.

கொஞ்சக் காலத்தில், பிரேசிலின் எல்லைக்குப் பக்கத்தில் நியமிக்கப்பட்டோம். அங்கிருந்த குருமார்கள், இளைஞர்களைவிட்டு எங்கள் மிஷனரி இல்லத்தின்மேல் கல்லெறிந்தார்கள். ஏற்கெனவே அந்த வீடு மோசமான நிலையில்தான் இருந்தது. காவல்துறை தலைமை அதிகாரி ஒருவருக்கு வால்ட்டர் பைபிள் படிப்பு ஆரம்பித்தார். அந்த அதிகாரி, ஒரு வாரத்துக்கு போலீஸ்காரர்களை எங்கள் வீட்டுக்குப் பக்கத்தில் காவலுக்கு நிற்க வைத்தார். அதற்குப் பிறகு, எதிரிகள் எந்தத் தொந்தரவும் கொடுக்கவில்லை. சீக்கிரத்திலேயே, பிரேசில் எல்லைக்கு அந்தப் பக்கத்தில் ஒரு நல்ல வீடு கிடைத்தது. அங்கே போனதால் நல்ல பலன்கள் கிடைத்தன. பிரேசிலிலும், பராகுவேயிலும் கூட்டங்களை நடத்த முடிந்தது. நாங்கள் அந்த நியமிப்பிலிருந்து போகும் சமயத்தில், அங்கே இரண்டு சிறிய சபைகள் உருவாகியிருந்தன.

பராகுவேயில் இருக்கிற அஸன்ஷியனில் மிஷனரிகளாக சேவை செய்தபோது, என் கணவரோடு

தொடர்ந்து யெகோவா என்னைத் தாங்குகிறார்

எனக்குக் குழந்தை பிறக்காது என்று என்னுடைய டாக்டர்கள் சொல்லியிருந்தார்கள். ஆனால், நான் அம்மாவாகப் போகிறேன் என்று 1962-ல் தெரிந்தபோது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. பிறகு, நாங்கள் ஃப்ளோரிடாவில் இருக்கிற ஹாலிவுட்டில், வால்ட்டரின் குடும்பத்துக்குப் பக்கத்திலேயே குடிமாறினோம். குடும்பத்தை நாங்கள் கவனித்துக்கொள்ள வேண்டியிருந்ததால், பல வருஷங்களாக எங்கள் இரண்டு பேராலும் பயனியர் செய்ய முடியவில்லை. இருந்தாலும், கடவுளுடைய அரசாங்கத்தை வாழ்க்கையில் முதலிடத்தில் வைத்தோம்.—மத். 6:33.

நவம்பர் 1962-ல் ஃப்ளோரிடாவுக்கு போய்ச்சேர்ந்தபோது, நாங்கள் பார்த்த ஒரு விஷயம் ஆச்சரியமாக இருந்தது. அதாவது, கருப்பு இனத்தைச் சேர்ந்த சகோதரர்களும் வெள்ளை இனத்தைச் சேர்ந்த சகோதரர்களும் ஒன்றாகக்கூடி வருவது உள்ளூர் ஜனங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால், அவர்கள் தனித்தனியாக கூட்டங்களை நடத்த வேண்டியிருந்தது; தனித்தனி பகுதிகளில் ஊழியம் செய்ய வேண்டியிருந்தது. ஆனால், யெகோவாவுக்கு எந்த இனப் பாகுபாடும் இல்லை! சீக்கிரத்திலேயே நிலைமை மாறியது. இனப் பாகுபாடு பிரச்சினை தீர்ந்தது; எல்லாரும் ஒன்றாகக் கூட்டங்களில் கலந்துகொண்டார்கள். இந்த விஷயத்தில் யெகோவாவின் தலையீடு இருந்தது தெளிவாகத் தெரிந்தது. இப்போது, அங்கே நிறைய சபைகள் இருக்கின்றன.

2015-ல், மூளை புற்றுநோயால் வால்ட்டர் இறந்தது வேதனையான ஒரு விஷயம். 55 வருஷங்களாக அவர் என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார். யெகோவாவை ரொம்ப நேசித்தார், நிறைய சகோதர சகோதரிகளுக்கு உதவியிருக்கிறார். பூரண ஆரோக்கியத்தோடு மறுபடியும் அவர் உயிரோடு வரும் நாளுக்காக நான் காத்திருக்கிறேன்.—அப். 24:15.

40 வருஷத்துக்கும்மேல் முழுநேர சேவை செய்வதற்குக் கிடைத்த பாக்கியத்துக்காக நன்றியோடு இருக்கிறேன். இந்தச் சேவையில் அளவில்லாத சந்தோஷமும், ஏராளமான ஆசீர்வாதங்களும் கிடைத்திருக்கின்றன. உதாரணத்துக்கு, 136 பேர் ஞானஸ்நானம் எடுக்க வால்ட்டரும் நானும் உதவியிருக்கிறோம். வாழ்க்கையில் கஷ்டங்களும் இருந்தன. ஆனால், அவற்றையெல்லாம் ஒரு சாக்காக வைத்துக்கொண்டு, உண்மையுள்ள நம் கடவுளுக்கு சேவை செய்வதிலிருந்து நாங்கள் பின்வாங்கவில்லை. இன்னும் அவரிடம் நெருங்கிப் போனோம், தன்னுடைய நேரத்திலும் தன்னுடைய வழியிலும் யெகோவா பிரச்சினைகளைச் சரி செய்வார் என்று நம்பினோம். நாங்கள் நம்பியபடியே அவர் சரி செய்தார்.—2 தீ. 4:16, 17.

வால்ட்டர் என்னோடு இல்லை என்பதை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. ஆனால், பயனியர் சேவை எனக்கு உதவுகிறது. முக்கியமாக மற்றவர்களுக்குக் கற்றுக்கொடுப்பது, அதுவும் உயிர்த்தெழுதலைப் பற்றி கற்றுக்கொடுப்பது, எனக்குப் பிரயோஜனமாக இருக்கிறது. ஏராளமான சந்தர்ப்பங்களில் யெகோவா எனக்கு உதவியிருக்கிறார். அவற்றையெல்லாம் சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அவர் என்னைக் கைவிட்டதே இல்லை. அவர் கொடுத்த வாக்குறுதியின்படி, அவர் எனக்கு ஆதரவாக இருந்தார், என்னை பலப்படுத்தினார், அவருடைய “நீதியான வலது கையால்” என்னைத் தாங்கிப் பிடித்தார்.—ஏசா. 41:10.