Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

நல்மனம்—அதை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

நல்மனம்—அதை எப்படி வளர்த்துக்கொள்ளலாம்?

நாம் நல்லவர்கள் என்று மற்றவர்கள் நினைக்க வேண்டும் என்றுதான் நாம் ஆசைப்படுகிறோம். ஆனால், நல்லவர்களாக இருப்பது இன்று ரொம்பவே கஷ்டம். ஏனென்றால், நிறைய பேர் இன்று ‘நல்ல காரியங்களை விரும்புவதில்லை.’ (2 தீ. 3:3) யெகோவாவுடைய தராதரங்களை இவர்கள் ஒதுக்கித்தள்ளுகிறார்கள். யெகோவா எதை நல்லது என்று சொல்கிறாரோ, அதை “கெட்டது” என்று சொல்கிறார்கள்; அவர் எதைக் கெட்டது என்று சொல்கிறாரோ, அதை “நல்லது” என்று சொல்கிறார்கள். (ஏசா. 5:20) அதோடு, நம்முடைய கடந்த கால வாழ்க்கையும் பாவ இயல்பும் நாம் நல்லவர்களாக இருப்பதற்குத் தடையாக இருக்கின்றன. இப்போது, ஒரு சகோதரியின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவருடைய பெயர் ஆன். * (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) அவர் யெகோவாவுக்குப் பல வருஷங்களாகச் சேவை செய்துவந்தாலும், “நான் நல்லவனு நம்புறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு” என்று சொல்கிறார். ஒருவேளை, நாமும் இவரைப் போலவே உணரலாம்.

சந்தோஷமான விஷயம் என்னவென்றால், எல்லாராலும் நல்மனதை வளர்த்துக்கொள்ள முடியும்! இந்தக் குணம், கடவுளுடைய சக்தியால் உண்டாகிறது. இந்த உலகமும் நம்மைச் சுற்றியிருக்கிற மக்களும் நம்மேல் ஏற்படுத்துகிற தாக்கத்தைவிட அல்லது நம்முடைய பலவீனங்களைவிட கடவுளுடைய சக்தி வல்லமையுள்ளது. நல்மனம் என்றால் என்ன என்பதைப் பற்றியும், இதை எப்படி முழுமையாகக் காட்டலாம் என்பதைப் பற்றியும் இப்போது பார்க்கலாம்.

நல்மனம் என்றால் என்ன?

சுருக்கமாகச் சொன்னால், நல்மனம் என்பது நல்லவர்களாக இருப்பதைக் குறிக்கிறது. உயர்ந்த ஒழுக்க நெறிகளோடு இருப்பதையும், எந்த விதமான கெட்ட குணங்களும் இல்லாமல் இருப்பதையும் குறிக்கிறது. நல்லவராக இருக்கிற ஒருவர், மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உதவலாம் என்பதைப் பற்றியே யோசிப்பார்; அதைச் செயலிலும் காட்டுவார்.

சிலர் தங்களுடைய குடும்பத்துக்கும் நண்பர்களுக்கும் நல்ல விஷயங்களைச் செய்வதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். ஆனால், யெகோவாவுடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதற்கு அது மட்டுமே போதுமா? எல்லா சமயங்களிலும் நம்மால் நல்லவர்களாக இருக்க முடிவதில்லை என்பது உண்மைதான். ஏனென்றால், “பாவமே செய்யாமல் நல்லதே செய்கிற நீதிமான் இந்தப் பூமியில் ஒருவன்கூட இல்லை” என்று பைபிள் சொல்கிறது. (பிர. 7:20) அப்போஸ்தலன் பவுலும், “என்னிடத்தில், அதாவது என் பாவ உடலில், நல்லது எதுவும் இல்லையென்று எனக்குத் தெரியும்” என்று ஒத்துக்கொண்டார். (ரோ. 7:18) இதிலிருந்து என்ன தெரிகிறது? நாம் நல்லவர்களாக இருப்பதற்கு, நல்லவரான யெகோவாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.

யெகோவா நல்லவர்

எது நல்லது என்பதற்கான தராதரத்தை யெகோவாதான் முடிவு செய்கிறார். “நீங்கள் நல்லவர், உங்கள் செயல்களெல்லாம் நல்லவை. உங்கள் விதிமுறைகளை எனக்குக் கற்றுக்கொடுங்கள்” என்று அவரைப் பற்றி பைபிள் சொல்கிறது. (சங். 119:68) யெகோவாவின் நல்மனதை விளக்குகிற இரண்டு விஷயங்கள் இந்த வசனத்தில் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இப்போது பார்க்கலாம்.

யெகோவா நல்லவர். யெகோவா எந்தளவுக்கு நல்லவர்? நல்லவராக இல்லாமல் அவரால் இருக்கவே முடியாது! அவருடைய மற்ற குணங்கள் நல்மனதோடு சம்பந்தப்பட்டிருக்கின்றன. “நான் உன் முன்னால் கடந்துபோவேன். அப்போது, நான் எவ்வளவு நல்லவர் என்று நீ பார்ப்பாய்” என்று மோசேயிடம் யெகோவா சொன்னபோது என்ன நடந்தது என்று கவனியுங்கள். நல்மனம் உட்பட யெகோவாவின் மகிமை கடந்துபோனபோது, இப்படிச் சொல்லப்படுவதை மோசே கேட்டார்: “யெகோவா, யெகோவா, இரக்கமும் கரிசனையும் உள்ள கடவுள், சீக்கிரத்தில் கோபப்படாதவர், மாறாத அன்பை அளவில்லாமல் காட்டுபவர், உண்மையுள்ளவர், ஆயிரமாயிரம் தலைமுறைகளுக்கு மாறாத அன்பைக் காட்டுபவர், குற்றத்தையும் மீறுதலையும் பாவத்தையும் மன்னிப்பவர். ஆனால், குற்றவாளியை அவர் ஒருபோதும் தண்டிக்காமல் விடமாட்டார். தகப்பன்கள் செய்த குற்றத்துக்காக அவர்களுடைய மகன்களையும் பேரன்களையும் மூன்றாம் நான்காம் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களையும் தண்டிப்பார்.” (யாத். 33:19; 34:6, 7) யெகோவா எல்லா விதங்களிலும் நல்லவராக இருக்கிறார் என்பது இதிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. இயேசுவைப் பற்றி என்ன சொல்லலாம்? பூமியில் வாழ்ந்தவர்களிலேயே இயேசுவைப் போல நல்லவர் வேறு யாரும் இருக்கவில்லை. இருந்தாலும், “கடவுள் ஒருவரைத் தவிர வேறு யாரும் நல்லவர் கிடையாது” என்று அவர் சொன்னார்.—லூக். 18:19.

யெகோவா நல்லவர் என்பதை அவருடைய படைப்புகள் காட்டுகின்றன

யெகோவாவின் செயல்கள் நல்லவையாக இருக்கின்றன. அவர் செய்கிற எல்லா விஷயங்களும் அவர் நல்லவர் என்பதைக் காட்டுகின்றன. “யெகோவா எல்லாருக்கும் நல்லது செய்கிறார். அவருடைய இரக்கம் அவருடைய எல்லா செயல்களிலும் தெரிகிறது.” (சங். 145:9) யெகோவா நல்லவர், அவர் பாரபட்சம் பார்ப்பதில்லை. அதனால்தான், எல்லா மனிதர்களுக்கும் உயிர் கொடுத்ததோடு, அவர்கள் உயிர் வாழ்வதற்குத் தேவையானவற்றையும் கொடுத்திருக்கிறார். (அப். 14:17) நம்மை மன்னிக்கும்போது, அவர் நல்லவர் என்பதைக் காட்டுகிறார். “யெகோவாவே, நீங்கள் நல்லவர், மன்னிக்கத் தயாராக இருக்கிறவர்” என்று சங்கீதக்காரர் எழுதியிருக்கிறார். (சங். 86:5) “உத்தமமாக நடக்கிறவர்களுக்கு யெகோவா ஒரு குறையும் வைக்க மாட்டார்” என்பதில் நாம் உறுதியாக இருக்கலாம்.—சங். 84:11.

“நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்”

நாம் கடவுளுடைய சாயலில் படைக்கப்பட்டிருக்கிறோம். அதனால், நம்மால் நல்லவர்களாக இருக்க முடியும்; மற்றவர்களுக்கு நல்லது செய்யவும் முடியும். (ஆதி. 1:27) இருந்தாலும், “நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள்” என்று கடவுளுடைய ஊழியர்களை பைபிள் உற்சாகப்படுத்துகிறது. (ஏசா. 1:17) நாம் எப்படி நல்லது செய்யக் கற்றுக்கொள்ளலாம்? இதற்கான மூன்று வழிகளைக் கவனியுங்கள்.

முதலாவது, கடவுளுடைய சக்திக்காக ஜெபம் செய்ய வேண்டும். கடவுளுடைய பார்வையில் நல்லவர்களாக இருப்பதற்கு அவருடைய சக்தி கிறிஸ்தவர்களுக்கு உதவும். (கலா. 5:22) நல்லதை நேசிக்கவும் கெட்டதை வெறுக்கவும்கூட அந்தச் சக்தி உதவும். (ரோ. 12:9) ‘நல்லதையே சொல்வதற்கும் செய்வதற்கும் [நம்மை] பலப்படுத்த’ யெகோவாவால் முடியும் என்று பைபிள் சொல்கிறது.—2 தெ. 2:16, 17.

இரண்டாவது, கடவுளுடைய சக்தியால் கொடுக்கப்பட்டிருக்கிற அவருடைய வார்த்தையைப் படிக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, “நல்ல வழிகள் எல்லாவற்றையும்” யெகோவா நமக்குக் கற்றுக்கொடுப்பார். “எந்தவொரு நல்ல வேலையையும்” செய்ய நம்மைத் தயார்படுத்துவார். (நீதி. 2:9; 2 தீ. 3:17) பைபிளை வாசிக்கும்போதும், வாசித்த விஷயங்களை ஆழமாக யோசிக்கும்போதும், நம்முடைய இதயம் என்ற பொக்கிஷப் பெட்டியை நல்ல விஷயங்களால் நிரப்புகிறோம். அதாவது, கடவுளைப் பற்றியும் அவருடைய நோக்கத்தைப் பற்றியும் சொல்லப்பட்டிருக்கிற விஷயங்களால் நிரப்புகிறோம். இந்த விலைமதிப்புள்ள பொக்கிஷங்கள், பிற்பாடு நமக்கு உதவியாக இருக்கும்.—லூக். 6:45; எபே. 5:9.

மூன்றாவது, ‘நல்லதையே பின்பற்ற’ நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்ய வேண்டும். (3 யோ. 11) நாம் பின்பற்றுவதற்கு, பைபிளில் நிறைய பேருடைய உதாரணங்கள் இருக்கின்றன. யெகோவாவும் இயேசுவும்தான் அதில் மிகச் சிறந்த உதாரணங்கள்! நல்ல பெயரெடுத்த வேறு சிலரைப் பற்றியும் நாம் யோசித்துப்பார்க்கலாம். அப்படிச் செய்யும்போது, தபீத்தாள் மற்றும் பர்னபா உங்கள் ஞாபகத்துக்கு வரலாம். (அப். 9:36; 11:22-24) அவர்கள் இரண்டு பேரும் அருமையான முன்மாதிரிகள்! அவர்களைப் பற்றியும், அவர்கள் மற்றவர்களுக்கு எப்படியெல்லாம் உதவினார்கள் என்பதைப் பற்றியும் படிக்கும்போது, நீங்கள் நிச்சயம் நன்மையடைவீர்கள். உங்கள் குடும்பத்தில் அல்லது சபையில் இருப்பவர்களுக்கு நீங்கள் எப்படியெல்லாம் உதவலாம் என்று யோசித்துப்பாருங்கள். தபீத்தாளும் பர்னபாவும் நல்லவர்களாக இருந்ததால், அவர்களுக்குக் கிடைத்த நன்மைகளைப் பற்றி ஆழமாக யோசித்துப்பாருங்கள். உங்களுக்கும் அது போன்ற நன்மைகள் கிடைக்கும்.

இன்றும், நிறைய பேர் மற்றவர்களுக்கு நல்லது செய்கிறார்கள். உதாரணத்துக்கு, கடினமாக உழைக்கிற மூப்பர்களைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அவர்கள் ‘நல்ல காரியங்களை விரும்புகிறார்கள்.’ உண்மையுள்ள சகோதரிகளும், தங்களுடைய சொல்லாலும் செயலாலும் ‘நல்லதைக் கற்றுக்கொடுக்கிறார்கள்.’ (தீத். 1:8; 2:3) ராஸ்லின் என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “சபையில இருக்குறவங்களுக்கு உதவி செய்யவும், அவங்கள உற்சாகப்படுத்தவும் என்னோட ஃபிரெண்ட் கடினமா முயற்சி செய்வாங்க. மத்தவங்களோட சூழ்நிலைய பத்தி யோசிப்பாங்க, அவங்களுக்கு அடிக்கடி சின்ன சின்ன பரிசுகள் தருவாங்க. இல்லன்னா, நடைமுறையான சில உதவிகள் செய்வாங்க. அவங்க உண்மையிலயே ரொம்ப நல்லவங்க.”

‘நல்லதைத் தேடும்படி’ யெகோவா தன்னுடைய மக்களை உற்சாகப்படுத்துகிறார். (ஆமோ. 5:14) அப்படித் தேடும்போது, யெகோவாவின் தராதரங்களை நாம் நேசிக்கக் கற்றுக்கொள்வோம். அதுமட்டுமல்ல, நல்லது செய்ய வேண்டும் என்ற தூண்டுதலும் அதிகமாகும்.

நாம் நல்லவர்களாக இருக்கவும், நல்லது செய்யவும் முயற்சி செய்கிறோம்

நல்லவர்களாக இருக்க வேண்டுமென்றால், மற்றவர்களை அசத்தும் விதத்தில் ஏதாவது செய்ய வேண்டும் என்றோ, விலை உயர்ந்த பரிசுகளைக் கொடுக்க வேண்டும் என்றோ அர்த்தம் கிடையாது. இதைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைக் கவனியுங்கள்: அழகான ஒரு படத்தை வரைவதற்கு ஓர் ஓவியர் வெறுமனே ஒன்று அல்லது இரண்டு தடவை மட்டும் தன்னுடைய ப்ரஷை வைத்து வண்ணம் தீட்டுவாரா? இல்லை! நிறைய தடவை தன்னுடைய ப்ரஷை வைத்து சின்னச் சின்னதாக வண்ணம் தீட்டுவார். அதேபோல, நாமும் நிறைய தடவை மற்றவர்களுக்குச் சின்னச் சின்ன உதவிகளைச் செய்வதன் மூலம் நாம் நல்லவர்கள் என்பதைக் காட்டலாம்.

நல்லது செய்வதற்கு நாம் “தயாராக” இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது. (2 தீ. 2:21; தீத். 3:1) மற்றவர்களுடைய சூழ்நிலைகளை நன்றாகப் புரிந்துகொள்ளும்போது, நம்மால் அவர்களுக்கு உதவ முடியும். அவர்களை “பலப்படுத்துவதற்காக அவர்களுக்கு நன்மை செய்ய” முடியும். (ரோ. 15:2) அப்படி நன்மை செய்வதில், நம்மிடம் இருப்பவற்றை மற்றவர்களுக்குக் கொடுப்பதும் அடங்கும். (நீதி. 3:27) உதாரணத்துக்கு, எளிய ஓர் உணவு சாப்பிடவோ உற்சாகமூட்டும் விதத்தில் பேசிப் பழகவோ நாம் யாரையாவது அழைக்கலாம். உடல்நிலை சரியில்லாதவர்களுக்கு ஒரு கார்டு அனுப்பலாம், நேரில் போய் பார்க்கலாம் அல்லது ஃபோனில் பேசலாம். இப்படி, ‘கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமாய் இருப்பதற்காக, சூழ்நிலைக்கு ஏற்றபடி, அவர்களைப் பலப்படுத்துவதற்காக’ நம்மால் நிறைய வாய்ப்புகளைக் கண்டுபிடிக்க முடியும்.—எபே. 4:29.

யெகோவாவைப் போல, எல்லா மனிதர்களுக்கும் நல்லது செய்ய நாம் முயற்சி செய்கிறோம். அதனால், மற்றவர்களிடம் பாரபட்சம் இல்லாமல் நடந்துகொள்கிறோம். அப்படி நடந்துகொள்வதற்கான மிகச் சிறந்த ஒரு வழி, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிய நல்ல செய்தியை எல்லாரிடமும் பிரசங்கிப்பதுதான். இயேசு கட்டளையிட்டபடி, நம்மை வெறுப்பவர்களுக்கும்கூட நல்லது செய்ய முயற்சி செய்கிறோம். (லூக். 6:27) மற்றவர்களிடம் அப்படிக் கனிவாக நடந்துகொள்வதிலும், அவர்களுக்கு நன்மை செய்வதிலும் எந்தத் தவறும் இல்லை. ஏனென்றால், “இப்படிப்பட்டவற்றுக்கு எதிராக எந்தவொரு சட்டமும் இல்லை.” (கலா. 5:22, 23) எதிர்ப்பு அல்லது பிரச்சினைகளின் மத்தியிலும் நாம் தொடர்ந்து நல்லது செய்யும்போது, பைபிள் சத்தியத்திடம் மற்றவர்களை ஈர்க்க முடியும்; கடவுளுக்குப் புகழ் சேர்க்கவும் முடியும்.—1 பே. 3:16, 17.

நல்லது செய்வதால் கிடைக்கும் பலன்கள்

“நல்லவன் தன்னுடைய செயல்களுக்குத் தகுந்த பலனைப் பெறுவான்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 14:14) என்னென்ன பலன்களைப் பெற முடியும்? மற்றவர்களிடம் அன்பாகவும் கனிவாகவும் நடந்துகொள்ளும்போது, அவர்களும் நம்மை அன்பாக நடத்துவார்கள். (நீதி. 14:22) ஒருவேளை, மற்றவர்கள் நம்மைச் சரியாக நடத்தாதபோதும் நாம் தொடர்ந்து நல்லது செய்யும்போது, அவர்களைச் சாந்தப்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அவர்களுடைய கல்நெஞ்சம் கரையவும் வாய்ப்பு இருக்கிறது!—ரோ. 12:20, அடிக்குறிப்பு.

நாம் நல்லது செய்யும்போதும், கெட்டதைத் தவிர்க்கும்போதும் நமக்கு நிறைய பலன்கள் கிடைக்கின்றன. சகோதர சகோதரிகள் நிறைய பேர் இதை ஒத்துக்கொள்கிறார்கள். நான்சி என்ற சகோதரி இப்படிச் சொல்கிறார்: “நான் மூர்க்கத்தனமா இருந்தேன், ஒழுக்கங்கெட்ட வாழ்க்கை வாழ்ந்தேன். மத்தவங்களுக்கு மரியாதையே தர மாட்டேன் . . . ஆனா, கடவுள் எத நல்லதுனு சொல்றாரோ அத என்னோட வாழ்க்கையில செஞ்சதுக்கு அப்புறம்தான் எனக்கு சந்தோஷமே கிடைச்சது. இப்போ, மதிப்பு மரியாதையோட வாழ்றேன்.”

யெகோவாவைச் சந்தோஷப்படுத்துவதுதான் நல்மனதை வளர்த்துக்கொள்வதற்கான முக்கியக் காரணம்! நாம் என்ன செய்கிறோம் என்பதை நிறைய பேர் பார்க்காமல் இருக்கலாம்; ஆனால், யெகோவா பார்க்கிறார். நாம் ஒவ்வொரு தடவை நல்லது செய்யும்போதும், நல்ல விஷயங்களை யோசிக்கும்போதும் அவர் கவனிக்கிறார். (எபே. 6:7, 8) அதனால் கிடைக்கும் பலன் என்ன? “நல்லவன் யெகோவாவின் பிரியத்தை சம்பாதிக்கிறான்.” (நீதி. 12:2) அதனால், நாம் தொடர்ந்து நல்மனதை வளர்த்துக்கொள்ள வேண்டும். “நல்ல செயல்களைச் செய்கிற ஒவ்வொருவனுக்கும் மகிமையையும் மதிப்பையும் சமாதானத்தையும்” கொடுப்பதாக யெகோவா வாக்குக் கொடுக்கிறார்.—ரோ. 2:10.

^ பாரா. 2 பெயர் மாற்றப்பட்டிருக்கிறது.