Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 10

ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?

ஞானஸ்நானம் எடுக்க இனி எனக்கு என்ன தடை?

“[அந்த அதிகாரியும்] பிலிப்புவும் தண்ணீருக்குள் இறங்கினார்கள். அவருக்கு பிலிப்பு ஞானஸ்நானம் கொடுத்தார்.”—அப். 8:38.

பாட்டு 7 கிறிஸ்தவ அர்ப்பணம்

இந்தக் கட்டுரையில்... *

1. ஆதாமும் ஏவாளும் எதை இழந்தார்கள், அதனால் என்ன ஆனது?

நல்லது எது, கெட்டது எது என்பதை முடிவு செய்வதற்கான உரிமை யாருக்கு இருக்கிறது? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? நன்மை தீமை அறிவதற்கான மரத்தின் பழத்தை ஆதாமும் ஏவாளும் சாப்பிட்டபோது, யெகோவாவையும் அவருடைய தராதரங்களையும் தாங்கள் நம்பவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டினார்கள். நல்லது எது, கெட்டது எது என்பதைத் தாங்களாகவே முடிவு செய்துகொண்டார்கள். (ஆதி. 3:22) இப்படிச் செய்ததால், யெகோவாவோடு இருந்த நட்பை இழந்தார்கள். அதனால், என்றென்றும் வாழும் வாய்ப்பு அவர்களுக்கு இல்லாமல் போனது. அதோடு, பாவத்தையும் மரணத்தையும் தங்கள் பிள்ளைகளுக்குக் கடத்தினார்கள். (ரோ. 5:12) அவர்கள் எடுத்த முடிவு வேதனையைக் கொண்டுவந்தது!

இயேசுவை ஏற்றுக்கொண்ட பிறகு, முடிந்தளவு சீக்கிரத்திலேயே ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்று எத்தியோப்பிய அதிகாரி ஆசைப்பட்டார் (பாராக்கள் 2-3)

2-3. (அ) பிலிப்பு பிரசங்கித்தபோது எத்தியோப்பிய அதிகாரி என்ன செய்தார்? (ஆ) ஞானஸ்நானம் எடுத்தால் நமக்கு என்னென்ன ஆசீர்வாதங்கள் கிடைக்கும், எந்தெந்த கேள்விகளுக்கான பதில்களைப் பார்ப்போம்?

2 பிலிப்பு பிரசங்கித்ததைக் கேட்ட எத்தியோப்பிய அதிகாரி என்ன செய்தார்? யெகோவாவும் இயேசுவும் தனக்காகச் செய்திருக்கிற எல்லாவற்றுக்காகவும் அவர் மிகவும் நன்றியோடு இருந்தார். அதனால், உடனடியாக ஞானஸ்நானம் எடுத்தார். (அப். 8:34-38) ஆதாம் ஏவாள் நடந்துகொண்ட விதத்துக்கும், இவர் நடந்துகொண்ட விதத்துக்கும் எவ்வளவு வித்தியாசம்! அந்த அதிகாரியைப் போலவே, கடவுளுக்கு நம்மை அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுக்கும்போது, யெகோவாவும் இயேசுவும் நமக்காகச் செய்த எல்லாவற்றுக்காகவும் நன்றியோடு இருக்கிறோம் என்பதையும் யெகோவாவை நம்புகிறோம் என்பதையும் காட்டுகிறோம். நல்லது எது, கெட்டது எது என்பதை முடிவு செய்வதற்கான உரிமை அவருக்கு மட்டும்தான் இருக்கிறது என்பதை நாம் ஒத்துக்கொள்கிறோம் என்றும் காட்டுகிறோம்.

3 யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது நமக்கு எவ்வளவு ஆசீர்வாதங்கள் கிடைக்கின்றன என்பதைப் பற்றி யோசித்துப்பாருங்கள். என்றென்றும் வாழும் வாழ்க்கை உட்பட, ஆதாம் ஏவாள் இழந்த எல்லாவற்றையும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு நமக்கு இருக்கிறது. இயேசு கிறிஸ்துவின் மேல் விசுவாசம் வைப்பதால் யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார், சுத்தமான மனசாட்சியைத் தருகிறார். (மத். 20:28; அப். 10:43) அதோடு, யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெற்ற ஊழியர்களின் குடும்பத்தில் நாமும் ஒருவராக ஆகிறோம். இந்தக் குடும்பத்தில் இருக்கும் எல்லாருக்கும் அருமையான எதிர்காலம் காத்திருக்கிறது. (யோவா. 10:14-16; ரோ. 8:20, 21) இத்தனை ஆசீர்வாதங்கள் இருப்பது தெளிவாகத் தெரிந்திருந்தும், யெகோவாவைப் பற்றித் தெரிந்துகொண்ட சிலர், எத்தியோப்பிய அதிகாரியின் உதாரணத்தைப் பின்பற்றத் தயங்குகிறார்கள். ஞானஸ்நானம் எடுக்க எது அவர்களைத் தடுக்கிறது? அந்தத் தடைகளை அவர்கள் எப்படித் தகர்த்தெறியலாம்?

ஞானஸ்நானம் எடுக்க சிலருக்குத் தடையாக இருக்கும் விஷயங்கள்

ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பு சிலர் சந்திக்கும் பிரச்சினைகள்

தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது (பாராக்கள் 4-5) *

4-5. ஏவ்ரிக்கும் ஹானாவுக்கும் எது தடையாக இருந்தது?

4 தன்னம்பிக்கை இல்லாமல் இருப்பது. ஏவ்ரி என்ற இளைஞனின் உதாரணத்தைக் கவனியுங்கள். யெகோவாவின் சாட்சிகளாக இருக்கும் பெற்றோரால் அவன் வளர்க்கப்பட்டான். அன்பான அப்பா, அருமையான மூப்பர் என்ற பெயரை அவனுடைய அப்பா சம்பாதித்திருந்தார். இப்படிப்பட்ட சூழ்நிலையில் வளர்க்கப்பட்டிருந்தாலும், ஞானஸ்நானம் எடுக்க அவன் தயங்கினான். ஏன்? “எங்க அப்பா மாதிரியெல்லாம் என்னால இருக்க முடியாதுனு நினைச்சேன்” என்று அவன் சொல்கிறான். எதிர்காலத்தில் ஏதாவது பொறுப்புகள் கிடைத்தால், அவற்றைச் செய்ய முடியாது என்றும் நினைத்தான். “எல்லாருக்கும் முன்னாடி ஜெபம் செய்றது... பேச்சு கொடுக்குறது... வெளி ஊழிய தொகுதிய வழிநடத்துறது... இதையெல்லாம் நினைச்சப்போ எனக்கு பயமா இருந்துச்சு” என்கிறான்.

5 ஹானாவுக்கு 18 வயது. அவளுக்குக் கொஞ்சம்கூட தன்னம்பிக்கை இருக்கவில்லை. யெகோவாவை வணங்கிய அப்பா அம்மாவால்தான் அவளும் வளர்க்கப்பட்டாள். இருந்தாலும், யெகோவாவுடைய தராதரங்களின்படி வாழ தன்னால் முடியுமா என்று நினைத்தாள். ஏன்? தன்னைப் பற்றி அவள் ரொம்பவே தாழ்வாக நினைத்தாள். சிலசமயங்களில், ரொம்பவே சோகத்தில் மூழ்கிவிடுவாள்; அப்போது, தன்னைத்தானே காயப்படுத்திக்கொள்வாள். ஆனால் அவள் இப்படிச் செய்தது, நிலைமையை இன்னும் மோசமாகத்தான் ஆக்கியது. “நான் என்ன செஞ்சேன்னு யாருகிட்டயும் சொல்லல; அப்பா அம்மா கிட்டகூட சொல்லல . . . நான் என்னை காயப்படுத்திக்கிறத பார்த்து, யெகோவா என்னை ஏத்துக்கவே மாட்டாருனு நினைச்சேன்” என்கிறாள் ஹானா.

நண்பர்களின் தாக்கம் (பாரா 6) *

6. ஞானஸ்நானம் எடுப்பதற்கு வெனிசாவுக்கு எது தடையாக இருந்தது?

6 நண்பர்களின் தாக்கம். வெனிசாவுக்கு 22 வயது. “எனக்கு ஒரு நல்ல ஃபிரெண்டு இருந்தா. அவள கிட்டத்தட்ட 10 வருஷமா எனக்கு தெரியும்” என்று அவள் சொல்கிறாள். ஞானஸ்நானம் எடுக்க வேண்டும் என்ற இலக்கை அடைவதற்கு, யெகோவாவின் சாட்சியாக இல்லாத அந்தத் தோழி அவளுக்குத் தடையாக இருந்தாள். இது அவளுக்குக் கஷ்டமாக இருந்தது. “பொதுவா, மத்தவங்ககூட ஃபிரெண்டு ஆகுறது எனக்கு ரொம்ப கஷ்டம். அதனால, இந்த ஃபிரெண்டும் இல்லாம போயிட்டா, எனக்கு வேற ஃபிரண்டே கிடைக்க மாட்டாங்கனு நினைச்சேன்” என்கிறாள் வெனிசா.

ஏதாவது பெரிய தவறைச் செய்துவிடுவோமோ என்ற பயம் (பாரா 7) *

7. மக்கேலே என்ற இளம் பெண் எதை நினைத்துப் பயந்தாள், ஏன்?

7 ஏதாவது பெரிய தவறைச் செய்துவிடுவோமோ என்ற பயம். மக்கேலே என்ற இளம் பெண்ணின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவளுக்கு ஐந்து வயது இருந்தபோது, அவளுடைய அண்ணன் சபைநீக்கம் செய்யப்பட்டார். வளர வளர, அண்ணனுடைய செயல்கள் அப்பா அம்மாவை எந்தளவு வேதனைப்படுத்தியது என்பதை அவள் பார்த்தாள். “நான் ஞானஸ்நானம் எடுத்ததுக்கு அப்புறம் ஏதாவது பெரிய தப்பு செஞ்சு, என்னை சபைநீக்கம் செஞ்சிட்டாங்கனா, அப்பா அம்மா ரொம்பவே இடிஞ்சுபோயிடுவாங்கனு நினைச்சு பயந்தேன்” என்கிறாள் மக்கேலே.

எதிர்ப்பை நினைத்து பயம் (பாரா 8) *

8. மைல்ஸ் என்ற இளைஞன் எதை நினைத்துப் பயந்தான்?

8 எதிர்ப்பை நினைத்து பயம். மைல்ஸ் என்ற இளைஞனின் உதாரணத்தைப் பார்க்கலாம். அவனுடைய அப்பா அம்மா விவாகரத்து செய்துகொண்டார்கள். அவனுடைய அப்பா ஒரு யெகோவாவின் சாட்சி; ஆனால், அவனுடைய அம்மா யெகோவாவை வணங்காதவர். “என் அம்மாகூடதான் நான் 18 வருஷம் இருந்தேன் . . . நான் ஞானஸ்நானம் எடுக்க ஆசைப்படுறேனு அவங்ககிட்ட சொல்லவே பயமா இருந்துச்சு. ஏன்னா, அப்பா ஒரு யெகோவாவின் சாட்சியா ஆனப்போ அம்மா எப்படி நடந்துக்கிட்டாங்கனு நான் பார்த்திருக்கேன். அதனால, என்னையும் கஷ்டப்படுத்துவாங்களோனு நினைச்சு ரொம்ப பயந்தேன்” என்கிறான் மைல்ஸ்.

தடைகளை எப்படித் தகர்த்தெறியலாம்?

9. யெகோவாவுடைய பொறுமையையும் அன்பையும் பற்றித் தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு என்ன தூண்டுதல் வரும்?

9 ஆதாமும் ஏவாளும் யெகோவாமீது ஆழமான அன்பை வளர்த்துக்கொள்ளவில்லை. அதனால், யெகோவாவுக்குச் சேவை செய்யப்போவதில்லை என்று முடிவெடுத்தார்கள். இருந்தாலும், ரொம்பக் காலம் வாழ்வதற்கு யெகோவா அவர்களை அனுமதித்தார். அதாவது, பிள்ளைகளைப் பெற்றெடுத்து, அவர்களை வளர்ப்பதற்கான தராதரங்களை அவர்களாகவே முடிவு செய்யும் அளவுக்கு ரொம்பக் காலம் வாழ அவர்களை அனுமதித்தார். யெகோவாவின் வழிநடத்துதல் வேண்டாம் என்று அவர்கள் எடுத்த தீர்மானம் எவ்வளவு முட்டாள்தனமானது என்பது சீக்கிரத்தில் தெரியவந்தது. அவர்களுடைய மூத்த மகன், அப்பாவியான தன்னுடைய தம்பியைக் கொலை செய்தான்! காலப்போக்கில், வன்முறையும் சுயநலமும் மனிதர்கள் எல்லாரையும் ஆட்டிப்படைத்தன. (ஆதி. 4:8; 6:11-13) இருந்தாலும், ஆதாம் ஏவாளுடைய பிள்ளைகளில் யாரெல்லாம் தன்னை வணங்க விரும்பினார்களோ, அவர்களையெல்லாம் காப்பாற்றுவதற்கு யெகோவா ஓர் ஏற்பாடு செய்தார். (யோவா. 6:38-40, 57, 58) யெகோவா எந்தளவுக்கு பொறுமையையும் அன்பையும் காட்டுகிறார் என்பதைப் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ளும்போது, அவர்மீது உங்களுக்கு இருக்கும் அன்பு அதிகமாகும். அப்போது, ஆதாம் ஏவாள் எடுத்ததைப் போன்ற ஒரு தீர்மானத்தை நீங்கள் எடுக்க மாட்டீர்கள்; உங்களை யெகோவாவுக்கு அர்ப்பணிப்பீர்கள்.

இந்தப் பிரச்சினைகளை நீங்கள் எப்படிச் சமாளிக்கலாம்?

(பாராக்கள் 9-10) *

10. சங்கீதம் 19:7-ஐ ஆழமாக யோசித்துப்பார்ப்பது யெகோவாவுக்குச் சேவை செய்ய உதவும் என்று எப்படிச் சொல்லலாம்?

10 யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொண்டே இருங்கள். யெகோவாவைப் பற்றி நீங்கள் அதிகமாகக் கற்றுக்கொள்ளும்போது, அவருக்குச் சேவை செய்ய முடியும் என்ற நம்பிக்கை அதிகமாகும். ஏவ்ரி இப்படிச் சொல்கிறான்: சங்கீதம் 19:7-ல இருக்கிற வாக்குறுதிய படிச்சதும், அத பத்தி ஆழமா யோசிச்சு பார்த்ததும் எனக்கு நம்பிக்கைய கொடுத்துச்சு.” (வாசியுங்கள்.) இந்த வாக்குறுதியை யெகோவா எப்படி நிறைவேற்றியிருக்கிறார் என்பதைப் பார்த்தபோது, யெகோவாமீது இருந்த அன்பு ஏவ்ரிக்கு அதிகமானது. இப்படிப்பட்ட அன்பு, கடவுளுக்குச் சேவை செய்ய முடியும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. அதோடு, அவருடைய மனதை வேதனைப்படுத்துகிற எதையும் செய்துவிடக் கூடாது என்ற உறுதியையும், அவருக்குச் சேவை செய்ய வேண்டும் என்ற ஆசையையும் அதிகமாக்குகிறது. ஹானா இப்படிச் சொல்கிறாள்: “பைபிள படிச்சு, அத ஆழமா யோசிச்சு பார்த்தப்போ, நான் என்னையே காயப்படுத்திக்கிற சமயத்துல, யெகோவாவையும் காயப்படுத்துறேங்குறத புரிஞ்சிக்கிட்டேன்.” (1 பே. 5:7) ஹானா ‘கடவுளுடைய வார்த்தையின்படி செய்கிறவளாக’ இருந்தாள். (யாக். 1:22) அதனால் என்ன பலன் கிடைத்தது? “யெகோவாவுக்கு கீழ்ப்படியறதுனால எவ்வளவு நன்மைகள் கிடைக்குதுங்குறத புரிஞ்சுக்கிட்டப்போ, அவர நான் ரொம்ப நேசிக்க ஆரம்பிச்சேன். அதனால, எனக்கு உதவி தேவைப்படுறப்பெல்லாம் யெகோவா என்னை கண்டிப்பா வழிநடத்துவாருனு இப்போ உறுதியா நம்புறேன்” என்று ஹானா சொல்கிறாள். தன்னையே காயப்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற உணர்வை அவளால் விட்டுவிட முடிந்தது; தன்னை யெகோவாவுக்கு அர்ப்பணித்து, அவள் ஞானஸ்நானம் எடுத்தாள்.

(பாரா 11) *

11. நல்ல நண்பர்களைக் கண்டுபிடிக்க வெனிசா என்ன செய்தாள், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்?

11 நண்பர்களை ஞானமாகத் தேர்ந்தெடுங்கள். ஞானஸ்நானம் எடுப்பதற்குத் தன்னுடைய தோழி தடையாக இருப்பதை வெனிசா கடைசியில் புரிந்துகொண்டாள். அதனால், அந்த நட்புக்கு முற்றுப்புள்ளி வைத்ததோடு, இன்னும் சில விஷயங்களைச் செய்தாள். சபையில் இருப்பவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்ள கடினமாக முயற்சி செய்தாள். நோவாவும் அவருடைய குடும்பமும் வைத்த முன்மாதிரிதான் தனக்கு ரொம்ப உதவியாக இருந்தது என்று அவள் சொல்கிறாள். “அவங்கள சுத்தியிருந்தவங்க யெகோவாவ நேசிக்கல . . . அதனால, அவங்களுக்குள்ளயே அவங்க நல்ல பந்தத்தை வெச்சுக்கிட்டாங்க” என்கிறாள் வெனிசா. ஞானஸ்நானம் எடுத்த பிறகு, அவள் ஒரு பயனியராக ஆனாள். இப்போது, “எங்க சபையில மட்டுமில்ல, மத்த சபையிலயும் நல்ல ஃபிரெண்ட்ஸ் கிடைக்குறதுக்கு இது எனக்கு உதவி செஞ்சிருக்கு” என்று சொல்கிறாள். யெகோவா கொடுத்திருக்கும் வேலையில் நம்மால் முடிந்த மிகச் சிறந்ததைச் செய்யும்போது நமக்கும் நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள்.—மத். 24:14.

(பாராக்கள் 12-15) *

12. எப்படிப்பட்ட பயத்தை ஆதாமும் ஏவாளும் வளர்த்துக்கொள்ளத் தவறினார்கள், அதனால் என்ன நடந்தது?

12 சரியான பயத்தை வளர்த்துக்கொள்ளுங்கள். சில விதமான பயம் நல்லதுதான்! உதாரணத்துக்கு, யெகோவாவின் மனதைக் காயப்படுத்திவிடுவோமோ என்ற பயம் நமக்கு இருப்பது நல்லதுதான். (சங். 111:10) இப்படிப்பட்ட பயத்தை ஆதாமும் ஏவாளும் வளர்த்திருந்தால், யெகோவாவுக்கு எதிராகக் கலகம் செய்திருக்க மாட்டார்கள். அப்படி வளர்க்காததால்தான், யெகோவாவுக்கு விரோதமாகவே அவர்கள் கலகம் செய்தார்கள்! அதன் பிறகு, அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டன; தாங்கள் பாவிகள் என்பதை அவர்கள் உணர்ந்தார்கள். பாவத்தையும் மரணத்தையும்தான் அவர்கள் தங்கள் பிள்ளைகளுக்குக் கடத்தினார்கள். கடவுளுடைய சட்டத்துக்குக் கீழ்ப்படியாமல் போனதை அவர்கள் புரிந்துகொண்டதால், தாங்கள் நிர்வாணமாக இருப்பதை உணர்ந்தார்கள்; தங்கள் நிர்வாணத்தை மறைத்துக்கொண்டார்கள்.—ஆதி. 3:7, 21.

13-14. (அ) 1 பேதுரு 3:21 சொல்கிறபடி, சாவை நினைத்து நாம் ஏன் அளவுக்கு அதிகமாகப் பயப்பட வேண்டிய அவசியமில்லை? (ஆ) யெகோவாவை நேசிக்க நமக்கு என்னென்ன காரணங்கள் இருக்கின்றன?

13 யெகோவாவின் மனதைக் காயப்படுத்திவிடுவோமோ என்ற பயம் நமக்கு இருக்க வேண்டும்தான். ஆனால், சாவை நினைத்து நாம் அளவுக்கு அதிகமாகப் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால், நமக்கு முடிவில்லாத வாழ்வு கிடைப்பதற்கு யெகோவா வழி செய்திருக்கிறார். நாம் ஏதாவது பாவம் செய்துவிட்டால்கூட, உண்மையாக மனம் திருந்தினால், அவர் நம் பாவங்களை மன்னிப்பார். அவருடைய மகனின் மீட்புப் பலியில் நாம் விசுவாசம் வைத்திருப்பதால், அவர் நம்மை மன்னிப்பார். அந்த விசுவாசத்தைச் செயலில் காட்டுவதற்கான ஒரு முக்கிய வழி, நம் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணிப்பதும் ஞானஸ்நானம் எடுப்பதும்தான்!1 பேதுரு 3:21-ஐ வாசியுங்கள்.

14 யெகோவாவை நேசிப்பதற்கு நமக்கு நிறைய காரணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு நாளையும் சந்தோஷமாக அனுபவிப்பதற்குத் தேவையானவற்றை அவர் நமக்குக் கொடுக்கிறார். அதுமட்டுமல்ல, அவரைப் பற்றிய உண்மைகளையும் அவருடைய நோக்கங்களையும் நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார். (யோவா. 8:31, 32) நம்மை வழிநடத்துவதற்காகவும் ஆதரிப்பதற்காகவும் கிறிஸ்தவ சபையைக் கொடுத்திருக்கிறார். நம்முடைய பிரச்சினைகளைச் சகித்துக்கொள்வதற்குத் தேவையான உதவியை இன்று அவர் தருகிறார். அதுமட்டுமல்ல, எந்தக் குறையும் இல்லாத ஓர் அருமையான வாழ்க்கையை என்றென்றும் அனுபவிக்கும் எதிர்கால நம்பிக்கையையும் தருகிறார். (சங். 68:19; வெளி. 21:3, 4) நம்மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டுவதற்காக யெகோவா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்பதை ஆழமாக யோசித்துப்பார்க்கும்போது, அவரை நேசிக்க வேண்டும் என்ற தூண்டுதல் நமக்கு வரும். அப்படி நாம் அவரை நேசிக்கும்போது, அவர்மீது சரியான பயத்தை வளர்த்துக்கொள்வோம். நாம் மிகவும் நேசிக்கிற யெகோவாவை காயப்படுத்திவிடுவோமோ என்ற பயம் நமக்கு இருக்கும்.

15. ஏதாவது பெரிய தவறைச் செய்துவிடுவோமோ என்ற பயத்தை மக்கேலே எப்படிச் சமாளித்தாள்?

15 யெகோவா எந்தளவுக்கு மன்னிக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டது, ஏதாவது ஒரு பெரிய தவறைச் செய்துவிடுவோமோ என்ற பயத்தைச் சமாளிக்க மக்கேலேவுக்கு உதவியது. “நாம எல்லாருமே பாவ இயல்புள்ளவங்கனும், தப்பு செய்றவங்கனும் புரிஞ்சிக்கிட்டேன். அதுமட்டுமில்ல, யெகோவா நம்மள நேசிக்கிறாருனும் மீட்பு விலையின் அடிப்படையில நம்ம பாவங்கள மன்னிப்பாருனும் தெரிஞ்சிக்கிட்டேன்” என்று அவள் சொல்கிறாள். யெகோவாமீது அவளுக்கு இருந்த அன்பு, தன்னை அர்ப்பணிக்கவும் ஞானஸ்நானம் எடுக்கவும் அவளைத் தூண்டியது.

(பாரா 16) *

16. எதிர்ப்பைப் பற்றிய பயத்தை மைல்ஸ் எப்படிச் சமாளித்தான்?

16 ஞானஸ்நானம் எடுப்பதென்று தான் எடுத்த முடிவை தன்னுடைய அம்மா ஏற்றுக்கொள்ள மாட்டார் என்று மைல்ஸ் பயந்ததால், வட்டாரக் கண்காணியிடம் உதவி கேட்டான். “வட்டாரக் கண்காணியோட அம்மாவும் யெகோவாவின் சாட்சி கிடையாது” என்று மைல்ஸ் சொல்கிறான். “அப்பா என்னை வற்புறுத்துறதால நான் ஞானஸ்நானம் எடுக்கலங்குறதையும், நானாதான் இந்த முடிவு எடுத்தேங்குறதயும் அம்மாவுக்கு புரியவெக்கறதுக்கு அவர் உதவுனாரு” என்கிறான் மைல்ஸ். ஆனால், அவன் எடுத்த முடிவு அவனுடைய அம்மாவுக்குப் பிடிக்கவில்லை. இருந்தாலும், தன்னுடைய முடிவில் அவன் உறுதியாக இருந்தான். அதனால், கடைசியில் அவன் வீட்டைவிட்டுப் போக வேண்டியிருந்தது. “யெகோவா எனக்காக செஞ்சிருக்கிற நல்ல விஷயங்கள பத்தி யோசிச்சு பார்த்தது என் மனச தொட்டுச்சு . . . இயேசு கொடுத்த மீட்பு பலிய பத்தி ஆழமா யோசிச்சு பார்த்தப்போ, யெகோவா என் மேல எவ்வளவு அன்பு வெச்சிருக்காருனு புரிஞ்சிக்க முடிஞ்சிது. அர்ப்பணிக்கவும் ஞானஸ்நானம் எடுக்கவும் இது என்னை தூண்டுச்சு” என்று மைல்ஸ் சொல்கிறான்.

உங்களுடைய தீர்மானத்தில் உறுதியாக இருங்கள்

நமக்காகக் கடவுள் செய்திருக்கும் எல்லாவற்றுக்கும் நாம் நன்றியோடு இருக்கிறோம் என்பதைக் காட்டலாம் (பாரா 17)

17. நம் எல்லாருக்கும் என்ன வாய்ப்பு இருக்கிறது?

17 ஏதேன் தோட்டத்திலிருந்த மரத்தின் பழத்தை ஏவாள் சாப்பிட்டபோது, தன் தந்தையான யெகோவாவை அவள் ஒதுக்கித்தள்ளினாள். அவளோடு சேர்ந்துகொண்டதன் மூலம், ஆதாமும், தனக்காக யெகோவா செய்திருந்த நல்ல விஷயங்களுக்கு கொஞ்சம்கூட நன்றி காட்டாமல் போனான். ஆனால், நாம் அவர்களைப் போல கிடையாது என்பதைக் காட்ட நம் எல்லாருக்கும் வாய்ப்பு இருக்கிறது. அவர் நமக்காகச் செய்திருக்கும் எல்லாவற்றுக்கும் நாம் நன்றியோடு இருக்கிறோம்! நமக்கு எது நல்லது, எது கெட்டது என்பதை முடிவு செய்யும் உரிமை யெகோவாவுக்கு இருக்கிறது என்பதை ஞானஸ்நானம் எடுப்பதன் மூலம் காட்டுகிறோம். அதோடு, நம் அப்பாவான யெகோவாவை நேசிக்கிறோம் என்பதையும் அவரையே நம்பியிருக்கிறோம் என்பதையும் காட்டுகிறோம்.

18. யெகோவாவின் சேவையில் நீங்கள் எப்படி வெற்றி பெறலாம்?

18 ஞானஸ்நானம் எடுத்த பிறகு, நமக்குப் பிடித்த மாதிரி வாழாமல், யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நாம் ஒவ்வொரு நாளும் வாழ வேண்டும். லட்சக்கணக்கான கடவுளுடைய ஊழியர்கள் அப்படி வாழ்கிறார்கள். மூன்று விஷயங்களைச் செய்தால் உங்களாலும் அவர்களைப் போலவே வாழ முடியும். ஒன்று, பைபிளை ஆழமாகப் புரிந்துகொள்ள முயற்சி செய்துகொண்டே இருங்கள். இரண்டு, சகோதர சகோதரிகளோடு தவறாமல் ஒன்றுகூடி வாருங்கள். மூன்று, உங்கள் அன்புத் தந்தையைப் பற்றித் தெரிந்துகொண்ட விஷயங்களை மற்றவர்களிடம் ஆர்வமாகச் சொல்லுங்கள். (எபி. 10:24, 25) வாழ்க்கையில் தீர்மானங்களை எடுக்கும்போது, தன்னுடைய வார்த்தையின் மூலமும் அமைப்பின் மூலமும் யெகோவா தருகிற ஆலோசனைகளைக் காதுகொடுத்துக் கேளுங்கள். (ஏசா. 30:21) இப்படியெல்லாம் செய்தால், நீங்கள் செய்யும் ஒவ்வொரு விஷயமும் வெற்றி பெறும்.—நீதி. 16:3, 20.

19. எதைப் பற்றி நீங்கள் தொடர்ந்து யோசித்துப்பார்க்க வேண்டும், ஏன்?

19 யெகோவா கொடுக்கும் வழிநடத்துதலின்படி செய்யும்போது உங்களுக்கு எவ்வளவு நன்மை கிடைக்கிறது என்பதைத் தொடர்ந்து யோசித்துப்பாருங்கள். இப்படி யோசித்துப்பார்க்கும்போது, அவர்மீதும் அவருடைய தராதரங்கள்மீதும் உங்களுக்கு இருக்கிற அன்பு வளரும். அப்போது, சாத்தான் எவ்வளவு அருமையான வாய்ப்புகளை உங்கள் முன்னால் வைத்தாலும், யெகோவாவுக்குச் சேவை செய்வதை நீங்கள் நிறுத்திவிட மாட்டீர்கள். இன்றிலிருந்து ஆயிரம் வருஷங்கள் கழித்து உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள். ‘ஞானஸ்நானம் எடுக்கணுங்குற தீர்மானம்தான், நான் எடுத்த தீர்மானத்துலயே மிக சிறந்த தீர்மானம்’ என்று அப்போது சொல்வீர்கள்!

பாட்டு 106 யெகோவாவின் நண்பராய் ஆகுங்கள்

^ பாரா. 5 ஞானஸ்நானம் எடுப்பதா, வேண்டாமா? இதுதான் நீங்கள் எடுக்க வேண்டிய தீர்மானங்களிலேயே ரொம்ப முக்கியமான தீர்மானம்! இது ஏன் அவ்வளவு முக்கியம்? இதற்கான பதிலை இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஞானஸ்நானம் எடுப்பதைப் பற்றி யோசித்துக்கொண்டிருப்பவர்கள், அந்தத் தீர்மானத்தை எடுப்பதற்குத் தடையாக இருக்கும் சவால்களை எப்படிச் சமாளிக்கலாம் என்பதைப் பற்றியும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம்.

^ பாரா. 56 படங்களின் விளக்கம்: தன்னம்பிக்கை: ஓர் இளம் சகோதரர், கூட்டத்தில் பதில் சொல்வதற்குப் பயப்படுகிறார்.

^ பாரா. 58 படங்களின் விளக்கம்: நண்பர்கள்: யெகோவாவின் சாட்சியாக இல்லாத தன் தோழியோடு இருக்கும் ஓர் இளம் சகோதரி, சாட்சிகளைப் பார்த்து தர்மசங்கடப்படுகிறார்.

^ பாரா. 60 படங்களின் விளக்கம்: பெரிய தவறுகள்: தன்னுடைய அண்ணன் சபைநீக்கம் செய்யப்பட்டு வீட்டைவிட்டு வெளியே போவதைப் பார்க்கிற ஓர் இளம் பெண், அவளும் அப்படிப்பட்ட ஒரு தவறைச் செய்துவிடுவாளோ என்று பயப்படுகிறாள்.

^ பாரா. 62 படங்களின் விளக்கம்: எதிர்ப்பு: ஓர் இளைஞன், யெகோவாவின் சாட்சியாக இல்லாத தன்னுடைய அம்மா பார்த்துக்கொண்டிருக்கும்போது, ஜெபம் செய்யப் பயப்படுகிறான்.

^ பாரா. 65 படங்களின் விளக்கம்: தன்னம்பிக்கை: ஓர் இளம் சகோதரர், தனிப்பட்ட படிப்பை இன்னும் நன்றாகச் செய்கிறார்.

^ பாரா. 67 படங்களின் விளக்கம்: நண்பர்கள்: ஓர் இளம் சகோதரி, யெகோவாவின் சாட்சியாக இருப்பதை நினைத்து பெருமைப்படுகிறார்.

^ பாரா. 69 படங்களின் விளக்கம்: பெரிய தவறுகள்: ஓர் இளம் பெண், சத்தியத்தை நேசிக்க ஆரம்பிக்கிறாள்; ஞானஸ்நானமும் எடுக்கிறாள்.

^ பாரா. 71 படங்களின் விளக்கம்: எதிர்ப்பு: ஓர் இளைஞன், தன் நம்பிக்கைகளைப் பற்றி அம்மாவிடம் தைரியமாகப் பேசுகிறான்.