படிப்புக் கட்டுரை 12
சகரியா பார்த்ததை நீங்களும் பார்க்கிறீர்களா?
“‘என்னுடைய சக்தியால்தான் எல்லாமே நடக்கும்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்.”—சக. 4:6.
பாட்டு 73 தைரியத்தைத் தாருங்கள்
இந்தக் கட்டுரையில்... *
1. அடிமைகளாக இருந்த யூதர்களுக்கு என்ன அருமையான விஷயம் காத்துக்கொண்டிருந்தது?
நிறைய வருஷங்களாக பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்கள் சந்தோஷத்தின் உச்சிக்கே போய்விட்டார்கள். ஏனென்றால், அவர்களை விடுதலை செய்ய பெர்சிய ராஜாவான “கோரேசின் மனதை யெகோவா தூண்டினார்.” யூதர்கள் தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பிப் போய், ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டலாம்’ என்று ராஜா அறிவிப்பு செய்தார். (எஸ்றா 1:1, 3) இந்த அறிவிப்பைக் கேட்டபோது அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! ராஜா இப்படி அறிவிப்பு செய்ததால் கடவுள் கொடுத்த தேசத்துக்குப் போய்த் திரும்பவும் அவர்களால் அவரை வணங்க முடியும்.
2. எருசலேமுக்குத் திரும்பி வந்த யூதர்கள் சீக்கிரத்திலேயே என்ன வேலையைச் செய்து முடித்தார்கள்?
2 அடிமைகளாக இருந்த யூதர்களில் சிலர் கி.மு. 537-ல் எருசலேமுக்குத் திரும்பி வந்தார்கள். தெற்கு ராஜ்யமான யூதாவுக்கு அதுதான் தலைநகரமாக இருந்தது. சீக்கிரத்திலேயே ஆலயத்தைக் கட்டும் வேலையை அவர்கள் ஆரம்பித்தார்கள். கி.மு. 536-க்குள் ஆலயத்தின் அஸ்திவாரத்தைப் போட்டு முடித்தார்கள்.
3. யூதர்களுக்கு என்ன எதிர்ப்பு வந்தது?
3 ஆலயத்தைக் கட்ட ஆரம்பித்ததும் யூதர்களுக்குப் பயங்கர எதிர்ப்பு வந்தது. சுற்றியிருந்த ஜனங்கள், “யூதா ஜனங்களைச் சோர்ந்துபோக வைத்து கட்டுமான வேலையை நிறுத்துவதற்காக முயற்சி செய்துகொண்டே இருந்தார்கள்.” (எஸ்றா 4:4) யூதர்களின் நிலைமையை இன்னும் மோசமாக்கும் விதமாக அடுத்து சில விஷயங்கள் நடந்தன. கி.மு. 522-ல் அர்தசஷ்டா பெர்சியாவின் ராஜாவானார். * புது ராஜாவைக் கைக்குள் போட்டுக்கொண்டு ‘சட்டத்தின் பெயரில் பிரச்சினை உண்டாக்கி’ ஆலயத்தின் கட்டுமான வேலைக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம் என்று எதிரிகள் நினைத்தார்கள். (சங். 94:20) ராஜாவுக்கு எதிராக யூதர்கள் கலகம் செய்ய திட்டம் போட்டிருப்பதாக அவர்கள் கடிதம் எழுதி அனுப்பினார்கள். (எஸ்றா 4:11-16) அவர்கள் சொன்ன பொய்களை நம்பி ஆலயத்தின் கட்டுமான வேலைக்கு ராஜா தடை உத்தரவு போட்டார். (எஸ்றா 4:17-23) அதனால், யூதர்கள் சந்தோஷமாக ஆரம்பித்த கட்டுமான வேலை அப்படியே நின்றுவிட்டது.—எஸ்றா 4:24.
4. ஆலயத்தைத் திரும்பக் கட்டும் வேலைக்கு எதிரிகள் தடை போட்டபோது யெகோவா என்ன செய்தார்? (ஏசாயா 55:11)
4 யெகோவாவை வணங்காத அந்தத் தேசத்து மக்களும் பெர்சிய அரசாங்கத்திலிருந்த சிலரும் ஆலயத்தின் கட்டுமான வேலைக்கு முடிவுகட்ட வேண்டும் என்பதில் குறியாக இருந்தார்கள். ஆனால், யூதர்கள் ஆலயத்தைத் திரும்பக் கட்ட வேண்டும் என்பதில் யெகோவா குறியாக இருந்தார். அவர் எப்போதுமே தன்னுடைய நோக்கத்தை நிறைவேற்றும் கடவுள். (ஏசாயா 55:11-ஐ வாசியுங்கள்.) அதனால், சகரியாவைத் தன்னுடைய தீர்க்கதரிசியாக யெகோவா தேர்ந்தெடுத்தார். யூத மக்களை சகரியா உற்சாகப்படுத்த வேண்டும் என்பதற்காக சிலிர்க்க வைக்கிற எட்டு தரிசனங்களை அவருக்குக் காட்டினார். எதிரிகளைப் பார்த்து பயப்பட வேண்டிய அவசியம் இல்லை என்பதைப் புரிந்துகொள்ள யூதர்களுக்கு இந்தத் தரிசனங்கள் உதவி செய்திருக்கும். யெகோவா கொடுத்த வேலையைத் தொடர்ந்து தைரியமாக செய்வதற்கும் அது அவர்களை உற்சாகப்படுத்தியது. ஐந்தாவது தரிசனத்தில், சகரியா ஒரு குத்துவிளக்கையும் இரண்டு ஒலிவ மரங்களையும் பார்த்தார்.
5. இந்தக் கட்டுரையில் நாம் எதைப் பற்றிப் பார்க்கப்போகிறோம்?
5 சகரியாவுக்கு காட்டிய ஐந்தாவது தரிசனத்தின் மூலம் சோர்ந்துபோயிருந்த இஸ்ரவேலர்களை யெகோவா உற்சாகப்படுத்தினார். அந்தத் தரிசனம் நமக்கும் பிரயோஜனமாக இருக்கும். ஏனென்றால், நாம் எல்லாருமே சிலசமயங்களில் சோர்ந்துவிடுகிறோம். உதாரணத்துக்கு, நமக்கு எதிர்ப்புகள் வருகின்றன, நம்முடைய சூழ்நிலை மாறுகிறது. சில ஆலோசனைகளைப் புரிந்துகொள்வது நமக்குக் கஷ்டமாக இருக்கிறது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்வதற்கு இந்தத் தரிசனம் நமக்கு உதவும். இதைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
மக்கள் நம்மை எதிர்க்கும்போது
6. குத்துவிளக்கையும் இரண்டு ஒலிவ மரங்களையும் பற்றி சகரியா 4:1-3-ல் இருக்கிற தரிசனம் யூதர்களுக்கு எப்படித் தைரியம் கொடுத்தது? (அட்டைப் படம்)
6 சகரியா 4:1-3-ஐ வாசியுங்கள். குத்துவிளக்கையும் இரண்டு ஒலிவ மரங்களையும் பற்றி சகரியா பார்த்த தரிசனம், எதிர்ப்பின் மத்தியிலும் வேலையைத் தொடர்ந்து செய்ய யூதர்களுக்குத் தைரியம் கொடுத்தது. அது எப்படியென்று பார்க்கலாம். அந்தக் குத்துவிளக்கு தொடர்ந்து எரிவதற்கு எண்ணெய் எப்படிக் கிடைத்ததென்று கவனித்தீர்களா? அந்த இரண்டு ஒலிவ மரங்களும் குத்துவிளக்குக்கு மேலே இருக்கிற கிண்ணத்தை எண்ணெயால் நிரப்பிக்கொண்டே இருந்ததால் குத்துவிளக்கில் இருந்த ஏழு அகல் விளக்குகளுக்கும் எண்ணெய் கிடைத்துக்கொண்டே இருந்தது. அதனால், அந்த விளக்குகள் அணையாமல் எரிந்துகொண்டே இருந்தன. யெகோவா அனுப்பிய தேவதூதரிடம், “என் எஜமானே, இவற்றின் அர்த்தம் என்ன?” என்று சகரியா கேட்டபோது, “‘படை பலத்தாலும் அல்ல, மனித சக்தியாலும் அல்ல, என்னுடைய சக்தியால்தான் எல்லாமே நடக்கும்’ என்று பரலோகப் படைகளின் யெகோவா சொல்கிறார்” என்று அவர் சொன்னார். (சக. 4:4, 6) ஒலிவ மரங்களிலிருந்து வருகிற எண்ணெய் கடவுளுடைய சக்தியைக் குறிக்கிறது. அந்தச் சக்திக்கு இருக்கிற வல்லமை ஒருநாளும் குறையாது. யெகோவாவின் சக்திக்கு முன்னால் பெர்சிய சாம்ராஜ்யத்தின் படைபலம் எல்லாம் ஒன்றுமே இல்லை. ஆலயத்தைக் கட்டுபவர்களோடு யெகோவா இருப்பதால் எதிர்ப்பின் மத்தியிலும் அவர்களால் அந்த வேலையைச் செய்துமுடிக்க முடியும். இந்தச் செய்தி யூதர்களுக்கு ரொம்ப உற்சாகமாக இருந்திருக்கும், இல்லையா? அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், யெகோவாமேல் நம்பிக்கை வைத்து திரும்பவும் வேலையை ஆரம்பிக்க வேண்டும். அதனால், தடை உத்தரவு ஒருபக்கம் இருந்தாலும் அவர்கள் தைரியமாக வேலையை ஆரம்பித்தார்கள்.
7. என்ன மாற்றம் யூதர்களுக்கு நிம்மதியைக் கொடுத்தது?
7 பெர்சிய ஆட்சியில் ஏற்பட்ட ஒரு மாற்றம் ஆலயத்தைக் கட்டிக்கொண்டிருந்த யூதர்களுக்கு நிம்மதியைக் கொடுத்தது. அது என்ன மாற்றம்? முதலாம் தரியு பெர்சியாவின் ராஜாவாக ஆன இரண்டாவது வருஷத்தில், அதாவது கி.மு. 520-ல், ஆலயத்தைக் கட்டுவதற்கு எதிராகப் போடப்பட்ட தடை உத்தரவு சட்டவிரோதமானது என்று தெரிய வந்தது. அதனால், ஆலயத்தைக் கட்டி முடிப்பதற்கு அவர் அனுமதி கொடுத்தார். (எஸ்றா 6:1-3) இந்தச் செய்தியே அவர்களுக்கு ரொம்ப ஆச்சரியமாக இருந்தது. ஆனால், அதைவிட இன்னும் ஆச்சரியமான ஒரு செய்தி அவர்களுக்குக் காத்துக்கொண்டிருந்தது. சுற்றியிருந்த ஜனங்கள், ஆலயத்தைக் கட்டும் வேலையில் தலையிடக் கூடாது என்று ராஜா உத்தரவு போட்டார். அதோடு, ஆலயத்தைக் கட்டி முடிப்பதற்குத் தேவையான பணத்தையும் மற்ற எல்லாவற்றையும் கொடுக்கச் சொல்லியும் அவர்களுக்கு உத்தரவு போட்டார். (எஸ்றா 6:7-12) அதனால், நான்கு வருஷங்கள் கழித்து, அதாவது கி.மு. 515-ல், யூதர்கள் ஆலயத்தைக் கட்டி முடித்தார்கள்.—எஸ்றா 6:15.
8. எதிர்ப்புகள் வந்தாலும் நீங்கள் ஏன் தைரியமாக இருக்கலாம்?
8 இன்றைக்கும், யெகோவாவை வணங்குகிற நிறைய பேருக்கு எதிர்ப்புகள் இருக்கின்றன. உதாரணத்துக்கு, சில நாடுகளில் இருக்கிற அரசாங்கங்கள் நம்முடைய வேலைக்குக் கட்டுப்பாடுகள் போட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட நாடுகளில் வாழ்கிற நம்முடைய சகோதரர்களை அந்த அரசாங்கங்கள் கைது செய்து ‘ஆளுநர்களுக்கும் ராஜாக்களுக்கும் முன்னால் நிறுத்தலாம்.’ அவர்களுக்கு சாட்சி கொடுக்க இது வாய்ப்பளிக்கும். (மத். 10:17, 18) சிலசமயங்களில், ஆட்சி மாறும்போது சகோதர சகோதரிகளுக்கு நிம்மதி கிடைக்கலாம். இல்லையென்றால், நியாயமாக நடந்துகொள்கிற ஒரு நீதிபதி நம்முடைய வேலைக்குச் சாதகமாக தீர்ப்பு சொல்லலாம். யெகோவாவின் சாட்சிகள் சிலருக்கு வேறுவிதமான எதிர்ப்புகள் வருகின்றன. அவர்கள் வாழ்கிற நாட்டில் யெகோவாவை வணங்குவதற்கு எந்தத் தடையும் இல்லையென்றாலும், குடும்பத்தில் இருந்து எதிர்ப்பு வருகிறது. யெகோவாவை வணங்குவதை எப்படியாவது தடுக்க வேண்டும் என்பதில் அவர்களுடைய குடும்பத்தார் குறியாக இருக்கிறார்கள். (மத். 10:32-36) ஆனால், என்ன செய்தாலும் அவர்கள் யெகோவாவை வணங்குவதைத் தடுக்க முடியாது என்பதைப் புரிந்துகொள்ளும்போது அவர்களை எதிர்ப்பதை விட்டுவிடுகிறார்கள். சொல்லப்போனால், கடுமையாக எதிர்த்த சிலர் பின்பு சுறுசுறுப்பாக யெகோவாவுக்கு சேவை செய்பவர்களாக ஆகியிருக்கிறார்கள். உங்களுக்கு எதிர்ப்புகள் வரும்போது சோர்ந்துபோய் யெகோவாவை வணங்குவதை நிறுத்திவிடாதீர்கள், தைரியமாக இருங்கள். தன்னுடைய சக்தியைக் கொடுத்து யெகோவா உங்களுக்கு உதவி செய்வதால் நீங்கள் எதை நினைத்தும் பயப்பட வேண்டியதில்லை.
நம் சூழ்நிலை மாறும்போது
9. புது ஆலயத்துக்குப் போடப்பட்ட அஸ்திவாரத்தைப் பார்த்து யூதர்கள் சிலர் ஏன் அழுதார்கள்?
9 புது ஆலயத்துக்குப் போடப்பட்ட அஸ்திவாரத்தைப் பார்த்து, வயதான யூதர்கள் சிலர் அழுதார்கள். (எஸ்றா 3:12) ஏனென்றால், சாலொமோன் கட்டிய பிரமாண்டமான ஆலயத்தை அவர்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த ஆலயத்தோடு ஒப்பிடும்போது தாங்கள் கட்டுகிற புது ஆலயம், “ஒன்றுமே இல்லையென்று” அவர்கள் நினைத்தார்கள். (ஆகா. 2:2, 3) இப்படி, இரண்டு ஆலயத்துக்கும் இருக்கிற வித்தியாசத்தை யோசித்துப் பார்த்தபோது, அதை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தங்களுடைய சோகத்தை சந்தோஷமாக மாற்ற சகரியா பார்த்த தரிசனம் அவர்களுக்கு உதவியிருக்கும். எப்படி?
10. சகரியா 4:8-10-ல் தேவதூதர் சொன்ன வார்த்தைகள் சோகத்திலிருந்து வெளியே வர யூதர்களுக்கு எப்படி உதவியது?
10 சகரியா 4:8-10-ஐ வாசியுங்கள். யூத ஆளுநர் “செருபாபேலின் கையில் இருக்கும் தூக்குநூலை பார்த்து ஜனங்கள் நிச்சயம் சந்தோஷப்படுவார்கள்” என்று தேவதூதர் சொன்னதன் அர்த்தம் என்ன? ஒரு சுவர் நேராக... சரியாக... இருக்கிறதா என்று பார்ப்பதற்கு தூக்குநூலைப் பயன்படுத்துவார்கள். அப்படியென்றால், அந்தத் தேவதூதர் தூக்குநூலைப் பற்றிச் சொன்னதன் மூலம் முக்கியமான ஒரு விஷயத்தைக் கடவுளுடைய மக்களுக்குப் புரியவைத்தார். அந்த ஆலயம் பார்ப்பதற்கு சாதாரணமாகத் தெரிந்தாலும், அது முழுமையாகக் கட்டி முடிக்கப்படும் என்பதையும் அது யெகோவா எதிர்பார்க்கிற விதமாக இருக்கும் என்பதையும் புரியவைத்தார். அதைப் பார்த்து யெகோவாவே சந்தோஷப்படுவார் என்றால் யூதர்களும் சந்தோஷப்பட வேண்டும்தானே? புது ஆலயத்தில், தான் எதிர்பார்க்கிற விதமாக ஜனங்கள் தன்னை வணங்க வேண்டும் என்பதுதான் யெகோவாவுக்கு முக்கியமாக இருந்தது. அவர்கள் யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி அவரை வணங்கி, அவருக்குப் பிரியமாக நடந்துகொண்டால் அவர்களுடைய வாழ்க்கையில் திரும்பவும் சந்தோஷம் களைகட்டும்.
11. யெகோவாவை வணங்குகிற சிலருக்கு எது கஷ்டமாக இருக்கிறது?
11 நம்முடைய சூழ்நிலை மாறும்போது அதை ஏற்றுக்கொள்வது நமக்குக் கஷ்டமாகத்தான் இருக்கும். நிறைய வருஷமாக செய்துகொண்டிருந்த ஒரு விசேஷ முழுநேர சேவையை விட்டுவிட்டு வேறொரு நியமிப்பை செய்யும் சூழ்நிலை சிலருக்கு வந்திருக்கிறது. இன்னும் சிலருக்கு வயதாகிவிட்டதால் அவர்களுக்குப் ரொம்பப் பிடித்த நியமிப்பை விடவேண்டிய நிலைமை வந்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட மாற்றங்கள் வரும்போது நாம் சோர்ந்துபோவது இயல்புதான். ஆரம்பத்தில் இந்த மாற்றம் ஏன் வந்தது என்று புரியாமல் நாம் குழம்பிப்போகலாம். அதை ஏற்றுக்கொள்வது நமக்குக் கஷ்டமாக இருக்கலாம். ‘முன்னாடியெல்லாம் யெகோவாவுக்கு நான் எவ்வளவு செஞ்சேன், இப்போ அந்தளவுக்கு செய்ய முடியலையே’ என்று நினைத்து நாம் கவலைப்படலாம். (நீதி. 24:10) கடவுளுக்கு நம்மால் முடிந்ததையெல்லாம் செய்ய சகரியா பார்த்த தரிசனம் நமக்கு எப்படி உதவும்?
12. சூழ்நிலை மாறும்போதும் சந்தோஷமாக இருக்க சகரியா பார்த்த தரிசனம் நமக்கு எப்படி உதவும்?
12 நம்முடைய சூழ்நிலையை யெகோவா பார்க்கும் விதமாகப் பார்க்க நாம் முயற்சி செய்வோம். அப்போதுதான், நம்முடைய சூழ்நிலையில் மாற்றங்கள் வரும்போது அதைச் சமாளிப்பது நமக்குச் சுலபமாக இருக்கும். இன்றைக்கு யெகோவா பெரிய பெரிய காரியங்களைச் செய்துகொண்டிருக்கிறார். அவருடைய சக வேலையாட்களாக இருக்கிற பெரிய பாக்கியத்தை நமக்குக் கொடுத்திருக்கிறார். (1 கொ. 3:9) நம்முடைய நியமிப்புகளில் மாற்றங்கள் வரலாம். ஆனால், யெகோவா நம்மேல் வைத்திருக்கிற அன்பு ஒருநாளுமே மாறாது. ஒருவேளை, அமைப்பில் செய்திருக்கிற ஒரு மாற்றத்தால் உங்களுடைய நியமிப்பு மாறிவிட்டதென்றால் ‘ஏன்? எதுக்கு?’ என்றெல்லாம் ரொம்ப யோசித்து உங்களையே குழப்பிக்கொள்ளாதீர்கள். “அந்தக் காலம் எவ்வளவு நன்றாக இருந்தது!” என்று யோசிப்பதற்குப் பதிலாக உங்களால் செய்ய முடிந்த நல்ல விஷயங்களை யோசிக்க உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள். (பிர. 7:10) செய்ய முடியாததைப் பற்றி யோசிக்காமல் செய்ய முடிந்ததைப் பற்றி யோசியுங்கள். சகரியா பார்த்த தரிசனத்திலிருந்து நம்பிக்கையான மனநிலையோடு இருப்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் புரிந்துகொள்கிறோம். அப்படிப்பட்ட மனநிலையை வளர்த்துக்கொண்டால்தான் நம்முடைய சூழ்நிலை மாறினாலும் நம்மால் சந்தோஷமாகவும் யெகோவாவுக்கு உண்மையாகவும் இருக்க முடியும்.
ஆலோசனைக்குக் கீழ்ப்படிவது கஷ்டமாக இருக்கும்போது
13. ஆலயம் கட்டும் வேலையைத் திரும்ப ஆரம்பிப்பது ஒரு தப்பான முடிவு என்று சில இஸ்ரவேலர்கள் ஏன் நினைத்திருக்கலாம்?
13 ஆலயத்தைக் கட்டும் வேலை தடை செய்யப்பட்டுத்தான் இருந்தது. ஆனாலும், மக்களை வழிநடத்திய தலைமைக் குருவான யெசுவாவும், அதாவது யோசுவாவும், ஆளுநர் செருபாபேலும் “ஆலயத்தைத் திரும்பக் கட்ட ஆரம்பித்தார்கள்.” (எஸ்றா 5:1, 2) அது ஒரு தப்பான தீர்மானமாக யூதர்கள் சிலருக்குத் தோன்றியிருக்கலாம். ஏனென்றால் ஆலயத்தைத் திரும்பக் கட்டினால், அது கண்டிப்பாக எதிரிகளுக்குத் தெரியவரும். அந்த வேலையைத் தடுப்பதற்கு அவர்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்வார்கள். அதனால், யெகோவாவின் உதவி தங்களுக்கு இருக்கிறது என்ற நம்பிக்கை யோசுவாவுக்கும் செருபாபேலுக்கும் தேவைப்பட்டது. யெகோவாவும் அந்த நம்பிக்கையை அவர்களுக்குக் கொடுத்தார். எப்படி?
14. சகரியா 4:12, 14 சொல்கிறபடி, தலைமைக் குரு யோசுவாவுக்கும் ஆளுநர் செருபாபேலுக்கும் என்ன நம்பிக்கை கிடைத்தது?
14 சகரியா 4:12-ஐயும் 14-ஐயும் வாசியுங்கள். தரிசனத்தின் இந்தப் பாகத்தில் வரும் இரண்டு ஒலிவ மரங்கள், “அபிஷேகம் செய்யப்பட்ட இரண்டு பேரை,” அதாவது யோசுவாவையும் செருபாபேலையும் குறிப்பதாக சகரியாவிடம் தேவதூதர் சொன்னார். இவர்கள் இரண்டு பேரும் அடையாள அர்த்தத்தில் “முழு பூமிக்கும் எஜமானாக இருக்கிறவருக்குப் பக்கத்தில் நின்றுகொண்டிருப்பவர்கள்” என்று அந்த தேவதூதர் சொன்னார். இது எவ்வளவு பெரிய விஷயம் இல்லையா? அவர்களை யெகோவா முழுமையாக நம்பினார். அவர்களை வைத்துதான் இஸ்ரவேலர்களை அவர் வழிநடத்தினார். அதனால், இஸ்ரவேலர்களும் அவர்கள் கொடுக்கிற வழிநடத்துதலைத் தாராளமாக நம்பி அதற்குக் கீழ்ப்படியலாம்.
15. பைபிளிலிருந்து கடவுள் கொடுக்கிற ஆலோசனைகளை நாம் மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்?
15 இன்றைக்கு தன்னுடைய மக்களுக்குத் தேவையான ஆலோசனையையும் வழிநடத்துதலையும் யெகோவா தன்னுடைய வார்த்தையான பைபிள் மூலமாகத் தொடர்ந்து கொடுக்கிறார். தன்னை எப்படி வணங்க வேண்டுமென்று பைபிள் மூலமாக நமக்குச் சொல்லிக்கொடுக்கிறார். பைபிளிலிருந்து யெகோவா கொடுக்கிற ஆலோசனைகளை நாம் மதிக்கிறோம் என்பதை எப்படிக் காட்டலாம்? பைபிளைக் கவனமாகப் படித்துப் புரிந்துகொள்ள நேரம் ஒதுக்குவதன் மூலமாகக் காட்டலாம். நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘பைபிளயும் மத்த பிரசுரங்களயும் வாசிக்குறப்போ நிறுத்தி நிதானமா வாசிச்சு, அத பத்தி ஆழமா யோசிச்சு பாக்குறேனா? “புரிந்துகொள்வதற்குக் கடினமாக” இருக்கிற பைபிள் உண்மைகள பத்தி நான் நல்லா ஆராய்ச்சி செஞ்சு பாக்குறேனா, இல்லன்னா வேக வேகமா படிச்சுட்டு போறேனா?’ (2 பே. 3:16) யெகோவா நமக்குக் கற்றுக்கொடுக்கிற விஷயங்களை ஆழமாக யோசித்துப்பார்ப்பதற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அப்போதுதான், அவர் கொடுக்கிற ஆலோசனைப்படி நம்மால் நடக்க முடியும், நன்றாக ஊழியம் செய்யவும் முடியும்.—1 தீ. 4:15, 16.
16. “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” கொடுக்கிற ஆலோசனை நமக்கு முழுமையாகப் புரியவில்லை என்றாலும் அதற்குக் கீழ்ப்படிய எது நமக்கு உதவும்?
16 “உண்மையும் விவேகமும் உள்ள அடிமை” மூலமாகவும் யெகோவா நமக்கு ஆலோசனை கொடுக்கிறார். (மத். 24:45) சிலசமயங்களில், அவர்கள் கொடுக்கிற ஆலோசனையை நம்மால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் இருக்கலாம். உதாரணத்துக்கு, இயற்கைப் பேரழிவிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்யலாம் என்பதைப் பற்றி அவர்கள் குறிப்பாக சில ஆலோசனைகளைக் கொடுக்கலாம். ஆனால், நாம் வாழ்கிற இடத்தில் அப்படியொரு பேரழிவு வருவதற்கு வாய்ப்பே இல்லை என்று நாம் நினைக்கலாம். பெருந்தொற்று சமயத்தில், நம்முடைய அமைப்பு அளவுக்கு அதிகமாக கட்டுப்பாடுகளைப் போடுவதாக நாம் நினைக்கலாம். அமைப்பு கொடுக்கிற ஆலோசனைகள் நடைமுறைக்கு ஒத்துவராதது போல் நமக்குத் தெரிந்தால் என்ன செய்வது? யோசுவாவும் செருபாபேலும் யெகோவா கொடுத்த ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிந்ததால் இஸ்ரவேலர்கள் எப்படிப் பிரயோஜனம் அடைந்தார்கள் என்று நாம் யோசித்துப்பார்க்கலாம். பைபிளிலிருந்து நாம் படித்த மற்ற பதிவுகளைப் பற்றியும் யோசித்துப்பார்க்கலாம். சிலசமயங்களில், கடவுளுடைய மக்களுக்குக் கிடைத்த ஆலோசனைகள் நடைமுறைக்கு ஒத்துவராத மாதிரி தெரிந்தாலும் அது அவர்களுடைய உயிரைக் காப்பாற்றியிருக்கிறது.—நியா. 7:7; 8:10.
சகரியா பார்த்ததை நீங்களும் பாருங்கள்
17. குத்துவிளக்கையும் இரண்டு ஒலிவ மரங்களையும் பற்றி சகரியா பார்த்த தரிசனம் யூதர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருந்தது?
17 குத்துவிளக்கையும் இரண்டு ஒலிவ மரங்களையும் பற்றி சகரியா பார்த்த ஐந்தாவது தரிசனம் சிறியதுதான். ஆனாலும், ஆலயத்தைக் கட்டும் வேலையைச் சுறுசுறுப்பாக செய்வதற்கும் யெகோவாவை ஆர்வமாக வணங்குவதற்கும் யூதர்களுக்கு அது உதவியது. அந்தத் தரிசனத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டார்களோ அதன்படி செய்ததால், யெகோவாவின் உதவியும் வழிநடத்துதலும் அவர்களுக்குக் கிடைத்தது. அவர்கள் தொடர்ந்து வேலை செய்வதற்கும் இழந்துபோன சந்தோஷம் திரும்பக் கிடைப்பதற்கும் யெகோவா அவருடைய சக்தியைக் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்தார்.—எஸ்றா 6:16.
18. சகரியா பார்த்த தரிசனம் உங்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?
18 குத்துவிளக்கையும் இரண்டு ஒலிவ மரங்களையும் பற்றி சகரியா பார்த்த தரிசனம் உங்களுக்கும் ரொம்ப பிரயோஜனமாக இருக்கும். நாம் இதுவரை பார்த்தபடி, எதிர்ப்புகள் வந்தாலும் அதைச் சமாளிப்பதற்குத் தேவையான பலத்தை அது உங்களுக்குக் கொடுக்கும். உங்களுடைய சூழ்நிலை மாறினாலும் சந்தோஷமாக இருக்க உதவும். உங்களுக்குக் கிடைக்கிற ஓர் ஆலோசனையைப் புரிந்துகொள்வது கஷ்டமாக இருந்தாலும் அதற்குக் கீழ்ப்படிவதற்குத் தேவையான நம்பிக்கையைக் கொடுக்கும். அப்படியென்றால் உங்களுடைய வாழ்க்கையில் சவால்கள் வந்தால் நீங்கள் என்ன செய்யலாம்? முதலில், சகரியா பார்த்ததை நீங்களும் பாருங்கள். அதாவது, யெகோவா தன்னுடைய மக்களுடைய தேவைகளைக் கவனித்துக்கொள்கிறார் என்பதற்கான ஆதாரங்களைப் பாருங்கள். யெகோவாமேல் நம்பிக்கை வைத்து தொடர்ந்து முழு இதயத்தோடு அவரை வணங்குங்கள். (மத். 22:37) அப்படிச் செய்தால், என்றென்றும் சந்தோஷமாக சேவை செய்ய அவர் உங்களுக்கு உதவுவார்.—கொலோ. 1:10, 11.
பாட்டு 7 யெகோவாவே என் பலம்
^ பாரா. 5 தூய வணக்கத்தைத் திரும்பவும் ஆரம்பிப்பதில் யெகோவாவின் மக்களுக்குச் சில சவால்கள் இருந்தன. அதனால், அவர்களைப் பலப்படுத்துவதற்காக சகரியா தீர்க்கதரிசிக்கு யெகோவா சிலிர்க்க வைக்கிற சில தரிசனங்களைக் காட்டினார். சவால்களைச் சமாளிக்க சகரியாவுக்கும் அந்த மக்களுக்கும் இவை உதவின. சவால்கள் மத்தியில் யெகோவாவுக்கு உண்மையாகச் சேவை செய்ய அந்தத் தரிசனங்கள் நமக்கும் உதவும். சகரியா பார்த்த தரிசனங்களில் ஒன்று, குத்துவிளக்கையும் ஒலிவ மரங்களையும் பற்றியது. அந்தத் தரிசனத்திலிருந்து என்ன முக்கியமான பாடங்களை நாம் கற்றுக்கொள்ளலாம் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கப்போகிறோம்.
^ பாரா. 3 பல வருஷங்கள் கழித்து, ஆளுநரான நெகேமியாவின் காலத்தில் இன்னொரு அர்தசஷ்டா ராஜா ஆட்சி செய்தார். அவர் யூதர்களுக்கு ஆதரவாக இருந்தார்.
^ பாரா. 60 படவிளக்கம்: வயதானதாலும், உடல்நல பிரச்சினைகளாலும் ஒரு சகோதரரின் சூழ்நிலை மாறுகிறது. அதற்கு ஏற்ற விதமாக தன்னை மாற்றிக்கொள்வது முக்கியம் என்று அவர் யோசித்துப்பார்க்கிறார்.
^ பாரா. 62 படவிளக்கம்: யோசுவாவுக்கும் செருபாபேலுக்கும் யெகோவா உதவி செய்தது போலவே ‘உண்மையும் விவேகமும் உள்ள அடிமைக்கும்’ அவர் உதவி செய்கிறார் என்பதை ஒரு சகோதரி யோசித்துப்பார்க்கிறார்.