Skip to content

பொருளடக்கத்திற்குச் செல்

படிப்புக் கட்டுரை 11

ஞானஸ்நானம் எடுத்த பிறகும் தொடர்ந்து “புதிய சுபாவத்தை” அணிந்துகொள்ளுங்கள்

ஞானஸ்நானம் எடுத்த பிறகும் தொடர்ந்து “புதிய சுபாவத்தை” அணிந்துகொள்ளுங்கள்

“புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்.”—கொலோ. 3:10.

பாட்டு 49 யெகோவாவின் நெஞ்சத்தை மகிழ்விப்போம்

இந்தக் கட்டுரையில்... *

1. நம்முடைய சுபாவம் எதைப் பொறுத்திருக்கிறது?

 நாம் ஞானஸ்நானம் எடுத்து சில நாட்கள்தான் ஆகியிருக்கலாம், இல்லையென்றால், பல வருஷங்கள் ஆகியிருக்கலாம். எப்படியிருந்தாலும் சரி, யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி நம்முடைய சுபாவம் இருக்க வேண்டும் என்பதுதான் நம் எல்லாருடைய ஆசை. அதற்கு நாம் யோசிக்கிற விதத்தை மாற்றிக்கொள்வது ரொம்ப முக்கியம். ஏனென்றால், நம்முடைய சுபாவம் நாம் யோசிக்கிற விதத்தைப் பொறுத்துதான் இருக்கிறது. நம்முடைய ஆசைகளைத் திருப்தி செய்வதைப் பற்றியே நாம் எப்போதும் யோசித்துக்கொண்டிருந்தால், மோசமான விஷயங்களைப் பேசிவிடுவோம் அல்லது அதைச் செய்துவிடுவோம். (எபே. 4:17-19) ஆனால், நல்ல விஷயங்களையே நாம் யோசித்துக்கொண்டிருந்தால் யெகோவா அப்பாவைச் சந்தோஷப்படுத்தும் விதமாகப் பேசுவோம், நடந்துகொள்வோம்.—கலா. 5:16.

2. இந்தக் கட்டுரையில் என்னென்ன கேள்விகளுக்குப் பதில்களைப் பார்ப்போம்?

2 போன கட்டுரையில் பார்த்தபடி, கெட்ட எண்ணங்கள் நமக்குள் வராதபடி நம்மால் முழுமையாகத் தடுக்க முடியாதுதான். ஆனால், அந்த எண்ணங்களின்படி நாம் செய்யாமல் இருக்க முடியும். ஞானஸ்நானம் எடுப்பதற்கு முன்பே யெகோவா வெறுக்கிற விதமாக பேசுவதையும் நடந்துகொள்வதையும் நாம் நிறுத்த வேண்டும். சொல்லப்போனால், நம்முடைய பழைய சுபாவத்தைத் தூக்கிப்போடுவதற்கு நாம் செய்ய வேண்டிய முக்கியமான முதல் படியே அதுதான். யெகோவாவை முழுமையாக சந்தோஷப்படுத்த நாம் இன்னொரு விஷயத்தையும் செய்ய வேண்டும். “புதிய சுபாவத்தை அணிந்துகொள்ளுங்கள்” என்ற கட்டளைக்குக் கீழ்ப்படிய வேண்டும். (கொலோ. 3:10) ‘புதிய சுபாவம்’ என்றால் என்ன? அதை அணிந்துகொள்வதற்கும் தக்க வைத்துக்கொள்வதற்கும் நாம் என்ன செய்ய வேண்டும்? இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

‘புதிய சுபாவம்’ என்றால் என்ன?

3. ‘புதிய சுபாவம்’ என்றால் என்ன, அதை அணிந்திருக்கிற ஒருவர் எப்படி நடந்துகொள்வார்? (கலாத்தியர் 5:22, 23)

3 ‘புதிய சுபாவம்’ இருக்கிற ஒருவர் யெகோவாவைப் போலவே யோசிப்பார், நடந்துகொள்வார். அதோடு, கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களைக் காட்டுவார். தன்னுடைய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் செயல்களையும் கடவுளுடைய சக்தியின் உதவியோடு மாற்றிக்கொள்வார். (கலாத்தியர் 5:22, 23-ஐ வாசியுங்கள்.) உதாரணத்துக்கு, யெகோவாமேலும் அவருடைய மக்கள்மேலும் அன்பு காட்டுவார். (மத். 22:36-39) கஷ்டங்களைச் சகிக்க வேண்டியிருந்தாலும் சந்தோஷமாக இருப்பார். (யாக். 1:2-4) மற்றவர்களோடு சமாதானமாக இருப்பார். (மத். 5:9) பொறுமையாக இருப்பார், மற்றவர்களுக்குக் கருணை காட்டுவார். (கொலோ. 3:12, 13) நல்லதை நேசிப்பார், அதையே செய்வார். (லூக். 6:35) யெகோவாமேல் பலமான விசுவாசம் இருப்பதைத் தன்னுடைய செயல்களில் காட்டுவார். (யாக். 2:18) மற்றவர்கள் எரிச்சல்மூட்டினாலோ கோபப்படுத்தினாலோ சாந்தமாக நடந்துகொள்வார். கெட்டது செய்ய வேண்டும் என்ற ஆசை வந்தாலும் சுயக்கட்டுப்பாடோடு நடந்துகொள்வார்.—1 கொ. 9:25, 27; தீத். 3:2.

4. புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள கலாத்தியர் 5:22, 23-லும் மற்ற பைபிள் பதிவுகளிலும் சொல்லியிருக்கிற எல்லா குணங்களையும் நாம் ஏன் காட்ட வேண்டும்?

4 புதிய சுபாவத்தை அணிந்துகொள்வதற்கு கலாத்தியர் 5:22, 23-லும் மற்ற பைபிள் பதிவுகளிலும் சொல்லப்பட்டிருக்கிற குணங்களை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும். * நம்மால் ஒருசமயத்தில் ஒரு உடையைத்தான் போட முடியும். ஆனால், இந்தக் குணங்களைப் பொறுத்தவரை ஒருசமயத்தில் ஒரு குணத்தைத்தான் காட்ட முடியும் என்று கிடையாது. ஏனென்றால், இந்தக் குணங்கள் ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்துக்கு, மற்றவர்கள்மேல் நமக்கு உண்மையிலேயே அன்பு இருந்தால் அவர்களிடம் பொறுமையாக நடந்துகொள்வோம், அவர்களுக்குக் கருணை காட்டுவோம். நாம் உண்மையிலேயே நல்லவர்களாக இருக்க வேண்டுமென்றால் சாந்த குணத்தைக் காட்ட வேண்டும், சுய கட்டுப்பாடோடு நடந்துகொள்ள வேண்டும்.

புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள நாம் என்ன செய்ய வேண்டும்?

இயேசுவைப் போல யோசிக்க யோசிக்க அவருடைய சுபாவத்தை அப்படியே காட்டுவோம் (பாராக்கள் 5, 8, 10, 12, 14)

5. ‘கிறிஸ்துவின் சிந்தை இருக்க’ வேண்டுமென்றால் நாம் என்ன செய்ய வேண்டும், நாம் ஏன் இயேசுவின் வாழ்க்கையைப் பற்றி ஆழமாகப் படிக்க வேண்டும்? (1 கொரிந்தியர் 2:16)

5 ஒன்று கொரிந்தியர் 2:16-ஐ வாசியுங்கள். புதிய சுபாவத்தை அணிந்துகொள்ள நமக்கு ‘கிறிஸ்துவின் சிந்தை இருக்க வேண்டும்.’ அதாவது, இயேசு எப்படி யோசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டு அவரைப் போலவே நாம் யோசிக்க வேண்டும். கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை இயேசு நூறு சதவீதம் காட்டினார். ஒரு கண்ணாடி நம்முடைய உருவத்தை அப்படியே காட்டுகிற மாதிரி யெகோவாவின் குணங்களை இயேசு அப்படியே காட்டினார். (எபி. 1:3) இயேசுவைப் போல யோசிக்க யோசிக்க நாம் அவரைப் போலவே நடந்துகொள்வோம். அதோடு, அவருடைய சுபாவத்தை அப்படியே காட்டுவோம்.—பிலி. 2:5.

6. புதிய சுபாவத்தை அணிந்துகொள்வதற்கு நாம் முயற்சி செய்யும்போது எதையெல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்?

6 ‘இயேசு மாதிரியே என்னால நடந்துக்க முடியுமா? இயேசு பரிபூரணமானவர். அவர மாதிரி எல்லாம் நடக்க முடியாது’ என்று ஒருவேளை நீங்கள் யோசிக்கலாம். இப்படி நீங்கள் யோசித்தால், சில விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள். முதலாவதாக, யெகோவாவைப் போலவும் இயேசுவைப் போலவும் நடந்துகொள்கிற விதத்தில்தான் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம். அதனால், நாம் முயற்சி செய்தால் அவர்களைப் போல் நடந்துகொள்ள முடியும். நூறு சதவீதம் அவர்களைப் பின்பற்ற முடியவில்லை என்றாலும் ஓரளவுக்காவது முடியும். (ஆதி. 1:26) இரண்டாவதாக, இந்தப் பிரபஞ்சத்திலேயே கடவுளுடைய சக்திக்கு நிகர் வேறொன்றும் இல்லை. நம்முடைய பலத்தால் செய்ய முடியாத விஷயங்களைக்கூட கடவுளுடைய சக்தியின் உதவியால் செய்ய முடியும். மூன்றாவதாக, கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை இப்போதே நாம் நூறு சதவீதம் காட்ட வேண்டும் என்று யெகோவா எதிர்பார்ப்பதில்லை. சொல்லப்போனால், பூமியில் என்றென்றைக்கும் வாழும் நம்பிக்கை உள்ளவர்கள் பரிபூரணத்தை அடைவதற்காக யெகோவா 1,000 வருஷங்களைக் கொடுக்கப்போகிறார். (வெளி. 20:1-3) இப்போது யெகோவா நம்மிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறார் என்றால், புதிய சுபாவத்தை அணிந்துகொள்வதற்கு நம்மால் முடிந்தளவுக்கு முயற்சி செய்ய வேண்டும், உதவிக்காக அவரையே நம்பியிருக்க வேண்டும்.

7. எதைப் பற்றி இப்போது பார்க்கப்போகிறோம்?

7 கடவுளுடைய சக்தியால் உண்டாகிற நான்கு குணங்களைப் பற்றி நாம் இப்போது பார்க்கப்போகிறோம். அந்தக் குணங்களை இயேசு எப்படிக் காட்டினார், அதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம் என்பதையெல்லாம் தெரிந்துகொள்வோம். பிறகு, புதிய சுபாவத்தை நாம் இன்னும் நன்றாக வளர்த்துக்கொள்வதற்கு உதவுகிற சில கேள்விகளையும் பார்ப்போம்.

8. இயேசு எப்படியெல்லாம் அன்பு காட்டினார்?

8 யெகோவாமேல் இயேசு ரொம்ப அன்பு வைத்திருந்ததால் அவருக்காகவும் நமக்காகவும் நிறைய தியாகங்களைச் செய்தார். (யோவா. 14:31; 15:13) பூமியில் அவர் வாழ்ந்த விதத்திலிருந்து மக்கள்மேல் அவர் எந்தளவு அன்பு வைத்திருந்தார் என்பதைத் தெரிந்துகொள்கிறோம். ஒவ்வொரு நாளும் அவர் மக்களிடம் அன்பாகவும் கரிசனையாகவும் நடந்துகொண்டார். சுற்றியிருக்கிறவர்கள் எதிர்த்தபோதுகூட அப்படிச் செய்தார். முக்கியமாக, கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிச் சொல்லிக்கொடுப்பதன் மூலம் மக்கள்மேல் அன்பு காட்டினார். (லூக். 4:43, 44) கடவுள்மேலும் மக்கள்மேலும் ரொம்ப அன்பு இருந்ததால்தான், பாவிகளுடைய கையில் கொடூரமான மரணத்தைச் சந்திக்கவும் அவர் தயாராக இருந்தார். இப்படி, நாம் எல்லாருமே என்றென்றைக்கும் வாழ வழி செய்திருக்கிறார்.

9. இயேசுவைப் போலவே நாம் எப்படியெல்லாம் அன்பு காட்டலாம்?

9 யெகோவாமேல் அன்பு வைத்திருப்பதால்தான் நம்மையே அவருக்கு அர்ப்பணித்து ஞானஸ்நானம் எடுத்தோம். இயேசுவைப் போலவே மற்றவர்களை நல்ல விதத்தில் நடத்துவதன் மூலமாக யெகோவாமேல் இருக்கிற அன்பை நம்மால் காட்ட முடியும். “தான் பார்க்கிற சகோதரன்மேல் அன்பு காட்டாதவன், தான் பார்க்காத கடவுள்மேல் அன்பு காட்ட முடியாது” என்று அப்போஸ்தலன் யோவான் எழுதினார். (1 யோ. 4:20) அதனால், நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘மக்கள்மேல எனக்கு உண்மையான அன்பு இருக்கா? மத்தவங்க என்கிட்ட கடுகடுப்பா நடந்துகிட்டாகூட நான் அவங்ககிட்ட கரிசனையோட நடந்துக்குறேனா? யெகோவாவ பத்தி மத்தவங்களுக்கு கத்துக்கொடுக்க என்னோட நேரத்தயும் சக்தியயும் பயன்படுத்த அன்பு என்னை தூண்டுதா? அப்படி சொல்லிக்கொடுக்குறத நிறைய பேர் மதிக்கலனாலும், ஒருவேள எதிர்த்தாலும்கூட அப்படி செய்யணும்னு ஆசப்படுறேனா? இன்னும் நிறைய நேரம் ஊழியம் செய்றதுக்கு நான் என்னெல்லாம் பண்ணலாம்?’—எபே. 5:15, 16.

10. இயேசு எப்படி சமாதானம் பண்ணுகிறவராக இருந்தார்?

10 இயேசு சமாதானம் பண்ணுகிறவராக இருந்தார். மற்றவர்கள் அவரை மோசமாக நடத்தினாலும் அவர் பழிக்குப்பழி வாங்கவில்லை. அதற்குப் பதிலாக, அவர்களோடு சமாதானம் பண்ண முதல்படி எடுத்தார். பிரச்சினைகளைச் சரிசெய்வதற்கும் சமாதானமாக போவதற்கும் மற்றவர்களுக்குச் சொல்லிக்கொடுத்தார். உதாரணத்துக்கு, தங்களுடைய வணக்கத்தை யெகோவா ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றால் அவர்கள் மற்றவர்களோடு சமாதானமாவது முக்கியம் என்று இயேசு சொல்லிக்கொடுத்தார். (மத். 5:9, 23, 24) தங்களில் யார் பெரியவன் என்று அப்போஸ்தலர்கள் சண்டை போட்டபோதெல்லாம் அந்தப் பிரச்சினையைச் சரிசெய்ய இயேசு அவர்களுக்கு உதவி செய்தார்.—லூக். 9:46-48; 22:24-27.

11. சமாதானம் பண்ணுகிறவர்களாக இருக்க நாம் என்ன செய்யலாம்?

11 நாம் சமாதானம் பண்ணுகிறவராக இருக்க வேண்டுமென்றால் மற்றவர்களோடு பிரச்சினை வராதபடி பார்த்துக்கொண்டால் மட்டும் போதாது. அப்படி ஏதாவது பிரச்சினை வந்தால் அவர்களோடு சமாதானம் பண்ணுவதற்கு நாம்தான் முதல்படி எடுக்க வேண்டும். இப்படி நடந்துகொள்ள சகோதர சகோதரிகளையும் நாம் உற்சாகப்படுத்த வேண்டும். (பிலி. 4:2, 3; யாக். 3:17, 18) நம்மைநாமே இந்தக் கேள்விகளையெல்லாம் கேட்டுக்கொள்ளலாம்: ‘மத்தவங்களோட சமாதானம் பண்றதுக்கு சில விஷயங்கள விட்டுக்கொடுக்க நான் தயாரா இருக்குறேனா? ஒரு சகோதரனோ சகோதரியோ என்னை நோகடிச்சுட்டா அவங்கமேல நான் கோபமாவே இருக்குறேனா? என்மேல தப்பு இல்லனாகூட மத்தவங்களோட சமாதானம் பண்றதுக்கு நான் முதல்படி எடுக்குறேனா? இல்லனா தப்பு செஞ்சவர் என்கிட்ட வந்து சமாதானம் ஆகட்டும்னு நான் காத்துகிட்டிருக்கேனா? சகோதர சகோதரிகளுக்கு நடுவுல பிரச்சினை இருக்குன்னு தெரிய வந்தா சமாதானம் பண்றவங்களா இருக்க அவங்கள உற்சாகப்படுத்துறேனா?’

12. இயேசு எப்படி கருணை காட்டினார்?

12 மற்றவர்களுக்கு இயேசு கருணை காட்டினார். (மத். 11:28-30) கஷ்டமான சூழ்நிலையில்கூட அவர் மற்றவர்களிடம் மென்மையாக நடந்துகொண்டார், வளைந்துகொடுக்கிறவராக இருந்தார். உதாரணத்துக்கு, ஒரு பெனிக்கேய பெண் இயேசுவிடம் வந்து தன்னுடைய பிள்ளையைக் குணமாக்கும்படி கெஞ்சினாள். அவள் கேட்டதை உடனே இயேசு செய்யவில்லை என்றாலும் அவளுடைய விசுவாசத்தைப் பார்த்த பிறகு அவளுக்குக் கருணை காட்டி அவளுடைய பிள்ளையைக் குணப்படுத்தினார். (மத். 15:22-28) வேறெந்த விதத்தில் இயேசு கருணை காட்டினார்? தனக்கு நெருக்கமானவர்களுக்கு தேவைப்பட்ட நேரத்தில் ஆலோசனை கொடுத்தார், அவர்களைக் கண்டித்தார். இந்த விதத்தில் அவர்களுக்குக் கருணை காட்டினார். உதாரணத்துக்கு, ஒருசமயம் யெகோவாவின் விருப்பத்தை இயேசு செய்வதை பேதுரு தடுக்கப் பார்த்தார். அப்போது மற்ற சீஷர்களுக்கு முன்னால் அவரை இயேசு கண்டித்தார். (மாற். 8:32, 33) பேதுருவை அவமானப்படுத்துவதற்காக இயேசு அப்படிச் செய்யவில்லை. அவரை திருத்த வேண்டும் என்பதற்காகவும் அகங்காரமாக நடப்பது தவறு என்பதை மற்ற சீஷர்களுக்குப் புரிய வைப்பதற்காகவும்தான் அப்படிச் செய்தார். இயேசு கண்டித்தபோது பேதுருவுக்குக் கஷ்டமாகத்தான் இருந்திருக்கும். ஆனாலும், அது அவருக்குப் பிரயோஜனமாக இருந்தது.

13. மற்றவர்கள்மேல் நமக்குக் கருணை இருப்பதை நாம் எப்படிக் காட்டலாம்?

13 நமக்கு நெருக்கமானவர்கள்மேல் உண்மையிலேயே கருணை காட்டுகிறோம் என்றால், சில விஷயங்களை அவர்களிடம் நாம் வெளிப்படையாகப் பேச வேண்டியிருக்கும். அவர்களுக்கு ஆலோசனை கொடுக்க வேண்டியிருக்கும். அப்படிச் செய்யும்போது, இயேசுவைப் போலவே கடவுளுடைய வார்த்தையில் இருக்கிற நியமங்களின் அடிப்படையில் நாம் ஆலோசனை கொடுப்போம். அவர்களிடம் ரொம்பக் கனிவாகப் பேசுவோம். அவர்கள்மேல் ஒரு நல்ல அபிப்பிராயத்தை வளர்த்துக்கொள்வோம். யெகோவாமீதும் நம்மீதும் அவர்கள் அன்பு வைத்திருப்பதால் நாம் கொடுக்கிற ஆலோசனையை ஏற்றுக்கொள்வார்கள் என்று நம்ப வேண்டும். அப்படியென்றால் உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எனக்கு பிடிச்ச ஒருத்தர் தப்பு செய்றத பார்க்குறப்போ, அத பத்தி அவர்கிட்ட தைரியமா பேசுறேனா? அவருக்கு ஆலோசனை கொடுக்க வேண்டியிருந்தா அத கனிவா சொல்றேனா, இல்ல கோபமா சொல்றேனா? நான் என்ன நோக்கத்தோட ஆலோசனை கொடுக்குறேன்? அவங்க செய்தது எனக்கு பிடிக்கலங்குறதுக்காக ஆலோசன கொடுக்குறேனா, இல்ல அவங்களுக்கு உதவி செய்றதுக்காக ஆலோசனை கொடுக்குறேனா?’

14. நல்மனம் என்ற குணத்தை இயேசு எப்படிக் காட்டினார்?

14 இயேசு நல்மனம் உள்ளவராக இருந்தார். மற்றவர்களுக்கு எதைச் செய்வது நல்லது என்று அவர் தெரிந்துவைத்திருந்தார், அதையே செய்தார். எப்போதுமே நல்ல எண்ணத்தோடு அதைச் செய்தார். தன்னுடைய அப்பாமேல் அவருக்கு அன்பு இருந்ததால் அப்படிச் செய்தார். மற்றவர்களுக்கு உதவுவதற்கும் நல்லது செய்வதற்கும் வாய்ப்புகளைத் தேடினார். இயேசுவைப் போலவே நாமும் நடந்துகொள்ள வேண்டும். எது சரி என்று நாம் தெரிந்துவைத்திருப்பதோடு அதைச் செய்வதும் முக்கியம். அதுவும் நல்ல எண்ணத்தோடு செய்ய வேண்டும். ஆனால், ‘தப்பான எண்ணத்தோட நல்லது செய்ய முடியுமா?’ என்று சிலர் யோசிக்கலாம். அப்படிச் செய்ய வாய்ப்பிருக்கிறது. உதாரணத்துக்கு, மற்றவர்கள் பார்த்துப் புகழ வேண்டும் என்பதற்காக, சிலர் ஏழைகளுக்குத் தானதர்மம் செய்ததாக இயேசு சொன்னார். மற்றவர்கள் பார்வைக்கு அது நல்லதுபோல் இருந்தாலும் அதைப் பார்த்து யெகோவா சந்தோஷப்படவில்லை.—மத். 6:1-4.

15. நாம் எப்படி உண்மையிலேயே நல்லவர்களாக இருக்கலாம்?

15 பேர் புகழோ ஆதாயமோ கிடைக்க வேண்டும் என்பதற்காக நாம் நல்லது செய்யக் கூடாது. அப்போதுதான், நாம் உண்மையிலேயே நல்லவர்கள் என்று சொல்ல முடியும். அதனால், உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளலாம்: ‘எது நல்லதுனு தெரிஞ்சு வெச்சிருக்குறதோட அத செய்ய நான் தயாரா இருக்குறேனா? என்ன நோக்கத்தோட ஒரு நல்ல விஷயத்த செய்றேன்?’

புதிய சுபாவத்தை நாம் எப்படி நல்ல நிலையில் வைத்துக்கொள்ளலாம்?

16. ஒவ்வொரு நாளும் நாம் என்ன செய்ய வேண்டும், ஏன்?

16 ஞானஸ்நானம் எடுத்தவுடனே நம்முடைய கடமை முடிந்துவிடவில்லை. நம்முடைய புதிய சுபாவத்தைத் தொடர்ந்து நல்ல நிலையில் நாம் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படிச் செய்வதற்கு ஒரு வழி, கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை ஒவ்வொரு நாளும் காட்ட நாம் முயற்சி செய்ய வேண்டும். இந்தக் குணங்களைக் காட்டுவதற்கு நாம் எந்தளவு முயற்சி செய்கிறோமோ அந்தளவு கடவுளுடைய சக்தி நமக்கு உதவி செய்யும். ஏனென்றால், யெகோவாவைப் போலவே அவருடைய சக்தியும் தொடர்ந்து செயல்பட்டுக்கொண்டே இருக்கிறது. (ஆதி. 1:2) அதனால், கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள் நம்மைச் செயல்பட வைக்கும். உதாரணத்துக்கு, ‘செயல்கள் இல்லாத விசுவாசம் செத்ததாயிருக்கிறது’ என்று சீஷரான யாக்கோபு எழுதினார். (யாக். 2:26) கடவுளுடைய சக்தியால் உண்டாகிற மற்ற குணங்களின் விஷயத்திலும் இதுதான் உண்மை. ஒவ்வொரு முறையும் நாம் இந்தக் குணங்களைக் காட்டும்போது கடவுளுடைய சக்தி நமக்குள் செயல்படுகிறது என்று அர்த்தம்.

17. கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களை நாம் காட்டத் தவறிவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

17 ஞானஸ்நானம் எடுத்து பல வருஷங்களான கிறிஸ்தவர்கள்கூட கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்களைக் காட்டுவதற்கு சிலசமயங்களில் தவறியிருக்கிறார்கள். அதனால், நாம் ஞாபகத்தில் வைக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சோர்ந்து போய்விடாமல் அந்தக் குணங்களைக் காட்ட தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்: உங்களுக்குப் பிடித்த உடை கிழிந்துவிட்டால் உடனே நீங்கள் அதைத் தூக்கி எறிந்துவிடுவீர்களா? கண்டிப்பாக அப்படிச் செய்ய மாட்டீர்கள். அதைத் தைத்து போட்டுக்கொள்வீர்கள், திரும்பவும் கிழிந்துவிடாமல் பார்த்துக்கொள்வீர்கள். அதேபோல், சிலசமயங்களில் யாரிடமாவது நீங்கள் அன்பாக... பொறுமையாக... கனிவாக... நடக்கத் தவறிவிட்டால் சோர்ந்துவிடாதீர்கள். அவரிடம் மனதார மன்னிப்புக் கேளுங்கள். அப்படிச் செய்தால், உங்கள் இரண்டு பேருக்கும் இடையே வந்த விரிசலை உங்களால் சரிசெய்ய முடியும். மறுபடியும் அவரோடு நல்ல நட்பு வைத்துக்கொள்ள முடியும். அதோடு, திரும்பவும் இப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

18. எதை நீங்கள் உறுதியாக நம்பலாம்?

18 இயேசு நமக்கு நல்ல முன்மாதிரி வைத்திருப்பதற்காக நாம் ரொம்ப நன்றியோடு இருக்க வேண்டும், இல்லையா? அவரைப் போலவே யோசிக்க நாம் பழகிக்கொண்டால் அவரைப் போலவே நடந்துகொள்வது நமக்கு ரொம்பச் சுலபமாக இருக்கும். அப்படி நடந்துகொள்ளும்போது நம்மால் புதிய சுபாவத்தை இன்னும் நன்றாகக் காட்ட முடியும். கடவுளுடைய சக்தியால் உண்டாகிற நான்கு குணங்களைப் பற்றி மட்டும்தான் இந்தக் கட்டுரையில் பார்த்தோம். மற்ற குணங்களைப் பற்றியும் ஆராய்ச்சி செய்ய கொஞ்ச நேரம் ஒதுக்குங்கள், அந்தக் குணங்களை நீங்கள் எந்தளவுக்குக் காட்டுகிறீர்கள் என்பதைப் பற்றியும் யோசித்துப்பாருங்கள். இந்தக் குணங்களைப் பற்றி வெளிவந்த கட்டுரைகளை யெகோவாவின் சாட்சிகளுக்கான ஆராய்ச்சிக் கையேட்டில் “கிறிஸ்தவ வாழ்க்கை” என்ற பகுதிக்குக் கீழே “கடவுளுடைய சக்தியால் உண்டாகிற குணங்கள்” என்ற தலைப்பில் உங்களால் பார்க்க முடியும். புதிய சுபாவத்தை அணிந்துகொள்வதற்கும் அதைத் தக்கவைத்துக்கொள்வதற்கும் உங்கள் பங்கில் செய்ய வேண்டியதையெல்லாம் நீங்கள் செய்தால் யெகோவா உங்களுக்கு உதவி செய்வார் என்று உறுதியாக நம்பலாம்.

பாட்டு 127 நான் எப்படிப்பட்ட நபராக இருக்க வேண்டும்

^ பாரா. 5 நாம் எப்படிப்பட்ட பின்னணியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, நம்மால் “புதிய சுபாவத்தை” அணிந்துகொள்ள முடியும். இதைச் செய்வதற்கு நாம் யோசிக்கிற விதத்தைத் தொடர்ந்து மாற்றிக்கொள்ள வேண்டும், இயேசுவைப் போல் நடந்துகொள்ள முயற்சி செய்ய வேண்டும். இயேசு எப்படி யோசித்தார், எப்படி நடந்துகொண்டார் என்று இந்தக் கட்டுரையில் பார்ப்போம். ஞானஸ்நானம் எடுத்த பிறகும்கூட தொடர்ந்து இயேசுவைப் போலவே யோசிக்கவும் நடந்துகொள்ளவும் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் பார்ப்போம்.

^ பாரா. 4 கடவுளுடைய சக்தியின் உதவியால் நாம் வளர்க்க வேண்டிய நல்ல குணங்களின் முழு பட்டியலும் கலாத்தியர் 5:22, 23-ல் கொடுக்கப்படவில்லை. இதைப் பற்றிக் கூடுதலாகத் தெரிந்துகொள்ள ஜூன் 2020 காவற்கோபுரத்தில்வாசகர் கேட்கும் கேள்விகள்” என்ற கட்டுரையைப் பாருங்கள்.